தன்மானம்
இரவெல்லாம் உறக்கமில்லை;
உடம்பெல்லாம் தகிக்கிறது – சுகந்தன்
ஜெபிக்கிறான்; வேதத்தைப் படிக்கிறான்
துடிக்கின்றன இதய நாடிகள்
முடிவெடுக்க வேண்டிய நேரமிது
முதலையும் இழக்க நேரிடும்
ஏற்கனவே வயிற்றுக்கு
காலும், அரையுந்தான்
காலைச்சுற்றிக் குழந்தைகள் வேறு
ஒட்டிக்கொள்ள வந்தவளுக்கும்
இதுவரை செய்ததில்லை
எதுவும் பெரிதாய்.
அலையலையாய் எண்ணங்கள்
தலைப் பாறைகளை மோத
மூச்சுக் காற்றின் உஷ்ணம்
முகத்தைச் சூடாக்க
முடிவெடுத்தான் நொடியில்
அவன் முகமும் மலர்ந்தது
கர்த்தரே இனிக் கதியென்று
பிசப்பின் வீட்டை நோக்கிப்
படு வேகமாய் நடந்தான்
கதவை ஓங்கித் தட்டினான்
திறந்த கதவுக்குப் பின்னாலிருந்து
முகத்தை நீட்டிய பிசப்பின் கையில்
திணித்தான் கடிதத்தை
அது ‘இராஜினாமாக் கடிதம்’
நெஞ்சிலிருந்த பாரமெல்லாம்
இறங்கிய நிம்மதி; இலேசானதுபோல்
இருந்தது தலையும் அவனுக்கு
எத்தனை நாட்கள்தான்
வாழ்வது இந்த வாழ்க்கை
சத்தியத்தை விற்றுப் பிணம்போல
சகட்டு மேனிக்கு வாழ்வதா?
பிசப்புக்குப் பணிந்து
பிசாசுக்கு உழைக்கும்
வேலை இனித் தேவையில்லை
வருவது வரட்டும் இருக்கிறார் இயேசு
என்றியம்பித் தலை நிமிர்ந்து
எட்டி நடக்கிறான் வீட்டை நோக்கி
எந்தக் கவலையுமில்லாமல்.
வயிறுகள் வீட்டில் வாடலாம்
கண்களில் கண்ணீர் வற்றலாம்
கொண்டவளின் கழுத்தில்
இருப்பதும் போகலாம்
நெஞ்சில் மட்டும் நிம்மதி
நேர்மையாய் இனி வாழலாம்
கர்த்தரின் பெயரில்
காணிக்கை பல வாங்கி
வாய் நிறையப் பொய்களால்
சபையாரைத் தினம் ஏய்த்து
தன்னை வளர்த்து ஊரை அழிக்கும்
தன்மானமற்ற வாழ்க்கை
மட்டுமில்லை அவனுக்கினி
தெளிந்தது அவன் புத்தி.
பாதையோ கரடு முரடு;
பாடுகள் காட்டாறாய்ப் பெருகும்
தூற்றுவார் தொகை அதிகரிக்கும்
தொல்லைகளும் தேடி வரும்
பிசப்புகளின் காலை வருடித்தன்
மானத்தைத் தரையில் வீசி
பொய்யால் இதயமழுகிப்
புழுப்பூத்த வாழ்வுக்கு
முடிவு இன்றோடு
இயேசு இனித் தஞ்சம்
என்றெடுத்த முடிவோடு
எதற்குந் துணிந்துத்
தரையதிர நடக்கிறான் – சுகந்தன்
தலையுயர்த்தி வீடு நோக்கி.
சுபி . . .