திருச்சபை வரலாறு

மறுமலர்ச்சிக் காலம்

வரலாற்றில் பதினாறாம் நூற்றாண்டு சபை சீர்திருத்தம் ஆரம்பிப்பதற்குத் துணையாக இருந்த பல காரணிகளில் முதன்மை வாய்ந்தது மறுமலர்ச்சியே (Renaissance). மறுமலர்ச்சி இயக்கம் ஆத்மீகம் சம்பந்தமான இயக்கமல்ல. இருந்தபோதும் இது ரோமன் கத்தோலிக்க உயர்பீடத் தலைவர்களால் ஏற்படுத்தப்பட்டிருந்த பாரம்பரிய எண்ணங்கள், கட்டுப்பாடுகளில் இருந்து சீர்திருத்தவாதிகள் விடுதலை அடையும்படி அவர்களை சிந்திக்க வைத்து சீர்திருத்தத்திற்கு அவர்களைத் தயார்செய்தது. மறுமலர்ச்சி என்ற வார்த்தைக்கு மறுபிறப்பு என்பது எழுத்துபூர்வமான அர்த்தம். இது நவீன காலத்தின் ஆரம்பப்பகுதியில் இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளின் இலக்கியம், கலை ஆகியவற்றில் ஏற்பட்ட விழிப்புணர்வு, எழுப்புதலைக் குறிப்பதாக இருந்தது. இக்காலத்தில் புதிது புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனைகள் உருப்பெற்றன. கடல் கடந்து சென்று நாடுகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற உந்துதல் பலருக்கு இருந்தது. அறிவியலில் வளர்ச்சி ஏற்பட வேண்டும், புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும் என்றெல்லாம் மக்கள் சிந்திக்க ஆரம்பித்தார்கள். புகழ் பெற்ற கிரேக்க எழுத்தாளரான அரிஸ்டோட்டிலின் எழுத்துக்கள் அரேபிய மொழியல் மொழிபெயர்க்கப்பட்டதால் ஐரோப்பாவில் தளர்ந்த நிலையில் காணப்பட்ட கிரேக்க மொழியின் கலாச்சாரம் புத்துணர்வு பெற்றது. பதினான்காம் நூற்றாண்டில் தாந்தே, பெட்ராக், பொக்காசியா ஆகியோர் கிளெசிக்கல் எழுத்துக்களில் ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்தனர். அச்சுக்கூடங்கள் தோன்றியதால் எக்காலத்திலும் இல்லாத வகையில் மக்கள் மத்தியில் அறிவு வளர்ச்சி ஏற்பட்டது. வெறும் வார்த்தை ஜாலங்களால் விளக்கப்பட்டு வந்த விஷயங்களுக்கு முடிவு ஏற்பட்டு எல்லாமே அறிவியல் விஞ்ஞான அடிப்படையில் துல்லியமாக விளக்கப்பட வேண்டும் என்ற கருத்து பரவியது. தத்துவம்கூட ஒரு புதிய நிலையை எட்டியது.

1453ல் கொன்ஸ்தாந்திநோபில் துருக்கியர்களின் கையில் விழுந்தபோது, பேரறிஞர்களில் பலர் மேற்கத்திய நாடுகளுக்கு போய்ச் சேர்ந்தனர். அவர்கள் தங்களோடு அறிவை மட்டுமல்லாமல், பலகாலமாக பொக்கிஷமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த கிரேக்க இலக்கியங்களையும் கொண்டு சென்றனர். நிகழ்ந்து வரும் அறிவியல், விஞ்ஞான மறுமலர்ச்சி தங்களுடைய அதிகாரத்தளத்தை அசைத்துத் தூக்கி எறியப்போகிறது என்பதை உணராமல் பல போப்புக்களும் கிரேக்க இலக்கியங்களிலும், அறிவியல் சிந்தனை வளர்ச்சியிலும், கண்டுபிடிப்புகளிலும் ஆர்வம் காட்டினர். வத்திக்கன் நூல்நிலையத்தை ஏற்படுத்திய ஐந்தாம் நிக்கொலஸே (Nicolas V) இந்த மறுமலர்ச்சியில் ஆர்வம் காட்டிய முதல் போப்பாக இருந்தார். அறிவியலறிஞர்களும், கலைஞர்களும், சிற்பிகளும் இவரால் ஊக்குவிக்கப்பட்டதோடு அநேக கிரேக்க இலக்கியங்களையும் இலத்தீன் மொழியல் மொழிபெயர்க்க இவர் கட்டளையிட்டார். உலகின் மிகச் சிறந்த கலைஞர்களும், சிற்பிகளும், கட்டிடக் கலைஞர்களும் இந்தக் காலப்பகுதியை சிறப்பித்தனர். டொனாடோ பிராமென்டே (Donato Bramante), ரபாயெல் (Raphael), மைக்கல் ஆஞ்சலோ (Michael Angelo), லியனார்டோ டார்வின்சி (Leonardo da Vinci) ஆகியோர் இதற்கு உதாரணம். ரோமின் புனித பேதுரு ஆலயத்தைக் கட்டுவதிலும், புதுப்பிப்பதிலும் இவர்கள் பயன்படுத்தப்பட்டனர். அந¢தக் கத்தோலிக்க ஆலயத்தைப் பார்க்க வருகிறவர்களை அதன் கலை வண்ணம் இன்றும் மூக்கில் கையை வைக்குமளவுக்கு வியக்கச் செய்கிறது.

