வேதத்தில் விளங்கிக்கொள்வதற்கு கடினமான சில பகுதிகள் உண்டு. சிலர் அவற்றைக் குழப்பமான பகுதிகளாகவும், விளங்கிக்கொள்ளவே முடியாத பகுதிகளாகவும் கருதி அலட்சியப்படுத்திவிடுகிறார்கள். வேறு சிலர் அப்பகுதிகளுக்கு தவறான விளக்கங்களைக் கொடுத்துவிடுகிறார்கள். வேதத்தை எழுத்தில் தந்திருக்கும் கர்த்தரே விளங்கிக்கொள்வதற்கு கடினமானதாக இருக்கும் பகுதிகளையும் தந்துள்ளார். அவற்றை முறையாக, கவனத்தோடும் ஆவியின் துணையோடும் ஆராய்ந்து படித்தால் கர்த்தர் அவற்றின் மூலம் வெளிப்படுத்தும் சத்தியங்களை நாம் இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். அத்தகைய வேதப்பகுதிகளை வாசகர்களின் நன்மை கருதி ஆராய விருக்கிறோம். போதகர் ஃபிரெட் சீபர்ட் (Fred Siebert, Australia) இந்தப் பகுதிகளுக்கு விளக்கமளிக்கிறார்.
இந்த இதழில் நாம், விசுவாசிகள் விழுந்துபோகலாம் அல்லது இரட்சிப்பை இழந்துபோகலாம் என்று விளக்குவதுபோல் தோற்றமளிக்கின்ற ஒரு முக்கிய வசனத்தை ஆராயப்போகிறோம்.
“ஏனெனில், ஒருதரம் பிரகாசிக்கப்பட்டும், பரம ஈவை ருசி பார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும் மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்பு தற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்.” (எபிரேயர் 6:4-6).
விசுவாசிகள், தங்களுடைய இரட்சிப்பை இழந்துவிடுவார்களா இல்லையா என்பது பற்றி இந்த உலகத்தில் வாழ்கிறபோது நிச்சயமாக அறிந்துகொள்ள முடியாது என்று சில சபைகள் போதிக்கின்றன. ஆனால், 1689 விசுவாச அறிக்கையும் வரலாற்று சிறப்புமிக்க ஏனைய விசுவாச அறிக்கைகளும் விசுவாசிகள் கிறிஸ்துவால் பாதுகாக்கப்படுவார்கள் என்றும், கிறிஸ்து தன்னுடைய எந்த ஆட்டையும் இழந்துவிடமாட்டார் என்றும் விளக்குகின்றன.
“கடவுளால் திட்ப உறுதியாய் அழைக்கப்பட்டு, பரிசுத்த ஆவியினால் பரிசுத்தமாக்கப்பட்டு கடவுளால் கிறிஸ்துவுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களே பரிசுத்தவான்கள். தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் அனைவருக்கும் உரித்தான அரிதான விசுவாசத்தை கடவுள் அவர்களுக்குக் கொடுத்துள்ளார். அத்தகைய ஆசீர்வாதங்களை அடைந்தவர்கள் கிருபையின் ஸ்தானத்திலிருந்து முழுதாகவோ அல்லது இறுதியிலோ விழமுடியாது. ஆனால், அவர்கள் நிச்சயமாக இறுதிவரை விடாமுயற்சியுடன் கிருபையின் தொடக்கத்திலிருந்து நித்திய ஜீவனை அடைவார்கள். ஏனெனில், அவர்களை அழைத்து ஈவுகளைத் தந்த கடவுள் ஒருபோதும் மனம்மாற மாட்டார். இதன் விளைவாக அவர்களில் அவர் நிலைபேறான வாழ்விற்கு இட்டுச் செல்லும் விசுவாசம், மனந்திரும்புதல், அன்பு, மகிழ்ச்சி, நம்பிக்கை ஆகியவற்றோடு ஆவியின் அனைத்துக் கிருபைகளையும் தொடர்ந்து தோற்றுவிப்பதோடு அவற்றை ஊட்டி வளர்க்கவும் செய்கிறார். அநேகப் புயல்களும் வெள்ளங்களும் அவர்களைத் தாக்கினாலும் விசவாசத்தின் மூலம் அவர்கள் உறுதியாக நிறுவப்பட்டிருந்த தளத்தின் மீதிருந்தும் கல்லின் மீதிருந்தும் ஒருபோதும் அவர்களை அசைக்க முடியாது. அவநம்பிக்கை, பிசாசின் ஆறுதல் என்பவற்றிலிருந்து