அமெரிக்க வரலாற்றை, அதன் சமுதாய பொருளாதார, அரசியல் கட்டுக்கோப்பை ஒரு குறுகிய காலப்பகுதியில் பிரின்ஸ்டன் இறையியல் கல்லூரியைப் பயன்படுத்தி மாற்றியமைத்தது போல் கர்த்தர் உலகில் வேறு எந்தக் கல்லூரியையும் பயன்படுத்தவில்லை. இருநூறு வருட காலத்திற்கு அமெரிக்க வரலாற்றில் பிரின்ஸ்டனின் செல்வாக்கு தலைதூக்கி இருந்தது. பிரின்ஸ்டனின் ஆத்மீக வரலாற்றை நீங்கள் இந்த ஆக்கத்தில் வாசிக்கலாம். பிரின்ஸ்டனின் வரலாறு உங்களில் மாற்றத்தை ஏற்படுத்தட்டும்; சிந்திக்க வைக்கட்டும்; செயல்படச் செய்யட்டும்.
கடந்த வருடம் அமெரிக்காவின் நியூ ஜேர்சி மாநிலத்தில் உள்ள பிரின்ஸ்டன் இறையியல் கல்லூரி வளாகத்தில் ஒரு முழு நாளையும் செலவிடும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே பிரின்ஸ்டனின் வரலாறு பற்றி அறிந்திருந்தபடியால் பிரின்ஸ்டனைப் பார்க்க வேண்டும், வரலாறு படைத்த பிரசங்கிகள் வாழ்ந்து, சாதனைகள் பல படைத்திருந்த மண்ணில் கால் பதிக்க வேண்டும் என்ற ஆவல் பல காலமாக என்னுள்ளத்தில் இருந்தது. இருந்தபோதும் அதற்கான வாய்ப்புகள் தள்ளியே இருந்து வந்தன. பிரின்ஸ்டனைச் சுற்றிப்பார்க்கப் போகிறோம் என்பதை அறிந்த உடனேயே உள்ளத்தில் பல எண்ணங்கள் கிளற ஆரம்பித்தன. பிரின்ஸ்டனில் கல்வி பயின்று இன்று நியூ ஜேர்சியில் ஒரு கிறிஸ்தவ கல்லூரி ஆசிரியராக இருக்கும் நோர்மன் பேர்க்கட் வழிகாட்டியாக இருந்தார். நோர்மன் பேர்க்கட் வரலாற்றில் அதிக நாட்டம் உள்ளவர். தன்னுடைய ஓய்வு நேரத்தில் அநேகருக்கு பிரின்ஸ்டனைச் சுற்றிக்காட்டி அதன் வரலாற்றை விபரித்திருக்கிறார். பிரின்ஸ்டன் வரலாறு அவருக்கு அத்துப்படி. பிரின்ஸ்டனின் வரலாற்றை நோர்மன் விபரித்த அன்றைய ஒன்பது மணி நேரங்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். பிரன்ஸ்டனைச் சுற்றிப்பார்த்துவிட்டு அதன் வரலாற்றைக் கேட்டுப் பிரமித்து இரவில் பல மணி நேரங்கள் விழித்திருந்தேன். வரலாற்றில் இருநூறு வருட காலப்பகுதிக்குள் கர்த்தர் பிரின்ஸ்டன் இறையியல் வளாகத்தையும், அதன் மாமனிதர்களையும் பயன்படுத்தி அமெரிக்காவில் செய்திருக்கும் அற்புதம் மிகப் பெரியது. அன்றைய மகத்துவத்தைப் பிரதிபலிக்கும் பிரின்ஸ்டனாக இன்றைய பிரின்ஸ்டன் இல்லாவிட்டாலும் இந்த உலகம் இருக்கும்வரை அதன் வரலாறு திருச்சபை மக்களுக்கு புத்துணர்வூட்டி வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த வரலாற்றை சுருக்கமாக உங்கள் முன் வைக்கிறேன்.
வரலாற்றில் இருநூறு வருடங்களுக்கு அமெரிக்க நாட்டின் சீர்திருத்த பிரஸ்பிடீரியன், கொங்கிரிகேஷனல் திருச்சபைகள் மத்தியிலும், அந்த நாட்டின் அரசியல், சமூக வாழ்விலும் பெருந்தாக்கத்தைப் பிரின்ஸ்டன் பிரசங்கிகள் ஏற்படுத்தியிருந்தார்கள். இன்றைய அமெரிக்கர்கள் அனுபவிக்கும் வசதிகள் இல்லாமலிருந்த அந்தக் காலத்தில் பிரின்ஸ்டன் பிரசங்கிகள் ஒரு குறுகிய காலப்பகுதியில் சாதித்திருந்த சாதனைகளைப் பார்க்கும்போது இன்றைய கிறிஸ்தவ சபைகளும், பிரசங்கிகளும் நிச்சயம் தலைகுனியத்தான் வேண்டும். எழுப்புதல் வேண்டும் என்று வாஞ்சிக்கும் நாம் உண்மையில் எழுப்புதலை நம் வாழ்நாளில் சந்திக்கும் அளவுக்கு பிரின்ஸ்டன் பிரசங்கிகள் கொண்டிருந்த சத்திய வேட்கை, வைராக்கியம், தாழ்மை, கடின உழைப்பு ஆகியவற்றோடு கர்த்தரில் தங்கியிருக்கிறோமா என்பது சந்தேகமே. பிரின்ஸ்டனின் வரலாற்றை விளக்கமாக அறிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள சில நூல்களில் அது பற்றி வாசிக்கலாம். (Princeton Seminary, Vol 1 & 2, Calhoun, Evangelicalism Divided, Princeton & Preaching, Ian Murray).
