கிறிஸ்துவின் வழியில் திருச்சபை ஊழியம் – 4

திருச்சபை இந்த உலகத்தில் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு வேதம் காட்டும் தவிர்க்க முடியாத விதிகளை இந்த ஆக்கத்தின் மூலம் ஆராய்ந்து வருகிறோம். இதுவரை இரண்டு முக்கிய விதிகளைக் கண்டிருக்கிறோம். (1) திருச்சபைப் பணிகள் அனைத் தும் கர்த்தருடைய இறையாண்மையின் அடிப்படையில் அதற்குக் கட்டுப்பட்டு அமைய வேண்டும் என்பது முதலாவது விதி. (2) கர்த்தரின் வார்த்தை சகல அதிகாரத்தையும் தன்னில் கொண்டு அனைத்தின் மீதும் அதிகார முள்ளதும், சகலதுக்கும் போதுமானதாகவும் இருக்கின்றது என்பது இரண்டாவது விதி. இனி நாம் சுவிசேஷ ஊழியத்தின் மூலம் திருச்சபை அமைக்கும் பணிக்கான மூன்றாவது விதியை ஆராய்வோம்.

(3) சுவிசேஷ ஊழியத்தில் திருச்சபையே அதிமுக்கியமானதும், அடிப்படையானதுமான இடத்தை வகிக்கிறது. சுவிசேஷ ஊழியங்கள் எப்போதும் திருச்சபையில் ஆரம்பித்து திருச்சபை அமைப்பதிலேயே போய் முடியவேண்டும்.

பிரதரனிசம் (Bretherenism), டிஸ்பென்சேஷனலிசம் (Dispensationalism), பினியிசம் (Finneyism), மற்றும் கிறிஸ்தவ ஸ்தாபனங்கள் (Para-church organizations) அனைத்தும் வேதபூர்வமான திருச்சபைக் கோட்பாடுகளற்ற ஒரு கிறிஸ்தவத்தை இந்நூற்றாண்டில் உலகத்துக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றன. அதாவது, கர்த்தருடைய திட்டங்களில் இந்த ‘இசங்கள்’ திருச்சபையை உன்னத இடத்தில் வைத்துப் பார்ப்பதில்லை. இந்த உலகத் தில் கிறிஸ்தவனுடைய ஒரே பங்கு சுவிசேஷம் சொல்லுவது மட்டுந்தான் என்ற நிலையை இந்தக் குழுக்கள் உருவாக்கியிருக்கின்றன. இதனால் பெயரளவில் ஓய்வுநாளில் ஆராதனைக்கென்று கூடுவதற்காக திருச்சபை என்ற பெயரில் இவர்கள் சாட்டுக்கு கூடிவருகிறார்களே தவிர திருச்சபை பற்றிய அத்தனை இறையியல் போதனைகளையும் உதாசீனப்படுத்திவிட்டு கிறிஸ்துவின் பெயரில் சுவிசேஷம் சொல்லுவதில் மட்டும் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருச்சபை எந்தளவுக்கு இன்று நிர்த்தாட்சண்யமாக இவர்களால் நிராக ரிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு ஹெரல்ட் கேம்பிங்கின் (Harold Camping) போதனைகள் நல்ல உதாரணம். அமெரிக்காவில் இருந்து ரேடியோ ஊழி யம் நடத்தி வரும் கேம்பிங் கர்த்தர் திருச்சபையை நிராகரித்துவிட்டதாக பகிரங்கமாகப் போதித்து வருகிறார். அத்தோடு, சிந்திக்கும் விசுவாசிகள் அனைவரும் திருச்சபைகளை விட்டுவிலகி வீடுகளில் இருந்து குடும்ப ஆராதனை மட்டும் செய்துவர வேண்டும் என்கிறார். போதகர்கள், உதவிக்காரர்கள், திருமுழுக்கு, திருவிருந்து எல்லாம் இனித் தேவையில்லை, சுவிசேஷம் மட்டும் சொன்னால் போதும் என்பது கேம்பிங்கின் போதனை. கர்த்தரின் அதிகாரம் கொண்ட வேதம் என்று ஒன்று இருக்கின்றதே என்ற நினைப்பே இல்லாமல் இத்தனை தைரியத்தோடு இந்த விஷம் போன்ற போதனைகளை கேம்பிங் போன்றவர்கள் கக்கி வருவதற்கு திருச்சபை இன்று இருக்க வேண்டிய நிலைமையில் இல்லாதிருப்பதுதான் காரணம்.

