மறுபிறப்பு
கடந்த இதழில் இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கில் கர்த்தரின் அழைப்பைக் குறித்த விளக்கத்தில், “திட்ப உறுதியான அழைப்பைக் கர்த்தர் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு அளிக்கிறபோது அவர்களில் அதே நேரத்தில் உட்புற மாற்றங்களும் உடனடியாக ஏற்படுகின்றன. திட்ப உறுதியான அழைப்பையும், ஆத்துமாவில் நிகழும் உள்ளார்ந்த ஆவிக்குரிய மாற்றங்களையும் வேதம் பிரித்து விளக்குகிறது. இருந்தபோதும் இவை இரண்டும் ஒரே காரியத்தையே குறிப்பதாக இருக்கின்றன. அதாவது, திட்ப உறுதியான அழைப்பும், மறுபிறப்பும் ஒன்றே. இவை இரண்டையும் வேதம் பிரித்து விளக்கினாலும், ஒரே காரியத்தையே நாம் வெவ்வேறு கோணங்களில் பார்க்கிறோம் என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியம்” என்ற போதகர் ஜிம் டோமின் (Jim Domm) விளக்கத்தைத் தந்திருந்தோம்.
இந்த ஆக்கத்தில் இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கில் ‘மறுபிறப்பு’ (Regeneration or New Birth) எத்தகைய இடத்தை வகிக்கிறது என்பதை ஆராய்வோம். மனித சரீரத்தில் எல்லா அங்கங்களும் இணைந்து செயல்பட்டபோதும் அது பல பாகங்களைக் கொண்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியும். ஒரு பாகத்தைப் பற்றிய தெளிவான விளக்கத்தைப் பெற்றுக் கொள்ள நாம் அந்தப் பாகத்தை மட்டும் தனியாக ஆராய்ந்து பார்ப்பதில்லையா? அதேபோலத்தான், மறுபிறப்பை மட்டும் தனியாக இனிப் பிரித்து ஆராயப் போகிறோம். இப்படி இறையியல் ரீதியாக மறுபிறப்பை மட்டும் தனியாக ஆராய்வதால் இரட்சிப்பைப் பற்றிய தெளிவான இறையியல் விளக்கத்தை நாம் பெற்றுக்கொள்ள முடிகிறது.
இயேசு கிறிஸ்து நிக்கொதேமுவைப் பார்த்து “நீ மறுபடியும் பிறக்க வேண்டும்” என்றார். அதை விளக்கிய இயேசு அந்த அநுபவம் ஒருவனுடைய வாழ்க்கையில் நிகழும்போது அதைப் புறக்கண்களால் காண முடியாது என்பதை யோவான் 3ல் தெளிவாக விளக்கியிருக்கிறார். இரட்சிப்பு சம்பந்தப்பட்ட பல அம்சங்களை நாம் புறக்கண்களால் பார்க்க முடியும். உதாரணத்திற்கு, ஒருவன் மனந்திரும்பி விசுவாசிக்கிறேன் என்று அறிவிப்பதை நாம் காண முடியும். அதன் மூலம் அவன் இப்போது விசுவாசி என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், மறுபிறப்பு என்பதை இரட்சிப்பின் அநுபவத்தில் இருந்து தனியாகப் பிரித்துப் பார்க்கிறபோது, அந்தக் குறிப்பிட்ட ஆவியின் கிரியையை மனிதன் புறக்கண்களால் காண முடியாது என்று இயேசு விளக்கினார். யோவானில் இயேசு பின்வருமாறு விளக்குகிறார்: “காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதன் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனும் அப்படியே இருக்கிறான்” என்றார்.
