வேதத்தைவிட்டு விலகியோடும் நம்மினத்துக் கிறிஸ்தவம்

தமிழினத்தின் மத்தியிலும் ஏன், இந்தியா முழுவதுமே கிறிஸ்தவர்கள் மத்தியில் வேத அறிவு மிகவும் குறைந்து காணப்படுவதை சத்தியம் தெரிந்தவர்கள் ஒருபோதும் மறுக்கமாட்டார்கள். மெய்க்கிறிஸ்தவத்தை அதாவது வேதபோதனைகளின் அடிப்படையில் அமையும் கிறிஸ்தவத்தை இல்லாமலாக்குவதற்கு பிசாசு உலக முழுவதும் எடுத்து வரும் நட வடிக்கைகளுக்கு எண்ணிக்கை இல்லை. இதைச் செய்வதில் ஊக்கம் தளராமல் சாத்தான் ஈடுபட்டு வருகிறான். இந்த 21 ஆம் நூற்றாண்டில் அவன் மேற்கத்திய நாடுகளில் செய்துவரும் ஒரு காரியத்தை இங்கே விளக்குவது அவசியம்.

மேற்கத்திய பின் நவீனத்துவ சமுதாயம்

பின்நவீனத்துவ சிந்தனைகள் (Postmodernism) பரவிக் காணப்படும் மேற்கத்திய சமுதாயத்தில் அந்த சமுதாய சிந்தனைக்கேற்ற விதத்தில் வேதம் பற்றிய சிந்தனைகளை கிறிஸ்தவர்கள் மத்தியில் மாற்ற முயன்று வருகிறான் பிசாசு. அதாவது தெளிவான அடிப்படை சத்தியம் என்று ஒன்று இல்லை என்று நம்பி சிந்திக்கின்ற பின்நவீனத்துவ சமுதாயத்தில் சபை அமைய வேண்டுமானால் அதே சிந்தனையைப் பின்பற்றி, வேதம் அடிப்படை சத்தியத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும், ஒவ்வொருவரும் தங்களுக்குகந்த விதத்தில் அதன் வார்த்தைகளை விளங்கிக்கொள்ள முடியும் என்று விளக்குகின்ற பிரசங்கிகளையும், நூலாசிரியர்களையும் பிசாசு உருவாக்கிவிட்டிருக்கிறான். இது தவறுகளும், குறைகளுமற்ற பூரணமான வேதத்தின் அதிகாரத்திற்கு சாவு மணி அடிக்கும் கைங்கரியம் என்பது சாத்தானுக்கு நன்றாகத் தெரியும். அதைப் புரிந்துகொள்ளாத பலர் பின்நவீனத்துவ சமுதாயத்தில் கிறிஸ்துவின் இராஜ்யத்தை அமைக்கிறோம் என்ற எண்ணத்தில் பிசாசின் ஊழியத்தை செய்து வருகிறார்கள். இவர்களில் ஒருவர் செடில்பேக் சபையின் போதகரும், பிரபல நூலாசிரியருமான ரிக் வொரன் (Rick Warren).

ரிக் வொரனின் இரு நூல்கள் மேற்கத்திய நாடுகளில் இன்று பிரபலமாக விற்பனையாகி வருகின்றன. இவை இரண்டுமே மோசமான போதனைகளைக் கொண்டவை. இந்நூல்களில் தன்னுடைய போதனைகளுக்கு ரிக் வொரன் பயன்படுத்தும் வேதநூல் மிகவும் மோசமான ஒரு மொழிபெயர்ப்பாகும். அதாவது எழுத்துபூர்வமாக மூலமொழிகளில் இருந்து மொழி பெயர்க்கப்படாத ஒரு மொழிபெயர்ப்பாகும். அந்த மொழிபெயர்ப்பின் அடிப்படையில் கொடுக்கப்படும் போதனைகள் எப்படி சத்தியமாக முடியும்? சத்தியக்கோளாருள்ள தவறான மொழிபெயர்ப்பு சத்தியத்தை விளக்க ஒருபோதும் உதவாது. ஆனால், அதுவே பிசாசின் தந்திரமாகும். பிசாசின் ஊழியத்தில் ரிக் வொரன் இன்று மும்முறமாக ஈடுபட்டுவருகிறார். மேற்கத்திய நாடுகளின் பின்நவீனத்துவ சமுதாயங்களில் கிறிஸ்துவுக்கெதிராக பிசாசு செய்யும் தந்திரங்களில் இதுவும் ஒன்று.

இந்தியா போன்ற கீழைத்தேசங்களில் இன்று தொழில் நுட்ப வளர்ச்சி பேரளவில் அதிகரித்து வருவதால் படித்தவர்கள் மத்தியிலும், சமுதாயத்தில் மத்திய வகுப்பிலும், உயர்வகுப்பிலும் இருப்பவர்கள் மத்தியிலும் பின் நவீனத்துவ சிந்தனைகள் இருப்பதை மறுக்க முடியாது. பின்நவீனத்துவ சிந்தனைகளின் அடிப்படையில் சினிமாக்களும் எடுக்கப்பட்டு வருகின்றன. பெருமளவுக்கு இது மத்திய, உயர் வகுப்புகளையும், படித்தவர்களையும், பல்கலைக் கழகங்களையும் ஆரம்பத்தில் பாதித்து பின்பு ஏனைய வட்டங்களுக்கு சிறிது சிறிதாகப் பரவ ஆரம்பிக்கும். பெங்களூரில் வாழ்கின்ற ஒரு வாலிபன், கணினித் தொழில்நுட்ப வளர்ச்சியால் பெங்களூரில் இளவட்டங்களின் சமுதாய நடைமுறைகள் தமிழகத்துப் பண்பாட்டைவிட மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறினான். தொழில் நுட்பத் தாக்கத்தால், அதோடு இணைந்து வரும் பின்நவீனத்துவ சிந்தனைப்போக்கு அப்பகுதியில் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்துவதை இது விளக்குகிறது.

