பிலிப்பியர் இரண்டாம் அதிகாரத்தில் பவுல் அப்போஸ்தலன் பிலிப்பியர் சபை மக்களுக்கு எழுதிய அறிவுரையில் இயேசு கிறிஸ்து தன்னைத் தாழ்த்திக் கொண்டதைப் போல அவர்கள் தங்களுடைய வாழ்க்கையிலும் தாழ்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எழுதுகிறார். இப்பகுதியில் இயேசு கிறிஸ்து தன்னைத் தாழ்த்திக் கொண்ட விதத்தை விளக்கும் பவுல் ஆறு முதல் எட்டுவரையுள்ள வசனங்களில் பின்வருமாறு குறிப்பிடுவதைப் பார்க்கிறோம்.
“அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் . . . அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு . . . தம்மைத் தாமே தாழ்த்தினார்.” (பிலிப்பியர் 2:6~8)
கிறிஸ்துவின் தாழ்த்துதல் என்று பவுல் இப்பகுதியில் விளக்குவது கிறிஸ்து மனிதரூபமெடுத்து இவ்வுலகிற்கு வந்து பட்ட பாடுகளைப் பற்றித்தான்; அதுவும் அப்பாடுகளின் உச்சகட்டமான சிலுவை மரணத்தையும் உள்ளடக்கியே பவுல் விளக்குவதைக் காண்கிறோம். இவ்விதமாக கிறிஸ்து தன்னைத் தாழ்த்திக்கொண்டது உலகத்தோற்றத்துக்கு முன்பாக பிதாவினால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுடைய பாவநிவாரணத்திற்கு வழியேற்படுத்தி அவர்களுக்கு இரட்சிப்பைப் பெற்றுத்தரவே. இதெல்லாம் நிறைவேறுவதற்கு கிறிஸ்து இந்த உலகத்தில் மனிதனாகப் பிறக்க வேண்டிய அவசியமிருந்தது.
கிறிஸ்து மனிதனாகப் பிறந்தார் என்பது எல்லோருக்குமே தெரிந்த வரலாற்று உண்மை. ஆனால், பவுல் இந்த வசனங்களில் அவர் மனிதனாகப் பிறந்தவிதத்தை எவ்வாறு விளக்குகிறார் என்பதை நாம் கூர்ந்து கவனித்து விளங்கிக்கொள்வது அவசியம். கிறிஸ்து மனிதனாக இந்த உலகத்தில் பிறந்தபோது அவர் தொடர்ந்தும் தேவரூபத்திலும் இருந்தார் என்கிறார் பவுல். “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும்” என்ற வார்த்தைகள் இதைத்தான் விளக்குகின்றன. அதாவது அவர் தேவனுடைய ரூபமாய்த் தொடர்ந்து இருந்த நிலையில் அவர் மனிதரூபத்தையும் தன்னோடு சேர்த்துக் கொண்டார் என்பதே இதன் விளக்கம். இதன் அடிப்படையில் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்தபோது தன்னில் தெய்வீகம், மானுடம் ஆகிய இருதன்மைகளைக் கொண்டிருந்தார் என்பதை நாம் உணர்வது அவசியம்.
“தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே,” அவர் மனிதராகிய இயேசு கிறிஸ்து என்கிறது வேதம் (1 தீமோ. 2:5). மனிதனுக்கும் கர்த்தருக்குமிடையில் பாவம் உண்டாக்கியிருக்கிற பெரும் இடைவெளியை அகற்ற இயேசு கிறிஸ்துவாகிய மத்தியஸ்தரால் மட்டுமே முடியும். ஆனால், இந்த மத்தியஸ்தத்தை கர்த்தரால் மட்டும் நிறைவேற்ற முடியாது. ஏனெனில், கலாத்தியர் 3:20 பவுல், “மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவனல்ல, ஆனால் தேவனோ ஒருவர்” என்கிறார். இதன் மூலம், கர்த்தர் தனக்குத்தானே மத்தியஸ்தம் செய்துகொள்ள முடியாது, அப்படிச் செய்தால் கர்த்தர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாக நேரும் என்கிறார் பவுல். கர்த்தர் கர்த்தராக இருக்கிறார், ஆனால், மனிதன் கர்த்தரல்ல. இந்த நிலைமையில் கர்த்தருக்கு ஒரு மத்தியஸ்தர் தேவைப்படுவதுபோல் மனிதனுடைய நிலையை எடுத்துக்கூற அவனுக்கும் ஒரு மத்தியஸ்தர் தேவைப்படுகிறார். ஆனால், கர்த்தருக்கெதிராகப் பாவஞ்செய்திருக்கிற மனிதனுக்கு மத்தியஸ்தராக இருப்பதற்கு வானத்திலும் இந்த உலகத்திலும் ஒரு பிறவி கிடையாது. 1 சாமுவேல் 2:25 வசனத்தில் ஏலி பின்வருமாறு சொல்கிறான், “மனுஷனுக்கு விரோதமாக மனுஷன் பாவஞ் செய்தால், நியாயாதிபதிகள் அதைத் தீர்ப்பார்கள்; ஒருவன் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்வானேயாகில், அவனுக்காக விண்ணப்பஞ் செய்யத்தக்கவன் யார்.” இதையே யோபுவும் (9:33), “எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க மத்தியஸ்தன் எங்களுக்கு இல்லையே” என்று விளக்குகிறான்.
கர்த்தருக்கும் மனிதர்களுக்கும் இடையில் இத்தகைய இடைவெளி இருக்கும் நிலையிலேயே இயேசு கிறிஸ்து கர்த்தரைப் பார்த்து சொன்னார், “என் தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ வருகிறேன், புஸ்தகச் சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்.” கர்த்தருக்கும் மனிதனுக்கும் இடையில் இருந்த அந்தப் பேரிடை வெளியை அகற்றுவதற்காகவே இயேசு கிறிஸ்து மனிதனாகப் பிறந்தார். தேவனாக இருந்த அவர் தன்னில் மானுடத்தையும் இணைத்துக் கொண்டு தேவ மனிதனாக கர்த்தருக்கும் மனிதனுக்கும் இடையில் மத்தியஸ்தராக இருக்கும் சகல தகுதிகளையும் கொண்டு இவ்வுலகத்திறகு வந்தார்.
இயேசு கிறிஸ்து தற்செயலாக மத்தியஸ்தராகிவிடவில்லை. அது அவர் மேல் திணிக்கப்படவும் இல்லை. அவரால் மத்தியஸ்தராக வராமல் இருந் திருக்க முடியும். ஆனால், அவர் அதை விரும்பி சுயமாக ஏற்றுக் கொண் டார். பிலிப்பியர் 2:7 வசனத்தில் பவுல், அவர் “தம்மைத்தாமே வெறுமை யாக்கி அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்” என்று கூறுகிறார். கர்த்தருக்கும் மனிதனுக்கும் இடையில் சமாதானத்தை உண்டாக்க இயேசு தன்னை இப்படியாகத் “தாழ்த்திக் கொண்டார்” (8) என்கிறது கர்த்தரின் வேதம்.
உன்னதத்தில் இருக்கும் பரிசுத்தரான கர்த்தருக்கும் பூமியில் இருக்கும் மனிதனுக்கும் இடையில் மாபெரும் இடைவெளி இருக்கின்றது. உலகத்திலுள்ள நாடுகளும், மனிதர்களும் கர்த்தரைப் பொறுத்தவரையில் வெறும் தூசு. இருந்தபோதும் எவராலும் தனக்கு எதுவும் தேவைப்படாத பரிசுத்தரும், நீதிமானுமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தானே விரும்பித் தன்னைத் தாழ்த்தி அடிமை ரூபமெடுத்து மனிதனுக்கும் கர்த்தருக்கு மிடையில் சமாதானத்தை ஏற்படுத்த வந்தார். இது மனித சிந்தனை களையெல்லாம் சிதறடிக்கச்செய்து நம்மைப் பேராச்சரியத்துக்குள்ளாக்கும் தெய்வீக உண்மையாகும்.
