சுவிட்ஸர்லாந்தில் சீர்திருத்தம்
அல்ரிக் சுவிங்லி (Ulrich Swingli)
சீர்திருத்தவாதம் நெருப்புப் போல் ஐரோப்பாவில் பரவியபோது லூதரின் போதனைகள் ஜெர்மனியில் இருந்து டென்மார்க், நோர்வே, சுவீடன் ஆகிய நாடுகளில் பரவி இறுதியில் அந்நாடுகளின் உத்தியோகபூர்வமான மதம் என்ற இடத்தையும் பிடித்தது. ஆனால், இதேவேளையில் சுவிட்ஸர்லாந்தில் இன்னொரு வகையான புரொட்டஸ்தாந்து பிரிவு உருவாகியது. ஜெர்மனியில் ஏற்பட்டதுபோன்ற புரட்சிகரமான நிகழ்ச்சிகள் எதுவும் சுவிட்ஸர்லாந்தில் நிகழாவிட்டாலும் இங்கு உருவான சீர்திருத்தம் மிகவும் முக்கியமானது. லூதரனிசத்தில் காணப்பட்டது போன்ற பாரம்பரிய விசுவாசம் சுவிட்ஸர்லாந்து சீர்திருத்தப் பிரிவில் காணப்படவில்லை. “வேதம் மட்டுமே சர்வ அதிகாரம் கொண்டது” என்ற உயர்ந்த நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டெழுந்த இப்பிரிவு படங்கள், சிலைகள், விசேஷ அம்சங்கள், யாத்திரை போகுதல் போன்ற அத்தனையையும் ஒட்டுமொத்தமாக ஆராதனையில் இருந்து விலக்கி வைத்தது. பொது ஆராதனையில் ஆர்கன் (Organ) வாசிப்பதையும் விட்டெறிந்தது. இந்தவகையில் சுவிட்ஸர்லாந்தில் உருவான சீர்திருத்தவாதம் ஜெர்மனியில் ஆரம்பித்ததைவிட மிகவும் புரட்சிகரமாக இருந்தது. இந்த சீர்திருத்தவாத பிரிவு மிக இலகுவாக பிரான்சு, ஸ்கொட்லாந்து, ஹங்கேரி, ஒல்லாந்து மட்டுமல்லாமல் ஜெர்மனியின் பெரும்பகுதிக்கும் பரவியது.
சுவிட்ஸர்லாந்தில் ஏற்பட்ட திருச்சபை சீர்திருத்தத்திற்கு காரணகர்த்தாவாக இருந்த அல்ரிக் சுவிங்லி (Ulrich Zwingli) மத குருவாகவும் மிகுந்த படிப்பாளியும் நாட்டுப் பற்றுடையவராகவும் இருந்தார். இவர் மார்டின் லூதருடைய போதனைகளின் பாதிப்பில்லாமல் சொந்தமாகவே ரோமன் கத்தோலிக்க மதத்துக்கெதிரான தன்னுடைய கருத்துக்களை வளர்த்துக் கொண்டிருந்தார். வியன்னாவிலும் (Vienna), பேசல்லிலும் (Basel) இருந்த பல்கலைக் கழகங்களில் திறமைவாய்ந்த இடத்தை வகித்தபின் கிளேரசின் (Glarus) மதகுருவாக சுவிங்லி நியமனம் பெற்றார். அதன்பின் சூரிக்கில் (Zurich) இருந்த பெரும் கதீட்ரல் சபைக்கு பணிபுரிய அழைக்கப்பட்டார். போப்பின் இராணுவத்தில் சேருவதையும், வெளிநாட்டில் போரிடும் இரகசியப் படைகளில் சேருவதையும், கத்தோலிக்க சபையின் கேடுகளையும், குருட்டு நம்பிக்கைகளையும் தன்னுடைய பிரசங்கங்களில் கடுமையாகச் சாடினார். அத்தோடு போப்பின் பாவ மன்னிப்பு பத்திர விற்பனையையும் கடுமையாக எதிர்த்தார். தேவனுடைய வார்த்தையையே தன்னுடைய அதிகாரமாகக் கொண்டு பொது விவாதங்களில் கலந்துகொண்டு ரோமன் கத்தோலிக்க மதபோதனைகளின் தவறுகளைச் சுட்டிக்காட்டினார். சூரிக் நகரக் கவுன்சில் சுவிங்லிக்குப் பெரும் ஆதரவாக இருந்ததோடு 1522 ஆம் ஆண்டில் சுயாதீனமாக ஒரு சபையையும் நிறுவியது.