ஆர்கனைசேஷன்களின் ஆக்கிரமிப்பு

மேலைத்தேய நாடுகளில் காணப்படுவதுபோல் பின்நவீனத்துவ சிந்தனைப்போக்கு இன்றுவரை பெருமளவுக்கு பரவியிராத இன்றைய தமிழ் சமூகத்தில் வேதத்தின் அதிகாரம் பற்றிய அறிவு பெருமளவில் குறைந்து காணப்படுகிறது. இதற்கு நான் அறிந்துவைத்திருக்கிற ஒரே காரணம் அடிப் படையிலேயே வேதம் என்றால் என்ன என்று பலருக்கும் போதிக்கப்படாததே. சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டும், ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தோடு ஊழியம் செய்த ஆரம்ப கால மிஷனரிகள் வேதத்தைத் துல்லியமாக உள்ளது உள்ளபடி போதிப்பதில் அக்கறை எடுக்கவில்லை. மெய்ச் சுவிசேஷ ஊழியத்திற்கு அடிப்படையானதும், அதை எந்த சமுதாயத்திலும் நிலைநிறுத்த வைப்பதும் சத்தியவேதம் என்பது இவர்களுக்குப் புரியாமல்போனது ஆச்சரியமே. வேதத்தைப் போதிப்பதில் இவர்கள் நாட்டம் காட்டாமல் இருந்ததற்கு மொழிச்சிக்கலும், கலாச்சாரமும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆரம்பத்தில் படிப்பறிவில்லாதவர்கள் மத்தியிலும், சமுதாயத்தில் பின் தங்கியவர்கள் மத்தியிலும் பெருமளவில் ஊழியங்கள் செய்துவரப்பட்டதும் இன்னொரு காரணமாக இருந்திருக்கலாம். சமீபத்தில் நான் கேள்விப்பட்ட ஒரு செய்தி இதைப் புரிந்துகொள்ள உதவும். இந்தியாவில் ஆதிவாசிகள் போன்றோர் மத்தியில் ஊழியம் செய்து வந்த ஒரு ஆர்கனைசேஷன் அவர்களை எட்டாம் வகுப்புக்கு மேல் ஒருபோதும் படிக்கவைக்கவில்லை. அவர்கள் படித்துவிட்டால் தங்களைக் கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவார்கள் என்ற பயம் அவர்களுக்கு இருந¢திருக்கலாம். எது காரணமாக இருந்த போதும் எட்டாம் வகுப்போடு கல்வியை அவர்களுக்கு நிறுத்திவிட்டால் வேதபோதனைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுமளவுக்கு அவர்களுக்கு அறிவு எங்கிருந்து வரும்? அவர்களை இந்த ஆர்கனைசேஷன் படிக்க வைக்காததால் படித்த போதகர்களை அதனால் ஒருபோதும் உருவாக்க முடியவில்லை; சபைகளும் வேத அறிவில்லாமல், வளர்ச்சி குன்றியதாகவே எப்போதும் இருந்து வந்திருக்கின்றன. இதே நிலைமையையே இன்று ஆதிவாசிகள் மத்தியிலும், கிராமங்களிலும் நிகழ்ந்து வரும் ஊழியங்களில் பார்க்கிறோம்.

தமிழினத்திலும் இந்தியாவிலும் மெய்க்கிறிஸ்தவம் தலையோங்க வேண்டுமானால் வெறும் சுவிசேஷ ஊழிய நாட்டங்கொண்டவர்கள் அதிகரித்துவிட்டால் மட்டும் போதாது. புற்றீசல் போல் அதிகரித்துக் காணப்படும் மிஷன் ஆர்கனைசேஷன்களாலும் அதை நிறைவேற்றிவிட முடியாது. விஷ்வவானி என்னும் ஆர்கனைசேஷன் இந்தியாவில் 1700 கிராமங்களில் 800 திருச்சபைகளை உருவாக்கியிருப்பதாக அவர்களுடைய செய்தி அறிக்கையில் வாசித்தேன். ஆனால், உண்மை நிலையை அது பூரணமாக விளக்கவில்லை. டிரான்ஸ்வேர்ல்ட் ரேடியோவின் இந்திய மொழி ஒலிபரப் புச் செய்திகளைக் கேட்டு இயேசுவுக்காக தீர்மானம் எடுத்தவர்களைச் சேர்த்து கிராமங்களில் அமைக்கப்பட்டவை இந்த சபைகள். ஒரு காலத்தில் இவை ‘ரோடியோ சபைகள்’ என்றும் அழைக்கப்பட்டன. இவற்றில் ஒன்றிலாவது வேதம் போதிக்கும் சபை அமைப்பையோ, சபை அங்கத்துவத் தையோ, சபையால் நியமிக்கப்பட்ட போதகர்களையோ, சபை ஒழுங்கு நடவடிக்கைகளையோ, விசுவாச அறிக்கையையோ, சபை சட்டஅமைப்பு விதிகளையோ பார்க்க முடியாது. ஞாயிறு தினத்தில் ஆராதனைக்காக கூடிவருவதையும், தலைமை ஆர்கனைசேஷனுக்கு காணிக்கை கொடுப் பதையும் மட்டுமே இவை அறிந்து வைத்திருக்கின்றன. தெளிவான சத்திய விளக்கங்களை இச்சபைகள் என்றுமே அறிந்து வைத்திருக்கவில்லை. தலைமை ஆர்கனைசேஷனின் ஆசீர்வாதத்தைப் பெற்ற ஓரிரு தலைவர்கள் மட்டுமே இச்சபைகள் அனைத்தையும் எப்போதும் ஆளுகிறவர்களாக இருப்பார்கள். ஆர்கனைசேஷனுக்குக் கீழ் அடிமைகளாக இருந்து வரும், சபையென்ற பெயரில் அழைக்கப்படும் இக்குழுக்கள் வேத அதிகாரத்தையும், அதன் போதனைகளையும் அறிய முடியாமலும், கிறிஸ்து தரும் கிறிஸ்தவ விடுதலையை வாழ்க்கையில் அறியாமலும் இருந்து வருகின்றன. இப்படி நூற்றுக்கணக்கான ஆர்கனைசேஷன்கள் கீழைத்தேய நாடுகளில் வேதபோதனைகளையும், அவற்றின் அதிகாரத்தையும் மக்கள் அறிந்து கொள்ள முடியாதபடி மறைத்து வைத்திருக்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் ரோமன் கத்தோலிக்க மதம் மக்கள் சத்தியத்தை அறியமுடியாதபடி செய்து எப்படி அவர்களை இருட்டில் வைத்திருந்து அடிமைகளாக நடத்தி வந்ததோ அதையே இந்த ஆர்கனை சேஷன்களும் செய்து வருகின்றன.

மலிந்து காணப்படும் சத்தியக்கோளாருள்ள வேதாகமக் கல்லூரிகள்

வேதம் அதிகாரமுள்ளது என்பதை உணர்ந்து அதற்கு அடிபணிந்து அதிலுள்ளதை உள்ளபடிப் போதிப்பதே எந்தவொரு வேதாகமக் கல்லூரியின் பணியாக இருக்கவேண்டும். ஆனால், கீழைத்தேய நாடுகளிளுள்ள வேதாகமக் கல்லூரிகளில் இதைத் தவிர வேறு எல்லாவற்றையும் பார்க்க முடியும். இன்று வேதாகமக் கல்லூரி நடத்துவது ஒரு குடிசைத்தொழிலாக கீழைத்தேய நாடுகளான இந்தியா, இலங்கை, நேபாளம், மியன்மார், பங்களாதேஷ், இந்தொனேசியா ஆகிய நாடுகளில் இருந்து வருகின்றன. இதற்கான காரணத்தை ஒரு மியன்மாரைச் சேர்ந்த போதகர் விளக்கியபோது, இப்பணிக்கே வெளிநாட்டு சபைகள் ஆர்வத்தோடு பணம் கொடுப்பதாகக் கூறியிருக்கிறார். ஆகவே, அப்போதகர் சபை நடத்துவதை விட்டு விட்டு வேதாகமக் கல்லூரி நடத்தி வருகிறார். அதுவும் இதில் படிப்பவர் களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்களே அல்ல. இந்த முறையில் கிறிஸ்த வர்கள் அல்லாதவர்களைப் பெருந்தொகையாகக்கொண்டு காணப்படும் வேதாகமக் கல்லூரிகள் இந்தியாவில் அநேகம். இந்த வேதாகமக் கல்லூரிகள் வேதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உலக ஞானத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து அரைகுறைப் போதனைகளை அளித்து பெயருக்கு ஒரு ‘டிகிரி’யையும் கொடுத்து முக்கியமாக ஆதிவாசிகள் மத்தியில் ஊழியம் செய்யப் பலரை அனுப்பி வைத்துக்கொண்டிருக்கின்றன. ஒருவருமே அறிந்து வைத்திராத இரகசியங்களை நான் வெளிப்படுத்த வில்லை. இவை எல்லோரும் அறிந்துவைத்திருக்கிற உண்மைகளே. அத் தகைய கல்லூரிகள் எவை என்பதும் சத்திய வாஞ்சை உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும். இதெல்லாம் எந்தளவுக்கு வேத அதிகாரம் நிர்த்தாட் சன்யமாக நிராகரிக்கப்பட்டு ஊழியங்கள் சீரழிந்து காணப்படுகின்றன என்பதற்கு உதாரணங்கள்.

