ஒளிக்கும், இருளுக்கும் உறவேது? தேவனுடைய ஆலயத்துக்கும் சிலைகளுக்கும் உறவேது? என்று கேட்கிறது வேதம் (2 கொரி. 6:14-16). இஸ்ரவேலர் புறஜாதியினரோடு எந்தத் தொடர்பும் வைக்கா மல் பிரிந்து தனித்து வாழும்படிக் கட்டளையிட்டார் கர்த்தர். ஆராதனை முதற்கொண்டு சமூக வாழ்க்கைவரை அனைத்திலும் புறஜாதியினரின் ஜாடை இருக்கக் கூடாது என்று அவர் கட்டளையிட்டார். புறஜாதியினரின் வழிப்படி போனவர்களை அவர் தயவுதாட்சண்யம் இன்றி அழிக்கவும் தவறவில்லை. மற்றவர்களுக்கு அது ஒரு பாடமாக இருக்க வேண்டுமென்பது கர்த்தரின் நியதியாக இருந்தது. இந்தக் கோட்பாட்டை நாம் பழைய ஏற்பாடு முழுவதும் தெளிவாகக் காணலாம். இஸ்ரவேலர் புறஜாதியினரைப் பிரிந்து தனக்கென வாழ்ந்து தன்னை மட்டுமே மகிமைப்படுத்த வேண்டுமென்பது கர்த்தரின் சித்தமாக இருந்தது. இதிலிருந்து நாம் மூன்று முக்கிய உண்மைகளை அறிந்துகொள்ளுகிறோம்.
(1) கர்த்தர் மட்டுமே தேவன்.
(2) கர்த்தரின் வழியில் மட்டுமே அவருடைய பிள்ளைகள் நடக்க வேண்டும்.
(3) கர்த்தருக்கு விரோதமான எந்த வழிகளிலும் அவருடைய பிள்ளை கள் போகக்கூடாது.
கர்த்தரின் வழிகளை மீறியவர்களையும், அந்த வழிகளை சமுதாயப் போக்கு களுக்கேற்ப மாற்றி அமைத்து முரண்பாடான வழிகளில் போனவர்களையும் கர்த்தர் ஒருபோதும் விட்டுவைத்ததில்லை.
இதெல்லாம் நாம் பழைய ஏற்பாட்டில் பார்க்கும் சத்தியங்கள். இன்று யூதர்கள், புறஜாதியார் என்று இல்லாதபடி இனங்கள் இணைக்கப்பட்டு சபைகள் வளர்ந்து வருகின்றன. பழைய ஏற்பாட்டுக் காலத்தைப்போல் யூதர்கள் தனித்து வாழாமல் மற்ற இனங்களோடு இணைந்து வாழவேண்டும் என்று புதிய ஏற்பாட்டில் வாசிக்கிறோம். உண்மைதான். ஆனால், இப்போது அனைவரும் கிறிஸ்துவின் விசுவாசத்தோடு, கிறிஸ்துவின் தலைமையில் ஒரே குடும்பமாக சபைகளில் வளர வேண்டும். யூதனும், புறஜாதியானும் தங்களுடைய பழைய வாழ்க்கையை நிராகரித்து கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும். கிறிஸ்து மட்டுமே அவர்களுக்கு தேவனாக இருக்க வேண்டும். கிறிஸ்துவின் வழிகளை மட்டுமே அவர்கள் பின்பற்றி நடக்க வேண்டும். ஆகவே, பழைய ஏற்பாட்டில் நாம் பார்க்கும் (மேலே நாம் பார்த்த) அந்த மூன்று உண்மைகளும் இன்றைய புதிய ஏற்பாட்டுக் காலத்திலும் தொடர்ந்து நடக்க வேண்டியவை. தம்முடைய பிள்ளைகள் அவற்றைத் தம் வாழ்க்கையில் விசுவாசத்தோடு பின்பற்ற வேண்டுமென்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.