பிலிப்பியர் 2:6~8 வரையுள்ள வசனங்களிலுள்ள விளக்கத்தின்படி இயேசு கிறிஸ்து மனித ரூபமெடுத்து தன்னைத் தாழ்த்திக்கொண்டபோது எதைச் செய்யவில்லை என்பதை இனி விளக்கமாகப் பார்ப்போம்.
1. தேவ குமாரன் மனித ரூபமெடுத்தபோது தன்னுடைய தெய்வீகத்தை ஒதுக்கி வைத்துவிடவில்லை.
பவுல் பிலிப்பியர் 2:6~7 வசனங்களில், “அவர் தேவனுடைய ரூபமா யிருந்தும் . . . மனுஷ சாயலானார்” என்றே விளக்குகிறார். அதாவது, அவர் தேவனுடைய சாயலில் தொடர்ந்திருந்த நிலையில் மனுஷ சாயலையும் தன்னோடு இணைத்துக்கொண்டார் என்பதே இதற்கு விளக்கம். யோவான் 1:1~3 வரையுள்ள வசனங்களில் யோவான், வார்த்தையாகிய இயேசு ஆதியிலிருந்தே இருக்கிறார் என்றும், அந்த வார்த்தை தேவனா யிருந்தது என்றும் விளக்குகிறார். இயேசு இந்த உலகத்துக்கு வந்தபோது அவர் தேவனாக தொடர்ந்திருந்தார். அவருடைய தெய்வீகத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. அவர் மனிதரூபமெடுத்து தன்னைத் தாழ்த்திக் கொண்டபோதும் தேவனாகவே இருந்தார்.
பவுல் பிலிப்பியர் 2:6 வசனத்தில், “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணவில்லை” என்கிறார். தேவனாக இருந்த இயேசு கிறிஸ்து மனித ரூபமெடுத்தபோது யூதர்கள் மத்தியில் தொடர்ந்தும் தன்னைத் தேவனா கவே அறிவித்துக் கொண்டார். அப்படிச் செய்வதை அவர் கர்த்தரிடமிருந்து கொள்ளையடிப்பதாக எண்ணவில்லை. ஏனெனில், அவர் இல்லாததொன்றை மனிதர்கள் முன் பேசவில்லை. ஆதியில் இருந்தே தேவனாக இருந்த இயேசு கிறிஸ்து மனித ரூபத்தில் இருந்தபோதும் தேவனாக இருந்த தால் யோவான் 10:30 வசனத்தில், “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” என்று வெளிப்படையாக சொல்லத் தயங்கவில்லை. அதுவே உண்மையுமாகும் (யோவான் 8:38; 10:14, 18, 30). இயேசு இவ்வாறு சொன்னபோது அவருடைய வார்த்தைகளின் பொருளை யூதர்கள் நன்றாகப் புரிந்து கொண்டிருந்தார்கள். பிதாவும் தானும் ஒன்றாயிருக்கிறோம் என்று அவர் சொன்னதற்காகவே அவர்கள் அவரைக் கல்லால் அடிக்க முயன்றார்கள்.
