பிரசங்கமும், பரிசுத்த ஆவியும் – 2

பிரசங்கத்தின்மூலம் பரிசுத்த ஆவியானவர் செய்கின்ற கிரியைப் பற்றிய இந்த ஆக்கத்தில், பிரசங்கியில் ஆவியானவர் செய்யும் கிரியையைப் பற்றி கடந்த இதழில் பார்த்தோம். இனி ஆவியானவர் பிரசங்கத்தின் மூலம் செய்யும் கிரியையைப் பற்றி அறிந்து கொள்வதும் அவசியமாகிறது. திரித்துவத்தின் மூன்றாம் ஆள்தத்துவமான பரிசுத்த ஆவியானவரின் குணாதிசயங்களைப் பற்றியும், கிரியைகளைப் பற்றியும் தமிழினத்தில் பலவிதமான தவறான எண்ணப்போக்குகள் நிலவி வருகின்ற இக்கால கட்டத்தில் ஆவியானவரின் கிரியைகளைப் பற்றிய நல்லறிவு விசுவாசிகளுக்கு அவசியம் தேவை. ஆவியானவரின் கிரியை என்ற பெயரில் புறஜாதி மனிதன்கூட வெட்கப்பட்டு விலகியோடும் அளவுக்கு அநாவசியமான செயல்களை கிறிஸ்தவத்தின் பேயரில் அநேகர் இன்று நடத்தி வருகின்றார்கள். அத்தகைய தவறான போதனைகளிலிருந்தும், நடவடிக்கைகளில் இருந்தும் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள ஆவியானவரின் பரிசுத்தமான ஆத்மீகக் கிரியைகளைப் பற்றி நாம் சிந்திப்பது அவசியமாகிறது.

இயேசு கிறிஸ்துவும், அவருடைய அப்போஸ்தலர்களும் நம்மத்தியில் சரீரப் பிரகாரமாக இல்லாத இந்தக் காலத்தில், அவர்கள் இருந்த காலத்தில் ஆவியானவரின் மூலம் நிகழ்ந்த காரியங்களை நாம் எதிர்பார்க்க முடியாது. அப்போஸ்தலர்கள் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் திருச்சபையை நிறுவிய போது பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய ஊழியத்தை உறுதிப்படுத்த இயேசுவின் வழிப்படி அவர்களோடு இருந்து, அவர்கள் மூலமாக அநேக கிரியைகளைச் செய்தார். திருச்சபை இந்த உலகத்தில் நிறுவப்பட்டு, அப்போஸ்தலர்களுடைய காலம் முடிவடைந்தபின் ஆவியானவர் அத்தகைய நடவடிக்கைகளைச் செய்ய வேண்டிய அவசியமில்லாது போயிற்று. கர்த்தர் வலிமையுள்ள தன்னுடைய வசனத்தை முழுமையாக வேதப்புத்தமாக திருச்சபைக்கு அளித்து அதைத் தொடர்ந்து பிரசங்கிக்கும்படியாக கட்டளையிட்டார். வேதப்பிரசங்கம் மூலமாக ஆத்துமாக்களில் ஆவியானவரின் மூலம் கிரியை செய்து அவர்களை தேவ இராஜ்யத்துக்குள் அழைத்துக்கொள்வதும், திருச்சபையின் அங்கத்தவர்களாக்குவதும் கர்த்தரின் திட்டமாக இருந்தது. ஆத்துமாக்கள் இரட்சிப்பை அடைய சுவிசேஷப் பிரசங்கம் அத்தியாவசியமானதாக இருந்தது (ரோமர் 10). சுவிசேஷப் பிரசங்கத்தை உறுதிப்படுத்த எந்தவிதமான அசாதாரணமான அற்புதச் செயல்களும் தேவையற்றுப் போயிற்று. இதைத்தான் இன்று பலர் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். அற்புதங்களின் தேவன் தொடர்ந்து அற்புதங்களைச் செய்து கொண்டிருந்தாலொழிய எவரும் இரட்சிப்பை அடைய முடியாது என்ற எண்ணத்தில் வாழ்ந்து வருகிறார்கள். சுவிசேஷப் பிரசங்கத்தை மட்டும் செய்யமுற்படாமலும், அதன் வல்லமையில் நம்பிக்கை வைக்காமலும் சுவிசேஷக் கூட்டங்களில் எல்லாம் நோய் தீர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். புதிய ஏற்பாட்டுப் போதனைகளை விளங்கிக் கொள்ளாமலும், அதைத் தவறான அனுகுமுறையோடு எழுத்துபூர்வமாகக் கையாண்டு தவறான ஊழியங்களையும் செய்து வருகிறார்கள். இதையெல்லாம் நான் விளக்குவதற்குக் காரணம் இன்றைக்கு பரிசுத்த ஆவியானவர் எப்படிக் கிரியை செய்கிறார் என்று வேதம் விளக்கும் உண்மைகளை நாம் அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகத்தான்.

