அனாபாப்திஸ்து இயக்கம்
சுவிஸ் அனாபாப்திஸ்து இயக்கம்
சீர்திருத்தவாதத்திற்கெதிராக அதன் எதிரிகள் ஜெர்மனியில் ஒன்றுகூடிக் கொண்டிருந்தபோது திருவிருந்து பற்றிய போதனையில் லூதரைப் பின்பற்றியவர்களுக்கும், சுவிஸ் (Swiss) இறையியலறிஞர்களுக்கும் இடையில் தீவிரமான வாக்குவாதம் ஏற்பட்டது. சுவிட்சர்லாந்தில் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களில் முக்கியமானவர் சுவிங்லி (Zwingli). ஹெசியைச் சேர்ந்த பிலிப் (Philip of Hesse) 1529ல் மார்பேர்க் (Marburg) என்ற இடத்தில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண ஒரு கூட்டத்தைக் கூட்டினார். கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு இப்போதனை பற்றிய பதினான்கு அம்சங்களில் பூரணமான உடன்பாடிருந்தது. பதினைந்தாவது அம்சத்தில் அவர்களுக்கு தீவிரமான கருத்துவேறுபாடு ஏற்பட்டது. ரோமன் கத்தோலிக்க மதம் போதித்த திருவிருந்து பற்றிய போதனையை அவர்கள் அனைவருமே வேதத்திற்கு எதிரானது என்று எதிர்த்தார்கள். ஆனால், மார்டின் லூதர், கிறிஸ்துவின் சரீரம் அப்பத்திலும், திராட்சை இரசத்திலும் இருப்பதாகவும், இயேசுவின் வார்த்தைகளான இது “என்னுடைய சரீரம்” என்பதை நாம் எழுத்துபூர்வமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் விளக்கினார். சுவிஸ் சீர்திருத்த இயையிலறிஞரான சுவிங்லியோ அப்பமும், திராட்சை இரசமும் கிறிஸ்துவின் சிலுவைப் பலியை நினைவுகூர்வதற்கு மட்டுமே நமக்கு உதவுகின்றன என்றும், அவற்றை விசுவாசத்தினால் விசுவாசிகள் புசித்து பெலப்படுகிறார்கள் என்றும் விளக்கினார். மார்டின் லூதர் தன்னுடைய கொள்கையில் இருந்து மீறமாட்டேன் என்று விடாப்பிடியாக இருந்தார். இது அவர்கள் மத்தியில் கருத்து வேறுபாட்டை மட்டுமல்லாமல் மனவேறுபாட்டையும் ஏற்படுத்தியது.
சுவிங்லியும் அவரைச் சார்ந்தவர்களும் திருவிருந்தில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தப் பாடுபடவில்லை; குழந்தை ஞானஸ்நானம் கொடுப்பதையும் அடியோடு எதிர்த்தார்கள். குழந்தைகள் வளர்ந்து சிந்திக்க ஆரம்பிப்பதற்கு முன்பாக அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கக்கூடாது என்பது சுவிங்லியின் தீவிரமான கருத்தாயிருந்தது. இருந்தாலும் மற்றவர்கள் மனதைப் புண்படுத்தக் கூடாது என்பதற்காக அதைத் தொடர்ந்து பின்பற்றுவதில் தவறில்லை என்றார் சுவிங்லி. “கிறிஸ்துவின் வார்த்தையை நாம் பின்பற்றுவதானால் குழந்தைகளுக்கு ஒருபோதும் ஞானஸ்நானம் கொடுக்கக்கூடாது என்றார் சுவிங்லி. இது அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்கவில்லை. சுவிங்லியோடு நெருங்கிய தொடர்புகொண்டிருந்த அவருடைய மாணவர்களான கொன்டிரெட் கிரெபெலுக்கும் (Condrad Grebel), ஃபீலிக்ஸ் மென்ட்சுக்கும் (Felix Mantz) சுவிங்கிலியின் முரண்பாடான சிந்தனைப்போக்கு பிடிக்கவில்லை. அவர்கள் தீவிரமான சீர்திருத்தத்தை விரும்பினார்கள். இதன்காரணமாக பின்னால் அவர்கள் பெருந்துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது. சுவிஸ் அனாபாப்திஸ்து இயக்கத்தில் குறிப்பிடத்தகுந்த இன்னொருவர் ஹஃப்மேயர் (Hubmaier). இவரும் விசுவாசிகளுக்கு மட்டுமே ஞானஸ்நானம் கொடு¢க்க வேண்டும் என்பதில் சுவிங்லியோடு அதிக தர்க்கங்களில் ஈடுபட்டு பின்னால் துன்பங்களை அனுபவித்தார்.