மேலே நாம் பார்த்த மூன்று சத்தியங்களில் மூன்றாவதை ஆராய்வதே இந்த ஆக்கத்தின் நோக்கமாக இருக்கிறது. இயேசு கிறிஸ்துவை விசுவாசிக் கின்ற யூதனும், புறஜாதியானும் அவருக்கு விசுவாசமாக இருந்து அவருக்கு எதிரான வழிகளை வெறுத்து நடப்பது எப்படி? அதுவும் புறஜாதிகள் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிற விசுவாசிகள் இருதய சுத்தத்தோடு குற்ற உணர்வு இல்லாமல் இந்த உலகத்தில் தொடர்ந்தும் அனுபவிக்க வேண்டிய வைகள் எவை? வெறுத்து ஒதுக்கி விலக்கிவைக்க வேண்டியவை எவை? என்பதை ஆராய்வதே எனது நோக்கம். இதற்கான பதிலை ஆம், இல்லை என்று ஒரே வரியில் சொல்லிவிட முடியாது. இந்த விஷயம் இலகுவானது மல்ல. இதை ஆராய்வதற்கு முன் புதிய ஏற்பாட்டில் கர்த்தர் காட்டியிருக்கும் ஒரு விதியையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அதாவது, உலகத்தைக் கர்த்தரே படைத்திருப்பதாலும், கர்த்தர் படைத்த அனைத்தும் மனிதன் அனுபவிப்பதற்காகவே கொடுக்கப்பட்டிருப்பதாலும் இந்த உலகத்தில் விசுவாசிகள் குற்ற உணர்வு எதுவும் இல்லாமல் அனுபவிக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன. இதில் எவருக்கும் சந்தேகம் இருக்கக் கூடாது. பவுல் சொல்லுகிறார், “உலகமும் அதிலுள்ள அனைத்தும் கர்த்தருடையது” (1 கொரி. 10:27-28). இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை, உலகத்தில் காணப்படும் அனைத்தும் தீமையானதல்ல என்பதுதான். அனேக விஷயங்களை நாம் சுதந்திரமாக அனுபவிக்கலாம். மேலும் பவுல் சொல்லுகிறார், “நீங்கள் புசித்தாலும், குடித்தாலும் எதைச் செய்தாலும், அனைத்தையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” என்று (1 கொரி. 10:31). இந்த இரு வசனங்கள் காணப்படும் பகுதியில் பவுல் புறஜாதி தெய்வங்களுக்கு படைக்கப்பட்ட உணவை உண்ணலாமா கூடாதா என்ற விஷயத்தைப் பற்றி அறிவுரை கூறுகிறார் என்பதை உணர வேண்டும். இருந்தாலும் பொதுவாக உலகத்திலுள்ள எல்லாமே தீமையானதல்ல என் பதையும், நன்மையானவைகளை நாம் சுதந்திரமாக அனுபவிக்கலாம் என் பதையும் புரிந்து கொள்வது அவசியம். ஏனெனில், நமக்கு மத்தியில் நாம் சுதந்திரமாக, கர்த்தர் அனுமதித்து அனுபவிக்க உரிமையுள்ள விஷயங் களையும் தடை செய்ய பிசாசு எத்தனிக்கும். கீழ்வரும் வசனங்களில் அந்த ஆபத்தைத்தான் பவுல் சுட்டிக்காட்டுகிறார். “உலக ஞானத்தினாலும் மாயமான தத்துவத்தினாலும், ஒருவனும் உங்களைப் பிடித்துக் கொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனிதர்களின் பாரம்பரியத்தையும் உலகத்தின் அடிப்படைக் கருத்துக்களையுமே சார்ந்திருக்கிறது; அது கிறிஸ்துவைப் பற்றியதல்ல.” (கொலோ. 2:8). மேலும் 1 தீமோத்தேயு 4:1-5 வரையுள்ள வசனங்களையும் வாசியுங்கள்.
