உங்கள் சிந்தனைக்கு
(“பிரசங்கிகளின் இளவரசன்” என்று அழைக்கப்பட்ட பாப்திஸ்து பிரசங்கியான சார்ள்ஸ் ஹெடன் ஸ்பர்ஜன் (1834-1892) தன்னுடைய பிரசங்கங்களிலும், நூல்களிலும் முத்துக்களாய் உதிர்த்துள்ள ஆவிக்குரிய சிந்தனைகளைத் தொகுத்தளிக்கிறார் தஸ்மேனியாவின் தென் பிரஸ்பிடீரியன் சபையைச் சேர்ந்த ரேபன் கெமரன் ஸ்மித் (Raeburn Cameron-Smith). இது முதலில் ரிஃபோர்மர் (Reformer) என்ற இதழில் வெளிவந்தது. ஸ்பர்ஜன் விசுவாசித்த அதே சத்தியங்களை விசுவாசிக்கிறவர்களுக்கு இந்தச் சிந்தனை முத்துக்கள் நிச்சயம் ஊக்கந்தரும்.)
மாற்றம் (Change)
வளர்ச்சியடைந்து வரும் இந்தக் காலப்பகுதியில் ஆத்மீகம் பற்றிய கருத்துகள் இரயில் வண்டி வேகத்தில் வளர்ந்து வருகின்றன. ‘சுவிசேஷம் பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது’ என்ற ஓர் புதிய கருத்து பலரை இன்று ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. நம்மைப் பொறுத்தவரையில் இது நிந்தனைக்கும், முட்டாள்தனத்திற்கும் இடைப்பட்ட ஓர் கருத்தாகவே காணப்படுகிறது. எண்ணிக்கையற்ற தொகையினரில் நித்திய ஜீவனுக்கேதுவாக திட்ப உறுதியாக சுவிசேஷம் பயன்பட்டிருக்கிறபோது இத்தகைய சிந்தனைகள் அதை மாற்றும் வீண் முயற்சியாக காலந்தாழ்த்திப் புறப்பட்டிருக்கின்றன. சகல ஞானமும் கொண்ட மாறாத தேவனின் வெளிப்பாடாக இருக்கின்ற சுவிசேஷத்தை நவீனப்படுத்தப் பார்க்கின்ற அசட்டுத்தனமாகவே இந்த முயற்சி தெரிகிறது.
ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் பயன்படுகிற மாதிரியான ஓர் சுவிசேஷம் இருப்பதாக மனிதர்கள் நிச்சயம் நம்புகிறார்களா? அல்லது ஒவ்வொரு ஐம்பது வருடங்களுக்கும் பயன்படுகிறமாதிரி ஓர் சுவிசேஷந்தான் உண்டா? விதம்விதமான சுவிசேஷங்களின் மூலமாக பரலோகத்திலிருக்கிற விசுவாசிகள் இரட்சிப்பு அடைய முடியுமா? அவர்களுடைய பாடல்கள் எப்படி யிருக்கும்? விதம்விதமான சுவிசேஷங்களால் இரட்சிப்படைந்து, விதம் விதமான போதனைகளைப் பின்பற்றி அவர்களால் எப்படி ஒற்றுமையாக ஐக்கியப்பட முடியும்? விதம்விதமான ஆத்மீக வழிமுறைகளுக்கு இடமளிப்பதாக பரலோகந்தான் இருக்க முடியுமா?
