திருச்சபை வரலாறு

ஜெர்மனியில் ஆரம்பமான திருச்சபை சீர்திருத்தம்

மனிதநலவாதிகள் (Humanists) திருச்சபை சீர்திருத்தத்திற்கான பாதையை அமைப்பதில் அதிக பங்கைப் பெற்றிருந்தபோதும் அவர்களால் திருச்சபையில் மெய்யான வேத அடிப்படையிலான சீர்திருத்தத்தைக் கொண்டுவர முடியவில்லை. திருச்சபை சீர்திருத்தமாகிய எழுப்புதல் ஏற்படுவதற்கு ஒரு மனிதன் ஆழமான ஆத்மீக தாகத்தையும், விசுவாசத்தையும், நெஞ்சுரத்தையும் கொண்டிருக்க வேண்டும். சுவிசேஷத்திலும், அதை அறிவிப்பதிலும் நெருப்பாக எரியும் வாஞ்சையையும், உத்வேகத்தையும் தனக்குள் கொண்டிருக்க வேண்டும். இவற்றோடு அதிக திறமைகளையும், பெருந்தைரியத்தையும் கொண்டிருக்க வேண்டும். அத்தகைய மனிதனாகவே ஜேர்மனியில் திருச்சபை சீர்திருத்தத் திற்காகக் கர்த்தரால் பயன்படுத்தப்பட்ட மார்டின் லூதர் (Martin Luther) இருந்தார்.

நவம்பர் 10ம் நாள் 1483ல் லூதர் வறுமையில் வாடிய ஒரு சுரங்கத் தொழிலாளிக்கு மகனாகப் பிறந்தார். இதனால் தொழிலாளிகளின் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை அவர் நன்றாக ஆரம்ப காலத்தில் இருந்தே அறிந்துவைத்திருந்தார். ஆரம்பக் கல்வியை முடித்தபின் ஏர்பர்ட் பல்கலைக்கழகத்தில் (Erfurt University) 1501ல் சேர்ந்தார். அங்கே ஜோன் வெசல் (John Wesel) என்ற மனிதநலவாதியின் நட்பு அவருக்குக் கிடைத்தது. சட்டக் கல்வி பயிலுவதில் திறமைசாலியாகவும், தத்துவம், இசை ஆகியவற்றில் அதிக திறமையும் கொண்டிருந்த லூதர் பலரும் ஆச்சரியப்படும்படியாக ஆகஸ்தீனியன் குருப்பயிற்சிக்காக (Augustinian Eremites) தன்னை அர்ப்பணித்தார். சிறுவனாக இருந்த காலத்தில் இருந்தே லூதருக்கு ஆத்மீகத்தில் பெரும் பிடிப்பு இருந்தது. இப்போது பெலேஜியன் (Pelagian) போதனையைப் பின்பற்றிய அவருடைய வழிகாட்டிகள் உபவாசத்தாலும், ஜெபத்தாலும், பாவங்களுக்கு பலிகளைச் செலுத்துவதன் மூலமும் இரட்சிப்பை அடைய வழிதேடிக்கொள்ளும்படிப் போதித்தார்கள். வேதத்தை வாசிக்க அவருக்கு அனுமதியிருக்கவில்லை. பாவப்பலிகளைச் செலுத்தியும், தொடர்ந்து பாவங்களை அறிக்கையிட்டும் தனக்கு மேலிருந்த வர்களுக்கு அவர் அதிகம் தொல்லை கொடுத்தார். இருந்தும் அவருக்கு சமாதானம் ஏற்படவில்லை. அவருக்கு வயது இருபதாக இருந்தபோது கையில் இலத்தீன் மொழியில் இருந்த ஒரு வேதப்புத்தகம் கிடைத்தது. அவருக்கு மேல் மடத்தில் பதவியில் இருந்த ஜோன் ஸ்டௌபிட்ஸ் (John Staupitz), அந்த வேதப்புத்தகத்தை வாசிக்கும்படியும், கிறிஸ்து மட்டுமே பாவங்களில் இருந்து விடுதலை தரக்கூடியவர் என்றும் லூதருக்கு அறிவுரை கூறினார். இலத்தீன் மொழியில் இருந்த வேதத்தை லூதர் கவனத்தோடு வாசிக்க ஆரம்பித்தார். புதிய ஏற்பாட்டில் பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தை அவர் தொடர்ந்து வாசித்தபோது தேவ சமாதானம் அவருக்குக் கிடைத்தது. தொடர்ந்து அவர் அகஸ்தீனின் (Augustine) நூல்களை வாசித்த போது இயேசு கிறிஸ்துவின் மூலமே கர்த்தர் பாவிகளுக்கு பாவநிவாரணம் தருகிறார் என்பதையும், அவர்கள் தங்களுடைய சொந்த நற்கிரியைகளின் மூலம் பாவத்தில் இருந்து விடுதலை அடைய முடியாது என்பதையும் தெளிவாக அறிந்துகொண்டார். இரட்சிப்பு கர்த்தருடைய கிருபையின் மூலமாக மட்டுமே கிடைக்கிறது என்பதும் அவருக்குத் தெளிவாயிற்று. அதற்குப் பிறகு குருமட வாழ்க்கையிலும், மதத்தின் பெயரால் செய்து வந்த புறக்கிரியைகளிலும் அவருக்குப் பிடிப்பில்லாமல் போனது. தொடர்ந்து அவர் எபிரேய மொழியிலும், கிரேக்க மொழியிலும் வேதத்தைப் பயில ஆரம்பித்தார். முக்கியமாக பவுல் அப்போஸ்தலன் எழுதிய நூல்களை ஆர்வத்தோடு படிக்க ஆரம்பித்தார்.