லொக் கொலேஜ் (Log College)
பிரின்ஸ்டனின் ஆரம்பகாலத்தை ஆராய்கிறபோது நேசெம்னியில் இருந்த பிரெஸ்பிடீரியன் சபையைச் சேர்ந்த வில்லியம் டெனட் என்பவர் ஆரம்பித்த லொக் கொலேஜின் வரலாற்றில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். 1726ல் இந்த லொக் கொலேஜ் ஆரம்பமானது. இக்காலப்பகுதியில் கிறிஸ்தவ உலகு சீர்திருத்தவாதப் போதனைகளையே அறிந்திருந்தது. இருந்தபோதும் திருச்சபை உலக இச்சயையால் பாதிக்கப்பட்டிருந்தது. இதன் மத்தியில் வைராக்கியமுள்ள கர்த்தருடைய போதகர்களும் திருச்சபைகளில் இருக்கத் தான் செய்தனர். அவர்களில் ஒருவரே வில்லியம் டெனட். தன்னுடைய பிள்ளைகளுக்கு வீட்டில் வைத்தே கல்வி போதித்த இந்தப் போதகர் முதல் லொக் கொலேஜை, திருச்சபைப் போதகர்களை உருவாக்க ஆரம்பித்தார்.
‘லொக்’ (Log) என்ற வார்த்தை ஆங்கிலத்தில் வெட்டப்பட்ட நீளமான மரத்துண்டைக் குறிக்கும். இத்தகைய மரத்துண்டுகளை வைத்துக் கட்டப்பட்ட இடங்களில் இறையியல் பயிற்சி கொடுக்கப்பட்டதால் அவை இந்தப் பெயரைப் பெற்றன. இந்தப் பெயரும் இவர்களை இகழ்வதற்காக சத்தியத்தோடு ஒத்துப்போகாத எதிரிகளால் பயன்படுத்தப்பட்டதாக இருந்தது. இந்தக் கல்லூரியில் இறையியல் பயின்றவர்கள் பயிற்சியளித்த போதகர்களுடைய வீடுகளில் தங்கியிருந்து பயில வேண்டியிருந்தது. சபை ஊழியங்களிலும் ஈடுபடவேண்டியிருந்தது. போதகப் பயிற்சி, பயிற்சியளித்த போதகர்களுடைய வாழ்க்கையோடும், அவர்கள் ஊழியம் செய்த திருச்சபையோடும் பிரிக்க முடியாத தொடர் புடையதாக இருந்தது. போதித்தவர்கள் ஏற்கனவே ஊழியத்தில் ஈடுபட்டிருந்த சபைப் போதகர்களாக இருந்தனர்.
ஹெட்ஜ், அலெக்சாண்டர், வோர்பீல்ட், மேச்சன் போன்றோர் பிரசங்கித்த பிரின்ஸ்டன் பிரசங்க மேடை.
லொக் கொலேஜ் ஆரம்பித்துப் பதினைந்து வருடங்களில் அது அமெரிக்காவின் பல சிறந்த போதகர்களை உருவாக்கிய பயிற்சித் தளமாக இருந்தது. ஸ்கொட்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த போதகர்கள் இங்கு இறையியல் பயிற்சி பெற்று சிறந்த ஊழியக்காரர்களாக பணி புரிந்தனர். அத்தோடு கல்லூரியோடு தொடர்புடைய பல கல்வி ஸ்தாபனங்களும் உருவாக லொக் கொலேஜ் காரணமாக இருந்தது. இத்தகைய லொக் காலேஜுகள் பல இடங்களில் அக்காலத்தில் உருவாகி போதகர்களுக்கு சிறந்த பயிற்சியளித்து வந்தன. திருச்சபையோடு பிரிக்கமுடியாத தொடர்புடையதாக அமைந்து, போதகர்களினால் மட்டும் பயிற்சியளிக்கப்பட்ட அன்றைய லொக் கொலேஜுகள் இன்று போதக பயிற்சி பற்றி நம்மைச் சிந்திக்க வைக்க வேண்டும்.
பிரின்ஸ்டன் மயானத்தில் ஜொனத்தன் எட்வர்ட்ஸ், ஹெட்ஜ், வோர்பீல்ட் போன்றோரின் கல்லறைகள்.