தமிழினத்தில் இன்று திருச்சபை

இக்காரணங்களால் தழினத்தில் திருச்சபை என்ற பெயரில் இருக்கும் குழுக்களையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் திருச்சபை பற்றிய எந்த ஞானமும் இல்லாதவர்களெல்லாம் சுவிசேஷத்தை சொல்கிறோம் என்ற பெயரில் எதையெதையோ செய்துகொண்டிருப்பதோடு வெறும் சாட்டுக்கு சபை என்ற பெயரில் கடைநடத்தி வருவதை எவரும் மறுக்க முடியாது. கேள்வி முறையில்லாமல் நினைத்தவர்களெல்லாம் தங்களைத் தாங்களே போதகர்களாக அறிவித்துக் கொண்டு சுவிசேஷம் சொல்லவும், சபை நடத்தவும் புறப்பட்டுவிடுகிறார்கள். கேள்வி கேட்பதற்கு ஒருவரும் இல்லை என்ற தைரியத்தில் இவர்கள் காரியமாற்றுவதால் இவர்களுடைய கட்டுப் பாடற்ற செய்கைக்குப் பலியாகி வருகிறவர்கள் அநேகர். தமிழினத்தில் இன்றைக்கு இத்தகைய ஊழியங்கள் குடிசைத் தொழில் போல் பரவியிருக்கின்றன.

எந்தவிதமான வேதக் கோட்பாடுகளும், கொள்கைகளுமில்லாது, தரமற்றவர்களைத் தலைவர்களாகக் கொண்டு ஊழியங்கள் என்ற பெயரில் நடந்துவரும் போலிக் கிறிஸ்தவத்தின் முகமே தமிழினத்தில் பெரிதாகத் தெரிகிறது. சீர்திருத்தவாதம் உலகில் தோன்றுவதற்கு முன்பு திருச்சபையின் நிலைமை உலகில் எப்படி இருந்ததோ அதே நிலைமையில்தான் இன்றைக்கு தமிழினத்து திருச்சபைகள் இருந்து வருகின்றன. வேத சத்தியங்களுக்கும், பரிசுத்தத்திற்கும் இவற்றின் மத்தியில் இடமில்லை. குடும்ப ஊழியமும், தனிநபரின் காட்டாட்சியும் சபைகளை வதைத்துக் கொண்டிருக்கின்றன. திருச்சபை அமைப்புப் பற்றிய வேத போதனைகள் வேதம் பூராவும் இருக் கின்றன என்ற நினைப்பே இல்லாது, குடும்பங்களும், கமிட்டிகளும், பிசப்பு களும், பிரசிடென்டுகளும் சபைகளை ஆண்டு வருகிறார்கள். டிவி இவேஞ்ச லிஸ்டுகளும், பிணி தீர்க்கும் ‘நவீன அப்போஸ்தலர்களும்’ சுவிசேஷம் விற்றுப் பணம் சம்பாதிப்பதில் மும்முறமாக ஈடுபட்டிருக்கிறார்கள். ஊழிய வாஞ்சையில் அநேகர் திரிவதால் திருச்சபை ஊழியத்தைவிடப் பணம் கொடுக்கும் இறையியல் கல்லூரி நடத்தும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களும் அநேகர். இத்தகைய எழுப்புதலற்ற, வேத வைராக்கியமற்ற, பாரம்பரியங்களுக்கும், சடங்குகளுக்கும், பண்பாட்டிற்கும், பணத்திற்கும் அடிமைப்பட்டிருக்கிற போலிக் கிறிஸ்தவம் உலா வரும் தமிழினத்தில் சத்தியத்தை அறிய வழி இல்லாது தவித்துக் கொண்டிருக்கும் ஆத்துமாக்கள் அநேகம். கர்த்தர் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் திருச்சபையை அடித்தளமாகக்கொண்டு வளராத எந்தக் ‘கிறிஸ்தவமும்’ இயேசு கிறிஸ்து வினுடைய கிறிஸ்தவமாக இருக்காது. திருச்சபை பற்றிய இறையியல் போதனைகளை வேதத்தில் இருந்து போதிக்கவும், பலரறிய அவற்றை வெளிப்படுத்தவும் வேண்டிய மாபெரும் சீர்திருத்தம் இன்று தமிழினத்தில் தேவைப்படுகிறது.