பவுல் பிலிப்பியர் 2 அதிகாரத்தில், இயேசு கிறிஸ்து தன்னுடைய தெய்வீகத்தை ஒதுக்கி வைத்தார் என்று சொல்லவில்லை; தேவனாக இருந்து இயேசு தன்னோடு மானுடத்தை இணைத்துக் கொண்டார் என்றே விளக்குகிறார். தேவனான இயேசு கிறிஸ்து தானிருந்த நிலையை இழந்து விடாமல் தான் இதுவரை பெற்றிராத ஒரு புது நிலையை அடைந்தார் என்றே வேதத்தில் வாசிக்கிறோம். அவ்வாறு இவ்வுலகில் மனித ரூபத்தை அடைந்த தேவனான இயேசு கிறிஸ்து தன்னுடைய தெய்வீகத்தில் தொடர்ந்தும் பரலோகத்தில் இருந்தார் என்பதையும் விளங்கிக்கொள்வது அவசியம். இந்த உலகில் அவர் மனிதனாக இருந்தபோதும், திரித்துவத்தின் இரண்டாம் ஆள்தத்துவமான, தேவனான இயேசு தன்னுடைய பிதாவுடன் இருந்த பிரிக்கமுடியாத உறவை ஒருபோதும் இழந்துவிடவில்லை. பிதாவும் அவரும் ஒன்றானதால் அவர் இந்த உலகில் மனித ரூபத்தில் இருந்தபோது பரலோகத்திலும் இருந்தார். அதுவே திரித்துவ இரகசியமும், சத்தியமு மாகும். தேவன் ஒருபோதும் தேவனாக இல்லாமல் போகமுடியாது. அதே போல் தேவனாக இல்லாத ஒருவர் ஒருபோதும் தேவனாக முடியாது.
2. தேவகுமாரன் மனித ரூபமெடுத்தபோது தன்னுடைய தெய்வீகத் தன்மையை மானுடத்தோடு கலந்துவிடவில்லை.
கிறிஸ்தவ வரலாற்றில் ஆதிசபை பல போலிப்போதனைகளை சந்தித்திருந்தது. அதில் ஒன்று ஏரியனின் (Arian) போதனையாகும். இப்போதனை, இயேசு கானாவில் தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியது போல் தான் மனிதரூபமெடுத்தபோது தன்னுடைய தெய்வீக த்தை மானுடத்தோடு கலந்துவிட்டார் என்று விளக்கியது. இயேசு கானாவில் செய்த அற்புதத்தில் வெறும் தண்ணீர் முழுத்திராட்சை இரசமாக மாறியது. அதில் தண்ணீரின் அடையாளமே இருக்கவில்லை. தண்ணீர் தன் தன்மையை முற்றாக இழந்திருந்தது. அதேபோல் இயேசுவின் தெய்வீகம் முழுமானிடமாக மாறியது என்றது இப்போதனை.
ஆனால், ஏரியனின் விளக்கம் கிறிஸ்துவின் தெய்வீகம், மானுடமாகிய இரு தன்மைகளையும் முற்றாக அழித்து அவர் மத்தியஸ்தராக இருப்பதற்கு வழியில்லாமல் செய்துவிடுகிறது. மனித குமாரனான கிறிஸ்து தன்னுடைய தெய்வீகத்தை இழந்துவிட்டால் அவரால் கர்த்தருக்கும் மனிதருக்கும் இடையிலான மத்தியஸ்தராக இருக்க முடியாமல் போய்விடும். மத்தியஸ்தராக இருப்பதற்கு அவர் தெய்வீகத்தையும் மானுடத்தையும் தன்னில் முழுமையாகக் கொண்டிருக்க வேண்டும். தண்ணீர் தன்னுடைய தன்மையை முற்றாக இழந்து திராட்சை இரசமாக மாறியதைப்போல தெய்வீகம் தன்னை இழந்து மானுடமாக மாறிவிடுகிறபோது இயேசு நமக்கு மத்தியஸ்தராக இருக்கும் தகுதியையே இழந்துவிடுகிறார். அவர் பெண்ணுக்கு பிள்ளையாக இந்த உலகத்தில் பிறந்தபோதும் தெய்வீகத்தோடேயே பிறந்தார் என்கிறது வேதம். அவரில் தெய்வீகம் தனித்தன்மையுடன் காணப்பட்டது.
3. தேவகுமாரன் மனித ரூபமெடுத்தபோது தன்னுடைய தெய்வீகத் தன்மையை எந்தவிதத்திலும் மாற்றவும், திருத்தியமைக்கவுமில்லை.
