கேள்வி 97: புதிய உடன்படிக்கையின் திருவருட் சாதனம் என்பது என்ன?
பதில்: கிறிஸ்துவும், புதிய உடன்படிக்கையின் பலாபலன்களும் உணரக்கூடிய அடையாளங்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு, முத்திரையிடப்பட்டு விசுவாசிகளுக்கு வழங்கும்படியாக கிறிஸ்துவால் ஏற்படுத்தப்பட்ட பரிசுத்த நியமனமே புதிய உடன்படிக்கையின் திருவருட் சாதனமாகும்.
(1 கொரிந்தியர் 11:23-26)
கேள்வி 98: புதிய உடன்படிக்கையின் திருவருட்சாதனங்கள் யாவை?
பதில்: திருமுழுக்கும் (ஞானஸ்நானம்), திருவிருந்துமே (கர்த்தருடைய பந்தி) புதிய உடன்படிக்கையின் திருவருட்சாதனங்களாகும்.
(மத்தேயு 28:19; 1 கொரிந்தியர் 11:23-26).
விளக்கவுரை: ரோமன் கத்தோலிக்க மதம் ஏழு திருவருட்சாதனங்கள் இருப்பதாக போதிக்கிறது. சீர்திருத்தவாதம் இவற்றில் திருமுழுக்கையும், திருவிருந்தையும் மட்டுமே வேதபூர்வமான திருவருட்சாதனங்களாக ஏற்றுக்கொண்டன. சீர்திருத்தவாதகாலத்தில் சீர்திருத்த சபைகள் இந்த முடிவுக்கு வருவதற்கு தகுந்த காரணங்கள் இருந்தன. திருச்சபைகள் பின்பற்ற வேண்டிய திருவருட்சாதனங்களாக இருப்பதற்குரிய சில வேத இலக்கணங்களை அவர்கள் விளக்கியிருந்தார்கள். (1) அவை இயேசு கிறிஸ்துவினால் கட்டளையிட்டு நியமிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். (2) கர்த்தரின் கிருபையினால் நிகழ்ந்த கண்களால் காணமுடியாத உள்ளார்ந்த கிரியைகளை விளக்கும் அடையாளங்களாக, வெளிப்புறச் சாதனங்களாக இருக்க வேண்டும். (3) கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் திருச்சபை தொடர்ந்து நடைமுறையில் பின்பற்ற வேண்டிய சாதனங்களாக வேதத்தில் விளக்கப்பட்டிருக்க வேண்டும். (4) கடைசியாக, இவற்றைப் பெற்றுக்கொள்ளும் விசுவாசிகளின் விசுவாசத்தை உறுதிப்படுத்தி, பெலப்படுத்தும் முத்திரையாக வேதத்தில் விளக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த விளக்கங்களின் அடிப்படையில் திருமுழுக்கும், திருவிருந்தும் மட்டுமே இத்தகுதிகளைக் கொண்டிருப்பனவாக வேதம் போதிப்பதால் அவற்றை மட்டுமே சீர்திருத்த திருச்சபைகள் திருவருட்சாதனங்களாக ஏற்றுக்கொண்டன.