வேதம் போதிக்கும் திருச்சபை

கர்த்தர் தன்னுடைய திட்டத்தில் திருச்சபைக்கு மிக உன்னதமான உன்னதமான இடத்தைத் தந்திருப்பதாக வேதம் விளக்குகிறது. பழைய ஏற்பாடும் சரி, புதிய ஏற்பாட்டும் சரி கர்த்தரின் திட்டங்கள் அனைத்தும் திருச்சபையை முதன்மையாகக் கொண்டிருப்பதாகவே விளக்குகின்றன. முக்கியமாக புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து திருச்சபை பற்றித் தெளிவான விளக்கங்களைத் தந்திருக்கிறார். மத்தேயு 16, 18 போன்ற அதி காரங்களில் திருச்சபையைப் பற்றி அவர் கூறியிருக்கும் வார்த்தைகள் எந்தளவுக்கு ஓர் உயர்ந்த உன்னதமான இடத்தைக் கிறிஸ்து திருச்சபைக்கு அளித்திருக்கிறார் என்பதை உணர வைக்கின்றன. டிஸ்பென்சேஷனலிசக் கோட்பாட்டைப் பின்பற்றுபவர்கள் சுவிசேஷ நூல்களில் திருச்சபை பற்றிய போதனைகள் அதிகம் இல்லை, அதனால் அது யூதர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட போதனை என்று தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

மத்தேயுவில் இயேசுவின் வார்த்தைகளை ஒருமுறை வாசித்துப்பாருங்கள். சீமோன் பேதுருவுக்கு திருச்சபையைப் பற்றி விளக்கமளித்த இயேசு, “இந்தக் கல்லின் மேல் திருச்சபையை நான் கட்டுவேன். பாதாளத்து வாசல்களும் அதை மேற்கொள்வதில்லை” என்றார். அந்தளவுக்கு உயர்ந்த நிலையில் திருச்சபை இருக்கும் என்றும், அதை அழிக்கக்கூடிய, அதன் வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய சக்தி ஒன்றுக்கும் இல்லை என்பது அவரு டைய வார்த்தைகளின் பொருள். அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் இயேசு, பரலோகத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோ கத்தில் நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்தில் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்தில் நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்தில் கட்டவிழ்க்கப் பட்டிருக்கும்” என்றார். இந்த வார்த்தைகளின் பொருளை நாம் சரிவர விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியம். இங்கே இயேசு இந்த உலகத்தில் தான் கட்டப்போகின்ற திருச்சபையின் அதிகாரத்தை விளக்குகிறார். இந்த வார்த்தைகள் பேதுருவைக் குறித்த வார்த்தைகள் அல்ல. இதே வார்த்தை களை மத்தேயு 18:18லும் காணலாம். அங்கேயும் இயேசு தன்னுடைய திருச்சபையைப் பற்றியே 18:15-20 வரையுள்ள வசனங்களில் விளக்கமளித் திருக்கிறார். இந்த இருபகுதிகளுக்குமான முழு விளக்கத்தையும் தருவதற்கு இந்த ஆக்கத்தில் இடமில்லையானாலும், இயேசுவின் வார்த்தைகளின் முக்கிய அம்சத்தை மட்டும் விளக்குவது அவசியமாகிறது. இயேசுவின் வார்த்தைகளின்படி இந்த உலகத்தில் சுவிசேஷத்தை அறிவித்து அதன் மூலம் மனந்திரும்பி விசுவாசிக்கிறவர்களைக் கொண்டு சபை அமைக்கும் திருப்பணி திருச்சபைக்கே அளிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், அப்படிக் கட்டப்படுகிற திருச்சபையில் பரிசுத்தத்தைப் பாதுகாக்கிற அதிகாரமும் அதற்கே அளி¢க்கப்பட்டிருக்கிறது. ‘பரலோகத்தின் திறவு கோள்கள்’ என்ற இயேசு பயன்படுத்திய பதங்கள் திருச்சபைக்கு கர்த்தர் அளித்துள்ள ஆத்மீக அதிகாரத்தைக் குறிக்கின்ற வார்த்தைகள். இந்தளவுக்கு திருச்சபையை ஓர் உயர்ந்த, உன்னதமான அமைப்பாக இயேசு இந்த உலகத்தில் கட்டி வருகிறார்.