கிறிஸ்தவ வரலாற்றின் ஆதிசபைக் காலத்தில் சிலர் கிறிஸ்துவின் தெய்வீகம், மானுடம் ஆகிய இரு தன்மைகளும் ஒன்றோடொன்று கலந்து ஒன்று சேர்ந்திருந்தன என்று விளக்கமளித்தனர். ஆனால், கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையில் மாற்றங்கள் ஏற்படாமல் இது நிகழ வாய்ப்பில்லை. அப்படி அவருடைய தெய்வீகத் தன்மை மாற்றமடையுமானால் அது தன் தனித்துவத்தை இழந்துபோகும். பவுல் பிலிப்பியர் 2 வசனத்தில் கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையில் எந்த மாற்றமும் ஏற்பட்டதாக விளக்கமளிக்க வில்லை. வேதத்தை திரித்து விளக்கமளிக்க மனிதர்களைப் பயன்படுத்திக் கொள்ளுவதில் பிசாசு எப்போதுமே தயங்கியதில்லை.
நாம் ஏற்கனவே பார்த்ததுபோல் தேவனான இயேசு இதுவரை தன்னில் காணப்படாத மானுடத்தைத் தன்னோடு இணைத்துக்கொண்டபோது அவருடைய தெய்வீகம் எப்போதும்போல் தொடர்ந்திருந்தது. அதில் எந்த விதமான மாற்றங்களும் ஏற்படவில்லை; எப்போதுமிருந்ததுபோல தெய்வீக த்துக்குரிய சகல அம்சங்களையும் கொண்டு நித்தியத்தில் இருந்ததைப் போலக் காணப்பட்டது.
இயேசு தன்னுடைய மானுடத்தில் அநேக கிரியைகளைச் செய்து பாடுகளையும் இந்த உலகத்தில் அநுபவித்தார். அவர் தன்னுடைய மானு டத்தின் பூரணத் தன்மையுடன் அக்கிரியைகளைச் செய்து பாடுகளையும் அநுபவித்தார். இருந்தபோதும் அவர் தன்னுடைய மானுடத்தில் செய்த யாவையும், பட்டபாடுகள் அனைத்தும் அவருடைய தெய்வீகத் தன்மையால் செய்யப்பட்டவையல்ல. இவ்வாறு தெய்வீகத்தைத் தன்னில் கொண்டிருந்து அதை முழுமையாக உணர்ந்திருந்தபோதும் இயேசு, மனிதனாக செய்த அத்தனையையும் தேவனாக இருந்து தன்னுடைய மானுடத்தின் மூலமே செய்தார். உதாரணமாக, தேவன் தன் சுயஇரத்தத்தினால் சபையை சம்பாதித்துக்கொண்டதாக லூக்கா அப்போஸ்தலர் நடபடிகள் 20:28 வசனத்தில் விளக்குகிறான். தெய்வீகமும் மானுடமும் அவரில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லாமல் தொடர்ந்திருந்தன, செயல்பட்டன.
4. தேவகுமாரன் மனித ரூபமெடுத்தபோது அவர் மனிதர்களுக்குமுன் வெறும் மனிதத்தோற்றத்தோடு மட்டும் வாழவில்லை.
ஆதிசபைக் காலத்து போலிப்போதனைகளில் ஒன்று “டொஸட்டிசிஷம்” (Docetism) என்று அழைக்கப்படுகிறது. இதைப் பின்பற்றியவர்கள் தேவனான இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்தபோது மனிதனுக்குரிய தோற்றத்தை மட்டுமே தந்தார் என்று விளக்கியது. அதாவது பழைய ஏற்பா ட்டில் தேவதூதர்கள் மனித தோற்றத்தில் வந்து மனிதர்கள் மத்தியில் செயல்பட்டது போல் இயேசு இருந்தார் என்பது இதன் விளக்கம். இதன் மூலம் இயேசு உண்மையிலேயே மானுடத்தை தன்னில் இணைத்துக் கொண்டு மனிதனாகப் பிறந்து வாழ்ந்து மரித்தார் என்பதை இந்தப் போதனை நிராகரித்தது. இதற்குப் பதிலளித்த ஆதிசபை, “கற்பனையான ஒரு இயேசுவால் கற்பனையான இரட்சிப்பை மட்டுமே மக்களுக்கு வழங்க முடியும்” என்று கூறி இந்தப் போலிப்போதனையை சிதறடித்தது.