லொக் கொலேஜுகள் ஆரம்பித்த சிறிது காலத்திற்குப் பிறகு 1740ல் அமெரிக்காவில் எழுப்புதல் ஆரம்பித்தது. இந்த முதல் எழுப்புதல் இரு வருடங்களுக்கு நீடித்தது. இதனை ‘மகா எழுப்புதல்’ என்று அழைப்பார்கள். இந்த எழுப்புதலோடு தொடர்புடையவராக அமெரிக்காவின் பெரும் சிந்தனையாளரும், பிரசங்கியுமான ஜொனத்தன் எட்வர்ட்ஸ் இருந்தார். இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த பெரும் பிரசங்கியான ஜோர்ஜ் விட்பீல்டுக்கும் பங்கிருந்தது. இந்த எழுப்புதலின் பயனாக அமெரிக்காவின் நியூ இங்கிலாந்துப் பகுதி பிரெஸ்பிடீரியன் திருச்சபைகளில் பெரும் வளர்ச்சி காணப்பட்டது. சபைகள் ஆத்மவிருத்தி அடைந்ததோடு போலிகள் வெகுவிரைவில் இனங்காணப்பட்டனர். எழுப்புதலையும், லொக் கொலே ஜுகளில் பயிற்சி பெற்று வந்த போதகர்களையும், அவர்களுடைய தெளிவான சத்தியங்களையும் சந்தேகக் கண்ணோடு பார்த்து இழித்துரைத்தவர்களும் இருந்தனர். சத்தியத்திற்கும், அதற்கு இடங்கொடுக்க மறுத்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட போராட்டத்தில் 1741-58 இடைப்பட்ட காலத்தில் திருச்சபையில் தவிர்க்க முடியாத பெரும் பிரிவு ஏற்பட்டது.
நியூ ஜேர்சி கொலேஜ் (College of New Jersey)
ஜொனத்தன் எட்வர்ட்ஸ் அமெரிக்காவில் அக்காலத்தில் புதிதாக குடியேற்றங்கள் ஏற்பட்ட ஏனைய பகுதிகளில் போதகர்களுக்கான பயிற்சி அளிக்குமுகமாக கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்று கருதினார். அக்டோபர் 22, 1746ல் நியூ ஜேர்சி கொலேஜ் ஆரம்பமானது. எலிசபெத் என்ற இடத்தில் போதகர் டிக்கின்சனுடைய (Rev. Dickinson) வீட்டில் 8 முதல் 10 மாணவர்களைக் கொண்டு கல்லூரி ஆரம்பமானது. அடுத்த வருடத்திலேயே டிக்கின்சன் மரணத்தைத் தழுவினார். பின்பு போதகர் ஏரன் பேர் (Rev. Aaron Burr) கல்லூரித் தலைவரானார். அத்தோடு கல்லூரி நியுவர்க்குக்கு (Newark) நகர்ந்தது. அக்காலத்தில் கல்லூரித் தலைவரே சகலதையும் செய்பவராக இருந்தார். அவரே நேரடியாக பல பாடங்களையும் போதிக்கும் ஆசிரியராகவும், மாணவர்களின் ஆத்மீகத் தேவைகளை சந்திக்கும் நல்ல போதகராகவும் இருந்தார். இன்று பிரின்ஸ்டன் கல்லூரித் தலைவர் நிர்வாகத்தை மட்டுமே கவனிக்கிறவராக இருக்கிறார். இந்தக் கல்லூரி ஆரம்பிப்பதற்கு இன்னொரு காரணம் அக்காலத்தில் நியூ இங்கிலாந்துப் பகுதிகளில் காணப்பட்ட போதகப் பயிற்சிக்கான கல்லூரிகளில் ஆர்மீனியனிசமும் (Armenianism), ஏரியனிசமும் (Arianism), சோசீனியனிசமும் (Socenianism) பரவலாகக் காணப்பட்டதுதான். இப்போலிப்போதனைகள் திருச்சபைகளை அலங்கரித்த அக்காலப் போதகர்களின் நண்பர்களாக இருந்தன. இவற்றைத் தவிர்த்து காலத்தால் நிருபிக்கப்பட்டு கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட கிருபையின் போதனைகளைப் பின்பற்றும் போதகர்களைப் பயிற்றுவிப்பதே நியூ ஜேர்சி கல்லூரியின் இலக்காக இருந்தது.
நாசோ மண்டப வரலாறு (Nassau Hall)
1756ல் நியூ ஜேர்சி கல்லூரி பிரின்ஸ்டனுக்கு நகர்ந்தது. கல்லூரி வளர வளர அதற்கான தேவைகளும் அதிகரித்தன. பெரிய இடம் தேவைப் பட்டது. இக்காரணங்களால் பென்சில்வேனியாவில் இருந்த அமைதிமிக்க பிரின்ஸ்டனுக்கு கல்லூரி இடம் பெயர்ந்தது. கல்லூரிக்குத் தேவையான பணத்தைச் சேர்ப்பதில் ஜோர்ஜ் விட்பீல்டும் அதிக பங்குவகித்தார். அக்கறையுள்ளவர்களும், நண்பர்களும் நிலமும், பணமும் தந்துதவ 1757ல் 147 பேருக்கான அறைகளைக்கொண்டு ஆரம்பித்த கல்லூரிக் கட்டிடம் அடுத்த வருடத்தில் நிறைவு பெற்றது. இன்றைய பிரின்ஸ்டன் கல்லூரி வளாகத்தின் ஆரம்பக் கட்டடமாக நாசோ மண்டபம் (Nassau Hall) இருந் தது. ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு எதிராகப் போராடிய நாசோவின் பெயரே கட்டிடத்திற்கு சூட்டப்பட்டது. சில காலங்களுக்குப் பின்பு கல்லூரி பிரின்ஸ்டன் கல்லூரி என்ற பெயரைப் பெற்றது.