சமயசமரச சித்து விளையாடல்கள்

சமயசமரசப் போதனைகள் என்பது உறுதியானதும், தெளிவானதுமான வேதக் கோட்பாடுகளாக இல்லாமல் குளருபடியானதும், எல்லாருக்கும் பொருந்திப் போவதுமாகக் காணப்படும் பிசாசின் போதனைளைத்தான். சில உதாரணங்களை முன் வைப்பது நான் சொல்வதைப் புரிந்துகொள்ள உதவும். சமீபத்தில் மதுரையில் இயேசுதான் ‘ஈசன்’ என்றும், அவரே இந்து மத வேதங்கள் போதிக்கும் ‘பிரஜாபதி’ என்றும் விளக்கி ஒரு கெரிஸ்மெடிக் கூட்டம் கைப்பிரதிகளை விநியோகம் செய்ததாகக் கேள்விப்பட்டேன். இது சமயசமரசப் போதனை இல்லாமல் வேறு என்ன? இந்துக்களைக் கவருவதற்காக வேதத்தைத் திரித்துக் காலிலிட்டு மிதிக்கும் செயலிது. இயேசுவை விசுவாசித்த பின்பு ‘ஈசனை’ நாடிப்போவது நாய் தான் கக்கின தில் மறுபடியும் வாய் வைப்பதற்கு ஒப்பானதாகும். கர்த்தரின் சித்தத்தைப் பூரணமாக வெளிப்படுத்துகிற வேதம் நம் கையிலிருக்க கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்கிறவர்கள் இந்து மதத்தை நாடிப்போவது சாத்தானின் சமயசமர வழியைப் பின்பற்றுவதால்தான்.

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் தமிழினத்தில் இன்று காணப்படும் கெரிஸ்மெட்டிக் இயக்கம் வேதத்தை முழுவதுமாக நிராகரித்துவிட்டது. அதிலிருக்கும் தனிநபர்கள் சில வேளைகளில் மெய்க்கிறிஸ்தவர்களாக இருக்கலாம். ஆனால், அந்த இயக்கம் வேதம் சார்ந்த இயக்கமாக இல்லை. தன் இயக்கத் தலைவர்களுடைய வேதத்திற்கு முரணான போதனையை மட்டும் நம்பி ஆத்மீக அழிவை நாடிப் போய்க்கொண்டிருக்கும் இயக்கமாக கெரிஸ்மெட்டிக் இயக்கம் இருந்துவருகிறது. கத்தோலிக்க மதம், இந்து மதம் என்ற வேறுபாடுகள் இல்லாமல் எல்லா மதத்தோடும் உறவாடும் பச்சோந்தியாக இருந்துவருகிறது. சமய சமரசப்போக்கே அதன் அடிப்படை விசுவாசமாக இருக்கிறது. மெய்விசுவாச திருச்சபைகளாக தங்களை அடையாளம் காட்டுகிறவர்கள் இதைக் கண்டும் காணாமலும் இருந்து கிறிஸ்தவ ஐக்கியத்தைப் பற்றிப் பேசி இயேசுவின் முதுகில் குத்தலாமா? மெய்க்கிறிஸ்தவ ஐக்கியம் என்றைக்கு கிறிஸ்துவையே பலிகொடுக்க ஆரம்பித்தது? பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிட்டதென்று அர்த்தமா? சமயசமரசப் போக்குள்ள பச்சோந்தி கள் மட்டுமே கெரிஸ்மெட்டிக் இயக்கத்தை நியாயப்படுத்தி தங்களை ஏமாற்றிக்கொள்வதோடு ஆத்துமாக்களையும் ஏமாற்றப் பார்ப்பார்கள்.

இன்று சமயசமரசப்போக்கு தமிழினத்தில் கிறிஸ்தவத்தைப் பெருமளவில் பாதித்திருப்பது வேத அதிகாரம் எந்தளவுக்கு காலில் போட்டு மிதிக்கப் படுகிறது என்பதற்கு நல்ல உதாரணம். இதற்குக் காரணம் வேதத்தின் அதிகாரம் பற்றிய சத்தியம் இன்னும் பலருக்குப் புரியாத புதிராக இருப்பது தான். அடிப்படை சத்தியம் என்று ஒன்றில்லை என்ற போக்கிலும், சத்தியத்திற்குப் பல முகங்கள் இருப்பது போலவும் நடமாடுவதே சமயசமரசப் போதனை. இதுவே, தந்தை பேர்க்மென்ஸை தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் தொடர்ந்து ஆடவும் பாடவும் வைத்துக்கொண்டிருக்கிறது. வேத அதிகாரத் துக்கு கீழ்ப்படிகிறவர்கள் அவருடைய பாடல்களுக்கும், போதனைக்கும் தங்கள் வாழ்க்கையில் இடமளிக்கமாட்டார்கள். இது தனிமனிதனில் குறைகாணும் முயற்சி அல்ல; வேத சத்தியத்துக்கு எதிரான மனிதரின் நடவடிக்கையை சுட்டிக்காட்டி ஆத்துமாக்களை சிந்திக்க வைக்கும் முயற்சி மட்டுமே.

வேதசத்தியங்களை நிராகரித்து, சுயநலத்தால் அவற்றிக்கு தவறான விளக் கங்களைத் தந்து சமயசமரச முயற்சியில் ஈடுபட்டு முரண்பாடாக நடந்து கொள்வது பரிசுத்தமற்ற செயலென்பதை பலர் உணராமலிருப்பது ஆபத்தானதாகும். பத்துக் கட்டளைகளில் ஒன்றான ஒன்பதாம் கட்டளையை மீறுகிற செயல் அது. வேதத்தைத் திரித்து விளக்கங்கொடுப்பது பொய் சாட்சி சொல்வதாகும். அதாவது கர்த்தர் ஏற்கனவே தெளிவாக சொல்லியிருக்கிற சத்தியத்துக்கு மாறாகப் பேசுவதாகும். சிலர் நாம் வேதத்திற்கு மாறாகப் பேசவில்லை; அதற்கு வேறொரு விளக்கந்தான் தருகிறோம் என்பார்கள். கர்த்தர் எப்போதும் வேதவசனங்களுக்கு ஒரு விளக்கத்தை மட்டுமே தந்திருக்கிறார். சில வசனங்கள் தெளிவானதாக இல்லாததுபோல் நமக்குத் தென்படலாம். அவற்றை ஆராய்ந்து படிக்கிறபோது கர்த்தர் காட்டும் பொருளை அறிந்துகொள்ள முடியும். வேத வசனங்கள் அனைத்திற்கும் பல விளக்கங்கள் இருப்பதாகக் கூறிவரும் ஒரே ஆள் சாத்தான் மட்டுமே.