டெட்செலும் பாவமன்னிப்பு பத்திரங்களும் (Tetzel and the Indulgences)

இக்காலத்தில் போப்பாக இருந்த லியோவுக்கு (1513-1521) புனித பேதுருவின் ஆலயத்தைக் கட்டி முடிக்கவும், தன்னுடைய ஆடம்பர வாழ்க்கைச் செலவிற்கும் அதிகம் பணம் தேவைப்பட்டது. அப்பணத்தைச் சேர்க்க பாவமன்னிப்பு பத்திரங்களை சபை மக்களுக்கு விநியோகிக்க லியோ திட்டம் போட்டார். இத்தகைய வியாபார உத்தி இதற்கு முன்பே சபையில் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தன. இந்தப் புதிய ஆத்மீக வியாபாரத் தந்திரம் மேலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. டொமினிக்கன் பிரிவைச் சேர்ந்த டெட்செல் விட்டன்பேர்கில் (Wittenberg) இந்தப் பத்திரங்களை விற்பதற்கு போப்பால் நியமிக்கப் பட்டார். தன்னிடம் இருக்கும் பெட்டியில் பணத்தை ஒருவர் போட்ட உடனேயே அவருடைய இறந்துபோன உறவினரின் ஆவி பேர்கட்டரியில் (Purgatory) இருந்து உடனடியாக விடுதலை அடையும் என்று கூசாமல் பொய் சொன்னார் டெட்செல். இதைக் கேட்ட மார்டின் லூதரின் இதயம் ஆக்ரோஷத்தால் வெம்பி விம்மியது. போப் லியோ பணம் சேர்ப்பதற்கு ஆடிய ஆட்டங்களும், கொடூரமான பாவங்களைச் செய்தவர்களும், ஏனையோரும் பத்திரங்களைப் பணங்கொடுத்து வாங்குவதற்கு அலைந்து திரிந்த அட்டூழியத்தையும் பார்த்துச் சகித்துக்கொள்ள முடியாத லூதர் அதிரடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

