தொமஸ் புரூக்ஸ் (Thomas Brooks) பியூரிட்டன் பெரியவர்களில் ஒருவர். சீர்திருத்தப் போதகரும், பிரசங்கியுமான அவர் அநேக நூல்களை எழுதியுள்ளார். அவருடைய எழுத்துக்கள் ஆறு வால்யூம்களாக ஆங்கிலத்தில் இன்றும் பதிப்பில் இருந்து வருகின்றன. “பிசாசின் வஞ்சனைகளுக்கெதிரான விலைமதிப்பற்ற மருந்துகள்” என்ற அவருடைய ஆக்கம் சிறப்பானது. ஜோடனைகளெதுவுமில்லாத, உள்ளத்தை அசைக்கும், உணர்வுபூர்வமாக கர்த்தரின் கட்டளைகளுக்கடங்கி பக்திவிருத்தியை நாடும் கிறிஸ்தவத்தைப் பற்றி அதிகம் பிரசங்கித்தும் எழுதியும் இருக்கிறார் புரூக்ஸ். மறுபிறப்பாகிய அனுபவத்தை அடையாமல் கிறிஸ்தவர்களைப் போல பாசாங்கு செய்பவர்களை அடையாளம் காட்டும் தொமஸ் புரூக்ஸின் இந்த ஆக்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கட்டும். – ஆசிரியர்
எந்தவொரு மாய்மாலக்காரரும் இந்த உலகத்தில் கர்த்தரையோ அல்லது கிறிஸ்துவை மகிமைப்படுத்துவதையோ, தன் வாழ்வில் நல்லதைச் செய்வதையோ, பரிசுத்தமாக வாழ்வதையோ அதி முக்கிய நோக்கமாகக் கொண்டு வாழ்வதில்லை. உலக இச்சைகளை அனுபவிப்பதும், உலக நன்மைகளை அடைவதும், உலகத்தின் பாராட்டுதல் களைப் பெறுவதுமே மாய்மாலக்காரனின் நோக்கமாக இருக்கும். இந்த மூன்றுமே அவனுடைய திரித்துவம். அவற்றையே அவன் அக்கறையோடு வழிபட்டு, அவைகளுக்காக வாழ்ந்து வருவான் (1 யோவான் 2:16). சுயநலம் கொண்ட அவனுடைய வாழ்க்கை கறைபடிந்ததாக இருக்கும். கர்த்தருக்காக வாழ்வதாக அவன் வெளியில் காட்டிக்கொண்டாலும், சுயமே அவனுள்ளத்தில் ஆட்சி செய்யும். சுயத்தை அவனால் ஒருபோதும் அடிபணிய வைக்க முடியாது. அதற்காகவே அவன் வாழ்ந்து வருவான். “நான் சகல நன்மைகளையும், சகல பாராட்டுதல்களையும், மகிமையையும் அடைய வேண்டும்” என்பதே அவனுடைய இருதயத்தின் எண்ணமாக இருக்கும்.
பக்திவிருத்தியின் மூலம் தனக்கு நன்மை தேடிக்கொள்ள மாய்மாலக் காரன் முயலும்போது அவன் அதிக பக்திவிருத்தியுள்ளவன் போலத் தென்படுவான். பரிசுத்தத்தின் மூலம் தனக்குப் பெருமை தேடிக் கொள்ள முயற்சி செய்யும்போது மாய்மாலக்காரன் பரிசுத்தத்தில் சிறந்தவனாகத் தென்படுவான். இறுதியில் இந்த ஆத்மீகக் கேடே அவனுடைய முடிவாக வந்து அமையும். தன்னுடைய சுய நன்மையை இலக்காக வைத்தே மாய்மாலக்காரன் எதையும் எப்போதும் செய்வான். ஆத்மீக வாழ்க்கையில் அவன் அதிக அக்கறை காட்டுவானாகில் அதைத் தன்னுடைய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளுவதற்காகவே அவன் செய்வான். அவனைப்பற்றிப் பவுல் சொல்லும்போது, “அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய வயிற்றுக்கே ஊழியஞ் செய்கிறார்கள்” என்கிறார் (ரோமர் 16:18).