‘மிஸ்டிசிஷத்தின்’ செல்வாக்கு (Mysticism)

மிஸ்டிசிஷத்தை அறிவுக்குப் புறம்பான அநுபவத்தை நாடும் முயற்சி என்று கூறலாம். இப்படி விளக்குவதால் இது அறிவைவிட மேலானது என்று எண்ணிவிடக்கூடாது. உண்மையில் அறிவை மீறுகிற அனைத்துமே பிசாசின் அநுபவங்கள். அறிவை மீறிய அநுபவங்களுக்கும் கர்த்தருக்கும் எந்தத் தொடர்புமில்லை. ஆகவே, அறிவுக்குப் புறம்பான அநுபவம் என்கிற போது, அறிவைப் புறக்கணித்து அடைய முயலும் அநுபவம் என்று பொருள் கொள்ளுவதே முறையானது. அதுவே மிஸ்டிசிஷமாகும். இப்படி மிஸ்டிசிஷ வழிகளில் போகிறவர்கள் தன்னிலை இழந்தவர்களாகிறார்கள். அந்த அநுபவத்தை அடைவதிலேயே அவர்கள் அதிக அக்கறை காட்டு கிறார்கள். மிஸ்டிசிஷத்தைப் பின்வருமாறு விளக்குகிறார் ஜோண் மெக்காத்தர் (John MacArthur), “அறிவைப் புறக்கணித்து அநுபவத்தை நாடும் மனிதன் அறிவுபூர்வமான சிந்தனைக்கு தன் வாழ்க்கையில் இடங்கொடுக்காமல் தன்னுடைய உணர்ச்சிகளுக்கும், கற்பனைகளுக்கும், தனிப்பட்ட தரிசனங்களுக்கும், தனிமனிதர்கள் கொடுக்கும் விளக்கங்களுக்கும் தன்னுடைய சொந்த அநுபவங்களுக்கும் இடங்கொடுத்து உண்மையைத் தேடிப் போகிறான்.”

இந்து மதத்தில் மிஸ்டிசிஷத்தின் செல்வாக்கு மிக அதிகம். அது சிலை வணக்கத்தை மட்டும் கொண்டிராமல் தனிமனிதன் தன்னுடைய சுய முயற்சியால் இறைவனோடு தொடர்புகொண்டு ஒன்றறக் கலந்துவிடலாம் என்று நம்புகிறது. இதற்காக தியானம், யோகம், துறவறம், மந்திரங்களை உச்சரித்தல் போன்ற பல்வேறு உத்திகளை அது பின்பற்றுகிறது. இத்தகைய கடவுளோடு ஒன்றறக் கலக்கும் இந்த ‘மிஸ்டிகல்’ அநுபவத்தை அறிவுக்கு அப்பாற்பட்டதொன்றாக இந்து மதம் விளக்குகிறது. இதை ரோமன் கத்தோலிக்க மதத்திலும் காணலாம். இருண்ட காலப் பகுதியில் இத்தகைய மிஸ்டிசிஷ நடவடிக்கைகள் கத்தோலிக்க மதத்தில் தலைவிரித்தாடியிருக் கின்றன. துறவறம் பூணுதல், தனிமையிலிருத்தல், அதிகம் வெளிச்சமில்லாத இடங்களில் தியானம் செய்தல், சத்தமேயில்லாத இடங்களில் பூரண அமைதியைக் கடைப்பிடித்தல், ஒரே வார்த்தைகளைப் பலதடவைகள் தொடர்ந்து உச்சரித்து வருதல், ரோசரியைச் சுற்றிக்கொண்டு மௌனமாக வார்த்தைகளை உச்சரித்தல் போன்ற பயிற்சிகளெல்லாம் மிஸ்டிசிஷத்தின் அடையாளங்கள். இதெல்லாம் கடவுளோடு அறிவுக்குப் புலப்படாத அநுபவத்தை அடைவதற்காக கத்தோலிக்க மதம் பயன்படுத்தி வரும் சித்து வேலைகள். இந்தியாவில் இந்துக்கள் மத்தியில் கத்தோலிக்க மதம் பிரபல்ய மடைந்ததற்கு இந்துமதத்தில் காணப்படும் தியானம் போன்ற மிஸ்டிசிஷ வழிமுறைகளை கத்தோலிக்க மதம் பின்பற்றியதுதான் காரணம்.

இன்று மிஸ்டிசிஷம் தமிழினத்துக் கிறிஸ்தவத்தில் தலைவிரித்தாடுகின்றதைப் பலர் உணராதிருக்கிறார்கள். தமிழினத்துப் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெடிக் இயக்கங்கள் மிஸ்டிசிஷ வழிமுறைகளை அதிகம் பின்பற்றுகின்றன. சிலோன் பெந்தகொஸ்தே மிஷன் என்று அழைக்கப்படும் ஒரு பிரிவில் ஆண் ஊழியர்களும், பெண் ஊழியர்களும் திருமணம் செய்துகொள்ள தடை இருக்கிறது. இந்து மதமும், கத்தோலிக்க மதமும் பின்பற்றும் துறவறத்தை இந்தப் பிரிவும் அதன் ஊழியர்கள் மத்தியில் வற்புறுத்துகிறது. இது தவிர இதன் போதனைகளில் அநேகம் மிஸ்டிசிஷத்தைத் சார்ந்தே இருக்கின்றன.

அநுபவத்திற்கும், உணர்ச்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து அவற்றின் அடிப்படையில் உருவான கெரிஸ்மெடிக் இயக்கத்திலும் மிஸ்டிசிஷத்தை அதிகம் காணலாம். இதற்குப் பல உதாரணங்களை எடுத்துக் காட்டலாம். ஒரே வார்த்தையைப் பல தடவைகள் திரும்பத் திரும்பச் சொல்லுவதன் மூலம் நாம் எதிர்பார்¢த்த காரியம் நிகழும் என்று நம்புவது; கண்ணீரோடு ஊக்கமாக அதிக நேரம் ஜெபம் செய்தால் கர்த்தர் நாம் கேட்டதைத் தருவார் என்று நம்புவது; ஜெப நேர அதிகரிப்புக்கேற்ப ஜெப பலன்கள் அமையும் என்று நம்புவதெல்லாம் மிஸ்டிசிஷத்தின் செல்வாக்கிற்கான உதாரணங்கள். முழு இரவு உபவாச ஜெபக் கூட்டங் களும் இந்த நோக்கத்திலேயே நடக்கின்றன. அப்படிப் பல மணிநேரங்கள் கூடி உபவாசித்து ஜெபிக்கும்போது ஆத்மீக ஆலோசனைகளை கர்த்தர் தங்களுக்கு வெளிப்படுத்துவார் என்று இவர்கள் நம்புகிறார்கள். இது ரோமன் கத்தோலிக்க மதத்தின் யேசுவிஸ்ட் பிரிவைச் (Jesuits) சேர்ந்த இக்னேசியஸ் லொயோலா (Ignatius Loyola) ஆரம்பித்து வைத்த ஒரு வழி முறையாகும். இது கெரிஸ்மெட்டிக் இயக்கத்தில் இன்று புகுந்து விளையாடு கிறது. இதை நவீனமயப்படுத்தி பயன்படுத்தியவர்கள் நோர்மன் வின்சன்ட் பீலும் (Norman Vincent Peel), போல் (டேவிட்) யொங்கி சோவும் (Paul-David-Yonggi Cho). தமிழகத்து சுவிசேஷகரான தினகரனின் ஜெப கோபுரத்தையும் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. இதைச் சுற்றியும் மிஸ்டிகல் அம்சங்கள் காணப்படுகின்றன. தன்னிலும் இந்த ஜெப கோபுரங் களிலும் ஏதோ விசேஷ வல்லமையிருப்பதாக ஒரு மிஸ்டிகல் மாயையை தினகரன் ஏற்படுத்தியிருக்கிறார். கர்த்தரை நம்பி ஜெபிப்பதைவிட அறியா மையால் இந்த ஜெப கோபுரங்களை நாடி ஓடுகிறவர்கள் அநேகர். கர்த்தருக் கும் ஆத்துமாவுக்கும் இடையில் ஒரு மத்தியஸ்தர் போல் தினகரன் செயல்பட்டு வருகிறார். இது மிஸ்டிசிஷம் உருவாக்கிவிடுகின்ற ஒரு போலித்தனம். தன்னில் தெய்வீக அம்சம் இருப்பதாக தினகரன் ஆத்துமாக்களை நம் வைத்து வருகிறார். வேதம் கர்த்தருக்கும் ஆத்துமாவுக்கும் இடையில் இயேசு வைத் தவிர வேறெந்த மத்தியஸ்தரையும் சுட்டிக்காட்டவில்லை.

