கிறிஸ்தவக் கோட்பாடுகள்

கேள்வி 102: விசுவாசிகளின் குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுக்கலாமா?

பதில்: விசுவாசிகளின் குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுக்கக்கூடாது. ஏனெனில், பரிசுத்த வேதாகமத்தில் அதற்கான எந்தக் கட்டளையோ, உதாரணங்களோ அல்லது உள்ளடக்கமான போதனைகளோ கொடுக்கப்படவில்லை.

(உபாகமம் 12:32; நீதிமொழிகள் 30:6; அப்போஸ். 8:12; 10:47-48).

குழந்தை ஞானஸ்நானம் (திருமுழுக்கு) என்பது என்ன?

விசுவாசிகளின் குழந்தைகளுக்கு தலையில் தண்ணீர் தெளித்துக் கொடுக்கப்படும் ஞானஸ்நானமே அது. இதன் மூலம் விசுவாசிகளின் குழந்தைகள் விசுவாசிகளைப் போலவே திருச்சபையின் அங்கமாக இணைத்துக் கொள் ளப்படுகிறார்கள்.

இந்த நடைமுறை எங்கிருந்து வந்தது? இதைப் பின்பற்றுபவர்கள் யார்?

ஆதித் திருச்சபையில் இந்த நடைமுறை இருக்கவில்லை. இயேசு கிறிஸ்துவும், அவருடைய அப்போஸ்தலர்களும் இத்தகைய நடைமுறைக்கான போதனைகளை அளிக்கவில்லை. அவர்கள் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்ததாக நாம் வேதத்தில் எங்குமே வாசிப்பதில்லை. இதை நாம் ரோமன் கத்தோலிக்க மதத்தில் பார்க்கிறோம். அம்மதம், தேவநீதியை ஞானஸ்நானத்தின் மூலம் மனிதனுக்குள் புகுத்தி அவனை தேவனுடைய பிள்ளையாக்கக் கூடிய கிருபையைத் தான் கொண்டிருக்கிறது என்று தவறாகப் போதிக்கிறது. அந்த அடிப்படையில் அவர்கள் கத்தோலிக்கருடைய குழந்தைகளுக்கு குழந்தை ஞானஸ்நானத்தை வழங்கி சபையில் இணைத்துக் கொள்கிறார்கள்.

ரோமன் கத்தோலிக்க மதத்தின் இந்த நடைமுறை சீர்திருத்தவாத காலத்தின் ஆரம்பத்தில் மாற்றப்படவில்லை. வேத அதிகாரத்தை நிலைநாட்டவும், விசுவாசத்தின் மூலமாகவே ஒருவர் நீதிமானாக முடியும் என்ற அடிப்படைப் போதனையை வலியுறுத்தியும் கத்தோலிக்க மதத்தோடு போராடிய சீர்திருத்தவாதிகள் இதில் அக்கறைகாட்டத் தவறினார்கள். திருச்சபை சீர்திருத்தம் தொடர்ந்தபோது அனாபாப்திஸ்து இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், சுவிட்சர்லாந்து சீர்திருத்தவாதியான சுவிங்லி போன்றோரும் திருச்சபை அமைப்பிலும் மாற்றங்கள் தேவை என்று குழந்தை ஞானஸ்நானத்துக்கு எதிராகப் போராடினார்கள். விசுவாசிகள் மட்டுமே வேதபோதனையின்படி திருமுழுக்கைப் பெற்று திருச்சபையில் இணைய வேண்டுமென்பதால் விசுவாசிக்கக்கூடிய திறனில்லாத பிறந்த குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுப்பது தவறு என்று இவர்கள் விளக்கினார்கள். சுவிங்லி இந்த விஷயத்தில் பிற்பாடு தன் கருத்தை மாற்றிக்கொண்டார். அதன்பின் அனாபாப்திஸ்துகள் திருச்சபை சீர்திருத்தத்திற்கு எதிரானவர்களாகக் கருதப்பட்டு அரசாலும் ஏனையோராலும் பழிவாங்கப்பட்டனர். சீர்திருத்தவாதிகளில் பிரெஸ்பிடீரியன் திருச்சபை அமைப்பைப் பின்பற்றியவர்கள் குழந்தை ஞானஸ்நானமளிக்கும் நடைமுறையை திருச்சபையில் தொடர்ந்தனர். இவர்கள் இன்று குழந்தை ஞானஸ்நானவாதிகள் (Pedo-baptist) என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள்.

இன்று குழந்தை ஞானஸ்நானத்தைப் பின்பற்றுபவர்கள் அதற்குத் தரும் விளக்கமென்ன?

