மத்தளம் இல்லாவிட்டாலும்
மங்கலம் பாடாவிட்டாலும்
விசுவாசத்தின் அடிப்படையில்
வேதத்தைப் பின்பற்றி
மனங்கள் பொருந்தி வந்து
ஆணும், பெண்ணும் இணைவதற்குப்
பெயர்தான் விசுவாசத் திருமணம்
சமூகத் தரத்திற்கு அங்கு இடமில்லை
சாதி பேதத்திற்கு வேலையில்லை
குலம் கோத்திரத்திற்கு அனுமதியில்லை
மனங்களைப் புரிந்து கொள்ளாமல்
விசுவாசத்திற்கு இடந்தராமல்
வேதத்திற்கு சமாதி கட்டி
சாக்கடைச் சடங்குகளுக்கும்
பாரம்பரியமெனும் பிசாசுக்கும்
வேலியைத் திறந்துவிட்டு,
சுயகெளரவத்தால்
பொருந்திவராத மனங்களை
திருமணமென்ற பந்தத்தில்
பொருத்தி வைத்து
விருந்தில் களிக்கிறீர்களே
விசுவாசிகளா நீங்கள்?
அவர்கள் அடக்கி வைத்திருக்கும்
அடங்காக் கண்ணீரும்,
இதயத்தில் மறைந்து வைத்திருக்கும்
நிறைவேறாத ஆசைகளும்,
உங்களை வாழவிடுமா என்றைக்கும்?
பரம்பரை ஊழியம்!
தாத்தா வளர்த்த
ஸ்தாபனமாம் அது
இன்று அவர் மகன் அதற்கு
தலைமை வகிக்கிறான்
வாழும்போதே அவரும் தன்
மகனைத் தயார் செய்கிறார்,
தன்னிடத்தை ஒருநாள்
தக்கவைத்துக் கொள்ளுவதற்கு.
நேருவும், இந்திராவும்
சஞ்சேயும், ரா ஜீவும்
அதற்குப் பிறகு ராகூலும்
பிரியங்காவும்கூட
பரம்பரையாக நாட்டை
நடத்திச் செல்லும்
பாரம்பரியம் இந்தியாவில்,
இதற்கு எது இடம்
பரலோக ஊழியத்தில்?
சபைகளிலும், கிறிஸ்தவ
ஸ்தாபனங்களிலும்
பரம்பரை பரம்பரையாக
குடும்ப ஊழியம் நடத்தும்
பாவத்தைக் கேட்பார்
யாருண்டு இந்நாட்டில்
வேதம் சொல்வதொன்று
இவர்கள் போகும் வழியொன்று
கேட்பாரில்லாததால் இங்கே
கூத்தாடிகளுக்குத்தான்
ஏகக் கொண்டாட்டம்
சுபி . . .