அழைப்பு
இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு என்ற போதனை எதைக் குறிக்கிறது என்பதையும், அந்தப் போதனையை அறிந்திருப்பதன் அவசியத்தைப் பற்றியும் கடந்த இதழில் ஆராய்ந்திருந்தோம். இந்தப் போதனையை நாம் விபரமாக தொடர்ந்து ஆராயவிருப்பதால் வாசகர்கள் இதற்கு முன்பு வந்துள்ள ஆக்கத்தையும் ஒருமுறை வாசித்து விட்டு இந்த ஆக்கத்தை வாசிப்பது பயன்தரும். இதே முறையில் ஒவ்வொரு இதழிலும் வரும் தொடர்களைப் படிக்கும்போது அதற்கு முன்வந்துள்ள ஆக்கத்தை வாசித்துவிட்டுப் படிப்பது நல்லது.
இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கை ஆராய்கிறபோது அதோடு தொடர்புடைய கிருபைகளில் எது முதலில் இடம்பெற வேண்டும் என்பதில் சீர்திருத்த இறையியல் போதகர்கள் கருத்து வேறுபாடுகள் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கருத்து வேறுபாடு இறையியல் போதனை பற்றிய கருத்து வேறுபாடு அல்ல. படிமுறை ஒழுங்கில் முதலில் வரவேண்டியது எது, அடுத்து வர வேண்டியது எது என்பது பற்றிய ஆரோக்கியமான கருத்து வேறுபாடு மட்டுமே. வேத சத்தியங்களைத் துல்லியமாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் வேதத்தைத் தீவிரமாக ஆராய்கிறபோது ஏற்படுகிற வேத அடிப்படையிலான ஆரோக்கியமான கருத்துவேறுபாடுகள் நல்லதே. அவற்றை இறையியல் குளருபடிகள் கொண்ட கருத்து வேறுபாடுகளாக நாம் கருதக்கூடாது.
அழைப்பு (Call)
நாம் கடந்த முறை பார்த்தபடி புதிய ஏற்பாட்டில் ரோமர் 8:29-30 ஆகிய பகுதியில் காணப்படும் இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கில் அழைப்பு (Call) முதலாவது இடத்தைப் பெறுகிறது. அது சரியே. இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு அழைப்பிலேயே ஆரம்பமாக வேண்டும். இரட்சிப்பைப் பற்றிய வேதபோதனைகள் இரட்சிப்பு கர்த்தருடையது என்பதை விளக்குகின்றன. கர்த்தர் முதலடி எடுத்துவைத்து நம்மில் கிரியை செய்யாமல் இரட்சிப்பு நமக்கு ஒருபோதும் கிடைக்காது. மனிதன் இரட்சிப்பை அடைவதற்கு செய்யக்கூடிய கிரியைகள் ஒன்றுமேயில்லை. ஆகவே, இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கில் அழைப்பே முதலில் இடம்பெற வேண்டும்.
அழைப்பை வேத அடிப்படையில் இரண்டுவிதமாகப் பிரித்துப் பார்ப்பது அவசியம். அழைப்பில் இத்தகைய இரு பிரிவுகள் இருப்பதை வேதம் பல இடங்களில் சுட்டிக் காட்டுகின்றது. அப்பிரிவுகளை வெளிப்புற அழைப்பு (External Call), உள்ளார்ந்த அழைப்பு (Internal Call) என்று அழைப்பார்கள். வெளிப்புற அழைப்பு மனிதர்கள் அனைவரும் அனுபவிக்கக் கூடிய கிருபை. இதனைப் பொதுவான கிருபை (Common Grace) என்றும் கூறுவார்கள். உதாரணத்திற்கு மழை