1528 ஆம் ஆண்டில் புனித கோலிலும் (St. Gall), 1529 ஆம் ஆண்டில் பேசலிலும், முயல்ஹௌசனிலும் (Muhlhausen), ஸ்சாப்ஹௌசனிலும் (Schaffhausen) சீர்திருத்தம் வெற்றிகரமாக நிகழ்ந்தது. இந்த நகரங்கள் அனைத்தும் புரொட்டஸ்தாந்து பிரிவையும், குடியரசாட்சியையும் பின்பற்றி சுவிங்லியின் போதனையின்படியான சீர்திருத்தத்துக்கு தம்மை உட்படுத்திக் கொண்டன. இதன் காரணமாக ஆபத்து ஏற்படாமலில்லை. கத்தோலிக்க மதத்துக்கு ஆதரவாக இருந்தவர்கள் ஆஸ்திரிய நாட்டரசனான பேர்டி னன்டுடன் உறவுபூண்டு சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்து வந்த சீர்திருத்தத்தை அழிக்க முயன்றனர். அரசன் பேர்டினன்ட் பலதடவைகள் வரப்போகின்ற ஆபத்தைப் பற்றி எச்சரிக்கை செய்தும் சீர்திருத்தவாதிகள் தம்மை எதிர்ப் புக்கு தயார் செய்துகொள்ளவில்லை. இறுதியில் கத்தோலிக்கர்கள் படை யோடு வந்து சூரிக்கை தாக்கினார்கள். அவர்களோடு கேப்பல் திடலில் (Field of Cappel) போரிட்ட சுவிங்லி தன்னைப் பின்பற்றியவர்களோடு வீர மரணத்தைத் தழுவினார். ஜோண் கல்வினைவிட புரட்சிகரமான எண்ணங்களைக் கொண்டிருந்த சுவிங்லி சீர்திருத்தவாதத்தின் பெருந்தலைவர்களில் ஒருவர் என்பது மிகையாகாது.
ஜோண் கல்வின் (John Calvin)
சீர்திருத்தவாத காலத்தின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவர் ஜோண் கல்வின் என்பதில் வரலாற்றாசிரியர்கள் ஒருமனப்பட்ட கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். கல்வினைப் பற்றிய தவறான கருத்துடையவர்கள் நம்மத்தியில் அநேகர். இவர்கள் ஒருதடவை கல்வினின் ஆக்கங்களை வாசித்துப் பார்த்தார்களானால் அவர் எத்தனை அற்புதமான இறையியல் ஞானி, பிரசங்கி, போதகர், சீர்திருத்தவாதி என்பதை உணர முடியும்.
