நீதிமானாக்குதல்
திரும்பவும் ஒருமுறை . . .
கர்த்தர் தன்னுடைய கிரிபையின் மூலமாக தன்னால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுக்கு இயேசு கிறிஸ்து மூலம் இரட்சிப்பை அளித்தார். உலகத் தோற்றத்துக்கு முன்பாக திரித்துவ தேவனால் திட்டமிடப்பட்டு வரலாற்றில் கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் மூலம் நிறைவேற்றப்பட்ட அந்த இரட்சிப்பில் ஒரு படிமுறை ஒழுங்கிருப்பதை வேதபோதனைகளில் இருந்து அறிந்துகொள்ளுகிறோம். இந்தப் படிமுறை ஒழுங்கில் அழைப்பு முதலிடத்தை வகிக்கிறது. அதற்கடுத்தபடியாக மறுபிறப்பும், அதையடுத்து மனமாற்றமும் இந்த ஒழுங்கின் அம்சங்களாகக் காணப்படுகின்றன. தத்துவ ரீதியில் இவற்றை இவ்வாறு ஆராய்ந்து படிக்கும்போது இரட்சிப்பைக் குறித்த ஆழமான அறிவைப் பெற்றுக்கொள்ள முடிகிறது. இந்தப் படிமுறை ஒழுங்கில் காணப்படும் கிருபைகள் எல்லாம் ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைக்கிரமாக நிகழ்வதில்லை. இரட்சிப்பை அடைகின்ற மனித னில் இவையெல்லாம் ஒருசேர நிகழ்கின்றன. இருந்தபோதும் இரட்சிப்பாகிய கிருபையில் இத்தகைய ஒரு தத்துவார்த்த ஒழுங்கு காணப்படுகிற தென்பதையும், அவ்வொழுங்கில் அறிவுபூர்வமான ஒரு படிமுறை காணப்படுகின்றதென்பதையும் புரிந்துகொள்வது அவசியம். இவ்வொழுங்கில் காணப்படும் கிருபை வரிசைகள் இடம்மாறி அமைந்துவிட முடியாது என்பதையும் விளங்கிக்கொள்ள வேண்டும். உதாரணமாக, இந்த வரிசையில் அழைப்புக்கு முன்னால் வேறு எதுவும் இடம்பெற முடியாது. அழைப்பை அடுத்தே மறுபிறப்பு இடம்பெறும்.
கடந்த முறை நாம் இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கில் இடம் பெறும் மனமாற்றத்தைக் குறித்துப் படித்தோம். அதற்கு அடுத்தபடியாக இவ்வொழுங்கில் இடம்பெறுவது நீதிமானாக்குதலாகிய கிருபையாகும். மனமாற்றத்தைக் குறித்துப் படிக்கும்போது அதில் இரண்டு முக்கிய அம்சங்கள் காணப்படுவதை அறிந்தோம். மனந்திரும்புதலும், விசுவாசமுமே (Repentance and Faith) அவை. இவை இரண்டும் எப்போதும் இணைந்தே காணப்படும். அத்தோடு மெய்யான மனமாற்றத்தில் இவை இல்லாமல் இருக்க முடியாது. இவற்றில் விசுவாசத்தைக் குறித்த ஒரு விளக்கத்தை இந்த சந்தர்ப்பத்தில் மறுபடியும் தருவது அவசியமாகிறது. விசுவாசத்தை நாம் மனமாற்றத்தின் கீழ்வரும் ஒரு அம்சமாக, மனந்திரும்புதலோடு இணைந்து வரும் கிருபையாக இதுவரை பார்த்திருக்கிறோம். இந்த விசுவாசமாகிய கிருபையினூடாகவே நாம் நீதிமான்களாக்கப்படுகிறோம் என்பதையும் அறிந்திருக்கிறோம். விசுவாசத்தை நாம் அடைகிறபோதே கர்த்தருக்கு முன் பாவி நீதிமானாக நிற்க முடிகின்றது. ஆகவே, இனி அடுத்தபடியாக இரட்சிப்பின் ஒழுங்கில் நாம் நீதிமானாக்குதலைப் பற்றிப் படிப்பது அவசியமானதாகவும் பொருத்தமானதாகவும் இருக்கிறது.