சுவிசேஷத்தை மாற்றியமைப்பதானால் அதில் இருக்கும் எந்தப் போதனையை நாம் தூக்கியெறியப் போகிறோம்? அதில் நாம் சகித்துக் கொள்ள முடியாதபடி இருக்கும் போதனைகள்தான் என்ன? கள்ளைக் கூழ் என்று நம்மைக் குடிக்கவைக்கப் பார்க்கும் ஓரு புதிய கிறிஸ்தவம் நம்மத்தியில் இன்று தலைதூக்கியிருக்கிறது. நேர்மையும், ஒழுக்கமுமில்லாத இந்தப் புதிய முயற்சி வரலாற்றுக் கிறிஸ்தவத்தில் மாற்றங்கள் செய்து அதைப் புதுப்பிக்கப் பார்க்கிறது. கிறிஸ்துவின் பரிகாரப்பலியை நிந்தித்து, பரிசுத்த ஆவியானவர் வேதத்தை எழுத்தில் வடித்துள்ளவிதத்தை மறுதலித்து, பரிசுத்த ஆவியை வெறும் உந்துசக்தியாக மட்டும் வர்ணித்து, பாவத்திற்கு கிடைக்கும் தண்டனையை வெறும் கட்டுக்கதையாக்கி, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை வெறும் மனப்பிரமையாக்கி, இத்தனையையும் தொடர்ந்து செய்துவரும் நமது விசுவாசத்தின் எதிரிகள், அவர்களை நாம் சகோதரர்கள் என்று சொந்தங் கொண்டாடி அவர்களோடு கூட்டுச் சேரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
ஆத்மீக அக்கறையின்மை (Carelessness)
இன்று எல்லா இடங்களிலுமே ஆத்மீக அக்கறையின்மையைக் கவனிக்க முடிகின்றது. பிரசங்கிக்கப்படுகின்ற பிரசங்கங்கள் வேதபூர்வமானவையா, இல்லையா என்பதைப் பற்றி எவருமே கவலைப்படுவதில்லை. எந்த விஷயத்தைப் பற்றி பிரசங்கங்கள் கொடுக்கப்பட்டாலும் அக்கறையில்லை; அது சுருக்கமாக மட்டும் இருந்துவிட வேண்டும் என்பதைத்தான் எல் லோரும் விரும்புகிறார்கள்.
விசுவாசிகள் அடங்கியொடுங்கி மனந்திறந்து பேசத் தயங்குகிறார்கள். திருடன் வீட்டைத் திருடிக்கொண்டிருக்கிறான்; வீட்டின் சுவர்கள் இடிக்கப் படுகின்றன; ஆனால் உள்ளறைக் கட்டிலில் சுகமாகத் தூங்கிக் கொண்டிருக் கும் நல்லவர்கள் அந்தச் சுகத்தை உதறியெறிந்துவிட்டு கீழே ஒடிப்போய் திருடர்களைத் துரத்தவும், காயப்படவும் மனமில்லாமல் இருக்கிறார்கள்.
நம் மத்தியில் இருக்கும் போலித்தனங்களுக்கு எதிராக நாம் குரல் கொடுப்பதை நமது தலைவீக்கத்தின் அறிகுறியாக சிலர் கருதுகிறார்கள். எதிலும் நாம் ஒத்துப்போகாவிட்டாலும், எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே இவர்களின் சுலோகமாக இருக்கிறது. (We are all to be as one, even though we agree in next to nothing.) போலிப் போதனைக்கு எதிராகக் குரல்கொடுப்பதை கிறிஸ்தவ சகோதரத்துவத்துக்கு எதிரான செயலாக இவர்கள் கருதுகிறார்கள்.