மேலே நாம் பார்த்த வசனத்தின் மூலம் இயேசு, ஆவியானவர் ஆத்துமாவின் இருதயத்திலே கிரியை செய்து நித்திய ஜீவனை அழிக்கின்ற மறுபிறப்பாகிய அநுபவம் புறக்கண்களால் காண முடியாதது என்று விளக்குகிறார். காற்று வீசுவதை நாம் உணர முடியும்; கண்களால் காண முடியாது. எங்கிருந்து அது வருகிறது என்பதை உணர முடியும்; பார்வைக்கு அது புலப்படாது. அது போலத்தான் மறுபிறப்பாகிய அநுபவமும் என்கிறார் இயேசு. கர்த்தருடைய பிள்ளையாக மாறுவதற்கு புறக்கிரியைகளாகிய சடங்குகளில் மட்டுமே நம்பிக்கை வைத்திருந்த யூதப்போதகனான நிக்கொதேமுவுக்கு இந்தப் போதனை தலையைச் சுற்றவைத்ததில் ஆச்சரியமில்லை. இதிலிருந்து இரட்சிப்பாகிய அநுபவத்தில் மறுபிறப்பை ஓர் அம்சமாகத் தனியாக பிரித்துப் பார்க்கின்றபோது அது புறக்கண்களுக்குப் புலப்படாத ஆவியின் கிரியை என்பதை இறையியல் ரீதியாக நாம் அறிந்துகொள்ள முடிகிறது.
மறுபிறப்பைப் பற்றிய கீழ்வரும் இறையியல் சத்தியங்களை நாம் புரிந்துணர்வது அவசியம்:
1. மறுபிறப்பு முற்றும் முழுவதுமாக பரிசுத்த ஆவியின் கிரியையாக இருக்கிறது. யோவான் 3ல் இயேசு அதைத் தெளிவாக விளக்கியிருக்கிறார். பரிசுத்த ஆவியின் இந்தக் கிரியையில் மனிதனுக்கு எந்தப்பங்கும் இல்லை. அதாவது, மனிதனின் கிரியைக்கு இதில் இடமில்லை. தேவ வார்த்தையைக் கேட்ட ஆத்துமா மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கு ஏதுவாக ஆவியானவர் ஆத்துமாவில் செய்யும் கிரியையே மறுபிறப்பு.
2. பரிசுத்த ஆவியானவர் ஆத்துமாவின் உள்ளார்ந்த பகுதியில் (Sub-conscience life) விதைக்கும் ஜீவ வாழ்க்கையே மறுபிறப்பாகும். கர்த்தரின் திட்ப உறுதியான அழைப்பை (Effectual Call) ஒரு மனிதன் தன் புறவாழ்வில் அறிந்துணர்வது போல் தன்னுடைய அக வாழ்வில் உள்ளார்ந்த பகுதியில் நிகழும் ஆவியின் கிரியையாகிய மறுபிறப்பை அவன் அது விதைக்கப்பட்ட நேரத்திலேயே அறிந்துணர முடியாது. விதைக்கப்பட்ட வித்து முளைவிட்டு வளரும்போதே அதன் விளைவுகளைப் பின்னால் மனிதன் தன்னில் உணர முடிகிறது. இதைப் பல சீர்திருத்த இறையியல் அறிஞர்கள் பின்வருமாறு விளக்கியிருக்கிறார்கள். இதைப் பற்றி விளக்குகிற லூயிஸ் பேர்க்கொவ் (Louis Berkhof), “கர்த்தர் தன்னுடைய கிரியையினால் மனிதனில் மறுபிறப்பை விதைத்து அவனுடைய சகல அங்கங்களையும் ஆளும் ஆத்துமா முழுமையாகப் பரிசுத்தமடையும்படிச் செய்கிறார்” என்று விளக்குகிறார். இதுபற்றி எழுதும் இறையியல் அறிஞர் ஜோன் தோன்பரி (John Thornbury), “கர்த்தர் மனிதனின் அகவாழ்வில், அவன் தன்னுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும்படியாக விதைக்கும் பரிசுத்தமான வித்தே மறுபிறப்பு. இது அவனில் வெளிப்புறமாக நிகழும் மாறுதல்களைவிட மேலானது. பரிசுத்த ஆவியின் கிரியைகளைப் புரிந்து கொள்வது கடினமானதாக இருப்பதாலும், ஆவியானவர் இரகசியமாக இதனை மனிதனில் விதைப்பதாலும் இதைப் புரிந்துகொள்ளுவது கடினமானது” என்கிறார். அதனால்தான் யோவான் 3ல் இயேசு இதனை காற்றின் கிரியைக்கு ஒப்பிட்டு விளக்கியிருக்கிறார்.