சீர்திருத்தம் வளர்ந்துகொண்டிருந்த ஆரம்ப காலத்தில் சீர்திருத்தவாதிகள் இறையியல் போதனைகளில் வேதபூர்வமான கோட்பாடுகளைப் பின்பற்ற சிந்திக்க ஆரம்பித்தது மட்டுமல்லாமல் அவைபற்றிப் பலவிதமான வாதங்களிலும், தர்க்கங்களிலும் ஈடுபட நேர்ந்தது. அதுவரை காலமும் வேதம் மறைத்து வைக்கப்பட்டிருந்தபடியால் சீர்திருத்தவாதிகள் சத்தியத்தை நிலைநாட்ட அதிகம் பாடுபட வேண்டியிருந்தது. அனாபாப்திஸ்துகளில் சிலர் ரோமன் கத்தோலிக்க முறைகளில் இருந்து அடியோடு விடுதலை வேண்டுமென்று தீவிரமான சீர்திருத்தத்தை நாடினார்கள். இவர்களை அக்கால அரசு கடுமையாக தண்டித்தது.
அனாபாப்திஸ்து இயக்கம்
பதினாறாம் நூற்றாண்டில் வரலாற்றில் திருச்சபை சீர்திருத்தம் ஆரம்பித்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட கிறிஸ்தவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த பெயரே “அனாபாப்திஸ்து” (Anabaptist) என்பது. சீர்திருத்தவாதிகளான மார்டின் லூதரும் அவரோடிணைந்து சீர்திருத்தத்தில் ஈடுபட் டிருந்தவர்களும் வேதம் மட்டுமே அதிகாரமுள்ளது என்றும் அது மட்டுமே திருச்சபையிலும், தனி மனிதனின் ஆத்மீக விஷயங்களிலும் அதிகாரம் செலுத்தக்கூடியது என்றும் கூறி திருச்சபை சீர்திருத்தத்தில் ஈடுபட்டிருந்த போது கிறிஸ்தவர்களில் ஒரு சாரார் அவை மட்டும் போதாது, அதற்கு மேலாகப்போய் திருமுழுக்கு, திருவிருந்து போன்ற போதனைகளிலும் வேத அடிப்படையில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்று கூறினர். இத்தகைய மாற்றங்களை நாடிய அனாபாப்திஸ்து இயக்கத்தை இனி ஆராய்வோம்.
வரலாற்று அறிஞர்களில் சிலர் அனாபாப்திஸ்து இயக்கத்தின் தலைவர்கள் வேதபோதனைகளை மீறிய தீவிரமான கருத்துக்களைக் கொண்டவர்களாக இருந்தனர் என்றும், தீர்க்கதரிசனங்களிலும், ஆயிர வருட அரசாட்சி பற்றிய தீர்க்கதரிசனங்களிலும் நாட்டம் செலுத்தி அன்று நிகழ்ந்து கொண்டிருந்த திருச்சபை சீர்திருத்தத்திற்குத் தடையாக இருந்தனர் என்றும் காட்டியுள்ளார்கள். இதில் ஓரளவுக்கு உண்மையிருந்தபோதிலும் அனாபாப்திஸ்து இயக்கத் தலைவர்கள் எல்லோரும் மோசமானவர்களாக இருக்கவில்லை என்பதை பிற்கால வரலாற்று ஆய்வுகள் காட்டுகின்றன.
அனாபாப்திஸ்து இயக்கம் 1522ல் சூரிக் (Zurich) என்ற இடத்தில் “சகோதரர்கள்” என்று தங்களை அழைத்துக்கொண்ட ஒரு குழுவினரின் மத்தியில் ஆரம்பமானது. இவர்களுக்குத் தலைவர்களாக கொன்றட் கிரெபலும் (Condrad Grebel), பீலிக்ஸ் மென்ட்ஸும் (Philiz Mantz) இருந்தனர். இவர்கள் வேதப்படிப்பில் பெரும் அக்கறை காட்டினர். இவர்கள் சுவிங்லியோடு அதிக தொடர்பு கொண்டவர்களாக இருந்தனர் என்று ஏற்கனவே பார்த்தோம். இவர்கள் மார்டின் லூதரும், சுவிங்லியும் ஆதரித்த ‘தேசத்தின் கட்டுப்பாட்டில் திருச்சபை இருக்க வேண்டும்’ என்ற கொள்கையை முற்றாக எதிர்த்தனர். அதுமட்டுமல்லாது சபைகளில் இருந்து அத்தனைப் படங்களும், சிலைகளும் அகற்றப்பட வேண்டும் என்றும் கூறினர். இவர்கள் நேர்மையான பக்திவிருத்தி உடையவர்களாகவும் வேதம் மட்டுமே தங்களுடைய ஆயுதம் என்றும் வலியறுத்தினர். இவர்கள் ரோமன் கத்தோலிக்க மதம் பின்பற்றிய குழந்தை ஞானஸ்தானத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.