ஜெபம் செய்யும் போது ஏதாவது ஒரு வார்த்தையைத் தெரிந்தெடுத்து அதைத் திரும்பத் திரும்ப அமைதியாக சொல்லுவதன் மூலம் மனதை வெறுமையாக்கி இயேசுவை நம்மில் பார்க்கும் நிலைக்கு வரவேண்டும் என்கிறது இன்னொரு புதிய முறை. அமைதியாக திரும்பத் திரும்ப வார்த்தைகளை சொல்லுவதன் மூலம் கர்த்தரோடு ஒன்றறக் கலந்து விடலாம் என்கிறது இந்தக் Contemplative Prayer என்னும் புதிய முறை. இதையெல்லாம் இந்து மதத்திலும், புத்த மதத்திலுமே ஆரம்பத்தில் கண்டிருக்கிறோம். எந்தளவுக்கு புறமத வழிமுறைகள் இன்று நம்மத்தியி¢ல் வேத அறிவின்மையால் பின்பற்றப்படுகின்றன என்பதற்கு இவை சான்றுகள்.

கூட்டங்களில் அதிகமாக சத்தமிட்டுப் பேசியும், ஜெபித்தும், ஆடியும், பாடியும் மனித உணர்ச்சிகளின் உச்சகட்டத்துக்குப் போக முயன்று, அந்த நிலையை அடைந்து நிலை தடுமாறுகிறபோது அந்த அநுபவத்தை ஆத்மீக அநுபவத்தின் உச்சகட்டமாக தவறாக எண்ணி வருகிறது கெரிஸ்மெட்டிக் இயக்கம். இம்மாதிரியான செயல்களை நாம் சாதாரணமாக இந்துக்கள் மத்தியில் கோவில் திருவிழாக் கூட்டத்தில் பார்க்கலாம். அத்தோடு இரவில் காணும் கனவுகளுக்கு ஆத்மீக விளக்கங்கொடுப்பதும், வரப்போவதை முன்னுரைப்பதிலும், அதை அறிந்துகொள்ளுவதிலும் அதிக ஆர்வங் காட்டுவது மிஸ்டிசிஷத்தின் செல்வாக்கிற்கான அடையாளங்களே.

வேதபோதனைகளின்படி வாழ முயற்சிக்காமல் தங்களுடைய உள்ளுணர்வு என்ன சொல்லுகிறதென்று அதன் குரலை நாடி நிற்கும் பல்லாயிரக் கணக்கானோர் நம்மத்தியில் இருக்கிறார்கள். தங்கள் போதகர்களும், இயக்கத் தலைவர்களும் காட்டும் வழிகளுக்கு, அவை தவறானவையாக இருந்தாலும் வேதவாக்காக எண்ணி முக்கியத்துவம் கொடுப்பதும் அறிவு கடந்த அநுபவமாகிய மிஸ்டிசிஷத்தின் வழியில் போகிறவர்களின் நடவடிக்கையாக இருக்கும். முக்கியமாக மிஸ்டிசிஷம் தலைதூக்கியிருக்கும் இடத்தில் வேத அதிகாரமும், போதனையும், அதன் செல்வாக்கும் அருகியே காணப்படும். கர்த்தர் வெளிப்படுத்தி எழுத்தில் தந்திருக்கும் வேத சத்தியங்களைப் ஆராய்ந்து படித்து கர்த்தரை அறியும் அறிவைப் பெற்றுக்கொள்வதில் இவர்கள் நம்பிக்கை வைப்பதில்லை. கர்த்தரோடு ஐக்கியத்தில் வருவதானால் அதை அறிவுக்கும் சாதாரண உணர்வுகளுக் கெல்லாம் அப்பாற்பட்ட ‘மிஸ்டிகல்’ அநுபவத்தின் மூலமே அடைய முடியும் என்று ஆயிரக்கணக்கானோர் நம்புகிறார்கள். இதைப் பெந்த கொஸ்தே, கெரிஸ்மெட்டிக் இயக்கத்தில் நாம் இன்று நன்றாகவே பார்க்க முடிகிறது. வேதம் மிஸ்டிசிஷப் போதனைகளுக்கு எந்த வகையிலும் இடங்கொடுப்பதில்லை. உணர்ச்சிகளின் உச்சகட்டத்தை அடைவதன் மூலமோ, துறவறத்தாலோ, ஊக்கமான ஜெபத்தாலோ கர்த்தரைப் பற்றிய அறிவை அடைய முடியாது. கர்த்தரே வெளிப்படுத்தியிருக்கிற பூரணமான வேத சத்தியங்களின் மூலம் மட்டுமே அவரைப் பற்றிய அறிவையும், அநுபவத்தை யும¢ எந்த மனிதனும் அடைய முடியும்.

மிஸ்டிசிஷப்போக்கில் போகிறவர்கள், ஒன்றும் ஒன்றும் இரண்டு என்ற உண்மையை அறிவுபூர்வமாக அணுகி ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அது ஏன் இரண்டாக இல்லாமல் வேறொன்றாக இருந்துவிட முடியாது என்று அவர்களுடைய மனம் வேலை செய்கிறது. இந்த வழியிலேயே மிஸ்டிசிஷம் ஒருவரை எண்ணவைக்கிறது. சிந்தித்து விளங்கிக்கொள்ளக்கூடிய தெளிவான சத்தியங்களை மிஸ்டிசிஷம் நிராகரிக்கிறது. கர்த்தரின் படைப்பின் அடிப் படையில் உலகில் காணப்படும் எந்த உண்மையையும் அதைப் பின்பற்று கிறவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். காரணகாரியங்களோடு எதையும் சிந்தித்துப் பார்ப்பதையும் அவர்கள் அறவே வெறுக்கிறார்கள். அசாதரண மாகத் தெரிகிறவற்றை மட்டுமே அவர்கள் உயர்வாகப் பார்க்கிறார்கள். மிஸ்டிசிஷப் போக்கில் போகும் பிரசங்கிகளும் இந்த முறையிலேயே வேத விளக்கங்களையும் தருகிறார்கள். இலக்கண அடிப்படையில் வார்த்தைகளுக்கு வழமையாக இருக்கும் விளக்கத்தை நிராகரித்து அந்த வார்த்தைகளின் மூலம் கர்த்தர் வழமைக்கு மாறான புதிய உண்மைகளை விளக்குகிறார் என்று அவர்களுடைய மிஸ்டிகல் போக்கு அவர்களை சிந்திக்க வைக்கிறது. இதை நாம் தமிழினப் பிரசங்கிகளில் அநேகர் கொடுக்கும் வேதவிளக்க முறையில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

