கிறிஸ்துவின் வழியில் திருச்சபை ஊழியம் – 3

வேத போதனைகளின்படி திருச்சபை இந்த உலகத்தில் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு வேதம் காட்டும் தவிர்க்க முடியாத விதிகளை இந்த ஆக்கத்தின் மூலம் விரிவாக ஆராய்ந்து வருகிறோம். கடந்த இதழில் முதலாவது விதியான, “திருச்சபைப் பணிகள் அனைத்தும் கர்த்தருடைய இறையாண்மையின் அடிப்படையில் அதற்குக் கட்டுப்பட்டு அமைய வேண்டும்” என்பதை விளக்கியிருந்தோம். கிறிஸ்து இயேசு ஆண்டு வருகின்ற சபை அவருடைய அதிகாரத்தின்படி, அவருடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அமைய வேண்டும் என்பதே இந்த விதியாகும். இனி நாம் இரண்டாவது விதியை ஆராய்வோம்.

(2) கர்த்தரின் வார்த்தை சகல அதிகாரத்தையும் தன்னில் கொண்டு அனைத்தின் மீதும் அதிகாரமுள்ளதும், சகலதுக்கும் போதுமானதாகவும் இருக்கின்றது என்பதே இரண்டாவது விதி.

சுவிசேஷத்தை அறிவித்து திருச்சபை அமைப்பாகிய மிஷன் ஊழியத்தில் ஈடுபடுகின்ற சபைகள் வேதம் பற்றிய இந்த நம்பிக்கை இல்லாமல் அந்தப் பணியில் ஈடுபட முடியாது. வண்டிகள் ஓடுவதற்கு பாதைகள் தேவை. அதே போல்தான் திருச்சபை அமைப்புக்கு வேதம் பற்றிய அசைக்க முடியாத நம்பிக்கைகள் அவசியம். வீடு கட்டுவதற்கு திட்டமிடும் என்ஜினீயர் அதற்கு வரைபடம் போடுவார். அந்த வரைபடத்தைக் கவனமாக வரைந்து அந்த அடிப்படையில் வீட்டைக் கட்டுவார். நமக்கு வரைபடம் வேதம்தான். வரை படத்தை மீறிக் கட்டடத்தைக் கட்டினால் கட்டிடம் உறுதியாக இருக்காது; சட்டரீதியானதாகவும் இருக்காது. பியானோ ஒன்றின் முன் நின்று அதை லாவகமாக இசைக்கின்றவர் தனக்கு முன்பாக இசை நோட்ஸை வைத்திருப்பார். அது அழகுக்காக வைக்கப்படவில்லை. அந்த நோட்ஸை மீறி அவர் பியானோ வாசித்தால் இசை இசையாக இருக்காது. நோட்ஸுக்கு ஏற்ப அதன்படியே இசை அமைய வேண்டும். அதே போல் தான் திருச்சபை ஊழியத்திற்கும் வேதம் பற்றிய உறுதியான நம்பிக்கைகள் அவசியம்; அந்நம்பிக்கைகளின்படி செயல்படுவதும் அவசியம்.

மேலே நாம் பார்த்த விதியை விளக்குகின்ற பல்வேறு வேதப் பகுதிகள் இருந்தபோதும் அவற்றில் முக்கியமானதொரு வசனத்தைப் பார்ப்பது அவசியம். 2 தீமோத்தேயு 3:16-17 வரையிலான வசனங்களில் பின்வரும் வாக்கியங்களை வாசிக்கிறோம். “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.”