நீதிமானாக்குதலைப் பற்றிய போலிப்போதனைகள்
“ஏனைய வேதபோதனைகளைப்போலவே நீதிமானாக்குதலைப் பற்றிய உண்மையும் மனிதர்களால் அதிகம் சிதைத்து திரித்துப் போதிக்கப்பட்டிருக்கிறது” என்று பேராசிரியர் ஜோண் மரே கூறியிருக்கிறார். “இந்த வார்த்தையின் பொருளை சரியாக விளங்கிக் கொள்ளாததே பெருமளவான போலி விளக்கங்களுக்கு காரணமாக இருந்திருக்கின்றது” என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு மனிதன் நீதிமானாகின்றபோது அவன் தன்னில் பரிசுத்தத்தை அதன் மூலம் அடைவதில்லை. கிறிஸ்துவின் மீட்பின் பலன்களைத் அடை கிறபோதே ஒரு மனிதன் பரிசுத்தவானாகின்றான். மறுபிறப்பின் மூலமாக கர்த்தர் அவனைத் தன்னுடைய சாயலைக் கொண்டவனாக மறுரூபமாக்கி பரிசுத்தமாக்குதலின் மூலம் தொடர்ந்து அவன் தன் சாயலில் பரிசுத்தத்தோடு வளரும்படிச் செய்கிறார். மகிமையை அடையும்போதே இது கிறிஸ்தவனில் நிறைவு பெறுகிறது. ஆனால், நீதிமானாக்குதல் கிருபையின் மூலமாக ஒரு மனிதன் மறுரூபமடைவதையும், பரிசுத்தமாக்கப்படுவதையும் பற்றி விளக்குகிற கோட்பாடல்ல. இதைப் புரிந்துகொள்ளாததினாலேயே சபை வரலாற்றில் இப்போதனை பல ஆபத்துகளுக்கு உள்ளாகியிருந்திருக்கிறது.
ரோமன் கத்தோலிக்க மதம்
ரோமன் கத்தோலிக்க மதம் இதன் பொருளை சிதைத்து நீதிமானாக்குதலின் மூலம் நீதி ஒரு மனிதனுக்குள் புகுத்தப்படுவதாக தொடர்ந்தும் போதித்து வருகிறது. ஊசியின் மூலம் ஒருவரின் உடலுக்குள் மருந்தை செலுத்துவதைப் போல நீதி மனிதனுக்கு இதன் மூலம் கொடுக்கப்படுகிறது என்கிறது கத்தோலிக்க மதம். அதுவும், மனிதன் நீதியை கத்தோலிக்க மதமளிக்கும் ஞானஸ்நானத்தின் மூலமும், கத்தோலிக்க மதம் எதிர்பார்க்கும் அநேக சடங்குகளையும், கிரியைகளையும் தன் வாழ்வில் பின்பற்றி நிறைவேற்றுவதன் மூலமுமே அடைகிறான் என்று போதிக்கிறது. ஆனால் மறுபிறப்பு, பரிசுத்தமாக்குதல் ஆகிய கிருபைகளின் மூலம் மட்டுமே மனிதன் கர்த்தருக்குள் மறுரூபமடைகிறான் என்கிறது வேதம்.
