மனமாற்றம்
இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கில் அடுத்தபடியாக நாம் கவனிக்க வேண்டியது மனமாற்றம் (Conversion). இதை விளக்கும் ஜோன் தோன்பெரி, (John Thornbury) “பரலோகத்திலிருக்கும் கர்த்தரின் பார்வையின்படி மனிதனில் அவர் செய்யும் கிருபையின் கிரியையாக மறுபிறப்பை வர்ணிப்போமானால், அதே காரியத்தை மனிதனுடைய அநுபவத்திலிருந்து நோக்குவதை மனமாற்றம் என்று வர்ணிக்கலாம்” என்று விளக்குகிறார். இதிலிருந்து மறுபிறப்பையும், மனமாற்றத்தையும் இறையியல் ரீதியில் தெளிவாக விளங்கிக் கொள்ளுவதற்காக இறையியல் கண்ணோட்டத்தில் நாம் பிரித்து ஆராய்ந்தாலும் அவை ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப் போன்றவை என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
மறுபிறப்பு மனிதனில் பரிசுத்த ஆவியால் விதைக்கப்படும் புதிய ஜீவனின் வித்து; அந்த வித்து வளர்ந்து, அது மனிதனில் ஏற்படுத்தும் வெளிப்புற விளைவுகளையே மனமாற்றம் என்கிறோம். அதாவது, மறுபிறப்பை அடைந்த மனிதனில் நாம் காணும் வெளிப்புற விளைவுகளே மனமாற்றம். ஒரு மனிதனில் மனமாற்றம் ஏற்படுகிறபோது இரண்டு அம்சங்களை அவனில் காணலாம்: (1) மனந்திரும்புதல், (2) விசுவாசம்.
மறுபிறப்பு ஒருவனில் நிகழும்போது கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவன் அது தன்னில் ஏற்படுத்தும் விளைவுகளை உடனடியாக உணராமல் இருந்துவிடலாம். ஏனெனில், மறுபிறப்பு மனிதனின் உள்ளார்ந்த பகுதியில் இருதயத்தில் ஆழத்தில் புறக்கண்களுக்கு புலப்படாமல் நிகழ்கின்ற கிருபை. அது நிகழ்கின்றவேளை மனிதனே அதை உடனடியாக முழுமையாக உண ராமல் இருக்கலாம். ஆனால், மறுபிறப்பின் புறவெளிப்பாடான மனமாற்றம் மனிதன் உணரக்கூடிய விதத்தில் அவனுடைய இருதயத்தில் கிருபையின் வெளி¢ப்பாடாக இருப்பதால் அதை அவன் முழுமையாக உணர்கிறான். மனமாற்றம் மனிதனின் சகல அங்கங்களையும் பாதித்து அவனில் கிருபை ஏற்படுத்தியிருக்கும் பெருமாற்றத்தை வெளிப்படுத்துகிறது. மனிதன் உணர முடியாதவகையில் அவனில் மனமாற்றம் ஒரு போதும் நிகழாது.
பாப்திஸ்து போதகரும் இறையியல் அறிஞருமான மறைந்த ஏர்னஸ்ட் கெவன் (Dr. Earnest F. Kevan) மனமாற்றத்தைப் பின்வருமாறு விளக்கியிருக்கிறார். “மனமாற்றத்தை மனிதனில் இருதயத்தின் ஆழத்தில் நிகழ்ந்த கிருபையின் மாற்றத்தின் வெளிப்புற அடையாளமாக விளக்கலாம். மனிதனின் இருதயத்திற்கு ஜீவன் அளிக்கப்பட்ட பிறகே அதற்கு மனந்திரும்புதலுக்கும், விசுவாசத்திற்குமான வல்லமை கிடைக்கிறது. இதன்காரணமாக, மறுபிறப்பு மனிதனில் மனமாற்றத்துக்கு முன்னால் ஏற்படுகிறதென்பதை உணர்ந்து அது மனமாற்றத்திலிருந்து வேறுபட்ட ஒரு கிருபை என்பதை அறிந்துகொள்ள வேண்டும். ஒரு மனிதனில் ஜீவனின் ஆரம்பமாக மறு பிறப்பு இருக்குமானால், அம்மாற்றத்தின் வெளிப்பாடே மனமாற்றம் என்று கூறவேண்டும். மறுபிறப்பு பூரணமாக கர்த்தரின் கிரியையாக இருக்கிறது; மனமாற்றத்தில் மனிதனுக்கு பங்கு இருக்கிறது. மறுபிறப்பாகிய அநுபவம் நிகழும்போது அதைப் பெற்றுக்கொள்பவனாக மட்டுமே மனிதன் இருக்கிறான்; மனமாற்றம் நிகழ்கிறவேளையில் மனிதன் அதில் ஊக்கத்தோடு பங்குபற்றி செயல்படுபவனாக இருக்கிறான். மறுபிறப்பை நம்மில் நிகழும் அநுபவமாக பார்த்தால், அதன் விளைவு மனமாற்றம் எனலாம். மறுபிறப்பு நிழும்போது சடுதியாக நிகழ்கின்றது; அதன் விளைவாகிய மனமாற்றம் சிறிது சிறிதாகவே வெளிப்படுகின்றது.”