3. பரிசுத்த ஆவியானவர் மறுபிறப்பை மனிதனில் முழுமையாக ஒரேயடியாக விதைக்கிறார். அதாவது, படிப்படியாகவோ அல்லது சிறிது சிறிதாகவோ மறுபிறப்பு மனிதனில் விதைக்கப்படுவதில்லை. மறுபிறப்பு விதைக்கப்பட்ட உடனேயே மனிதனில் அனைத்து அகப்பாகங்களும் பரிசுத்த மடைந்து ஜீவ வாழ்க்கையை அவன் வாழ்வதற்கு அவசியமாக இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் தகுதியை அவன் அடைகிறான். மறுபிறப்பின் முழுத்தாக்கத்தையும் மனிதன் உடனடியாக அது நிகழந்த உடனேயே அறிந்துணராது போனாலும் பூரணமாக விதைக்கப்பட்ட வித்து அவனில் கிரியை செய்து அவன் கர்த்தரை விசுவாசிக்கும்படிச் செய்கிறது. இதைப் பற்றி விளக்கும் இறையியல் அறிஞர் ஜோன் மரே (John Murray), “இது மனிதனில் கர்த்தர் ஏற்படுத்தும் முழுமையான ஆவிக்குரிய மாற்றம். இது மனிதனைப் புதுரூபமாக்கும் பூரணமான மாற்றம்” என்று விளக்குகிறார்.
4. ஆகவே, இறையியல் ரீதியாக இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கில் திட்ப உறுதியான அழைப்பிற்குப் பிறகு மறுபிறப்பு வருவதாகவும், மறுபிறப்பின் காரணமாகவே மனிதனுக்கு விசுவாசம் கிடைக்கிறது என்பதையும் புரிந்துகொள்ளுவது அவசியம் (Regeneration gives a man the ability to exercise faith in Christ. Therefore faith must come after regeneration in the order of salvation). மறுபிறப்புக்கு முன்னால் விசுவாசம் வர முடியாது. மறுபிறப் படையாத எவராலும் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கவும் முடியாது. மனிதனில் முழுமாற்றத்தையும் ஏற்படுத்தும் பரிசுத்த ஆவியின் கிரியை யாகிய மறுபிறப்பே ஏனைய சகல இரட்சிப்பின் ஆவிக்குரிய அம்சங் களையும் மனிதன் அனுபவிப்பதற்கு அடிப்படையாக இருக்கின்றது. இவை அனைத்தையும் ஒன்றில் இருந்து இன்னொன்றைப் பிரிக்க முடியாதிருந்தபோதும், இவை அனைத்தும் நிகழ்வதற்கு கால இடைவெளி இல்லா திருந்தபோதும், இவற்றில் ஒரு படிமுறை ஒழுங்கை நாம் பார்க்கக்கூடியதாக வேதம் இரட்சிப்பின் அநுபவத்தை விளக்குகிறது.
5. பரிசுத்த ஆவியானவர் மனிதனுக்கு மறுபிறப்பை அளிக்கும்போது அவனுக்கு புதிதாக ஒரு ஆத்துமாவையோ அல்லது இருதயத்தையோ அல்லது அவனுடைய மானுடத்தோடு புதிதாக எந்தவிதமான உறுப்பு களையோ இணைப்பதில்லை. அவனுடைய அகவாழ்வில் இது வரையிலு மில்லாதிருந்த முழுமையான ஜீவனுக்குரிய ஒரு பெருமாற்றத்தை ஏற்படுத்துவதையே (Radical change) மறுபிறப்பு என்று அழைக்கிறோம்.
6. இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கின் சகல கிருபைகளும் (திட்ப உறுதியான அழைப்பு, மறுபிறப்பு, மனந்திரும்புதல், நீதிமானாகுதல், பரிசுத்தமாகுதல்) ஒன்றோடொன்று இணைந்திருந்தபோதும் மறுபிறப்பே திட்ப உறுதியான அழைப்பாகிவிட முடியாது. இவை இரண்டுமே பிரிக்க முடியாத தனித்தனி யான கிருபைகள்.