1517ம் ஆண்டு அவர் விட்டன்பேர்க் சபையின் பெருங்கதவில் கத்தோலிக்க மதத்திற்கும் போப்புக்கும் எதிரான தொன்னூற்றைந்து உண்மைகளை ஒரு தாளில் எழுதி அறைந்து சகல மக்களும் அவற்றை வாசித்தறிந்து கொள்ளும்படிச் செய்தார். அக்காலத்தில் சபைக் கதவில் இப்படியான முக்கியமான செய்திகளை பலரும் அறிந்துகொள்ளும்படி எழுதி வைப்பது வழக்கம். கூட்டங்கூட்டமாக மக்கள் வந்து சபைக்கதவில் லூதர் எழுதி வைத்திருந்தவற்றை வாசித்தார்கள். அதில் லூதர், (1) பாவமன்னிப்பு பத்திரங்கள் ஒருநாளும் எவருடைய பாவங்களிலும் இருந்தும் விடுதலை தராது; கர்த்தர் மட்டுமே அதைச் செய்யக்கூடியவராக இருக்கிறார் என்றும் (2) தேவகோபத்திலிருந்து அதால் விடுதலை கொடுக்க முடியாது; அதையும் கர்த்தர் மட்டுமே செய்ய முடியும் என்றும் (3) மனந்திரும்பி வாழ்கின்ற கிறிஸ்தவன் ஏற்கனவே கர்த்தரிடம் இருந்து பாவமன்னிப்பு பெற்று விட்டான். ஆகையால், அவனுக்குப் பாவமன்னிப்பு பத்திரங்கள் தேவையில்லை என்றும் எழுதியிருந்தார். இவை ஜெர்மானிய மொழியிலும், இலத்தீன் மொழியிலும் பிரதிகள் எடுக்கப்பட்டு லூதரின் நண்பர்களால் ஆயிரக்கணக்கில் ஜெர்மனி முழுவதும் விநியோகிக்கப்பட்டன. திருச்சபை சீர்திருத்தத்திற்கான போராட்டம் இவ்விதமாக ஆரம்பமானது.

மார்டின் லூதர் நினைத்தும் பார்த்திராத அளவுக்கு பெரும் விளைவுகளை போப்புக்கு எதிரான அவருடைய எழுத்துக்கள் ஏற்படுத்தின. ஆரம்பத்தில், குருமாருக்கிடையிலான வெறும் சச்சரவு மட்டுமே இது என்று எண்ணிய போப் லியோ இனியும் வாளாவிருக்கக்கூடாது என்றெண்ணி 1518ல் லூதரை ரோமுக்கு வருமாறு பணித்தார். அந்த அழைப்பை ஏற்று ரோமுக்குப் போயிருந்தால் லூதரின் உயிர் போயிருக்கும். அதையுணர்ந்த லூதர் அழைப்பை நிராகரித்துவிட்டார். உடனே லியோ, இந்தப் பிரச்சனையைத் தீர்க்கும்படி ஜெர்மனியில் தன்னுடைய பிரதிநிதி யாக இருந்த கார்டினல் கெஜெட்டனுக்குக் (Cardinal Cajetan) கட்டளையிட்டார். ஒக்ஸ்பேர்கில் (Augsburg) லூதரைச் சந்தித்துப் பேசிய போப்பின் பிரதிநிதி, போப்பின் தலையீடு இல்லாமல் கிறிஸ்துவிடம் இருந்து பாவிகள் மன்னிப்புப்பெற முடியாது என்று விளக்கி லூதரின் நிலைப்பாட்டில் குறை கண்டார். தன்னுடைய போதனையில் எந்தக் குறையும் இல்லை என்று சாதித்த லூதர், போப் தன்னுடைய போதனைகளை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டு விட்டன்பேர்கிற்கு திரும்பினார். இதுவரையிலும் போப்பின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டிருந்த லூதர், அதைப்பற்றி மேலும் ஆராய்ந்து பார்த்தபோது ரோமன் கத்தோலிக்க மதத்தின் புரட்டையும், போப்பின் அதிகாரத்திற்குக் காரணமாக இருந்தது கத்தோலிக்க மதம் ஏற்படுத்தி வைத்திருந்த போலி ஆவணங்களுமே என்பதை உணர்ந்து பெருங்கோபங் கொண்டார்.

லிப்சிக்கில் (Leipsic) நிகழ்ந்த வாதங்கள்

1519ல் போப்பின் பிரதிநிதியாகிய ஜோன் எக்கிற்கும் (John Eck), லூதரின் நண்பரான கார்ல்ஸ்டட்டிற்கும் (Carlstadt) இடையிலான வாதத்திற்கான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் லூதர் அனைவரும் திகைத்துப்போகும்படியான ஒரு குற்றச்சாட்டைப் போப்பிற்கு எதிராக வெளியிட்டார். அதாவது, போப்பிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை வேதத்தில் எங்குமே காணமுடியாது என்று லூதர் அறிவித்தார். அத்தகைய அதிகாரம் கடந்த நானூறு வருட காலங்களிலேயே ரோமன் கத்தோலிக்க மதத்தால் ஏற்படுத்தப்பட்டது என்றும், சபைக் கவுன்சில்கள் அத்தகைய அதிகாரத்துக்கு இடங்கொடுத்து பெருந்தவறிழைத்துவிட்டன என்றும் லூதர் குற்றஞ்சாட்டினார்.