திருவருட்சாதனங்களின் விஷயத்தில் ரோமன் கத்தோலிக்க மதம் இன்னுமொரு பெருந்தவறையும் இழைத்தது. விசுவாசிகள் இவற்றின் மூலம் தகுந்த பலனை அடைய வேண்டுமானால் (1) திருத்தந்தையர் அதை சரியான முறையில் கொடுக்க வேண்டும் என்றும் (2) அப்படிக் கொடுக்கும் திருத்தந்தையரின் நோக்கங்கள் சரியானவையாக இருக்க வேண்டும் என்றும் விளக்கியது. திருவருட்சாதனங்களிலேயே கர்த்தரின் கிருபையும், வல்லமையும் இருப்பதாக கத்தோலிக்க மதம் போதிக்கிறது. சீர்திருத்தவாத கிறிஸ்தவர்களான நம்மால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், திருவருட்சாதனத்தைக் கொடுக்கும் போதகரில் கர்த்தரின் கிருபையும் வல்லமையும் தங்கியிருக்குமானால் அவற்றை நாம் பெற்றுக்கொண்டிருக் கிறோமா என்பதை நாம் ஒருநாளும் தெரிந்துகொள்ள முடியாது. வேதமோ, நாமே நம்மைச் சோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்து கிறது (1 கொரிந்தியர் 11:20-30). இதன் மூலம் திருவருட்சாதனங்களினால் நாமடையும் பலன்கள் நமது பக்திவிருத்திக்குரிய நோக்கங்களில்தான் தங்கியிருக்கின்றனவே தவிர அவற்றைக் கொடுக்கும் போதகர்களில் தங்கியிருக்கவில்லை என்பதை வேதம் தெளிவாக விளக்குகிறது. போதகர்கள் திருவருட்சாதனங்களை முறையாக தேவபயத்துடன் கொடுக்க வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில் வேதபோதனைகளைக் கவனத்தோடு பின்பற்ற வேண்டியதும் அவசியம். தகுந்த முறையில் அவற்றை நடைமுறையில் பயன்படுத்தாவிட்டால் கர்த்தரின் ஆசீர்வாதத்தை நாம் அவற்றால் அடைய முடியாது. அதேநேரம் கர்த்தர் தம்முடைய இறையாண்மையுள்ள சித்தத்தின்படி திருவருட் சாதனங்களைப் பயன்படுத்துகிறார் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
திருவருட்சாதனங்கள் அடையாளங்களாகவும், முத்திரைகளாகவும் இருக்கின்றன. இதைப் புரிந்துகொள்ள நாம் திருவருட்சாதனங்களின் தன்மையைக்குறித்து சிந்தித்துப் பார்ப்பது அவசியம். அடையாளமென்றால் அது ஏதோவொன்றை விளக்கும் ஓர் படம் என்பது அர்த்தம். அதாவது, நாம் கண்களால் பார்க்க முடியாததொன்றை விளக்கும் பார்க்கக்கூடிய ஓர் அடையாளம். நாம் விமான நிலையத்துக்குள் நுழையும்போது நமது விமானம் நிற்கும் பகுதியைக் காட்டும் அடையாளத்தை நாம் பார்க்க முடியும். அந்த அடையாளம், நாம் உடனடியாகக் கண்களால் பார்க்க முடியாத நமது விமானம் நிலையத்தின் எந்தப் பகுதியில் இருக்கிறதென் பதை விளக்கும் புறஅடையாளமாக இருக்கிறது. அந்த முறையில் திருவருட் சாதனங்கள் கர்த்தரின் கிருபையின் கிரியைகளை விளக்குவனவாக இருகின்றன.
அத்தோடு திருவருட்சாதனங்கள் முத்திரைகளாகவும் இருக்கின்றன. உதாரணத்திற்கு நாம் பல்கலைக்கழகங்களில் பெற்றுக்கொள்ளும் கல்விச் சான்றிதழை எடுத்துக்கொள்ளுவோம். அது நமது படிப்பை நாம் வெற்றி கரமாக முடித்துவிட்டோம் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கின்றது. அதில் நமது பெயர் இருக்கும். பல்கலைக்கழகத்தின் முத்திரை இருக்கும். துணை வேந்தரின் கையொப்பமும் இருக்கும். இவையெல்லாம் நாம் படிப்பை முடித்து பட்டம் பெற்றிருப்பதற்கான உறுதியான அத்தாட்சிகள். இந்த முறையில் கிறிஸ்துவிடம் இருந்து விசுவாசிகள் பெற்றுக்கொள்ளும் பலன்கள் மெய்யானவை என்பதை திருவருட்சாதனங்கள் உறுதிப்படுத்துகின்றன. அதனால்தான் திருவிருந்தின்போது நாம் விசுவாசத்துடன் அதில் கலந்து கொள்ள வேண்டியது அவசியம். அதில் நம்பிக்கையில்லாது கலந்து கொள்ளுகிறபோது நம்மேல் நாமே தண்டனையை வரவழைத்துக் கொள்கிறோம்.