அவர்களை வழிதவறிப் போகச் செய்தாலும் மாறாக் கடவுள் தொடர்ந்தும் அவர்களுடைய கடவுளாக இருப்பதோடு அவர்கள் கிறிஸ்துவால் விலைகொடுத்து வாங்கப்பட்ட தங்களுடைய உடைமையை அனுபவிக்கும்வரை கடவுள் தன்னுடைய வல்லமையால் அவர்களைப் பாதுகாத்து இரட்சிப்பார். ஏனெனில், அவருடைய உள்ளங்கையில் அவை செதுக்கப்பட்டிருப்பதோடு அநாதிக்கால முதலே அவர்களுடைய பெயர்கள் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.” (1689 விசுவாச அறிக்கை, 17:1).
விசுவாச அறிக்கையை எழுதிய நமது சீர்திருத்தவாத பெரியவர்கள் பின்வரும் வேத வசனங்களின் அடிப்படையிலேயே மேற்குறிப்பிட்ட விளக்கத்தைத் தந்திருக்கிறார்கள்.
“என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவி கொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின் செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப் போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையில் இருந்து பறித்துக்கொள்ளுவதுமில்லை.” (யோவான் 10:27-29).
“மரணமானாலும் ஜீவனானாலும், தேவ தூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்த சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சியித்திருக்கிறேன்.” (ரோமர் 8:38-39)
“நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ் சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார். நம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.” (1 கொரிந்தியர் 1:8-9).
“நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்.” (பிலிப்பியர் 1:6).
மேலே நாம் பார்த்த வசனங்களுக்கு எதிரானவை போலத் தோற்றமளிக்கும் கீழ்வரும் வசனங்களை எவ்வாறு விளங்கிக் கொள்வது? என்று இனி ஆராய்வோம்.
“சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால் பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.” (எபிரேயர் 10:26-27).
“கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும். அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையைவிட்டு விலகுவதைப் பார்க்கிலும் அதை அறியா திருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.” (2 பேதுரு 2:20-21).
இந்த வசனங்களைப் பார்க்கும்போது நாம் ஒன்றை மட்டும் நிச்சயமாக நம்பலாம். அதாவது, கர்த்தருடைய வார்த்தை ஒருபோதும் தன்னில் முரண்பாடான போதனைகளைக் கொண்டிருக்காது. ஆகவே, வேதத்தின் எந்தவொரு பகுதிக்கும் நாமளிக்கும் விளக்கம் வேதத்தின் இன்னொரு பகுதியில் தரப்பட்டுள்ள போதனைக்கு முரணானதாக இருக்கக் கூடாது.
எபிரேயர் 6:4-6க்கான விபரமான விளக்கம்
இந்தப் பகுதியில் ஆத்மீக வாழ்க்கையில் மிக மோசமாக வீழ்ந்துபோய் மனந்திரும்பி மீளமுடியாத நிலையிலிருப்பவர்களைப் பற்றி வாசிக்கிறோம்.
“ஏனெனில், ஒருதரம் பிரகாசிக்கப்பட்டும், பரம ஈவை ருசி பார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும் மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்பு தற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்.” (எபிரேயர் 6:4-6).