1509 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் 10 ஆம் திகதி ஜோண் கல்வின் பிரான்ஸ் (France) நாட்டில் நோயோன் (Noyon) என்ற இடத்தில் பிறந்தார். அவருடைய குடும்பம் உயர்குலத்துடன் உறவுபூண்டதாக இருந்ததால் அவர்களோடு இணைந்து கல்வி பயிலும் வாய்ப்பை அவர் பெற்றிருந்தார். தன்னோடு பலவிதங்களில் முரண்பாடுடையவர்களிடம் மிகவும் அன்புகாட்டியவராக கல்வின் இருந்தார். மார்டின் லூதர் (Martin Luther), மெலாங்தன் (Melanchthon), பியூஸர் (Bucer), ஜோண் நொக்ஸ் (John Knox) ஆகியோர் தன்னோடு சில விஷயங்களில் தீவிரமாக முரண்பட்ட போதும் அவர்கள் மேல் கல்வின் தொடர்ந்து அன்புகாட்டினார். கல்வினின் தந்தை அவரை முதலில் குருப்பயிற்சிக்கு அனுப்பத் தீர்மானித்திருந்தார். அதற்குப் பிறகு அவரை ஓர்லீன்சுக்கு (Orleans) சட்டம் பயில அனுப்பி வைத்தார். பாரிசில் இருந்தது போலவே இங்கும் திறமையாகக் கல்வி கற்று சிறந்த மாணவன் என்ற பெயரைப் பெற்றார் கல்வின். மனிதநலவாதிகளான ஆசிரியர்களிடம் கல்வி பயின்ற கல்வின் கிளாசிகள் படிப்புகளில் அதிக ஊக்கங்காட்டினார். சட்டப் படிப்பும், பிரெஞ்சு தேசத்தாருக்கே உரிய தத்துவரீதியிலான நுணுக்கமான சிந்தனா சக்தியும் கல்வினை மிகவும் திறமை வாய்ந்த முறைப்படுத்தப்பட்ட இறையியல் வல்லுனர்களில் ஒருவர் என்ற சிறப்பை அவருக்குப் பின்னால் பெற்றுத் தந்தது.
1532ஆம் ஆண்டில் தந்தையை இழந்த கல்வின் ஓர்லீன்சில் இருந்து பாரிசுக்குத் திரும்பி அங்கே சில புரொட்டஸ்தாந்து குழுவினருடன் இணைந்து ஜெபம் செய்வதிலும், வேதத்தை ஆராய்ந்து படிப்பதிலும் ஈடுபட்டார். அடுத்த வருடமே கல்வினின் சுவிசேஷக் கருத்துக்களாலும், நிக்கொலாஸ் கொப் (Nicolas Cop) என்னும் தன்னுடைய நண்பருக்கு “கிறிஸ்தவ தத்துவம்” (Christian Philosophy) என்ற தலைப்பில் அவர் எழுதிய ஆக்கத்தினாலும் ஆபத்து வந்தது. நிக்கொலாஸ் கொப் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தார். பாரிஸைவிட்டு வெளிவந்த கல்வின் ஸ்ட்ரெஸ் பேர்கிற்கு (Strasburg) வந்தார். அங்கே சீர்திருத்தவாத காலத்தின் பெரும் இறையியல் வல்லுனர்களில் ஒருவராக இருந்த மார்டின் பியூஸரை (Martin Bucer) சந்தித்தார். அந்நகரத்தின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக போஸர் இருந்துவந்தார். 1535 ஆம் ஆண்டில் கல்வின் பேசில் நகரில் அகதி யாகக் குடியேறித் தன்னுடைய படிப்பைத் தொடர்ந்தார். அந்த வருடமே அவர் “கிறிஸ்தவத்தைப் பற்றிய அறிமுகம்” (The Institutes of Christian Religion) என்ற ஒரு நூலை வெளியிட்டார். அது பிரெஞ்சு அரசனுக்கு கிறிஸ் தவத்தை அறிமுகம் செய்து விளக்கியதாக இருந்தது. சீர்திருத்த இறையியலை முறைப்படுத்தி விளக்கி எழுதப்பட்ட முதல் ஆக்கமாக இது இருந்தது. பின்னால் திருத்தி எழுதப்பட்டு வெளிவந்த பதிப்புகளைவிட ஆரம்பத்தில் மிகச் சிறியதாக இருந்தபோதும், இருபத்தாறு வயது மட்டுமே நிரம்பிய ஒருவரால் எழுதப்பட்ட மிகச் சிறந்த இறையியல் ஆக்கமாக இன்றுவரை இருந்து வருகிறது. இதுவரை எழுதப்பட்டுள்ள இறையியல் ஆக்கங்களில் எதுவுமே இதன் இடத்தை இதுவரைப் பிடிக்கவில்லை. இன்றும்கூட சீர்திருத்த திருச்சபைகள் மத்தியிலும், கிறிஸ்தவர்கள் மத்தியிலும் தொடர்ந்து மதிக் கப்பட்டு அதிகம் விற்பனையில் இருந்து வருகிறது கல்வினுடைய நூல்.