நல்லவர், தீயவர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோர் மேலும் பெய்கின்றது. அதேபோல் கர்த்தர் எத்தனையோ நன்மையான காரியங்களை உலக மக்கள் அனைவரும் சமமாக அனுபவிக்கும்படி கிருபை புரிந்திருக்கிறார். அத்தோடு, உலக மக்கள் அனைவரும் சுவிசேஷத்தைக் கேட்டு மனந்திருந்த மறுத்தாலும் அவர்கள் அனைவரும் சுவிசேஷத்தைக் கேட்கக் கூடிய வாய்ப்பைக் கர்த்தர் ஏற்படுத்தித் தந்திருக்கிறார். இவ்வுதாரணங்கள் கர்த்தரின் பொதுவான கிருபையைச் சுட்டிக்காட்டுகின்றன. வெளிப்புற அழைப்பு அல்லது பொதுவான கிருபையை சுட்டிக்காட்டும் வேத வசனங்கள் உள்ளன. மத்தேயு 22:14; 1 கொரிந்தியர் 1:23-24; ரோமர் 1:6; 8:28; யூதா 1 ஆகிய வசனங்களை வாசிக்கவும். மத்தேயு 22 ம் அதிகாரத்தின் 14ம் வசனத்தில் இயேசு, “அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்” என்றார். இது சுவிசேஷ செய்தியின் மூலம் அநேகர் வெளிப்புறமான பொதுவான அழைப்பைப் பெற்றிருந்தாலும், அவர்கள் எல்லோருமே தெரிந்துகொள்ளப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
பொதுவான, வெளிப்புற அழைப்பு சுவிசேஷத்தின் மூலம் மனித இனம் முழுவதற்கும் கொடுக்கப்பட்டாலும், திட்ப உறுதியான அழைப்பின் மூலமே மனிதன் இரட்சிப்பை அடைவதால் வெளிப்புற அழைப்பின் மூலம் என்ன பயன்? என்ற கேள்வி எழலாம். அது நியாயமான கேள்வியே. வெளிப்புற அழைப்பின் மூலம் கர்த்தரின் சுவிசேஷத்தை மனிதன் கேட்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுவதால் அதன் மூலம் கர்த்தர் அவனுடைய பாவத்தைக் கண்டிக்கிறார். பரிசுத்த ஆவியானவர் வருகிறபோது (பெந்தகொஸ்தே தினத்தில்) அவர் இந்த உலகத்தின் பாவத்தைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார் (யோவான் 16:8) என்று இயேசு சொன்னார். ஆவியானவர் சுவிசேஷ செய்தியின் மூலமே இந்தக் காரியத்தை உலகத்தில் செய்து வருகிறார். உலகம் பாவத்தைப் பற்றியும், வரப்போகிற நியாயத் தீர்ப்பைப் பற்றியும் அறிந்துகொள்ள சுவிசேஷம் பொதுவான விதத்தில் உதவுகிறது. அத்தோடு, பாவத்தில் இருக்கும் உலக மக்கள் சுவிசேஷத்தின் மூலமான பொதுவான, வெளிப்புற அழைப்பால் வேறுசில பலன்களையும் பெற்றுக்கொள்ள முடிகின்றது. அதை எபிரேயர் 6:4&8 வரையிலுள்ள வசனங்கள் விளக்குகின்றன. பாவத்தைப் பற்றியும், கர்த்தரைப் பற்றியும், பரலோகத்தைப் பற்றியும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், ஆவியானவரின் வல்லமையைக் குறித்தும் அறிந்துகொள்ளுவதோடு சுவிசேஷத்தைக் கேட்டு குற்றவுணர்வடைந்து தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற உணர்வையும் அவர்கள் அடையும்படி வெளிப்புற அழைப்பு அவர்களுக்கு உதவுகிறது. இத்தனை பொதுவான பலன்களை அது தந்தபோதும் இரட்சிப்பை மட்டும் அதால் மனிதனுக்கு அளிக்க முடியாது.