திருச்சபையின் மகிமையை விளக்கும் மேலும் சில வேதப்பகுதிகளையும் உதாரணமாகத் தரலாம். எபேசியர் முதலாம் அதிகாரத்தின் இறுதிப் பகுதியான 1:16-23 வரையுள்ள வசனங்களை சுருக்கமாகப் பார்ப்போம். இடைவிடாமல் எபேசிய திருச்சபை விசுவாசிகளுக்காக ஜெபித்துவரும் பவுல் அப்போஸ்தலன் இந்தப்பகுதியில் திருச்சபை பற்றிய அற்புதமான ஒரு சத்தியத்தை நமக்கு விளக்குகிறார். கர்த்தர் எந்தளவுக்கு தன்னுடைய குமாரனான இயேசு கிறிஸ்துவை உயர்த்தியிருக்கிறார் என்ற உண்மையே அது. அதுவும் என்ன நோக்கத்திற்காக அந்தளவுக்கு உயர்த்தியிருக்கிறார் என்பது நமது சரீரத்தில் இருக்கும் ரோமங்களையெல்லாம் சிலிர்த்தெழச் செய்யும் மாபெரும் சத்தியமாகும். பவுல் சொல்லுகிறார்,

“இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி, என் ஜெபங்களில் உங்களை நினைத்து, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்து கொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருள வேண்டுமென்றும், . . . . . வேண்டிக்கொள்ளுகிறேன். எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில் மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத் தக்கதாக, அவரை உன்னதங்களில் தம்முடைய வலது பாரிசத்தில் உட்காரும்படிச் செய்து, எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.”

இந்த வார்த்தைகளின் பொருளை நாம் சிந்தித்துப் பார்த்து விளங்கிக் கொள்ளுவது அவசியம். இவ்வசனங்கள் கர்த்தர், இயேசு கிறிஸ்துவுக்கு சகல அதிகாரத்தையும் தந்து அவருக்கு மேலாக எவரும் அல்லது எதுவும் இல்லாதபடியான இடத்தில் உயர்த்தி அமர்த்தியிருக்கிறார் என்று விளக்குவதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், அதைத் திருச்சபையின் பொருட்டு, திருச்சபையின் நன்மைக்காச் செய்திருக்கிறார் என்று விளக்குகிறது. “சரீரமான சபைக்கு” என்ற வார்த்தைகளை நாம் மூலமாகிய கிரேக்க இலக்கணத்தின்படி “சரீரமான சபையின் நன்மைக்காக” என்று தமிழில் வாசிக்க வேண்டும். கிறிஸ்துவுக்கு அந்தளவுக்கு உயர்ந்த ஸ்தானத்தைக் கர்த்தர் தந்தது திருச்சபையின் நன்மை கருதி என்ற உயர்ந்த, மகத்தான போதனையை இந்தப் பகுதி தருகிறது. அத்தோடு, எத்தனை இறையாண்மையுள்ள தேவனாகிய கிறிஸ்துவைத் தலைவராக திருச்சபை கொண்டிருக்கிறது என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இறை யாண்மையுள்ள இராஜாதி இராஜனாகிய கிறிஸ்து தலைமை வகித்து நடத்துகின்ற திருச்சபையை யாரால் அழிக்க முடியும்? அதன் எந்தத் தேவைதான் இந்த உலகில் நிறைவேற்றப்படாமல் போகும்? என்பதை நினைக்கும்போதே சரீரம் புல்லரிக்கின்றதல்லவா.