முதலில், பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதிய நிருபத்தில் இந்த வசனங்கள் அமைந்திருக்கும் விதத்தை நாம் புரிந்துகொள்ளுவது அவசியம். இந்த வசனங்களை பவுல் எழுதுகின்ற வேளையில் அப்போஸ்தலப் பிரதிநிதியாகிய தீமோத்தேயு எபேசிய சபை நிர்வாகங்களைக் கவனித்துக் கொண்டிருந்தார். அந்த சபையில் தீமோத்தேயு நிர்வாகத்தை எப்படிக் கொண்டு நடத்த வேண்டும், சபை மக்களை எந்த முறையில் வழிநடத்த வேண்டும் என்பது பற்றிய விளக்கங்களை பவுல் இந்த நிருபம் முழுவதும் தந்திருக்கிறார். அவ்வாறாக சபையை நடத்திச் செல்லுகிற வேளையில் தீமோத்தேயு நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய முக்கிய உண்மை ஒன்று இருந்தது. அதையே பவுல் மேலே நாம் பார்த்த வசனங்களில் விளக்குகிறார். அதை விரிவாகச் சொல்லுவதானால் பின்வருமாறு விளக்கலாம். சபையை வழிநடத்தும் போதகனாக இருக்கின்ற தீமோத்தேயு அந்த சபைக்கு ஆதாரமாக இருக்கின்ற கர்த்தர் தந்திருக்கின்ற வார்த்தையின் தன்மையைப் பூரணமாக உணர்ந்திருந்து, அந்த வார்த்தையின் அடிப்படையில் சபை நடத்த வேண்டும் என்பதே பவுல் கொடுத்த ஆலோசனை. கர்த்தரின் வார்த்தை எத்தன்மையுள்ளதாக இருக்கின்றது என்பதை பவுல் விளக்கும் விதத்தை இனிப் பார்ப்போம். வேதத்தின் தன்மையை விளக்கும் பவுல் மூன்று உண்மைகளை இந்த வசனங்களில் ஆணித்தரமாகக் கூறுகிறார்.

(1) வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கின்றன.

(2) வேத வாக்கியங்கள் நமக்கு அவசியமான அத்தனைப் போதனைகளையும் தருகின்றன.

(3) ஒரு மனிதன் நற்போதகனாக இருந்து பணிபுரிவதற்குத் தேவையான அத்தனையையும் வேத வாக்கியங்கள் தரக்கூடியதாக இருக்கின்றன.

இந்த மூன்று உண்மைகளையும் நாம் நன்றாகப் புரிந்துகொள்வது அவசியம். ஏனெனில், கர்த்தரின் வார்த்தையின்படி திருச்சபைப் பணிகளை இந்த உலகத்தில் நடத்திச் செல்வதற்கு இந்த சத்தியங்கள் அவசியமாக இருக்கின்றன. அத்தோடு, கர்த்தரின் வார்த்தையை மீறாமல் சபைக் காரியங்களைக் கொண்டு நடத்துவதற்கும் இந்த உண்மைகள் நமக்கு உதவுகின்றன.

முதலில், ஆதியாகமம் முதல், வெளிப்படுத்தல் விசேஷம் வரையிலான வேதத்தின் அத்தனை நூல்களும் பரிசுத்த ஆவியானவரால் வேதத்தை எழுத்தில் வடித்த நூலாசிரியர்களுக்கு தரப்பட்டன. நூலாசிரியர்கள் கர்த்தர் சொன்னதை மட்டுமே எழுத முடிந்தது; தங்களுடைய சொந்த சிந்தனைகளை அவர்களால் வேதத்தில் புகுத்த முடியவில்லை. ஆரம்பம் முதல் இறுதிவரை பரிசுத்த ஆவியானவர் அவர்களில் இருந்து அவர்களைப் பயன்படுத்தி கர்த்தரின் வார்த்தையை எழுத்தில் வடித்தார். அந்த அடிப்படையில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய அவசியமான சத்தியம் வேதம் தவறுகளற்றது, குறைவில்லாதது, தெளிவுள்ளது, பூரணமானது என்பதாகும் (சங்கீதம் 19; 119).

இந்த உண்மைகளின் அடிப்படையில், விசுவாசிகளான நாம் வேதம் எந்தத் தவறுகளுமில்லாத பூரணமான கர்த்தரின் வார்த்தை என்பதை ஆணித்தரமாக விசுவாசிப்பது அவசியம். பழைய, புதிய ஏற்பாடுகளைக் கொண்ட வேதம் கர்த்தரின் சத்தியமான வார்த்தை. அவற்றில் எந்தவிதமான குளறுபாடுகளோ, மனித சிந்தனைகளோ, காலத்துக்குதவாத போக்குகளோ துப்பரவாகக் காணப்படவில்லை. அத்தோடு, அவற்றில் எந்தப் பகுதியாவது, அவை வரலாறாக இருந்தாலும் சரி அல்லது போதனைகளாக இருந்தாலும் சரி அல்லது பெயர்ப்பட்டியல்களாக இருந்தாலும் சரி, நமக்கு விளங்காததாகவும், தவறானதாகவும் தென்பட்டால் அதற்குக் காரணம் நமது அறிவுக் குறைவே தவிர வேதத்தில் எந்தத் தவறுமில்லை என்பதையும் நாம் ஆணித்தரமாக நம்ப வேண்டும். வேதத்தின் ஒரு பகுதியை ஏனைய பகுதிகளோடு ஒப்பிட்டு, உழைத்துப் படித்தால் அதன் போதனைகளைத் தெளிவாக எப்போதும் விளங்கிக்கொள்ள முடியும். வேதத்தில் நமக்கு வெளிப்படுத்தப்படாத எதுவும் இருந்தால் அதைக் கர்த்தர் நமக்கு வெளிப்படுத்த சித்தங்கொள்ளவில்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