வேதத்தின் ஏனைய பகுதிகளோடு தொடர்புபடுத்தி இந்த வசனத்தை ஆராய்ந்து பார்க்கிறபோது பாவத்தில் வீழ்ந்துவிட்ட விசுவாசிகளைக் குறித்து இது விளக்குவதாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதை அறிகிறோம். ஏனெனில், பெரும் பாவத்தைச் செய்த தாவீது தன்னுடைய பாவத்துக்காக வருந்தி மனந்திரும்ப முடிந்தது. 2 சாமுவேல் பின்வருமாறு விளக்கமளிக்கிறது.
“அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார்.” (2 சாமுவேல் 12:13).
அப்போஸ்தலனான பேதுரு இயேசு கிறிஸ்துவை மூன்று முறை மறுதளித்தான் என்று வேதத்தில் வாசிக்கிறோம். இருந்தபோதும் அவனும் மனந்திரும்ப முடிந்தது. யோவான் சுவிசேஷத்தில் விசுவாசிகளை நோக்கி யோவான் பின்வருமாறு கூறுகிறார்:
“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவஞ் செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்கு கிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது. (1 யோவான் 1:9-2:1)”
இவ்வுண்மைகளைப் பார்க்கும்போது, எபிரேயர் 6:4-6 வரையிலான வேதப்பகுதி விசுவாசிகள் பாவத்தில் விழுவதைப் பற்றி விளக்கவில்லை என்பதை உணர முடிகிறது. இந்தப் பகுதியில் விளக்கப்படும் மனிதன் இயேசு கிறிஸ்துவை அறவே நிராகரித்து, விசுவாசத்தை முற்றாக நிராகரித்துவிட்ட நிலைமையில் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. உலகத்தோற்றத்திற்கு முன்பே தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் இப்படியான காரியம் நிகழ்வது சாத்தியமா? என்று எவராவது கேட்டால் அதற்கு பதில் “நிகழவே முடியாது” என்பதுதான்.
“தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேரானவராயிருக்கும் பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார். எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.” (ரோமர் 8:29-30).
விசுவாசிகளைப்போல வெறுந் தோற்றமளிப்பவர்கள்
ஒரு பொருளைப் போலத் தோற்றமளிக்கும் விதத்தில் கவனத்தோடு தயாரிக்கப்பட்ட போலிப்பொருள், மூலப்பொருளைப் போன்ற அடையாளங்களைத் தன்னில் பெருமளவில் கொண்டிருக்கும். எந்தளவுக்கு ஒரு மெய்யான விசுவாசியைப் போலப் போலி விசுவாசி தோற்றமளிப்பான் என்று வேதம் விளக்கமளிக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்தால் விதைக்கிறவனுடைய உவமை நமக்கு இந்த விஷயத்தில் துணை செய்கிறது. இந்த உவமையில் இயேசு நான்குவிதமான மனிதர்கள் கூட்டத்தைப் பற்றி விளக்குகிறார். அவர்களில் ஒரு வகையினரே மெய்யான விசுவாசிகள். அதாவது, தங்களுடைய வாழ்க்கையில் கனி கொடுக்கிறவர்களே மெய்யான விசுவாசிகள். அதேவேளை, இந்த நான்கு வகையினரில் இரண்டு வகையினர் மெய்யான விசுவாசிகளைப் போலத் தோற்றமளிக்கும் கூட்டத்தாராக இருப்பதைப் பார்க்கிறோம். மாற்கு சுவிசேஷத்தில் கீழ் வரும் வசனங்களை வாசியுங்கள்.
“அப்படியே வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும், தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருக்கிறார்கள், வசனத்திநிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள். வசனத்தைக் கேட்டும் உலகக் கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப் பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலனற்றுப் போகிறார்கள்.” (மாற்கு 4:16-19).
