பரிசுத்தவான்களின் விடாமுயற்சி

பரிசுத்தவான்களின் விடாமுயற்சி

Perseverance of the Saints by Calvin Waldon

இரட்சிப்பின் அநுபவத்தை அடைந்து இயேசு கிறிஸ்துவை தன்னுடைய வாழ்க்கையில் மெய்யாக விசுவாசிக்கிற மனிதன் தன்னுடைய விசுவாச வாழ்க்கையை விடாமுயற்சியுடன் தொடர்ந்து நடத்திச் செல்லுவான் என்பது வேதம் போதிக்கின்ற சத்தியமாகும். இந்தப் போதனையை Perseverance of the Saints என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். சீர்திருத்த போதனைகளில் முக்கியமான இந்தப் போதனையை சீர்திருத்த விசுவாச அறிக்கைகளும், வினாவிடைப் போதனைகளும் தெளிவாக விளக்குகின்றன. 1689 விசுவாச அறிக்கையின் 17ம் அதிகாரம் “பரிசுத்த வான்களின் விடாமுயற்சி” என்ற தலைப்பில் இந்தப் போதனையை விளக்குகிறது. எந்தளவுக்கு எது மெய்க் கிறிஸ்தவம்? என்பதை நாம் அறிந்துணர்ந்துகொள்ள வேண்டுமோ அந்தளவுக்கு இந்தப் போதனையையும் நாம் விளங்கிக்கொள்வது அவசியம். ஏனெனில் இவை இரண்டுமே ஒன்றுக் கொன்று பிரிக்கமுடியாத தொடர்புடையவை. முதலாவது இருந்தால் மட்டுமே இரண்டாவதை நாம் ஒரு மனிதனில் பார்க்க முடியும்.

இந்தப் போதனையை நாம் விளக்கமாகப் பார்ப்பதற்கு முன் கிறிஸ்தவன் யார்? என்பதை வேதம் விளக்குகின்ற முறையில் விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு கிறிஸ்தவ இதழில் பெயர்க் கிறிஸ்தவர்களைப் பற்றியும், போலிக் கிறிஸ்தவர்களைப் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டிருந்தது. அதில் பெயர்க் கிறிஸ்தவர்கள் போலிக் கிறிஸ்தவர்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டப்பட்டிருந்தார்கள். அத்தோடு போலிக் கிறிஸ்தவர்களே மிகவும் ஆபத்தானவர்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தார்கள். அந்த இதழில் பெயர்க்கிறிஸ்தவர்கள் போலியாக நடப்பதில்லை என்று விளக்கமளிக்கப் பட்டிருந்தது. இதை ஏன் சுட்டிக் காட்டுகிறேன் என்றால் தமிழினத்தில் பாரம்பரிய சபைகளான ஆங்கிலிக்கன், மெத்தடிஸ்ட், லூதரன் போன்ற சபையைச் சார்ந்த அநேகரை நாம் பெயர்க் கிறிஸ்தவர்கள் என்று அழைப்பது வழக்கம். இதற்குக் காரணம் அவர்கள் குடும்பப் பாரம்பரியத்தைப் பின்பற்றி சபை அங்கத்தவர்களாக இருக்கிறார்களே தவிர இரட்சிப்பின் அனுபவத்தை வாழ்க்கையில் பெற்றிருப்பதில்லை. இவர்கள் மெய்க்கிறிஸ்தவர்கள் அல்ல; வெறுமனே பாரம்பரியமாக சபைக்குப் போய் வந்து கொண்டிருப்பதோடு சரி; இவர்களுடைய வாழ்க்கையில் இயேசு இல்லை. உண்மையில் இதுவும் போலி வாழ்க்கைதான். இவர்கள் தெரிந்தோ தெரியாமலோ இப்படி வாழ்ந்தாலும் இவர்களுடைய வாழ்க்கை போலியானது. இரட்சிப்பை வாழ்க்கையில் அடையாமல் சபைக்கு உள்ளே இருப்பதால் இவர்களுக்கு எந்தவிதமான சலுகையையும் கர்த்தர் காட்டிவிடப் போவதில்லை. சபை வாசற்படியை மிதித்திராத ஒரு இந்துவுக்கும் இவர்களுக்கு மிடையில் எந்தவிதமான வேறுபாடும் இல்லை. அவன் சபைக்கு வெளியே இருக்கும் அவிசுவாசி; இவர்கள் சபைக்கு உள்ளே இருக்கும் அவிசுவாசிகள். இரட்சிப்பை அடையாத இரண்டு பகுதியினரும் இறந்தபின் போய்ச் சேரப்போகிற இடம் ஒன்றாகத்தான் இருக்கும். ஆகவே, பெயர்க் கிறிஸ்தவர்கள் என்ற பெயரையும் போலிக் கிறிஸ்தவர்கள் என்ற பெயரையும் மெய்யாகவே கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களாக இருக்கும் நிலையில் கிறிஸ்தவர்கள் என்ற பெயரைச் சூட்டிக்கொள்கிற அனைவருக்கும் பொதுவாகவே பயன்படுத்த வேண்டும். வேதம் இருவிதமான மனிதர்களைப் பற்றி மட்டுமே எப்போதும் விளக்கமளிக்கிறது: (1) கிறிஸ்தவர்கள் (விசுவாசிகள்) (2) கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் (அவிசுவாசிகள்). இவர்களுக்கு மத்தியில் வேறு பிரிவினர் கிடையாது.

