கேள்வி: “கிறிஸ்தவ சபை” என்ற பெயரில் ஒரு பிரிவு நம் நாட்டில் இருக்கிறது. அது மட்டுமே உண்மையான சபை என்று அவர்கள் கூறுகிறார்கள். அதன் அங்கத்தவர்கள் சபை ஆரம்பித்தால் கிறிஸ்துவின் பெயரில் மட்டுந்தான் ஆரம்பிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இதற்கு மத்தேயு 16:18 வசனத்தை உதாரணம் காட்டுகிறார்கள். இது எந்தளவுக்கு உண்மை என்பதை விளக்குவீர்களா? – இம்மானுவேல் எலியாஸ், தமிழ் நாடு.
பதில்: இந்த சபைப் பிரிவு பற்றியோ அதன் கோட்பாடுகள் பற்றியோ எனக்கு அதிகம் தெரியாது. ஓரளவுக்கு மட்டுமே இதைப்பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். இதே பெயரில் மேலை நாடுகளில் ஒரு சபைப் பிரிவு இருக்கிறது. ஆனால், அது ‘லிபரல்’ கோட்பாட்டைப் பின்பற்றும் பிரிவாகும்.
“கிறிஸ்தவ சபை” என்று தங்களை அழைத்துக்கொள்கிறவர்கள் அவர்க ளுடைய சபை மட்டுந்தான் மெய்ச்சபை என்று கூறுகின்றார்கள் என்றால் அது முழுத்தவறு. அமெரிக்காவில் லேன்ட்மார்க் பாப்திஸ்து சபைகள் (Landmark Baptists) என்று இருக்கின்றன. இவர்கள் தங்கள் சபைகள் மட்டுமே அப்போஸ்தலர்கள் காலத்தில் இருந்து தொடரும் மெய்ச்சபைகள் என்று சொல்லி ஏனைய சபைகளை சபைகளாகக் கருதாதது மட்டுமன்றி தங்களுடைய சபையில் இருப்பவர்களுக்கு மட்டுமே திருவிருந்தும் கொடுப்பார்கள். இதிலிருக்கும் ஆபத்து என்னவென்றால் கிறிஸ்துவை மெய்யாகவே விசுவாசித்து அவருக்கு சாட்சியாக இருக்கும் ஏனைய திருச்சபைகளை (Universal Church) இவர்கள் நிராகரிப்பது மட்டுமல்லாமல், இவர்களுடைய சபைக்கு வெளியில் இருக்கும் கிறிஸ்தவர்களையும் கிறிஸ்தவர்களாக இவர்கள் அங்கீகரிக்காமல் போவதுதான். வேதம் இத்தகைய எண்ணப்போக்கை வெறுக்கிறது. மெய்ச்சபைகள் போலிச்சபைகளோடுதான் உறவாடக்கூடாது, சமயசமரசப் போக்கில் போகும் சபைகளோடும் தொடர்பு வைக்கக்கூடாது. நிச்சயமாக வேத அதிகாரத்துக்கு தலைசாய்த்து செயல்பட மறுக்கும் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெடிக் கூட்டத்தோடு சேர்ந்து வாழ முடியாது. வேதத்தை நிராகரித்து மனித சிந்தனைகளின் அடிப்படையில் செயல்படும் சபைகளோடும் சேர்ந்து ஆராதிக்கவோ, உழைக்கவோ கூடாது. ஆனால், சுவிசேஷத்தை நம்பி விசுவாசித்து வேத அடிப்படையில் செயல்படும் எல்லா சபைகளையும் நாம் கர்த்தருடைய சபைகளாக அங்கீகரிக்க வேண்டும், அவர்களை சகோதரர்களாக எண்ண வேண்டும். அத்தகைய சபைகளோடு தொடர்பு கொண்டு அவர்களுக்காக ஜெபிப்பதும், சகோதரத்துவத்தில் இணைந்து வளர்வதும் அவசியம். ஒருபுறம் போலிகளோடு சேர்ந்து நாம் விசுவாசத் துரோகிகளாக மாறிவிடாமல் இருக்கவேண்டிய அவசியமிருக்கிறது; இன்னொருபுறம் மெய்ச்சபைகளோடு இணைந்து கர்த்தரை மகிமைப்படுத்த வேண்டிய கடமையும் இருக்கின்றது. நமது சபைகளை மட்டுமல்லாது கிறிஸ்து உலகம் முழுவதும் தம்முடைய சபைகளைக் கட்டிவருகிறார்.