மாய்மாலக்காரன் தான் செய்கின்ற அனைத்துக் காரியங்களையும் நேர்மையான, நீதியான எண்ணங்களோடு செய்யமாட்டான். பிலேயாம், ஆத்மீக விஷயங்களில் அதிக அக்கறை காட்டி, அநேக பலிபீடங்களைக்கட்டி பலிகளைக் கொடுத்தபோதும் அநீதத்தின் கூலியை நாடியே அவற்றை செய்தான் (எண். 22:23; 2 பேதுரு 2:15). யெகூ இரத்தவெறிபிடித்த ஆகாபின் குடும்பத்தை அழித்தான்; அந்தக் குடும்பம் கர்த்தரின் தண்டனையை அனுபவிக்கும்படி அவர்களை நிர்மூலமாக்கினான்; நாட்டில் பாகாலை வணங்கிவந்தவர்களையும் முற்றாக அழித்தான். இதையெல்லாம் யெகூ நாட்டைத் தன்னுடையதாக்கிக் கொள்ளும்பொருட்டு செய்தான் (2 இராஜா.10). கர்த்தரின் தண்டனை தங்கள் மேல் வந்துவிடுமே என்ற பயத்தின் காரணமாக ஆகாபும், நினிவே மக்களும் இரட்டுடித்துக் கொண்டு உபவாசமிருந்து ஜெபித்தார்கள் (1 இராஜா. 21; யோனா 3). பாபிலோனியாவில் இருந்த யூதர்கள் எழுபது வருடங்களாக உபவாசமிருந்து, அழுது ஜெபித்தார்கள். அந்நிய சிறைவாசத்தில் இருந்து விடுபட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அப்படிச் செய்தார்களே தவிர பாவத்தில் இருந்து விடுபட வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல (சகாரியா 7:5, 6). அன்றாடம், தொடர்ந்து தன்னுடைய செயல்கள் எல்லாவற்றின் மூலமும் மனிதர்களுடைய பாராட்டுதலைப் பெறுவதையும், தேவ கோபத்தில் இருந்து தப்பிக்கொள்ளுவதையும், மனச்சாட்சியின் வாயை அடைப்பதையும் மட்டுமே உயரிய இலக்குகளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறவன் மாய்மாலக்காரன்.
அதேவேளை, மெய் விசுவாசி உபவாசிக்கும்போதும், ஜெபிக்கும்போதும், மனந்திரும்பி கர்த்தருக்குக் கீழ்ப்படியும்போதும், கர்த்தரின் மகிமையை இலக்காகக் கொண்டே அவற்றைச் செய்கிறான். தன்னுடய வாழ்க்கையின் மூலம் அதி உயர்ந்த மகிமையைக் கர்த்தர் அடையும்படிச் செய்வதே அவனுடைய இறுதி இலட்சியமாக இருக்கும் (சங். 115:1; 1 தெச. 2:6). கர்த்தரின் நாமம் மகிமையடையும்படியாக மெய்க்கிறிஸ்தவன் கஷ்டங்களைச் சுமக்கவும், வாழ்க்கையில் தாழ்நிலையை அனுபவிக்கவும் தயாராக இருப்
