நீலகத்தில் உயர்ந்த, புனிதமான ஊழியமாகக் கருதப்படுவது போதக ஊழியம். போதக ஊழியம் என்று நான் குறிப்பிடுவது வேத இலக்கணங்களுக்குப் பொருந்தி வந்து திருச்சபையால் தெரிவு செய்யப்பட்டு திருச்சபையில் ஆத்துமாக்களுக்குப் போதித்தும், அவர்களுடைய ஆத்மீகத் தேவைகளைக் குறிப்பறிந்து தீர்த்தும் வைக்கிற ஊழியக்காரரின் பணியையே குறிக்கும். வேறெதையும் நாம் போதக ஊழியமாகக் கருதுவதற்கு வேதம் இடம் தரவில்லை. இதனை ஆங்கிலத்தில் Pastoral Ministry என்று குறிப்பிடுவார்கள். இப் பணிபுரிபவர்களை வேதம் ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி அழைக்கிறது. போதகர் (Pastor), மூப்பர் (Elder), கண்கானி (Overseer), உபதேசியார் (Teacher) போன்ற பல வார்த்தைகள் போதக ஊழியத்திலிருப்பவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழினத்தில் இந்த ஊழியம் இன்றைக்கு தள்ளாடும் நிலை யிலிருக்கிறதைப் புறஜாதியாரும் அறிவர். வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுகிற ஒரு சாதாரண பதவியாகவும், ஆத்துமாக்கள் மேல் அதிகாரம் செலுத்தக்கூடிய ஒரு அதிகாரப் பதவியாகவும், குடும்பத்தை வளர்த்துக்கொள்ள வசதியான ஒரு தொழிலாகவுந்தான் பெரும்பாலும் போதக ஊழியம் இன்றைக்கு திருச்சபைகளில் இருந்து வருகிறது. இதற்கு ஒரிரு விதிவிலக்குகள் நம்மத்தியில் நிச்சயம் இருக்கலாம்.
இது பகட்டான பணியல்ல
போதக ஊழியத்தில் ஈடுபட்டிருக்கின்ற அநேகர் அதை ஒரு பகட்டான பதவியாகக் கருதி வருகின்றனர். உண்மையில் ஆத்துமாக்கள் போதகர்களுக்கு மரியாதை தந்து அவர்களை நாடி வந்து ஆத்தும காரியங்களில் உதவி கேட்பதை வேதம் எதிர்பார்க்கிறது. இப்படி ஆத்துமாக்கள் தங்களை நாடி வருக்கிறார்கள் என்ற எண்ணமே அநேக போதகர்களுக்கு இதயத்தில் ஆணவத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஆத்துமாக்கள் தங்களுக்கு மரியாதை செலுத்துகிறார்கள் என்பது அவர்களுடையது மனதைக் குளிர வைக்கிறது. இத்தகைய மரியாதையை அவர்கள் எப்போதும் நாடுபவர்களாக மாறிவிடுகிறார்கள். ஆத்துமாக்களின் பாராட்டையும், அவர்களிடம் பெயர் வாங்குவதையும், அவர்களுக்குமுன் தங்களுடைய பதவிப் பெருமையைக் காட்டுவதிலும் பலர் சிந்தை குளிர்ந்து போகிறார்கள். நான் ஒரு பாஸ்டர் என்று சொல்லிக் கொள்ளுவதிலும், மற்றவர்கள் தங்களைப் பாஸ்டர் என்று அழைப்பதிலும் அவர்களுக்கு கொள்ளை ஆசை. அந்தப் பெயரைச் சொல்லி பாஸ்டர்கள் அழைக்கப்படுவது நியாயமே. இருந்தாலும் அப்படி ஆத்துமாக் கள் அழைப்பதைக் கேட்டு உச்சி குளிர்ந்து அதே நினைவாக தங்கள் பதவியின் பெருமையை எண்ணி வாழ்ந்து வருகிறவர்கள் நல்ல பாஸ்டர்களாக இருக்க முடியாது.