மனிதன் கர்த்தருக்கு முன் அவரால் நீதிமானாக அறிக்கையிடப்படுகிறதாகிய கிருபையும் (Justfication-Declaration), அவர் மனிதனை மறுரூபமாக்குகின்ற கிருபையும் (Renewal-Regeneration) இருவேறான கிரியைகள் என்பதை கத்தோலிக்க மதம் விளங்கிக்கொள்ளத் தவறிவிட்டது. இதனாலேயே சுவிசேஷத்தின் மூலம் நீதிமானாக்குதலை மனிதன் அறிந்து கொள்ளும்படி செய்யாமல் தானே மனிதனை சடங்குகளின் மூலமும், கிரியைகளின் மூலமும் நீதிமானாக்குகிற செயலை அது செய்ய ஆரம்பித்தது. கர்த்தரிடம் இருந்து இலவசமாக முழுமையாக நீதிமானாக அறிவிக்கப்படுகிற கிருபையை மனிதன் அடைய முடியும் என்ற உண்மையை அது சுவிசேஷத்தில் இருந்து சிதைத்து விடுகிறது. இதனாலேயே முன்னாள் மதகுருவாக இருந்த மார்டின் லூதர் தன்னில் பாவத்தை உணர்ந்து அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகளை நாடியபோது கத்தோலிக்க மதத்தால் அவருக்கு உதவ முடியவில்லை. அதன் சுவிசேஷத்தில் அதற்கு வழியிருக்க வில்லை. “நீ, மதகுருவாக இருப்பதால் ஏற்கனவே நீ எங்களால் நீதிமானாக்கப்பட்டிருக்கிறாய்” என்று கூறி அவரைத் தொடர்ந்து கிரியைகளையும், சடங்குகளையும் செய்து பாவத்தைப் போக்கிக்கொள்ளும்படி சொல்ல மட்டுமே அதனால் முடிந்தது. இதனாலேயே சத்திய வேதத்தை ஆராய்ந்து படித்து கத்தோலிக்க மதத்தின் போலித்தனத்தை லூதர் உணர்ந்ததோடு, வேதம் போதிக்கின்ற மெய்¢ச்சுவிசேஷத்தின் மூலம் இயேசு கிறிஸ்து மட்டுமே மெய்யான மத்தியஸ்தர் என்பதை அறிந்து அவரை விசுவாசித்து தன் பாவங்களிலிருந்து விடுதலை பெற்றார்; இரட்சிப்பையும் அடைந்தார்.
பவுலின் போதனைகளுக்கு புதிய விளக்கங்கள்
ரோமன் கத்தோலிக்க மதம் மட்டுமல்லாமல் வேறு சிலரும் நீதிமானாக்குதலைப் பற்றிய வேத விளக்கங்களுக்குப் புறம்பான விளக்கங்களைத் தந்து வந்திருக்கிறார்கள். கிறிஸ்துவின் மீட்பின் செயலின் அடிப்படையில் கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் கர்த்தரால் நீதிமான்களாக அறிக்கையிடப்படுகிறார்கள் என்பதை நிராகரித்து, அது வெறும் அறிவிப்பு மட்டுமல்ல, அதில் நற்கிரியைக்கும் வழி இருக்கிறது; நற்கிரியைகளை மனிதன் செய்யக் கூடியதான அநுபவத்தை நீதிமானாக்குதல் அளிக்கிறது என்று இவர்கள் விளக்கம் தருகிறார்கள். இது தவறான விளக்கம். விசுவாசிகள் நற்கிரியைகளைச் செய்யும் வாழ்க்கையை இரட்சிப்பாகிய அநுபவத்தின் மூலம் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை சுவிசேஷக் கிறிஸ்தவம் ஆணித்தரமாக விளக்குகிறது. விசுவாசி தன் வாழ்க்கையில் நற்கிரியை செய்வதற்கு காரணமாக இருப்பது மறுபிறப்பும், பரிசுத்தமாக்குதலாகிய அநுபவங்களே தவிர நீதிமானாக்குதலல்ல. ஆனால், அதை நீதிமானாக்குதலோடு தொடர்புபடுத்துவதுதான் இவர்களுடைய பெருந்தவறு. நீதிமானாக்குதலை கர்த்தரிடும் அறிக்கையாகவும், மனந்திரும்பும் பாவி விசுவாசத்தினால் அவ்வாறாக கர்த்தரால் எண்ணப்படுகிறான் என்றும் வேதம் போதிக்க, அதை விசுவாசியடையும் ஆத்மீக அநுபவமாக இவர்கள் விளக்குவது ரோமன் கத்தோலிக்க போதனையோடு ஒத்துப்போவதாக இருக்கிறது.
