தீபத்தை மனநிறைவோடு தொடர்ந்து படித்து, கற்று கர்த்தரை மகிமைப்படுத்தி வருகிற வாசகர்கள் அனைவருக்கும், பத்திரிகையின் நலத்தில் பங்குகொள்கிற அனைவரின் சார்பாக என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய ஆண்டை நாம் வரவேற்கின்றவேளை உலகம் எங்கு போய்க்கொண்டிருக்கிறது என்பதை ஒருதடவை நினைத்துப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. பயங்கரவாதம் இந்த உலகத்தில் வெகுசாதாரணமானதொன்றாக நிலைபெற்று நிற்கின்றது. சக உயிர்களை மதித்து நடக்கும் மனிதத் தன்மைக்கு என்ன நேர்ந்துவிட்டது என்று கேட்காமல் இருக்க முடியவில்லை. ஈராக்கிலும், இஸ்ரவேலிலும், ஆப்கானிஸ்தானிலும், ஸ்ரீ லங்காவிலும் அநியாயமாக உயிர்ப்பலி அன்றாடம் நிகழ்ந்து வருகின்றது. மனிதனை மனிதனாகப் பார்க்காமல் இனத்தின் பெயராலும், மதத்தின் பெயராலும், அரசியல் நோக்கங்களுக்காக கொன்று குவித்து வருகின்ற மனித மிருகங்கள் உலகில் அதிகரித்து விட்டார்கள். உலகில் அமைதியோடு இருக்கும் நாடுகள் இன்று வெகுசிலவே.
மனிதனின் இருதயம் மாறினால் தவிர மற்றவனைக் கொன்று வாழும் அவனுடைய குணத்தை மாற்ற முடியாது. உலகில் எந்த மதமோ, நல்லறிஞரின் போதனைகளோ, நற்குணங்களோ இதை மாற்றி அமைக்க முடியாது. கர்த்தர் நமக்கருளித்தந்துள்ள கிறிஸ்துவின் சுவிசேஷத்தால் மட்டுமே இதைச் செய்ய முடியும். சுவிசேஷம் அறிவிக்கின்ற கிறிஸ்துவை இரட்சகராக மனிதன் அறிந்துகொள்ளும்வரை அவனால் மிருகச் செயல்கள் செய்வதைக் கட்டுப்படுத்த முடியாது. இன்று சுவிசேஷ ஊழியத்தின் அவசியம் என்றுமில்லாதவகையில் அத்தியாவசிய மானதாக இருக்கிறது. உலக சுகத்தையும், நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் வளர்த்துக்கொள்ளும் போக்கையும், சுயநல நோக்கங்களையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைத் தீவிரமாக நாம் பிரசங்கிக்க ஆரம்பிக்க வேண்டும். கிறிஸ்துவை வல்லமையாக ஆவியின் அனுக்கிரகத்தோடு பிரசங்கிக்க வேண்டும். ஆத்துமாக்களுக்கு இன்று கிறிஸ்து தேவை. கிறிஸ்து இல்லாமல் அவர்களால் வாழ்வில் அமைதி காணமுடியாது; அடுத்தவனை மதித்து வாழ முடியாது.
– ஆசிரியர்.