கிறிஸ்தவக் கோட்பாடுகள்

கேள்வி 99: திருமுழுக்கும், திருவிருந்தும் எவ்வாறு இரட்சிப்புக்கேற்ற திருவருட்சாதனங்களாகின்றன?

பதில்: திருமுழுக்கும், திருவிருந்தும் அவற்றில் காணப்படும் எந்த நற்பண்புகளினாலோ அல்லது அவற்றை வழங்குபவர்களில் காணப்படும் எந்த நற்பண்புகளினாலோ இரட்சிப்புககேதுவானவையாகாமல், கிறிஸ்துவின் ஆசீர்வாதத்தினாலும், பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளினாலும் விசுவாசத்தோடு அவற்றைப் பெற்றுக்கொள்ளுபவர்களுக்கு அவை இரட்சிப்புக்கேற்ற திருவருட் சாதனங்களாகின்றன.

(1 கொரிந்தியர் 3:6-7; 1 பேதுரு 3:21.)

இந்த வினாவிடைக்கான விளக்கம் நாம் கடந்த இதழில் (12:2) திருவருட் சாதனங்களுக்கு தந்த விளக்கத்தில் அடங்கியுள்ளது.

கேள்வி 100: திருமுழுக்கு (-ஞானஸ்நானம்) என்றால் என்ன?

பதில்: திருமுழுக்கு கிறிஸ்துவால் ஏற்படுத்தப்பட்ட புதிய உடன்படிக்கையின் திருவருட்சாதனமாகும். திருமுழுக்கைப் பெற்றுக்கொள்ளுகிற நபருக்கு அது கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல், அவரோடிணைக்கப்பட்டிருத்தல் ஆகியவற்றோடு பாவமன்னிப்புக்கும் அவர் தன்னைக் கிறிஸ்துவின் மூலமாகக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து, புதிய ஜீவனுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கும் அடையாளமாக இருக்கின்றது.

(மத்தேயு 28:19; ரோமர் 6:3-4; கொலோசெயர் 2:12; கலாத்தியர் 3:26-27.)

கேள்வி 101: யாருக்கு திருமுழுக்கு அளிக்க வேண்டும்?

பதில்: கர்த்தரிடம் மனந்திரும்புதலையும், இயேசு கிறிஸ்துவில் மேலான விசுவாசத்தையும் நம்பத்தகுந்த முறையில் எவரெல்லாம் அறிக்கையிடுகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே திருமுழுக்கு அளிக்க வேண்டும்; வேறு எவருக்கும் அது கொடுக்கப்படக்கூடாது.

(அப்போஸ்தலர் 2:38; 2:41; மாற்கு 16:16.)

விளக்கவுரை: திருவருட்சாதனங்களில் ஒன்றான திருமுழுக்கை நாம் புதிய ஏற்பாட்டிலேயே முதன் முறையாக வாசிக்கிறோம். பழைய ஏற்பாட்டில் இதைப் பற்றி நாம் வாசிப்பதில்லை. மத்தேயு 3:11ல் யோவான்ஸ்நானன் முதல் தடவையாக திருமுழுக்குக் கொடுப்பதாக வாசிக்கிறோம். மத்தேயு 3:6ன்படி யோர்தான் சமவெளியில் இருந்து அநேகர் யோவான்ஸ் நானனிடம் வந்து தங்களுடைய பாவத்தை அறிக்கையிட்டு திருமுழுக்குப் பெற்றுக்கொண்டனர். இந்தத் திருமுழுக்கு மனந்திரும்புதலின் திருமுழுக்காக இருந்தது. திருமுழுக்குப் பெற்றுக்கொண்டவர்களில் மனந்திரும்புதலுக்கான அடையாளங்களை யோவான்ஸ்நானன் எதிர்பார்த்து திருமுழுக்களித்திருக்கிறார் (மத்தேயு 3:8).

இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களுக்கு மத்தேயு 28:18-20ல் அளித்த கட்டளையில் மூன்று கடமைகளைச் செய்யும்படிக் கட்டளையிட்டார். (1) இரட்சிப்புக்குரிய போதனைகளை அளித்து சீடர்களை உருவாக்குங்கள். (2) பிதா, குமாரன் ஆவியானவரின் பெயரில் இரட்சிப்பை அடைந்தவர்களுக்கு திருமுழுக்குக் கொடுங்கள். (3) திருமுழுக்குப் பெற்றுக்கொண்ட சீடர்கள் கிறிஸ்துவின் வார்த்தைகள் அனைத்தி¢ற்கும் கீழ்ப்படியும்படி அவர்களுக்கு தொடர்ந்து போதியுங்கள். இயேசு கிறிஸ்துவிடம் இருந்து இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்கு பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது கிறிஸ்துவின் கட்டளையாக வேதத்தில் தரப்பட்டிருப்பதை மாற்கு 16:16 சுட்டிக்காட்டுகிறது: “விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான். . . ” என்றிருப்பதாக வாசிக்கிறோம். விசுவாசமுள்ளவன் ஞானஸ்நானம் எடுத்திருக்க வேண்டும் என்று இந்த வசனங்கள் எதிர்பார்க்கின்றன.

மனந்திரும்பி கிறிஸ்துவை தங்களுடைய இரட்சகராகவும், ஆண்டவராகவும் விசுவாசிக்கின்றவர்கள் மட்டுமே திருமுழுக்கு பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வேதம் போதிக்கின்றது. மனமாற்றம் அதாவது திருமுழுக்கை நாடி வருபவர்களிடம் கிறிஸ்துவில் விசுவாசத்தை மட்டுமே நாம் எதிர்பார்க்க வேண்டும் என்பது வேதபோதனை. இதை வலியுறுத்தும் இரண்டு சாட்சிகளாக முதலில், இயேசு கிறிஸ்து மத்தேயு 28ல் தன்னுடைய சீடர்களுக்கு கொடுத்த கட்டளையில் காண்கிறோம். இரண்டாவதாக, புதிய ஏற்பாட்டின் அநேக இடங்களில் திருமுழுக்குப் பெற்றுக்கொண்ட வர்களின் சாட்சிகளில் இருந்து அறிந்துகொள்ளுகிறோம். மனமாற்றம் அடைந்து கிறிஸ்துவை விசுவாசித்தவர்களுக்கு மட்டுமே புதிய ஏற்பாட்டில் திருமுழுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு உதாரணங்களாக அப்போஸ். 2:41; 8:12-13; 9:18; 16:14-15; 31-33 ஆகிய பகுதிகளைச் சுட்டிக்காட்டலாம். இந்தப் பகுதிகளில் மனமாற்றமடைந்தவர்களுக்கு (இரட்சிப்பை அடைந்த வர்கள்) மட்டுமே திருமுழுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுப்பது ஏன் தவறு என்பதை இனிவரப் போகும் வினாவிடைப் பாடங்களில் விபரமாகப் பார்க்கவிருப்பதால் அதை இந்த இதழில் விளக்கப் போவதில்லை. (கிறிஸ்துவில் இருக்க வேண்டிய) நம்பத்தகுந்த விசுவாசத்தை மட்டுமே நாம் ஆத்துமாக்களிடம் எதிர்பார்த்து அவர்களுக்கு திருமுழுக்கு அளிக்க வேண்டும் என்பது வேதபோதனை.

திருமுழுக்கு அளிக்கும்போது அதை எவர் பெயரில் அளிக்க வேண்டும் என்பதில் சிலர் முரண்படுகிறார்கள். இயேசு கிறிஸ்துவின் பெயரில் மட்டுமே அதை அளிக்க வேண்டும் என்று சிலர் வற்புறுத்துகிறார்கள். இது தவறான வாதம். வேதத்தின் சில இடங்களில் இயேசு கிறிஸ்துவின் பெயரில் அளிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதால் அது மத்தேயு 28ம் அதிகாரத்தில் கிறிஸ்து கொடுத்த கட்டளைக்கு எதிரானது என்று சிலர் எண்ணுவது வேதத்தை சரிவர விளங்கிக்கொள்ள வேண்டிய விதிகளை அறியாததால் எற்படும் கோளாறு தவிர வேறில்லை. மத்தேயு 28 மிகவும் தெளிவாக திரித்துவ தேவனாகிய கர்த்தரின் பெயரில் (பிதா, குமானன், ஆவி) திருமுழுக்கு அளிக்க வேண்டும் என்று விளக்குகிறது. கர்¢த்தர் திரித்துவ தேவன் என்பதை நிராகரிக்கும் சிலரும் இயேசு பெயரில் மட்டுமே திருமுழுக்கு கொடுக்க வேண்டும் என்பார்கள். திரித்துவப் போதனைகளை மறுதலிக்கிறவர்கள் கிறிஸ்தவ சுவிசேஷத்தை மறுதலிக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம்.