இறையிலறிஞர் ஏர்னஸ்ட் கெவன் மனமாற்றத்தைப் பற்றித் தந்த விளக்கத்தின் அடிப்படையில் அதை நாம் இனி மேலும் விபரமாகப் பார்ப்போம். இதை வேதத்தில் இருபகுதிகளில் இருந்து விளக்கலாம். யோவான் 4வது அதிகாரத்தில் நாம் நிக்கொதேமு இயேசுவை சந்திப்பதைப் பார்க்கிறோம். அந்த அதிகாரத்தில் மறுபிறப்பைப் பற்றி இயேசு விளக்குகிறார். அது ஆவியின் செயலென்றும், கண்களால் நாம் காணமுடியாத ஆவியின் கிரியை என்றும் அவர் விளக்குவதைப் பார்க்கிறோம். ஒவ்வொரு மனிதனும் மறுபிறப்படைவது அவசியம் என்றும் இயேசு போதிக்கிறார். அந்த அதிகாரம் மறுபிறப்பை தெய்வீகப் பார்வையில் நமக்கு விளக்குகிறது. அதேவேளை அதன் மறுபுறமான மனமாற்றத்தை நாம் கெட்டகுமாரனின் உவமையில் லூக்கா 16ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். இந்தப் பகுதியில் மறுபிறப்பை அடைந்த ஒருவனில் அந்த மாற்றம் எப்படி நிகழ்கின்ற தென்பது மனிதனுடைய கண்ணோட்டத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. அவனுள் நிகழ்ந்திருக்கும் கிருபையின் செயலின் காரணமாக கெட்ட குமாரனின் புத்தி தெளிவடைந்து, அவன் ஆவிக்குரிய சிந்தனைகளைக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையை ஆராய்வதைப் பார்க்கிறோம். தன்னுடைய பாவங்களை உணர்ந்து அவற்றிற்காகப் பெரிதும் வருந்துவதைப் பார்க்கிறோம். அந்தப் பாவங்களைத் தாழ்மையோடு தகப்பன் முன்னிலையில் அறிக்கையிட்டு அவருடைய ஐக்கியத்தை அவன் நாடுவதற்கான முயற்சிகளில் அவன் ஈடுபடுவதையும் இறுதியில் தகப்பன் அவனை ஆனந்தத்தோடு வரவேற்பதையும் பார்க்கிறோம். இதெல்லாம் அவனுள் நிகழ்ந்திருக்கும் கிருபையின் கிரியைகளின் புறவெளிப்பாடுகள். மெய்யான மனமாற்றம் நிகழ்ந்திருக்கும் எவரிலும் இவற்றைக் காணமுடியும். ஆகவே, இரண்டு வேதப்பகுதிகளும் இரட்சிப்பைப் பற்றியே விளக்குகின்றன. இருந்தாலும் ஒன்று கிருபையின் கிரியையை தெய்வீகப் பார்வையிலும், மற்றது அதை மனிதனுடைய கண்ணோட்டத்திலும் விளக்குகின்றது.
மனந்திரும்புதல் (Repentance)
மனமாற்றத்தின் இணைபிரியாத இரண்டு ஆத்மீக அம்சங்களாக மனந்திரும்புதலும், விசுவாசமும் இருக்கின்றன என்று ஏற்கனவே பார்த்தோம். முதலில் மனந்திரும்புதலைப் பற்றி சிறிது விளக்கமாகப் பார்ப்போம். மனந்திரும்புதல், விசுவாசம், கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிதல் இவை அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஒரு மனிதன் கிறிஸ்துவை விசுவாசித்து கீழ்ப்படியாமல் மெய்யான மனந்திரும¢புதலைக் கொண்டிருக்க முடியாது; மனந்திரும்பாமல் அவரால் விசுவாசிக்கவோ, கீழ்ப்படியவோ முடியாது; மனந்திரும்புதலையும், விசுவாசத்தையும் கொண்டிராமல் அவரால் கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிய முடியாது. சிலவேளைகளில் விசுவாசம் என்ற வார்த்தை நாம் மேலே விளக்கிய அத்தனையையும் உள்ளடக்கியதாகவும் வேதத்தில் விளக்கப்பட்டிருக்கிறது.