ரோமன் கத்தோலிக்க மதம் இதை ஏன் பின்பற்றுகிறது என்று மேலே பார்த்தோம். ஆனால், கத்தோலிக்க மதத்தைக் கிறிஸ்தவத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளாத சுவிசேஷ இயக்கத் திருச்சபைகளான பிரெஸ் பிடீரியன் திருச்சபைகள் (Prebyterian churches) குழந்தை ஞானஸ் நானத்தை நியாயப்படுத்த வேறுவிதமான விளக்கத்தை அளிக்கிறார்கள். அதாவது, பழைய ஏற்பாட்டின் பழைய உடன்படிக்கையின்படி இஸ்ரவேலரோடு கர்த்தர் உடன்படிக்கையொன்றை ஏற்படுத்தி அவர்களைத் தம்முடைய மக்களாகக் கருதி, அந்த உடன்படிக்கையின் அடிப்படையில் இஸ்ரவேலரின் குழந்தைகளுக்கு விருத்தசேதனம் செய்யும்படி நியாயப்பிரமாணத்தின் மூலம் கட்டளையிட்டார். இந்த வகையில் விருத்தசேதனம் பெறும் இஸ்ரவேலரின் குழந்தைகள் கர்த்தரின் உடன்படிக்கையின் பிள்ளைகளாகக் கருதப்பட்டனர். பிரெஸ்பிடீரியன் திருச்சபைகள், கர்த்தர் இஸ்ரவேலரோடு ஏற்படுத்திய இந்தப் பழைய உடன்படிக்கை புதிய ஏற்பாட்டுக் காலத்திலும் தொடர்வதாகவும், அதன்படி புதிய ஏற்பாட்டு விசுவாசிகளின் குழந்தைகளுக்கும் பழைய ஏற்பாட்டு விருத்தசேதனத்தின் அடையாளமாக புதிய ஏற்பாட்டில் காணப்படும் ஞானஸ்நானம் அளிக்கப்பட்டு அவர்கள் திருச்சபையில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் விளக்குகின்றனர். எனவே, அவர்கள் விசுவாசிகளினுடைய குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் அளிக்கின்றனர்.

இதற்கு சீர்திருத்த பாப்திஸ்துகளின் பதில் என்ன?

உடன்படிக்கை இறையியல் (Covenant Theology) பற்றி பிரெஸ்பிடீரியன் திருச்சபைகள் அளிக்கும் விளக்கத்தில் பல சிக்கல்கள் உள்ளன. முதலில், பழைய உடன்படிக்கைக்கும் புதிய ஏற்பாட்டின் புதிய உடன்படிக்கைக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை பிரெஸ்பிடீரியன் திருச்சபைகள் உணரத் தவறுகின்றன. பழைய உடன்படிக்கையின் பல அம்சங்கள் இன்றும் தொடர் கின்ற போதும் (மீ.ரீ: பத்துக் கட்டளைகள், ஆராதனைத் தத்துவம் போன்றவை) பழைய ஏற்பாடு முக்கியமாக இஸ்ரவேல் தேசத்தோடு ஏற்படுத்தப்பட்டது. இஸ்ரவேல் தேசம் முழுவதும் விசுவாசிகளைக் கொண்டதாக இருக்கவில்லை. இஸ்ரவேல் பழைய உடன்படிக்கையை மதிக்கவில்லை; நியாயப்பிரமாணத்தையும் பின்பற்றவில்லை. இஸ்ரவேல் கர்த்தருக்குக் கீழ்ப் படியாததனால் அழிவைச் சந்தித்தது. ஆலயமும் அழிவைச் சந்தித்தது. இஸ்ரவேலின் கடின இருதயத்தின் காரணமாக கர்த்தர் தான் புதிய உடன் படிக்கையை உருவாக்குவதாக எரேமியா 31:31-34 வசனங்களில் விளக்குகிறார். இந்த உடன்படிக்கை பழைய உடன்படிக்கைக்கும் புதிய உடன் படிக்கைக்கும் உள்ள வேறுபாட்டை விளக்குகிறது. இதையே எபிரெயர் நிருபம் 8 ஆம் அதிகாரமும் 10 ஆம் அதிகாரமும் தெளிவாக விளக்கி, புதிய உடன்படிக்கையின் அதாவது பழைய உடன்படிக்கையைவிட மேலானதொரு உடன்படிக்கையின் மத்தியஸ்தராக கிறிஸ்து இருக்கிறார் என்று விளக்குகின்றன. பழைய உடன்படிக்கை வெளிப்புறக் கீழ்ப்படிதலை எதிர்பார்த்தது. கர்த்தரை விசுவாசித்தாலும் விசுவாசிக்காவிட்டாலும் இஸ்ரவேலர்கள் அதற்கு அடிபணிய வேண்டியிருந்தது; அடிபணிந்தவரை அவர்களைக் கர்த்தர் ஆசீர்வதித்தார். ஆனால், புதிய ஏற்பாட்டில் கர்த்தர் இருதயத்தில் கீழ்ப்படிதலை எதிர்பார்க்கிறார். ஆத்மீகக் கீழ்ப்படிதலை எதிர்பார்க்கிறார். புதிய உடன்படிக்கை பழைய உடன்படிக்கையைப் போலல்லாது மனிதனின் இருதய மாற்றத்தையும், அதன் அடிப்படையிலான பரிசுத்தமான வாழ்க்கையையும் வலியுறுத்துகிறது.