இது உலக ரீதியான பணியல்ல
உலகத்தில் எத்தனையோ பதவிகள், தொழில்கள் இருக்கின்றன. அவற்றில் நேர்மையானவையும், நியாமானவையும் அநேகம். இருந்தபோதும் உலகத்திலிருக்கும் அநேக பதவிகளுக்கும் போதக ஊழியத்துக்கும் இடையில் பெரும் வித்தியாசம் உண்டு. உலகத்துத் தொழில்களைப் போல போதக ஊழியத்தைக் கருத முடியாது. உலகத்துத் தொழில்களை அந்தந்தத் தொழில்களுக்கு தகுதியிருக்கும் எவரும் செய்துவிடலாம். உலகத்துத் தொழில்களுக்கு போட்டியிருக்கும். அத்தொழில்களைச் செய்ய விண்ணப்பிப்பவர்கள் தங்களுக்கு கிடைக்கப் போகும் சம்பளத் தொகையைப் பார்த்துக்கூட அந்தத் தொழிலைச் செய்ய ஆசைப்படுவார்கள், இல்லாவிட்டால் வேறு தொழிலை நாடுவார்கள். இந்த எண்ணங்களுக்கெல்லாம் போதக ஊழியத்தில் இடமில்லை. போதக ஊழியத்தில் எவருக்குமே பொருளாதார நிச்சயத்தையும், நிரந்தர பாதுகாப்பையும் எதிர்பார்க்க முடியாது. கர்த்தர் நம்மோடிருக்கும்வரைதான் அந்தப் பணியை நாம் செய்ய முடியும். உலகரீதியான எண்ணங்களோடு போதக ஊழியத்துக்கு வருகிறவர்களால் ஆத்துமாக்களின் இருதயத்துக்குத் தான் பேராபத்து.
இது உங்களை வளர்த்துக் கொள்வதற்கான பணியல்ல
போதக ஊழியத்துக்கு வருகிற அநேகர் வேறு தொழில்களை செய்ய விரும்பாமல், பெயர் பெறுவதற்கும், தங்களை வளர்த்துக் கொள்வதற்கும் இந்தப் பணியை நாடி வருகிறார்கள். அதுவும் எந்தச் சபையிலும் வாழாது, எந்தச் சபையையும் கலந்தாலோசிக்காது, தாமே தங்களை போதகர்களாக அறிவித்துக் கொண்டு ஊழியம் செய்கிறவர்கள் தமிழினம் முழுவதும் கருவேலச் செடிபோல் பரவிப் படர்ந்திருக்கிறார்கள். தேவனுக்கடுத்த உயர்ந்த நோக்கங்களைக் கொண்டிராமல் இப்படியாக குறுக்கு வழியில் போதகப் பணியைப் பலர் நாடுவதற்குக் காரணம் சமுதாயப் படிக்கட்டில் தங்களை உயர்த்திக் கொள்வதற்காகவே. அப்பணியை வைத்து எதையாவது செய்து நாலு பேர் மதிக்கும்படி உயர்ந்துவிட்டால் வாழ்க்கையில் குடும்பத்தோடு செட்டில் ஆகிவிடலாம் என்பது இவர்களுடைய எண்ணம். இவர்களுக்கு துணைபோவதற்காகவே நூற்றுக்கணக்கில் பணம் வாங்காமலேயே பட்டங்களைக் கொடுக்கும் இறையியல் கல்லூரிகளும் புற்றீசல்கள போல் பரவியிருக்கின்றன. போதகப் பணியை இந்தளவுக்கு தெருவரைக் கொண்டு வந்திருக்கும் இந்தப் பேர்வழிகளால் கர்த்தரின் புனிதமான ஊழியம் புறஜாதியினராலும் இன்று மதிக்கப்படாத நிலையை அடைந்திருக்கிறது.