திருவருட்சாதனங்கள் பற்றிய இந்த வினாவிடைகள் திருவருட்சாதனங்களை ‘உணரக்கூடிய‘ சாதனங்களாக விளக்குகின்றன. அவிசுவாசிகளைப் பொறுத்தவரையில் இவற்றின் மூலம் அவர்கள் எதையுமே உணரமுடியாது. “உணரக்கூடிய” என்ற பதம் எதை விளக்குகிறது என்பதைப் புரிந்து கொள்ளுவது அவசியம். இந்தத் திருவருட்சாதனங்களை நாம் பார்க்க முடியும்; காதால் அவை பற்றிக் கேட்டறியமுடியும்; தொட்டுணர முடியும்; சுவைத்துப் பார்க்க முடியும்; நாசியால் மணந்து பார்க்க முடியும். உணர்வு சம்பந்தமான இந்த ஐந்து காரியங்களையும் அநுபவிக்கக்கூடிய வகையில் திருவருட்சாதனங்கள் இருப்பதாலேயே அவற்றை ‘உணரக்கூடிய‘ சாதனங்கள் என்று வினாவிடை விளக்குகின்றது. கர்த்தர் நம்மை சரீரத்தோடு மட்டுமல்லாமல் ஆத்துமாவோடும் படைத்திருக்கிறார். அவரே புறஉல கோடு தொடர்புடைய திருவருட்சாதனங்கள் மூலம் ஆத்மீக பலன்களை நாம் அடையும் வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கிறார். இச்சாதனங்கள் மூலம் நாம் சுவிசேஷத்தால் அடையும் அதே பலன்களை அடைகிறோம். இவை நமக்குக் கண்களால் காணக்கூடிய பிரசங்கமாக இருக்கின்றன.
இறுதியாக, இத்திருவருட்சாதனங்கள் வெளிப்புறச் சாதனங்களாக மட்டும் இருந்துவிடுவதில்லை. ஒரு திருவருட்சாதனம், திருவருட்சாதனமாக இருக்கவேண்டுமானால் அதற்கும் உள்ளார்ந்த கிருபைக்கும் இடையில் தெய்வீக நியதிப்படி ஓர் உறவு ஏற்படுத்தப்பட்டிருக்கவேண்டும். நாம் ஏற்கனவே தந்த உதாரணத்தின்படி விமான நிலையத்தில் நமது விமானம் இருக்கும் பகுதியைக் காட்டும் அடையாளம் அந்தப் பகுதியில் குறிப்பிட்ட விமானம் இருக்கும¢வரையில்தான் பொருளுள்ளதாக இருக்கும். அந்த அடையாளம் அந்த விமானத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது. குறிப்பிட்ட விமானம் அப்பகுதியில் இல்லாதிருக்குமானால் அடையாளம் பொருளற்றதாகிவிடும். ஆகவே, திருவருட்சாதனங்கள் பொருளுள்ளவையாய் உள்ளார்ந்த ஆத்மீகத் தொடர்புள்ளவையாய் இருக்கின்றன. அவை ஆத்மீக உண்மையை விளக்குபவையாக இருக்கின்றன. அவை ஒருபோதுமே அர்த்தமற்றவையாக இருந்துவிட முடியாது. திருவிருந்துக்கு வருகிற எந்த விசுவாசியும் ஆசீர்வாதத்தையோ அல்லது தண்டனையையோ அடைந்தேயாக வேண்டும். விசுவாசிக்கு அர்த்தமற்றதாக அது ஒருபோதும் இருந்துவிட முடியாது.
அத்தோடு, ஓர் அடையாளத்தை அந்த இடத்திலிருந்து அகற்றிவிட்டால் அது குறிக்கும் பொருளோடு அதற்குள்ள தொடர்பு முறிந்து விடுகிறது. அதுபோலத்தான் ஒருவன் தனக்குத் தானே திருமுழுக்கு கொடுக்க முயற்சிப்பதும், தன் வீட்டிலேயே திருவிருந்தை நடத்தப் பார்ப்பதும். திருச்சபைக்கு வெளியில் அதோடு தொடர்பற்றதாக திருமுழுக்கையும், திருவிருந்தையும் பெற்றுக்கொள்ளப் பார்ப்பது வேதபோதனைகளுக்கெல்லாம் முரணானது. திருச்சபையிலிருந்து திருவருட்சாதனங்கள் பிரிக்கப்படும்போது அவை திருவருட்சாதனங்கள் என்ற பெயரை இழந்துவிடுகின்றன. திருச்சபை மக்களும், பிரசங்கமும் இல்லாத திருவருட்சாதனங்களால் எந்தப் பயனும் இல்லை. இவற்றை இனிவரும் வினாவிடைகளில் விபரமாகப் படிக்கப் போகிறோம்.