இயேசு கிறிஸ்துவில் முழுமையாகக் காணப்பட்ட தெய்வீகம், மானுடம் ஆகியவைபற்றி விளக்குகிறபோது பியூரிட்டன் பெரியவரான ஜோண் ஓவன் இதற்குத் தந்த விளக்கத்தைக் குறிப்பிடத்தான் வேண்டும், “நித்தியத்துக்கும் தேவகுமாரனான இயேசு தன்னுடைய மகத்தான வல்லமை, அன்பு ஆகியவற்றின் அடிப்படையில் நமக்குச் சொந்தமான மானுடத்தைத் தன்னோடு இணைத்துக்கொண்டு தனக்கே சொந்தமான தெய்வீகத்தைப் போல மானுடத்தையும் தனதாக்கிக் கொண்டார்.”
தேவனாகிய இயேசு கிறிஸ்து தன்னில் பூரணமாக தெய்வீகத்தையும், மானுடத்தையும் கொண்டு வாழ்ந்தார் என்ற போதனை நம்முடைய விசுவாசத்தின் அசைக்க முடியாத அடித்தளமாக இருக்கிறது. இது பற்றி முழுமையான அறிவில்லாதவர்களும்கூட இது நம் விசுவாசத்தின் அடித் தளம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தேவ குமாரன் நம்முடைய மானுடத்தைத் தம்மோடு இணைத்துக்கொண்டு அந்த மானுடத்தின் மூலம் ஒவ்வொரு மனிதனும் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தையும் மனிதனாக வாழ்ந்து செய்தார் என்பதை உங்களால் விளங்கிக்கொள்ளாமலிருக்க முடியாது. மெய்யாகவே அவர் மனிதகுமாரனாக இருந்தார். இதுபற்றி விளக்கிய நண்பரொருவர், “அவர் கடவுளாக இல்லாதளவுக்கு மனிதராகவும், மனிதராக இல்லாதளவுக்கு கடவுளாகவும் இருந்தார்” என்றார். இதுவே தேவகுமாரன் மனிதகுமாரனாகவும் இருந்ததன் இரகசியம். விசுவாசம் மட்டுமே ஒருவருக்கு இதனைப் புரியவைக்க முடியும்.
இறுதியாக, இயேசு கிறிஸ்து மனித ரூபமெடுத்து தன்னைத் தாழ்த்திக் கொண்டபோது அவர் என்ன செய்தார் என்பதை ஆராய்வோம்.
5. தேவகுமாரன் மனித ரூபமெடுத்தபோது மானுடத்தில் தன்னுடைய தெய்வீகத் தன்மையின் மகிமையை மறைத்துக்கொண்டார்.
பிலிப்பியர் 2:7, “அவர் தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலானார்” என்கிறது. இயேசு கிறிஸ்து மானுடத்தைத் தம்மோடு இணைத்துக்கொண்டபோது தன்னுடைய தெய்வீகத்தின் மகிமை வெளியே தெரியாதபடி மறைத்துக் கொண்டார் என்கிறது. அதன் காரணமாகத்தான் அவரைப் பார்த்த மக்களுக்கு அவர் தேவனாகத் தெரியவில்லை. அவர், தான் தேவன் என்று அறிவித்தபோது அதைக் காதால் கேட்டவர்கள் அவர் ஒருபோதும் நல்ல மனிதனாக இருக்க முடியாது என்று நம்பினார்கள். அந்தளவுக்கு அவருடைய தெய்வீகம் எவர் கண்களுக்கும் புலப்படாதபடி அவர் மனிதனாக இருந்தார். இது தேவகுமாரன் சுயமாக விரும்பி ஏற்றுக்கொண்ட பணி. அவர் “தம்மை வெறுமையாக்கி” என்பது இதையே குறிக்கிறது. தன் பிதாவுக்குக் கீழ்ப்படிந்து கிறிஸ்து இதைச் செய்தார். சர்வவல்லவரான தேவன் அந்தளவுக்கு தன் மகிமையை மறைத்துக்கொண்டார்.