தன்னுடைய குற்றச்சாட்டின் முழுத்தாக்கத்தையும் லூதர் நன்றாகவே உணர்ந்திருந்தார். எந்தப் போப்பினதும், கவுன்சில்களினதும் அதிகாரத்திலிருந்தெல்லாம் விடுபட்டு வேதத்திற்கு மட்டுமே கட்டுப்படுவேன் என்றும், விசுவாசத்தைப் பற்றிய விஷயங்களில் வேதம் மட்டுமே அதிகார பூர்வமான முடிவைத் தரக்கூடியது என்றும் லூதர் நம்பினார். போப்பின் அதிகாரத்துக்குட்படாதவராக சுதந்திரம் பெற்ற கிறிஸ்தவராக அவர் உலகத்தின் முன் நின்றார். இளைய மனிதநலவாதிகளின் கூட்டம் அவருக்குப் பின்னால் இருந்தது. மெய்க்கிறிஸ்தவத்தின் விடுதலை மட்டுமல்ல, தங்களுடைய நாட்டின் விடுதலையும் மார்டின் லூதரின் போராட்டத்தின் வெற்றியில்தான் இருந்தது என்பதை ஜெர்மன் மக்களும் புரிந்துகொண்டார்கள். நூறு மனிதர்களின் வல்லமை தன்னில் இருப்பது போல் உணர்ந்த லூதர் அக்காலத்தில் உதயமாகியிருந்த அச்சுக்கூடத்தின் உதவியுடன் தொடர்ந்து அதிகமான பிரசங்கங்களையும், கைப்பிரதிகளையும் வெளியிட்டு வந்தார்.

லூதர் லிப்சிக்கிற்குப் (Leipsic) போனபோது அவருக்குத் துணையாக 200 மாணவர்களும், விட்டன்பேர்கில் கிரேக்கப் பேராசிரியராக இருந்த இளம் மெலாங்த்தனும் (Melanchthon) உடன் சென்றனர். மெலாங்த்தன் லூதரின் இணைபிரியா சீடராகவும், அவரது உற்ற நண்பராகவும், அவருக்குப்பின் அவருடைய இடத்தைப்பிடித்தவராகவும் இருந்தார். இருவருடைய குணங்களும், தகுதிகளும் அவர்களுடைய நட்புக்கு அதிகம் உதவின. சிங்கம் போல் சீறிப் பயமறியாதிருந்த மார்டின் லூதருக்கு, கனிவும், தாழ்மையும் உருவான மெலாங்த்தனின் குணம் தேவையாயிருந்தது. சீர்திருத்த கிறிஸ்தவத்தின் தொகுப்பாளரும், வியாக்கியானம் செய்பவராகவும் இருந்த மெலாங்த்தன் விரைவிலேயே புகழடைந்து லூதர் மரித்தபோது, லூதரைப் பின்பற்றியவர்களுக்குத் தலைவரானார்.

1520 ல் லூதர் தன்னுடைய மூன்று கைப்பிரதிகளை போப்புக்கு அனுப்பிவைத்தார். மிகவும் கடுமையாக போப்பின் அதிகாரத்தை எதிர்த்த அந்தக் கைப்பிரதிகள் எவரும் இலகுவாக வாசிக்கக் கூடியதாகவும், புரிந்து கொள்ளக் கூடியதாகவும் இருந்தன. 1520, ஜூன் 15ம் நாள் போப் லியோ லூதரை சபை நீக்கம் செய்து அவருடைய எழுத்துக்களைப் பறிமுதல் செய்து எரிக்கும்படி உத்தரவிட்டார். அதற்கு லூதர் ஏற்ற பதிலளித்தார். விட்டன்பேர்கிற்கு புறத்தில் ஓரிடத்தில் தீயை உருவாக்கி, பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்களும், தன்னைப் பின்பற்றிய சாதாரண மக்களும் கூடியிருந்த ஒரு கூட்டத்தின் முன் போப்பின் கட்டளையையும், ரோம சபைச் சட்டவிதிகளையும், அதன் போலி ஆவணங்களையும் தீயிலிட்டு எரித்தார். வேறெந்த செயலும் இதைவிடவும் உறுதியான பதிலைப் போப்புக்கு எதிராகத் தந்திருக்க முடியாது.

