சிக்கலான சில வேதப் பகுதிகள் – ஃபிரெட் சீபர்ட் (Fred Siebert)

வேதத்தில் விளங்கிக்கொள்வதற்கு கடினமான சில பகுதிகள் உண்டு. சிலர் அவற்றைக் குழப்பமான பகுதிகளாகவும், விளங்கிக்கொள்ளவே முடியாத பகுதிகளாகவும் கருதி அலட்சியப்படுத்திவிடுகிறார்கள். வேறு சிலர் அப்பகுதிகளுக்கு தவறான விளக்கங்களைக் கொடுத்துவிடுகிறார்கள். வேதத்தை எழுத்தில் தந்திருக்கும் கர்த்தரே விளங்கிக்கொள்வதற்கு கடினமானதாக இருக்கும் பகுதிகளையும் தந்துள்ளார். அவற்றை முறையாக, கவனத்தோடும் ஆவியின் துணையோடும் ஆராய்ந்து படித்தால் கர்த்தர் அவற்றின் மூலம் வெளிப்படுத்தும் சத்தியங்களை நாம் இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். அத்தகைய வேதப்பகுதிகளை வாசகர்களின் நன்மை கருதி ஆராய விருக்கிறோம். போதகர் ஃபிரெட் சீபர்ட் (Fred Siebert, Australia) இந்தப் பகுதிகளுக்கு விளக்கமளிக்கிறார்.

இந்த இதழில் ஆராய்வதற்கு நாம் எடுத்துக் கொண்டுள்ள வேதப் பகுதி அப்போஸ்தலர் பேதுருவின் முதலாவது நிருபத்தில் காணப்படுகின்றது.

ஏனெனில் கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினி மித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம் பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப் பேர் மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள். (1 பேதுரு 3: 18-20).

இந்தப் பகுதிக்கான விளக்கத்தை நாம் ஆராய்வதற்கு முன்பாக மார்டின் லூதர் இந்தப்பகுதிபற்றி சொன்ன வார்த்தைகளை நாம் மனதில் வைத்துக்கொள்வது நல்லது: “பேதுரு இந்தப்பகுதியில் எதை விளக்குகிறார் என்பதை நாம் அறியேன்.” என்றார் லூதர்.

கர்த்தர் மட்டுமே அனைத்தையும் அறிந்தவராக இருக்கிறார்

வேதத்திலுள்ள சில கடினமான பகுதிகளை நாம் அணுகும்போது அவற்றின் பொருள் நமக்கு விளங்காமற் போனால் அதற்காக நாம் மனந்தளர்ந்து விடக்கூடாது. நம்முடைய விசுவாசம் கர்த்தரின் வேதத்திலுள்ள அத்தனை இரகசியங்களையும் பூரணமாக அறிந்துவைத்திருப்பதில் தங்கியிருக்கவில்லை. வேதத்திலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் நமக்குப் பூரணமான அறிவு இராமற் போனாலும், நாம் விசுவாசிக்கின்ற கர்த்தருக்கு அனைத்தைப்பற்றியும் பூரணமான ஞானம் இருப்பதோடு நாமறிந்து கொள்ள அவசியமான அனைத்தைப்பற்றியும் தமக்குச் சித்தமான வேளையில் நாம் அறியத்தருவார்.

“மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம், செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.” (உபாகமம் 29:29)

இந்த வேதப்பகுதி எதை விளக்குகிறது?

இந்தப்பகுதியை ஆராய்ந்து அதற்கான விளக்கத்தை அளிக்கின்றபோது அந்த விளக்கம் வேதத்தின் வேறு எந்தப்பகுதி தரும் தெளிவான போதனைகளுக்கும் முரணாக இருந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது முதலாவது கடமையாகும். அந்த அடிப்படையில் பார்க்கின்றபோது, மனந்திரும்பாமல் இறந்துபோனவர்கள் இரட்சிப்பை அடைவதற்கு கர்த்தர் மறுபடியும் ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறார் என்ற போதனையை நாம் அடியோடு நிராகரித்துவிட வேண்டும். ஆபிரகாமின் மடியில் ஆறுதலடைந்துகொண்டிருந்த லாசருவைப் பார்த்த ஐசுவரியவான் இந்த உண்மையைக் காலந்தாழ்த்தியே அறிந்துகொண்டான்.