உள்ளார்ந்த அல்லது திட்ப உறுதியான அழைப்பு (Effectual Call)
உள்ளார்ந்த அழைப்புக்கு (Internal Call) உரித்தானவர்கள் மட்டுமே வாழ்க்கையில் இரட்சிப்பை அடைகிறார்கள். இதைத் திட்ப உறுதியான அழைப்பு (Effectual Call) என்றும் அழைப்பார்கள். இந்தப் பதத்தையே இந்த ஆக்கத்தில் தொடர்ந்து பயன்படுத்தப் போகிறோம். ஆரம்பகால சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன் பெரியவர்களும் இந்தத் திட்ப உறுதியான அழைப்புக்குள்ளேயே இரட்சிப்போடு தொடர்புடைய ஏனைய கிருபைகளையும் இணைத்து விளக்கியிருந்தார்கள். அதாவது, மறுபிறப்பு, பாவத்தை உணர்தல், மனந்திரும்புதல் அனைத்தையும் திட்ப உறுதியான அழைப்புக்குள் அடக்கி இரட்சிப்புக்குரிய விளக்கத்தைத் தந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு கிரிஸ்டோபர் லவ்வினுடைய (Christopher Love) இரட்சிப்பை விளக்கும் போதனைகளை அளிக்கும் நூலைக் கூறலாம். இதன் தலைப்பு “திட்ப உறுதியான அழைப்பு” என்பதாகும். இந்தத் தலைப்புக்குள் உள்ளடக்கி இரட்சிப்புப் பற்றிய அனைத்துப் போதனைகளையும் தந்திருக்கிறார் நூலாசிரியர். இம்முறையையே அநேக பியூரிட்டன்களும் பின்பற்றியுள்ளார்கள். 1689 விசுவாச அறிக்கையில்கூட அதன் 10ம் அதிகாரமான திட்ப உறுதியான அழைப்பில் மறுபிறப்பிற்கான விளக்கமும் உள்ளடங்கியுள்ளது. இப்படி விளக்குவதில் எந்தவிதமான தவறும் இல்லை. பவுல் கொரிந்து சபை விசுவாசிகளையும், ரோம சபை விசுவாசிகளையும் “அழைக்கப்பட்டவர்கள்” என்ற பெயரில் அழைத்தார் (ரோமர் 1:2; 1 கொரி. 1:2). இங்கே “அழைக்கப்பட்டவர்கள்” என்ற பதம் அவர்கள் இரட்சிப்பை அடைந்தவர்கள் என்ற அர்த்தத்தையும் கொண்டிருப்பதைக் கவனிக்கவும் இந்தப் பதத்தில் இரட்சிப்புக்குரிய ஏனைய கிருபைகளும் உள்ளடங்கியுள்ளன.
பியூரிடன்களுக்கும், சீர்திருத்தவாதிகளுக்கும் பின் எழுந்த சீர்திருத்தவாத அறிஞர்களும், சமகால சீர்திருத்த அறிஞர்களும் திட்ப உறுதியான அழைப்பை இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கின் ஒரு அங்கமாக தனியாகப் பிரித்து விளக்கியிருக்கிறார்கள். அதேவிதமாக மறுபிறப்பு, பாவத்தை உணர்தல், மனந்திரும்புதல் ஆகிய இரட்சிப்போடு பிரிக்கமுடியாத தொடர்புடைய ஏனைய கிருபைகளையும் தனித்தனியாக விளக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். இரட்சிப்பாகிய கிருபையில் பங்கு வகிக்கும் வெவ்வேறு அங்கங்களைப் பிரித்து விளக்கி ஆழமான இறையியல் அறிவைப் பெற்றுக் கொள்வதற்காகவே சமகால சீர்திருத்தவாத அறிஞர்கள் இம்முறையைக் கையாண்டுள்ளார்கள். இப்படிப் படிப்பதில் எந்தத் தவறும் இல்லை. இது இரட்சிப்பு பற்றிய தெளிவான அறிவைப் பெற்றுக்கொள்ள உதவும். உதாரணத்திற்கு, லூயிஸ் பேர்கொவ், ரொபட் ரேமன்ட், ஜோன் மரே போன்ற சீர்திருத்தவாத அறிஞர்களின் ஆக்கங்களில் இந்த முறையிலேயே இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு விளக்கப்பட்டிருக்கிறது.
இறையாண்மையுள்ள கர்த்தர் புறச்சாதனங்களின் தொடர்புகளெதுவுமின்றி தன்னுடைய மக்களைத் திட்ப உறுதியாக அழைக்கிறார். இந்தத் திட்ப உறுதியான அழைப்பு கர்த்தரின் வார்த்தையினூடாக, ஆவியினால் மனித குலத்தில் கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு அளிக்கப்படுவதாக இருக்கிறது. இதை விளக்கும் வசனங்களாக 1 கொரிந்தியர் 1:23-24; 1 பேதுரு 2:9 ஆகியன உள்ளன. கர்த்தரின் இந்த வல்லமையான அழைப்பு தெரிந்துகொள்ளப்பட்டவர்களை இரட்சிக்கும் வல்லமை கொண்டது. புறஜாதியார் மத்தியில் பவுலும், பர்னபாவும் பிரசங்கித்தபோது அவர்கள் அதைக் கேட்டு சந்தோஷப்பட்டு கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். அதேவேளை, “நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்ட வர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்” என்கிறது அப்போ. 13:28. நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் திட்ப உறுதியாத அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை இந்த வசனம் போதிக்கிறது. திட்ப உறுதியான அழைப்பில் ஒருபோதும் மாற்றங்கள் ஏற்பட முடியாது. திட்ப உறுதியாக அழைக்கின்ற கர்த்தர் தன் மனதை ஒருபோதும் மாற்றிக்கொள்வதில்லை (ரோமர் 11:29).