கர்த்தரை விசுவாசிக்கிறவர்கள் அவரோடு ஐக்கியத்தில் வருவதற்கு வேத சத்தியங்களை அறிவுபூர்வமாக விளங்கி, அவற்றைத் தங்களுடைய வாழ்க்கையில் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே அதைச் செய்ய முடியும். வேத சத்தியங்களை அறிந்து அவற்றில் வளராமலும், அவற்றைப் பின்பற்றாமலும் எவரும் கர்த்தருடைய அநுபவத்தில் வளர முடியாது. வேதசத்தியங் கள் அனுமதிக்காத, அவற்றிற்கு அப்பாற்பட்ட எந்த உணர்ச்சிகளையும், அநுபவங்களையும் வேதம் பிசாசின் அநுபவங்களாகவே விளக்குகின்றது. இந்தவகையில் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் இயக்கங்கள் தாங்கள் பேராபத்தில் சிக்கியிருப்பதை உணராதிருக்கிறார்கள். அவர்களைப் பின்பற்றுகிறவர்களும் அழிவை நாடிப் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

கற்பனை செய்து காணுதல் (Visualization)

இறந்து பரலோகத்துக்கு விசிட் செய்து, அங்கே கர்த்தரை சந்தித்து அங்கிருந்த எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வந்து வர்ணித்துக் கதையளந்த பலரைப் பற்றி நாம் வாசித்திருக்கிறோம். அது பழைய பஞ்ஞாங்கம். இன்று புதிய முறைகள் ஆரம்பித்திருக்கின்றன. அதிலொன்று, உருவங்களைக் கற்பனை செய்து பார்த்து அவை உயிரோடு நடமாடித் தங்களுடன் பேசுவதாக அறிவிப்பது. இவ்வாறாக இயேசுவையும், பரிசுத்த ஆவியையும் கற்பனை செய்து வர்ணித்து அவர்கள் தங்களுடன் நேரடியாக பேசி செய்திகள் அளித்ததாகக் கூறுகிறவர்களைக் கெரிஸ்மெட்டிக் இயக்கத்தில் பார்க்கிறோம். இதுவும் கீழைத்தேய புறஜாதி மதங்களில் இருந்து வந்ததொன்று தான். அம்மனையும், முருகனையும், ஆஞ்சநேயரையும் நேரில் பார்த்ததாக சொல்லுகிற எத்தனை பேரைப்பற்றி பத்திரிகையில் வாசித்திருக்கிறோம். இதைக் கிறிஸ்தவத்திற்குள்ளும் நுழைத்திருக்கிறார்கள் சிலர். இதற்கு ரெடியாக வேத வசனங்களையும் இவர்கள் ஆதாரம் காட்டத் தவறுவதில்லை. கர்த்தர் இன்று இப்படி நேரில் தரிசனம் தருவதில்லை என்பதை வேதம் தெளிவாக விளக்குகிறது. அத்தோடு நாம் கற்பனை செய்து, அந்தக் கற்பனைக்கு உயிர்கொடுத்து நடமாடவிட்டு நம்மோடு சம்பாஷனை செய்யும் அளவுக்கு மனிதன் கடவுளாகிவிடவும் இல்லை. வேதம் அறியாது இருண்டுகிடக்கும் நம் சமுதாயம் இதை உணர மறுத்து வருகிறது. வேத அறிவில் நம் மக்கள் வளராதவரை இப்படியான உத்திகளின் மூலம் ஆத்மீக இயக்கங்களை வளர்க்க முயல்கிறவர்கள் கூட்டம் எக்காலத்திலும் இருக்கத்தான் செய்யும்.

நம்மினத்தில் ஆத்மீக விடுதலைக்கு என்ன வழி?

வேத அதிகாரத்துக்கு இடங்கொடுக்காமல் இருந்து வரும் நம்மினத்துக் கிறிஸ்தவத்தின் ஆத்மீக விடுதலைக்கு வழி என்ன? வியாதி எது என்று அறிந்து கொண்டால் மட்டும் வியாதி தீர்ந்துவிடாது. அதற்கு மருந்து வேண்டும். இதற்கு வழி இல்லாமலில்லை; வேதவழி மட்டுமே இந்த நோய்க்கு அருமருந்து. வேதத்தில் கர்த்தர் காட்டியிருக்கிற வழிகளைப் பின்பற்றினால் அவருக்கு எதிராகப் போகவேண்டிய அவசியமிருக்காது. கர்த்தருக்குப் பணி செய்கிறோம் என்று உங்களையே ஏமாற்றிக்கொண்டு அவருக்கு எதிரியாய் இருந்து வருவதில் எந்த இலாபமும் இல்லை. இனி நம்மினத்தின் ஆத்மீக விடுதலைக்கான பத்து வழிமுறைகளை ஜெபத்தோடு கவனிப்போம்.

1. வேதசத்தியங்களை உள்ளது உள்ளபடி அறிந்துகொள்ள பாடுபட வேண்டும். “வேதம் தெரியாமல் இருப்பது விசுவாசி தன் சரீரத்தில் வியாதியோடு வாழ்க்கை நடத்துவது போலாகும்” என்கிறார் பிசப் ஜே. சி. ரைல். வேத அறிவின்மையாலேயே தமிழினத்தில் கிறிஸ்தவம் இன்று மிஸ்டிசிஷத்தின் வழியில் போய்க்கொண்டிருக்கிறது. வேதத்தைப் படிப்பதில் நாம் அதிகம் ஊக்கம் காட்டி உழைக்க வேண்டும். அது நம் மொழியில் இருந்தபோதும் அதனை ஆராயாது படித்தால் அதனை விளங்கிக்கொள்ள முடியாது. ஒரு பகுதியில் இருப்பதை அதோடு தொடர்புடைய ஏனைய பகுதிகளோடு ஆராய்ந்து பார்க்கும்போது சத்தியம் தெளிவாகப் புலப்படும். வேத அறிவில்லாமலும், வேதபோதனைகளை முறையாகக் கடைப்பிடிக்காமலும் ஒருவர் விசுவாசியாக கர்த்தரைத் தன் வாழ்க்கையில் ஒருபோதும் மகிமைப் படுத்த முடியாது. அத்தோடு சத்தியத்தைத் தெரிந்து கொள்ளுவதன் மூலமே போலிப்போதகர்களிடம் இருந்தும், வேதத்தைத் திரித்துப் போதிக்கிறவர்களிடம் இருந்தும் நாம் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். போலிப் போதகர்கள் கையில் சத்தியம் தெரியாதவர்களும், சத்தியத்தை அசட்டை செய்கிறவர்களுமே அதிகம் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.