கிறிஸ்துவின் பரிகாரப்பலியை அசட்டை செய்கிறவர்களுடன் அதை மகிமைப்படுத்துகிற விசுவாசிகள் கூட்டுச்சேர்ந்துகொள்கிறார்கள். பரிசுத்த வேதாகமத்தை தேவனுடைய வார்த்தையாக விசுவாசிக்கும் விசுவாசிகள், கர்த்தர் அதை எந்தத் தவறுகளுமில்லாமல் தந்திருக்கிறார் என்பதை நம்பாதவர்களுடன் இணைந்து போகிறார்கள். சுவிசேஷ சத்தியங்களை விசுவாசிக்கிறவர்கள் (Evangelical doctrine) ஆதாமின் வீழ்ச்சியைக் கட்டுக்கதை என்று அலட்சியப்படுத்துகிறவர்களுடனும், பரிசுத்த ஆவியானவர் ஒர் நபர் என்பதை மறுப்பவர்களுடனும், விசுவாசத்தினால் நீதிமானாகுதலை ஒழுக்கக்கேடு என்று அழைப்பவர்களுடனும், மரணத்திற்குப் பிறகு மனந்திரும்ப மீண்டும் ஓர் வாய்ப்புண்டு என்று சொல்லுபவர்களுடனும் கூசாமல் கூட்டுச் சேர்ந்து கொள்கிறார்கள். ஆம்! வேத சத்தியங்களை விசுவாசிக்கிறோம் என்று மாரடித்துக்கொள்ளுகிறவர்கள் அவற்றை நிராகரிக்கிறவர்களுடன் வெளிப்படையாக ஒத்துப்போகிற அலங்கோலத்தை இன்று நாம் கண்முன்னாலேயே பார்க்க வேண்டியிருக்கிறது. அப்படிச் செய்யாமலும், கிறிஸ்துவுக்கு கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை ஒரு போதும் பெறாதவர்களையும் அவர்கள் இழித்துப் பேசுவதற்கும் தயங்க வில்லை. வெளிப்படையாகச் சொல்லப்போனால் இந்த ஐக்கியங்களையும், உறவுகளையும் நம்மால் கிறிஸ்தவ உறவுகளாக அழைக்க முடியவில்லை; ஏனெனில், அவை பாவத்தின் அடிப்படையில் அமைந்த ஐக்கியங்களாகத்தான் நமக்குத் தெரிகின்றன. கிறிஸ்து முழு மனிதகுலத்துக்குமாக மரித்தார் என்ற யுனிவர்சலிசப் போதனையை (Universalism) நாம் நம்பாமலும், ரோமன் கத்தோலிக்கப் போதனையான பேர்கட்டரியை (Purgatory) நாம் விசுவாசிக்காமலும் இருந்து அதேவேளை, பரிசுத்த வேதாகமத்தைக் கர்த்தர் பரிசுத்த ஆவியின் மூலம் அருளிச்செய்தார் என்பதையும், ஆதாமின் வீழ்ச்சியையும், பாவத்தில் இருந்து நாம் விடுதலை அடைவதற்கான கிறிஸ்துவின் சிலுவைப்பலியையும் நாம் தீவிரமாக விசுவாசிப்போமானால், கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு முரணான வேறொரு சுவிசேஷத்தைப் போதிப்பவர்களோடு நாம் ஒருபோதும் கூட்டுச்சேரக்கூடாது. அப்படிக் கூட்டுச்சேர்ந்தால் நாம் இன்னொரு கடவுளுக்கு விசுவாசமாக இருப்பது போலாகிவிடும்.
பரிசுத்த வேதாகமத்தின் போதனைகளைப் பற்றித் தொடர்ந்து பிரச்சனையான கேள்விகளையெழுப்பும் இதயங்களும், பரிசுத்த ஆவியானவர் பரிசுத்த வேதாகமத்தைத் தவறுகளெதுவுமின்றி தந்திருக்கிறார் என்று நம்பும் இதயங்களும் இணைந்து வாழ முடியாது; இதில் கட்சி மாறுவதற்கு இடமேயில்லை. பரிசுத்த ஆவியானவர் வேதத்தைத் தவறுகளில்லாமல் தந்திருக்கிறார் என்று ஒருபுறம் நம்பிக்கொண்டு, மறுபுறம் அந்த சத்தியத்தை நம் மால் நிராகரிக்க முடியாது; கிறிஸ்துவின் பரிகாரப்பலியை நம்புகிற அதேவேளை அதை நிராகரிக்கவும் முடியாது; ஆதாமின் வீழ்ச்சியை விசுவாசிக்கும் அதேவேளை, பாவத்தில் இருக்கும் மனிதனில் இருந்து ஆத்மீகப் பரிணாமம் ஏற்படுவதற்கான வழியுண்டு என்பதை நம்மால் நம்ப முடியாது; மனந்திரும்பாதவர்களுக்கு நித்திய தண்டனையுண்டு என்பதை விசுவாசிக்கிற நாம் அவர்களைக்குறித்த பெரிதான எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்ள முடியாது. இதுவரை பார்த்தவற்றில் நாம் ஒரு வழியை மட்டுமே பின்பற்ற முடியும்.
