அவதூறு சொல்லாதே!

சமீப காலமாக அவதூறு சொல்லுவதைக் (புறங்கூறுதல் அல்லது பழித்துரைத்தல்) குறித்து நான் அதிகம் சிந்திக்க நேர்ந்தது. அதற்கான காரணத்தை நான் இங்கே விளக்காமல் இருக்க முடியாது. கடந்த சில வருடங்களாக எனக்கு அறிமுகமான சில போதகர்களைக் குறித்து போதக ஊழியத்தில் இருப்பவர்களே அவதூறாக எழுதியும், பேசியும் வந்திருக்கிறார்கள். அதுபற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கும், சம்பந்தப்பட்டவர்களுக்கும், கிறிஸ்தவ நண்பர்களுக்கும் நான் பல தடவைகள் ஆலோசனை தர நேர்ந்தது. அத்தோடு வேறுசிலர் ‘நியூஸ் லெட்டர்‘ அனுப்புகிறோம் என்ற பெயரில் சபை சகோதரர்களைப் பற்றியும் ஏனைய போதகர்களைப் பற்றியும் அவதூறாக எழுதி சபைகளுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி வருகிறார்கள். சில போதகர்கள் தங்களுக்குப் பிடிக்காதவர்கள் அல்லது தங்களோடு முரண்படுகிறவர்கள் சபையில் இருந்தால் அவர்களை அடக்குவதற்காக அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி (Private life) ஏறுக்குமாறாக அநியாயமான பழிகளை அவர்கள் மேல் சுமத்தி பகிரங்கப்படுத்துகிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வேறுசிலர் சபையில் தங்களுக்குப் பிடிக்காதவர்களுடைய பெயர்களைக் குறிப்பிட்டோ, குறிப்பிடாமலோ பிரசங்க மேடையில் இருந்து அடிக்கடி அவர்களைத் தாக்கிப் பேசி வருவதை வழமையாகக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் சக சகோதரர்கள் மீது குற்றஞ்சாட்டி அவதூறான செய்திகளைப் பரப்பி வரும் செயல் கிறிஸ்தவர்கள் மத்தியில் வெகு சாதாரணமாகவே இன்று நடந்து வருகிறதை நான் காண்கிறேன். தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் இது ஒரு கலாச்சாரமாக உருவெடுத்திருப்பது என்னை அதிகம் சிந்திக்க வைத்தது. அதுமட்டுமல்லாமல் கிறிஸ்தவர்களுக்குப் பயன்படும்படியாக இது பற்றி விபரமாக எழுத வேண்டும் என்றும் நான் தீர்மானித்தேன்.

