நீங்கள் தொடர்ந்து திருமறைத்தீபத்திற்குக் காட்டிவரும் அன்புக்கும், ஆதரவுக்கும் ஆசிரியர் என்ற முறையில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் ஆதரவைவிட பத்திரிகையை வாசித்து நீங்கள் பயனடைகிறீர்கள் என்பதே பத்திரிகை குழுவுக்கு அதிக மனமகிழ்ச்சியை அளிக்கிறது. தொடர்ந்து கடிதங்கள் எழுதி கருத்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு, எங்களை ஊக்கப்படுத்தியும் வருகிற உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்.
இந்த இதழில் தமிழினத்துக் கிறிஸ்தவத்தைப் பாதித்து வரும் சில ‘வைரஸ்’களை அடையாளம் காட்டியிருக்கிறோம். தமிழினத்தின் கிறிஸ்தவ மறுமலர்ச்சியை நாடி ஜெபத்தோடு உழைத்துக் கொண்டிருக்கும் நாம் தொடர்ந்து நம்மினத்துக் கிறிஸ்தவத்தைப் பாதித்து வரும் ‘வைரஸ்’களை அடையாளம் காணாமல் இருக்க முடியுமா? பழையனவற்றோடு போராடிவருகிறவேளை புதிய ஆபத்துக்களும் முளைத்துவிடுகின்றன. இவ்விதழின் முதலாவது ஆக்கம் இதை விளக்குகிறது. இந்த ஆக்கத்திற்கேற்ற அட்டைப்படத்தை சகோதரன் ஜெயபால் (மதுரை) வடிவமைத்துத் தந்திருக்கிறார்.
திருமறைத்தீபத்தை பல நாடுகளிலும் இருந்து வாசகர்கள் வாசித்துப் பயனடைந்து வருகிறார்கள். சமீபத்தில் பல வருடங்களாகப் பத்திரிகையை வாசித்து வரும் ஒரு சகோதரனின் ஆத்மீக வாழ்க்க்கும், ஊழியத்துக்கும் பத்திரிகை உதவியவிதத்தைப் பற்றி வட இந்தியாவில் இருந்து எழுதியிருந்தார். அறிந்துகொண்ட சத்தியத்தின் அடிப்படையில் தன் வாழ்க்கையை மாற்றி அமைக்க அவர் உறுதிபூண்டிருக்கிறார். சத்தியம் இப்ப டிப் பலரின் கண்களைத் திறந்துவைக்கிறது; அவர்களுடைய ஆத்மீக தாகத்தைத் தணிக்கிறது. சத்தியத்தை வாய்விட்டு வாழ்த்துகிற எல்லோருமே அதன்படி வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ளும் துணிச்சலுள்ளவர்களாக இருப்பதில்லை. அது வருத்தத்திற்குரியதுதான். ஆவியானவர் மட்டுமே அத்தகைய துணிச்சலைத் தர முடியும். அந்தத் துணிவு மாம்சத்தில் பிறப்பதல்ல; பரலோகத்தில் இருந்து வருவது. லூதரிடம் அது இருந்தது, கல்வினிலும், நொக்ஸிலும் அதைப் பார்க்கிறோம். ஸ்பர்ஜனிடமும் அது இருந்தது. சத்தியத்தில் ஆர்வம் மட்டுமல்ல அதைத் தியாகத்தோடு பின்பற்றும் துணிச்சலும் நம்மக்களுக்குக் கிடைக்க நாம் ஜெபிக்கத்தான் வேண்டும். அத்தகைய ஆவிக்குரிய துணிச்சலில்லாமல் சீர்திருத்தம் ஏற்பட்டுவிட முடியுமா என்ன?
– ஆசிரியர்.