உறவுகள் (Company)
அத்திவாரம் இல்லாமல் கட்டப்பட்டிருக்கும் வீட்டைத் திருத்தி அமைக்க முடியும் என்று நம்பிக்கொண்டிருக்கிறவர்கள், ‘அந்த வீட்டை விட்டு வெளியேறத்தான் வேண்டும்’ என்று உணர்ந்து புத்தியுடன் நடந்து கொள்ளும் நாள் வரத்தான் போகிறது. வேதத்துக்கு முரணான போதனைகளை ஏற்று நடக்கும் கமிட்டிகளிலும், ஐக்கியத்திலும் இருந்து வெளியேறுவது மட்டுமே அந்தப் பிரச்சனைக்கான சரியான வழி என்பதை நாம் எப்போதுமே உணர்ந்திருக்கிறோம். அத்தகைய ஐக்கியங்கள் ‘நாங்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை’ என்று எவ்வளவுதான் சாதித்தாலும், பிரச்சனையின் ஆழத்தையும் அதன் விளைவுகளையும் அறிந்திருப்பவர்களுக்கு வேறுவழி கிடையாது.
அத்தகைய அடிப்படைப் போதனைகளுக்கு எதிராக நடக்கும் ஐக்கியத்திலிருந்து விலகுவதற்கும், அழிந்தே தீருவோம் என்று உறுதியாயிருக்கிற ஆத்து மாக்களுக்கு ஜீவ அப்பத்தைக் கொடுக்காமல் இருப்பதற்கும் பெயர் ‘பிரிவினை’ (Schism) அல்ல; அத்தகைய மனச்சாட்சியையும், சத்தியத்தையுமே கர்த்தர் விசுவாசிகளிடம் இருந்து எதிர்பார்க்கிறார். சத்தியத்திற்காக உறுதியான முடிவை எடுத்தாக வேண்டும்; அதுவே போலிப் போதனைக் கெதிரான நடவடிக்கையுமாகும். இந்த வழியைக் கடைப்பிடிப்பவர்கள் அதைக் கடைப்பிடிக்கட்டும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் தாங்கிக் கொள்ளட்டும்: அதேவேளை பரந்த வழியையும் பின்பற்ற நினைப்பது முட்டாள்தனம். பேலியாளுக்கும் நமக்கும் என்ன உறவு இருக்க முடியும்?
மெய்யான ஆத்மீக ஐக்கியத்தை அநுபவிக்காத கூட்டத்தோடு நமக்கு உறவும், ஐக்கியமும் இருப்பதாகக் காட்டிக்கொள்ளக் கூடாது என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம். போலியானது என்று வெளிப்படையாகத் தெரியும் எந்தப் போலிப்போதனையைப் பின்பற்றுபவர்களோடும் நாம் ஐக்கியம் வைத்திருந்தால், அவர்களுடைய பாவத்தில் பங்குகொள்கிறோம். சத்தியம் தெரிந்து அதை நேசிப்பவர்கள், அதற்கு நேரெதிரான அசத்தியத்தோடு ஐக்கியம் வைத்திருக்க முடியாது. அப்படியிருக்கும்போது, அந்தக் கூட்டத்தோடு அத்தகைய ஐக்கியம் இருப்பதாக அவர்கள் காட்டிக் கொள்வதற்கு சரியான காரணமெதுவுமேயில்லை.
