இந்த இதழில் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட பெரும் பிரசங்கியான ஸ்பர்ஜனைப் பற்றிய வரலாற்றை போதகர் ஜெரமி வோக்கர் (Pastor Jeremy Walker) எழுதியிருக்கிறார். கல்வினிசக் கிருபையின் போதனை களைப் பின்பற்றி சபை வளர்த்த ஸ்பர்ஜன் அவை மட்டுமே போதும் என்று வாளாவிருந்துவிடவில்லை. இங்கிலாந்தில் அக்காலத்தில் பாப்திஸ்து சபைப்பிரிவு (Baptist Denomination) வேத அதிகாரத்தை நிராகரித்து தான் இதுவரை பின்பற்றி வந்த சத்தியங் களுக்கு முரணாக நடந்து கொண்டபோது, அச்சபைப் பிரிவைச் சேர்ந்த எத்தனையோ போதகர்களும், சபைகளும் அதைக் கண்டும் காணாமலும் இருந்த போது, தனியொரு மனிதனாக கர்த்தரின் வார்த்தையின் அதிகாரத்தை வலியுறுத்திப் பேசி, தனது முயற்சிகள் தோல்வியுறும் போல் தோன்றியபோது தனது சபையான மெட்ரொபொலிட்டன் டெபர்னேக்களை (Metropolitan Tarbernacle) பாப்திஸ்து சபைப்பிரிவிலிருந்து உடனடியாக விலக்கிக்கொண்டார் ஸ்பர்ஜன். அது மட்டுமல்லாமல், 1689 விசுவாச அறிக்கையைத் தனது சபை விசுவாசிப்பதாகக் கூறி அதை மீள வெளியிட்டு சத்தியத்துக்குத் தூணாக நின்றார்.
சத்தியத்துக்கு எதிரான செயல்களை எவரும் செய்யும் போது அது சபைப்பிரிவாக இருந்தாலும் சரி, பெயர் வாங்கிய பெரிய மனிதர்களாக இருந்தாலும் சரி பழைய ஏற்பாட்டு தீர்க்கசரிசிகளும் தேவமனிதர்களும், புதிய ஏற்பாட்டு அப்போஸ்தலர்களும் அவர்களை எதிர்த்து நிற்கத் தவறவில்லை. சத்தியத்துக்கு முரணாக நடந்த பேதுருவைப் பவுல் கண்டித்துத் திருத்தினார். உறவு பாதிக்கப்படுமே என்று கண்டுங் காணாமல் இருந்துவிட வில்லை; அப்போஸ்தலர்களுடைய மரியாதை கெட்டு விடுமே என்று அதைக் காப்பாற்றப் பேதுரு செய்ததை நியாயப்படுத்தவில்லை. அதையே ஸ்பர்ஜனும் தன் காலத்தில் செய்தார். போலித்தனம் அதிகரித்து கிறிஸ்துவின் பெயரில் சபை அமைத்து ஆத்மீக வியாபாரம் நடத்தி வருபவர்களுக்கு இன்று சத்தியத்தில் ஆர்வமில்லை; வேதக் கோட்பாடுகளைப் பின்பற்று வதில் அக்கறையில்லை. சீர்திருத்தவாதிகளும், ஸ்பர்ஜனும் பின்பற்றும் சத்தியங்களை விசுவாசிக்கின்ற நாம், அவர்கள் பெயர்களை ஆசையோடு உச்சரித்துப் பயன்படுத்துகிற நாம், கிறிஸ்துவின் மகிமைக்காக அவர்கள் எடுத்த நடவடிக்கைகளை மட்டும் எடுக்கத் தயங்கலாமா?
– ஆசிரியர்