அடுத்ததாக, உள்ளூர் திருச்சபைக்கு பெயர் வைக்கக் கூடாது என்றும் அப்படி வைத்தால் அது “கிறிஸ்து சபை” என்று மட்டுந்தான் இருக்க வேண்டும் என்ற கூற்றை ஆராய்வோம். இது கேட்பதற்கு நன்றாய் இருக்கிறது. ஆனால், நடைமுறைக்குப் பொருந்தாது. இப்படி சொல்பவர்கள் மத்தேயு 16:18 வசனத்தை உதாரணம் காட்டுவார்கள். ஆனால், அந்த வசனம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். இந்த வசனத்தில் காணப்படும் “சபை” என்ற வார்த்தை ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் சபையை மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இயேசு கட்டிவரும் சபைகளனைத்தை யும் ஒட்டுமொத்தமாகக் குறிக்கிறது. அத்தோடு, கிறிஸ்துவின் தெரிந்துகொள் ளப்பட்ட மக்களனைவரையும் இந்தப் பதம் குறிப்பதாகவும் எடுத்துக் கொள்வதில் தவறில்லை. இந்த வசனத்தின் மூலம் இயேசு தன்னுடைய பணி இந்த உலகத்தில் திருச்சபையைக் கட்டுவதுதான் என்றும், அந்தத் திருச்சபையை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்று மட்டுமே கூறுகிறார். இயேசு கட்டப் போகிற சபைகள் அனைத்தும் அவருக்கு சொந்தமானவை; அவராலேயே அவை கட்டப்படும். அதற்கு மேல் இந்த வசனத்தில் இருந்து எதையும் விளங்கிக்கொள்ள முயல்வது ஆபத்து. சபைக்குப் பெயர் வைப்பதற்கும் இந்த வசனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
சபைகளுக்கு “கிறிஸ்து சபை” என்று மட்டுந்தான் பெயர் வைக்க வேண்டும் என்று சொல்லுகிறவர்கள் புதிய ஏற்பாட்டு நூல்களை சுட்டிக்காட்டி கொரிந்துவில் இருந்த சபை கொரிந்துவிலிருந்த தேவனுடைய சபை என்றும் தெசலோனிக்கேயாவில் இருந்த சபை தெசலோனிக்கேயாவிலிருந்த தேவனுடைய சபை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆகவே, இக்காலத்து சபைகளும் அப்படித்தான் அழைக்கப்பட வேண்டும் என்கிறார்கள். அப்படியானால் எபேசுவில் இருந்த சபையைப்பற்றி பவுல் எழுதும்போது எபேசுவில் இருந்த தேவனுடைய சபை என்று எழுதாது, “எபேசுவிலே கிறிஸ்துவை விசுவாசிக்கும் பரிசுத்தவான்கள்” (எபேசி. 1:1) என்று மட்டுமே எழுதுகிறார். இதேபோல்தான் பிலிப்பு சபையைப் பற்றியும், கொலோசெ சபையைப் பற்றியும் எழுதியிருக்கிறார். இதைவைத்து நாம் தெசலோனிக்கேயாவிலும், கொரிந்துவிலும், கலாத்தியாவிலும் மட்டுந்தான் சபைகள் இருந்தன, மற்ற இடங்களில் எல்லாம் பரிசுத்தவான்கள் மட்டுந்தான் இருந்திருக்கிறார்கள் என்று விளக்கம் தரமுடியுமா? அப்படி விளக்கமளிப்பது அடிமுட்டாள் தனம். இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? இந்த உலகத்தில் கட்டப்படுகின்ற திருச்சபைகள் ஒவ்வொன்றிற்கும் பெயர் வைப்பது அவசியமா என்ற கேள்விக்கு வேதம் நேரடியாக பதிலளிக்கவில்லை என்று புரிகிறது. அப்போஸ்தலர் காலத்தில் ஆசியா மைனரில் உள்ளூர் சபைகள் இருந்தன என்பதற்கு தேவையான அனைத்து அடையாளங்களையும் வேதம் சுட்டிக் காட்டுகிறது. இடங்களின் பெயர்கள் தரப்பட்டிருக்கின்றன, சபைகளின் அமைப்பு, அதிகாரம், நிர்வாகம் பற்றிய விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன. அவைகள் உள்ளூர் சபைகள்தான் என்பதற்கான அத்தனை ஆதாரங்களும் வேதத்தில் இருக்கின்றன. அதற்கு மேலுள்ள விஷயங்களை நம்முடைய பொது அறிவையும், கிறிஸ்தவ ஞானத்தையும் பயன்படுத்தி நாம் அணுக வேண்டும் என்று வேதம் எதிர்பார்க்கிறது. உதாரணத்திற்கு, உள்ளூர் சபை எத்தனை மணிக்குக் கூடிவர வேண்டும், எத்தகைய கட்டிடத்தில் கூட வேண்டும், எத்தனை தடவைகள் ஓய்வுநாளில் ஆராதனை நடத்த வேண்டும், வார நாட்களில் திருச்சபை செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி யெல்லாம் வேதம் பட்டியலிட்டு விளக்கங்களை அளிக்கவில்லை. இதெல் லாம் மிகவும் அவசியம் என்பது நமக்குத் தெரியும். வேதத்தின் பொதுவான போதனைகளின் அடிப்படையில் பொது அறிவைப் பயன்படுத்தியே இந்த விஷயங்களில் நாம் முடிவெடுகிறோம்.