பலருடைய வற்புறுத்தல்களுக்குப்பின் 1758ல் கல்லூரியின் தலைவராக ஜொனத்தன் எட்வர்ட்ஸ் (Jonathan Edwards) பொறுப்பேற்றார். கல்லூரியின் தலைவராகவும், விரிவுரையாளராகவும், பிரசங்கியாகவும் இருந்து மாணவர்களின் ஆத்மீக விருத்திக்கு பெருந்துணையாக இருந்தார். ஆனால், இரண்டு மாதங்களுக்குள்ளேயே சின்னம்மையால் ஏற்பட்ட கடுங்காய்ச்சலால் அவர் இறக்க நேரிட்டது. இக்காலப்பகுதியின் மகா எழுப்புதலில் அதிகமாகக் கர்த்தரால் பயன்படுத்தப்பட்ட பிரசங்கியாக எட்வர்ட்ஸ் இருந்தார். நவீன காலத்தில் எழுப்புதல் என்றால் எங்காவது கூட்டமாகக் கூடித் தொடர்ந்து ஜெபிப்பது என்ற தவறான எண்ணம் பரவலாக இருக்கிறது. மெய்யான எழுப்புதல்களை மனிதர்கள் ஒருபோதும் உருவாக்க முடியாது. அவை கர்த்தரின் இறை யாண்மையால் வரலாற்றில் ஏற்படும் தீவிர ஆத்மீகக் கிரியைகளாகும். கர்த்தர் சித்தங்கொண்டு ஆவியினால் உருவாக்கிய எழுப்புதலில் பயன்படுத்தப்பட்டவரே எட்வர்ட்ஸ். இத்தனைக்கும் ஜொனத்தன் எட்வர்ட்ஸ் கல்வி னிசத்தைப் பின்பற்றியவர். கல்வினிசப் போதனைகளைப் பின்பற்றியவர்களாலேயே லொக் கொலேஜுகளும், பிரின்ஸ்டனில் இறையியல் கல்லூரியும் உருவாகியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எழுப்புதல் காலத்தில் பிரசங்கம் உன்னத நிலையில் இருந்ததுமட்டுமல்லாமல் கல்வினிசக் கிருபையின் போதனைகளை அப்பழுக்கில்லாமல் கொண்டிருந்தன.
பிரின்ஸ்டன் போதகர்களில் ஒருவராக இருந்த சார்ள்ஸ் ஹொட்ஜ் வாழ்ந்த வீடு பிரின்ஸ்டன் வளாகத்தில் இன்றும் அப்படியே இருக்கிறது.
எட்வர்ட்ஸுக்குப்பிறகு கல்லூரியை அலங்கரித்த தலைவர்களில் சாமுவேல் டேவிஸும் (Samuel Davies) ஒருவர். பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு இவரும் இறக்க நேரிட்டது. மார்டின் லொயிட் ஜோன்ஸ் இவரைப் பற்றி எழுதும்போது, “அமெரிக்கா உருவாக்கிய சிறந்த பிரசங்கிகளில் ஒருவர்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அதற்குப்பிறகு பணியாற்றியவர்களில் ஒருவராக ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜோன் விதர்ஸ்பூன் (John Witherspoon) இருந்தார். இவர் கல்லூரி வளர்ச்சிக்காக அதிகமாக ஊழைத்தார். போதகர்களை உருவாக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டார். பட்டிதொட்டிகளிலெல்லாம் பிரசங்கித்து சத்தியத்தைப் பரப்பினார். இவர் காலத்தில் கல்லூரி மேலும் விரிவடைந்தது. இக்காலத்தில் அமெரிக்கா இங்கிலாந்துக்கு எதிராகப் போரிட்டு விடுதலையை நாடியது. இக்காலத்தில் 1776ல் அமெரிக்கர்கள் வெளியிட்ட இங்கிலாந்திற்கெதிரான விடுதலைப் பத்திரத்தில் (Declaration of Independence) கையெழுத்திட்ட மூவரில் ஜோன் விதர்ஸ்பூனும் ஒருவர். இவர்களில் இவர் மட்டுமே போதகராகவும், கல்லூரித் தலைவராகவும் இருந்தார்.
பிரின்ஸ்டன் தலைவர்களில் ஒருவராகப் பணிபுரிந்து போதித்த திறமை வாய்ந்த பிரசங்கியான ஆர்ச்சிபால்டு அலெக்சான்டர்.
அமெரிக்காவில் தோன்றிய எழுப்புதலுக்கும் கல்லூரிக்கும் பெருந்தொடர்பு இருந்தது. 1773 வரை எழுப்புதல் கல்லூரியில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. கல்லூரியில் இருந்து வெளிவந்தவர்களில் 49 வீதமானோர் போதகர்களாகப் பணியாற்றினர். பெரும் பிரசங்கிகளாக இருந்து கர்த்தரின் ஆசீர்வாதத்தைப் பிரசங்க ஊழியத்தில் அனுபவித்தனர்.
