தொமஸ் பொஸ்டன் (1676-1732)
தொமஸ் பொஸ்டன் (Thomas Boston) பியூரிட்டன் பெரியவர்களில் ஒருவர். ஸ்கோட்லாந்தில் டன்ஸ் (Duns) என்ற இடத்தில் பிறந்த பொஸ்டன், ஸ்கொட்லாந்து பிரெஸ்பிடீரியன் சபையில் போதகராக பணிபுரிந்தார். இவர் திறமை வாய்ந்த இறையியல் அறிஞர். “நான்கு நிலைகளின் மனிதனின் தன்மை” ஆகிய நூலையும் வேறு பல சிறந்த கிறிஸ்தவ இலக்கியங்களையும் படைத்துள்ளார். சிறந்த சீர்திருத்தப் போதகரும், பிரசங்கியுமான பொஸ்டனின் எழுத்துக்கள் பன்னிரண்டு வால்யூம்களாக இன்றும் பதிப்பில் இருந்து வருகின்றன. இந்த ஆக்கத்தின் முழுப்பகுதியும் ஒன்பதாம் வால்யூமில் காணப்படுகின்றது.
– ஆசிரியர்
மெய்க்கிறிஸ்தவனில் கிறிஸ்தவ விசுவாசம் உள்ளார்ந்து காணப்படும். வெறும் வார்த்தை ஜாலமாக அவனுடைய விசுவாசம் இருக்காது. ஆவியின் அடிப்படையில் அமைந்ததாக இருக்கும். நாங்கள் கர்த்தரை ஆவியின் மூலம் துதிக்கிறோம்; ஆகையால், சரீரத்தில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என்றார் பவுல் (பிலி. 3:3). தனக்கு விசுவாசம் இருக்கிறது என்று மெய்க் கிறிஸ்தவன் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு இருந்துவிடுவதில்லை. அதை அடைவதற்காக உழைத்து, அடைந்ததைப் பாதுகாத்து கர்த்தரிடம் இறுதியில் நல்வார்த்தை பெறுவதை அவன் நோக்கமாகக் கொண்டிருப்பான். இங்கேதான் நாம் மெய்க்கிறிஸ்தவனின் நேர்மையையும், மெய்யான இருதயத்தையும் காண்கிறோம். அவனில் ஆவியையும், ஜீவனையும் பார்க்கலாம். மாய்மாலக்காரர்களில் இவற்றைப் பார்க்க முடியாது.
மெய்க்கிறிஸ்தவன் மாய்மாலக்காரர்களைவிட கீழ்வரும் ஐந்து விஷயங்களில் வேறுபட்டு நிற்பான்.
(1) தான் புதிதாக அடைந்திருக்கிற புதிய இருதயத்துக்கு ஏற்றவகையில் மெய்க்கிறிஸ்தவனுடைய வாழ்க்கைப் போராட்டங்கள் அமைந்திருக்கும்; தன் வாழ்க்கையில் தொடர்ச்சியாக பரிசுத்தத்தை நாடுவதையும், பரிசுத்த மற்றவற்றைத் தவிர்ப்பதும் அவனுடைய இலட்சியமாக இருக்கும். – “மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும் ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இருக்கிறது; நீங்கள் செய்ய வேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாக இருக்கின்றது.” (கலா. 5:17). மாய்மாலக்காரன் பாவத்திற்கெதிராகப் போராடும்போது அது அடிமைத்தனமான ஒரு பயத்தின் அடிப்படையில் அமைந்த போராட்டமாகவே இருக்கும் அல்லது குறைந்தது நன்னடத்தையை நாடி அமைந்ததாக இருக்கும். இந்த எண்ணங்களும் பழைய இருதயத்தின் ஒரு அங்கமாகவே இருப்பதால் அவனால் பாவத்தை வெற்றிகொள்ள முடியாது.
(2) மெய்க்கிறிஸ்தவன் எல்லாப் பாவங்களுக்கும் எதிராகப் போராடுவான். வேத போதனைகளின் அடிப்படையில் தான் பாவமாகக் காண்கிற அனைத்தையும் எதிர்த்து நிற்பான். ஆவியினாலும், சரீரத்தினாலும் தனக்கு உணர்த்தப்பட்ட பாவங்களையும், அவை எந்த நிலையில், எத்தகைய தன்மையுள்ளவையாக இருந்தபோதும் அவை எல்லாவற்றையும் தன்னில் அறவே இல்லாமல் செய்யப்பாடுபடுவது அவனது வாழ்க்கைப் போராட்டமாக இருக்கும். – சங்கீதக்காரன் சொல்லுகிறான், “எல்லாவற்றைப் பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.” (சங். 11:128). ஆகவே, மெய்கிறிஸ்தவனின் போராட்டம் அவிசுவாசத்துக்கெதிரானதாகவும், பல்வேறு விதங்களில் தன்னில் எழுந்து நிற்க முயலும் சுயஇச்சைகளை இல்லாமலாக்குவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கும். மாய்மாலக்காரர்களின் போராட்டம் கொலை போன்ற மோசமான பாவங்களுக்கெதிரானதாக மட்டும் இருந்துவிடுவதோடு சகல பாவத்திற்கெதிரானதாகவும் இருக்காது. அங்கும் இங்குமாக ஒருசில இச்சைகளை மட்டுமே அறைகுறையாக அடக்க முயல்வதோடு நினறுவிடுவார்கள். இது இறுதியில் அவர்களை நித்திய மரணத்தின் பாதையில் அழைத்துச் சென்றுவிடுகிறது. மெய்க்கிறிஸ்தவனில் அவனுடைய புதிய இருதயத்தின் வெளிப்பாடாக இருக்கும் பாவத்திற்கெதிரான போராட்டம், இயற்கையாக மாய்மாலக்காரர்களில் இருக்காது. மாய்மாலக்காரர்களில் இருக்கும் எந்தப் பாவப் போராட்டமும் தற்செயலானதொரு நிகழ்ச்சியாகவே இருக்கும்.