பான். ஆத்மீக, சமூக, உலக வாழ்க்கை அனைத்திலும் ஒருவன் கர்த்தரின் மகிமையை நாடுகிறானெனில் அதற்குக் காரணம் அவனுடைய இருதயம் நேர்மையாக இருப்பதுதான் (வெளி. 9:9-11). மெய்க் கிறிஸ்தவன் மனிதர் களிடம் பெறும் பாராட்டுதல்களையெல்லாம் கர்த்தரின் பாதத்தில் வைக்கிறான். அவன் கிறிஸ்துவின் தலையில் கிரீடத்தைச் சூட்டுவதை வாழ்க்கை இலட்சியமாகக் கொள்கிறான். கர்த்தரை சிம்மாசனத்தில் இருத்தி அனைத்தும் அவருடைய பாதத்தின் கீழ் வரும்படியாக உழைக்கிறான் (ரோமர் 14:7, 8). எல்லோரும் கர்த்தருக்கு முன் மண்டியிட வேண்டும் என்பதே அவனது நோக்கமாக இருக்கும். கர்த்தரின் நெருக்கத்தை உணரவும், கர்த்தரை உயர்த்தவும் உதவுகின்ற எதையும் மட்டுமே அவன் நேசிப்பான். தன்னுடைய சித்தத்தை நிறை வேற்றிக் கொள்ளுவதற்காகவும், இச்சைகளை அனுபவிப்பதற்காகவும், தன்னை வளர்த்துக் கொள்ளுவதற்காகவும், வசதியோடு வாழ்வதையும் இலக்காகக் கொள்ளாது கர்த்தருடைய மகிமைக்காகவே அவன் வாழ்வான். (1 கொரி. 10:28; வெளி. 12:11). “எங்களுக்கு அல்ல, கர்த்தாவே, எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும், உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும்” என்பதே அவனுடைய அன்றாடத் தியானமாக இருக்கும் (சங். 115:1).
கர்த்தரே மகிமைக்கு சொந்தக்காரராக இருக்கிறார்; தன் மகிமையை அவர் விட்டுக்கொடுப்பதில்லை. மெய் விசுவாசி இதை உணர்ந்திருப்பதால் கர்த்தருக்கு சொந்தமான மகிமையை அவன் எல்லா விஷயத்திலும் அவருக்கே அளிக்க முன்வருகிறான். இதற்காக மெய் விசுவாசி எல்லாக் காரியங்களிலும் பூரணமாகக் கர்த்தரை மகிமைப்படுத்துகிறான் என்று தவறாக எண்ணிவிடக்கூடாது. இந்த உலகத்தில் அவன் மகிழ்ச்சியோடு இதைச் செய்வதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருக்கிறான். பரலோகத்தில் மட்டுமே சகலதும் பூரணமாக இருக்கும். மெய் விசுவாசிகளின் இருதயத்தையும் சுயநலப்போக்கு விட்டு வைப்பதில்லை; மெய் விசுவாசிகள் அவற்றிற்காக வருந்தி அவ்வெண்ணங்களுக்கெதிராகப் போராடுவார்கள். தங்களுடைய குறைகளுக்காக அவர்கள் கர்த்தரிடம் மன்றாடுவார்கள். அவற்றை நீக்கிக்கொள்ளுவதையே தங்களுடைய அன்றாடக் கடமையாகக் கொண்டிருப்பார்கள். கர்த்தரை மகிமைப்படுத்துவதைத் தன்னுடைய நோக்கமாகக் கொண்டு வாழும் மெய்க் கிறிஸ்தவன் அன்றாடம் அந்தக் கடமையில் கண்ணுங்கருத்துமாக இருப்பதால் அவனுடைய சுயநல நோக்கங்கள் படிப்படியாக அழிந்து விடுகின்றன.