வேதம் தவறுகளற்ற, தெளிவான, பூரணமான கர்த்தரின் வார்த்தை மட்டுமல்லாமல், அது நமக்குத் தேவையான அனைத்துப் போதனைகளையும் தருவதாகவும் இருக்கின்றது. சாதாரண மனிதனையோ, அல்லது தொடர்ந்து மாற்றமடைந்து அழிவை மட்டுமே நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் இந்த உலகத்தையோ சார்ந்து நிற்பதற்கு அவசியமில்லாது இந்த உலகத்தில் விசுவாசிகள் தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையைக் கொண்டு நடத்தவும், திருச்சபை சம்பந்தமான அனைத்துக் காரியங்களை நடத்திச் செல்லவும் அவசியமான அத்தனைப் போதனைகளையும் வேதம் தவறாது அளிக்கிறது. காலை உணவுக்கு இட்டிலி சாப்பிடுவதா? அல்லது தோசை சாப்பிடுவதா? என்பது போன்ற விஷயங்களைத் தீர்மானிப்பதற்கு மட்டும் நமக்கு சகல சுதந்திரத்தை தந்திருக்கின்ற கர்த்தர் நமது ஆத்மீக வாழ்க்கைக்கும், சபைக்கும் உரிய காரியங்களை எப்படி நடத்துவது என்பதைத் தம்முடைய தெளிவான வல்லமையுள்ள வார்த்தையின் மூலமே வெளிப்படுத்துகிறார். மேற்குறிப்பிட்ட காரியங்களுக்கான அத்தனைப் போதனைகளும் கர்த்தருடைய வார்த்தையில் காணப்படுகின்றன. இது வரை நாம் விளக்கியதிலிருந்து விளங்கிக் கொள்ள வெண்டிய உண்மையென்னவென்றால், கர்த்தரின் வார்த்தை சகலதுக்கும் போதுமானது என்பதுதான். அதாவது நமது ஆத்மீக வாழ்க்கைக்கும், திருச்சபை பற்றிய காரியங்களுக்கும், உலகம் பற்றிய காரியங்களுக்கும் வேதத்தை மட்டுமே நாம் நம்பியிருக்க வேண்டும்; வேதம் நமது சகல தேவைகளையும் தீர்த்து வைக்கும் வல்லமையைக் கொண்டிருக்கிறது. வேதம் மட்டுமே போதும், நமது ஆத்மீக, திருச்சபைத் தேவைகளுக்கு வேறு எதையும் நாட வேண்டிய அவசியமில்லை என்ற ஆணித்தரமான நம்பிக்கையில்லாதவர்கள் சுவிசேஷப்பணி மூலம் திருச்சபையைக் கர்த்தருடைய வழியில் அமைக்க முடியாது, நடத்தவும் முடியாது.

அடுத்ததாக, ஒரு சபைப் போதகன் ஊழியத்துக்குரிய தகுதிகளைக் கொண்டு நற்கிரியையுள்ள போதகனாக இருக்கவும், சகல இறையியல் அறிவைப் பெற்றுக்கொள்ளவும் வேதம் போதுமானதாக இருக்கிறது. அதாவது, போதகனுக்குத் தேவையான அனைத்து இறையியல் அறிவும் வேதத்தில் இருந்தே பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். வேதத்தில் இருந்து தன்னுடைய இறையியல் அறிவைப் பெற்றுக் கொள்ளுகிறவனே முழுமையான போதகனாக இருக்க முடியும். போதகனுக்கு அவசியமான அத்தனை வேத அறிவையும் தரக்கூடிய பூரணமான வார்த்தையாக கர்த்தரின் வேதம் அமைந்திருக்கிறது.