வேர்ம்ஸில் (Worms) கூடிய சபைக் கவுன்சில் கூட்டம்

இக்காலப்பகுதியில் ஸ்பெயினின் அரசனாக இருந்த ஐந்தாம் சார்ள்ஸ் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் அதிகமான பகுதிகளைத் தன்வசம் கைப்பற்றி உலகத்திலேயே மிகவும் பலமும், அதிகாரமுமுடைய அரசனாக இருந்தான். அவன் தீவிரமான ரோமன் கத்தோலிக்கனாக இருந்ததுடன், ஒற்றுமையுள்ள நீண்ட சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்புவதிலும், எவரும் எதிர்க்கமுடியாத பெரும் சபையை அமைப்பதிலும் கருத்தாயிருந்தான். ரோமன் கத்தோலிக்க மதத்தை எதிர்த்த எதிர்ப்பாளர்களை அவன் உடனடியாக அழித்திருக்க முடியும். இரண்டு காரணங்களின் நிமித்தம் அவன் அதைச் செய்யாமலிருந்தான். பிரான்சின் அரசனாக இருந்த முதலாம் பிரான்ஸிஸோடும், துருக்கியர்களோடும் நடந்து வந்த போரில் எதிர்ப்பாளரின் துணை தனக்குத் தேவைப்பட்டதால் அவன் அவர்களை விட்டுவைத்திருந்தான்.

1521ல் அவன் வேர்ம்ஸில் (Worms) ஒரு சபைக் கவுன்சிலைக் கூட்டினான். இதற்கு, இளவரசர்கள், அவர்களுக்குக் கீழிருந்தவர்கள், முக்கியஸ்தர்கள் என்று சமூகத்தின் பெரிய மனிதர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர். லூதரைத் தனக்குக் கட்டுப்படச் செய்வது மட்டுமே அரசனுடைய நோக்கமாக இருந்தது. கூட்டத்துக்கு வரும்படி லூதருக்கு அழைப்பு அனுப்பி பாதுகாப்போடு திரும்பிச்செல்ல தான் உத்தரவாதம் அளிப்பதாக வும் அரசன் செய்தியனுப்பினான். லூதரின் நண்பர்கள் ஜோன் ஹஸ்ஸுக்கு நடந்ததை நினைவுறுத்தி கூட்டத்துக்கு செல்ல வேண்டாம் என்று லூதருக்கு அறிவுரை தந்தார்கள். லூதர் வேர்ம்ஸுக்கு போகத் தீர்மானித்தார். அரசனின் முன்னிலையில் நிகழ்ந்த கூட்டம் லூதரை மதிக்கவில்லை. லூதரெழுதிய நூல்கள் பற்றிய கேள்விகளைக் கேட்டு, அவற்றை மறுதலிக்கும்படி அவர் எச்சரிக்கை செய்யப்பட்டார். ஹஸ்ஸைப் போலவே அவர் இறந்து நூறுவருடங்களுப் பிறகு லூதரும், தானெழுதிய அனைத்தும் வேதத்திற்கெதிராக இருந்தால் மட்டுமே தன்னால் அவற்றை மறுதலிக்க முடியும் என்று பதிலளித்தார். “இதுவே என்னுடைய தீர்மானம்; இதைவிட வேறெதையும் என்னால் செய்ய முடியாது. கர்த்தரே எனக்குத் துணை. ஆமேன்!” என்று கூறி முடித்தார் லூதர். அவருடைய வார்த்தைகள் ஐரோப்பாவெங்கும் சுதந்திரத்தை நாடி நின்ற மனிதர்களின் இதயங்களை யெல்லாம் புல்லரிக்கச் செய்தன.