தங்களுடைய நீதிமானாக்குதலுக்கும் இரட்சிப்புக்கும், கிறிஸ்துவில் தன்னிறைவடையவும் எந்தவொரு மாய்மாலக்காரராலும் முழுமையாக கிறிஸ்துவில் நீதியான வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியாது. மாய்மாலக்காரரான பரிசேயரும், சதுசேயரும் அன்றாடம் ஜெபம் செய்தனர், உபவாசமிருந்தனர், ஓய்வுநாளைத் தவறாகக் கடைப்பிடித்தனர், நற்கிரியைகளைச் செய்தனர். அவர்கள் இத்தகைய புறக்கிரியைகளிலேயே தங்கியிருந்து அவற்றைச் செய்வதில் திருப்தியடைந்தனர் (மத். 6; லூக். 18:11, 12). வெளி. 3:16-18ல் எழுதியிருப்பதை வாசியுங்கள். இத்தகைய புறக்காரியங்களைத் தவறாது செய்து தங்களுடைய இரட்சிப்பிற்காக அவற்றிலேயே தங்கியிருந்ததால் அவர்கள் இறுதியில் வீணாய்ப்போனார்கள்.
மாய்மாலக்காரன் தன்னுடைய கிரியைகளிலேயே எப்போதும் கண்ணாயிருப்பதோடு கிறிஸ்துவின் நீதியை ஒருபோதுமே எண்ணிப் பார்ப்பதில்லை. பரலோகத்தில் பணத்தைச் சேர்த்து வைத்திருப்பதுபோல் மாய்மாலக்காரன் தன்னுடைய கிரியைகளிலேயே எப்போதும் கண்ணாயிருக்கிறான். தன்னைப் போர்த்திக்கொள்ளுவதற்கு சுயநீதியாகிய போர்வையைத் தயாரிப்பதில் ஈடுபடுகிறான். நீதிமானாவதற்கு தன்னுடைய கிரியைகளை
விட மேலான கிறிஸ்துவின் நீதியை அவன் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை (ரோமர் 10:3). இரட்சிப்பை அடைவதற்கான முதல்படி நம்முடைய சுயநீதியை மறுதலிப்பதே. இரண்டாவதுபடி, சுவிசேஷத்தின் மூலம் இலவசமாக வழங்கப்படும் கிறிஸ்துவின் நீதியைத் தழுவிக்கொள்ளுவது. ஆனால், மாய்மாலக்காரன் இவற்றையெல்லாம் எண்ணிப்பார்ப்பதுமில்லை; அவற்றில் அக்கறை செலுத்துவதுமில்லை. மாய்மாலக்காரனின் நீதி பூரணமானதல்ல; அது அழுக்கான கந்தைபோலானது. இறுதிவரைக்கும் அதில் தங்கியிருப்பவன் தவறான பாதையில் போய்க்கொண்டிருக்கிறான் (ஏசா. 64:6). சகோதரரே! கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள், தன்னுடைய சொந்தக் கிரியைகளான சிறகுகளில் மட்டும் தங்கி பரலோகத்துக்குப் பறந்து போக முனையும் ஒருவனுக்கு இரட்சகர் எதற்கு? ஒரு மனிதனுடைய சொந்தக் கிரியைகள் தேவ கோபத்தைத் தணித்து அவருடைய நீதியைப் பெற்றுக்கொடுக்க இயலுமானால் கிறிஸ்துவுக்கு நாம் விடை கொடுத்துவிட்டு, நமது கிரியைகளை மட்டும் நாடலாமே.
இரட்சிப்புக்காகவும், கர்த்தருடைய சமாதானத்துக்காகவும் தன்னில் காணப்படும் எதிலுமோ அல்லது தன்னுடைய கிரியைகளிலோ தங்கியிருக்கும் எந்த மனிதனும் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளுவதோடு தன்னையே அழித்துக்கொள்ளுகிறான். கிறிஸ்துவின் நீதியின் முன் சரணடையாத மாய்மாலக்காரர்கள் அவரை நெருங்கமுடியாத தூரத்தில் இருக்கிறார்கள். மாய்மாலக்காரரின் அழுக்கான கந்தையாகிய கிரியைகள் மீது தன்னுடைய பரிசுத்தமான வெண்ணிற அங்கியாகிய நீதியைப் போர்த்துவதற்கு கிறிஸ்து ஒருபோதும் விரும்பமாட்டார் (வெளி 19:7, 8). மாய்மாலக்காரன் தன்னுடைய சொந்தக் கிரியைகளில் நம்பியிருப்பானெனில் அந்நம்பிக்கை அவனுடைய கிரியைகளை அழுக்காக்கி விடுகிறன. (நீதி. 21:27).