அப்போஸ்தலப் பிரதிநிதியாகிய திமோத்தேயு நற்போதகனாக இருந்து எபேசிய சபைக் காரியங்களை நடத்திச் செல்லுவதற்கு வேதத்தைத் தவிர வேறு எதிலும் தங்கியிருக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை. சபை ஆராதனை, சபை நிர்வாகம், சுவிசேஷப் பணி, போதக ஊழியப்பணி என்று சபை சம்பந்தமான அத்தனைக்கும் தீமோத்தேயுவுக்கு வேதம் மட்டுமே தேவையானதாகவும், போதுமானதாகவும் இருந்தது.

கர்த்தர் நமக்களித்துள்ள வேதம் பற்றிய இத்தகைய நம்பிக்கைகள் நம்மிடம் ஆணித்தரமாக இருக்க வேண்டியது அவசியம். இந்த நம்பிக்கைகளைக் கொண்டிராமல் நாம் சபை நிறுவுதலாகிய மிஷனரி வேலையில் ஈடுபடுவது தன் கையிலிருக்கும் துப்பாக்கியைப் பயன்படுத்தத் தெரியாமலும், அதில் நம்பிக்கை வைக்காமலும் போருக்குப் புறப்படும் போர்வீரனைப் போலாகிவிடும். அத்தகைய நிலைமையில் இன்று அநேகர் இருந்துவருகிறார்கள்.

இதுவரை வேதத்தைக் குறித்து நாம் பார்த்த சத்தியங்களிலிருந்து நாம் எதை அறிந்துகொள்ளுகிறோம்? வேதத்தின் அதிகாரத்திலும், போதுமான தன்மையிலும் உறுதியான, அசைக்க முடியாத நம்பிக்கையில்லாமல் சபை நிறுவும் பணியில் எவரும் ஈடுபட முடியாது என்ற உண்மையை அறிந்துகொள்ளுகிறோம். சபை அமைப்பு சம்பந்தமான அத்தனைப் பணிகளுக்கும் சாவி போல் அமைந்திருப்பது வேதமே.

வேத அதிகாரத்திலும், அதன் போதுமான தன்மையிலும் நம்பிக்கையில்லாதவர்கள்

வேத அதிகாரத்தில் நம்பிக்கையில்லாததால்தான் ஹெரல்ட் கேம்பிங் திருச்சபை அமைப்பில் நம்பிக்கையிழந்து, விசுவாசிகள் திருச்சபைகளை விட்டு விலகிவந்து வீட்டில் ஆராதனையில் ஈடுபட வேண்டுமென்று அமெரிக்காவில் போதித்து வருகிறார். கர்த்தரின் வார்த்தையை விசுவாசத்தோடு வாசித்து, கர்த்தரும், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் சபை மேல் வைத்திருக்கும் ஆழமான அன்பையும், மதிப்பையும் புரிந்து கொண்டிருப்பவர்களுக்கு திருச்சபைக்கெதிராகப் பேசவும் நடக்கவும் சிந்தனை வராது.

வேதம் போதிக்கும் திருச்சபை பற்றிய போதனைகளில் நம்பிக்கையில்லாததால்தான் ஜே. என், டார்பியும் (J. N. Darby), ஸ்கோபீல்டும் (Scofield) திருச்சபையில் நம்பிக்கை வைக்காமல் சுவிசேஷ ஊழியப்பணிகளை வித்தியாசமான வழிகளில் பார்க்கவும், செய்யவும் ஆரம்பித்தார்கள். கிறிஸ்து இயேசு தன்னுடைய சபையைப் பார்க்கும் கண்ணோட்டத்தில் இவர்களுக்கு சபையைப் பார்க்கத் தெரியவில்லை. வேத அதிகாரத்தை ஆத்துமாக்கள் புறக்கணிக்க ஆரம்பித்ததால்தான் பரா-சர்ச் ஸ்தாபனங்கள் என்று அழைக்கப்படும், கிறிஸ்தவ ஸ்தாபனங்கள் உலகெங்கும் தலைவிரித்தாட ஆரம்பித்தன; திருச்சபைப் பணிகளைக் கையிலெடுத்துக் கொண்டு சபையை அடிமைப்படுத்த ஆரம்பித்தன.

