கேள்வி 95: வார்த்தை எந்தவிதத்தில் ஆத்துமாவின் இரட்சிப்பிற்காகப் பயன்படுத்தப்படுகிறது?
பதில்: பரிசுத்த ஆவியானவர் வேத வாசிப்பை, சிறப்பாகப் பிரசங்கிக்கப்படும் வார்த்தையை பாவிகள் விசுவாசத்தின் மூலம் இரட்சிக்கப்படும்படிக்கு, அவர்களில் உணர்த்தி மனமாற்றமடையச் செய்யும் கிருபையின் சாதனமாகப் பயன்படுத்துவதோடு, விசுவாசத்தின் மூலம் இரட்சிப்பை அடையும்படியாக விசுவாசிகள் பரிசுத்தத்திலும், ஆறுதலிலும் வளரும்படியாகவும் செய்கிறார்.
(நெகேமியா 8:8; 1 தீமோத்தேயு 4:13, 16; 1 கொரிந்தியர் 1:21; ரோமர் 10:13-17; சங்கீதம் 19:7-8; 1 கொரிந்தியர் 14:24-25; அப்போஸ்தலர் 20:32; ரோமர் 15:4; 1 தெசலோனிக்கேயர் 1:6; ரோமர் 1:16; 2 தீமோத்தேயு 3:15-17)
கேள்வி 96: இரட்சிப்பை அடைவதற்கு ஏதுவாக வார்த்தையை எவ்வாறு வாசிக்கவும், கேட்கவும் வேண்டும்?
பதில்: இரட்சிப்பை அடைவதற்கு ஏதுவாக வார்த்தை அமையும்படி நாம் ஊக்கத்தோடும், கவனத்தோடும், ஆயத்தத்தோடும், ஜெபத்தோடும் அதைக் கேட்டு அல்லது வாசித்து; விசுவாசத்தோடும், அன்போடும் அதை ஏற்று, நமது இருதயத்தில் இருத்தி வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
(நீதிமொழிகள் 8:34; 1 பெதுரு 2:1-2; சங்கீதம் 119:18; எபிரேயர் 4:2; 2 தெசலோனிக்கேயர் 2:10; சங்கீதம் 119:11; லூக்கா 8:15; யாக்கோபு 1:25)
விளக்கவுரை: கர்த்தருடைய வார்த்தை புனிதமானது மட்டுமல்ல, கிருபையின் சாதனங்களில் முதன்மை வாய்ந்தது. திருவிருந்து, திருமுழுக்கு ஆதியவற்றையும்விட சிறப்பானது. மனிதர்கள் இரட்சிப்பை அடைவதற்கு கர்த்தர் வேதத்தையே அதுவும் வேதப்பிரசங்கத்தைப் பிரதானமாகப் பயன்படுத்துகிறார். உலகத்துக்குப் பயித்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று என்று பவுல் கூறுகிறார் (1 கொரி. 1:21). வார்த்தையைக் கேட்பதனால் விசுவாசம் கிடைக்கிறது என்கிறார் பவுல், ரோமர் 10:17ல்.
இந்த வகையில் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து பவுல் பேசுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனெனில், திருமுழுக்கு, திருவிருந்து ஆகிய கிருபையின் சாதனங்களின் மூலம் எவரும் இரட்சிப்பை அடைய முடியாது. உண்மையில் வார்த்தையோடு இணைந்ததாக, வார்த்தைப் பிரசங்கத்தோடு அமையாத திருமுழுக்காலும், திருவிருந்தாலும் ஆத்துமாக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காது. திருமுழுக்கும், திருவிருந்தும் பாவிகள் இரட்சிக்கப்படும்படியான சுவிசேஷச் செய்தியைத் தம்மில் கொண்டிருக்கவில்லை. கர்த்தரை ஒருபோதும் அறிந்திராத ஒரு மனிதன் திருமுழுக்கையும், திருவிருந்தையும் கண்ணால் பார்த்தும், கிறிஸ்துவைப் பற்றிய எதையும் தெரிந்துகொள்ளாமல் இருந்துவிடலாம். கிறிஸ்துவை அறிந்துகொள்ள அவன் வார்த்தைப் பிரசங்கத்தைக் கேட்கக்கூடியதாக இருக்க வேண்டும். பல வருடங்களுக்கு முன் தமிழகத்தில் ஒரு சபைப் போதகர் இதுபற்றி அதிக ஞானமில்லாததால் வார்த்தையின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கும்படி என்னைக் கேட்டபோது, அந்தச் சபையில் “வார்த்தை எல்லாவற்றையும்விட மேன்மையானது” என்ற தலைப்பில் நான் பிரசங்கித்தது நினைவுக்கு வருகிறது. அந்தப் போதகர் அறியாமையால் வார்த்தைப் பிரசங்கத்துக்கு அதிக முக்கியத்துவம் தராமல் இருந்தார்.