“அதுவுமல்லாமல் இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்கு கடந்து போகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான்.” (லூக்கா 16:26).

அத்தோடு இந்தப் பகுதியில் ரோமன் கத்தோலிக்க மதப்போதனையான, பரலோகத்திற்கும், இந்த உலகத்திற்கும் இடைப்பட்ட பேர்கட்டரி (Purgatory) என்ற இடத்தில் இறந்தவர்கள் தங்களுடைய பாவநிவாரணத்துக் காகக் காத்திருக்கிறார்கள் என்றப் போதனைக்கும் எந்தவிதமான இடமுமில்லை. அது தவறான போதனை. இறந்துபோனவர்களுடைய ஆத்துமாவின் நிலையைப் பற்றி அருமையாக 1689 விசுவாச அறிக்கையின் 31ம் அதிகாரத்தின் முதலாம் பகுதி பின்வருமாறு விளக்குகிறது.

“1. இறந்தபின் மனிதர்களின் சரீரம் மண்ணை அடைந்து அழுகிப்போகின்றன. ஆனால், அவர்களுடைய நித்தியமான ஆவிகள் இறக்காமலும், உணர்வற்ற நிலையை அடையாமலும், உடனடியாகத் தம்மைப் படைத்த கடவுளை அடைகின்றன. நீதிமான்களின் ஆவிகள் மரணத்தின்போது தங்களுடைய பரிசுத்தம் பூரணமடைந்து பரலோகத்தை அடைகின்றன. அங்கே அவர்கள் கிறிஸ்து வோடிருந்து, மகிமையின் ஒளியில் கடவுளின் முகத்தைப் பார்த்துக்கொண்டு, தங்களுடைய சரீரங்களின் முழு விடுதலைக்கான நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். கேடானவர்களின் ஆவிகள் நரகத்திற்கு தள்ளப்பட்டு கடுமையான இருளில் வேதனையை அநுபவித்து நியாயத்தீர்ப்பு நாளுக்காகக் காத்திருக்கின்றன. மனித சரீரங்களை விட்டகன்ற ஆவிகள் ஒன்றில் பரலோகத்திலோ அல்லது நரகத்திலோ இருக்கின்றன. வேதம் இவை தவிர்ந்த வேறு எந்த இடத்தைப் பற்றியும் போதிக்கவில்லை.”

வேதப்பகுதி அமைந்து காணப்படும் சந்தர்ப்பம்

அடுத்ததாக, இந்த வேதப்பகுதி அமைந்து காணப்படும் சந்தர்ப்பம் இதுபற்றி என்ன சொல்லுகிறது என்பதை நாம் ஆராய வேண்டும். வாழ்க்கையில் துன்பங்கள் ஏற்பட்டபோதும் அவற்றிற்கு மத்தியில் பக்தி விருத்தியுள்ள வாழ்க்கை வாழும்படி இப்பகுதியில் விசுவாசிகளுக்கு அறிவுறை கூறுகிறார் பேதுரு. கர்த்தர் அவர்களைப் பாதுகாக்கிறார் என்றும், துன்மார்க்கர்களைத் தகுந்தவேளையில் தண்டிப்பார் என்றும் அவர்களுக்கு ஊக்கமூட்டுகிறார்.

“கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமை செய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோத மாயிருக்கிறது.” (1 பேதுரு 3:12).

துன்மார்க்க வழியில் போய்க்கொண்டிருக்கிறவர்கள் இப்போது “. . . உங்களைத் தூஷிக்கிறார்கள்”. (1 பேதுரு 4:4) ஆனால், “உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் நியாயத்தீர்ப்புககொடுக்க ஆயத்தமாயிருக்கிறவருக்கு அவர்கள் கணக்கொப்பிவிப்பார்கள்.” (1 பேதுரு 4:5) என்கிறார் பேதுரு.