யோவான் 8:58 வசனத்தில் “ஆபிரகாம் உண்டாவதற்கு முன்பே நான் இருக்கிறேன்” என்று அவர் அறிவித்ததால், இன்னும் ஐம்பது வயதுகூட ஆகாதவன் இப்படி ஆபிரகாமைப் பற்றி பேசுகிறானே என்று யூதர்கள் அவர் மேல் எறியும்படி கற்களைப் பொறுக்கினார்கள். “எந்தக் காரியத்தினி மித்தம் என் மேல் கல்லெறிகிறீர்கள்” என்று அவர் கேட்டபோது, அவர்கள் பதிலாக, “நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி இவ்விதமாக தேவதூஷனஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம்” என் றார்கள் (யோவான் 10:32, 33). அவருடைய தெய்வீகத்தை மக்களால் காணவோ புரிந்துகொள்ளவோ முடியாதபடி அதன் மகிமை அவர்களுக்கு மறைக்கப்பட்டிருந்தது. அது அவர்களுடைய சிந்தனைக்கெல்லாம் அப்பாற் பட்டதாயிருந்தது. படைப்பில் இப்படி எவருமே இரண்டு தன்மைகளைத் தம்மில் கொண்டிருந்ததில்லை.
பிலாத்து முதற்கொண்டு அவரைப் பார்த்து, “நீ கிறிஸ்துவா? என்று எங்களுக்குச் சொல்” (லூக்கா 22:67) என்று கேட்காதவர்கள் இல்லை. “நான் சொன்னாலும் நீங்கள் நம்பமாட்டீர்கள்” என்றும், பின்பு “நான் அவர்தான்” என்றும் இயேசு பதில் சொன்னாரே தவிர தன் தெய்வீகத்தை அவர்களுக்கு காட்ட ஒருபோதும் முயற்சிக்கவில்லை. சிலுவையில் மரிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்புகூட ஜனங்களும், அதிகாரிகளும், போர்ச்சேவகர்களும், பக்கத்தில் இருந்த திருடர்களில் ஒருவனும் அவரை இகழ்ந்து பரியாசம் பண்ணினார்கள் (லூக்கா 23:35~39). இயேசு எந்த சோதனைக்கும் இடங்கொடுக்காமல் இறுதிவரை தன் தெய்வீகத்தை அவர்களுக்கு மறைத்து மனித குமாரனாக மரித்தார். “தம்மை வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலானார்” என்ற பவுலின் வார்த்தைகள் இதைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
தெய்வீகமும், மானுடமும் இணைந்து மனுஷகுமாரனாக இருந்த பரிசுத்தரான தேவகுமாரன் தன்னை வெறுமையாக்கி மனிதர்கள் முன்பாகத் தாழ்த்தி திருச்சபையின் இரட்சிப்பிற்காக தன்னை சிலுவையில் ஒப்புக் கொடுத்தார். நம்மைப் போல மனுஷனாகி நமக்காக மரித்தார். அவருடைய சிலுவைப்பணி மூலம் அவரது தெய்வீகத்தின் மகிமையை உணர முடியாத வர்கள் அவரை நேசிப்பதும் இல்லை, நம்புவதும் இல்லை, அவரைச் சேர்ந்த வர்களும் இல்லை. இயேசு கிறிஸ்து தெய்வீகத்தையும், மானுடத்தையும் தன்னில் கொண்டு இவ்வுலகில் வாழ்ந்து மரித்தார் என்பதை நம்ப மறுப்ப