திருமுழுக்கும், திருவிருந்தும் அவற்றிற்கான விளக்கங்களுக்கு வார்த்தையிலேயே தங்கியிருக்கின்றன. வேதம் தெளிவாகப் பிரசங்கிக்கப்படுகிறபோது செய்தி தெளிவாகவும், விளக்கமாகவும் அமைகிறது. வார்த்தைப் பிரசங்கத்தின் மூலமாகவே கர்த்தர் சாதரணமாக பாவிகள் இரட்சிப்பை அடைவதற்கு வழிசெய்கிறார். வார்த்தையை வாசிப்பது அவசியம், அதை வாசிக்கக் கேட்பதும் அவசியம். அதற்கும் மேலாக அந்த வார்த்தை தெளிவாகப் பிரசங்கிக்கப்படுவது அவசியம். பிரசங்கத்தின் மூலமாகவே கர்த்தர் பாவிகளின் இருதயத்தில் ஆவியின் மூலம் இடைப்படுகிறார்.
பாவிகளின் இருதயம் பாவத்தின் காரணமாகப் பாழாகி இருக்கிறது. பாவிகளின் கண்கள் குருடாகி, சிந்தனைகள் கர்த்தரைப் பற்றியதாக இல்லாமல் பாவசிந்தனைகளோடு இருக்கின்றன. அவர்கள் இயற்கையாகவே கர்த்தரைத் தேடும் இருதயத்தைக் கொண்டிராமல் இருக்கிறார்கள். தன்னை இரட்சித்துக்கொள்ளக்கூடிய எந்த வல்லமையும் இல்லாமல் பாவிகள் இருந்து வருகிறார்கள். இரட்சிப்புக்கான வழிவகைகளையும் புரிந்துகொள்ள முடியாத நிலையில் அவர்கள் இருந்து வருகிறார்கள். அவர்கள் இரட்சிப்பை அடைவதானால் கர்த்தர் மட்டுமே அவர்களுக்கு உதவக்கூடியவராக இருக்கிறார். கர்த்தர் மட்டுமே அவர்களுடைய குருடான கண்களைத் திறந்து சத்திய வெளிச்சத்தை அவர்களுக்கு அளிக்க முடியும். அந்தக் காரியத்தைக் கர்த்தர் தன்னுடைய வார்த்தையின் மூலமாக செய்கிறார். ஆகவேதான், பாவிகள் மனந்திரும்பும் பொருட்டாக வார்த்தை பிரசங்கிக்கப்பட வேண்டும் என்கிறார் கர்த்தர். ரோமர் 10ம் அதிகாரம் 14-17 வரையிலான வசனங்கள் இந்த உண்மையைத்தான் தெளிவாக விளக்குகின்றன. பவுல் அங்கே, ஒரு மனிதன் கர்த்தரை விசுவாசிக்க வேண்டுமானால், அந்த மனிதன் விசுவாசத்தை அடையும்படியாக ஒருவர் அனுப்பப்பட வேண்டும் என்கிறார். அவர் அனுப்பப்பட சபை அவசியம் என்கிறார். அத்தோடு, அனுப்பப்படுகிறவர் பிரசங்கியாக இருப்பதோடு, அவர் பிரசங்கிக்கவும் வேண்டும் என்கிறார். கேள்வி விசுவாசத்தின் மூலம் வருகிறபடியால், அந்த மனிதன் கேட்கும்விதத்தில் தெளிவாக சுவிசேஷப் பிரசங்கத்தைப் பிரசங்கி பிரசங்கிக்க வேண்டும் என்றும் விளக்குகிறார். விசுவாசம் வாசிப்பதனால் அல்லாமல் சாதாரணமாக கேள்வியின் மூலமாக வருகிறதை இப்பகுதியில் இருந்து