இப்பகுதியில் உலகத்திலுள்ள அனைத்தையும் நாம் உரிமையுடன் அனு பவிக்கலாம் என்று பவுல் சொன்னபோதும் விவாதிக்கப்படும் விஷயம் வெறும் உணவல்ல அது அந்நிய தேவர்களுக்கு படைக்கப்பட்டு கடைகளில் விற்கப்படும் உணவு என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இதைப் பவுல் வேதம் சாதகமாகவும், பாதகமாகவும் கூறாத விஷயங்களின் பட்டியலில் (Things indifferent) சேர்த்து விளக்குகிறார். அத்தகைய விஷயங்களை நாம் நம்முடைய Common sense-ன் அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இருந்தாலும், நாம் அனுபவிக்க உரிமையுள்ளவைகளை பிறர் மனம் புண்படும்படியான சூழ்நிலைகளில் அனுபவிக்காமல் இருப்பது நல்லது என்று பவுல் கூறுவதையும் புரிந்து கொள்வது அவசியம். நம்முடைய மனச்சாட்சி அந்த விஷயத்தில் குற்றமற்றதாக இருந்தாலும் பிறருடைய மனச்சாட்சி அவர்களை உறுத்துவதற்கு நாம் காரணமாக இருந்துவிடக்கூடாது. நாம் சுதந்திரமாக அனுபவிக்கக்கூடிய விஷயங்கள் பிறருடைய விசுவாசத்திற்கு தடையாக இருக்குமானால் அவர்களுடைய விசுவாச வாழ்க்கையின் நன்மை கருதி அவற்றை வாழ்க்கையில் தவிர்த்து விடுவது விசுவாசிக்குரிய அடையாளம் என்கிறார் பவுல் (1 கொரி. 10:29-33).
எத்தகைய விஷயங்களில் விசுவாசிகள் வேதத்தைப் பின்பற்றி தங்களுடைய வாழ்க்கையில் அவற்றைத் தள்ளி வைக்க வேண்டும்? இதுபற்றி ஒரு பெரிய லிஸ்டைத் தயாரித்து உங்கள் முன்வைப்பது என்னுடைய நோக்கமல்ல. வேதம் விளக்கும் சில பொதுவான விதிமுறைகளை விளக்கி அவற்றின் அடிப்படையில் நீங்கள் சிந்தித்து முடிவெடுக்க உதவுவதே எனது நோக்கம். அதேவேளை நாம் தொடர்பு வைக்கக்கூடாத, நம் வாழ்க்கையில் இடங்கொடுக்கக்கூடாத தெளிவான சில விஷயங்களையும் விளக்கப்போகிறேன்.
1. உலகத்து சிந்தனைகளையும், நடைமுறைகளையும் நாம் உடனடியாக ஏற்றுக்கொள்ளாது வேதஅடிப்படையில் தீர்க்கமாக அவற்றை ஆராய்ந்து பார்த்தபின்பே அவற்றைப் பின்பற்றுவதா? இல்லையா? என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும்.
அனேகர் உலக சிந்தனைகளையும், பழக்க வழக்கங்களையும் உடனடியாக தயங்காது ஏற்றுக்கொள்ளுகிறார்கள். இது வேதஞானமில்லாததால் வருகின்ற விளைவு. இதே இதழின் இன்னொரு பகுதியில் தமிழ்ப் பண்பாடு பற்றிய ஆக்கத்தில் இதை விளக்கியிருக்கிறேன். திருமணம், குடும்ப வாழ்க்கை போன்ற வற்றில் இந்துப் பண்பாடு தொடர்ந்தும் கிறிஸ்தவ சமுதாயத்தைப் பாதித்து வருவது பற்றி விளக்கியிருக்கிறேன். பிசாசின் சிந்தனைகளைக்கொண்ட உலகம் கர்த்தரின் வழிகளில் அன்புவைக்காது. பாவவழிகளில் மட்டுமே போய்க் கொண்டிருக்கும். இன்று கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்துக்களைப் போல பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வது அதிகரித்து வருகிறது. நவீன நாகரீகம் என்ற பெயரில் பலர் இதைச் செய்துவருகிறார்கள். இந்துப் பண்பாட்டிற்கு நாகரீக விளக்கம் தருவது பிசாசின் சிந்தனையே தவிர வேறில்லை. இதை கர்த்தர் விரும்பவில்லை. லோத்தின் மனைவிபோல் உலக சிந்தனைகளுக்கு நாகரீக விளக்கம் தர முயல்வது வேதவிரோதமான செயல்.