இது பணம் தேடுவதற்கான பணியல்ல
பணம் சம்பாதிப்பதற்கு தங்க முட்டையிடும் வாத்தைப் போல போதகப் பணியைப் பயன்படுத்திக் கொள்ளுகிறவர்கள் தமிழினத்தில் அதிகம் என்பது மிகைப்படுத்திச் சொல்லும் வார்த்தையல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. காணிக்கைக் கொடுப்பதை மட்டுமே கருத்தோடு பேசிக் காரியத்தை முடித்துக் கொள்ளுகிற நூற்றுக்கணக்கான ஊழியக்காரர்களால் தமிழினத்தில் கிறிஸ்தவம் இன்று தலைகுனிந்து நிற்கிறது. பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பார்கள். பணம் என்றால் பிணமாகவும் தயாராக இருக்கும் ஊழியக்காரர்களை நம்மினம் தாங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இன்று. முழு நேர ஜெபக்கூட்டம், எழுப்புதல் கூட்டம், ஐக்கியக் கூட்டம், பிணி தீர்க்கும் கூட்டம், ஆத்துமவிருத்திக் கூட்டம் என்று வைக்கிற கூட்டங்கள் அனைத்திலும் காணிக்கை எடுப்பதே முக்கியப் பணியாகவும், அதுவும் ஒரே கூட்டத்தில் பல தடவைகள் காணிக்கை எடுப்பதை வழக்கமாகவும் இந்த ஊழியக்காரர்கள் கொண்டிருக்கிறார்கள். இதையும் விட இன்று டிவி சேனல்களிலும் தோன்றிப் பணம் கேட்பவர்களாக அநேகர் மாறியிருக்கிறார்கள். ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரை ஏமாற்றுகிறவர்களுக்கு கொண்டாட்டந்தான் என்பதற்கிணங்க சத்தியம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கானவர்களை இவர்கள் தங்கள் பேச்சால் மயக்கிப் பணம் சம்பாதித்துவிடுகிறார்கள். ஆத்துமாக்களுக்கு ஆவிக்குரிய உணவு வழங்க வேண்டிய புனிதமான போதகப் பணியை பணம் பண்ணுவதற்கு பயன்படுத்துகிறவர்கள் கொடுமைக்காரர்களே.
இது தகுதி இல்லாதவர்களுக்கான பணியல்ல
புனிதமான போதக ஊழியத்தை நாடுகிறவர்களுக்கென்று கர்த்தர் கட்டளையாக பல தகுதிகளை பவுல் தீமோத்தேயுவுக்கும், தீத்துவுக்கும் எழுதிய நிருபத்தில் விளக்கியிருக்கிறார். அந்தத் தகுதிகளைக் கொண்டிருக் காத எவரும், சபைக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து, சபையால் சோதிக்கப்பட்டு, சபையால் அங்கீகரிக்கப்படாத எவரும் போதக ஊழியத் துக்கு வரக்கூடாது. தகுதியில்லாதவர்களால் ஆத்துமாக்களுக்கு பேராபத்து. இந்தத் தகுதிகளை உதாசீனம் செய்துவிடுகிறபடியால்தான் திருச்சபைகளில் மோசமான மனிதர்கள் போதகப் பணிக்குள் நுழைந்துவிடுகிற நிலை ஏற்படுகிறது. போதகப் பணிக்கும், உதவிக்காரர்களுக்கும் அவசியமான, அவர்களில் காணப்பட வேண்டிய தகுதிகளை வேதம் கோடிட்டுக் காட்டுகிறதென்ற உணர்வே இல்லாமல் தகுதியற்றவர்களை, அவர்கள் சபையில் நெடுங்காலமாக இருந்திருக்கிறார்கள் என்பதற்காகவும், தலை நரைத்திருக்கிறதென்பதற்காகவும், போதகருக்கு உறவுக்காரர் என்பதற்காகவும், சபைக்கு காணிக்கை அதிகமாகக் கொடுக்கிறார் என்பதற்காகவும், இப்படி இன்னும் அநேக உலகரீதியான காரணங்களுக்காக சபை ஊழியத்துக்கு தெரிவு செய்யும் கர்த்தர் இருக்கிறார் என்ற பயமேயில்லாத சபைகள் நம்மினத்தில் ஏராளம். இத்தனையையும் செய்து விட்டு சபை ஆத்தும விருத்தி அடைந்து வருகிறது என்று ஆணவத்தோடு சொல்லி ஆராதனை நடத்தி வருகிறார்கள் இவர்கள். போதகப் பணியை, ஊழியத்தை இந்தளவுக்கு மோசமாக வைத்திருக்கும் நம்மினத்தில் கிறிஸ்தவம் வளராமலும், சத்திய வாஞ்சை இல்லாமலும் இருப்பதில் பேராச்சரியமெதுவுமில்லை.