ஏற்கனவே லூதரைப் பாதுகாப்போடு அனுப்பி வைப்பதாக அரசன் உறுதிமொழி கொடுத்திருந்ததால் அவருக்கு திரும்பிப்போக உத்தரவு கிடைத்தது. இருந்தபோதும், அவர் குற்றவாளியாக அறிக்கையிடப்பட்டு சாம்ராஜ்யத்தின் தண்டனைக்குரியவராக குற்றஞ்சாட்டப்பட்டார். லூதருக்கு வழியில் ஆபத்து ஏற்படும் என்று அஞ்சிய சாக்சனியின் அதிபதி இரகசியமாக ஒரு குதிரைப்படையை அனுப்பி வழியில் லூதரைக் கைது செய்யும்படிப் பணித்தார். லூதர் அங்கிருந்து வொட்பேர்கிற்கு (Wartburg) கொண்டு செல்லப்பட்டார். லூதரின் எதிரிகள் அவர் தொலைந்துவிட்டார் என்று எண்ணி ஆனந்தப்பட்டார்கள். லூதர் இப்படியாக ஒருவருடத்துக்கு மறைத்து வைக்கப்பட்டிருந்தார். அவர் தனது மறைவிடத்திலிருந்து புதிய ஏற்பாட்டை கிரேக்க மொழியில் இருந்து ஜெர்மானிய மொழிக்கு மொழி பெயர்த்தார். வேதம் மக்களுடைய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அவர்கள் வாசிக்கும் வசதி ஏற்படுவது திருச்சபை சீர்திருத்தத்திற்கு மிகவும் அவசியமாக இருந்தது.

வொட்பேர்கில் இருந்து விட்டன்பேர்கிற்கு மார்ச் 1522ல் திரும்பிய லூதர் தன்னுடைய ஆதரவாளர்கள் விட்டன்பேர்கில் உணர்ச்சிவசப்பட்டு நடந்துகொள்வதைக் கண்டு அவர்களைத் திருத்த முயன்றார். எட்டே நாட்களில் அவர்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சீர்திருத்தத்தின் வழியில் செல்லப் பாதை அமைத்தார்.

1523ல் நிகழ்ந்த தேச முக்கியஸ்தர்களின் (Nobles) புரட்சியும், 1525ல் நிகழ்ந்த விவசாயிகளின் புரட்சியும் மார்டின் லூதருக்கு மனத்தளர்ச்சியை ஏற்படுத்தி அவருடைய பணிகளுக்குத் தடையேற்படுத்தின. இத்தகைய புரட்சிகளுக்கு நாட்டில் நிலவிய கடுமையான பொருளாதார, சமூகக் குறைபாடுகளே காரணமாக இருந்தன. ஆனால், இதற்கெல்லாம் லூதரே காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்டார். விவசாயிகளின் புரட்சியை உடனடியாக அடக்கும்படி அதிகாரிகளை லூதர் கேட்டுக்கொண்டார். இந்த விஷயத்தில் லூதர் செய்தது சரியல்ல. இதனால் அவருடைய ஆதரவாளர்களில் அநேகமானோர் அனாபாப்திஸ்துகளாக (Anabaptists) மாறினர்.