2. வேதத்தில் நாம் படித்தறிந்துகொள்ளும் சத்தியங்கள் எல்லாம் நம்மில் பரிசுத்தத்தை ஏற்படுத்தும்படி அவற்றை நாம் நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டும். பரிசுத்ததைப் பற்றிய தவறான கருத்தை இன்று அநேக கிறிஸ்தவர்கள் கொண்டிருக்கிறார்கள். அதிக நேரம் ஜெபம் செய்வதும், உபவாசம் செய்வதும், அறிவுக்குப்புறம்பான உணர்ச்சியின் உச்சகட்டத்தை அடைவதும், ஊழியம் செய்வதும் பரிசுத்தத்தின் அடையாளங்களாக பலராலும் தவறாகக் கருதப்படுகின்றன. இவற்றையெல்லாம் செய்தும் வாழ்க்கையில் பரிசுத்தம் அறவே இல்லாமல் இருந்துவிட முடியும். கர்த்தரின் பத்துக் கட்டளைகளை அன்றாடம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க முயல்வதே பரிசுத்தமாக வாழ்வதற்கான ஒரேவழியாகும். விசுவாசிகளால் மட்டுமே இதைச் செய்ய முடியும். இதைச் செய்ய முடியாத விசுவாசி இன்னும் இந்த உலகத்தில் பிறக்கவில்லை. இவற்றைக் கடைப்பிடிப்பதில் அக்கறை காட்டாதவர்கள் விசுவாசிகளா என்பதே சந்தேகம்.

3. வேதத்தை மட்டும் போதிக்கும் திருச்சபைகளில் மட்டும் அங்கம் வகிக்க வேண்டும். இப்படிப்பட்ட சபைகளைத் தேடிக் கண்டுபிடிப்பது நம்மினத்தில் மிகவும் கஷ்டமான செயல் என்பது எனக்குத் தெரியும். சபையென்ற பெயரில் குடும்ப ஊழியங்களும், தனிமனிதனின் ஆட்சியும், ஆர்கனை சேஷன்களின் ஆக்கிரமிப்புமே பெருமளவில் இருந்துவருகின்றன. இருந்தாலும் எல்லா சபைகளையும் ஆராய்ந்து பார்த்து ஆத்துமவிருத்திக்கான போதனைகள் கிடைக்கும் இடத்தில் மட்டும் இருப்பது அவசியம். தனி மனிதனை முதன்மைப்படுத்தாது, வேதபோதனைகளின் அடிப்படையில் சபைகள் உருவாகவும் நாம் ஜெபிக்கத் தவறக்கூடாது.

4. ஆர்கனைசேஷன்களையும், தனிமனிதர்கள் நடத்தி வரும் ஊழியங்களை ஆதரிப்பதையும், அவற்றிற்குப் பணம் கொடுப்பதையும் கர்த்தருக்குச் செய்யும் அரும் பணியாகக் கருதி நிறுத்திக்கொள்ள வேண்டும். கர்த்தருடைய பணம் சேர வேண்டிய இடம் அவருடைய திருச்சபை. அப்படியே நல்ல திருச்சபைகள் இல்லாவிட்டாலும் நம் பணத்தை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. கர்த்தரின் பணிக்குக் கொடுக்கிறேன் என்று உங்களை ஏமாற்றிக்கொண்டு ஆராய்ந்து பார்க்காமல் அசத்தியத்தையும், பிசாசின் போதனையையும் பரப்பும் ஆர்கனைசேஷன்களுக்கும், தனி மனிதர்களுக்கும் கொடுக்கும் பணத்திற்கு கர்த்தர் ஒருநாள் உங்களைப் பார்த்துக் கணக்குக் கேட்பார். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார் என்ற நினைப்பில் யாருக்காவது கொடுக்கும் பணம் ஆசீர்வாதத்தைவிட பாவத்தையே நம்மிடம் சேர்த்துவிடும். இன்று கிறிஸ்தவர்கள் அறிவில்லாமல் அள்ளிக்கொடுக்கும் பணத்தால்தான் போலிப்போதனைகளும், போலிப் போதகர்களும் அதிகரித்து தமிழினத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒருதடவை எண்ணிப்பாருங்கள்.

5. நாம் கேட்காமலே நம்மைத் தேடிக் கிறிஸ்தவ பத்திரிகைகள் என்ற பெயரில் வரும் குப்பைகளை வாசிப்பதில்லை என்ற உறுதிப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். இவற்றில் பெரும்பாலானவை நம் பணத்தைக் கறப்பதற்காகவே வந்துகொண்டிருக்கின்றன. அவற்றை வேறு எத்தனையோ காரியங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்; அவற்றை வாசிப்பதை மட்டும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அசத்தியத்திற்கு நாம் எந்தவிதத்திலும், எந்தவகையிலும் நம் வாழ்க்கையில் இடமளித்துவிடக்கூடாது.

6. நல்ல நூல்களை மட்டும் வாங்கி வாசிக்க வேண்டும். நல்ல நூல்கள் எவை? என்று கேட்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். நம் மொழியில் அத்தகைய நூல்கள் அதிகம் இல்லை. இருந்தாலும் இந்தப் பத்திரிகையில் சுட்டிக் காட்டப்படும் நூல்களை வாங்கி வாசியுங்கள். அவற்றைப் பெற்றுக் கொள்ளப் பாடுபடுங்கள். அவற்றை வாசித்து சிந்தியுங்கள். வாசிக்காமல் சிந்திக்காமல் வேத அறிவில் வளர முடியாது. ஜோண் பனியனின் ‘மோட்சப் பயணம்’ ஒவ்வொரு விசுவாசியும் வாசிக்க வேண்டிய நூல். நாம் வெளியிட்டிருக்கும், ‘பரிசுத்த வேதாகமம்’, ‘திருச்சபை சீர்திருத்தம்’, ‘ஆதி சபையின் அற்புத வரங்கள்’, ‘பத்துக் கட்டளைகள்’, வில்லியம் கேரி, சார்ள்ஸ் ஹெடன் ஸ்பர்ஜன்’ போன்ற நூல்கள் உங்களுக்கு நிச்சயம் பயன் தரும். அவற்றை நீங்கள் வாசிப்பது மட்டுமன்றி மற்றவர்களுக்கும் கொடுத்து அவர்களையும் வாசிக்கச் செய்யுங்கள். சீர்திருத்தவாதத்தைக் கர்த்தர் எழுத்தின் முலம் பதினாறாம் நூற்றாண்டில் அதிகம் பரவச் செய்தார். இன்று நாம் நல்ல நூல்களைப் படிப்பது மட்டுமல்ல மற்றவர்களும் அவற்றைப் படித்து சிந்திக்க உதவி செய்ய வேண்டியது அவசியம். குப்பைப் பத்திரிகைகளுக்கும், தனிமனிதர்களுக்கும், ஆர்கனைசேஷன்களுக்கும் கொடுக்கும் பணத்தைச் சேர்த்து நல்ல நூல்களில் பல பிரதிகளை வாங்கி மற்றவர்களுக்கு ஏன் கொடுக்கக் கூடாது. அப்படிச் செய்தால் சத்தியத்தைப் பரப்புவதற்கு நீங்கள் துணை செய்ததாகுமே. மாற்றங்கள் நம்மத்தியில் தேவை என்று சொல்லுகிற பலர் அந்த மாற்றங்கள் ஏற்படுவதில் தங்களுக் கும் பங்குண்டு என்பதை நினைக்கத் தவறி விடுகிறார்கள்.