திட்ப உறுதியாக கர்த்தர் தன் மக்களை அழைக்கிறபோது அது அவர்களுடைய முழு இருதயத்தையும் பாதிக்கிறது. ஆத்துமாவினுடைய மனம் புது ரூபமாகிறது (எபேசி 1:17, 18). கல்லான இருதயம் அகற்றப்பட்டு நவமான இருதயம் நமக்குக் கொடுக்கப்படுகிறது (எசேக்கியல் 36:26-27). ஆத்துமாவின் சித்தம் புதுப்பிக்கப்படுகிறது (பிலிப்பியர் 2:13). மேலும் விளக்குவதானால், ஆத்துமாவின் இருதயத்தை அது தாக்கி அவனுடைய பாவத்தை உணர்த்தி அதற்காக வருந்தும்படிச் செய்கிறது. கிறிஸ்து யார் என்பதை அறிந்துணரும்படிச் செய்கிறது. கிறிஸ்துவைத் தேவனாக ஏற்று விசுவாசிக்கும்படிச் செய்கிறது. வெளிப்புற அழைப்பு மனிதனுடைய சிந்தனையைத் தாக்கி அவனுக்கு அறிவைத் தந்தபோதும், அவனுடைய உள்ளுணர்வுகளை ஆழமாகப் பாதிப்பதில்லை. திட்ப உறுதியான அழைப்பு ஆத்துமாவின் சகல பகுதிகளையும் அதாவது, அவனுடைய மனம், சிந்தனை, உணர்வுகள், அத்தனையையும் வல்லமையாகப் பாதிக்கிறது. திட்ப உறுதியான அழைப்பு இத்தகைய பலன்களைத் தருகிறபோது மறுபிறப்பு ஏற்கனவே ஆத்துமாவில் நிகழ்ந்துவிட்டதன் பலனாக இவை இடம்பெறுகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கில் மறுபிறப்பு முதலில் வர வேண்டுமா? அல்லது அழைப்பா? என்ற கேள்வியும் எழலாம். கால அடிப்படையில் அல்லாது இறையியல் விளக்க அடிப்படையில் அழைப்பே முதலில் வருவதாக விளங்கிக் கொள்வது பொருந்தும் என்கிறார் இறையியல் அறிஞரான ஜோன் மரே. திட்ப உறுதியான அழைப்பைப் பெற்றுக்கொண்ட ஆத்துமா நிச்சயம் மறுபிறப்பின் அனுபவத்தை உணரும். இவை இரண்டை யும் பிரிக்க முடியாது. அத்தோடு, கால இடைவெளி அடிப்படையில் இவற்றைப் பிரித்துப் பார்ப்பதும் தவறு. சீர்திருத்த பாப்திஸ்து போதகர் ஜிம் டோம் (Jim Domm) எழுதி இதுவரை வெளியிடப்படாத, திட்ப உறுதியான அழைப்பு பற்றிய ஆக்கத்தில் பின்வருமாறு விளக்குகிறார்: “திட்ப உறுதியான அழைப்பைக் கர்த்தர் தெரிந்துகொள்ளப் பட்டவர்களுக்கு கொடுக்கும்போது அவர்களில் அதேநேரத்தில் உட்புற மாற்றங்களும் உடனடியாக ஏற்படுகின்றன. திட்ப உறுதியான அழைப்பையும், ஆத்துமாவில் நிகழும் உள்ளார்ந்த ஆவிக்குரிய மாற்றங்களையும் வேதம் பிரித்து விளக்குகிறது. இருந்தபோதும் இவை இரண்டும் ஒரே காரியத்தையே விளக்குகின்றன. அதாவது, திட்ப உறுதியான அழைப்பும், மறுபிறப்பும் ஒன்றே. இவை இரண்டையும் வேதம் பிரித்து விளக்கினாலும், ஒரே காரியத்தையே நாம் வெவ்வேறு கோணத்தில் பார்க்கிறோம் என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியம்.”