பரிசுத்தவான்களின் விடாமுயற்சி என்ற கிருபையானது கிறிஸ்தவர்களுக்கு, அதாவது விசுவாசிகளுக்கு மட்டுமே சொந்தமானது. விசுவாசிகளைப் பற்றிய யோவான் 10:27–30 வரையிலான வசனங்களில் சில உண்மைகளை இயேசு ஆணித்தரமாக விளக்குகிறார். “என்னுடைய ஆடுகள் என் சத்தத்தைக் கேட்கும்; நான் அவைகளை அறிவேன்; அவைகள் என்னைப் பின்பற்றும்.” என்றார் இயேசு. தொடர்ந்து, அவருடைய சத்தத்தைக் கேட்டு அவரைப் பின்பற்றுபவர்கள் அடையப்போகும் நன்மைகளை அவர் விவரிக்கிறார். “நான் அவர்களுக்கு நித்திய ஜீவனை அளிக்கிறேன்; அவர்கள் ஒருபோதும் அழிய மாட்டார்கள்.” என்றார் இயேசு. அத்தோடு அவர், “என்னுடைய கரத்தில் இருந்து அவர்களை ஒருவரும் பிடுங்கிவிட முடியாது; அவர்களை எனக்குக் கொடுத்த என்னுடைய பிதா எல்லோரையும்விடப் பெரியவராக இருக்கிறார். அவருடைய கரத்தில் இருந்து அவர்களை எவரும் பிடுங்கிவிட முடியாது.” என்று கூறி முடித்தார்.

இயேசு கிறிஸ்துவின் இந்த வசனங்களில் இருந்து இருபெரும் உண்மைகளை விளங்கிக் கொள்ளலாம். (1) அவர் அவருடைய ஆடுகளுக்கு நித்திய ஜீவனை அளிக்கிறார். (2) ஆகையால், அந்த ஆடுகள் அவரைவிட்டு ஒரு போதும் பிரிந்து செல்ல முடியாது. இதிலிருந்து ஆடுகள் ஒருபோதும் ஓநாய்களாக மாறிவிட முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மறுபிறப்படைந்த எவரும் அதை இழந்துவிட முடியாது. அத்தோடு கிறிஸ்துவின் கரத்தில் ஆடுகள் இருப்பதாகவும், அவைகள் மேல் பிதாவின் கரம் இருப்பதாகவும் இயேசு சொல்லுகிறார். இதன் மூலம் எத்தகைய நித்திய பாதுகாப்பு மெய்க் கிறிஸ்தவர்களுக்கு கர்த்தரிடம் இருந்து கிடைக்கிறது என்பதை இயேசு உறுதியாக விளக்குகிறார். இந்தப் பகுதி தெளிவாக விசுவாசிகளின் நித்திய பாதுகாப்பைப் பற்றி விளக்கும் முக்கிய வேதப்பகுதியாக இருக்கிறது. இதை 1689 விசுவாச அறிக்கை தனது பதினேழாவது அதிகாரத்தில் மிகவும் அழகாக விளக்குகிறது.

போதனைக்கான விளக்கம்

இந்தப் போதனைக்கான விளக்கத்தைப் பார்க்கின்றபோது இரண்டு முக்கிய கேள்விகளுக்கு பதிலளிப்பது அவசியம். (அ) இந்த விடாமுயற்சிக்குரியவர்கள் யார்? (ஆ) விடாமுயற்சி என்பது என்ன?

(அ) விடாமுயற்சிக்குரியவர்கள்

பவுல் அப்போஸ்தலர் இவர்களைப் பற்றி எபேசியர் 1:3ல் விளக்கும் போது, “கிறிஸ்துவுக்குள்ளே உன்னதங்களில் சகல ஆசீர்வாதத்தினாலும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்று விளக்குகிறார். இவர்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்களாக இருப்பதால் தங்களுடைய விசுவாசத்தை விடாமுயற்சியுடன் பாதுகாத்துக்கொள்வார்கள். எபேசியர் இரண்டாம் அதிகாரத்தின் ஆரம்பப் பகுதி விசுவாசத்தை அடைவதற்கு முன்பாக இருந்த விசுவாசிகள் வாழ்ந்த பாவவாழ்க்கையையும், கிறிஸ்துவுக்குள் அவர்கள் இப்போதிருக்கும் நிலைமையையும் விளக்குகிறது. பாவத்தின் கட்டுக்குள் கண்கள் இருண்டு போய் பாவச்செயல்களில் திளைத்து இருந்தவர்களை கர்த்தர் தம்முடைய குமாரன் மூலம் கிருபை காட்டி விசுவாசத்தின் மூலம் இரட்சித்தார். கிறிஸ்துவுக்குள்ளாக அவர்களை எழுப்பி ஜீவனை அளித்தார்; உயிர்ப்பித் தார். இதை எபேசியர் 2:5–7 வசனங்கள் விளக்குகின்றன.