இரட்சிப்போடு தொடர்புடைய கிருபையின் அம்சங்களில் மனந்திரும்புதல் என்று தனியாகப் பிரித்துப் பார்க்கிறபோது, ஒரு ஆத்துமா தன்னில் தன்னுடைய பாவத்தை அநுபவபூர்வமாக உணர்ந்து, அப்பாவத்தின் காரணமாக தேவ கோபம் தன்மேல் இருப்பதை அறிந்து அதற்காக மெய்யாகவே வருந்தி கிறிஸ்துவிடம் பாவமன்னிப்புக்காகவும், ஆத்மீக விடு தலைக்காகவும் ஓடோடி வருவதை மனந்திரும்புதல் என்று விளக்கலாம். ஆவியானவரின் கிரியையால் மனிதனில் நிகழும் காரியம் இது. மெய்யான மனந்திரும்புதல் இருக்கும் வேளையில் மனிதன் பாவத்திற்கு விலகியோடுகிறான். பவுல் 1 தெசலோ. 1:9ல், தெசலோனிக்கேயர் “விக்கிரகங்களை விட்டு தேவனுக்கு மனந்திரும்பினார்கள்” என்று கூறுகிறார். இது பாவத்தைப் பற்றிய வெறும் அறிவை மட்டும் கொண்டிருந்து அதன் விளைவுகளுக்கு அஞ்சியோடும் மனமாற்றமல்ல; ஜீவனுள்ள கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்து அவரின் மகிமையைக் களங்கம் செய்து வாழ்கிறேனே என்று முழு இருதயத்தோடும் வருந்தி, அதிலிருந்து விடுதலையாகிப் பரிசுத்தமாக வாழ்வதற்குத் துடிக்கும் ஆவிக்குரிய மனமாற்றம். கொரிந்திரியரின் மனந்திரும்புதலை விளக்கும் பவுல் அவர்களிடம் மனந்திரும்புவதற்கேதுவான துக்கம் இருந்ததாக 2 கொரிந்தியர் 7:9ல் விளக்குகிறார். லூக்கா 16 இத்தகைய மனந்திரும்புதலைக் கெட்டகுமாரன் கொண்டிருந்ததாக விளக்குகிறது. தாவீது இத்தகைய மனந்திரும்புதலைக் கொண்டிருந்து சங்கீதம் 51ல் அதை விளக்குவதைக் காண்கிறோம்.
விசுவாசம் (Faith)
தேவனுடைய இராஜ்யத்திலிருப்பர்களை அதற்கு வெளியிலிருப்பவர் களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் மிகமுக்கியமான கிருபை விசுவாசமாகும். விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம் என்று எபிரேயர் 11:6 சொல்லுகிறது. விசுவாசமில்லாமல் எவரும் இரட் சிப்பை அடைய முடியாது என்று வேதம் சொல்லுகிறது (யோவான் 3:16; எபே. 2:8-9). அதனால் இரட்சிப்புக்கேற்ற விசுவாசத்தை நாம் வேதபூர்வமாக விளங்கிக் கொள்வது அவசியம். வேதபூர்வமான விசுவாசம் மூன்று அம்சங்களைக் கொண்டிருக்கும்.