மெய்க்கிறிஸ்தவன் தன்னுடைய சுயநீதியை மறுதலிக்கிறான். தன்னுடைய சரீரத்தின் கிரியைகளில் அவன் நம்பிக்கை வைப்பதில்லை. தன்னுடைய சொந்த நீதியை அவன் நாய்க்கிடும் உணவைப் போலக் கருதுகிறான். (பிலிப்பியர் 3:8ல் காணப்படும் “நஷ்டம்” என்ற பதத்தின் எழுத்துபூர்வமான விளக்கம் இதுவே). தன்னுடைய கிரியைகளைப் பார்த்து “நீங்களே என்னுடைய தேவர்கள்” என்று அவன் ஒருபோதும் சொல்ல மாட்டான் (ஓசியா 14:3). கர்த்தரின் பரிசுத்தத்தையும், அவருடைய ஆளுகையின் நீதியையும், நீதியின் கட்டுப்பாட்டையும், கோபத்தின் பயங்கரத்தையும் மெய்க்கிறிஸ்தவர்கள் எண்ணிப் பார்க்கிறபோது தங்களுடைய சொந்தக் கிரியைகளையும்விட மகிமையானதும் பூரணமானதும், தவிர்க்கமுடியாததுமான மேலான நீதியின் அவசியத்தை உணர்கிறார்கள். உண்மையுள்ள விசுவாசி கிறிஸ்துவின் நீதியை விலை மதிப்பில்லாததாகக் காண்கிறான்: “உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மை பாராட்டுவேன்.” (சங். 71:16).
மெய்க்கிறிஸ்தவன் எல்லாவற்றையும்விட மேலாக கிறிஸ்துவின் நீதியில் மகிழ்ச்சியடைகிறான். எசாயா சொல்லுகிறார், “கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழ்கிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்.” (ஏசாயா 61:10). “ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ அஸ்திவாரமாக ஒரு கல்லை நான் சீயோனில் வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறான்.” (ஏசாயா 28:16). மெய்க்கிறிஸ்தவன் கிறிஸ்துவின் நீதியைத் தன்னுடைய ஆத்மீக வாழ்க்கைக்கு அடித்தளமாகக் கொண்டு அதில் ஆனந்தமடைகிறான்.
கிறிஸ்துவின் நீதியே தனக்கு பாதுகாப்பானதும் கர்த்தரின் கண்களுக்கு மகிமையுள்ளதாகவும் தென்படுவதாக மெய்க்கிறிஸ்தவன் கருதுகிறான். வரப்போகும் தேவ கோபத்திலிருந்து தன்னை விடுவித்து பாதுகாப்பளிக்கும் சாதனமாக கிறிஸ்துவின் நீதி மட்டுமே இருப்பதாக மெய்க்கிறிஸ்தவன் கருதுகிறான் (1 தெச. 1:10). தேவ கோபத்திலிலிருந்து தப்புவதற்கு கிறிஸ்துவின் நீதியாகிய போர்வை மட்டுமே உதவும் என்று நம்புகிறான் (ரோமர் 13:14). மாய்மாலக்காரன் தன்னுடைய நீதியைத் தவிர வேறு எதிலும் நம்பிக்கை வைப்பதில்லை. அவன் கிறிஸ்துவின் நீதியில் ஆனந்தமடைவதில்லை, அதுவே போதும் என்று நம்புவதுமில்லை. மாய்மாலக்காரர் அநேக கிரியைகளை வாழ்க்கையில் செய்தபோதும், அந்தக் கிரியைகளுக்கு மேலான வாழ்க்கையை அவர்களால் வாழ முடியவதில்லை. வாழ்வதற்காக கிரியைகளைச் செய்து, அக்கிரியைகளிலேயே தங்கியிருக்கும் மாய்மாலக்காரருக்கு அவையே ஆபத்தாகவும் முடியும்.