விசுவாசிகள் கிறிஸ்துவுக்குள்ளாக நித்திய ஜீவனை அடைவதற்கு எது ஏதுவாக இருந்தது? திட்ப உறுதியாக (Effectual Call – பயனுறுதியாக) அவர்கள் கர்த்தரால் அழைக்கப்பட்டிருப்பதாலேயே அவர்கள் கிறிஸ்துவுக்குள் நித்திய ஜீவனை அடைகிறார்கள். பரிசுத்த ஆவியானவர் பாவியாகிய மனிதனின் பாவத்தை அவனுக்கு உணர்த்தி, அவனுடைய இருதயத்தைப் புதுப்பித்து, சித்தத்தை மாற்றிக் கிறிஸ்துவைப் பற்றிய ஞானத்தை அவனுக்கு அளிக்கிறார். இந்தத் திட்ப உறுதியான அழைப்பின் (பயனுறுதி) மூலம் பரிசுத்த ஆவியானவர் பாவிகள் கிறிஸ்துவைத் தழுவிக் கொள்ளும்படிச் செய்கிறார். (2 தீமோ. 1:9).

இவ்வாறாக ‘கிறிஸ்துவுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்’ பரிசுத்த ஆவியானவரினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் என்று வேதம் விளக்குகிறது. வெறுமனே அவர்கள் கிறிஸ்துவுக்காக தீர்மானத்தை எடுக்காமல் பரிசுத்த ஆவியியானவரின் கிரியையினாலே தங்களுடைய வாழ்க்கையில் இரட்சிப்புக்குரிய ஆத்மீக மாற்றத்தை அநுபவித்தவர்கள். 2 தெச. 2:13ல் பவுல் தெசலோனிக்கேயரின் விசுவாசத்தைப் பற்றி விளக்கும்போது, “நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிற தினாலும், இரட்சிப்படையும்படிக்கு . . . தேவன் உங்களைத் தெரிந்து கொண்டபடியினாலே. . .” என்று கூறுவதைப் பார்க்கிறோம். இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் பரிசுத்தமாக்குகிற செயலைச் செய்கிறவர் பரிசுத்த ஆவியானவரே. அவர் மனிதனுடைய வாழ்க்கையை மாற்றி அமைத்து, பரிசுத்த வாழ்க்கையை அவன் வாழும்படியான இருதயத்தை அளித்து, பழையன கழிந்து அனைத்தும் புதியனவாக மாறும்படிச் செய்கிறார். பரிசுத்த ஆவியானவருடைய கிரியையினாலேயே மனிதன் தீயநடவடிக்கை களுக்கும், கேட்டிற்கும் விலகியோடுகிறான்.

அடுத்ததாக, இவ்வாறாக கிறிஸ்துவுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ‘விசுவாசத்தைப்’ பெற்றுக்கொள்ளுகிறார்கள். கிறிஸ்துவுக்கும் அவருடைய சுவிசேஷதத்திற்கும் கட்டுப்படுவதே விசுவாசம் ஒருவரில் செய்யும் காரியம். இதனாலேயே, விடுவாசிக்காமல் ஒருவரும் தேவனுக்குகந்த வாழ்க்கையை வாழ முடியாது என்று வேதம் விளக்குகிறது.

இதுவரை நாம் பார்த்தவற்றில் இருந்து விசுவாச வாழ்க்கையில் விடாமுயற்சியுடன் வாழ்க்கிறவர்கள் கிறிஸ்துவால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களென்றும், அவர்கள் திட்ப உறுதியாக அழைக்கப்பட்டவர்களென்றும், பரிசுத்த ஆவியினால் பரிசுத்தமாக்கப்பட்டவர்களென்றும், விசுவாசத்தைப் பெற்றுக்கொண்டவர்கள் என்றும் அறிந்துகொண்டிருக்கிறோம்.