இதே எபேசியர் நூலில் இன்னுமொரு வேதப் பகுதியான 2:11-16, திருச்சபையின் மகிமையை விளக்கும்போது, கிறிஸ்துவைச் சாராதவர்களாகிய இஸ்ரவேலரையும், புறஜாதியாரையும் ஒன்றாக்கி, அவர்கள் மத்தியில் பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, அதைச் சிலுவையில் அழித்து அதனாலே இருபகுதியினரையும் தமக்குள்ளாக ஒரே புதியமனிதனாகச் சிருஷ்டித்து சமாதானம் பண்ணி ஒரே திருச்சபைக்கும் வாழும்படிச் செய்தார் என்கிறது. இது உலகத்தில், உலக வழிப்படி நடக்கக் கூடிய காரியமல்ல. உலகத்திலுள்ள மனிதர்களால் இத்தகைய சமாதனத் தோடு ஒருபோதும் வாழ முடியாது. ஒருவரில் ஒருவர் நிலையான, மெய் யான அன்பைக் காட்ட முடியாது. திருச்சபையில் மட்டுமே ஜாதி வித்தி யாசமில்லாமல், ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடில்லாமல், உ.யர்வு தாழ்வு பார்க்காமல் பிரிவினைக்கிடமில்லாமல் மனிதர்களால் இணைந்து வாழமுடியும். அத்தகைய வாழ்க்கையைக் கர்த்தர் தம்முடைய குமாரனின் சுவிசேஷத்தின் மூலம் உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறார். மனந்திரும்பிய மக்கள் திருச்சபையில் மட்டுமே மெய்யான ஒற்றுமையை அநுபவித்து வாழ முடியும். ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்த முடியாத ஒற்றுமையை உலக மக்களுக்கு தரக்கூடியது தேவனுடைய சபை மட்டுமே.

எபேசியர் 2:11&22 ஆகிய வசனங்களை எடுத்துக்கொண்டால் இப்பகுதியில் பவுல் மறுபடியும் திருச்சபையின் மகிமையை விளக்குவதைப் பார்க்கிறோம். 16ம் வசனம் யூதர்களும், புறஜாதியினருக்கும் இடையில் உள்ள பகை சிலுவையால் தீர்க்கப்பட்டிருப்பதையும், 20ம் வசனம் அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள் ஆகியோரின் அத்திவாரத்தைக் கொண்டு திருச்சபை கட்டப்பட்டிருப்பதையும், 22ம் வசனம் திருச்சபையே தேவனுடைய வாசஸ் தலமாயிருப்பதாகவும் பவுல் விளக்குகிறார்.

எபேசியர் 3:1-11 வரையுள்ள வசனங்கள் திருச்சபை பற்றிய இன்னுமொரு சத்தியத்தை விளக்குகின்றன. முக்கியமாக வசனங்கள் 9-11க் கவனிப்போம்.

“உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாய் இப்பொழுது தெரியவரும் பொருட்டாக, இயேசு கிறிஸ்துவைக்கொண்டு எல்லா வற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது.”

இந்தப் பகுதியை ஆரம்பம் முதல் கவனமாக வாசித்துப் பார்த்தால் இதில் பவுல் தனக்குக் கர்த்தரால் கொடுக்கப்பட்டுள்ள ஊழியத்தின் அருமையை விளக்குவதைப் பார்க்கலாம். இதுவரையும் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதாவது புறஜாதியாரும், யூதர்களும் கிறிஸ்துவால் விடுதலை அடைந்து ஒரே திருச்சபையில் இணைந்து வாழும் அற்புதமான இரகசி யத்தை சுவிசேஷத்தின் மூலமாக உலகெங்கும் அறிவிக்கின்ற புனிதமான ஊழியம் தனக்குக் கொடுக்கப்பட்டிருப்பதாக பவுல் அறிவிக்கிறார். யூதர்களையும், புறஜாதியாரையும் பற்றிய இந்த உண்மை பழைய ஏற்பாட்டில் வெளிப்படையாக விளக்கப்படவில்லை. புதிய ஏற்பாட்டுக் காலத்திலேயே அது சுவிசேஷத்தின் மூலம் எல்லோரும் அறிய அறிவிக்கப்பட்டது. இதை 6ம் வசனம் விளக்குகிறது. இதில் நம்மைப் புல்லரிக்கச் செய்யும் உண்மை என்னவெனில், சபையின் மூலமாக மட்டுமே நிதர்சனமாகத் தெரியவரும் இந்த இரகசியத்தை சுவிசேஷத்தினால் மூலம் மட்டுமே உலக மக்கள் அறிந்துகொள்ள முடியும் என்று பவுல் இப்பகுதியில் விளக்குகிறார். அந்தச் சுவிசேஷத்தை அறிவிக்கும் பணி தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதிலும் பவுல் பேரானந்தம் அடைகிறார். அதுமட்டுமல்லாது தேவ தூதர்களும் (உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும்) இதுவரை தெரிந்து கொண்டிராத, அவர்கள் அறிந்துகொள்ளத் துடித்துக்கொண்டிருக்கிற அந்த உண்மையை அவர்கள் திருச்சபையில் நடைமுறையில் பார்க்கக்கூடியதாக அமையப்போவதை பவுல் சுவிசேஷத் தின் மூலம் அறிவிக்கும் ஈவைப் பெற்றிருக்கிறார். இது மறுபடியும் திருச் சபையி¢ன் மகத்துவத்தை விளக்கும் பகுதியாக இருக்கிறது.