இது அதிகமாகப் படித்துப் போதிக்காதவர்களுக்கான பணியல்ல
போதகப் பணியின் பிரதான ஆயுதம் பிரசங்கப் போதகம், அதற்கடுத்தபடியானது சபை ஆத்துமாக்களின் வாழ்க்கையில் அக்கறை காட்டி அருகே இருந்து பார்த்து வளர்ப்பது. இரண்டாவதை அடுத்தபடியாகப் பார்க்கப் போகிறோம். இனி படித்துப் போதிக்க வேண்டியதன் அவசியத்தைப் பார்ப் போம். இதைப் பற்றி வேதம் தெளிவாகப் பல இடங்களில் போதிக்கிறது. வேதத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி அதை ஆராய்ந்து படித்து அதிலுள்ளதை உள்ளவாறு அருமையான பிரசங்கங்களின் மூலம் பிரசங்கித்து ஆத்து மாக்களுடைய ஆத்தும தாகத்தைத் தீர்க்க வேண்டியது போதகனின் பெருங்கடமை. கல்வியறிவற்றவர்கள் போதக ஊழியம் செய்ய முடியாது. கிராமவாசிக்கு சுவிசேஷம் சொல்லக்கூட கல்வித்திறன் அவசியம். இங்கே கல்வியறிவு என்று நான் சொல்வது எழுதப்படிக்கவும், சீராக சிந்திக்கவும் தெரிந்திருந்து தாழ்மையோடு கற்றுக்கொள்ளும் மனப்பான்மையைக் கொண்டிருப்பதைத்தான். அத்தோடு, உலக நடப்புகளில் அக்கறை காட்டவும், சமூக இங்கிதங்களும் (Social behaviour) தெரிந்திருக்க வேண்டும். மொத்தத்தில் சொல்லப் போனால் ஒரு போதகன் உலகந்தெரியாத முட்டாளாக இருக்கக் கூடாது. காலேஜ் ‘டிகிரிகள்’ வைத்திருப்பவர்களையெல்லாம் கல்வித்திறன் கொண்டவர்களாக உடனடியாகக் கணித்துவிட முடியாது. காலேஜ் ‘டிகிரி’ இருந்தாலும் கூடவே மனத்தாழ்மை இருக்க வேண்டும். மனத்தாழ்மையுள்ளவர்கள் மட்டுமே கற்றுக்கொள்ளும் மனப்பான்மையைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் எல்லாம் தெரிந்ததுபோல் நடிக்கும் அதிகப்பிரசங்கிகளாக இருக்கமாட்டார்கள். “கற்றது கையளவு கல்லாதது உலகளவு” என்று எண்ணுபவனே மனத்தாழ்மையுள்ளவன். எத்தனை அறிவிருந்தும் மனத்தாழ்மை இல்லாவிட்டால் பிரயோஜனமில்லை. இன்னும் சொல்லுவ தானால் இவை எல்வாவற்றோடும் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும், வேத அறிவில் வளரவேண்டும் என்ற தீவிர வாஞ்சை இருக்க வேண்டும். அத்தகைய வாஞ்சை இருப்பவர்களே நேரத்தைப் பயன்படுத்தி தங்களுடைய சொந்த ஆத்தும விருத்திக்காகவும், ஆத்துமாக்களுக்கு உணவளிப்பதற்காகவும் கஷ்டப்பட்டுப் படிப்பார்கள். அக்கறையோடு வேதத்தை ஆராய்ந்து படித்துப் பிரசங்கிக்காதவர்களின் சபை ஒரு நாளும் ஆத்தும விருத்தி அடைய முடியாது.