7. இறுதியாக, மறுபிறப்பு மனிதனின் அகவாழ்வில் விதைக்கப்படும் பூரணமான ஆவிக்குரிய ஜீவவித்தாக இருந்தபோதும் மனிதன் முழுமையாக இரட்சிப்பை அடைந்து அநுபவிப்பதற்கு அதோடு தொடர்புடைய ஏனைய சகல கிருபைகளும் அவசியம். மறுபிறப்பை மெய்யாகவே அடந்த மனிதனில் அவன் இரட்சிப்பை அநுபவிக்கும்படியாக ஏனைய கிருபை களும் நிச்சயம் தொடரும்.
குழந்தைகள் மறுபிறப்படைய முடியுமா?
பிரெஸ்பிடீரியன் சபைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் குழந்தைகள் மறுபிறப்படைய முடியும் என்று நம்புகிறார்கள். பிரெஸ்பிடீரியன் இறையியல் வல்லுனரான லுயிஸ் பேர்க்கொவ், “சுவிசேஷச் செய்தியைக் கேட்காமலேயே பரிசுத்த ஆவியின் கிரியையால் குழந்தைகள் மறுபிறப்படைந்துவிட முடியும்” என்று தன்னுடைய முறைப்படுத்த இறையியல் நூலில் விளக்கியிருக்கிறார். பிரெஸ்பிடீரியன் பிரிவினர் விசுவாசிகளின் குழந்தைகள் ஏதோ ஒருவிதத்தில் விசுவாசிகளல்லாதவர்களுடைய குழந்தைகளை விட பரலோக இராஜ்ய அநுபவங்களை அநுபவிப்பதாகக் கருதுவதாலும், அவர்களைத் திருச்சபையின் ஒரு அங்கமாகக் கருதுவதாலும் இந்த முறையில் குழந்தைகளின் மறுபிறப்பைப் பற்றிய விளக்கத்தைக் கொடுக்கிறார்கள். இது வேத அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாத விளக்கம். யாராக இருந்தாலும் சுவிசேஷத்தைக் கேட்டே (ரோமர் 10) மறுபிறப்பையும், விசுவாசத்தையும் அடைய முடியும் என்று வேதம் தெளிவாக விளக்குகிறது. ஆவியும், வார்த்தையும் இணைந்து செயல்பட்டே எவருக்கும் மனந்திரும்புதல் ஏற்படுகிறது. வார்த்தையில்லாமல் எவருக்கும் விசுவாசம் கிடைப்பதாக வேதத்தில் நாமெங்கும் வாசிப்பதில்லை. குழந்தைகளுக்கு ஒருவிதமாகவும் பெரியவர்களுக்கு இன்னொருவிதமாகவும் மறுபிறப்பு கிடைப்பதாகவும் வேதம் போதிக்கவில்லை.
விசுவாசிகளின் குழந்தைகளைப் பொறுத்தவரையில், அவிசுவாசிகளின் குழந்தைகளைவிட பல ஆத்மீக வசதிகள் அவர்களுக்கு இருக்கத்தான் செய்கின்றன. அந்த ஆத்மீக வசதிகளே அவர்களுக்கு இரட்சிப்பின் அநு பவமாக மாறிவிடுவதில்லை. அந்த ஆத்மீக வசதிகளை அவர்கள் எல்லோரையும் போலப் பயன்படுத்திக்கொள்கிறபோதே ஆவியின் கிரியையினால் அவர்களுக்கு மறுபிறப்பு கிடைக்கிறது. அதுவும் கைக்குழந்தைகள் சுவிசேஷத்தைக் கேட்டுணரும் பக்குவமில்லாதவர்களாக இருக்கின்றனர். அவர்கள் பிள்ளைப் பருவத்தை அடைகிறபோத சுவிசேஷத்தைக் கேட்டுணரும் தகுதியை அடைகிறார்கள். பிள்ளைப் பருவத்தில் தேவசெய்தி கேட்டு அவர்களுக்கு மறுபிறப்பு கிடைத்தாலும் அவர்கள் வளர்ந்து தங்களுடைய விசுவாசத்தை அறிவுபூர்வமாக அறிக்கையிடும் வயதுவரும்வரை திருமுழுக்கையும், சபை அங்கத்துவத்தையும் அடையும் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள்.