ஸ்பியரில் (Speier) கூடிய ஆலோசனைக் கூட்டங்கள்

தனது எதிரியான முதலாம் பிரான்ஸிஸைத் தோற்கடித்து லூதரைப் பின்பற்றுபவர்களைத் தொலைப்பதற்கு தனக்கு உதவவேண்டுமென்ற வாக்குறுதியையும் பெற்றுக்கொண்டபின் ஐந்தாம் சார்ள்ஸ் ஸ்பியரில் சீர்திருத்தவாதிகளுக்கெதிராக நடவடிக்கையெடுக்குமுகமாக ஒரு கூட்டத் தைக் கூட்டினார். அதேநேரம் போப்புடனும் கடுமையான வாக்கு வாதத்திலும் ஈடுபட்டார். ஸ்பியரில் கூடிய கூட்டமோ லூதரைக் கண்டிக் காமல் பொறுத்துப்போக வேண்டுமென்றும், ஜெர்மனியில் உள்ள ஒவ்வொரு மாகாணமும் அதை ஆளும் இளவரசன் பின்பற்றும் மதத்தைப் பின்பற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் தீர்மானித்தது. இந்தத் தீர்மானம் 1555ல் ஒக்ஸ்பேர்கில் (Augsburg) கூடிய சமாதானக்கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1529ல் ஸ்பியரில் மறுபடியும் கூடிய கூட்டத்தில், இதுவரை ஜெர்மனியில் 1526ம் ஆண்டு கூட்டத்தின் பின் லூதரைப் பின்பற்றத் தீர்மானித்துள்ள மாகாணங்கள் அதைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்றும், ஏனைய மாகாணங்கள் சீர்திருத்தவாதத்திற்கு எந்தவிதத்திலும் இடமளிக்காமல் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட சிறுபான்மையினரான சுவிசேஷப் பிரிவினர் இதை எதிர்த்து எந்தக் கூட்டமும் மதசம்பந்தமான விஷயங்களில் மனித னின் மனச்சாட்சியின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தலாகாது என்று கூறினர். இப்படி எதிர்த்துப் பேசியதால் அவர்கள் ‘புரொட்டஸ்தாந்துகள்’ (Protestants), அதாவது ‘எதிர்ப்பாளர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். ‘புரொட் டெஸ்ட்’ (Protest) என்ற ஆங்கில வார்த்தைக்கு ‘எதிர்ப்பு’ என்பது பொருள். இந்த வகையிலேயே இந்த வார்த்தை திருச்சபை வரலாற்றில் உருவானது. அதேசமயம் கத்தோலிக்கர்கள் தங்களுடைய மதத்தைக் காக்கவும், வளர்க்கவும் ஒரு அமைப்பையும் ஏற்படுத்திக்கொண்டனர். பேரரசனான ஐந்தாம் சார்ள்ஸ் புரொட்டஸ்தாந்து (சீர்திருத்த) கிறிஸ்தவத்தை அழிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தபடியால் சாக்சனியைச் சேர்ந்த இளவரசரும் ஏனைய இளவரசர்களும் புரொட்டஸ்தாந்து அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி கத்தோலிக்க மதத்திற்கெதிராக செயல்படத் தீர்மானித்தனர்.

இவ்வாறாக சீர்திருத்தத்தின் எதிரிகள் அதற்கெதிராக ஒன்றிணைந்து செயல்பட ஆரம்பித்த வேளையில், லூதரின் போதனையைப் பின்பற்றிய வர்களுக்கும், சுவிட்சர்லாந்து இறையியல் அறிஞர்களுக்குமிடையில் திருவிருந்தைப் பற்றிய இறையியல் கருத்து வேறுபாடுகள் உருவாகின. இக்கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துவைப்பதற்காக 1529ல் மார்பேர்க் என்ற இடத்தில் ஹெசியைச் சேர்ந்த பிலிப் ஒரு மாகாநாட்டைக் கூட்டினார்.  இதுபற்றி அடுத்த இதழில் விபரமாகப் பார்ப்போம்.

ரோமன் கத்தோலிக்க மதத்திற்கெதிராகப் போராடி வேதபூர்வமான கிறிஸ்தவ திருச்சபைகளை நிலைநாட்ட சீர்திருத்தவாதிகள் போராட ஆரம்பித்திருந்தாலும் பதினாறாம் நூற்றாண்டில் அவர்கள் சகல இறை யியல் கோட்பாடுகள் பற்றியும் தெளிவான விளக்கத்தைக் கொண்டிருந்தார்கள் என்று கூற முடியாது. இதுவரை ரோமன் கத்தோலிக்க சபையால் மறைத்து வைக்கப்பட்டிருந்த சத்தியங்கள் ஒவ்வொன்றையும் அவர்கள் வேதத்தைப் படித்து ஆராய்ந்து இறையியல் கோட்பாடுகளை வகுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அந்நிலையில் அவர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதில் ஆச்சரியமில்லை. ஆனால், அவர்கள் எல்லோருமே வேதத்தில் இருந்துதான் எந்தப் போதனையையும் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதிலும், வேதம் மட்டுமே திருச்சபையில் அதிகாரம் செலுத்த வேண்டும் என்பதிலும் சந்தேகமில்லாமல் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

மறுமொழி தருக