பழைய, புதிய ஏற்பாடு நூல்களில் அறிவற்றவர்களும், பிரசங்கிக்கும் வல்லமையற்றவர்களும் பெருகியிருப்பதாலேயே இன்றைக்கு சத்தியத்தின் அடிப்படையில் அமையாது கிறிஸ்தவ ஊழியங்கள் என்ற பெயரில் அநேக போலி ஊழியங்கள் கிறிஸ்தவத்தின் பெயரில் நம்மத்தியில் காலத்தைப் போக்கிக் கொண்டிருக்கின்றன. வேதப்பகுதிகளை ஆராய்ந்து படிக்காது மேலெழுந்தவாரியாக நுனிப்புல் மேய்ந்துவிட்டு வெறும் ‘டிவோஷனல்’ செய்திகளையும், தியானச் செய்திகளையும், வாக்குத்தத்த வசனங்களையும் மட்டும் வாரித்தந்து கொண்டிருக்கும் போதகர்களை இவை வளர்த்து வாழ்வளித்துக் கொண்டிருக்கின்றன. இவர்களை போதகர்களாக நம்பியிருக்கும் ஆத்துமாக்களும் வேத அறிவில்லாது, ஆத்தும பெலமில்லாது, விசுவாச நிச்சயமும் இல்லாது காலத்தைப் போக்கிக் கொண்டிருக்கின்றன. இது இன்றைய தமிழினத்தைப் பிடித்துள்ள பெருவியாதி.
இது ஆத்துமாக்களில் அக்கறை இல்லாதவர்களுக்குரிய பணியல்ல
போதக ஊழியத்துக்கான அடிப்படைத் தகுதியே ஆத்துமாக்களில் இருக்க வேண்டிய ஆத்மீகக் கரிசனையும், அன்பும்தான். இன்றைக்கு ஆத்துமாக்களில் எந்தவிதமான அக்கறையும் காட்டாதவர்கள் போதகர்களாக இருந்து வருகிறார்கள். ரிமோட் கண்ட்ரோல் மூலம் போதக ஊழியம் செய்துவிட முடியாது. மந்தை மேய்க்கிறவன் ஆடுகளுக்கு பக்கத்தில் இருப்பான்; அவற்றின் தேவைகளை அறிந்திருப்பான்; தேவையான நேரங்களிலெல்லாம் தண்ணீரையும், மேய்வதற்கான வசதிகளையும் செய்து கொடுப்பான். அவற்றைச் செய்யாதவன் மேய்ப்பனே அல்ல. ஆத்துமாக்களை நெருங்காமல் தூரத்தில் இருந்து மட்டும் பார்த்து, ஓய்வு நாளில் மட்டும் பிரசங்கத்தை செய்துவிட்டுப் போகிறவர்கள் போதகர்களே அல்ல. அதைச் செய்வதற்கு நேரமில்லை என்று சொல்லுகிற மனிதன் போதக ஊழியத்தில் இருக்க ஒருபோதும் தகுதியில்லாதவன்.