புதிது புதிதாக எதையும், கண்டுபிடிக்க வேண்டும், படிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டியவர்களை மனிதவியலாளர் (Humanists) என்று அழைப்பார்கள். இத்தாலி நாட்டில் இருந்த மனிதவியலாளர்களை ஒல்லாந்திலும், ஜெர்மனியிலும் இருந்தவர்கள் கிறிஸ்தவப் பார்வையைக் கொண்டிருந்தனர். இதற்குக் காரணம், 1376ல் டெவன்டர் என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரிகள் கல்வியில் ஆத்மீகத்தின் அவசியத்தைப் பெரிதும் வற்புறுத்தியிருந்ததுதான். இந்தக் கல்லூரிகள் இராஸ்மஸ், மூட்டியானஸ் ரூபஸ், குரெனிங்கனைச் சேர்ந்த ஜோன் வெஸல் ஆகியோரை உருவாக்கியிருந்தன. இவர்கள் சீர்திருத்தவாதம் தோன்றுவதற்கு ஒருவிதத்தில் காரணமாக இருந்திருக்கிறார்கள். சிறிது சிறிதாக புதிய கண்டுபிடிப்புகள் கல்லூரிகளையும், கலாசாலைகளையும், பல்கலைக்கழகங்களிலும் நுழைய ஆரம்பித்தன. இதற்குக் காரணமாக இருந்தவர்கள் மிகக்கொடூரமாக துன்புறுத்தப்பட்டனர். அவர்களில் ஒருவர், பேரறிஞரான ரோச்சிலின் (Reuchlin). கிறிஸ்தவ மனிதவியலாளர்களில் (Christian Humanists) சிறப்பானவர்களில் சிலரை இனிப் பார்ப்போம்.

1. செவனரோலா (Sevonalora 1452-1498) – செவனரோலா இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். செவனரோலாவின் பக்திவிருத்தியான வாழ்க்கையும், ஆணித்தரமான பிரசங்கமும் அநேக மக்களைக் கவர்ந்தன. புத்திஜீவிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தின. அழகுடை தரிக்கும் பெண்கள்கூட அவற்றையெல்லாம் பொது இடங்களில் போட்டு எரிக்கும் அளவுக்கு செவனரோலாவின் பிரசங்க ஊழியம் அமைந்திருந்தது. புலோரன்ஸை கர்த்தராளும் குடியரசாக மாற்ற அவர் எண்ணங் கொண்டிருந்தார். 1498ல் அவர் போலிப்போதனைகளைப் பரப்புவதாக குற்றஞ்சாட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். தன்னுடைய சபையைச் சார்ந்திருந்த ஒரு அருமையான மனிதனை இந்த வகையில் ரோமன் கத்தோலிக்க மதம் கொன்று, எந்தவித மாற்றத்திற்கும் சீர்திருத்தத்திற்கும் தன்னில் இடமில்லை என்பதைக் காட்டியது.

2. ஜோன் கோலெட் (John Colet 1466-1519) – ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகப் பட்டதாரியான இவர் செவனரோலாவி¢ன் போதனைகளினால் அதிகம்- கவரப்பட்டிருந்தார். பவுலின் நிருபங்களை இவர் விளக்கிப் போதித்தவிதம் அவற்றிற்கு உயிரூட்டி பலர் மத்தியில் பெரும் ஆர்வத்தைக் கிளரின. புனித பவுல் ஆலயத்தில் டீனாகப் பதவியேற்ற கோலெட் 1512ல் ஒரு பிரசங்கத்தில் மதகுருமாரின் வாழ்க்கையைப் போன்ற போலித்தனம் வேறில்லை என்று பேசினார். பிசப்புக்களின் வாழ்க்கையில் மாற்றமேற்பட்டால் எல்லாவற்றிலும் மாற்றங்கள் ஏற்படும் என்றார். பிசப்புக்கள் புதிய மனிதர்களாக மாறாதவரை சபையில் சட்டங்களை அமுல் நடத்தமுடியாது என்று கூறினார். தன்னுடைய மாணவர்களுக்கு அறிவுரை சொன்ன கோலெட் வேதப்புத்தகத்தையும், அப்போஸ்தலருடைய போதனையையும் எப்போதும் கடைப்பிடிக்கும்படியாக சொன்னார். ஆசாரித்துவ முறையையும், திருவிருந்து பற்றிய கத்தோலிக்க போதனையான டிரான்சப்ஸ்டேன்ஷியேசனையும் மறுதலித்தார்.