இங்கிலாந்துக்கு எதிரான போர்
1776ல் அமெரிக்கா உள்நாட்டு யுத்தத்தைச் சந்திக்க அது கல்லூரியையும் பாதித்தது. பல தடவைகள் கல்லூரிக் கட்டிடங்கள் தாக்குதலுக்குள்ளாகியதுடன் உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இருசாராருக்கும் மாறி மாறிப் புகலிடமாகவும் இருந்தது. ஒரு தடவை அதன் வளாகத்திலேயே யுத்தம் நடந்தது. இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் அடைவதற்கான போராட்டத்திற்கு கல்லூரி ஆதரவளித்ததுடன் அதில் பங்கும் கொண்டது. அமெரிக்கா உருவாகுவதில் பிரின்ஸ்டன் கல்லூரியைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் பங்கிருந்தது. கல்லூரித் தலைவராக இருந்த ஜோன் விதர்ஸ்பூனின் மாணவர்கள் அமெரிக்காவின் தலைவர், உப தலைவர் முதற்கொண்டு காங்கிரஸ் அங்கத்தவர்கள், நீதிபதிகள், மந்திரிகள், கவர்னர்கள் மற்றும் செனட்டர்களாகவும் பணி புரிந்தனர். அந்தளவுக்கு கல்லூரி மாணவர்கள் தேசத்தின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் பங்கு கொண்டிருந்தனர். அமெரிக்க விடுதலை அறிவிப்பு அறிக்கையில் கையெழுத்திட்ட மூவரில் ஜோன் விதர்ஸ்பூனும் ஒருவர். 1783ல் நாசோ மண்டபமே நாட்டின் தலை நகரம் போல் ஐந்து மாதங்களுக்கு செயல்பட்டது. அந்த மண்டபத்திலேயே காங்கிரஸ் கூடி வந்தது. இங்கேயே போர் காலத்தில் ஜெனரல் வாஷிங்டன் நாட்டின் தலைவராவதற்கான அழைப்பை ஏற்று காங்கிரஸுக்கு நன்றி கூறிச் செய்தியளித்தார். அமெரிக்கா உருவாகுவதில் கிறிஸ்தவர்களுக்கு அதுவும், கல்வினிசக் கிறிஸ்தவர்களுக்கு இருந்த பங்கை இதனால் அறிந்துகொள்ள முடிகிறது.
விடுதலை யுத்தம் முடிவடைந்தபின் 1795 முதல் 1807 வரை கல்லூரி தோய்வடைந்தது. இக்காலத்தில் கல்லூரித் தலைவர்களாக இருந்தவர்கள் ஜோன் விதர்ஸ்பூனைப் போன்ற சத்திய வாஞ்சையைக் கொண்டிருக்கவில்லை. ஜொனத்தன் எட்வர்ட்ஸின் விசுவாச உறுதியையும் கொண்டிருக்கவில்லை. இதன் காரணமாக கல்லூரியில் ஆத்துமவிருத்தி குன்றியதோடு போலிப் போதனைகளும் கல்லூரிக்குள் தலையெடுக்க ஆரம்பித்தன. 1773வரை ஆத்மீக எழுப்புதலுக்கான எந்தவித அடையாளங்களும் காணப் படவில்லை.
1800 அளவில் கர்த்தர் மறுமபடியும் இரண்டாவது எழுப்புதலைத் தோற்றுவித்தார். 1830கள் வரை இந்த இரண்டாம் எழுப்புதல் அமெரிக்கா எங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் இது சந்தித்தது. அநேக பகுதிகள் மீண்டும் மீண்டும் எழுப்புதலைச் சந்தித்தன. இந்த எழுப்புதல் அமெரிக்க மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் வட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தின. இவற்றை விட இந்த இரண்டாம் எழுப்புதலால் திருச்சபைகள் பெருமளவில் வளர ஆரம்பித்தன. அதன் காரணமாக போதகர்களுக்கான தேவையும் அதிகரித்தது. இந்த ஆத்மீக எழுப்புதலால் பிரின்ஸ்டன் கல்லூரியிலும் பாதிப்பு ஏற்பட்டு அப்போதைய தலைவரான ஸ்டேன் ஸ்டென்கோப் சிமித் (Stan Stenhope Smith) இராஜினாமா செய்ய நேரிட்டது. இவர் கல்லூரியின் முன்னைய விசுவாசக் கோட்பாடுகளில் உறுதியற்றவராக இருந்தார். ஏஸ்பெல் கிரின் (Ashbel Green) என்பவரின் தலைமையில் 1807ல் பெரும் மாணவர் கிளர்ச்சி ஆரம்பமாகி கல்லூரியின் நலத்துக்கான நல்ல மாறுதல்கள் ஏற்பட்டன.