வினாவிடைப் போதனை திருமழுக்கு எதற்கு அடையாளமாக இருக்கின்றது என்றும் விளக்குகிறது. சுவிசேஷப் போதனைகளைத் தெளிவாக விளக்கும் அடையாளமாக அது இருக்கிறது. இது 1 கொரிந்தியர் 15:3-4 ஆகிய வசனங்களில் விளக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய பாவங்களுக்காக கிறிஸ்து சிலுவையில் மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, உயிர்த்தெழுந்தார். கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்டதை விளக்கும் ஒரே அடையாளமாக திருமுழுக்கு மட்டுமே இருக்கிறது. அதாவது, தண்ணீரில் கிறிஸ்துவை விசுவாசிக்கின்ற ஆத்துமாவை முழுக்கி எடுக்கிறதன் மூலம் மட்டுமே அதை விளக்க முடியும். இதையே ரோமர் 6:4 பின்வருமாறு விளக்குகிறது: “அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனே கூட அடக்கம் பண்ணப்பட்டோம்.” கொலோசேயர் 2:2, “ஞானஸ்நானத்தினாலே அவரோடுகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்து எழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.’ என்று விளக்குகிறது. திருமுழுக்கு கிறிஸ்து நமது பாவங்களுக்காகப் பூரணமாக மரணத்தைத் தழுவியதையும், அடக்கம் செய்யப்பட்டதையும், உயிர்த்தெழுந்ததையும் விளக்குகிற திருவருட்சாதனமாக இருக்கிறது.

வினாவிடைப் போதனை, திருமுழுக்கிற்கு தங்களை ஒப்புக்கொடுப்பவர்கள் அதை வேதஅறிவுடன் தூய நோக்கங்களுடன் செய்ய வேண்டும் என்று விளக்குகிறது. திருமுழுக்கை வெறும் சடங்காக எண்ணிப் பயன்படுத் தக்கூடாது. 1 பேதுரு 3:18¢ல் பேதுரு, ஞானஸ்நானமானது மாம்ச அழுக்கை நீக்குகிறதாயிருக்கவில்லை என்று விளக்குகிறார். வெறும் தண்ணீரால் ஒரு மனிதனின் இருதயத்திலுள்ள பாவத்தைக் கழுவிவிட முடியாது. கிறிஸ்து வின் திருஇரத்தத்தால் மட்டுமே அது நடக்க முடியும். ஆகவே, திருமுழுக்கு கிருபையின் செயலால் மனிதன் அடைகின்ற இரட்சிப்பின் அநுபவத்திற்கு அடையாளமாக இருக்கிறது. தன் பாவத்திற்கு மரித்து கிறிஸ்துவுக்குள் விசுவாசி புதிய ஜீவனுள்ள வாழ்க்கையைத் தொடங்கியிருப்பதை விளக்குவதாக திருமுழுக்கு இருக்கிறது. அப்போஸ். 8ல் எத்தியோப்பியன் கிறிஸ்துவை விசுவாசித்து திருமுழுக்கை நாடித், தான் ஞானஸ்நானம் பெறுவதற்கு தடையென்ன? என்று கேட்டபோது அவனுடைய விசுவாசத்தின் அடிப்படையில் பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். இரட்சிப்பின் அநுபவத்தைத் தங்களுடைய வாழ்க்கையில் அநுபவபூர்வமாக உணராதவர்களுக்கு திருமுழுக்கு எந்தப் பயனையும் தர முடியாது. இரட்சிப்பின் அநுபவத்தை நம்பத்தகுந்த முறையில் வெளிப்படுத்துபவர்கள் மட்டுமே அதற்குத் தங்களை ஒப்புக்கொடுக்க வேண்டும்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s