(1) வேதசத்தியங்களை ஏற்றுக்கொள்ளுதல். – கிறிஸ்துவைப் பற்றிய விசுவாசம் சில சத்தியங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த சத்தியங்களை வரலாற்றில் நிகழ்ந்த உண்மைகளாகவும் காண்கிறோம். இவற்றை கிறிஸ்தவ வேதம் தெளிவாக விளக்குகின்றது. இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு பிதாவால் அனுப்பப்பட்டு பாவிகளுக்காக சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்ததை வரலாறும், வேதமும் விளக்குகின்றன. இயேசு கிறிஸ்துவைப் பற்றி வேதம் விளக்கும் சத்தியங்களை மனந்திரும்புகிற மனிதன் விசுவாசிப்பான். இயேசு கிறிஸ்துவில் ஒருவன் வைக்கும் விசுவாசம் இயேசுவைப் பற்றிய இந்த சத்தியங்களின் அடிப்படையில் ஏற்படுகின்ற விசுவாசமாகும். இயேசு கிறிஸ்துவின் கன்னிப்பிறப்பு, வாழ்க்கை, அவர் செய்த அற்புதங்கள், சிலுவை மரணம், உயிர்த்தெழுதல், திரித்துவம் போன்றவற்றை விசுவாசிக்காமல் ஒருவர் மெய்யான விசுவாசத்தைக கொண்டிருக்க முடியாது. வேதம் முழுவதையும் பூரணமாக ஒருவர் அறிந்தவராக இல்லாதிருந்தாலும் மெய்யான விசுவாசத்திற்கு அடையாளமாக இயேசுவைப் பற்றிய மேலே நாம் பார்த்த உண்மைகளை அவர் முழுமனதோடு நம்பி விசுவாசிக்கிறவராக இருக்க வேண்டும்.
(2) இயேசு கிறிஸ்துவில் அநுபவபூர்வமான நம்பிக்கை – இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சத்தியங்களை மனதளவில் வெறும் அறிவாக மட்டும் கொண்டிருப்பதல்ல மெய்யான விசுவாசம்; முழுஇருதயத்தோடும் விசுவாசி அதை நம்புகிறவனாக இருக்கிறான். உலகத்திலிருக்கும் வேறு எத்தனையோ விஷயங்களை நாம் நம்பியபோதும் அவற்றிற்கும் நம் வாழ்க்கைக்கும் தொடர்பு இருப்பதில்லை; அவை நம்மைப் பாதிப்பதில்லை. இயேசுவைப் பற்றிய விசுவாசத்தைப் பொறுத்தவரையில் அது நம்மை முழுமையாகப் பாதிக்கிறது. நமது வாழ்க்கையின் அத்தனைப் பகுதிகளையும் மாற்றி அமைக்கிறது. இயேசுவைப் பற்றிய உண்மைகளை மட்டும் நாம் விசுவாசிக்காமல் அவரையே ஜீவனுள்ள தேவனாக முழு இருதயத்தோடும் நம்புகிறோம்; விசுவாசிக்கிறோம். அவரோடு ஆத்மீக ரீதியில் நமக்கு உறவு ஏற்படுகிறது. இந்த நம்பிக்கை ஆவியின் கிரியையால் நம்மில் உருவாகின்ற அநுபவபூர்வமான நம்பிக்கை. இதை 2 தீமோ. 1:12ல் வாசிக்கிறோம்: “நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாறென்று நிச்சயித்துமிருக்கிறேன்.”
(3) அடிபணிதல் – இரட்சிப்புக்குரிய விசுவாசத்தில் காணப்படும் இன்னுமொரு அம்சம் கிறிஸ்துவுக்கு அடிபணிதலாகும். அதாவது, அவரைப் பற்றிய சத்தியங்களை விசுவாசிப்பதோடு மட்டுமிருந்துவிடாமல், அவரை முழு இருதயத்தோடும் நேசித்து அவருடைய கட்டளைகளுக்கெல்லாம் அடிபணிந்து நம்மை அவருக்கு அர்ப்பணிக்கும் வாழ்க்கையைக் கொண்டிருப்பதே இரட்சிப்புக்குரிய விசுவாசத்தின் அடையாளமாகும். இயேசு கிறிஸ்து நமக்கு இரட்சகராக மட்டுமில்லாமல் ஆண்டவராகவும் இருக்கிறார். மெய்யான விசுவாசி அவருடைய ஆளுகைக்கு கட்டுப்படுகிறவன். அவரை நேசித்து அவருடைய கட்டளைகள் அனைத்தையும் முழுமனதோடு பின்பற்றுகிறவன். “என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்.” என்றார் இயேசு (மத். 11:29). மெய் விசுவாசம் ஆத்துமாவில் இயேசுவுக்கு முழுமையாக அடிபணிகிற இருதயத்தை உருவாக்குகிறது (சங்.2:12); அவருக்கு கீழ்ப்படியும்படிச் செய்கிறது (எபிரே. 5:9); நற்கிரியைகளைச் செய்யும்படிச் செய்கிறது (யாக்கோபு 2:20); விசுவாசத்தில் இறுதிவரைத் தொடரும்படிச் செய்கிறது (கொலோ. 1:23).