தெரிந்துகொள்ளுகிறோம். இதனால் வேதத்தை வாசிப்பதால் பிரயோசனம் இல்லை என்று தப்புக்கணக்குப் போட்டுவிடக்கூடாது. வாசிப்பதால் அநேக பலன்கள் இருந்த போதும், சாதாரணமாக கர்த்தர் வார்த்தைப் பிரசங்கத்தைக் கேட்பதன் மூலம் பாவிகளை மனந்திரும்பச் செய்கிறார். இதற்கு உதாரணமாக எத்தியோப்பிய மந்திரியின் வாழ்க்கை நிகழ்ச்சியை வேதத்தில் வாசிக்கிறோம். எருசலேம் ஆலய வழிபாட்டில் கலந்துகொண்டு திரும்பி வந்து கொண்டிருந்த எத்தியோப்பிய மந்திரி ஏசாயா நூலை வாசித்திருந்த போதும், பிலிப்பு ஆவியினால் அனுப்பப்பட்டு மந்திரியைச் சந்தித்து அப்பகுதியை விளக்கிப் பிரசங்கித்தபோதே மந்திரியின் அகக்கண்கள் திறந்தன என்பதையும், அவன் கிறிஸ்துவை விசுவாசித்தான் என்றும் வேதத்தில் வாசிக்கிறோம். (அப்போ. 8:27-39). வேத வாசிப்பு அவசியம். அதேவேளை வாசிக்கும் பகுதி விளக்கப்படுத்தப்பட்டு, அதை நாம் கேட்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறபோது சிலர் மட்டும் கிறிஸ்துவை விசுவாசிக்கிறார்களே, அது ஏன்? என்று சிலர் எப்போதுமே கேட்பது வழக்கம். அதற்குக் காரணம், சுவிசேஷத்தைக் கேட்கும் மனிதர்களுடைய இருதயத்தை மாற்றும் வல்லமை சுவிசேஷத்தில் தங்கியிராததால்தான். இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். “இரட்சிப்பு உண்டாவதற்கு சுவிசேஷம் தேவபலனாக இருக்கிறது” என்று பவுல் ரோமர் 1:16ல் கூறியிருப்பதைக் கவனியுங்கள். சுவிசேஷம் எந்தவிதத்தில் இரட்சிப்பு உண்டாவதற்கு காரணமாக இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளுவது அவசியம். “அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்தவர்களாக இருந்த நம்மைக் கிறிஸ்து உயிர்ப்பித்தார்” என்று பவுல் எபேசியர் 2:1ல் விளக்குகிறார். “ஆவியே உயிர்ப்பிக்கிறது” என்று விளக்கினார் இயேசு, யோவான் 6:63ல். இவற்றிலிருந்து பரிசுத்த ஆவியானவரே ஆத்துமாக்களை பாவத்திலிருந்து உயிர்ப்பிக்கிறார் என்று அறிந்துகொள்ளுகிறோம். அந்த உயிர்ப்பித்தலாகிய ஜீவனை அளிக்கும் கிரியையை ஆவியானவர் சுவிசேஷச் செய்தி பிரசங்கிக்கப்படும்போது அதன் மூலம் செய்கிறார் என்கிறது வேதம். இதைத்தான் பவுல் ரோமர் 10ல் விளக்கி, “கேள்வியின் மூலம் விசுவாசம் வருகிறது” என்கிறார்.