திருமணத்தின்போது தாலி கட்டுவது தமிழ்ப் பண்பாடு. அதில் தவறில்லை. ஆனால், தாலி கழுத்து அறுந்துவிடுவதுபோல் பல சவரின் தங்கத்தில் செய்யப்படுவதை வேதம் அனுமதிக்கவில்லையே. ஒன்று அல்லது இரண்டு பவுண் களில் செய்யப்படும் தாலியால் தாலியா அறுந்துவிடப்போகிறது? பத்துப் பன்னிரெண்டு பவுண்களில் தாலி கேட்கும் மனிதனுக்கு பணத்திலும், கௌரவத்திலும்தான் குறி என்பது சொல்லாமலே புரியவேண்டும். இப்படி ஒவ்வொன்றையும் வேதஅடிப்படையில் விசுவாசி ஆராய்ந்து பார்க்க வேண்டும். பக்திவிருத்திக்கும் இவற்றிற்கும் சம்பந்தமில்லை என்று பகற்கனவு காணாதீர்கள். கிறிஸ்துவில் நாம் வைக்கும் விசுவாசம் நமது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் சிந்தனைபூர்வமாக பாதிக்காவிட்டால் அது விசுவாச மேயல்ல. விசுவாச வாழ்க்கையை தேவபயத்தோடு வாழ நாம் வேதத்தைப் பயன்படுத்தி எல்லாவற்றையும் ஆராய்ந்து நமது வாழ்க்கை உலக ஞானப்படி அமைந்துவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.
2. இந்துமதம், புறமதங்கள் சம்பந்தமான சடங்குகளிலும், பண்டிகைகளிலும் கிறிஸ்தவர்கள் கலந்துகொள்வதையும், அவற்றைப் பின்பற்றுவதையும் விட்டு விட வேண்டும்.
தமிழ்ப் பண்பாடும் இந்து மதமும் இரண்டறக் கலந்தவை. ஒன்றிலிருந்து மற்றதைப் பிரிப்பது இலகுவான காரியமல்ல. சுவிசேஷத்தை தமிழினம் அறிந்த காலத்தில் இருந்து இந்த இரண்டையும் பிரிக்கும் செயலைச் செய்ய சபைகள் தவறிவிட்டன. ஒருசில காரியங்களில் மட்டும் மாற்றங்களைச் செய்துவிட்டு ஏனையவற்றை அப்படியே விட்டுவிட்டார்கள். இதனால் பாதிக்கப்பட்டிருப்பது திருச்சபையே. மேலைத்தேசத்து மிஷனரிகளும் விஷயம் புரியாமல் பண்பாட்டில் பெரியளவுக்கு மாற்றங்களைக் கொண்டுவரத் தவறிவிட்டார்கள். அப்படி மாற்ற முயற்சி செய்தவர்களை நமது பண்பாடு தெரியாதவர்கள் என்று பட்டம் சூட்டி நம்மவர்கள் போக்குக் காட்டிவிட்டார்கள்.