சுவிசேஷ செய்தியின் மூலம் இவர்கள் உண்மையிலேயே விழிப்படைந்துவிட்டதாக சொல்லுமளவுக்கு இவர்களில் பல நல்ல அடையாளங்களைப் பார்க்க முடிகிறது. ஆனால், இவர்கள் இயேசுவை விசுவாசிக்கவே இல்லை என்பதை உவமை தெளிவாக விளக்குகிறது.
இதைத்தவிர இன்னொரு வகையினரைப் பற்றி இயேசு மத்தேயு 7ல் தன்னுடைய மலைப்பிரசங்கத்தில் விளக்கியிருக்கிறார். இவர்கள் பரிசுத்த ஆவியின் வல்லமையால் அற்புதங்களைச் செய்யும் ஆற்றலைப் பெற்றிருந்தார்கள். இருந்தபோதும், அவர்கள் மெய்யாகவே தன்னை ஒருபோதும் விசுவாசிக்கவில்லை என்பதை இயேசு இப்பகுதியில் தெளிவாக விளக்கியிருக்கிறார்.
“அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.” (மத்தேயு 7:22-23).
மேலே நாம் கவனித்த வேத விளக்கங்கள் பற்றிய ஞானம் நமக்கில்லாமலிருந்திருந்தால், எபிரேயர் 6:4-6 வரையுள்ள பகுதிகள் விசுவாசிகளைப் பற்றித்தான் விளக்குகிறது என்று நாம் தவறாக எண்ணிக் கொண்டிருந்திருப்போம். இன்று அநேகர் இந்தத் தவறைச் செய்து வருகிறார்கள். இதுவரை நாம் பார்த்த விளக்கங்களின் அடிப்படையில் எபிரேயர் நிருபத்தை எழுதியவர் யூதாசு இஸ்காரியோத்து போன்ற மனிதர்களைப் பற்றித்தான் இந்தப் பகுதியில் விளக்கமளிக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளுகிறோம். யூதாசு ஏனைய அப்போஸ்தலர்களோடு இணைந்து ஊழியத்தில் ஈடுபட்டு பிரசங்கம் செய்து, அற்புதங்களும் செய்து வந்திருந்தபோதும் இறுதியில் கிறிஸ்துவை ஒருபோதுமே விசுவாசிக்கவில்லை என்பதை அறிந்து கொள்ளுகிறோம். தன்னுடைய ஊழியத்தின் ஆரம்ப காலத்திலேயே இயேசு யூதாசைப் “பிசாசு” என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். காலம் செல்லச் செல்ல உண்மையில் யூதாசு எப்படிப்பட்டவன் என்பதை எல்லோரும் தெரிந்துக்கொண்டார்கள்.
“இயேசு அவர்களை நோக்கி: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்து கொள்ளவில்லையா? உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார்.” (யோவான் 6:70).
இரண்டு முக்கியமான கேள்விகள்
இந்த ஆக்கத்தை முடிப்பதற்கு முன்பாக இரண்டு முக்கிய கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டியது அவசியம். முதலாவதாக, போலிகள் மெய்க்கிறிஸ்தவர்களைப் போன்ற அடையாளங்களோடு உலவி வருவார்களானால் ஒரு விசுவாசி, தான் மெய்விசுவாசிதான் என்பதையும் ஏனையோர் விசுவாசிகளா, இல்லையா என்பதையும் எப்படி நிச்சயித்துக்கொள்ள முடியும்? இரண்டாவதாக, மெய்விசுவாசிகள் ஒருபோதுமே பாவத்தை உணர்ந்து மனந்திரும்ப முடியாதளவுக்கு விழுந்துபோக முடியாதெனில், வேதத்தில் விழுந்துபோவது பற்றிய கடுமையான எச்சரிக்கைகள் ஏன் தரப்பட்டிருக்கின்றன?