இன்று சுவிசேஷ இயக்கத்தைச் சேர்ந்த பிரபலமான சிலர் நீதிமானாக்குதலுக்கு புதிய விளக்கமொன்றைத் தந்து திருச்சபையும், விசுவாச அறிக்கைகளும் இதுவரை தந்துவந்துள்ள விளக்கங்களை நிராகரிக்கிறார்கள். இந்தத் தவறான விளக்கங்களை நிராகரித்து ஒரு டஜனுக்கும் மேற்பட்ட நல்ல நூல்கள் ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கின்றன. இந்தப் போலிப் போதனைக் கெதிராக சீர்திருத்தவாதத்தைப் பின்பற்றுகிறவர்கள் இன்று பிரசங்கத்தின் மூலமும், எழுத்தின் மூலமும் போராடி வருகிறார்கள். கர்த்தரின் மக்களையும், திருச்சபையையும் பாதிக்கும் எந்தத் தவறான வேதவிளக்கங்களையும் அம்பலப்படுத்தி கர்த்தரின் மக்கள் வேதத்தை மட்டுமே சார்ந்து நிற்கும்படியாகச் செய்வது வேதபூர்வமான பக்தியொழுக்கமுள்ள இறையியல் அறிஞர்களுடையதும், போதகர்களினுடையதும் கடமை. அதையே இவர்கள் செய்ய முயல்கிறார்கள்.
இந்தப் புதிய போதனைகளை தந்து வருகிறவர்கள் Danile Fuller, D. G. Dunn, E. P. Sanders, Norman Shepherd மற்றும் Don Garlington ஆகியோர். இவர்களுடைய போதரனகள் New Perspectives on Paul என்றும் Covenantal Nomism, Federal Vision, New Perspectives on Paul, Auburn Avenue Theology என்று வேறு பல பெயர்களிலும் அழைக்கப்படுகின்றன. இவர்களுடைய நூல்கள் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படாமல் போனாலும் எப்படியாவது, எவர் மூலமாவது இவர்களுடைய போதனைகள் தமிழினத்துக் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் நுழைந்துவிட வாய்ப்பிருப்பதால் இப்பெயர்களை அறிந்துவைத்திருப்பது நல்லதே. முக்கியமாக எந்தப் போலிப்போத னையும் கீழைத்தேய நாடுகளிலுள்ள இறையியல் கல்லூரிகளில் ஏதாவ தொருவகையில் முதலில் புகுந்துவிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இப்படியான போலிப் போதனைகள் முதலில் அங்கு படிக்க வருகிறவர்களை பாதித்து பின்பு அவர்கள் மூலமாக சபைகளையும், மக்களையும் கெடுத்துவிடுகின்றன.