உண்மையில் போதக ஊழியத்தைப் பற்றி அதிகம் தெரியாதவர்களாக தமிழினத்தில் அநேகர் இருந்து வருகிறார்கள். பிரசங்கம் செய்வதும், யாருக்காவது உடம்பு சரியில்லாவிட்டால் வீடுகளுக்குப் போய் ஜெபித்துவிட்டு வருவதையும் மட்டுமே போதக ஊழியமாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். கலாச்சாரம், பண்பாடு என்று சாக்குப் போக்குச் சொல்லி சபையாரைப் பற்றிய எந்த விஷயத்திலும் அக்கறை காட்டாதிருக்கிறார்கள். சபைக்கு ஒருவர் வருவது குறைந்தால் மட்டும் ஏன் என்று கேட்டுவிட்டு அத்தோடு நிறுத்திக் கொள்வது அநேகருடைய வழக்கமாக இருக்கிறது. சபை ஆத்து மாக்களில் வாழ்க்கை பற்றிய விபரங்களைத் தெரிந்து கொள்ளாது, அவர்களுடைய வாழ்க்கையில் அக்கறை காட்டாமல் இருக்கிறவன் போதகனே இல்லை. சபையின் விசுவாசிகளே ஒருவருக்கொருவர் அந்நியோன்னியமாக இருந்து, ஒருவர் வாழ்க்கையில் மற்றவர் அக்கறை காட்டி, ஒருவர் பிரச்சினைக்காக மற்றவர் ஜெபித்து, ஒருவரையொருவர் தாங்கவேண்டுமென்று வேதம் போதிக்குமானால், அதைவிட எந்தளவுக்கு அதிகமாக ஒரு போதகன் தன் சபை மக்களின் வாழ்க்கையில் அக்கறை காட்ட வேண்டும்? அதைச் செய்யாதவர்கள் போதக ஊழியத்திற்கே தகுதியற்றவர்கள்.
ஆத்மீகப் பிரச்சனைகளையும், வாழ்க்கைப் பிரச்சனைகளையும் வெளியே சொல்ல முடியாமல், அவற்றைத் தீர்த்துக்கொள்ளவும் வழிதெரியாமல், “இதைப் போதகரிடம் சொல்ல முடியாது ஐயா, அவருக்கு எங்களைப் பார்க்கவே நேரமில்லை” என்றும், சொன்னால் “எங்களைத் தவறாக நினைத்து விடுவார்” என்று சொல்லி மீள வழி தெரியாது கண்ணீரோடு காலத்தைக் கழித்து வரும் ஆத்துமாக்கள் இன்று சபை சபையாக இருக்கின் றன. “போதகருக்கு எங்களைக் கண்டாலே பிடிக்காது” என்று சொல்லி மனதுக்குள் குமைந்து தங்களுடைய பிரச்சனைகளை எவரோடும் பகிர்ந்து கொள்ள வழிதெரியாது தவிக்கும் வாலிபர்கள் சபை சபையாக இருக்கிறார்கள். ஆடுகளின் தேவைகளையே அறிந்திராது ‘போதகன்’ என்ற போர்வைக்குள் ஒழிந்துகொண்டு ஆடுகளை உதாசீனப்படுத்தும் மனிதர்கள் போதகர்களல்ல. மெய்ப்போதகன் ஆத்துமாக்களுக்கு அருகில் இருப்பான்; அவர்களின் தேவைகளை அறிந்திருப்பான்; அவர்களுக்கு நல்ல ஆலோசனைகளைத் தந்து, அவர்களுடைய ஆத்துமவிருத்திக்கு பெருந்துணையாக இருப்பான். பெரியவர்கள், வாலிபர்கள் என்ற பேதத்தை எல்லாம் உதறி விட்டு, பாரம்பரியம், கலாச்சாரம் என்ற சாக்கடைகளைத் தூர எறிந்துவிட்டு, ஆத்துமாக்களின் ஆத்துமவிருத்தி ஒன்றையே இலட்சியமாகக் கொண்டு பணிபுரிகிறவனே போதக ஊழியத்தின் புனிதத்தைக் காக்கிறவன்.