வேத அதிகாரத்திலும், அதன் போதுமான தன்மையிலும் அறிவும், நம்பிக்கையும் இல்லாவிட்டால் நம்மை ஆள ஆரம்பிப்பது பிரெக்மட்டிஸம் (Pragmatism) மட்டுமே. வேதத்தை நம்பியிருக்காமலும், அதன் வழிகளில் கவனம் செலுத்தாமலும் நமக்கும், எல்லோருக்கும் பிடித்தமானது எதுவோ அதன்படி நடப்பதே பிரெக்மட்டிஸப்போக்கு. யெரொபெயாம் தானிலும், பெத்தேலிலும் கர்த்தருக்கெதிராக ஆலயமெழுப்பிய பிரெக்மட்டிஸ்ட்டாக இருந்தான் என்பதைப் பழைய ஏற்பாட்டில் வாசிக்கிறோம். ஆராதனை விதிகளை சபை ஆராதனையில் கைக்கொள்ளாது, ஆத்துமாக்களுக்கு இசை விருந்தளித்தும், அவர்கள் ஆசைப்படுவதை செய்ய அனுமதித்தும் செயல்படுகிறவர்களும், திருச்சபை அமைப்பு, போதகப்பணி பற்றிய வேத போதனைகளை அலட்சியப்படுத்தி தானே தனக்கு இராஜாவாக தனி ஊழியத்தையும், ஸ்தாபனங்களையும் நடத்தி வருகிறவர்களும் பிரெக்மட்டிஸ்டுகளே. இவர்கள் வேத அதிகாரத்தில் நம்பிக்கை வைத்து செயல்படவில்லை. அதற்குக் கட்டுப்பட்டு நடக்கும் இருதயத்தைக் கொண்டிருக்கவில்லை.

தமிழ் இனத்தில் பிரெக்மட்டிஸம் இன்று நேற்றில்லாமல் தலைவிரித்தாடிக் கொண்டிருப்பதை நாம் உணராமலிருக்கிறோம். சாதிவழிச் சபைகள் நடத்துவதும், திருச்சபை அங்கத்துவத்தை சபையில் கடைப்பிடிக்காமலும், வேதபூர்வமான திருச்சபை அமைப்பை ஏற்படுத்தாமலும் சபை என்ற பெயரில் ஒரு கூட்டத்தை வைத்து சபைக்குரிய வேத இலக்கணங்களே நடைமுறையில் இல்லாமல் அதை நடத்துவதும், சபையில் சாதி பார்த்தும், தரம் பார்த்தும், வரதட்சனையை அனுமதித்தும் திருமணக்காரியங்களை நடத்துவதும் பிரெக்மட்டிஸப் போக்கிற்கான உதாரணங்கள். தமிழ் கலாச்சாரம் என்ற பெயரில் நம்மைப் பிடித்தாட்டும் இந்துப் பண்பாட்டில் இருந்து விலக மனமில்லாமல் கிறிஸ்துவின் பெயரைப் பயன்படுத்தி இந்துக்களைப்போல வாழ்ந்து வருகிற கூட்டங்கள் தங்களைச் சபைகள் என்று அழைத்துக் கொண்டாலும் கர்த்தரின் பார்வையில் சபைகளாக இருக்க முடியாது. கர்த்தரின் சபைக்குரிய வேத இலக்கணங்களைக் கொண்டிராத கூட்டம் எதுவுமே சபையாக இருக்க முடியாது. பிரெக்மட்டிஸத்தின் அடிப்படையில் நடந்துவரும் ஊழியங்களைச் திருச்சபை ஊழியங்களாக வேதம் எப்போதுமே அங்கீகரிக்கவில்லை. வேதத்தின் அதிகாரத்தை நிராகரிக்கும் பிரெக்மட்டிஸம் வேத அதிகாரத்திற்கு முதல் எதிரி என்பதை நாம் உணர வேண்டும். பிரெக்மட்டிஸ சிந்தனைகளையும், போக்கையும் தவிர்த்துக் கொண்டால் மட்டுமே நமக்கு விடிவு உண்டு.