முதலாவது கேள்வியான விசுவாசிகளின் நிச்சயத்துவம் பற்றிய கேள்விக்கு இந்தப் பகுதியில் நாம் விரிவான பதிலைக் கொடுக்க முடியாதிருந்தாலும் ஒருவர் விசுவாசியா? இல்லையா? என்பதை அறிந்துகொள்ள உதவும் இரு முக்கிய பகுதிகளை வேதத்தில் இருந்து உதாரணம் காட்ட விரும்புகிறேன். மெய் விசுவாசிகளுடைய ஆத்மீகக் கனிகளின் மூலம் அவர்களை நாம் அடையாளங் கண்டுகொள்ள முடியும். மெய்யான மனந்திரும்புதல் ஒரு மனிதன் பரிசுத்த வாழ்க்கை வாழ்வதற்கான வல்லமையைக் கொடுக்கும். இதைக் கீழ்வரும் வசனங்கள் விளக்குகின்றன.
“ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.” (மத்தேயு 7:20).
“ஆவியின் கனியோ, அன்பு சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் இப்படிப் பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.” (கலாத்தியர் 5:22-23).
அடுத்ததாக, மெய்விசுவாசிகள் தங்களுடைய பரிசுத்த வாழ்க்கையில் விடாமுயற்சியோடு முன்னேறிச் செல்வார்கள். விசுவாசத்தை முற்றாக நிராகரிக்கிறவன் மெய்யான விசுவாசத்தை ஒருபோதுமே கொண்டிருக்கவில்லை என்பதைத் தான் வெளிப்படுத்துகிறான். கீழ்வரும் வசனம் அதையே சுட்டிக்காட்டுகிறது. “அவர்கள் நம்மைவிட்டு பிரிந்து போனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்து போனார்கள்.” (1 யோவான் 2:19).
இரண்டாவது கேள்விக்கான பதிலை ஆராயும்போது, விசுவாசியின் இறுதி நிலையை மட்டுமல்லாது அந்நிலைக்குப் போகும் பாதையில் விசுவாசி எடுத்து வைக்க வேண்டிய ஒவ்வொரு படியையும் கர்த்தர் தீர்மானித்திருக்கிறார் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். தன்னுடைய மக்கள் அந்தப் பாதையில் செல்லுவதற்கு அவசியமான அனைத்தையும் கர்த்தர் சில சாதனங்களைக் கொண்டு செய்து வருகிறார். அப்படியாக, அவர் பயன்படுத்துகிற சில சாதனங்களைக் கவனிப்போம்.
அ. கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள்
“தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி, இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும் பொருட்டு, மகாமேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அருளப்பட்டிருக்கிறது.” (2 பேதுரு 1:3-4).
ஆ. கர்த்தருடைய தகப்பனுக்குரிய சிட்சை
“அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்திற்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.” (எபிரேயர் 12:10).
இ. கர்த்தருடைய அவசியமான எச்சரிக்கைகள்
“இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.” (1 கொரிந்தியர் 10:11-12)
முடிவாக
எபிரேயர் நிருபத்தை எழுதியவர் 6ம் அதிகாரத்தின் இறுதிப்பகுதியில் விசுவாசிகள் இறுதிவரை எச்சரிக்கையோடும், கவனிப்போடும் விசுவாச வாழ்க்கையை நடத்தவேண்டும் என்றும், அதில் கவனக்குறைவாகவோ, சோம்பேரித்தனத்தோடோ இருந்துவிடக்கூடாது என்றும் போதிக்கிறார். இந்த அதிகாரத்தை அவர் பின்வரும் ஆலோசனையைத் தந்து முடிவுக்குக் கொண்டு வருகிறார்.
“பிரியமானவர்களே, நாங்கள இப்படிச் சொன்னாலும், நன்மையானவைகளும் இரட்சிப்புக்குரியவைகளுமான காரியங்கள் உங்களிடத்தில் உண்டாயிருக்கிறதென்று நம்பியிருக்கிறோம். ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே. நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து, உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாக்கும்படி நீங்கள் யாவரும் முடிவு பரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்க வேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம். (எபிரேயர் 6:9-12).