ஆகவே, விசுவாசிகள் இக்கொடிய உலகத்தில் சிறுதொகையினராக இருந்தபோதும், தொடர்ந்து அவர்கள் விசுவாச வாழ்க்கையை வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி நோவாவின் காலத்தைச் சுட்டிக்காட்டி ஊக்கமூட்டுகிறார் பேதுரு. நோவா கர்த்தரின் தண்டனையிலிருந்து தப்பியதைப் போலவே, துன்பங்களுக்கு மத்தியில் கர்த்தரை நம்பி வாழ்க்கிறவர்களும் அவருடைய தண்டனைக்கு உட்படமாட்டார்கள் என்கிறார் பேதுரு. அதேவேளை நோவாவைப் பழித்தும், இழித்தும் பேசியவர்கள் கர்த்தரின் தண்டனையை அநுபவித்ததுபோல, விசுவாசிகளுக்கு துன்ப மூட்டுபவர்களும் தண்டனையை அநுபவிப்பார்கள் என்பது பேதுருவின் போதனை.

நோவாவின் காலத்தைச் சுட்டிக்காட்டி, “நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா” (2 பேதுரு 2:5) தன்காலத்தில் விசுவாசமாக வாழ்ந்ததுபோல, “உங்களிடத்திலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல (நீங்களும்) எப்பொழுதும் ஆயத்ததமாயிருங்கள்.” (1 பேதுரு 3:15) என்று விசுவாசிகளுக்கு உணர்த்துகிறார் பேதுரு.

நோவாவின் மூலம் பேசிய கிறிஸ்து

நோவாவின் மூலம் இயேசு கிறிஸ்து நோவாவின் காலத்தில் பேசினாரா? என்று ஆச்சரியப்படுவது மட்டுமல்ல, அது உண்மையா? என்றுகூட நாம் சந்தேகப்படலாம். இப்போது சிறையிலிருப்பவர்களிடம் நோவாவின் காலத்தில் கிறிஸ்து தன் ஆவியின் மூலம் பேசியதாக இப்பகுதி விளக்குகிறது. அதாவது இப்போது சிறையிலிருக்கும் இவர்கள் சிறைப்படுத்தப்படுவதற்கு முன்னால் நோவாவின் காலத்தில் உயிரோடிருந்தபோது கிறிஸ்துவின் பிரசங்கத்தைக் கேட்டிருக்கிறார்கள் என்பது இப்பகுதியின் விளக்கம். கிறிஸ்து மரித்த அதற்குப்பின் உயிர்த்¢தெழுவதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இந்தப் பிரசங்கம் நிகழ்ந்ததாக நாம் பொருள்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

இங்கே நாம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வியொன்று உண்டு. உண்மையில் நோவாவின் மூலம் பிரசங்கம் செய்தது யார்? இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் மனிதனாகப் பிறப்பதற்கு முன்பாக கர்த்தருடைய பிரதிநிதியாக இருந்த அத்தனைத் தேவமனிதர்கள் மூலமும் பிரசங்கித்த கிறிஸ்துவின் ஆவியே அது. கீழ்வரும் வசனம் இதை விளக்குவதைப் பாருங்கள்.

“உங்களுக்குண்டான கிருபையைக்குறித்து தீர்க்கதரிசனஞ்சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைக்குறித்துக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனை பண்ணினார்கள்; தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது இன்ன காலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விஷேசம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள்.” (1 பேதுரு 1:10-11).

இந்த விஷயத்தைப்பற்றி பேதுருவின் இரண்டாம் நிருபம் 2:4-9 வரையுள்ள வசனங்கள் மேலும் விளக்கம் தருகின்றன. “பாவஞ்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து . . . அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.” என்கிறது இந்தப்பகுதி. இன்னொரு விதமாகக் கூறப்போனால், நோவாவின் காலத்தில் நோவாவின் பிரசங்கத்தையும், நோவாவின் மூலமாகப் பேசிய கிறிஸ்துவின் ஆவியின் செய்தியையும் நிராகரித்துவிட்டவர்களின் ஆவிகள் நியாயத்தீர்ப்பு நாளுக்காக சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள். பாவஞ் செய்த தூதர்களைப் போலவே இவர்களும் இறுதியில் எரியும் நரகத்தில் நித்தியத்துக்கும் அழிவை அநுபவிக்கும்வரை கட்டிவைக்கப்பட்டிருக்கிறார்கள். கீழ்வரும் யூதாவின் விளக்கத்தையும் வாசியுங்கள்.

“தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய, வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவைத்திருக்கிறார். அப்படியே சொதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப் போல் விபச்சாரம் பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து, நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.” (யூதா 6, 7).

மேலே நாம் தந்துள்ள விளக்கங்களின் காரணமாகத்தான் திருச்சபை வரலாற்றில் சிறப்புமிக்க அறிஞர்களாக இருந்த ஆகஸ்தீன், பியூரிட்டன் மேதையான ஜோன் ஓவன் ஆகியோர் இந்தப் பகுதி நோவாவின் மூலமாகப் பேசிய கிறிஸ்துவின் ஆவியைக் குறிப்பதாக விளக்கமளித்துள்ளார்கள்.

வேறு விளக்கங்கள் பொருந்திவருமா?

இதுவரை நாம் பார்த்துள்ள விளக்கம் மட்டுமே வேதத்தின் ஏனைய பகுதிகளிலுள்ள போதனைகளோடு பொருந்தி வரக்கூடிய விளகக்கமாகக் காணப்படுகின்றது. இருந்தபோதும் இந்த விளக்கம் மட்டுமே சரியானது என்று முரண்டுபிடிக்கக்கூடாது. முக்கியமாக, வேதத்தில் காணப்படும் விளங்கிக்கொள்ளக் கடினமான பகுதிகளை நாம் ஆராய முற்படும்போது நமது விளக்கத்தைவிட வேறு விளக்கங்களும் இருந்துவிடக்கூடும் என்பதை மனதில் வைத்துக்கொள்வது அவசியம். அத்தோடு, மார்டின் லூதர் சொன்தைப்போல இப்போதைக்கு இந்தப் பகுதிக்கான விளக்கம் எனக்குத் தெரியாது என்று இருந்துவிடுவதிலும் எந்தத் தப்பும் இல்லை. அப்படிச் சொல்லுவதன் மூலம் வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள வேறு எந்தத் தெளிவான போதனைக்கும் முரணாக நாம் நடந்துகொள்ளவில்லை.

பாவத்தில் வீழ்ந்த தூதர்கள்?

மேலே தந்த விளக்கத்தை மனதில் வைத்துக்கொண்டு இந்தப் பகுதிக்கான இன்னுமொரு விளக்கத்தை சுருக்கமாகப் பார்ப்பது அவசியம். ஒருசிலர், இப்போது சிறையிலிருக்கும் ஆவிகள் நியாயத்தீர்ப்பு நாளுக்காகக் கட்டிவைக்கப்பட்டிருக்கும் அவிசுவாசிகளாக இல்லாமலிருந்துவிட்டால் அவர்கள் பாவத்தில் வீழ்ந்த தூதர்களாக மட்டுந்தான் (Fallen Angels) இருக்க முடியும் என்று கூறுவார்கள். சிலுவையில் “எல்லாம் முடிந்தது” என்ற வார்த்தைகளைக் கூறியபிறகு மரித்த இயேசு கிறிஸ்து, அதற்குப் பிறகு நமது கண்களுக்குப் புலப்படாத ஆவியுலகிற்கு தன்னுடைய வெற்றியின் மகத்துவத்தை அறிவித்திருக்கலாம் என்று அவர்கள் விளக்கமளிக்கிறார்கள்.

முடிவாக

நாம் மதிக்கக்கூடிய ஒருசில வேத அறிஞர்கள், பேதுரு பாவத்தில் வீழ்ந்த தூதர்களை மனதில் வைத்தே இந்தப் பகுதியை எழுதியிருக்கிறார் என்று எண்ணியபோதும் சிறையிலிருக்கும் ஆவிகள் நோவாவின் காலத்திலும், அதற்குப் பின்பும் சுவிசேஷப் பிரசங்கத்தை நிராகரித்து மனந்திரும்ப மறுத்து மரித்து நியாயத்தீர்ப்பு நாளில் அடையப்போகும் தண்டனைக்காகக் காத்திருக்கும் அவிசுவாசிகளே என்ற விளக்கமே வேதத்தில் தரப்பட்டிருக்கும் ஏனைய அனைத்துத் தெளிவான பகுதிகளோடும் பொருந்தி வரக்கூடிய, முரண்பாடற்ற போதனையாகக் காணப்படுகிறது.