பிரின்ஸ்டன் இறையியல் செமினரியின் தோற்றம்
இறையியல் செமினரி ஒன்று தேவை என்பதை உணர்ந்ததால் 1812ல் பிரின்ஸ்டன் இறையியல் செமினரி ஆரம்பிக்கப்பட்டது. இதன் அவசியத்தை வலியுறுத்தி சிமித்துக்கு எதிராக செயல்பட்ட ஏஸ்பெல் கிரீனே புதிய செமினரியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இவர் 1822 வரை அப்பணியை ஆற்றினார். ஆரம்பத்தில் செமினரிக்கு வந்தவர் களுக்கு கர்த்தருடைய காரியங்களில் அதிக நாட்டமிருக்கவில்லை. கிரீனும் அவரோடு இணைந்து பணிபுரிந்து அலெக்சாண்டரும், மில்லரும் மாணவர்களோடு தனிப்பட்ட முறையில் பேசி அவர்களுடைய ஆத்தும விருத்திக்கான உதவிகளை செய்தனர். ஜோன் ஓவன் (John Owen), பிலிப் டொட்ரிஜ் (Philip Doddridge), ரிச்சட் பெக்ஸ்டர் (Richard Baxter), ஐசெக் வொட்ஸ் (Issac Watts) ஆகியோருடைய நூல்களை வாசிக்கும்படி மாணவர்களுக்கு அதிக ஊக்கமூட்டினர். செமினரியில் அன்றாடம் ஜெபக்கூட்டம் நடந்தது. காலஞ் செல்லச் செல்ல ஆத்மீகக் காரியங்களில் மாணவர்கள் அதிக நாட்டம் காட்ட ஆரம்பித்தனர். மாணவர்கள் செமினரியிலும் பக்கத்து ஊர்களிலும் எழுப்புதலில் நாட்டம் காட்டிப் பணி செய்தனர். இக்காலத்திலேயே சார்ள்ஸ் ஹொட்ஜ் (Charles Hodge) கர்த்தரை விசுவாசித்து செமினரியில் இணைந்தார். இக்காலப்பகுதியில் ஜே. டபிள்யூ. அலெக்சான்டர், ஏ. ஏ. அலெக்சான்டர் போன்ற திறமை வாய்ந்த போதகர்கள் செமினரியில் பணிபுரிந்தனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜேம்ஸ் மெக்கொஸின் (James McCosh) தலைமையில் செமினரி வளர்ச்சி பெற்றது. இவர் சிறந்த தலைவராக இருந்தார். பிரின்ஸ்டனை ஐரோப்பாவில் வளர்ந்து வரும் ஏனைய பல்கலைக்கழகங்களைப் போல மாற்ற மெக்கொஸ் விருப்பங் கொண்டிருந்தார். அதனால் டாக்டர் பட்டம் பெற்றவர்களைக் கொண்டு பாடங்களை நடத்த முயற்சிகள் எடுத்தார். இதில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டார். ஆனால், உலக வழிகளைப் பின்பற்றி கர்த்தரின் பணியைச் செய்வதில் ஆபத்து உண்டு என்பதை மெக்கோஸின் செயல்கள் உணர்த்தின. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகமாகப் பெயர் பெற்றாலும் ஆத்மீகத்தில் குறை வடைந்தது. வேதத்தின் அதிகாரத்தைக் குறைவுபடுத்தி விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை உயர்த்தும் புதிய கோட்பாடுகள் செமினரியில் நுழைய ஆரம்பித்தன. டார்வினின் சிருஷ்டி பற்றிய பரிணாமக் கோட்பாடுகளும் பிரபலமாக ஆரம்பித்தன. மெக்கோஸுக்கு பின்பு வந்த பேட்டனும் புதிய போதனைகளின் ஆபத்தை உணரவில்லை. இதெல்லாம் பல்கலைக் கழகத்துக்கும் செமினரிக்கும் இடையில் பிரிவை உண்டாக்கின. நாள் போகப் போக சுவிசேஷத்தின் மகிமையை உணராமல் உலக வழிகளை நாடி மனிதனுடைய வளத்துக்கு வழிகாணும் முயற்சிகளில் பல்கலைக் கழகம் ஈடுபட்டது. வேதபூர்வமான வரலாற்றுக் கிறிஸ்தவத்துக்கும், பெயர் கிறிஸ்தவத்துக்கும் இடையிலான பிரிவும், போராட்டமும் பிரின்ஸ்டன் வளாகத்தில் வளர ஆரம்பித்தது. எல்லாவற்றிற்கும் மேலாக இதுநாள் வரையும் ஒரு போதகர் கல்லூரித் தலைவராகவும், மாணவர்களின் ஆத்தும விருத்திக்குத் துணை செய்பவராகவும் இருந்த முறை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு மாணவர்களின் தேவைகளைக் கவனிக்க மாணவர் சங்கங்கள் கல்லூரியில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனால் கல்லூரியில் கிறிஸ்தவத் தின் செல்வாக்கு மேலும் மேலும் குறைவடையத் தொடங்கியது. அலெக்சான்டர் (Alexander), ஹொட்ஜ் (AA Hodge) வொட்ஸ் (Watts), மில்லர் (Miller), பெட்டன் (Patton), ஜோன் ஆர் டீ விட் (John R De Witt), பென்ஜமின் வோர்பீல்ட் (Benjamin Warfield), ஜே. ஜி. மேச்சன் (JG Machen), வொஸ் (Vos), ஆர்ம்ஸ்ட்ரொங் (Armstrong) ஆகிய பெரும் இறையியல் வல்லுனர்கள் போதித்த பிரின்ஸ்டன் தன்னுடைய தனித்தன்மையை இழந்து ஏனைய பல்கலைக்கழகங்களைப் போல உலகம் சார்ந்த வெறும் பல்கலைக்கழகமாக மாறிவர ஆரம்பித்தது.