(ஆ) விடாமுயற்சி

ஒரு மனிதனில் கிருபையின் கிரியை ஆரம்பித்து வைத்துள்ள கர்த்தர் அந்தக் கிரியையைக் கடைசிவரை நிறைவேற்றுவார் என்பதையே விசுவாசியின் விடாமுயற்சி என்ற வேதபோதனை விளக்குகிறது. இதைக் கீழ்வரும் வசனத்தில் தெளிவாகக் காணலாம். “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசு கிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி நான் உங்களை நினைக்கின்ற போதெல்லாம் தேவனைத் துதிக்கின்றேன்.” (பிலி. 1:5). இதையே பவுல் ரோமர் 8:28-30 வரையிலுள்ள வசனங்களிலும் விளக்குகிறார்.

விசுவாசி தன்னுடைய வாழ்க்கையில் பரிசுத்த ஆவியையும் அவருடைய ஈவுகளையும் தொடர்ந்து கொண்டிருப்பான். பரிசுத்த ஆவியானவரின் அத்தகைய ஈவுகளாக விசுவாசம் (1 யோவான் 5:1-5), மனந்திரும்புதல் (1 யோவான் 1:7-9), அன்பு (1 யோவான் 3:14–15), நம்பிக்கை (கொலோசெயர் 1:23), ஆனந்தம் (மத்தேயு 13:44) ஆகியன உள்ளன. இந்தக் கிருபைகளையே பரிசுத்த ஆவியானவர் விசுவாசியின் இருதயத்தில் ஏற்படுத்துகிறார். இந்தக் கிருபைகளை விசுவாசி ஒருபோதும் இழந்துபோக முடியாது; அவற்றை அவனுடைய வாழ்க்கையிலிருந்து ஒருபோதும் அகற்றிவிட முடியாது.

இருந்தபோதும், விசுவாசி தன்னுடைய வாழ்க்கையில் இந்த விடாமுயற்சிக்கெதிரான எதிர்ப்புகளை நிச்சயம் சந்தித்தேயாக வேண்டும். அவன் தன் வாழ்க்கையில் “அநேக புயல்களையும், வெள்ளங்களையும்கூட” (1689 வி. அ, 17:1) சந்திக்க நேரிடும். அத்தோடு அவன் தன் வாழ்க்கையில் அவநம்பிக்கையையும், பிசாசின் சோதனைகளையும் எதிர்கொண்டு குறிப்பிட்ட காலத்துக்கு கர்த்தருடைய அன்பையும், ஆறுதலையும் தன் வாழ்வில் உண ராமல் வழிதவறிப் போகவும் நேரிடும். ஆனால், இந்த தடைகளில் எதுவும் விசுவாசியை இயேசு கிறிஸ்துவிடம் இருந்து பிரிக்க முடியாது. பவுல் அப் போஸ்தலன், “நான் நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன்” என்று சொல்லுவதை வாசிக்கிறோம். (2 தீமோ. 4:7). விசுவாசி எத்தனை சோதனைகளைத் தன்னுடைய வாழ்க்கையில் அநுபவிக்க நேர்ந்தாலும் கர்த்தர் நித்திய இரட்சிப் புக்காக அவனைப் பாதுகாப்பார். (1 பேதுரு 1:5; வெளி. 13:8).

இந்தக் கோட்பாட்டிற்கான அத்திவாரம்

1689 விசுவாச அறிக்கையில் சீர்திருத்தவாத பெரியவர்கள் விசுவாசியின் விடாமுயற்சியாகிய இந்தக் கோட்பாடு ஆறு தூண்களை ஆதாரமாகக் கொண்டிருப்பதாக விளக்குகிறார்கள். அவர்கள் அவற்றை விளக்குவதற்கு முன்பாக ஓர் உண்மையை ஆரம்பத்திலேயே குறிப்பிடாமல் விடவில்லை. அதாவது, இந்தப் பரிசுத்தவான்களின் விடாமுயற்சி விசுவாசிகளினுடைய சுயாதீன சித்தத்தில் தங்கியிருக்கவில்லை என்பதை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். நமக்கு இரட்சிப்பைப் பெற்றுத் தருவது நமது சுயாதீன சித்தமல்ல; கர்த்தரின் கிருபையே. விசுவாசி தன்னுடைய விசுவாசத்தில் நிலைத்திருக்க தன்னில் முழுமையாகத் தங்கியிருக்கவில்லை என்பதை இதன் மூலம் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் இதை விளக்கியிருக்கிறார்கள்.

இனி பரிசுத்தவான்களின் விடாமுயற்சிக்கு ஆதாரமாக இருக்கும் ஆறு தூண்களையும் ஆராய்வோம். இதில் முதலாவது தூண்,

 

(1) கர்த்தரின் மாறாத்தன்மையுடைய தெரிந்துகொள்ளுதல்.