இந்தப் புதிய போதனை இதுவரை திருச்சபையும், வரலாற்றில் எழுந்துள்ள அத்தனை விசுவாச அறிக்கைகளும் நீதிமானாக்குதலுக்கு தந்து வந்திருக்கின்ற விளக்கங்களை நிராகரித்து, பவுல் இதுபற்றி புதிய ஏற்பாட்டில் தந்திருக்கின்ற போதனைகளை திருச்சபை விளங்கிக்கொள்ளத் தவறிவிட்டதாகக் கூறுகிறார்கள். மனந்திரும்புகிற பாவியைக் கிறிஸ்து தன்னுடைய மக்களுக்காகப் பெற்றெடுத்துள்ள பூரண நீதியின் அடிப்படையில் நீதிமானாகக் கர்த்தர் அறிக்கையிடுவதாக மட்டும் (Declarative act) நீதிமானாக்குதலை விளக்குவது தவறு என்கிறார்கள் இவர்கள். விசுவாசத்திற்குள் கிரியையும் நுழைத்து கிரியையில்லாத விசுவாசமில்லை என்றும் கூறுகிறார்கள். அத்தோடு நீதிமானாக்குதல் அதைப் பெற்றுக்கொண்ட ஒருவரைப் பற்றிய கர்த்தரின் அறிவிப்பாக இல்லாமல் அவர் கர்த்தரின் குடும்பத்தில் அங்கத்தவராக இருக்கிறார் என்பதற்கான முத்திரை என்று டொன் கார்லிங்டன் விளக்குகிறார். இவர் விசுவாசி கர்த்தரால் நீதிமானாக எண்ணப்படுகிறான் (Imputed Justification) என்ற போதனையை நிராகரிக்கிறார். வேதமும் யாக்கோபும் விசுவாசத்தையும், கிரியையையும் ஒன்றாகப் பார்க்கவில்லை; விளக்கவில்லை. விசுவாசத்திற்குள் கிரியையை நுழைக்கும் போது ரோமன் கத்தோலிக்க போதனை தலையெடுத்துவிடுகிறது. சுவிசேஷத்துக்கு ஆபத்தேற்பட்டுவிடுகிறது. டொன் கார்லிங்டனும், அவரைப் போலப் போதிக்கும் ஏனையோரின் விளக்கங்களும் நீதிமானாக்குதலைப் பற்றிய சீர்திருத்தவாத போதனைகளை முழுவதுமாக நிராகரிப்பதோடு ரோமன் கத்தோலிக்க போதனையையும் ஒத்தமைந்திருக்கின்றன. அதாவது கிறிஸ்து சிலுவையில் மரித்து பெற்றெடுத்த பூரணமான நீதியை (Perfect Righteousness) விளக்குவதாக மட்டுமே திருச்சபை இதுவரை நம்பி வந்திருக்கிற வேதபோதனையான நீதிமானாக்குதலை வேறுவிதத்தில் விளக்கி நீதிமானாக்குதலின் அடிப்படைக் கோட்பாட்டை சிதைத்து, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்துக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள். நீதிமானாக்குதலாகிய கோட்பாடு உண்மையில் எதை விளக்குகிறது என்று வேதத்தை நாம் ஆராய்ந்து பார்க்கும்போது ரோமன் கத்தோலிக்க மதப் போதனையையும், அதையொத்துக் காணப்படுகின்ற ஏனைய போலிப்போதனைகளையும் தோலுரித்துப் பார்த்துவிட முடியும்.
வேதம் போதிக்கும் நீதிமானாக்குதல்
நீதிமானாக்குதலைப் பற்றி ஜூலை-செப்டெம்பர் 2004 இதழில் இரண்டு தலைப்புகளில் தெளிவாக விளக்கியிருக்கிறோம். அதில் ஒன்று “நீதிமானாக்கும் விசுவாசம்” அடுத்தது “விசுவாசத்தினால் நீதிமானாக்குதல் – பவுலும், யாக்கோபுவும்” என்பதாகும். இந்த இரண்டு ஆக்கங்களில் சொல்லப்பட்டவற்றை திரும்பவும் இங்கே தராமல் இந்த ஆக்கத்திற்கு அவசியமான விளக்கங்களை மட்டும் தரமுயற்சிக்கிறேன்.
(1) நம்மை நீதிமானாக்குகிறவர் கிறிஸ்து மட்டுமே. – நாம் கர்த்தரால் நீதிமானாகக் கருதப்படும்படியாக, நாம் செய்த பாவங்களிலிருந்து நாம் விடுதலை அடையும்படியாக நமக்காக சிலுவையில் மரித்ததன் மூலம் இயேசு கிறிஸ்து கர்த்தரின் கட்டளைகளைப் பூரணமாக தன் வாழ்க்கையில் நிறைவேற்றி நீதியை சம்பாதித்தார். நீதிமானாகிய கிறிஸ்து நமது பாவத்தைத் தன்மேல் சுமந்து நாம் பாவநிவாரணம் அடைந்து கர்த்தரால் நீதிமானாக அறிவிக்கப்படுவதற்கு வழிகோளினார். ஆகவே, கிறிஸ்துவே நமக்காக நீதியை நிறைவேற்றினார். இயேசு கிறிஸ்து முழுமையாக நமக்காக நீதியை நிறைவேற்றியிருப்பதால் இனி நாமோ, வேறு எவருமோ அதற்காக செய்ய வேண்டியது இனி எதுவுமேயில்லை. மனித குமாரனான கிறிஸ்து மட்டுமே நமக்காக பூரணமாக நீதியை நிறைவேற்றியிருக்க முடியும். இது தெரியாமல் கத்தோலிக்க மதம் மனிதர்கள் தொடர்ந்து தங்களுடைய சொந்தக் கிரியை களின் மூலம் நீதியை சம்பாதித்துக்கொள்ள தூண்டிக்கொண்டிருக்கிறது.