இவர்களுடைய போதனைகள் 1525ல் சூரிக்கைச் சுற்றியிருந்த பகுதிகளில் பரவ ஆரம்பித்தன. அந்த நகரத்தின் கவுன்சில் இவர்கள் மீது அநியாயமான குற்றச் சாட்டுகளைச் சுமத்தி இவர்களுக்கெதிரான சட்டங்களைக் கொண்டுவந்தது. இதனால் இவர்களில் அநேகமானோர் மரணத்தைத் தழுவ நேரிட்டது. சுவிங்லிக்கும் இதில் தொடர்பிருந்தது. ரோமன் கத்தோலிக்க மதத்திற்கெதிராக திருச்சபை சீர்திருத்தம் தீவிரமடைந்து கொண்டிருந்த அக்காலத்தில் லூதர் முதற்கொண்டு பல சீர்திருத்தவாதிகள் திருச்சபை தேசத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமென்று எண்ணினர். அதை அனாபாப்திஸ்து இயக்கம் எதிர்த்ததொடு அனைத்து ஆத்மீகக் காரியங்களிலும் முழுமுற்றாக சீர்திருத்தம் வேண்டுமென்று செயல்பட்டதால் பலரும் அவர்களை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அதனால் அனாபாப்திஸ்து இயக்கத்தைத் தடைசெய்ய அவர்கள் அரசோடு ஒத்துழைத்தனர்.
அனாபாப்திஸ்து இயக்கம் 1525 திலிருந்து 1528 வரை ஜெர்மனியில் பலமாக வளர ஆரம்பித்தது. முக்கியமாக ஸ்ட்ரஸ்பேர்கிலும் (Strasburg), ஒக்ஸ்பேர்கிலும் (Augsburg) அதிகம் வளர்ந்தது. இவ்வியக்கத்தின் அங்கத்தவர்கள் புரட்சிவாதிகள் என்று மகுடம் சூட்டப்பட்டும், அரசுக்கெதிராக கலகம் செய்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டும் அநியாயமாக கேவலப்படுத்தப்பட்டனர். 1529ல் கூடிய ஸ்பியர் கவுன்சில், ஏற்கனவே குழந்தை ஞானஸ்நானம் பெற்றவர்களுக்கு திருமுழுக்கு கொடுப்பவர்களுக்கும், அவ்வாறு மறுபடியும் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்கிறவர்களுக்கும் எதிராக அரசு எந்தவித விசாரணையுமில்லாமல் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசை வற்புறுத்த முடிவெடுத்தது. அதற்குப்பின் ஒருசில வருடங்களுக்குள் இரண்டாயிரம் பேர் வரையில் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
ஆரம்பத்தில் மார்டின் லூதர் இந்தவிதமாக அனாபாப்திஸ்துகள் துன்புறுத்தப்பட்டதை எதிர்த்தார். ஆனால், அந்த இயக்கம் வளர்த்த வேகத்தைப் பார்த்த அவர் 1530ல், வாளினால் அரசு சட்டப்படி அந்த இயக்கத்தை ஒடுக்க ஆதரவளித்தார். அனாபாப்திஸ்து இயக்கம் திருச்சபை சீர்திருத்தத்திற்கு எதிரானது என்று அவர் நம்பினார். நல்லதும், தவறானதும் கலந்திருந்த அனாபாப்திஸ்து இயக்கத்தை லூதரால் புரிந்துகொள்ள முடியவில்லை. காலத்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளின் நிர்ப்பந்தத்தாலும் லூதர் இவ்விதமாக முடிவெடுக்க நேர்ந்தது.