கர்த்தரின் தெரிந்துகொள்ளுதலின் மூலமாகவே மனிதன் விசுவாசத்தை அடைகிறான். பவுல் தெசலோனிக்கேயரைப் பார்த்து, “ஆதி முதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறார்.” என்று கூறுகிறார். எபேசியர் 1:4, கர்த்தர் இதைத் தன்னுடைய மகிமைக்காகவே செய்கிறார் என்று விளக்குகிறது. யோவான் 6:38-40 வரையுள்ள வசனங்களில் இயேசு, தன்னை விசுவாசிக்கிற அனைவரும் பாதுகாக்கப்பட்டு இறுதியில் நித்திய இராஜ் யத்தை சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்று விளக்குகிறார்.

(2) கிறிஸ்துவின் வல்லமையான கிரியை

விசுவாச அறிக்கை இதை “கிறிஸ்துவின் வல்லமையிலும், நிச்சயமான வெற்றியை அளிக்கும் அவருடைய தகுதியிலும், பரிந்துரைத்தலிலும்” என்று விளக்குகிறது. பவுல் ரோமர் 8ல், கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு எதிராக ஒருவரும் குற்றஞ்சாட்ட முடியாதென்றும், “கிறிஸ்துவே மரித்தார்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலது பாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.” அதனால் விசுவாசிகள் எந்தவிதத்திலும் கண்டனத்துக்குரியவர்களல்ல என்கிறார். கிறிஸ்துவின் சிலுவை மரணம், கர்த்தர் தெரிந்துகொள்ளுதலின் மூலம் தம்மிடம் அழைத்துக்கொண்டவர்களை மகிமையை நோக்கி அழைத்துச் செல்லும் பயனுறுதியுடையது.

பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்து இயேசு கிறிஸ்து ஆசாரியராக தொடர்ந்து தன்னுடைய மக்களுக்காக பரிந்துரை செய்வதன் மூலம் மீட்பின் பணியை அவர்களில் நடத்திச் செல்லுகிறார். இதையே யோவான் 17ம் அதிகாரம் விளக்குகிறது. தன்னுடைய மக்களுடைய இரட்சிப்புக்காக கிறிஸ்து சிலுவையில் மரித்த பணியோடு பிரிக்க முடியாத தொடர்புடையது அவரது பரிந்துரைக்கும் பணி. லூக்கா 22:31-32ல், பேதுருவை சாத்தான் சோதிக்கவிருப்பதாக அவனிடம் எச்சரிக்கிறார். அத்தோடு அவனுடைய வெற்றிக்காக ஜெபிப்பேன் என்பதையும் இயேசு பேதுருவுக்கு உணர்த்து கிறார். கிறிஸ்துவோடு இணைக்கப்பட்ட விசுவாசிகள் அவருடைய வல்லமையால் தொடர்ந்து காக்கப்படுகிறார்கள். தங்களுடைய கிருபையின் அநுபவ வாழ்க்கையில் அவர்கள் இறுதிவரை விடாமுயற்சியுடன் தங்களு டைய விசுவாச வாழ்க்கையை நடத்துவார்கள்.

(3) கர்த்தருடைய ஆணை

பரிசுத்தவான்களின் விடாமுயற்சி தங்கி நிற்கும் மூன்றாவது ஆதாரத் தூண் கர்த்தருடைய வாக்குத் தத்தமாகும். இதை எபிரேயர் 6:16-20 வரையுள்ள வசனங்களில் வாசிக்கிறோம். இதன்படி ஆபிரகாம் கர்த்தரின் வாக்குத்தத்தத்தை அவருடைய ஆணையின் மூலம் பெற்றுக்கொண்டதாக வாசிக்கிறோம். அதேபோல விசுவாசிகளை அழைத்த தேவன் தன்னுடைய வாக்குத்தத்தத்தை ஓர் ஆணையின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். எப்போதும் தன்னுடைய வாக்குறுதிகளைத் தவறாமல் நிறைவேற்றும் பரிசுத்தமான தேவன் இதைச் செய்திருக்க வேண்டிய அவசியமில்லை. இருந்த போதும் தன்னுடைய பிள்ளைகளின் ஆறுதலுக்காக ஆணையிட்டுத் தன்னுடைய வாக்குறுதிகளை அவர்களுக்கு அளித்திருக்கிறார். இந்த வாக்குத்தத்தமும், ஆணையும் கர்த்தர் அளித்துள்ள இரட்சிப்பின் மூலம் விசுவாசிகளுக்கு ஆறுதலையும், ஆனந்தத்தையும் அளிக்கின்றன.