இன்னும் இரு வேதப்பகுதிகளை மட்டும் உதாரணமாகக் காட்ட விரும்புகிறேன். எபேசியர் 4:1-13க் கவனியுங்கள். இந்தப் பகுதியும் திருச்சபை பற்றிய ஆழமான சத்தியத்தை விளக்குகிறது. திருச்சபையில் காணப்படுகின்ற, வளர்க்க வேண்டிய ஒற்றுமையை இப்பகுதி விளக்குகிறது. அந்தப் போதனைக்கு மத்தியில் பவுல் திருச்சபை பற்றிய வேறொரு உண்மையையும் விளக்கிறார். மரித்து, உயிர்த்தெழுந்து, உயரெடுக்கப்பட்டு சகல அதிகாரங்களுடனும் இராஜாதி இராஜனாக வீற்றிருக்கும் இயேசு கிறிஸ்து தான் கொண்டு நடத்தும் திருச்சபையின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் தேவனாக இருந்து வருகிறார். அவரே திருச்சபை உலகில் நல்ல முறையில் இயங்கும் வகையில் அதன் நிர்வாகத்துக்குத் தேவையான சபை அதிகாரிகளைக் கொடுப்பவராக இருக்கிறார். இப்பகுதியில் 13ம் வசனம் அந்த அதிகாரிகள் யார் என்பதைத் தெரிவிக்கிறது. அவர்களில் இன்று திருச்சபையில் இருக்கும் அதிகாரிகள் மேய்ப்பர்களும், போதகர்களும் மட்டுமே. இந்தப் பதங்கள் போதகர்களை மட்டுமே குறிக்கும் ஒரே வார்த்தையாக மூல மொழியில் காணப்படுகின்றது. மனிதர்களாகிய நாமே திருச்சபையில் அத்தகைய போதகர்களை நடைமுறையில் நியமித்தபோதும், இயேசு கிறிஸ்துவால் அழைக்கப்பட்டு, வேத இலக்கணங்களைத் தங்களுடைய வாழ்க்கையில் கொண்டிருந்து, போதக ஊழியத்திற்கு தகுதி பெற்றவர்களை மட்டுமே திருச்சபை அப்பணியில் ஈடுபடுத்த வேண்டுமென்று திருச்சபையின் இராஜாவான கிறிஸ்து கட்டளையிட்டிருக்கிறார். கிறிஸ்துவே நேரடியாக அத்தகைய போதகர்களை சபைக்குக் காட்டித் தருகிறார். கிறிஸ்து எதிர்பார்க்கின்ற, வேதத்தில் தீமோத்தேயு, தீத்து போன்ற வேத நூல்களில் அவர் வெளிப்படுத்தியிருக்கின்ற, தவறாமல் போதகர்களுடைய வாழ்க்கையில் இருக்க வேண்டிய இலக்கணங்கள் காணப்படுகிறவர்கள் மட்டுமே கிறிஸ்துவால் சபைக்களிக்கப்படுகின்ற மெய்யான மேய்ப்பர்கள் என்பதை இப்பகுதி தெளிவாக விளக்குகின்றது.