சுவிசேஷச் செய்தியைக் கேட்டு பாவி மனந்திரும்புவதற்கு ஆவியானவரின் ஜீவனளிக்கும் கிரியை அவசியமாக இருக்கிறது. அதனால்தான் சுவிசேஷத்தைப் அநேகர் கேட்கும்போதும், சிலர் மட்டுமே அதன் மூலம் பலனடைகிறார்கள். அந்தச் சிலரில் ஆவியானவர் கிரியை செய்திருக்கிறார்; அவர்களுக்கு ஜீவனளித்திருக்கிறார். ஆவியானவரே ஆத்துமாக்களின் இருதயங்களைப் புதுப்பித்து அவர்களுக்கு மறுபிறப்பளிக்கிறவராயிருக்கிறார். நிக்கொதேமு மறுபிறப்படைய வேண்டும் என்று இயேசு சொன்னார். அது ஆவியினால் நிகழும் காரியம் என்றும் இயேசு விளக்கினார். புறக்கண்களால் நம்மால் பார்க்க முடியாத அந்த மறுபிறப்பு ஆவியினாலேயே ஒருவரில் நிகழ்கிறது. பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதிய நிருபத்தில், “நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக் கொள்ளாமல், தேவ வசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவ வசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது.” என்றார் (1 தெசலோ. 2:13). இதை ஒரு சிறு உதாரணத்தின் மூலம் விளக்கலாமென்று நினைக்கிறேன். இரண்டு பேர் ஒரு கூட்டத்தில் சுவிசேஷத்தைக் கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். ஒருவர் அதை முற்றாக அலட்சியம் செய்து தூங்கிவிடுகிறார். இன்னொருவரோ காதுகொடுத்து கேட்கிறார். அவருக்கு சொல்லுகிற செய்தி ஒருவிதத்தில் பொதுவாகப் புரிகிறது. அந்த செய்தி என்ன என்பதை அவரால் அறிவின் அடிப்படையில் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அகக் கண்கள் திறந்து, இருதயம் புதுப்பிக்கப்பட்டு இரட்சிப்பை அடைய அது மட்டும் போதாது. கர்த்தர் அந்த மனிதருக்கு உதவ வேண்டும். மனத்தளவில் அறிவின் அடிப்படையில் புரிந்துகொள்ளக் கூடிய செய்தியைக் கர்த்தர் தன் ஆவியின் மூலமாக அந்த மனிதரின் இருதயத்தில் பேசி அவருக்கு ஜீவனளிக்க வேண்டும்.
எல்லாவற்றையும் கர்த்தரே செய்கிறாரென்றால் இதில் மனிதன் செய்ய வேண்டியது ஒன்றுமே இல்லையா? மனிதன் செயலிழந்தவனா? பொறுப்பற்றவனா? என்று நீங்கள் நினைக்கக்கூடும். அப்படியல்ல. இரட்சிப்புக்குரிய எதையும் மனிதனால் செய்ய முடியாது என்பது உண்மைதான். வேதம் அப்படித்தான் விளக்குகிறது. அதற்காக, அவன் பொறுப்பற்றவன் என்று நாம் நினைத்துவிடக்கூடாது. அவனால் தன்னை இரட்சித்துக் கொள்ள முடியாது என்பதற்காக அவன் பொறுப்பற்றவனல்ல. பொறுப்புள்ளவனாகவே கர்த்தர் மனிதனைப் படைத்திருக்கிறார். தன்னை இரட்சித்துக்கொள்ளத் தகுதியற்ற, வலிமையற்ற அவனுடைய நிலமை அவனுடைய பொறுப்புக்களிலிருந்து அவனை விலக்கி வைக்கவில்லை. ஆவியானவர் அவனுக்கு மறுபிறப்பளிக்கிறார் என்பதற்காக மனிதன், தான் செய்யக்கூடியது ஒன்றுமேயில்லை என்றிருந்துவிட முடியாது. வார்த்தையைக் கேட்பதில் அவன் சிரத்தை காட்ட வேண்டும் என்கிறது வேதம். கர்த்தரின் வழிகளை அவன் நாட வேண்டும் என்கிறது வேதம். அது மனிதனுடைய பொறுப்பு. “நீங்கள் கேட்கிற விதத்தைக் குறித்துக் கவனியுங்கள்; உள்ளவனெவனோ அவனுக்கே கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும்” என்றார் இயேசு கிறிஸ்து (லூக்கா 8:18). வார்த்தையைக் கேட்டுப் புரிந்துகொள்ளக்கூடிய வல்லமையைக் கர்த்தரே தருகிறார் என்பதை இயேசுவின் சீடர்கள் உணர்ந்திருந்தார்கள். அதேவேளை, காதுகொடுத்து கவனத்தோடு அந்த வார்த்தைகளைக் கேட்டுணர வேண்டிய கடமை தங்களுக்கு இருந்ததையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். வார்த்தையைக் கவனத்தோடும், ஊக்கத்தோடும் கேட்கும்படி வினாவிடை வற்புறுத்துவது நியாயமானதே. கிறிஸ்துவின் வார்த்தைகளை ஊக்கத்தோடும், தாகத்தோடும் தேடியோடாத எவர் வாழ்விலும் ஆவியானவர் இரட்சிப்புக்குரிய விதத்தில் கிரியை செய்வதில்லை. புதிதாகப் பிறந்திருக்கும் பிள்ளையைப் போல நாம் வார்த்தையாகிய பாலை நாடி வர வேண்டும்.