(4) அவர்களில் உள்ள பரிசுத்த ஆவியானவர்

எபேசியர் 1:13-14 வரையுள்ள வசனங்களில் பவுல், மீட்பின் பலன்களில் ஒன்றாக விசுவாசிகளுக்கு பரிசுத்த ஆவியானவர் முத்திரையிட்டு அளிக்கப்பட்டுள்ளார் என்று விளக்குகிறார். ‘முத்திரை’ என்ற பதம் உரிமையையும், பாதுகாப்பையும் விளக்குவதாக இருக்கிறது. அந்தக் காலத்தில் அடிமைகள் அவர்களுடைய சொந்தக்காரர்களின் உரிமை என்பதை விளக்குவதற்காக அவர்களில் முத்திரையிடும் வழக்கம் இருந்தது. இன்றும் மாடுகளின் உரிமையாளர்கள் தங்களுடைய மாடுகளுக்கு இத்தகைய முத்திரையிடும் வழக்கம் இருக்கிறது. இதேவிதமாக நம்முடைய ஆத்மீக சொத்துக்களின் உரிமைப் பத்திரமாக நாம் பரிசுத்த ஆவியானவரை அடைந்திருக்கிறோம். கர்த்தர் பரிசுத்த ஆவியானவரை நமக்கு முத்திரையிட்டு அளித்திருக்கிறார். ஓ பிரையன் (O’Brian) எபேசியருக்கு எழுதிய வியாக்கியானத்தில் சொல்லுவதைப் போல “நம்முடைய சுதந்திரத்தின் அச்சாரமாக (We have been provided with an advance installment of the Spirit) அவர் அளிக்கப்பட்டிருக்கிறார். . . கர்த்தர் நாம் பரலோகத்தில் அநுபவிக்கப்போகும் சொத்தை மட்டும் இங்கே குறிப்பிடாமல், அந்த ஆசீர்வாதத்தை இந்த உலகத்தில் நாம் ருசி பார்க்கப்போகிறோம் என்றும் வாக்குத்தத்தம் செய்கிறார்.” விசுவாசிகள் தாங்கள் பெற்றுக்கொண்டிருக்கிற பரிசுத்த ஆவியானவரை இழந்து விடலாம் என்ற தவறான போதனை, கர்த்தர் தன்னுடைய ஆணையை மீறித் தாம் கொடுத்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்றாமல் போய்விடலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

(5) விசுவாசிகளில் இருக்கும் கர்த்தரின் வித்து

விசுவாச அறிக்கை (1689, 17:1) விளக்கும் பரிசுத்தவான்களின் விடாமுயற்சியின் ஐந்தாம் தூணாகிய, விசுவாசிகளில் இருக்கும் கர்த்தரின் வித்து என்பது அவர்களில் இருக்கும் பரிசுத்த ஆவியானவரைக் குறிப்பதாக இருக்கிறது. யோவான், 1 யோவான் 3:9ல், “தேவனால் பிறந்த எவனும் (தொடர்ச்சியாக) பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது.” என்கிறார். இந்த வித்து பரிசுத்த ஆவியான வரையே குறிக்கிறது. 1 யோவான் 5:18ல், யோவான், தேவனால் பிறந்தவன் தொடர்ச்சியாகப் பாவஞ்செய்யான் என்று கூறி அதற்குக் காரணம் “அவன் தன்னைக் காக்கிறான்” என்கிறார். அவன் பரிசுத்த ஆவியின் வழியில் நடப்பதன் மூலம் தன்னைப் பாவத்தில் இருந்து காத்துக் கொள்ளுகிறான் என்பது இதற்குப் பொருள்.

(6) கர்த்தரின் கிருபையின் உடன்படிக்கை

பரிசுத்தவான்களின் விடாமுயற்சியாகிய போதனைக்கு இறுதி ஆதாரத் தூணாக இருப்பது கர்த்தரின் கிருபையின் உடன்படிக்கையாகும். பழைய உடன்படிக்கையைப் போலல்லாமல் புதிய உடன்படிக்கை கர்த்தரின் உடன்படிக்கைக்கு உட்பட்டவர்களுக்கு இரட்சிப்பின் நிச்சயத்தையும், விசுவாச வாழ்க்கையில் விடாமுயற்சியையும் தருகிறது (யெரேமியா 31:33-34; 32:40; எபிரேயர் 10:11-18). “புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை வாழ்க்கையில் பெற்றுக்கொண்டவர்கள் தங்களுடைய விசுவாச வாழ்க்கையில் பின்வாங்கி இரட்சிப்பை இழந்துபோவார்கள் என்ற போதனையை வேதத்தில் எங்குமே காணமுடியாது.” என்கிறார் சாமுவேல் வோல்டிரன்.

இதுவரை நாம் பார்த்த ஆறு தூண்களும் பரிசுத்தவான்களின் விடா முயற்சியாகிய வேத போதனைக்கு ஆதாரமாக இருந்து இந்தப் போதனை எந்தளவுக்கு சத்தியமானது என்பதை ஆணித்தரமாகப் போதிக்கின்றன.