பாவத்தை உணர்தலும், அதற்காக வருந்துதலும்
திட்ப உறுதியான அழைப்போடு தொடர்புடையதாக பாவத்தை உணர்தல், அதற்காக வருந்துதல், மறுபிறப்படைதல் எல்லாம் இணைந்திருந்த போதும் இறையியல் விளக்கம் கருதி திட்ப உறுதியான அழைப்பின் காரணமாக தெரிந்துகொள்ளப்பட்ட ஆத்துமாவில் ஏற்படும் பாவ உணர்வை அடுத்துக் கவனிப்போம்.
கர்த்தருடைய வார்த்தையின் மூலமாக திட்ப உறுதியான அழைப்பு ஆத்துமாவுக்கு அளிக்கப்படுகிறபோது, ஆத்துமா பாவத்தைத் தன்னில் உணர ஆரம்பிக்கிறது. அதுமட்டுமல்லாமல் பாவத்திற்காக வருந்தவும் செய்கிறது. வெளிப்புறமான, பொதுவான அழைப்பின் மூலம் ஆத்துமாக்களுக்கு குற்றவுணர்வு ஏற்பட்டாலும், திட்ப உறுதியான அழைப்பின் மூலமாக மட்டுமே மெய்யான பாவ உணர்வும், வருந்துதலும் ஏற்படுகின்றது. இதை கெட்ட குமாரனின் உவமையில் இருந்து விளங்கிக் கொள்ள முடிகிறது (லூக்கா). திட்ப உறுதியான அழைப்பைப் பெற்றுக்கொண்டதாலேயே கெட்ட குமாரன் மெய்யாகவே பாவத்திற்காக வருந்தினான். மெய்யாகவே மனந்திரும்பினான். பாவத்தின் பாவத்தை உணர்ந்து அதற்காக வருந்தாதவர்கள் திட்ப உறுதியான அழைப்பைப் பெற்றவர்களாக இருக்க முடியாது. ஜோன் நியூட்டன், ஜோன் பனியன் போன்றவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பெற்ற இந்த அனுபவத்தை தங்கள் சரிதத்தில் விளக்கியிருக்கிறார்கள். இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்டு மரித்தகள்வர்களில் ஒருவன் திட்ப உறுதியான அழைப்பை மரிக்கும் தறுவாயில் பெற்று தன்னுடைய பாவங்களுக்காக மெய்யாக வருந்தியதை வேதத்தில் வாசிக்கிறோம்.
இரட்சிப்பை முழுமையாக அடைவதற்கு முன்னர் சில ஆத்துமாக்கள் இந்தப் பாவ உணர்தலையும், அதற்காக வருந்தும் அனுபவத்தையும் சில காலம் வாழ்க்கையில் அனுபவிக்க நேரிடும். ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் இந்தவகையில் குறுகிய ஒரு காலப்பகுதிக்கு எல்லோரும் இரட்சிப்பை அடையுமுன் பாவத்திற்காக வருந்த வேண்டியதில்லை. ஜோன் பன்யனுடைய வாழ்க்கையில் அவர் இதை சில காலம் அனுபவித்ததாக எழுதியிருக்கிறார். இருந்தாலும், மனந்திரும்புகிற ஒவ்வொரு பாவியும் பாவத்தின் பாவத்தை உணர்ந்து அதற்காக வாழ்க்கையில் வருந்தாமல் இரட்சிப்பை அடையமுடியாது என்பதை மட்டும் வேதம் தெளிவாகப் விளக்குகிறது. விபச்சாரியான சமாரியப் பெண் தன் வாழ்க்கையில் தன்னுடைய பாவத்தை உணர்ந்து அதைத் துறந்தாள் என்று யோவானில் வாசிக்கிறோம். தன் மனமாற்றத்தையும், மனந்திரும்புதலையும் அவள் தன் கிராம மக்களுக்கு முன் எடுத்துரைக்கத் தவறவில்லை. கர்த்தரின் திட்ப உறுதியான அழைப்பு ஆத்துமாவில் இதைச் செய்வதாக இருக்கிறது. சிலருடைய வாழ்க்கையில் பாவத்திற்காக வருந்துகிற இந்த அனுபவம் அசாதரணமானதாக இருந்துவிடலாம். பவுல் அப்போஸ்தலன், ஜோன்