வேத அதிகாரத்திற்கு தமிழினத்தில் இன்று இடமில்லாமலிருப்பதற்கான காரணங்கள்

(1) வேதத்தைப் பற்றிய வேதபூர்வமான சிந்தனைகள் அநேகர் மத்தியில் இன்னும் வளரவில்லை. – அதாவது, வேதத்தை மதிக்கின்ற அநேகர் இருந்த போதும் அவர்களுக்கு வேதத்தின் தன்மை, அதன் பயன்பாடு குறித்த வேதமே விளக்குகின்ற சத்தியங்களை அறியாதிருக்கிறார்கள்; அல்லது அறிந்திருந்தும் அவற்றை அலட்சியப்படுத்துகிறார்கள். இரட்சிப்பை அடைவதற்கான சுவிசேஷ செய்தியைத் தருவதற்கும், கர்த்தரைக் குறித்து தியானிப்பதற்கும் மட்டுமே வேதம் தரப்பட்டிருக்கிறது என்று எண்ணி வாழ்கிறவர்கள் தொகை நம்மத்தியில் அதிகம். இதற்குக் காரணம் திருச்சபைகளும், போதகர்களும் வேதத்தின் தன்மையைப் பற்றிய அவசியமான, ஆழமான அறிவை வளர்த்துக்கொள்ளாமல் அவற்றை ஆத்துமாக்கள் அறிந்துகொள்வதற்குத் தடையாக இருப்பதுதான். வேத அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு போதித்து, நடக்கின்ற போதகர்களின் தொகை தமிழினத்தில் மிகக்குறைவு. காளான்கள் போல் விடிவதற்கு முன் முளைத்து, வளர்ந்து, எவருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமலும், எந்தச் சபைத் தொடர்பும் இல்லாமலும் இருந்து வரும் தன்னார்வத் தனி ஊழியங்கள் வேத அதிகாரம் நம்மத்தியில் எந்தளவுக்கு நிராகரிக்கப்படுகிறது என்பதற்கு நல்ல உதாரணம். இன்று ஆத்துமாக்கள் வேதத்தின் அதிகாரத்தைப் பற்றியோ, அதன் போதுமான தன்மை பற்றியோ எந்த உணர்வும் இல்லாமல் வாழ்ந்து வருகிற அலங்கோலத்தை நாம் தமிழினத்தில் பார்க்கிறோம்.

(2) வேத போதனைகளின்படி அமைந்து வளரும் திருச்சபைகள் அரிதாகக் காணப்படுகின்றன. – வேத அடிப்படையில் திருச்சபைகள் அமைந்து வளருகிறபோது ஆத்துமாக்களுக்கு ஆழமான வேத அறிவு கிடைக்கிறது. வேத அடிப்படையில் அமைந்து வளரும் திருச்சபைகள் இல்லாத நிலைமையில் ஆத்துமாக்கள் வேத அறிவு இல்லாமல் சுய சிந்தனைகளின் அடிப்படையில் போலிக் கிறிஸ்தவ வாழ்க்கை நடத்த நேரிடுகிறது. நம் மக்கள் மத்தியில் வேதபூர்வமாக அமைந்து செயல்படும் சபைகளின் தொகை குறைவானபடியால் வேத அதிகாரத்துக்கு மதிப்புத் தருகிறவர்களின் தொகையும் குறைந்தே காணப்படுகிறது. தனி மனிதர் களின் குடும்பங்கள் ஆண்டாண்டுக்கும் சபைகளை சொந்த வியாபாரத்தைப் போல நடத்தி வருவதும், போலிப் போதனைகளை இனங்கண்டு அவற்றையும், அவற்றைப் போதிப்பவர்களையும் தம் மத்தியில் இருந்து அகற்றத் தெரியாது, சபை ஒழுங்கைக் கடைப்பிடிக்க வழிதெரியாது சபைகள் என்ற பெயரில் அநேக அமைப்புகள் இருந்து வருவதும், ஒழுக்கக் குறைவானவர்களும், பண ஆசை பிடித்தவர்களும் ஊழியத்தில் சாவகாசமாக நுழைந்து வாழ்க்கை நடத்தி வருவதும் எந்தளவுக்கு சபை ஊழியங்கள் கவலை தரக்கூடிய நிலைமையில் நம்மத்தியில் இருக்கின்றன என்பதை விளக்குகின்றன. வேதபூர்வமான திருச்சபைகள் குறைவாக இருப்பதும் ஆத்துமாக்கள் மத்தியில் வேத அதிகாரம் பற்றிய தெளிவான அறிவில்லாமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகின்றது.