அதேபோல்தான் உள்ளூர் சபைக்கு பெயர் வைப்பதும். பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்காதவர்கள் இருக்கிறார்களா? பெயர் ஒரு மனிதனை அவன் யார் என்று உலகத்துக்கு அறிவிக்கிறது. நாடுகளுக்கு பெயர்கள் இல்லாமலா இருக்கிறது? இந்தியா என்பது நாட்டின் பெயராக இருப்ப தோடு அந்நாட்டின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் பெயர் இருந்து அவை அந்தந்த மாநிலங்களை அடையாளம் காட்டுகின்றன. அதுபோல் இன்றைக்கு கிறிஸ்துவின் பெயரை சூட்டிக்கொண்டு பிசாசின் கையாளாக இருக்கும் ரோமன் கத்தோலிக்க மதம், யெகோவாவின் சாட்சிகள், மோர் மன்ஸ், கிரிஸ்டொடொல்பியன்ஸ், கிரிஸ்டியன் சயன்ஸ் போன்ற பிசாசின் கூட்டங்களில் இருந்தும், செத்துப்போன பாரம்பரிய சபைகளில் இருந்தும், பெந்தகொஸ்தே இயக்கத்தில் இருந்தும் நமது சபைகளைப் பிரித்துக்காட்டுவதற்கு நாம் விசுவாசிக்கும் வேதபோதனைகளின் அடிப்படையில் அமைந்த நல்ல பெயர்கள் அவசியம். பெயர்களே எல்லாம் ஆகிவிடாவிட்டாலும், பெயர்கள் அந்தந்த சபைகளின் விசுவாசத்தை வெட்கமில்லாமல் வெளிப்படையாக அறிவிக்க உதவுகின்றன. வேதம் இதற்கு நிச்சயம் அனுமதி யளிக்கின்றது. எங்கள் சபைக்கு “சவரின் கிறேஸ் சீர்திருத்த பாப்திஸ்து சபை” என்று பெயர். இது வேதபூர்வமான பெயர்தான். “சவரின் கிறேஸ்” (Sovereign Grace) கர்த்தரின் இறையாண்மையைக் குறிக்கிறது. “சீர்திருத்த பாப்திஸ்து” (Reformed Baptist) என்ற பதங்கள் நாங்கள் எத்தகைய பாப் திஸ்துகள் என்று விளக்குகின்றன. இது அவசியம். ஏனெனில், பாப்திஸ்துகளிலும் வேதத்தின் அதிகாரத்தையும் அதன் போதனைகளையும் அசட்டை செய்து சமயசமரசப் போக்கைப் பின்பற்றும் பச்சோந்திகள் இருப்பதால் நம்மையும் நம்மோடு சார்ந்தவர்களையும் இவ்வாறு பிரித்து அடையாளம் காட்ட நேரிடுகிறது.
ஆதிசபைக் காலத்தில் இருந்த சபைகள் தொகை குறைவு. அத்தோடு அவை அனைத்துமே அப்போஸ்தலர்களின் கட்டுப்பாட்டிலும், அவர்களு டைய கண்காணிப்பிலும் இருந்தன. அதனால் சபைப் பெயர்களுக்கு இன்றிருக்கும் அளவுக்கு அவசியம் இருக்கவில்லை. முதல் மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு போலிப்போதனைகள் உலகில் மலிந்துவிட்டன. இன்று நம்மத்தியில் அவை தலைகால் இல்லாமல் திரிகின்றன. எனவே உள்ளூர் திருச்சபைகள் தம்மைத் தெளிவாக இனங்காட்டிக் கொள்ளுவதற்கும், பாதுகாத்துக் கொள்ளுவதற்கும் அவசியமாக இன்றைக்கு வேதபூர்வமானதொரு பெயரையும், விசுவாச அறிக்கையையும் கொண்டிருப்பது அவசியம். பெயரோடு மட்டும் இருந்துவிடாமல் அந்த பெயருக்கு களங்கம் வந்துவிடாத வகையில் அவர்களுடைய விசுவாசமும், போதனைகளும், சபையின் நடைமுறை வாழ்க்கையும் இருக்குமாறும் பார்த்துக்கொள்ள வேண்டும்.