நியூட்டன், ஜோன் பனியன் ஆகியோரின் வாழ்க்கையில் அதை வாசிக்க முடிகிறது. ஒவ்வொரு விசுவாசியின் வாழ்க்கையிலும் இது அசாதாரணமாக நிகழ வேண்டும் என்பதில்லை. இத்தகைய அசாதாரணமான அனுபவம் இல்லாமல் இயேசுவை விசுவாசிப்பது விசேஷமான அனுபவமாக இருக்காது என்று சிலர் தறவாக எண்ணிவிடுகிறார்கள். இயெசு கிறிஸ்துவை விசுவாசிப்பதும், இரட்சிப்பை அடைவதும் அசாதாரணமான அனுபவங்களே. மனிதன் இயற்கையாக அடையக்கூடிய அனுபவம் அல்ல அது. கர்த்தர் தன்னுடைய வல்லமையால் ஆவியின் மூலம் ஆத்துமாவில் செய்யும் அற்புதம் இது. அப்படியிருக்க வேறு அசாதாரண அனுபவங்களை நாம் தேடிப் போகக் கூடாது. அதுவும் வேதத்தில் காணமுடியாத, வேதம் விளக்காத அனுபவங்களைத் தேடி ஓடுவது மெய்யான விசுவாசத்தை நம்மில் ஏற்படுத்தாது.
ஆவியானவரால் ஆத்துமாவில் நிகழும் பாவ உணர்தலும், பாவத்திற்கான வருந்துதலும், அந்த ஆத்துமா இரட்சிப்பை அடைவதற்கு ஆவியானவர் அவரைத் தயார் செய்யும் கிரியையே (Preparatory work of the Spirit) என்று விளக்கியிருக்கிறார்கள். அவர்கள் சொல்லுவதில் உண்மையிருந்த போதும் அதை நாம் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது. அதாவது, ஆத்துமா இரட்சிப்பை அடைவதற்கு முன்பாக ஆவியானவர் அவர்களை இரட்சிப்புக்காகத் தயார் செய்து, அதற்குப்பிறகு அவர்களுக்கு இரட்சிப்பை அளிப்பதாகக் கருதிவிடக்கூடாது. இப்படிப் பொருள் கொள்வது தவறு. உண்மையில் திட்ப உறுதியாக கர்த்தரால் அழைக்கப்படுகிறவர்கள் தங்களில் மறுபிறப்பை அடைந்து பாவ உணர்வு பெற்று, அதற்காக வருந்தி, மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்கிறார்கள். இவையெல்லாம் திட்ப உறுதியான அழைப்போடு தொடர்புடையதும், அந்த அழைப்போடு பிரிக்க முடியாதபடி இணைந்து ஒரே நேரத்தில் நிகழும் அனுபவங்களாகும். திட்ப உறுதியான அழைப்பு கிடைக்கப்பெற்றவர்களில் இந¢தக் கிருபையின் அம்சங்கள் நிச்சயம் காணப்படும். இவை இல்லாத இடங்களில் திட்ப உறுதியான அழைப்பை நாம் பார்க்க முடியாது.
“என்னுடைய ஆத்மீக வெளிப்பாடுகள் எல்லாம் வெறும் பாசாங்கு மட்டுமே. என்னுடைய சரீரத்தில், மற்றவர்கள் பாராட்டும்படியான செயல்களைச் செய்ய எத்தனை தடவை முயற்சித்திருக்கிறேன். மற்றவர்கள் என்னைப் பற்றி நல்லவன் என்று நினைக்க வேண்டுமென்பதற்காக நல்லவனாக நடித்திருக்கிறேன். அகங்காரமும், சுய நீதியும என்னைத் தவறான வழிகளில் போக வைத்தனவே. எத்தனை முறை பிரசங்க மேடையில் தவறாக நடந்திருக்கிறேன். முன்னால் இருக்கிறவர்கள் கேட்கும்படி ஜெபிக்கவில்லை. தொழுநோயாளனின் நிலையில் இருந்து ‘நான் சுத்தமானவனல்ல, சுத்தமானவனல்ல’ என்று கதறுமளவுக்கு என்னில் தவறுகள் நிறைந்திருக்கின்றன.”
– எ. டபிள்யூ. பிங்க் (A. W. Pink) –