திருச்பையின் மகிமையை விளக்கும் இறுதிப் பகுதியாக நான் உதாரணம் காட்ட விரும்பும் எபேசியர் 5:22-33 வரையுள்ள வசனங்களில் பவுல் குடும்பத்திற்கான போதனைகளை அளிக்கின்றபோது அதற்கு மத்தியில் கிறிஸ்து திருச்சபையாகிய தன்னுடைய மனவாட்டியின் மீது வைத்திருக்கும் அளப்பரிய அன்பையும், அவர் திருச்சபையின் தேவைகளை நிறைவேற்றிப் போஷிக்கும் விதத்தையும் அழகாகவும், ஆழமாகவும் விளக்குகிறார். கிறிஸ்துவுக்கும், திருச்சபைக்கும் இடையில் இருக்கும் பிரிக்கமுடியாத உறவை இந்தப் பகுதி அற்புதமாக விளக்குகிறது. இதுவரை நாம் பார்த்துள்ள வேதப் பகுதிகள் அத்தனையும் திருச்சபையின் மகிமையை விளக்குவதாக இருக்கின்றன.

திருச்சபையும் சுவிசேஷ ஊழியமும்

கர்த்தரின் திட்டத்தில் இத்தனை உன்னதமான இடத்தை வகிக்கும் திருச்சபைக்கே சுவிசேஷத்தை அறிவிக்கும் பணி கொடுக்கப்பட்டிருக்கிறது (மத்தேயு 28:18&20). உலகத்திலுள்ள வேறு எந்த அமைப்புக்கும் அந்தப் பணி கொடுக்கப்படவில்லை. சுவிசேஷத்தின் மூலம் இரட்சிப்புப்பெற்ற ஆத்துமாக்களைக் கொண்டு சபை அமைக்கும் பணியும் திருச்சபைக்கே உரியது. இந்தப் பணியைச் செய்வதற்குரிய அனைத்து உரிமையையும், தகுதிகளையும் கர்த்தர் திருச்சபைக்கே அளித்துள்ளார். கர்த்தரின் திட்டத் தில் இன்று திருச்சபைக்கு இடமில்லை என்று விளக்கும் டிஷ்பென்சேஷனலிசமும், திருச்சபையை விட்டு வெளியில் வந்துகூடி ஆராதிக்க வேண்டும் என்று கூறும் ஹெரல்ட் கேம்பிங் (Herold Camping) போன்றோரின் போதனையும், திருச்சபைக்கு மதிப்புக் கொடுக்காமல் தாம் நினைத்தபடி ஊழியங்களை நடத்திச் செல்லும் ஸ்தாபன ஊழியங்களும் (Para-church organizations) வேதபோதனைகளை நிராகரித்து கிறிஸ்து நேசிக்கும் திருச்சபைக்கு எதிராக நடந்து வருகின்றன.

திருச்சபைகள் நமது இனத்தில் வேதம் போதிக்கும் திருச்சபைகள் போல் அமைந்து நடந்துவராதபடியால்தான் திருச்சபையின் மகிமையையும், கர்த்தரை மகிமைப்படுத்தும் மெய் ஊழியங்களையும் நம்மத்தியில் காண முடியாதிருக்கின்றது. நம்மினத்திற்கு இன்று தேவை தேவனை மகிமைப்படுத்தும் திருச்சபைகளே. சுவிசேஷ ஊழியம் மிகவும் அவசியந்தான்; சுவிசேஷ ஊழியங்கள் வேதபூர்வமான திருச்சபைகள் அமைவதில் போய் முடியாத பட்சத்தில் அந்த ஊழியங்களால் கர்த்தருக்கு எந்த மகிமையுமில்லை. பாவிகள் மனந்திரும்ப வேண்டும் என்பதில் மட்டும் கர்த்தர் கண்ணாயிருக்கவில்லை; அவர்கள் திருச்சபையில் இணைந்து தான் போதிக்கின்ற அனைத்துப் போதனைகளின்படியும் வாழவேண்டும் என்று அவர் கட்டளையிட்டிருக்கிறார் (மத்தேயு 28). திருச்சபைக்கு தலைவராக இருக்கும் கிறிஸ்து அந்தத் திருச்சபையைத் தன்னோடு அழைத்துச் செல்லவே மறுபடியும் வரப்போகிறார். அந்நாள்வரை இந்த உலகத்தில் நமது பணி சுவிசேஷம் சொல்லி திருச்சபைகளை அமைத்து அவை வேதபூர்வமாக இருக்கும்படியாகவும், அவற்றின் மூலம் அனைத்து ஊழியங்களும் நடக்கும்படியாகவும் பார்த்துக்கொள்ளுவதுதான்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s