2 thoughts on “சிக்கலான சில வேதப் பகுதிகள் – ஃபிரெட் சீபர்ட் (Fred Siebert)

  1. #நீதிமான்களின் ஆவிகள் மரணத்தின்போது தங்களுடைய பரிசுத்தம் பூரணமடைந்து பரலோகத்தை அடைகின்றன. அங்கே அவர்கள் கிறிஸ்து வோடிருந்து, மகிமையின் ஒளியில் கடவுளின் முகத்தைப் பார்த்துக்கொண்டு, தங்களுடைய சரீரங்களின் முழு விடுதலைக்கான நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். கேடானவர்களின் ஆவிகள் நரகத்திற்கு தள்ளப்பட்டு கடுமையான இருளில் வேதனையை அநுபவித்து நியாயத்தீர்ப்பு நாளுக்காகக் காத்திருக்கின்றன.#

    ஏற்கனவே பரிசுத்தவான்களின் ஆவிகள் பரலோகத்திற்கும் துன்மார்கர்களின் ஆவிகள் நரகத்திற்கும் சென்றிருந்தால் எதற்கு மீண்டும் நியாயத்தீர்ப்பு….?

    Like

    • இந்த உலகத்தில் வாழ்கிறபோது கர்த்தரை விசுவாசிக்க ம றுத்ததற்காக நரகத்தில் இருப்பவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு துன்பத்தை அனுபவிக்கிறார்கள். அதேபோல் விசுவாசிகள் பரலோகத்தில் ஆசீர்வாதமாக வாழ்கிறார்கள். இருந்தபோதும் பொதுவான ’இறுதி நியாயத்தீர்ப்பு’ என்று ஒன்றிருக்கிறது. அது கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது நிகழும். இந்த நியாயத்தீர்ப்பின்போதே அனைத்தும் முடிவுக்கு வரும். இந்த நாளில் நிகழ வேண்டிய பல காரியங்கள் இருக்கின்றன. அவையனைத்தும் ஒரேநேரத்தில் சடுதியாக நிறைவேறும். (1). பரலோகத்திலும், நரகத்திலும் ஆவிகளாக மட்டும் இருப்பவர்கள் சரீரத்தோடு எழுப்பப்படுவார்கள். (2). இந்த உலகத்தில் அப்போது உயிரோடு இருப்பவர்களும் இவர்களோடு இ ணைந்து நியாயத்தீர்ப்பை எதிர்கொள்வார்க ள். இதுவே பொதுவான நியாயத்தீர்ப்பு. (3). அன்றைய தினம் விசுவாசிகள் அனைவரும் அவர்களைத் துன்புறுத்தியவர்கள் முன்னிலையில் நீதிமான்களாக அறிக்கையிடப்பட்டு ஆவியும், சரீரமுமாய் புதிய பரலோகத்தில் நித்தியத்துக்குமாய்ப் பிரவேசிப்பார்கள். (4). அன்று அவிசுவாசிக ள் அனைவரும் எல்லோர் முன்னிலையிலும் தண்டிக்கப்பட்டு ஒருசேர ஆவியும் சரீரமுமாய் அக்கினிக் கடலுக்குள் நித்திய துன்பத்தை அனுபவிக்க அனுப்பப்படுவார்கள். (5). இந்நாளில், தொடர்ந்திருந்து வந்திருக்கும் பாவ உலகம் விடுவிக்கப்பட்டு, சீரமறைக்கப்பட்டு புதிய உலகமாக விசுவாசிகள் வாழுமிடமாக மாற்றப்படும். இது இப்போதிருக்கும் உலகத்தைப்போல இருக்காது. (ரோமர் 8). இங்கே ஆண்டவரோடு விசுவாசிகள் வா ழ்வார்கள். இதுவரை நான் விளக்கியதெல்லாவற்றையும் வேதத்தின் பல பகுதிகளில் வாசிக்க முடியும். இப்போதைக்கு சுருக்கமாகவே பதிலளிக்க முடிகிறது.

      Like

Leave a Reply to Ezhil Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s