ஏற்கனவே, நாம் பரிசுத்த ஆவியானவர் பிரசங்கியில் செய்யும் கிரியை பற்றிக் கடந்த இதழில் பார்த்தோம். இனி பரிசுத்த ஆவியானவர் பிரசங்கங்களின் மூலம் ஆத்துமாக்களில் செய்யும் கிரியைகளைப் பற்றி சரிவரப் புரிந்துகொள்வதும் அவசியம்.

(2) பரிசுத்த ஆவியானவர் பிரசங்கங்களின் மூலம் செய்யும் கிரியை

பரிசுத்த ஆவியானவர் தேவவசனத்தின் மூலமாக ஆத்துமாக்களில் கிரியை செய்கிறார். அவரே வேத வசனங்களை நாம் புரிந்துகொள்ளும் படிச் செய்கிறார் (யோவான் 14). ஆவியானவரின் கிரியையில்லாமல் வசனமும், பிரசங்கமும் எவருக்கும் பயன்பட முடியாது. பரிசேயர்களும், வேதபாரகர்களும் பழைய ஏற்பாட்டைக் கரைத்துக் குடித்து யூதர்களுக்குப் போதித்த போதும் அவர்களுக்கு அதில் ஆத்மீக ஞானமில்லாதிருந்தது. அவர்களால் கர்த்தரின் செய்தியைப் புரிந்துகொள்ள முடியவில்லை; அவர்களுடைய இருதயத்தை வார்த்தை ஒருபோதும் தொடவில்லை. இதிலிருந்து இரண்டு உண்மைகளை விளங்கிக் கொள்ள வேண்டும். 1. ஆவியானவரின் துணையில்லாமல் வார்த்தையின் செய்தியை ஒருவரும் விளங்கிக் கொள்ள முடியாது. 2. ஆவியானவர் வார்த்தையின் மூலம் கிரியை செய்யாவிட்டால் கர்த்தரை ஒருவரும் விசுவாசிக்க முடியாது. ஆவியின் கிரியையின் மூலமே வசனத்தின் வல்லமையை நம்மால் அறிந்துணர்ந்துகொள்ள முடியும்.

பரிசுத்த ஆவியானவர் பிரசங்கங்களின் மூலம் கிரியை செய்கிறபோது அவருடைய கிரியை பொதுவாக நமது கண்களுக்குப் புலப்படாமலேயே இருந்துவிடும். கண்களால் பார்க்க முடியாத எதையும் ஆவியானவரின் கிரியையாக ஒப்புக்கொள்ள மறுக்கிறது பெந்தகொஸ்தே/கெரிஸ்மெடிக் இயக்கங்கள். ஆவியானவரின் கிரியையைப் பற்றி அவர்கள் கொண்டுள்ள தவறான எண்ணங்களின் விளைவு அது. பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பற்றி விளக்கிய இயேசு, அவர் காற்று வீசுகிறதைப் போல நமது கண்களுக்குப் புலப்படாமல் செயல்படுகிறார் என்றார் (யோவான் 3). இயேசு இங்கே ஆவியானவர் ஆத்துமாக்களின் இருதயத்தில் செய்கின்ற ஆத்மீகக் கிரியையைப் பற்றியே விளக்குகிறார். பெந்தகொஸ்தே/கெரிஸ்மெடிக் இயக்கங்கள் ஆவியானவரின் ஆத்மீக் கிரியைகளைவிட அவர் மனிதர்களின் சரீரத்தில் செய்யும் புறக்கிரியைகளை மட்டுமே எப்போதும் நாடி வருகிறார்கள். அதுவே அவர்கள் விடும் பெரிய தவறு. கர்த்தர் இன்று பிரசங்கத்தைப் பயன்படுத்தி ஆவியானவரின் கிரியைகள் மூலம் தன்னுடைய இராஜ்யத்துக்குள்ளும், திருச்சபைக்குள்ளும் ஆத்துமாக்களைக் கொண்டுவருவதையே பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறார். இயேசு கிறிஸ்து மறுபடியும் வருகிறபோது தன்னுடைய சபையைத் தன்னோடு கொண்டுபோக வரப்போகிறார்; அவர் தன்னுடைய மக்களுக்காக வரப்போகிறார்.