கல்வின் தன்னுடைய நூலை அப்போஸ்தலர்களுடைய கோட்பாடுகளின் அடிப்படையில் எழுதி, புரொட்டஸ்தாந்து பிரிவினர் அப்போஸ்தலக் கோட்பாடுகளை பெரிதும் விசுவாசிக்கிறவர்களென்றும், விசுவாசத்துரோகிகளல்ல என்பதையும் எடுத்துக்காட்டியிருந்தார். சீர்திருத்தவாதி களான மார்டின் லூதரும், ஜோண் கல்வினும் புதிதாக ஒரு இறையியலை திருச்சபைக்கு அறிமுகப்படுத்தாமல் ஆதியில் அப்போஸ்தலர்களின் காலத்தில் இருந்து விசுவாசித்து பின்பற்றப்பட்டு வந்த அதே கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் கிறிஸ்தவர்கள் பின்பற்ற வேண்டுமென்பதையே வலியுறுத்தி வந்தனர். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை முழுமையாக விசுவாசித்து, முதல் மூன்று நூற்றாண்டுகளுக்கு திருச்சபை பின்பற்றி வந்த கோட்பாடுகளையும், நடைமுறையையும் மறுபடியும் திருச்சபை பின்பற்ற வேண்டும் என்பதை கல்வின் ஆணித்தரமாக வலியுறுத்தி வந்தார்.
1536 ஆம் ஆண்டில் ஜெனிவாவுக்கு கல்வின் வந்திருந்தபோது உள்ளூர் போதகராக இருந்த வில்லியம் பெரல் (William Farel) அவருடைய அறைக்குள் திடுதிப்பென்று நுழைந்து, நீர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு திருச்சபை சீர்திருத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று கர்த்தரின் நாமத்தில் அதிகாரத்துடன் கட்டளையிட்டார். அதற்கு முன் வருடந்தான் ஜெனிவா புரொட்டஸ்தாந்து பிரிவைத் தழுவியிருந்தது. இதற்கு அரசியலும் பெருங் காரணமாக இருந்தது. நகரத்து மக்கள் போப்பினதும், சவோய் டியூக்கினதும் அதிகாரத்தின் கீழ் தொடர்ந்திருப்பதை விரும்பவில்லை. அவர்கள் சுதந்திர மாக இயங்க விரும்பினர். ஒழுக்கக்கேட்டுக்கு பேர் பெற்றிருந்த நகரத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் ஆத்மீக மாற்றத்திற்கான அறிகுறியல்ல. இப்போது சுதந்திரமடைந்த நகரத்தில் அதன் பெயரில் மோசமான ஒழுக்கக்கேடுகள் தலைதூக்க ஆரம்பித்தன. இதெல்லாம் நெருக்கியதன் விளைவாகவே வில்லியம் பெரல் இதற்கு கல்வின் தமக்கு உதவலாம் என்ற நம்பிக்கையில் அவருடைய இருப்பிடத்தைத் தேடிப்போய் தம்மோடு இணைந்துழைக்கும்படி வற்புறுத்தினார். ஆனால், கல்வினின் மனமோ இலக்கியப் பணியிலும் வேறு விஷயங்களிலும் ஈடுபடுவதில் லயித்திருந்தது. ஆனால், பெரலின் வார்த்தைகள் கல்வினின் இதயத்தைத் தாக்கி அவர் எந்தவித சாக்குப்போக்கும் சொல்லமுடியாதபடி செய்தது. கர்த்தர் தமக்கு இப்படி யாக வழிகாட்டுகிறார் என்பதை உணர்ந்த கல்வின் ஜெனிவாவில் ஏற்பட்ட சீர்திருத்தத்தோடு தம்மை இணைத்துக் கொண்டார்.