(2) கிறிஸ்துவின் நீதியின் அடிப்பையில் நம்மை நீதிமான்களாகக் கருதுவதாக கர்த்தர் தன்னுடைய நியாயஸ்தலத்தில் அறிவிக்கும் அறிவிப்பே நீதிமானாக்குதலாகிய போதனை. – நீதிமானாக்குதலை நாம் ‘கோர்ட்’ நடவடிக்கையாக (It is a forensic imputed righteousness) விளங்கிக்கொள்ள வேண்டும். சீர்திருத்த இறையியல் அறிஞர் ஜோண் மரே இதை விளக்கும் போது, “கர்த்தர் நம்மில் செய்கின்ற கிரியை மறுபிறப்பு; நம்மைப் பற்றி நியாயஸ்தலத்தில் கர்த்தர் வழங்குகிற தீர்ப்பு நீதிமானாக்குதல்” என்கிறார். அவர் தொடர்ந்து, “இதை ஒரு மருத்துவரின் வேலைக்கும், நியாயாதிபதியின் வேலைக்குமிடையிலுள்ள வேறுபாட்டின் மூலம் புரிந்துகொள்ள வேண்டும். நமக்குள் கென்சர் நோய் (Cancer) இருந்தால் மருத்துவர் நமது சரீரத்தை அறுத்து அதைத் தீர்க்க முயல்வார். ஆனால், நியாயாதிபதி அந்தமுறையில் செயல்படுவதில்லை. அவர் நம்முடைய சட்டரீதியான நிலைமையைப் பற்றிய ஒரு தீர்ப்பை மட்டுமே வழங்குவார். நாம் குற்றமற்றவர்களாக இருந்தால் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பு வழங்குவார்” என்கிறார். நீதிமானாக்கு தலை மறுபிறப்போடும், பரிசுத்தமாக்குதலோடும் தொடர்புபடுத்திக் குழம்பக் கூடாது. அப்படிச் செய்வது நீதிமானாக்குதலாகிய கோட்பாட் டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும். நீதிமானாக்குதலின் மையமாக சுவிசேஷம் அமைந்திருப்பதால் இந்த ஆபத்திற்கு இடந்தரக்கூடாது.