பிரசங்கிகள் பிரசங்கத்தைக் கர்த்தரில் தங்கியிருந்து பிரசங்கிக்கிற போது கர்த்தர் தன்னுடைய சித்தப்படி ஆத்துமாக்களின் இருதயத்தில் வசனம் செயல்படுமாறு ஆவியானவர் மூலம் கிரியை செய்கிறார் என்று பார்த்தோம். அப்படி ஆவியானவர் வசனத்தைப் பயன்படுத்தும்போது ஆத்துமாக்கள் துள்ளிக்குதிப்பதையோ, நிலத்தில் புரளுவதையோ, கூக்குரலிடுவதையோ, மிருகங்களைப் போல சத்தமிடுவதையோ, வலிப்பு வந்தது போல் துடிப்பதையோ. சாமி வந்ததுபோல் ஆடுவதையோ நாம் பார்க்க முடியாது. இத்தகைய சரீர நடவடிக்கைகள் எதுவும் இல்லாமலேயே ஒரு மனிதனின் இருதயத்தில் ஆவியானவர் வசனத்தின் மூலம் கிரியை செய்ய முடியும். இந்த புறச்சரீர நடவடிக்கைகள் ஆத்துமாக்களின் இருதயங்களில் ஆவியானவர் செய்யும் கிரியையின் அடையாளங்களல்ல. மாறாக, ஆவியின் கிரியை நிகழ்ந்த இருதயங்களின் சிந்தனைகளும், உணர்வுகளும் மாற்றமடைகின்றன. அவர்கள் சில வேளைகளில் பிரசங்கத்தைக் கேட்டு துள்ளிக்குதிக்காமலேயே இருதய ஆழத்தில் ஆனந்தப்படலாம். அவர்கள் ஆடாமல் அசையாமல் இருந்த இடத்தில் இருக்கும்போதே அவர்களுடைய கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகலாம். இவையெதுவும் இல்லாமல்கூட அவர்கள் அமைதியாக இருதய மாற்றத்தை மட்டும் அடைந்து தங்களுடைய வாழ்க்கை நடைமுறைகளை மாற்றிக் கொள்ளலாம். வசனத்தின் மூலம் ஆவியானவர் செய்யும் கிரியையின் அடையாளமாக மனிதரில் சரீரத்தின் புறஅடையாளங்ளில் ஆர்வம் காட்டி வருகிறவர்கள் ஆவியின் கிரியையைப் பற்றிய வேத அறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

ஆத்துமாவின் இரட்சிப்புக்காக வசனத்தின் மூலம் ஆவியானவர் செய்யும் கிரியையை மறுபிறப்பு என்று அழைக்கிறோம். இது மனித இருதயத்தில் ஆழத்தில் உள்ளார்ந்து நிகழ்கின்ற அனுபவம். இதை நாம் கண்களால் பார்க்க முடியாது. ஆவிக்குரிய இந்த அனுபவம் கர்த்தரின் வார்த்தையை ஆவியானவர் பயன்படுத்துவதன் மூலம் மனிதனில் நிகழ்கின்றது. இது வசனத்தின் துணை இல்லாமலும் நிகழலாம் என்று பிரெஸ்பிடீரியன் இறையியலாளர் தவறாகப் போதிக்கிறார்கள். அவர்களுடைய சபை வழக்கப்படி பிறந்த குழந¢தைக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் வழக்கத்தை நியாயப்படுத்துவதற்காக இந்தவிதமாக விளக்கங் கொடுக்கிறார்கள். வசனத்தைக் காதால் கேட்டு மனந்திரும்பாத எவருக் கும் இரட்சிப்பின் அனுபவம் கிடையாது என்று வேதம் போதிக்கின்றது. பிறந்த குழந்தையால் வசனத்தைக் கேட்டு ஒருபோதும் மனந்திரும்ப முடியாது.

மறுபிறப்பாகிய அனுபவத்தை அடைந்த ஆத்துமா உடனடியாக அது நிகழ்ந்த நேரமே அதை அறிந்திருப்பதில்லை. உள்ளார்ந்து நிகழ்கின்ற இந்த ஆவியின் கிருபை புற அடையாளங்களைக் கொண்டு உடனடியாக எவரிலும் நிகழ்ந்ததாக வரலாறும் இல்லை; வேதம் அதற்கு எந்தவிதமான சாட்சியமும் அளிக்கவில்லை. மறுபிறப்பு மனிதனின் இதயத்தில் உள்ளார்ந்து நிகழ்கிறபோது சுவிசேஷப் பிரசங்கக் கூட்டத்தில் ஆவியானவரின் வெளிப்புற கிரியைகளுக்காக மட்டும் அலைகிறவர்கள் பெருந்தவறு செய்கிறார்கள். பிரசங்கத்தைக் கேட்டு வலிப்பு வந்ததுபோல் துடிக்கின்ற கூட்டத்தைத் தேடாமல், மெய்யான மறுப்பிறப்பை அடைந்த ஆத்துமாக்களை இனங் கண்டுகொள்ளும் பக்குவத்தைக் கொண்டவ்களாக நாம் இருக்க வேண்டும்.