காலத்தைத் தாழ்த்தாமல் கல்வின் உடனடியாக ஜெனிவா திருச்சபைக்கு அவசியமான ஒரு விசுவாச அறிக்கையையும், வேத அடிப்படையிலான சபை அமைப்பையும் உருவாக்குவதில் ஈடுபட்டார். அத்தோடு சிறுவர்களுக்கான ஒரு வினாவிடைப் போதனையையும் தயாரித்தார். தன்னுடைய பிரசங்கங்களில் ஜெனிவாவின் ஒழுக்கக்கேட்டிற்கு ஆதாரமாக இருந்த வற்றை அடியோடு தாக்க ஆரம்பித்தார். கல்வின் அந்நகருக்கு வருவதற்கு முன்னே நகராட்சியாளர்கள் சூதாட்டம், குடி, ஆட்டபாட்டங்கள், ஊதா ரித்தனமாக ஆடை அணிதல் போன்றவற்றிற்கெதிராக சட்டங்களை ஏற்படுத்தியிருந்தனர். ஆனால், மக்கள் மத்தியில் இருதய மாற்றம் ஏற்படாததால் இந்த சட்டங்கள் பலனளிக்கவில்லை. தனிமனித சுதந்திரத்தில் தலை யிடக்கூடிய நகராட்சி ஏற்படுத்திய இந்த சட்டங்களுக்காக கல்வினை குறைகூறுவது மிகவும் தவறு. அக்காலத்தில் ஒவ்வொரு நகரமும் இத்தகைய சட்டங்களை வைத்திருந்தது.
ஆனால், திருச்சபை மக்கள் புதிய ஏற்பாட்டுப் போதனைகளின்படி தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டுமென்று கல்வின் வற்புறுத்தினார். இதை நடைமுறைப்படுத்துவதற்காக திருச்சபை ஒழுங்கு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டுமென்றும், ஒழுங்கு தவறி நடக்கும் சபை அங்கத்தவர்களுக்கு திருவிருந்து கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்றும் கல்வின் சபையைக் கேட்டுக்கொண்டார். அத்தோடு திருந்த மறுக் கும் அங்கத்தவர்களை சபை நீக்கம் செய்வதும் அவசியம் என்று கல்வின் சொன்னார். திருச்சபையின் ஆத்மீக வாழ்க்கைக்கு துணைசெய்யக்கூடிய இந்த ஆத்மீக சுதந்திரத்தை வழங்க மறுத்து ஜெனிவா அரசாங்கம் கல்வினையும், வில்லியம் பெரலையும் நகரத்தைவிட்டு வெளியேற்றியது. இத்தனைக்கும் ஜெனிவா அரசாங்கம¢ தன்னை புரொட்டஸ்தாந்து அரசாங்கமாக அறிவித்துக் கொண்டது ஆச்சரியமே. கல்வின் அங்கிருந்து பிரான்ஸிலுள்ள ஸ்ட்ரெஸ்பேர்கிற்குப் போய் அங்கே பிரான்ஸ் அகதிகள் மத்தியில் இருந்த ஒரு சபையில் மூன்று வருடங்கள் போதகராக இருந்து உதவி னார். இந்தக் காலப்பகுதியிலேயே அவருக்கு லூதர், மெலாங்தன் ஆகியோரோடு உறவு ஏற்பட்டது. பின்னால் கேம்பிரிஜ் பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்த மார்டின் பியூஸரோடும் நெருங்கிய தொடர்பேற்பட்டது.
கல்வின் ஜெனிவாவைவிட்டுப் போனவுடன் ஜெனிவாவில் நிலைமை மோசமாக ஆரம்பித்தது. கர்த்தரின் வார்த்தையின்படி திருச்சபை ஆளப்பட வேண்டும் என்று கல்வின் வற்புறுத்தியதன் அர்த்தத்தை நகரத்தின் குடிமக்களின் சிலர் உணர ஆரம்பித்தனர். கல்வின் சொன்னது சரி என்பதும் அவர்களுடைய புத்திக்கு எட்டியது. ஒழுக்கக்கேடே நகர மக்களின் சகல பிரச்சனைகளுக்கும் காரணம் என்பதும் அவர்களுக்குத் தெளிவாகப் புரிந்தது. பல அரசியல் குழப்பங்களுக்குப்பின் தங்களுடைய சுதந்திரத்துக்கு ஆபத்து வருகிறது என்பதை உணர்ந்த அவர்கள் ஜெனிவாவுக்கு திரும்பி வருமாறு கல்வினுக்கு அழைப்பனுப்பினார்கள். ஸ்ட்ரெஸ்பேர்கில் அருமையாக ஊழியம் நடந்து வருவதால் ஜெனிவாவுக்கு திரும்புவது கல்வினுக்கு மனச்சமாதானத்தைத் தரவில்லை. தன்னுடைய நண்பர்கள் பலரின் வற்புறுத்தலினால் கல்வின் ஜெனிவாவுக்குப் போக இசைந்ததோடு அதுவே கர்த்தரின் வழிநடத்தல் என்பதையும் சந்தேகமில்லாமல் உணர்ந்திருந்தார்.