கர்த்தருடைய நியாயஸ்தலத்தில் இயேசு நமது பாவங்களையும், தேவ கோபத்தையும் தம்மேல் ஏற்று தம்மைப் பலியாக ஒப்புக்கொடுக்கத் தீர்மானித்ததன் அடிப்படையில் கிறிஸ்துவை விசுவாசிக்கிற அவருடைய மக்களுக்கு விடுதலையளித்து அவர்களை நீதிமான்களாக அறிக்கை செய்தார் கர்த்தர். இந்த தேவ நியாயஸ்தலத் தீர்மானத்தின்படி கிறிஸ்து இந்த உலகில் பிறந்து தன்னுடைய மக்களுக்காக சிலுவையில் தன்னைப் பலியாகக் கொடுத்தார். இதையே ரோமர் 4 வது அதிகாரம் விளக்குகிறது. கிறிஸ்துவின் சிலுவைப் பலியின் அடிப்படையில் அவரை விசுவாசிக்கிற நம்மைக் கர்த்தர் நீதிமான்களாக அறிக்கையிட்டு (Declares) நீதிமான்களாக எண்ணுகிறார் (Accounted). அதாவது, கிறிஸ்துவை நாம் விசுவாசிக்கின்றபோது கிறிஸ்துவின் நீதி நம்முடையதாக எண்ணப்பட்டு நம்முடைய கணக்கில் வைக்கப்படுகிறது. கிறிஸ்துவுக்குள் நாம் நீதிமான்களாகக் கர்த்தரால் கருதப்படுகிறோமே தவிர கத்தோலிக்க மதம் போதிப்பது போல் கிறிஸ்துவின் நீதி நமக்குள் எந்தவிதத்திலும் புகுத்தப்படுவதில்லை (Not infused into us). வேதம் போதிக்கும் தேவனுடைய இந்த நியாயஸ்தல நடவடிக்கையை வேறுவிதத்தில் புரிந்துகொள்ளவோ, விளக்கவோ கூடாது. இந்தத் தவறையே பவுலின் போதனைகளுக்கு புது விளக்கங்கொடுக்கும் சேன்டர்ஸ், நோமர்ன் செப்பர்ட், டொன் கார்லிங்டன் போன்றோர் செய் கிறார்கள்.
(3) நீதிமானாக்குதலுக்கு அடித்தளம் கர்த்தரின் இலவசமான கிருபை மட்டுமே – நீதிமானாக்குதலில் நம்முடைய பங்குக்கு இடமேயில்லை. அது கிறிஸ்துவாலேயே பூரணமாக நிறைவேற்றப்பட்டது. விசுவாசிகள் அதை இலவசமாக விசுவாசத்தின் மூலம் கர்த்தரிடமிருந்து பெற்றுக்கொள்ளுகிறார்கள். இதுவே வேதமும், சீர்திருத்தவாதமும் போதிக்கும் சத்தியம். ரோமன் கத்தோலிக்க மதம் இதில் கர்த்தர் பாதி, மனிதன் பாதிப்பங்கு வகிப்பதாக விளக்குகிறது. அதாவது, மனிதன் தன்னுடைய சொந்தக் கிரியைகளின் மூலம் அடைகின்ற நீதியையும் பயன்படுத்தியே கர்த்தர் அவனை நீதிமானாக்குகிறார் என்கிறது கத்தோலிக்க மதம். அதற்கெதிராக சீர்திருத்தவாதம், கிறிஸ்துவால் நிறைவேற்றப்பட்ட நீதிமானாக்குதல் மனிதனுக்கு இலவசமாக கர்த்தரால் தரப்படுகின்றது என்றும், மனிதனில் சொந்தமாக எந்த நீதியும் காணப்படவில்லை என்றும் போதிக்கின்றது.
இதன் காரணமாக நீதிமானாக்குதலைப் பொறுத்தவரையில் சீர்திருத்தவாதம் நியாயப்பிரமாணத்தையும், சுவிசேஷத்தையும் பிரித்து விளக்குகிறது. தன்னுடைய சாயலில் இருக்கும் மனிதன் பின்பற்றும்படியாக கர்த்தர் நியாயமாக எதிர்பார்க்கும் கட்டளைகளை உள்ளடக்கியதே நியாயப்பிரமாணம். யூதரோ புறஜாதியினரோ அதைப்பின்பற்ற முடியாதபடி பாவத்தை சுமந்து நிற்கிறார்கள். கர்த்தருடைய பரிபூரணமான நியாயப் பிரமாணத்தின் முன் எல்லா மனிதர்களுமே குற்றவாளிகளாக நியாயத் தீர்ப்பையும், தண்டனையையும் எதிர்பார்த்து நிற்கிறார்கள். நியாயப்பிர மாணம் பூரணமானதாக இருப்பதால் அதைப் பின்பற்றக்கூடிய ஒருவனும் இல்லை. மனிதனால் செய்யமுடியாததையே நியாயப்பிரமாணம் அவனிடம் இருந்து எதிர்பார்க்கிறது. ஆகவே, நியாயப்பிரமாணத்தைத் தன் வாழ்க்கையில் கைக்கொள்ளுவதன் ஒருவருமே கர்த்தருக்கு முன் நீதிமா னாக முடியாது.