அத்தோடு, புதிய உடன்படிக்கையின் மக்கள் அனைவரும், அதாவது “சிறியவன் முதற்கொண்டு பெரியவன் வரையும் எல்லோரும்” கிறிஸ்துவை விசுவாசித்தவர்களாக இருப்பார்கள் (எபிரெ. 8:11). அவர்கள் எல்லோரும் தனிப்பட்டமுறையில் கிறிஸ்துவின் மூலம் இரட்சிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். புதிய உடன்படிக்கைக்கு சொந்தமான ஒருவரும் கிறிஸ்துவை விசுவாசிக்காதவராக இருக்கமாட்டார்கள். மேலும் புதிய உடன்படிக் கையின் திருநியமங்கள் விசுவாசிகளுக்கு மட்டுமே, அதாவது புதிய உடன் படிக்கையின் சொந்தக்காரர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட வேண்டும். பழைய உடன்படிக்கையின்படி சகல இஸ்ரவேலரும் (கர்த்தரை விசுவாசித்த வர்களும், விசுவாசிக்காதவர்களும்) நியாயப்பிரமாணத்தின்படி நடக்க வேண்டியிருந்தது. ஆராதனை செய்ய வேண்டியிருந்தது. புதிய உடன் படிக்கையின்படி கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் மட்டுமே திருச்சபை அங்கத்தவர்களாக முடியும். திருமுழுக்கைப் பெறவேண்டும். திருவிருந்து, சபை ஒழுங்கு மற்றும் ஏனைய சபை சலுகைகளை அநுபவிக்க முடியும். இந்தவகையில் பழைய உடன்படிக்கையைவிட புதிய உடன்படிக்கை புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டிருக்கிறது. ஆகவே, பிரெஸ் பிடீரியன் இறையியலாளர்கள் பழைய உடன்படிக்கை புதிய ஏற்பாட்டில் தொடர்வதாக எண்ணுவது தவறு. அவர்கள் விடுகின்ற மிகப்பெரிய இறையியல் தவறு பழைய ஏற்பாட்டின் அடிப்படையில் புதிய ஏற்பாட்டை வாசித்து பழைய ஏற்பாட்டைப் புதிய ஏற்பாட்டிற்குள் திணிப்பதுதான். உண்மையில் புதிய ஏற்பாடில்லாமல் பழைய ஏற்பாட்டை ஒருவரும் புரிந்து கொள்ள முடியாது. புதிய ஏற்பாட்டின் அடிப்படையிலேயே பழைய ஏற்பாட்டை எப்போதும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