சார்ள்ஸ் பினியின் எழுப்புதல் பற்றிய தவறான போதனைகளும், புதிதாகத் தோன்றிவளரும் சகல போதனைகளும் பிரின்ஸ்டனுக்குள் தலைகாட்ட ஆரம்பித்தன. இதெல்லாம் பிரின்ஸ்டனின் ஆத்மீக அழிவிற்கே வழிகோலின. 1929ல் பிரின்ஸ்டன் தனது ஆரம்பகால கோட்பாடுகளில் இருந்து முற்றாகவே விலகி நின்றது. சத்தியத்தைக் கற்பதைவிட நடைமுறைக்குத் தேவையானது வேண்டும் என்ற குரல் செமினரியில் ஓங்கியது. சத்தியமே எல்லா நடைமுறைக்கும் அத்திவாரம் என்ற வோர்பீல்ட், கிரேச்சம் மெச்சன் போன்றோரின் அறைகூவலைக் கேட்டவர்கள் தொகை குறைந்தது. பல விரிவுரையாளர்கள் பிரின்ஸ்டனைவிட்டு விலகினர். ஜே. ஜி. மேச்சன் (JG Machen), ஒஸ்வால்டு எலிஸ் (Oswald Allis), வில்சன் (Wilson), கொர்நேலியஸ் வென் டில் (Cornelius Van Til), ஆர். பி. கைப்பர் (R. B. Kuiper), ஜோன் மரே (John Murray) போன்ற இறையியல் வல்லுனர்கள் பிரின்ஸ்டனை விட்டு விலகினர். சகோதரர்கள் ஒருவருக்கொருவர் அன்பு காட்ட வேண்டும். பொறுத்துக் கொள்ள வேண்டும் என்ற குரல்கள் எழாமலில்லை. இதற்குப் பதிலளித்த இறையில் வல்லுனரான பென்ஜமின் வோர்பீல்ட், “இது போராட வேண்டிய நேரம், அன்பு காட்டும் நேரமல்ல. சத்தியத்துக்கு ஆபத்து வரும்போது சண்டையிட்டே அதைக் காக்க வேண்டும்” என்றார். மெச்சனும் அதையே நம்பினார். கர்த்தரின் மகிமை பிரின்ஸ்டனைவிட்டு அகன்றது என்று சொல்லுவது மிகையாகாது. தன்னுடைய ஆரம்பகால வரலாற்று அடித்தளத்தை பிரின்ஸ்டன் அன்றோடு இழந்தது. பிரின்ஸ்டன் ஏன் சரிந்தது? என்பதற்கு நோர்மன் பேர்கர்ட் விளக்கமளித்தபோது, “அது அமெரிக்க திருச்சபைக்கு கர்த்தர் அளித்த தண்டனை” என்று கூறினார். உலக ஆசை, பணம், இந்த உலகத்தைச் சார்ந்த சுவிசேஷம், டார்வினின் பரிணாம தத்துவத்தை மக்கள் கர்த்தராக ஏற்றுக்கொண்டமை, விஞ்ஞானத்துக்கு மக்கள் செய்த ஆராதனை, மனிதநல அடிப்படையிலான ஆராதனை போன்ற சபை மக்கள் நாடிச்சென்ற அத்தனைக்கும் எதிராக கர்த்தர் தந்த தண்டனையே மலைபோலிருந்த பிரின்ஸ்டன் சரிந்ததற்கு காரணம் என்று விளக்கினார். சத்திய வெளிச்சத்தை திருச்சபை நிராகரிக்க கர்த்தர் அதை அணைத்து விட்டார்.
பிரின்ஸ்டனின் வரலாற்றிலிருந்து நாம் படிக்கும் பாடமென்ன?
1. பிரின்ஸ்டன், வரலாற்றுக் கிறிஸ்தவமான கல்வினிசக் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாகி ஆரம்பத்திலிருந்தே சத்தியத்தை அப்பழுக்கில்லாமல் போதித்தது. வரலாற்றில் உருவெடுத்த விசுவாச அறிக்கைகளுக்கு மதிப்பளித்து அவற்றை நடைமுறையில் கைக்கொண்டது. அதிலிருந்து விலகியபோதே கல்லூரி சரிந்தது; கர்த்தரின் தண்டனையையும் அனுபவித்தது. சீர்திருத்தவாத கல்வினிசப் போதனைகளே வேதபூர்வமான கிறிஸ்தவ போதனைகள். அதன் அடிப்படையிலமையாத திருச்சபை ஊழியங்கள் சத்தியத்தை அறியாமல் தள்ளாடத்தான் செய்யும். பிரின்ஸ்டனின் உயர்வும், எழுப்புதல் காலத்தில் அதைக் கர்த்தர் பயன்படுத்திய விதமும், பிரின்ஸ்டன் உருவாக்கிய ஆவிக்குரிய வல்லமையான பிரசங்கிகளும், அங்கு போதித்த போதகர்களான இறையியல் ஜாம்பவான்களும் இதை சந்தேகமில்லாமல் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இன்று சீர்திருத்தவாத சத்தியங்களின் அடிப்படையில் தமிழினத்தில் திருச்சபைகள் எழவேண்டியது அவசியம். வெறும் பெயருக்கு கிருபையின் போதனைகளை விசுவாசிப்பதாக சாக்குக் காட்டிப் பெருமை பாராட்டிக்கொள்ளுகிற சபைகளாக இல்லாமல் மெய்யாகவே பிரின்ஸ்டன் பெரியவர்களைப் போல அவற்றிற்காக உயிரையும் கொடுத்து போராடுகிற திருச்சபைகள் எழவேண்டியது அவசியம். அப்போதுதான் தமிழினத்தில் மெய்யான எழுப்புதலைப் பார்க்கலாம். (இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள நாம் வெளியிட்டுள்ள ‘சீர்திருத்த விசுவாசம்’ என்ற நூலைப் பெற்று வாசிக்கவும்)