வர்கள் கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படை சத்தியத்தை நிராகரிக்கிறார்கள். இந்துக்களும், முஸ்லீம்களும், யூதர்களும் அவரை ஒரு நல்ல மனிதனாகவோ அல்லது தீர்க்கதரிசியாகவோ மட்டுமே அங்கீகரிக்கத் தயாராக இருக்கிறார்கள். பூரணமான மனித உருவெடுத்து வந்து வாழ்ந்து மரித்த தேவகுமாரனாக அவரை அவர்களால் அங்கீகரிக்க முடியவில்லை. உலக ஞானம் அவர்கள் கண்களை மறைத்து சத்தியத்தை அறியமுடியாமல் செய்கிறது. திரித்துவ தேவனான இயேசு கிறிஸ்து தெய்வீகத்தையும், மானுடத்தையும் தன்னில் கொண்டு தன்னைத் தாழ்த்திக்கொண்டதை நிராகரித்தால் கிறிஸ்தவத்தின் அடித்தளத்திலேயே கைவைப்பது போலாகும். கிறிஸ்தவம் இந்த சத்தியத்தின் மேலேயே உறுதியாக நிலைநிற்கிறது.
இயேசு தேவனுடைய குமாரன் என்று பலமாக வேதம் கூறுகிறது திருத்துவம் என்று இல்லாத ஒன்றை வேதத்தில் நுழைய விடாதிருங்கள் 9080714767
LikeLike
உங்களைப்போலவே சிலர் இப்படித் தவறாக எண்ணிவருகின்றனர். சுவிசேஷ கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கை திரித்துவப்போதனை. அதாவது, ஒரே கர்த்தர் பிதா, குமாரன், ஆவி ஆகிய மூன்று ஆள்தத்துவங்களாக இருக்கின்றார் என்பது. இதைத்தான் ’திரித்துவம்’ என்ற பதம் விளக்குகிறது. இந்தப் பதம் வேதத்தில் காணப்படாவிட்டாலும் கர்த்தரின் ஆள்தத்துவங்களை விளக்க அவசியமானது. திரித்துவம் பற்றிய விளக்கங்கள் வேதத்தில் நேரடியாகவும், உள்ளடக்கமாகவும் தெளிவாகவே தரப்பட்டிருக்கின்றன. விசுவாசக் கண்ணோட்டத்தோடு வாசித்தால் இதைப் புரிந்துகொள்ளுவது சுலபம். கர்த்தரில் மூன்று ஆள்தத்துவங்கள் இருக்கிறார்கள் என்பதையும், அவர்களுடைய தனித்துவமான தன்மைகளையும் மறுக்கிறவர்களே சுவிசேஷக் கிறிஸ்தவத்திற்கு மாறான ஆபத்தான போலிப்போதனைகளைப் போதிக்கும் யெகோவாவின் சாட்சிகள், மோர்மன் போன்றவர்கள். வரலாற்றில் முதல் நூற்றாண்டில் இருந்து தொடரும் கிறிஸ்தவம் திரித்துவப் போதனைகளை நிராகரிக்கிறவர்களை கிறிஸ்தவ விரோதிகளாகவே கணித்து திருச்சபையில் இருந்து விலக்கிவைத்து வந்திருக்கிறது. இதை கிறிஸ்தவப் போதனைகளின் வரலாறு விளக்குகிறது. வரலாற்றில் எழுந்த அத்தனை விசுவாச அறிக்கைகளும், வினாவிடைப்போதனைகளையும் திரித்துவப்போதனையை விளக்கி அதைக் கிறிஸ்தவத்தின் அடிப்படைப்போதனையாக இணங்காட்டுகின்றன. நீங்கள் இதுபற்றி கவனத்தோடும் ஜெபத்தோடும் வேதத்தை ஆராய்ந்து இதுபற்றிய நல்ல கிறிஸ்தவ நூல்களை வாசிப்பது அவசியம். – ஆசிரியர்
LikeLike