இந்து மத சடங்குகள், பண்டிகைகள் அனைத்தும் அவர்களுடைய தெய் வங்களை முன்வைத்தே நடத்தப்படுகின்றன. அவை எல்லாவற்றிற்கும் ஏதாவதொரு இந்துமதத் தொடர்புள்ள ஆன்மீகக் கருத்து இருக்கும். தீபாவளி, பொங்கள், கார்த்திகை தீபம், சித்திரை பண்டிகை என்று எந்தப் பண்டிகையை எடுத்துக் கொண்டாலும் அல்லது குடும்ப நிகழ்ச்சிகளான திருமண வைபவம், பெண் வயதுக்கு வருதல், வளைகாப்பு, பிறந்த பிள்ளைக்கு மொட்டை அடித்தல் என்று எல்லா சமூக நிகழ்ச்சிகளுக்கும் பின்னணியில் இந்துமதக் கருத்துக்களும் சிந்தனைகளும் விரவிக் காணப்படும். அவை இல்லாமல் எந்தவொரு சமூக நிகழ்ச்சியையோ, பண்டிகையையோ பார்ப்பது முடியாத காரியம். இந்த நிலைமையில் ஒரு விசுவாசி தன்னுடைய இந்து நண்பன் கூப்பிடுகி றானே என்று இந்த வைபவங்களில் கலந்து அவனோடு சேர்ந்து கொண்டாடுவது விசுவாசி செய்யக்கூடிய காரியமல்ல. அனேக விசுவாசிகள் சிந்திக்காமல், ஏன் என்று கூடக் கேட்காமல் இவ்வைபவங்களில் கலந்து கொள்கிறார்கள். நண்பர்களின் முகங்கோணக் கூடாது என்ற நல்ல எண்ணத்திலும், சமூ கத்தோடு ஒத்துப்போக வேண்டும் என்றும் சிலர் இப்படி நடந்துகொள்கிறார்கள். பெரும்பாலான விசுவாசிகள் எந்த சிந்தனையுமே இல்லாது இவற்றில் கலந்து கொள்கிறார்கள். இப்படி நடப்பதால் இரண்டு பெரிய ஆபத்துக்கள் ஏற்படுகின்றன. (1) புறமத தெய்வங்களுக்கு அம்மத அடிப்படையில் நடத்தப்படும் சடங்குகளில் எந்தவித சிந்தனையுமில்லாமல் நாம் பங்கு கொள்கிறோம். இப்படி செய்வதன் மூலம் கர்த்தரின் வார்த்தையின் தெளிவான போதனைகளுக்கு எதிராக நடந்து கொள்கிறோம். (2) கிறிஸ்துவுக்கு சாட்சியாக இருப்பதை விட்டுவிட்டு, அதற்கான சந்தர்ப்பத்தையும் அலட்சியப்படுத்துகிறோம்.
தெய்வநாயகம், சாது செல்லப்பா போன்றோர் இந்து மதத்தில் இயேசுவைக் காண ஆரம்பித்து இந்தப் பண்டிகைகளுக்கும், சடங்குகளுக்கும் கிறிஸ்தவ விளக்கம் கொடுக்க முயன்றது விசுவாசிகளின் புறமதத்தொடர்பை அதிகரிக்கச் செய்தது. அவர்களுடைய போக்கும், விளக்கங்களும் கர்த்தருக்கு விரோதமானவை. கர்த்தர் அவற்றைத் தன் வேதத்தில் அடியோடு நிராகரிக்கிறார். பூசாரி வைத்து இந்துமத தெய்வங்களுக்கு பூசைகள் செய்யாத, புறமத சடங்குகள் நடைபெறாத சமூக நிகழ்ச்சிகளில் நாம் பங்கு கொள்வதில் தவறில்லை. அனைத்தையும் சிந்தித்து ஆராய்ந்து பார்க்காமல் செயல்படுவது கிறிஸ்தவ விசுவாசிக்கு அழகல்ல. ஆதிசபையில் புறமதங்களில் இருந்து விடுபட்டு விசுவாசிகளானவர்கள் மத்தியில் இந்தக் கேள்விகள் எழத்தான் செய்தன. அதை அவர்கள் அசட்டை செய்யாமல் அப்போஸ்தலர்களும், சபைகளும் கூடி ஆராய்ந்து விட்டுவிட வேண்டியது எது? தொடர வேண்டியது எது? என்று சிந்தித்து செயல்பட்டார்கள் (அப்போ. 15).