ஆகவேதான், கர்த்தர் தன்னுடைய குமாரனை அனுப்பி நியாயப்பிரமாணத்தைப் பூரணமாகக் கடைப்பிடிக்கச் செய்து, அவருடைய சிலுவைப் பலியின் மூலம் மனிதனின் பாவத்தைச் சுமக்கச் செய்து நீதியைச் சம்பாதித்து மனிதன் நீதிமானாவதற்கான வழியை ஏற்படுத்தினார். இந்த நல்ல செய்தியை அறிவிப்பதே கிறிஸ்துவின் சுவிசேஷம். நியாயப்பிரமாணம் செய்யமுடியாததைக் கிறிஸ்துவின் சுவிசேஷம் மட்டுமே மனிதனுக்கு தருகிறது. கிறிஸ்து பெற்றெடுத்த நீதியின் அடிப்படையில் அவரை விசுவாசிக்கிற மனிதனைக் கர்த்தர் இலவசமாக நீதிமானாகக் கருதி அறிவிக் கிறார். இதுவே வேதம் போதிக்கும் நீதிமானாக்குதலாகிய கோட்பாடு.
(4) விசுவாசத்தின் மூலமாக நாம் நீதிமான்களாக அறிக்கையிடப்படுகிறோம் – விசுவாசம் நமக்கு இரட்சிப்பை அளிக்கும் கிருபையின் சாதனம், கர்த்தர் நமக்களிக்கும் ஈவு, ஒரு கருவி. கல்வின் இதை ஒரு வெறும் பாத்திரம் என்கிறார். அதன் மூலம் இந்த வெறும் பாத்திரம் தானாக எதையும் செய்யாது, கர்த்தர் தருகின்ற அத்தனையையும் பெற்றுக்கொள்கிறது என்று விளக்குகிறார். லூதர் விசுவாசத்தை இரத்தினக்கல்லை சுமந்திருக்கும் ஒரு மோதிரத்துக்கு ஒப்பிடுகிறார். விசுவாசத்தில் உண்மையில் ஒன்றுமே இல்லை; அது இரத்தினக்கல்லாகிய கிறிஸ்துவையும் அவரது நீதியையும் தாங்கி உயர்வடைகிறது என்கிறார். விசுவாசமாகிய கரத்தின் மூலம் நாம் இரட்சிப்பை அடைந்து கிறிஸ்துவின் பூரண நீதியின் பலன்களை அடைகிறோம் என்கிறது வேதம். இந்த விசுவாசத்தால் மட்டுமே நாம் நீதிமானாக முடியும். வேறு எதனாலும் அது நமக்குக் கிடைக்காது. இது கர்த்தரின் நியதி. இந்த விசுவாசத்தில் கிரியைக்கு எந்த இடமும் இல்லை. இதற்குள் கிரியையை நுழைத்து விளக்கும் வேலையையே யூதப் பரிசேயர்களும், ரோமன் கத்தோலிக்க மதமும், இன்று நீதிமானாக்குதலுக்கு புது விளக்கம் கொடுத்துவரும் சேன்டர்ஸ். நோர்மன் செப்பர்ட், டொன் கார்லிங்டன் போன்றோரும் செய்து வருகிறார்கள். விசுவாசமாகிய வெறும் பாத்திரத்தின் மூலமாக கர்த்தர் இலவசமாகத் தரும் நீதிமானாக்குதலை அடைகிறபோது விசுவாசிகள் தங்களில் தங்கியிராமல் நீதிமானாக்குதலுக்கு காரணமான கிறிஸ்துவையே நோக்கி அவரில் தங்கியிருக்கிறார்கள். கர்த்தர் விசுவாசிகளுக்கு அளிப்பதை முழுமனதோடு நம்பிப் பெற்றுக்கொள்ளுகிற நடவடிக்கையே விசுவாசம்.