சத்தியத்தை விற்று ஐக்கியத்துக்காக அலைவது இயேசு கிறிஸ்துவைக் காட்டிக்கொடுப்பதாகும். இராஜாதி இராஜனாகிய இயேசு கிறிஸ்துவின் அரசுரிமைகளில் பங்குபெறுவதற்கான உடன்படிக்கையைச் செய்ய நாம் தயாராவோமானால், அவருடைய சுவிசேஷமாகிய கீரிடத்தின் இரத்தினங்களை நாம் மற்றவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக தாரைவார்த்துவிட முடியாது. கிறிஸ்துவே நம்முடைய தலைவராகவும் ஆண்டவராகவும் இருப்பதால் அவருடைய வார்த்தைகளையே நாம் பின்பற்றுவோம். அவருடைய போதனைகளோடு விளையாடுவது அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு சமமானதாகும். சில நல்ல மனிதர்கள், ஆரம்பத்தில் ஒருபோதும் தாங்கள் சிந்தித்திராத முரண்பாடான உறவுகளுக்கு தங்களை அறியாம லேயே உட்படுத்திக் கொள்கிறார்கள்; ஆனால் காலஞ் செல்லச்செல்ல அவர்கள் அதை நியாயப்படுத்திக்கொள்ளும் நிலமை ஏற்படுகிறது. சந்தர்ப்ப சூழ்நிலைகள் தங்களை ஆளும்படி இப்படி இடம் கொடுத்துவிட்ட இவர்கள், மற்றவர்கள் தங்களை வழிநடத்தும் நிலமைக்கு இடமளித்து விடுகிறார்கள்; பின்னால் விழிப்பேற்பட்டு, இருக்கக்கூடாத இடத்தில் இருக்கிறோம் என்ற உணர்வேற்பட்ட பின்னர் அதிலிருந்து விலகிவிட வேண்டும் என்ற உறுதி எல்லோருக்குமே இருப்பதில்லை. முக்கியமாக தங்களைப் போலவே தவறு செய்து வரும் சக தோழர்களோடு இருக்கும்போது அவர்களுடைய வழிகளை ஆராய்ந்து பார்க்கவோ, அதுபற்றிப் பேசவோ அவர்களுக்கு எந்தத் துடிப்பும் இருக்காது.
நம்பிக்கை (Conviction)
“விசுவாச அறிக்கை (Creed) கர்த்தருக்கும் மனிதருக்கும் இடையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்துகிறது” என்ற கூற்றில் எந்தவிதமான உண்மையும் இல்லை. உறுதியாகவும், தெளிவாகவும், சத்தியத்தை விளக்குவதால் விசுவாசியைக் கர்த்தரிடத்தில் இருந்து பிரித்துவிட முடியாது. என்னைப் பொறுத்தவரையில், நான் விசுவாசிப்பதை தெளிவாக எல்லோருக்கும் புரிகிற மொழியில் விளக்குவதற்கு நான் ஒருபோதும் வெட்கப்பட்டதில்லை. நான் விசுவாசிக்கிற சத்தியம் கர்த்தருடைய தவறற்ற வேதத்தில் அவருடைய சித்தமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதனாலேயே, அதை நான் உறுதி யாகப் பின்பற்றுகிறேன். அதை வெளிப்படுத்தியிருக்கிற கர்த்தரிடமிருந்து அது என்னை எப்படிப் பிரிக்க முடியும்? கர்த்தரோடு நான் ஐக்கியத்தில் வருவதற்கு உதவும் சாதனங்களில் ஒன்றாக அது இருக்கிறது. அதன் மூலம் கர்த்தரையும், அவருடைய வார்த்தையையும் பெற்று என்னுடைய அறிவில் நான் வளர்கிறேன். கர்த்தர் எதைச்சொன்னாலும் அவருடைய வார்த்தையாக நான் அதை ஏற்றுக்கொள்ளுகிறேன்; என்னுடைய இருதயத்தின் ஆழத்தில் இருந்து தாழ்மையோடு அவரை ஆராதிக்கிறேன். “என்னுடைய விசுவாசத்தை என்னால் விளக்கமுடியாது” என்று சொல்லுகிற மனிதன் மேல் எனக்கு அக்கறை இல்லை; ஏனெனில் அவனுடைய பேச்சின் அடிப்படையில் அவனோடு என்னால் ஒத்துப்போக முடியாது. அவனிடம் நிச்சயமாக ஒரு விசுவாச அறிக்கை இருக்கத்தான் வேண்டும். அப்படி எதுவும் தன்னிடம் இல்லை என்று அவன் சொல்லுகிறபோது அதுவே அவனுடைய விசுவாசத்தின் அறிக்கையாக இருக்கிறது. அதாவது, அவனுடைய அவிசுவாசமே ஒருவிதத்தில் அவனுடைய அறிக்கையாக இருக்கிறது.