இருந்தபோதும் அனாபாப்திஸ்து இயக்கம் தொடர்ந்து வேகமாக வளர ஆரம்பித்தது. நெதர்லாந்து தேசத்தில் இதன் தலைவர்களில் ஒருவரான மெனோ சிமன்ஸ் (Mano Simons) அதிக செல்வாக்குள்ளவராக இருந்தார். 1536ல் மரணத்தைத் தழுவும்வரை ஒஸ்திரியாவிலும், மொரேவியாவிலும், போலந்திலும் ஜேக்கப் ஹட்டர் (Jacob Hutter) இவ்வியக்கத்தின் தலைவராக இருந்தார். பின்னால் அமெரிக்காவிலும், ரஷ்யாவிலும், கனடாவிலும் எழுந்த மெனோனைட் இயக்கமும் (Manonnite), ஹட்டரைட் இயக்கமும் (Hutterite) இவர்களுடைய பேயர்களைச் சூடியே தோன்றின. இவர்கள் எப்பொழுதுமே அமைதியை நாடியவர்களாகவும், பக்தியில் நாட்டமுள்ளவர்களாகவும் இருந்ததோடு தங்களைச் சார்ந்தவர்களோடு ஒரு கூட்டமாகத் தனித்து வாழ்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
அனாபாப்திஸ்து இயக்கம் பல குழுக்களாக இருந்ததோடு அவர்கள் மத்தியில் இருந்த போதனைகளும், நடைமுறைக் கிரியைகளும் ஒரேவிதமாக இல்லாதிருந்ததால் இவ்வியக்கத்தைச் சார்ந்த எல்லோரையும் ஒரே குடைக்குள் வைத்து விளக்கமளிப்பது முடியாத காரியம். இவர்களில் சிலர் பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து போப்புக்கு எதிராக செயல்பட்ட சில குழுக்களின் போதனைகளைப் பின்பற்றினர். அனாபாப்திஸ்து இயக்கத்தின் போதனைகளைப் பொதுவாக விளக்குவதானால், அவர்கள் இயேசு கிறிஸ்துவின் உடனடி வருகையை எதிர்பார்த்ததோடு, திருச்சபையும் தேசமும் இணைந்திருப்பதைக் தீவிரமாகக் கண்டித்தார்கள். அத்தோடு இவர்கள் தீவிர ஆர்வமுடையவர்களாக இருந்தபடியால் சில வேளைகளில் அநாவசியமாக உணர்ச்சிவசப்பட்ட செயல்களிலும் ஈடுபட்டார்கள்.
ரோமன் கத்தோலிக்க மதம் இவர்களைத் தீவிரமாகத் தண்டித்தது. அக்கால நிலவரப்படி திருச்சபையும் நாடும் ஒன்றாகக் கருதப்பட்டு அரசுக்கு திருச்சபை மேல் அதிகாரம் இருந்தபடியாலும், சீர்திருத்தவாதிகளுக்கு அனாபாப்திஸ்து இயக்கத்தின் போதனைகளில் சந்தேகமிருந்த தாலும் அனாபாப்திஸ்து இயக்கத்தை அரசு அழிக்க முயன்றபோது அதற்கெதிராக அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ரோமன் கத்தோலி க்க மதமே அவர்களுடைய அழிவுக்கு பெருங்காரணமாக இருந்ததே தவிர சீர்திருத்தவாதிகளல்ல என்பதை நாம் மனதில் வைத்திருக்க வேண்டும். இவர்களைத் துன்புறுத்தியதில் ஜோன் கல்வினுக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை; அவர்களை அழிப்பதனால் எந்த நன்மையும் ஏற்படும் என்று கல்வின் நினைக்கவில்லை. அக்காலத்தில் ரோமன் கத்தோலிக்கரோ அல்லது சீர்திருத்தவாதிகளோ உணர்ந்திருக்காக அளவுக்கு மத சுதந்திரத்தின் அவசியத்தையும், மனச்சாட்சியின் சுதந்திரத்தின் அவசியத்தையும் அனாபாப்திஸ்து இயக்கம் உணர்ந்திருந்தது என்று கூறவது மிகைப்படுத்திக் கூறுவதாகாது. பாப்திஸ்து சபைப்பிரிவினருக்கும் (Baptists), குவேக்கர்களுக்கும் (Quakers), சகோதரத்துவ இயக்கத்தினருக்கும் (Brethren) அனாபாப் திஸ்துகளோடு தொடர்பிருந்தபோதும் இவர்களில் எந்தப் பிரிவினருமே அனாபாப்திஸ்து இயக்கத்தில் இருந்து உருவானவர்கள் என்று அறிவித்துக் கொள்வதில்லை.