புதிய உடன்படிக்கையின்படி புதிய ஏற்பாட்டில் விசுவாசிகளின் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்து திருச்சபையில் உடன்படிக்கையின் பிள்ளைகளாக சேர்க்க வேண்டும் என்ற போதனையை எங்குமே பார்க்க முடியாது. இதை வலியுறுத்தும் குழந்தை ஞானஸ்நானவாதிகள் பழைய ஏற்பாட்டில் இதற்கான போதனையிருப்பதால் புதிய ஏற்பாட்டில் இதற்கான விளக்கம் தேவையில்லை என்கிறார்கள். அத்தோடு, குழந்தை ஞானஸ்நானத்திற்கான எந்த அடையாளமும் இல்லாத பகுதிகளை எல்லாம் தங்களுடைய போதனையை வலியுறுத்தப் பயன்படுத்துகிறார்கள். இதற்காக இவர்கள் உதாரணங்காட்டும் மத்தேயு 19:14 வசனத்தில் இயேசு, எல்லாக் குழந்தைகளும் தன்னைப் பார்த்துப் பேசத் தடையில்லை என்றுகூறி அவர் களைத் தன்னிடத்தில் வரச் சொன்னாரே தவிர அவர்களுக்கு ஞானஸ் நானம் கொடுப்பதற்காக அழைக்கவில்லை. அப்போஸ். 2:39 வசனத்தில், “உங்கள் பிள்ளைகளுக்கும்” என்றிருப்பதைவைத்து குழந்தை ஞானஸ்நான த்தை வலியுறுத்துவது முட்டாள்தனம். அடுத்ததாக, குடும்ப ஞானஸ்நானப் பகுதிகளைப் பயன்படுத்தியும் தங்கள் கருத்தை இவர்கள் வலியுறுத்தப் பார்க்கிறார்கள். கொர்நேலியு (அப்போஸ். 10); லீதியாள் (அப்போஸ். 16); பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன் (அப்போஸ். 16); சொஸ்தெனே (1 கொரி. 1) ஆகியோரின் குடும்பங்கள் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டதாக வேதத்தில் வாசிக்கிறோம். இப்பகுதிகளில் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டவர்கள் சுவிசேஷத்தை ஏற்கனவே கேட்டு மனந்திருந்தி கிறிஸ்துவை விசுவாசித்தார்கள் என்று தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. அத்தோடு, ஏற்கனவே புதிய ஏற்பாடு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுக்கு மட்டும்தான் ஞானஸ்நானம் கொடுக்கப்படவேண்டும் என்று போதித்திருக்க இந்தப் பகுதிகளை அந்தப் போதனைக்கு முரணாகப் பயன்படுத்தி இந்தக் குடும்பங்களில் இருந்த குழந்தைகளுக்கும் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது என்று விளக்குவது சிறுபிள்ளைத்தனமானதும் வேத விளக்க விதிகளின் அடிப்படையில் முழுத்தவறுமாகும். உண்மையில் இப்பகுதிகளில் உள்ள குடும்பங்களில் கிறிஸ்துவை விசுவாசித்த அனைவரும் ஞானஸ்நானம் பெற்றார்கள் என்றே விளங்கிக்கொள்ள வேண்டும். அக்குடும்பங்களில் குழந்தைகளும் இருந்திருக்கலாம் என்றும் அவர்கள் விசுவாசிக்காமலேயே ஞானஸ்நானம் பெற்றார்கள் என்றும் ஊகிப்பது தவறு.

அத்தோடு 1 கொரி. 7:14 வசனத்தில் “அவிசுவாசியான புருஷன் தன் (விசுவாசியான) மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்” என்றும் அவர் களுடைய பிள்ளைகளும் பரிசுத்தமாக இருக்கின்றன என்றும் விளக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி ஞானஸ்நானத்தையோ அல்லது சபை அங்கத்துவத்தையோ பற்றி எந்த விளக்கமும் தரவில்லை. இப்பகுதி திருமண உறவைப் பற்றி மட்டுமே விளக்குகிறது. திருமணத்துக்குப் பிறகு இரட்சிப்பை அடைந்த மனைவி, இரட்சிப்பை அடையாத கணவனுடன் தொடர்ந்து வாழலாமா? என்பதுபற்றியே பவுல் இங்கு விளக்குகிறார். அந்தப் பிள்ளைகள் திருமண உறவின் மூலமாகப் பிறந்திருப்பதால் அவை அசுத்தமாகப் பிறக்காமல் பரிசுத்தமாகவே பிறந்திருக்கின்றன. ஆகையால் கணவன் தொடர்ந்து சேர்ந்து வாழவிரும்பினால் விசுவாசியான மனைவி சேர்ந்து வாழவேண்டும் என்பது மட்டுமே பவுலின் போதனை. இதை விட்டுவிட்டு பிள்ளைகள் “பரிசுத்தமாயிருக்கின்றன” என்ற வார்த்தையை மட்டும் வைத்துக்கொண்டு அவை ஞானஸ்நானம் பெற்று சபையில் இணைந்திருந்தன என்று விளக்கப்பார்ப்பது மிகவும் சிரிப்புகிடமான விளக்கம். ஆகவே, குழந்தை ஞானஸ்நானத்திற்கு புதிய ஏற்பாட்டில் இடமேயில்லை. அது முழுத்தவறு. மேலும், கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டு கிறிஸ்துவை விசுவாசித்து திருமுழுக்குப் பெற்றவர்களை மட்டும் கொண்டிருப்பதே திருச்சபை என்ற தெளிவான வேதபோதனைக்கு எதிராக குழந்தைஞானஸ்நானம் அமைகிறது.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s