இறக்கின்ற கைக்குழந்தைகள் எங்கே போகிறார்கள்?
பிறப்பிலேயோ அல்லது பிறந்து வளர்ந்து வயதுக்கு வருமுன்போ இறக்கும் கைக்குழந்தைகள், அதாவது சுவிசேஷத்தைக் கேட்டு மனந்திரும்பும் வயதையும், பக்குவத்தையும் அடையாத குழந்தைகள் இறக்க நேரிடும்போது எங்கே போகிறார்கள்? என்ற கேள்வி அநேகருடைய மனதில் உதிப்பது வழக்கம். சீர்திருத்த பாப்திஸ்து சபையார் பயன்படுத்தும் 1689 விசுவாச அறிக்கை இதைப் பற்றி பின்வரும் விளக்கத்தை அளிக்கிறது: “தம் விருப்பப்படி எங்கேயும் எவ்வாறும் கிரியை செய்யும் கிறிஸ்து, குழந்தைப் பருவத்தில் இறக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட குழந்தைகளை ஆவியின் மூலம் மறுபிறப்பளித்து இரட்சிக்கிறார். வெளிப்படையாக நற்செய்தியின் பிரசங்கத்தினால் அழைக்கப்பட முடியாத (நிலையிலிருக்கும்) தெரிந்து கொள்ளப்பட்ட அனைத்து மனிதர்களையும் பொறுத்தவரையிலும் இது உண்மையே.” நமது பாப்திஸ்து விசுவாச அறிக்கை இத்தகைய விளக்கத்தை அளிப்பது நமக்கு ஆச்சரியத்தைத் தருவதாக இருக்கலாம்.
பிரசங்கிகளின் இளவரசன் என்று அழைக்கப்படும் ஸ்பர்ஜன் எல்லாக் குழந்தைகளுமே கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டு மறுபிறப்படைகின்றனர் என்று நம்பினார். அவர் 1689 விசுவாச அறிக்கையை தன் காலத்தில் மறுவெளியீடு செய்தபோது மேலே நாம் பார்த்த விசுவாச அறிக்கையின் வாக்கியங்களில் மூலத்தில் இருந்த ‘தெரிந்துகொள்ளப்பட்ட’ என்ற பதத்தை நீக்கிவிட்டு வெளியிட்டார். 1677ல் வெளியிடப்பட்ட அறிக்கையின் மூலம் இந்த வார்த்தைகளைக் கொண்டிருந்தது. இறக்கின்ற தெரிந்துகொள்ளப்பட்ட குழந்தைகள் மறுபிறப்படைவார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள நாம் முன்வருவோம். ஆனால், பிறக்கின்ற குழந்தைகளில் எவராவது தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறார்களா என்ற கேள்வி எழுகின்றது? இறக்கின்ற கைக் குழந்தைகள் மறுபிறப்படைகிறார்கள் என்ற போதனைக்கு வலிமை தரும் வகையில் பயன்படுத்தப்படுகின்ற வசனம் 2 சாமுவேல் 12:23. பத்சீபாவோடு ஏற்பட்ட தொடர்பால் தாவீதுக்குப் பிறந்த குழந்தை இறக்கும் என்று கர்த்தர் சொன்னார். அந்தக் குழந்தை இறந்தபின் தாவீது 23ம் வசனத்தில் சொல்கிறான், “அது மரித்திருக்கிற இப்போது நான் உபவாசிக்க வேண்டியது என்ன? இனி நான் அதைத் திரும்பி வரப் பண்ணக்கூடுமோ? நான் அதினிடத்துக்குப் போவேனேயல்லாமல், அது என்னிடத்துக்குத் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான்.” தாவீதின் இந்த வார்த்தைகளின் அடிப்படையில் தாவீதின் குழந்தை பரலோகத்தில் இருக்கும், அதனால் தான் தாவீது, ‘நான் அதனிடத்துக்குப் போவேன், அது என்னிடத்துக்குத் திரும்பிவரப்போகிறது இல்லை’ என்று சொன்னான் என்று சிலர் எடுத்துக் கொள்ளுகிறார்கள். கைக்குழந்தைகள் இறக்கும்போது பரலோகம் போகி றார்கள் என்பதை இந்த வசனம் ஆதரித்துப் பேசுகிறதா? அப்படியான தோற்றத்தைத் தருகிறதே தவிர அதை ஆதரித்து வலியுறுத்துவதாக இந்த வசனம் காணப்படவில்லை. வேதத்தில் வேறெங்காவது கைக்குழந்தைகள் இறந்தபின் பரலோகம் போகிறார்கள் என்று போதனை இருக்கின்றதா? என்று கேட்டால் அப்படிப் போதிக்கும் எந்தப் பகுதியும் வேதத்தில் இல்லை என்றே கூறவேண்டும். சிலர் யோவான் 3:3-8 வரையுள்ள வசனங்கள் அவ்வாறு போதிப்பதாகக் கூறுவார்கள். ஆனால், அப்பகுதி அப்படி எதையும் வெளிப்படையாக விளக்கவில்லை என்பதே உண்மை.