(3) மெய்க்கிறிஸ்தவன் பாவத்தோடு போராடுகிறபோது அதை வேரோடு பிடுங்கி எறிவதைத் தன் கடமையாகக் கொண்டிருப்பான். வேரும், மரமும், கனியுமாக அந்தப் பாவங்கள் தன்னில் துளியும் செயல்படாதபடி தன்னைப் பாதுகாத்துக்கொள்ளப் போராடுவான். – இந்தப் போராட்டத்தின் மூலமாக பாவத்தை அறவே தன்னில் இருந்து நீக்கி, பூரணமான பரிசுத்தத்தை நாடி (இவ்வுலகில் அது கிடைக்காமல் போனாலும்), அதை அடையப் பாடுபடுவதே மெய்க்கிறிஸ்தவனின் இலட்சியமாக இருக்கும். அவனுடைய புதிய இருதயமும், புதிய வாழ்க்கையும் இதை அடையும் உறுதியான சித்தத்தையும், ஆவலையும் கொண்டிருப்பதோடு, பாவத்தை இல்லாமலாக்கும் வரைக்கும் கையிலிருக்கும் கத்தியையும் கீழே போட இயலாதவனாக இருக்கிறான். இந்த உலகத்தில் பாவத்தைத் தன்னில் முற்றாக இல்லாமலாக்கிக்கொள்ள அவனால் முடியாததால், மரணபரியந்த மும் பாவத்திற்கெதிரான போராட்டத்தை நடத்தி இறுதியில் பின்வருமாறு வெற்றிக் குரலெழுப்புவான், “சகோதரரே! அதைப் பிடித்துக் கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனழைத்த பரம பந்தயப் பொருளுக்கான இலக்கை நொக்கித் தொடருகிறேன்.” (பிலி. 3:13, 14). மாய்மாலக்காரர்கள் மெய்க்கிறிஸ்தவர்களைப் போல இந்தவிதமாக ஆக்ரோசத்தோடு பாவத்திற்கெதிராகப் போராடமாட்டார்கள். தங்களுக்கு இடையூறாக இருக்கும் அல்லது மரியாதை தராத ஒரு சில இச்சைகளை மட்டுமே அடக்கிக்கொள்ளுவார்கள்.
(4) மெய்க்கிறிஸ்தவன் பாவத்தோடு போராடுகிறபோது பரிசுத்தமானதொரு வாழ்க்கை தன்னில் தொடர்ந்து அமைவதை நோக்கமாகக் கொண்டுழைப்பான். – தன் வாழ்க்கையில் பல முறை தவறியபோதும், பூரணமான வாழ்க்கையை வாழமுடியாதபோதும் மெய்க்கிறிஸ்தவன் பரிசுத்தமாக வாழ்வதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருப்பான். (யோவான் 3:9, 10). பவுல் சொல்லுவதை அவனுடைய வாழ்க்கையில் காணமுடியும், “மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும், விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ் சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது.” (2 கொரி 1:12). ஆனால், மாய்மாலக்காரர்கள் பரிசுத்தமற்ற வாழ்க்கையையே தொடர்ந்து வாழ்வார்கள்.
(5) மெய்க்கிறிஸ்தவன் தன்னுடைய சித்தத்தைத் தொடர்ந்து புதுப்பித்து, கடந்த வாழ்க்கையின் எச்சங்களை உதிர்த்துப் போட்டுத் தன்னில் புதிய கிருபையின் அம்சங்களை வளர்த்துக்கொள்ளப் பாடுபடுகிறபோது, எஞ்சியிருக்கும் பாவம் அவனில் தொல்லை கொடுக்காமலிருக்காது. – சரீரம் ஆவிக்கெதிராகவும், ஆவி சரீரத்துக்கெதிராகவும் போராடுகிறது. அவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை. ஆகவே, நாம் செய்ய நினைக்கிறதை செய்யாமலிருக்கிறோம் (கலா. 5:17). ஆனால் மாய்மாலக்காரர் பூரணமாகக் கர்த்தரை நாடாத இருதயத்தைக் கொண்டிருப்பதால், தங்களுடைய கேடான இருதயத்தின் இச்சைகளுக்கும், பாவங்களுக்கும் எதிராக பரிசுத்த நீதிச்சட்டத்தின் அடிப்படையில் போராட முடியாதவர்களாக இருக்கின்றனர்.