இந்தக் கோட்பாடுபற்றிய ஓர் முன்னெச்சரிக்கை

1689 விசுவாச அறிக்கையை எழுதிய பெரியவர்கள் இந்தப் போதன பற்றிய ஒரு அவசியமான முன்னெச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்கள். அதாவது, ‘பரிசுத்தவான்களின் விடாமுயற்சி’யாகிய போதனை உறுதியாக வேதத்தில் காணப்பட்டபோதும், மெய்க் கிறிஸ்தவர்கள் மோசமான பாவத்தில் விழுந்துவிடலாம் என்றும் அதில் அவர்கள் சிறிது காலம் தொடர்ந்திருந்துவிடலாம் என்பதையும் வேதம் போதிப்பதாக நமது பெரியவர்கள் விளக்குகிறார்கள். இதையே வேதம் போதிக்கும் ‘பரிசுத்தவான்களின் பின்வாங்குதல்’ (The Doctrin of Backsliding) என்று அறிந்துகொள்கிறோம். இந்தப் பின்வாங்குதலைப் பற்றியே விசுவாச அறிக்கையின் 17ம் அதிகாரத் தின் இறுதிப்பகுதி விளக்குகிறது.

அ. இதற்கான காரணிகள்

இத்தகைய பின்வாங்குதலுக்கு நான்கு காரணங்கள் இருப்பதாக வேதத்தில் இருந்து அறிந்துகொள்கிறோம்.

(1) சாத்தானின் சோதனை – இயேசு கிறிஸ்துவும்கூட சாத்தானால் சோதிக் கப்பட்டதாக மார்க்கு 1:13ல் இருந்து அறிந்துகொள்ளுகிறோம். 1 பேதுரு 5:8ல் பேதுரு, “உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்களாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்” என்று சாத்தானைப் பற்றிச் சொல்லுவதைப் பார்க்கிறோம். ஆகவே, விசவாசி சாத்தானால் சோதிக்கப்படுகிறபோது அவனை எதிர்த்து நிற்காவிட்டால் விசுவாசத்தில் பின்வாங்கிப்போக நேரிடும்.

(2) உலக இச்சை – யோவான், 1 யோவான் 2:15ல், “உலகத்திலும் உலகத் தில்லுள்ளவைகளிலும் அன்பு கூறாதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பு இல்லை” என்கிறார். உலக இச்சைக்கு விசுவாசி தன்னை உட்படுத்திக் கொண்டால் விசுவாச வாழ்க்கையில் பின்வாங்கிப் போக நேரிடும்.

(3) விசுவாசி தன்னில் எஞ்சியிருக்கும் பாவத்தோடு நடத்தும் போராட்டம் (the ongoing remaining corruption within man) யாக்கோபு 1:14ல், “அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு சோதிக்கப்படுகிறான்” என்கிறார் யாக்கோபு. இப்பகுதியில் 12-16 வரையுள்ள வசனங்கள் விசுவாசிக்கேற்படும் சோதனையைப் பற்றியும், விசுவாசி அதை எதிர்கொள்ள வேண்டிய முறையைப் பற்றியும் யாக்கோபு விளக்குகிறார். இதை விசுவாசி பின்பற்றாவிட்டால் பின்வாங்கிப்போக நேரிடும்.

(4) பரிசுத்தவான்களின் விடாமுயற்சிக்காகத் தரப்பட்டுள்ள கிருபையின் சாதனங்களை அலட்சியப்படுத்துதல் – விசுவாசி தன்னுடைய பரிசுத்த வாழ்க்கையில் வளர்ச்சியடைய கர்த்தர் தன்னுடைய சபையின் மூலமாக அநேக கிருபையின் சாதனங்களை அவனுக்கு அளித்திருக்கிறார். ஜெபம், வேதவாசிப்பு, ஆராதனை, ஐக்கியம், பிரசங்கம், திருவிருந்து, போதக ஊழியம் போன்ற பலவற்றைத் தந்திருக்கிறார். இவற்றை அலட்சியப்படுத்தி ஊக்கத்தோடு பயன்படுத்திக்கொள்ளாதபோது விசுவாசி தன்னுடைய விசுவாச வாழ்க்கையில் பின்வாங்க நேரிடும். அதனால்தான் எபிரேயர் 10:24-25ல், “சபைகூடி வருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல் நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம். நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்தி சொல்ல வேண்டும்” என்று அந்நிருபத்தின் ஆசிரியர் ஆலோசனை கூறுகிறார்.

ஆ. இதனால் ஏற்படும் விளைவுகள்

1689 விசுவாச அறிக்கை 17ம் அதிகாரத்தில் பரிசுத்தவான்களின் பின்வாங்குதலின் காரணமாக ஏற்படும் ஆறு விளைவுகளை வேதத்தில் இருந்து எடுத்துக்காட்டுகிறது.