ஜெனிவாவில் இருபத்தி நான்கு வருடங்கள் கல்வின் பணிபுரிந்தார். அவருடைய உழைப்பு பெரும் ஆச்சரியத்தை அளிப்பதாக இருந்தது. ஒரு வாரத்தில் அவர் பல பிரசங்கங்கள அளித்தார். ஒவ்வொரு நாளும் ஒரு விரிவுரையை அளித்தார். ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் இருந்தவர்களோடு அவர் பெருந்தொகைக் கடிதத்தொடர்பை வைத்திருக்க நேர்ந்தது. அவர் புரொட்டஸ்தாந்து சீர்திருத்தத்தின் தலைவர் என்பதில் எந்த சந்தேகமும் இருக்கவில்லை. அக்காலத்தில் ஐரோப்பாவின் ஆத்மீக தேவை எது என்பதைத் தெளிவாக உணர்ந்திருந்தவர்களில் கல்வினுக்கு இணையாக ஒருவரும் இருக்கவில்லை.
திருச்சபை மக்களே தங்களுடைய சபை நிர்வாகத்தைக் கவனிக்கும் சபை அதிகாரிகளைத் தெரிவு செய்ய வேண்டும் என்றும் சபையின் ஆத்மீகக் காரியங்களை சபை சுதந்திரமாக அரசு தலையீடின்றி நடத்திச் செல்ல வேண்டும் என்றும் இந்த விஷயத்தில் திருச்சபை அரசு அதிகாரத்தின் கீழ் இருக்கக்கூடாதென்றும் கல்வின் நம்பினார். அதேவேளை அரசாங்கத்தைக் கர்த்தரே நியமித்திருப்பதால் அரசும், திருச்சபையும் தங்களுடைய தனித்துவமான பணிகளை உணர்ந்து ஒன்றையொன்று மதித்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் கல்வின் நம்பினார்.
அக்காலத்தில் போதகர்களை நியமிப்பதில் அரசு தலையீடு இருந்தது. ஜெனிவா நரக சட்டங்களில் கல்வின் தன்னுடைய நூலில் விளக்கியிருந்த திருச்சபை அமைப்புக்கெதிரான பல அம்சங்கள் இருந்தன. கல்வினுடைய விருப்பப்படி எல்லாக் காரியங்களும் ஜெனிவாவில் நிகழ முடியவில்லை. அங்கு நிகழ்ந்த பல நிகழ்ச்சிகளுக்கும், தவறான முடிவுகளுக்கும் நகராட்சியே காரணமே தவிர கல்வின் அதற்குப் பொறுப்பாளியாக இருக்கவில்லை. கல்வின் விரும்பியபடி அவருடைய போதனைகள் அனைத்தும் ஜெனிவாவில் நிறைவேறாதபோதும், பின்பு பிரான்ஸின் புரொட்டஸ்தாந்து திருச்சபையும், ஸ்கொட்லாந்து புரொட்டஸ்தாந்து திருச்சபையும் அவற்றை செயல்படுத்தின.