சாதி பார்த்து, குலம் பார்த்து திருமணம் செய்வது, செவ்வாய்த் தோஷம் பார்ப்பது, நல்ல சகுனம் பார்ப்பது, தீட்டுக் கழிப்பது, பிறந்த பிள்ளைக்கு மொட்டை அடிப்பது, புதுமனை புகும்போது பால் பொங்கவைப்பது (இதை செய்யாவிட்டால் வீடு உருப்படாமலா போய்விடும்?) என்று இத்தியாதி இந்துப் பாரம்பரிய மூடநம்பிக்கைகளும் விசுவாசிகள் என்று தங்களை அழைத்துக் கொள்கிறவர்கள் மத்தியில் உலவுவதை மன்னிக்கவே முடியாது. கர்த்தரின் வேதம் இவற்றை அடியோடு நிராகரிக்கிறது. இவற்றிற்கு தமிழ்ப் பண்பாடு என்று பெயரிட்டு வழக்கத்தில் வைத்திருக்கப் பார்க்கிறவர்கள் வேத விரோதிகள். சிலர் இந்துக்கள் மத்தியில் சுவிசேஷம் சொல்ல இவை பயன்படும் என்று இவற்றிற்கு தமிழ் பண்பாட்டு ‘விளக்கம்’ கொடுத்து வருகிறார்கள். சத்தியத்தை எப்படிப் புரட்டினாலும் அது அசத்தியமாகத் தான் மாறிவிடும். பல வருடங்களுக்கு முன் என்னுடைய இந்து மாமா ஒரு பண்டிகையில் கலந்து கொள்ள என்னை அழைத்தார். என்னுடைய விசு வாசத்தை சுட்டிக்காட்டி அதில் நான் கலந்து கொள்வது சரியல்ல என்று கூறினேன். அவர்கள் தங்கள் தெய்வங்களுக்கு படைத்ததை எனக்குத் தந்த போது, தெய்வங்களுக்கு படைக்காத உணவைத் தாருங்கள் என்று வாங்கிச் சாப்பிட்டேன். அவர்கள் மனம் துன்புறாதபடியும், அதேவேளை என்னுடைய விசுவாசத்திற்குப் பங்கம் வராமலும் நான் நடந்துகொள்ள வேண்டியிருந்தது. அதன் காரணமாக என்னுடைய மாமா ஒருநாள் சுவிசேஷத்தை தனக்கு விளக்கும்படி என்னைக் கேட்டுக்கொண்டார்.
ஓய்வு நாள் நமக்கு விஷேட நாள். அந்நாளில் நாம் ஆலயத்துக்குப் போய் ஆராதனையில் ஈடுபட்டு கர்த்தரைத் துதிக்க வேண்டும். வீடு திரும்பியதும் ஆத்மீக காரியங்களில் அதிகம் ஈடுபடவேண்டும். இந்துக்கள் அந்த நாளில் திருமணங்களையும், வைபவங்களையும் நடத்துவார்கள்; நம்மையும் அழைப்பார்கள். என்ன செய்வது? பலர் எதுவும் யோசிக்காமல் போய்க் கலந்துகொள்வார்கள். அது தவறு என்பது அவர்களுக்கு உரைப்பதில்லை. பூசாரி வைத்து, சாஸ்திரம் பார்த்து, மந்திரம் ஓதி புறதெய்வங்களுக்கு முன் நடக்கும் திருமண வைபவத்தில் நமக்கு என்ன வேலை? அதுவும் ஓய்வு நாளில் அதில் நாம் கலந்துகொள்ளலாமா? ஓய்வு நாளை அசிங்கப்படுத்துவதே ஆகாது. அதிலும் அந்நாளில் இந்துத் திருமணத்துக்குப் போவது கொடுமை. இந்து வைபவங்களில் விசுவாசிகளுக்கு வேலை இல்லை. இந்த விஷயங்களில் வேதத்தின் அதிகாரத்துக்கு நாம் கட்டுப்பட வேண்டும்; அது நம்மை ஆள வேண்டும். மனிதபயமில்லாமல் இனியாவது வேதஅடிப்படையில் சிந்தித்து வாழுங்கள்.