(1) கர்த்தர் மனஸ்தாபமடைதல் (சங்கீதம் 38:1-8) – இந்தப் பகுதியில் தாவீது கர்த்தரின் அன்பைத் தன்னில் உணர முடியாமல் அதற்காகப் புலம்பு வதைக் காண்கிறோம். நமது பாவம், நாம் கர்த்தரைவிட்டுப் பிரிந்துவிட்டது போன்ற உணர்வை நம்மில் ஏற்படுத்தும். நம்மீது கர்த்தர் மனஸ்தாபம் கொண்டிருக்கிறார் என்பதை இதன் மூலம் நாம் உணர வேண்டும்.

(2) ஆவியானவரைத் துக்கப்படுத்தல் (1 தெசலோ. 5:14) – “ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.”

(3) கர்த்தரின் கிருபைகளையும், ஆறுதலையும் உணராமல் போகுதல் (சங்கீதம் 51:10-12) – தாவீது தன்னுடைய பாவத்துக்காக வருந்தி கர்த்தரிடம் மன்னிப்புக் கேட்கும் இந்தப் பகுதியில் தான் கர்த்தரின் கிருபைகளையும், ஆறுதலையும் அநுபவிக்கமுடியாமல் இருப்பதைப் பின்வருமாறு விபரிக்கிறான்: “சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். உமது சமூகத்தைவிட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக் கொள்ளாமலும் இரும்.”

(4) இருதயம் கடினமாகுதலும், மனச்சாட்சி காயப்படுதலும் (சங்கீதம் 32:3-4) – “நான் அடக்கிவைத்த மட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.” பாவம் செய்யும் விசுவாசியின் இருதயம் கடினப்பட்டுப்போகும். இருந்தபோதும் அவனுடைய இருதயம் அவனைத் தொடர்ந்து குற்றஞ்சாட்டும். அவனுடைய மனச்சாட்சி காயப்பட்டு அவன் திருந்தும்வரை அமைதியை வாழ்வில் அனுபவிப்பதில்லை.

(5) நம்மைச் சார்ந்த சகோதரர்கள் துக்கமடைவதோடு, கெட்டபெயரைப் பெறுதல் (2 சாமுவேல் 12:14) – ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய் சாகும் என்று சொல்லி, நாத்தான் தன் வீட்டுக் குப் போய்விட்டான்.”

(6) தங்கள் மேல் கர்த்தரின் தற்காலிக தண்டனையை வரவழைத்துக் கொள்ளுதல் (1 கொரிந்தியர் 11:27-32) – கொரிந்து சபை விசுவாசிகளில் பலர் திருவிருந்தை அலட்சியப்படுத்தி நடந்துகொண்டதாலும், வேறுவிதங்களில் பாவம் செய்ததாலும் பலவீனமடைந்து, வியாதிகளை அநுபவித்தார்கள். பலர் இறந்தும் போனார்கள். “இதினிமித்தம் உங்களில் அநேகர் பலவீனரும், வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையுமடைந்திருக்கிறார்கள்.” இவை இந்த உலகத்தில் அவர்களுக்குக் கிடைத்த தற்காலிகமான தண்டனையாகும். அவர்கள் இரட்சிப்பை இழக்காத போதிலும் கர்த்தரை மகிமைப்படுத்தி தொடர்ந்து இந்த உலகில் வாழ முடியாதபடி அவர்களுடைய பாவம் அவர்களுடைய உயிரை வாங்கியது.

இ. இக்கோட்பாடு பற்றிய இறுதி விளக்கம்

இறுதியாக மெய்க்கிறிஸ்தவர்களைப் பற்றி விளக்கும் விசுவாச அறிக்கை, “அவர்கள் பரிசுத்தவான்களாதலால் அவர்களுடைய மனந்திரும்புதல் புதுப்பிக்கப்பட்டு அவர்கள் இறுதிவரை கிறிஸ்துவுக்குள் விசுவாசத்தின் மூலம் பாதுகாக்கப்படுகிறார்கள்.” என்று முடிக்கிறது.

இதனால் விசுவாசிகள் இந்த உலகத்தில் எப்படி வாழ்ந்தாலும் அதாவது, அவர்கள் கவலையீனமாக வாழ்ந்தோ அல்லது மோசமான பாவத்தில் வீழ்ந்து அதில் தெடர்ந்திருந்து மனந்திரும்பாமல் போனாமலோ நிச்சயம் இறுதியில் நித்திய இரட்சிப்பை அடைவார்கள் என்று பொருள்கொள்ளக் கூடாது. சங்கீதம் 130:3 கூறுவதுபோல் கர்த்தர் மன்னிக்கிறவராக இருக்கிறார். அத்தோடு, மன்னிப்படைந்த மனிதனுடைய இருதயத்தில் தேவ பயத்தை யும் கர்த்தர் பதித்திருக்கிறார்.

(இந்த ஆக்கத்தை வரைந்தளித்துள்ள கல்வின் வோல்டன், அமெரிக்காவில் மிச்சிகன் மாநிலத்தில் ஓர் சீர்திருத்த பாப்திஸ்து சபையின் போதகராக இருக்கிறார்.)

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s