2. போதக ஊழியத்தைப் பற்றிய பிரின்ஸ்டனின் வேதபூர்வமான துவக்க கால அடிப்படைக் கோட்பாடுகள் இன்று பின்பற்றப்பட வேண்டியது அவசியம். திருச்சபைப் போதகர்கள் போதக ஊழியத்துக்கு வரப் போகிறவர்களை நேரடியாகக் கண்காணித்து போதித்து ஊழியத்துக்குத் தயார் செய்யும் ‘லொக் கொலேஜ்’ முறை எந்தளவுக்கு பிரசங்கத்தை உயர்த்தியது, போதக ஊழியத்தை சிறப்பாக்கியது, திருச்சபையை வளர்த்தது என்று கண்டோம். அம்முறை இன்று எல்லா இடங்களிலும் பின்பற்றப்பட வேண்டியது அவசியம். திருச்சபையின் கண்காணிப்பில் திருச்சபைப் போதகர்களால் பயிற்சி கொடுக்கப்படுகிறவர்கள் மட்டுமே திருச்சபைக்குப் பயன்பட முடியும். சபையையே கண்ணில் பார்க்காது இறையியல் கல்லூரிக்கு மட்டும்போய் ஏட்டுச் சுரைக்காய் பட்டத்தைப் பெற்றபின் சபை நடத்தப் பார்க்கிறவர்கள் இன்று தாராளமாக உலவுவதால்தான் தமிழினத்தில் தரமான வேத அடிப்படையிலான சபைகளைப் பார்க்க முடியாதிருக்கிறது. இம்முறை மாறவேண்டும். ஆத்துமாக்களோடு அந்நியோன்னியமாகப் பழகவும், அவர்களுடைய ஆத்மீகத் தேவைகளைப் புரிந்துணர்ந்து உதவவும் திருச்சபை வாழ்க்கை ஒரு போதகனுக்கு அவசியம். அதை இறையியல் கல்லூரியால் கனவிலும் தரமுடியாது. திருச்சபையில் வளர்ந்து திருச்சபைப் போதகர்களால் வளர்க்கப்படுகிறவர்கள் மட்டுமே ஆத்துமாக்களுக்கு மெய்யான ஆத்மீக ஊழியத்தை செய்ய முடியும். போதகர்களால் மாணவர்களின் ஆத்மீகக் குறைகளும், பிரச்சனைகளும் தீர்க்கப்பட்ட காலம் மாறி மாணவர்களின் குறைகளைத் தீர்க்க மாணவர்கள் சங்கம் ஆரம்பிக்கும் நிலை உருவாகிய பிரின்ஸ்டனைவிட்டுக் கர்த்தரின் ஆசீர்வாதம் அகன்றதில் ஆச்சரியமெதுவுமில்லை.
3. திருச்சபைகள் நன்கு வளர்ந்தபோதே போதகர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக லொக் கொலேஜுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் பிறகு பிரின்ஸ்டனும் உருவானது. இன்று தமிழினத்தில் சத்திய வேட்கையுடன் ஆத்மீகவிருத்தியடைந்து வரும் திருச்சபைகளை விரல்விட்டு எண்ணி விடக்கூடிய நிலையில் காளான்கள் போல் இறையியல் கல்லூரிகள் மட்டும் புறப்பட்டுவிடுகின்றன. திருச்சபைகள் வளர்ச்சியடையாமலிருந்து, அங்கே போதகர்களுக்கு அவசியமேற்படாமலிருந்திருந்தால் வரலாற்றில் லொக் கொலேஜுகள் உருவாகியிருந்திருக்காது; பிரின்ஸ்டனும் தோன்றியிருக்காது. இன்றைக்கு இறையியல் கல்லூரிகள் தமிழினத்தில் நல்ல ஆத்மீக வியாபாரம் நடத்தி வருகின்றன. அதில் பணத்தைத் தேடிக்கொள்ளுவதற்கு நல்ல வாய்ப்பு என்பதால் குடிசைத் தொழில்போல் அது பல இடங்களில் வெளிநாட்டுப் பணத்தில் வளர்ந்துவிடுகிறது. அவற்றில் பெரும்பாலும் சத்தி யத்தைவிடப் போலிப் போதனைகளே மாணவர்கள் மேல் திணிக்கப்படுகின்றன. இன்று தமிழினத்தின் தேவை இறையியல் கல்லூரிகளல்ல, தேவனை மகிமைப் படுத்தக்கூடிய சத்தியத்தில் வேறூன்றி வளரும் நல்ல திருச்சபைகளே.
4. திருச்சபைகள் வளர்ந்து போதகர்களுக்கு பயிற்சியளிக்க கல்லூரிகள் தேவைப்படுமானால் அவை திருச்சபையோடு பிரிக்க முடியாத தொடர்புள்ள கல்லூரிகளாக, சத்தியத்தைத் தவிர வேறெதையும் எண்ணியும் பார்க்காத கல்லூரிகளாக இருக்க வேண்டும். அவை போதகர்கள் போதிக்கின்ற, அவர்களுடைய நேரடிக் கண்காணிப்பில் இருக்கும் கல்லூரிகளாக இருக்க வேண்டும். அப்படியான சத்திய வாஞ்சையுடன் செயல்படும் கல்லூரிகள் கடுகுபோல் சிறிதாக இருந்தாலும் ஆவியின் வல்லமையோடு செயல்பட்டு திருச்சபைகளை அலங்கரிக்கும் நல்ல போதகர்களை ஆரம்பகால பிரின்ஸ்டனைப் போல உருவாக்கும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.