மாய்மாலக்காரன் கிறிஸ்துவை பூரணமாகத் தழுவிக்கொள்ளுவதில்லை. அவனால் கிறிஸ்துவில் பூரணமாக தங்கியிருந்து, கிறிஸ்துவே போதும் என்ற எண்ணத்தோடு வாழ முடியவதில்லை. கிறிஸ்துவை ஆனந்தத்தோடு அனுபவிக்க முடிவதில்லை. இந்த உலகத்தில் கிறிஸ்துவை அனுபவிப்பதே தனக்குக்கிடைக்கும் பெரும் பாக்கியமாகக் கருதி எந்த மாய்மாலக்காரரும் அதற்காக ஏங்கி நிற்பதில்லை. தன்னை இரட்சித்து, பரிசுத்தமாக வாழச் செய்யக்கூடியவர் கிறிஸ்து மட்டுமே என்று எந்த மாய்மாலக்காரரும் நம்புவதில்லை. தன்னுடைய பாவத்திலிருந்தும், தேவ கோபத்திலிருந்தும் விடுதலை தரும் வல்லமை கிறிஸ்துவுக்கு மட்டுமே இருக்கிறது என்று எந்த மாய்மாலக்காரரும் நம்புவதில்லை. கிறிஸ்துவில் அன்புகாட்டி அவரில் முழுத்திருப்தி அடையும் இதயம் மாய்மாலக்காருக்கு இருக்காது. கிறிஸ்துவோடு இருக்கும் அந்நியோன்யமான ஐக்கியத்தைப் பற்றி அவனுக்கு ஒன்றுமே தெரியாது (1 தெச. 1:10). தன் நோயைக் கிறிஸ்து குணமாக்க வேண்டும், தன்னை மன்னிக்க வேண்டும், தனக்கு இரட்சிப்பளிக்க வேண்டும் என்றெல்லாம் மாய்மாலக்காரர் விரும்பினாலும், கிறிஸ்துவில் முழு ஆனந்தத்தையும், திருப்தியையும் அடைய அவர்களால் முடியாது. கிறிஸ்துவோடு ஐக்கியத்தை அனுபவிக்க வேண்டும் என்று அவர்களுடைய இருதயம் ஏங்காது, தவிக்காது. ஆனால், மெய்க்கிறிஸ்தவன் கிறிஸ்துவே எல்லாம் என்று எண்ணி வாழ்வான். கிறிஸ்து இல்லாத பரலோகம் கூட அவனுக்கு வெகு சாதாரணமான இடமாகவும், தனக்கு சங்கடமளிக்கும் இடமாகவும் தென்படும். கிறிஸ்துவே மகிமையாகிய மோதிரத்தில் வண்ண ஒளி வீசும் இரத்தினக்கல்லாக அவனுக்குத் தெரிவார் (பிலி. 1:21; 3:7-10).
கிறிஸ்துவைப் பற்றிய சகல போதனைகளின் அடிப்படையிலும், சுவிசேஷ நிபந்தனைகளின் அடிப்படையிலும் கிறிஸ்துவை முழுமனதோடு ஏற்றுக்கொள்ள இந்த உலகத்தில் எந்த மாய்மாலக்காரரும் விரும்புவதில்லை. கீழ் வரும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே கிறிஸ்துவை அடைய முடியும் என்று சுவிசேஷத்தில் வாசிக்கிறோம். முழு இருதயத்தோடும் சுவிசேஷம் காட்டும் கிறிஸ்துவை நாம் முழுமையாக அடைய வேண்டும் (மத். 16:24).