பியூரிட்டன் பெரியவரான ஜோன் ஓவனும் வேறு சிலரும், சுவிசேஷத்தைக் கேட்காத அனைவரும், சுவிசேஷத்தைக் கேட்டுப்புரிந்துகொள்ளுகிற நிலையில் இல்லாமலிருக்கும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் பரலோகத்தை அடைய முடியாது என்று நம்பினர். அவர்களில் எவருமே தெரிந்து கொள்ளப்படவில்லை என்றும் இவர்கள் நம்பினார்கள். இந்த விளக்கங்களும் தவறு என்றே கூறவேண்டும். ஏனெனில், இந்த விதமாக வெளிப்படையாக வேதம் எங்கும் போதிக்கவில்லை. சாமுவேல் வோல்டிரன் (Samuel Waldron) இதைப்பற்றி விளக்கும்போது, “கைக்குழந்தைகள் மறுபிறப் படைவதாக வேதம் எங்கேயும் போதிக்கவில்லை. யெரேமியா 1:5, லூக்கா 1:44 ஆகிய பகுதிகள் யெரேமியாவும், யோவானும் கைக்குழந்தைகளாக இருக்கும்போது மறுபிறப்படைந்தார்கள் என்று விளக்கவில்லை. கைக்குழந்தைகள் எங்காவது மறுபிறப்படைந்திருந்தால் அது எப்படி நிகழ்கிறது என்றுகூட வேதம் எப்பகுதியிலும் விளக்கவில்லை. கைக்குழந்தைகளுக்கு மறுபிறப்பைக் கர்த்தரால் கொடுக்க முடிந்தால், அவர்கள் தேவ வார்த்தையைக் கேட்டு கிறிஸ்துவை விசுவாசிக்கவைக்க கர்த்தரால் முடியாதா? என்ன” என்று வோல்டிரன் கேட்கிறார்.
கைக்குழந்தைகளைப் பற்றி நாம் என்ன முடிவுக்கு வரவேண்டும்? இறக்கின்ற ஒவ்வொரு கைக்குழந்தையின் முடிவும் எப்படியிருக்கும் என்று நம்மால் உறுதியாக எதையும் சொல்ல முடியாது. அவர்கள் பரலோகத்தை அடைவார்கள் என்று நம்மால் எதிர்பார்க்கத்தான் முடியுமே தவிர, வேதம் அப்படி உறுதியான, தெளிவான எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. இந்த விஷயத்தில் ஆதியாகமம் 18:25ன்படி “சர்வலோக நீதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ” என்பதைத்தான் நாம் விசுவாசிக்க வேண்டும். நீதியுள்ள கர்த்தர் எப்போதும் நீதியானதையே செய்வாரென்பதால் வேதம் விளக்கமான போதனையைத் தராத இந்த விஷயத்தை நாம் நீதியின் தேவனுடைய கரத்தில் நம்பி ஒப்படைத்துவிட வேண்டும்.