கல்வினின் திருச்சபை அமைப்பு பிரெஸ்பிடீரியன் திருச்சபை அமைப்பாக இருந்தது. பாப்திஸ்து திருச்சபைகள் இவற்றில் சில விஷயங்களில் மட்டும் வேறுபாடான நடைமுறைகளைக் கொண்டுள்ளன. இருந்தபோதும் பல காரியங்களில் கல்வினின் போதனைகளில் பாப்திஸ்துகளுக்கு உடன்பாடு உண்டு. கல்வினின் போதனையின்படி வேதம் தீர்க்கமாகப் போதித்து விளக்கியிருக்கும் போதனைகள் மட்டுமே திருச்சபையின் சபை அமைப்பில் கடைப்பிடிக்கப்பட வேண்டும். வேதம் அனுமதிக்காத எதுவும் திருச்சபை அமைப்பில் இடம்பெறக்கூடாது. புதிய ஏற்பாட்டு சபை அமைப்பே திருச் சபை அமைப்பாக இருக்க வேண்டும். போதகர்களும், மூப்பர்களும் திருச்சபை அங்கத்தவர்களால் தெரிவுசெய்யப்பட்டு அப்பணியில் நியமிக்கப்பட வேண்டும். இவர்களே சபையை ஆளும் அதிகாரிகளாக இருக்க வேண்டும். இவர்களுக்கு மேலாக கிறிஸ்துவின் தலைமை மட்டுமே திருச்சபையின் தலைமையாக அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்த விஷயங்களில் பாப்திஸ்து திருச்சபைகளுக்கு கல்வினோடு உறுதியான உடன்பாடுண்டு. ஆனால், கல்வின் திருச்சபைக்கு மேலாக சபைகளின் விஷயத்தில் தலையிடக்கூடிய ஏனைய நிர்வாகங்களான சினட், அனைத்து திருச்சபைகளின் மூப்பர்களின் கூடுதல், திருச்சபைகளின் பொதுவான கூடுதல் ஆகியவற்றையும் வற்புறுத்தினார். இவற்றை பாப்திஸ்து திருச்சபை அமைப்பில் காணமுடியாது.
கல்வினுடைய இறையியலின் மையமாக கர்த்தரின் இறையாண்மை இருந்தது. ஆகவே, நம்முடைய இரட்சிப்போடு தொடர்புடைய அனைத்தும் கர்த்தரின் சித்தத்தின்படியே நிகழ்கின்றன என்றார் கல்வின். கர்த்தரின் கிருபையால் விசுவாசத்தினூடாக நாம் இரட்சிக்கப்படுகிறோம். கல்வின் தெரிந்துகொள்ளுதலையும், முன்குறித்தலையும் வேதம் போதிப்பதாக விளக் கினார். லூதர் உட்பட சகல சீர்திருத்தவாதிகளும் இவற்றை விசுவாசித்தனர். ஆனால், கல்வினே இவற்றை நெறிப்படுத்தி விளக்கினார். தியோடர் பீசாவைத் (Theodore Beza) தலைவராகக் கொண்டு ஜெனிவாவில் ஒரு கல்லூரியை ஸ்தாபித்து அநேக போதகர்களுக்கு பயிற்சியளித்தார் கல்வின்.
பதப்பொருள் விளக்கம்:
புரொடஸ்தாந்து பிரிவினர் (Protestant) – 16ம் நூற்றாண்டில் சுவிசேஷத்தை விசுவாசித்து ரோமன் கத்தோலிக்க மதக்கோட்பாடுகளையும், நடைமுறைகளையும் எதிர்த்து நின்றவர்களே இப்பெயரில் பொதுவாக அழைக்கப்பட்டனர். புரொஸ்ட் (Protest) என்ற ஆங்கில வார்த்தைக்கு ‘எதிர்ப்பு’ என்பது பொருள்.
சீர்திருத்தவாதிகள் (Reformers) – சுவிசேஷத்தை விசுவாசித்து ரோமன் கத்தோலிக்க மதக்கோட்பாடுகளையும், நடைமுறைகளையும் எதிர்த்து வேதபூர்வமான கோட்பாடுகளையும், நடைமுறைகளையும் மட்டுமே திருச்சபை பின்பற்ற வேண்டுமென்று திருச்சபை சீர்திருத்தத்தில் ஈடுபட்டவர்கள் இப்பெயரில் அழைக்கப்பட்டனர். Reform என்ற ஆங்கில வார்த்தைக்கு ‘சீர்திருத்தம்’ என்ற பொருள். சீர்திருத்தவாதிகளும் புரொட்டஸ்தாந்தியர்களே.