திருச்சபை அமைப்புப்பணியும் வேத அதிகாரமும்

திருச்சபை அமைப்புப் பணியாகிய மிஷனரி ஊழியத்தைப் பற்றி ஆராய்ந்து வருகிற நாம், வேத அதிகாரத்துக்குட்படாமல் அந்தப் பணியில் ஈடுபட முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கர்த்தருக்கு மகிமையளிக்கும்படி, ஆவியின் ஆசீர்வாதத்தை நமது ஊழியம் அடைய வேண்டுமானால் அது வேத அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும். சாட்டுக்காக வேதத்தைக் கையிலெடுத்துக் கொண்டு நாம் விரும்பியபடியோ அல்லது உலகப்பிரகாரமாகவோ சபை அமைப்பதில் ஈடுபட்டால் அது கர்த்தருடைய வார்த்தையை மீறிய சுயநல நோக்கத்தில் அமைந்த ஊழியமாகவே இருக்கும்.

தவறுகளைத் தவிர்த்து மெய்யூழியத்தில் ஈடுபடுவதானால் முதலில் வேதம் பற்றிய நம்பிக்கைகளை நம்மில் நாம் வளர்த்துக் கொள்வது அவசியம். வேதத்தின் அதிகாரத்தை ஏற்று வேதம் சுவிசேஷப்பணி பற்றியும், சபை அமைப்புப் பணி பற்றியும் என்ன சொல்லுகிறது என்பதை ஆராய்ந்து அந்தப் போதனைகளுக்கு நாம் கட்டுப்பட வேண்டும். வேத போதனைகளை எதிர்த்து நடக்கும் இதயத்தைக் கொண்டிருக்கக் கூடாது. நமது சொந்த நோக்கங்களுக்கு வேதபோதனைகள் இடையூறாக இருப்பதுபோல் தென்பட்டால் நமது சுயநல நோக்கங்களை அழித்துக் கொள்ளுவது அவசியம். கர்த்தரின் வார்த்தை மெய்யானது, நிலையானது என்ற எண்ணத்தைக் கொண்டு அதற்கு அடிமையாக இருக்க முயல வேண்டும்.

சமீபத்தில் எங்களுடைய நியூசிலாந்து சபைக்கு வந்த சிலர் புதியதொரு சபை ஆரம்பிக்கும் எண்ணத்தோடு ஆலோசனை கேட்டார்கள். வேதத்தைத் திறந்து சபை அமைப்புக்கு இருக்க வேண்டிய தகுதிகளை சுட்டிக்காட்டி, அவை இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்கும்படி அவர்களைக் கேட்டேன். அப்பகுதிகளை ஆராய்ந்து பார்த்தபோது சபை அமைப்பதற்கான தகுதிகள் தங்களிடம் இல்லாததை அவர்கள் உணர்ந்தார்கள். ஆவிக்குரிய வரங்கள் இருந்தபோதும், முதலில் உள்ளூர் சபையில் இணைந்து, வளர்ந்து, பின்பு சபையை£கவே சபை அமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்பதை உணர்ந்தார்கள். தனி மனிதர்கள் சுய ஆர்வக் கோளாறால் தாம் நினைத்த விதத்தில் அப்பணியில் ஈடுபடக் கூடாது என்பதை உணர்ந்து எங்களுடைய சபையில் அங்கத்தவர்களாக சேருவதற்கு அனுமதி கேட்டார்கள். திருச்சபை அமைப்புக்கு அவசியமான அத்தனைப் போதனைகளையும் வேதம் தருகிறது என்றும், வேதம் நம்மேல் அதிகாரம் செலுத்தும் கர்த்தரின் வார்த்தையானதால் அதன் போதனைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் அவர்கள் நம்பியதால்தான் தங்களுடைய மனம்போன போக்கில் போகாது, சுய விருப்பத்தின் அடிப்படையில் நடக்காது சபைக்கு தங்களை ஒப்புக் கொடுக்க முடிந்தது. வேதம் பற்றிய இந்த நம்பிக்கைகள் திருச்சபை அமைப்பாகிய மிஷனரி ஊழியத்துக்கு அவசியமானது. இந்த நம்பிக்கைகளைக் கொண்டிராது அந்த ஊழியத்தில் ஈடுபடுவது நியாயாதிபதிகளின் காலத்தில் நிகழ்ந்ததைப் போல, அவனவன் தன்தன் மனம் போன போக்கில் நடப்பதற்கே வழிவகுக்கும். அதுவே இன்று தமிழினத்தில் தாராளமாக நடந்து வருகிறது.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s