வரலாற்றில் பரிசுத்த ஆவியினால் எழுப்புதல்கள் நிகழ்ந்த காலத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பிரசங்கத்தைக் கேட்டு மறுப்பிறப்படைந்து மனந்திரும்பியதாக வாசிக்கிறோம். ஜோர்ஜ் விட்பீல்ட், ஜொனத்தன் எட்வர்ட்ஸ், ஹொவல் ஹெரிஸ், டேனியல் ரோலன்ட்ஸ், ஸ்பர்ஜன் போன்றோரின் பிரசங்க ஊழியங்கள் இந்தவிதமாக கர்த்தரின் ஆசீர்வாதத்தைப் பெற்றதாக அமைந்திருந்தன. கர்த்தர் தன்னுடைய சித்தப்படி வரலாற்றில் குறிப்பிட்ட காலப்பகுதிகளில் எழுப்புதல்களை உண்டாக்கியிருக்கிறார். இக்காலங்களில் உலகம் பிரசங்கத்தில் வல்லமையுள்ளவர்களை சந்தித்திருக்கிறது. பிரசங்கம் மிக உயர்ந்த நிலையில் இருந்திருக்கிறது. அத்தோடு, எழுப்புதல்களை மனிதன் ஜெபத்தாலோ, வேறு எதையும் செய்தோ உருவாக்கிவிட முடியாது. இறையாண்மையுள்ள கர்த்தர் தன் சித்தப்படி அதை உண்டாக்குகிறார்.

வரலாற்றில் எழுப்புதல்கள் நிகழ்ந்த காலங்களில் ஆவியின் கிரியை யினால் பெருந்தொகையானோர் இரட்சிப்பை அடைந்தார்கள். அப்படி அவர்கள் இரட்சிப்பை அடைந்தபோதும் இன்று நாம் கேள்விப்படுகின்ற விதமாக அவர்கள் வலிப்பு வந்து ஆடவுமில்லை, நிலத்தில் விழுந்து புரளவுமில்லை. மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை விசுவாசித்ததற்கான அடையாளங்கள் மட்டுமே தெளிவாக இருந்தன. அப்படி இரட்சிப்பை அடைந்தவர்கள் அந்தக் காலங்களில் கர்த்தரின் சபைகளை நாடிச் சென்று ஜெபத்திலும், வேத வாசிப்பிலும், ஆத்மீக வாழ்க்கையிலும் வளர்ச்சியடைந்தார்கள் என்று வாசிக்கிறோம். ஜொனத்தன் எட்வர்ட்சின் காலத்தில் எழுப்புதல் நிகழ்ந்தபோது எட்வர்ட்ஸ் ஆவியின் கிரியையோடு தொடர்பற்ற சில நிகழ்வுகள் கூட்டங்களில் இருந்ததைக் கவனித்து அவற்றைத் தடுத்து வந்தார். மெய்யான இரட்சிப்பின் அனுபவத்தை அறிந்துகொள்ளுவதற்காக அதற்கான அடையாளங்களை விபரித்து அவர் ஒரு நூலையும் எழுதினார். பிசாசின் கிரியைகளை எட்வர்ட்ஸ் ஆவியின் செயல்களாக ஏற்றுக்கொள்ள மறுத்தார் என்பதை இது விளக்குகிறது. ஆவியின் கிரியை என்ற பெயரில் வரும் எதையும், எட்வர்ட்ஸோடு ஏனைய பிரசித்தி பெற்ற பிரசங்கிகளும் ஏற்றுக்கொள்ளாமல் அவற்றை நிதாதனத்தோடு சோதித்துப் பார்த்தார்கள்.

எழுப்புதல் நிகழ்ந்த காலங்களில் சில பிரசங்கிகளின் ஊழியத்தைக் கர்த்தர் பேரளவில் ஆசீர்வதித்திருக்கிறார். ஜோர்ஜ் விட்பீல்ட் இதற்கு ஒரு நல்ல உதாரணம். அவருடைய பிரசங்கங்கள் ஆத்துமாக்களை அசைத்து வரப்போகும் நியாயத்தீர்ப்பைக் குறித்து எச்சரித்து மனந்திரும்பும்படி அறைகூவலிட்டன. ஆயிரக்கணக்கில் மக்கள் அவருடைய பிரசங்கங்களைக் கேட்க அலை மோதினார்கள். இவருடைய பிரசங்கங்களை ஆவியானவர் அற்புதமாகப் பயன்படுத்தினார்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s