பூரணமான கிறிஸ்து என்று சொல்லுகிறபோது, நாம் அவருடைய அத்தனைக் குணாதிசயங்களையும், பணிகளையும் குறிக்கிறோம். அதேபோல் முழு இருதயத்தோடும் என்று சொல்லுகிறபோது நம்முடைய சரீரத்தின் அத்தனைப் பாகங்களையும் குறிக்கிறோம். பிதா, கிறிஸ்துவை தீர்க்கதரிசியாகவும், ஆசாரியராகவும், இராஜாவாகவும் சுவிசேஷத்தில் விளக்கியிருக்கிறார். கிறிஸ்துவின் இந்தப் பணிகளில் ஒன்றால் மட்டும் மாபெரும் இரட்சிப்பிற்கான அனைத்தையும் செய்திருக்க முடியாது. கிறிஸ்து தீர்க்கதரிசியாக இருந்து நமக்கு போதனை செய்கிறார், ஆசாரியராக இருந்து நமது பாவங்களிலிருந்து நமக்கு விடுதலை தந்து நமக்காக பரிந்துரைக்கிறார், இராஜாவாக இருந்து நம்மைப் பரிசுத்தமாக்கி இரட்சிக்கிறார். பவுல் சரியாகவே சொல்லுகிறார், “அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்” (1 கொரி. 1:31).
தேவ கோபத்திலிருந்தும், நரகத்திலிருந்தும், அக்கினிக் கொப்பறையின் நித்திய எரிவிலிருந்தும், சாபத்திலிருந்தும் தப்பிக்கொள்ளுவதற்காக கிறிஸ்துவை ஆசாரியராக ஏற்றுக்கொள்ள மாய்மாலக்காரர் முன்வரலாம். ஆனால், தீர்க்கதரிசியாக இருந்து தொடர்ந்து போதிக்கவும், இராஜாவாக இருந்து தன்னை ஆளவும் கிறிஸ்துவை முழுமனதோடு உண்மையாகத் தழுவிக்கொள்ள மாய்மாலக்காரர் ஒருபோதும் விரும்புவதில்லை. கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ள முன்வரும் அநேகர் அவரை ஆண்டவராக ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டுவார்கள். தன்னை ஆளுகின்ற, தனக்குக் கட்டளையிடுகின்ற கிறிஸ்துவை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.
கிறிஸ்துவின் ஆனந்தத்தில் பங்குகொள்ள விரும்பும் மாய்மாலக்காரருக்கு அவருடைய பரிசுத்தத்தில் பங்குகொள்ள விருப்பமிருக்காது. அவரால் பாவ நிவாரணமடைய விரும்பும் மாய்மாலக்காரர், அவருடைய அரசாங்கத்துக்கும், அவருடைய நீதிக்கும் கட்டுப்பட மனதில்லாதிருக்கிறார்கள். சுவிசேஷம் அளிக்கும் வசதிகளை அனுபவிக்க முன்வரும் மாய்மாலக்காரர் அது எதிர்பார்க்கின்ற கடமைகளைச் செய்ய முன்வருவதில்லை. அதுவும் சுவிசேஷம் எதிர்பார்க்கும், மனித இருதயத்தின் ஆழத்தில் இருந்து வர வேண்டிய கடமைகளைச் செய்ய விரும்புவதில்லை. மாறாக, மெய்க்கிறிஸ்தவன் கிறிஸ்துவை அவரது பணிகளனைத்தோடும், இரட்சகராகவும், ஆண்டவராகவும் தழுவிக்கொள்ளுகிறான். கொலோசெயர் கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டதைப்போல ஏற்றுக்கொள்ளுகிறான் (கொலோ. 2:6). மாய்மாலக்காரரால் இதைச் செய்ய முடிவதில்லை.
(இந்த ஆக்கம் Free Grace Broadcaster என்ற சஞ்சிகையில் வெளிவந்த ஆங்கில ஆக்கத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு. – ஆசிரியர்.)