இவருடைய மாணவர்களில் ஒருவராக இராஸ்மஸ் இருந்தார். தன்னுடைய கிரேக்கப் புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பை வெளியிடும்படி இராஸ்மஸை இவர் தூண்டினார். ஆங்கில மொழியில் வேதத்தை மொழிபெயர்த்ததற்காக கொலை செய்யப்பட்ட வில்லியம் டின்டேலும் இவருடைய மாணவர்களில் ஒருவர்.

3. டெசிடேரியஸ் இராஸ்மஸ் (Desiderius Erasmus 1467-1536) – ரொட்டடாமில் பிறந்த இராஸ்மஸ் எல்லா மனிதவியலாளரிலும் புகழ் பெற்றவராக இருந்தார். குறுகிய காலத்துக்கு கேம்பிரிட்ஜில் கிரேக்க புரொபஷராகவும், ஆத்மீகத்துறை புரொபஷராகவும் இருந்தார். இவருடைய இலக்கிய சேவை அபாரமானது. மதகுருக்களுக்கெதிராகவும், சடங்குகளுக்கெதிராகவும் இவர் அதிகம் எழுதியிருக்கிறார். சீர்திருத்தவாத காலத்தில் அநேகர் கத்தோலிக்க மதத்தைவிட்டு விலகிப்போனபோது இராஸ்மஸ் அதற்குள்ளேயே இருந்து அதை சீர்திருத்த விரும்பினார். ரோமன் கத்தோலிக்கர்களும், அதைவிட்டு விலகிப்போன சீர்திருத்தவாதிகளும் தைரியமில்லாதவர் என்று இராஸ்மஸைத் தாக்கிப் பேசினார்கள். இவருடைய கிரேக்க புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு சிறப்பானது.

இக்காலத்தில் ரோம, கிரேக்க இலக்கியங்களைப் படிப்பதில் மனிதன் காட்டிய ஆர்வம் அவனை புறஜாதிக் கோட்பாடுகளைத் தழுவத்தூண்டின. இதன்காரணமாக மனிதனின் ஒழுக்கம் பாதிக்கப்பட்டது. ஒருபுறம் புனித பவுல் ஆலயம், வத்திக்கன் மற்றும் இத்தாலி முழுவதிலுமுள்ள கட்டிடங்கள் கலை அழகில் பிரமிக்கும்படியாக இருக்க, மறுபுறம் மனிதர்கள் சுய இச்சைகளுக்கு அடிமையாகி ஒருவரை ஒருவர் தவறாக நடத்தி வந்தனர். தங்களுடைய சுய இச்சைகளை நிறைவேற்றிக் கொள்ள விஷத்தையும், கத்தியையும், துப்பாக்கியையும் மிகவும் சாதாரணமாகப் பயன்படுத்தி வந்தனர். போப்புக்களும் இக்காலத்தில் மற்றவர்களுக்கு எந்தவிதத்திலும் நல்லுதாரணமாக இருக்கவில்லை. எத்தனை அழகானவைகளாக இருந்தபோதும் புதிய கண்டுபிடிப்புகளையும், கலை ஆர்வத்தையும்விட மேலானதொன்று மனிதனைப் பரிசுத்தமாக வாழ வைப்பதற்கு தேவைப்பட்டது. மனிதனுடைய சிந்தனையையும், ஆராய்ச்சி மனப்பான்மையையும் அடிமைத்தளையில் வைத்திருந்து ஆதிக்கம் செலுத்திவந்த ரோமன் கத்தோலிக்க மதத்தின் ஆதிக்கத்தை ஒடுக்கியதே மறுமலர்ச்சி இயக்கம் உலகுக்கு அளித்த பங்கு.

அநேக கிறிஸ்தவ மனிதவியலாளர்கள் ரோமன் கத்தோலிக்க சபையில் இருந்தே இறந்த போதும் திருச்சபை சீர்திருத்தம் ஏற்படுவதற்கு அவர்கள் அளித்திருந்த பங்கை குறைத்து மதிப்பிட முடியாது. மறுமலர்ச்சிக்கால ஆய்வும், அறிவியல் ஆர்வமும் தரக்குறைவான கத்தோலிக்க இலத்தீன் வல்கேட் மொழிபெர்ப்புகளுக்கு அப்பால் போய் கிரேக்க, எபிரேய மொழிகளிருந்த வேத மூலத்தை மனிதர்கள் படிக்கத் தூண்டுவதைப் பெரு நோக்கமாகக் கொண்டிருந்தன. இதனால் இதுவரை மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆதி சபையின் ஆரம்பப் போதனைகளை மறுபடியும் கற்று சத்தியத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பு மக்களுக்கு ஏற்பட்டது.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s