7. சத்தியத்துக்கெதிரான எந்தப் பேச்சையும் காதால் கேட்க மறுக்க வேண்டும். சத்தியத்துக்கெதிரான எந்தச் செயலுக்கும் துணை போகாமலிருக்க வேண்டும். சத்தியத்துக்காகப் பாடுபடுவதில் இன்னொரு பக்கம் சத்தியத்துக்கு எதிராக நம்மை எவரும் பயன்படுத்த இடங்கொடுக்காமல் இருப்பது. சத்தியத்திற்கு துணை நின்ற ஒவ்வொருவருக்கும் தொல்லைகள் ஏற்பட்டிருப்பதை வேதம் சுட்டிக்காட்டுகிறது. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளும், புதிய ஏற்பாட்டில் இயேசுவும், அப்போஸ்தலர்களும் பல தொல்லைகளைச் சந்திக்க நேர்ந்தது. மார்டின் லூதரும், ஜோண் கல்வினும், ஜோண் நொக்ஸும், ஜோண் பனியனும், சார்ள்ஸ் ஸ்பர்ஜனும் இவற்றிற்கு விதிவிலக்கல்ல. அதேபோல் சத்தியத்துக்காக பாடுபடுகிறவர்களுக்கு நம் காலத்தில் தொல்லைகள் ஏற்படத்தான் செய்யும். அவர்களுக்கு நாம் துணை நிற்க வேண்டும். அவர்களுக்கெதிரான ஏச்சுப் பேச்சுக்களுக்கு காதுகொடுக்கக் கூடாது. முகதாட்சிணை பார்த்து மதில் மேல் பூனையாக ஒருபுறமும் சாராமல் இருப்பதைத் தவிர்த்து நமக்கு ஆபத்து வந்தாலும் சத்தியத்திற்காக உழைப்பவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

8. நல்ல போதகர்களுக்கும், சபைகளுக்கும் நாம் ஆதரவு தர வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சில நல்ல போதகர்களும், சபைகளும் நம்மத்தியில் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஆத்துமாக்களின் ஆத்துமவிருத்தியில் அக்கறைகாட்டி உழைக்கும் அத்தகைய போதகர்களையும், திருச்சபை களையும் நாம் ஜெபத்தில் நினைவு கூறவேண்டும். அத்தகைய சபைகளின் வளர்ச்சிக்காக சகல வழிகளிலும் பாடுபட வேண்டும்.

போதகர்களே! கர்த்தர் உங்களோடு பேசி சத்திய வாஞ்சையை உங்களுக்குத் தந்திருநதால், உங்கள் சபை மக்களுக்காக நீங்கள் தன்னலமில்லாமல் வருந்தி உழைக்க வேண்டும். உங்கள் குடும்ப நலத்திற்காகவும், உயர்விற்காகவும் சபையை ஒருக்காலும் பயன்படுத்திக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு மரியாதை தேடித் தரும் பதவியாகவும், சமுதாயத்தில் நீங்களும், உங்கள் குடும்பமும் உயரப்போக உதவும் ஏணியாகவும் போதக ஊழியத்தைக் கருதாதீர்கள். ஆராய்ந்து படித்து ஆத்துமவிருத்தியை ஏற்படுத்தும் பிரசங்கங் களையும் போதனைகளையும் கொடுங்கள். அத்தோடு நிறுத்திக்கொள்ளாது ஆத்துமாக்களோடு அந்நியோன்னியமாகப் பழகி அவர்களுடைய ஆத்தும தேவைகளைத் தீர்த்து வைக்க முயலுங்கள். உங்கள் பணி உயர்வானது. அதை உதாசீனப்படுத்தி கர்த்தரின் பெயருக்கு இழிவு உண்டாக்காதீர்கள். நீங்கள் மனந்திரும்பி சத்தியமாக உழைக்க ஆரம்பித்தாலே நம்மினத்தில் ஆத்மீக விடுதலைக்கு வழி ஏற்பட்டுவிடும்.

9. எத்தனையோ தேவைகளுக்காக நாம் ஜெபித்து வந்திருக்கிறோம். நம்மினத்தில் வேதபூர்வமான சபைகள் உருவாகவும், மெய்ப்போதகர்கள் எழவும், சத்தியதாகம் ஏற்படவும் கருத்தோடு ஜெபித்திருக்கிறோமா? போலி கள் மலிந்து சீரழிந்து காணப்படும் கிறிஸ்தவ ஊழியங்கள் கர்த்தரின் நாமத்துக்கு இழுக்கேற்படுத்துகின்றனவே என்ற ஆதங்கத்துடன் கர்த்தரின் நாமம் நம்மினத்தில் மகிமையடைய வேண்டும், வேத வெளிச்சத்தால் ஆத்துமாக்கள் கண்கள் திறக்க வேண்டும் என்று ஏன் நாம் இன்றே ஜெபிக்க ஆரம்பிக்கக் கூடாது. கர்த்தரால் வருவது மட்டுமே மெய்யான எழுப்புதல். கேட்டால் கொடுக்கப்படும் என்று சொல்லியிருக்கும் கர்த்தர் நாம் கேட்கா மல் இருப்பதை அறியாமலா இருக்கிறார். நம்மினத்தில் வேத சீர்திருத்தம் ஏற்பட நாமனைவரும் விசவாசத்துடன் ஜெபிக்க வேண்டும்.

10. இதில் உங்கள் பணி என்ன என்று எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் எத்தனை வருடங்களாக விசுவாசியாக வாழ்ந்து வந்திருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது. நீங்கள் முதிர்ந்த விசுவாசியாக இருக்கலாம். புதுக்கிறிஸ்தவராகக்கூட இருக்கலாம். இருந்தாலும் சத்தியம் வளர நாமெல்லோருமே அந்த உழைப்பில் பங்கேற்க வேண்டும் என்பதை அறிவீர்களா? நீங்கள் போதகராக வரமுடியாமல் போகலாம். இருந்தாலும் திருச்சபையாகிய கட்டிடத்தில் நாமெல்லோருமே கற்களாக இருக்கிறோம் என்பதை மறக்காதீர்கள். நம்மால் முடிந்தவற்றை நாம் சத்திய வளர்ச்சிக்காகவும், திருச்சபை வளர்ச்சிக்காகவும் நாமிருக்கும் இடத்தில் இருந்து செய்யத்தவறக்கூடாது. நம்மினம் சத்திய வாஞ்சையுள்ளவர்களை அறியாது தவிக்கிறது. வெறும் கிறிஸ்தவர்கள் என்று நம்மை அறிவித்துக் கொள்கிறவர்களால் எந்தப் பயனும் இல்லை. அவர்களால் ஒன்றும் ஆகப் போவதுமில்லை. இன்று சத்தியத்துக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பவர்களே தேவை. சுயநல நோக்கங்கள் இல்லாது, தன்னை வளர்த்துக்கொள்ளும் ஆசையில்லாது, சமுதாயப் படிக்கட்டில் தான் வளர உதவும் ஏணியாக கிறிஸ்தவத்தை எண்ணாது, வேதத்தின் அதிகாரத்தை உணர்ந்து அதற்குக் கட்டுப்பட்டு சத்தியத்துக்காக எல்லாவிதத்திலும் உழைக்கும் இதயங்கள் தேவை. அப்படிப்பட்ட இதயத்தைக் கர்த்தர் உங்களுக்குத் தந்திருந்தால் நிச்சயம் எங்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களுக்காக ஜெபிப்போம். இணைந்து உழைப்போம். நம்மினத்தில் சத்திய விடிவை நம் தேவன் ஏற்படுத்தட்டும்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s