நியாமான விமர்சனமும், அவதூறும்

முதலில் அவதூறு சொல்லுவதற்கும் நியாயமான முறையில் எதையும் வேத அடிப்படையில் விமர்சனம் செய்வதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை விளங்கிக்கொள்ள வேண்டும். ஒருவர் எழுத்தில் வடித்திருக்கும் வேதக் கருத்துகளையும், இறையியல் போதனைகளையும் வேத சான்று களோடு நாம் விமர்சனம் செய்யலாம். ஒரு இயக்கத்தின் அல்லது தனிமனித ருடைய ஊழியத்தை, அது கிறிஸ்தவ திருச்சபை ஊழியத்துக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பெரும் ஆபத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்து மானால் அதன் குறைகளை வேத அடிப்படையில் விமர்சனம் செய்யலாம். அதிலும் அந்த இயக்கத்தினதும், இயக்கத்தைச் சார்ந்தவர்களினதும் பெயரைக் குறிப்பிட நேர்ந்தாலும் அவர்களுடைய போதனைகளையும், ஊழியநடவடிக்கைகளையும் மட்டும் வேத அடிப்படையில் விமர்சனம் செய்யலாம். ஆனால், தனிப்பட்ட முறையில் அவர்களுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி இல்லாதது பொல்லாததை எழுதியும், அல்லது அவர்களைப்பற்றிக் காதால் கேள்விப்பட்ட எதையும் பகிரங்கப்படுத்தி பேசியும் எழுதியும், அவர்களுடைய குடும்பத்தைப் பாதிக்கும் முறையில் அவற்றைப் பரப்பியும் வருவது பிசாசுத்தனத்தைத்தவிர வேறில்லை. வேத அடிப்படையில் நியாயமான முறையில் விமர்சனம் செய்வதற்கும் அவதூறு சொல்லுவதற்கும் இடையில் பெரும் வேறுபாடு இருக்கிறது. ஒரு தனி மனிதனின் மனதைப் புண்படுத்தி அவனுடைய மரியாதையைக் (Reputation) குறைவுபடுத்தும் வகையில் அவனுடைய வாழ்க்கையைப் பற்றி அவதூறாகப் பேசுவதும், எழுதுவதற்கும் பெயர் விமர்சனம் அல்ல. இதே பத்திரிகையில் சில தடவைகள் பெனி ஹின், தினகரன், சாம் ஜெபத்துரை போன்ற கெரிஸ்மெடிக் ஊழியர்களின் போதனைகளைப்பற்றி பொதுவாக நாம் விமர்சித்திருக்கிறோம். அந்த விமர்சனங்கள் வேதத்திற்கு முரணான அவர்களுடைய போதனைகள், ஊழிய நடைமுறைகள் பற்றியவை மட்டுமே. அவர்களுடைய தனிப்பட்ட சொந்த வாழ்க்கையைத் தொட்டு நாம் ஒருபோதும் அவர்களைப் பத்திரிகையில் எழுதியதில்லை. அப்படிச் செய்வதற்குப் பெயர்தான் அவதூறு செய்வது. வேதம் அதற்கு அனுமதி தரவில்லை. சிலர் தங்களுடைய பத்திரிகையை தனிப்பட்ட மனிதர்களுடைய வாழ்க்கை பற்றிய செய்திகளைத் தரவும், அவர்களுடைய குடும்பத்தைப் பற்றி எழுதவுமே பயன்படுத்தி வருகிறார்கள். இது தமிழ் நாட்டில் அதிகம். இது அநாகரீகமான செயல். சமுதாய இங்கிதம் (Social Etiquette) அறியாதவர்கள் செய்கிற அறிவீனமான செயல்.

‘அவதூறு சொல்லுவது’ பற்றி கர்த்தரின் வேதம் பொதுவாக என்ன சொல்கிறது என்பதை பார்ப்பதவசியம். இதைப் பற்றி வேதம் அளவற்ற போதனைகளைத் தந்து நம்மை எச்சரிக்கிறது. நீதி. 6:16-19ன்படி கர்த்தர் வெறுக்கின்றதும், அருவருக்கின்றதுமான ஆறுகாரியங்களின் பட்டியலில் இதைப் ‘பொய்நாவு’ என்றும், ‘அபத்தம் பேசும் பொய்சாட்சி’ என்றும் விளக்குகின்றது. ‘பொய் சாட்சி சொல்லாதே’ என்று யாத். 23:1 அதைத் தடைசெய்கிறது. புதிய ஏற்பாட்டிலும் அதற்கெதிரான கடுமையான கட்டளைகள் இருக்கின்றன. 1 தீமோ. 3:11ல் போதகர்களினதும், உதவிக்காரர்களினதும் மனைவிமார் ‘அவதூறு பண்ணாதவர்களாக’ இருக்க வேண்டும் என்று பவுல் கூறுகிறார். அதாவது அடுத்தவர்களைப்பற்றி வீண்வம்புப் பேச்சு பேசாதவர்களாகவும், புறங்கூறாதவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும். பவுல் எபேசி. 4ல் எப்போதும் நாம் சத்தியத்தை (உண்மையை) மட்டுமே பேச வேண்டும் என்கிறார். 4:25ல் “பொய்களைக் களைந்து அவனவன் பிறனுடன் மெய்யைப் பேச வேண்டும்” என்கிறார். 4:29ல் “கெட்ட வார்த்தை (Corrupt speech) ஒன்றும் உங்கள் வாயில் இருந்து புறப்பட வேண்டாம்; பக்தி விருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தையையே கேட்கிறவர் களுக்கு பிரயோஜனப்படும்படிப் பேசுங்கள்” என்கிறார். சங்கீதம் 50:20, “நீ எப்போதும் உன் சகோதரனுக்கு எதிராகப் பேசி உன் தாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய்” என்கிறது (இந்திய வேதாகம இலக்கிய மொழிபெயர்ப்பு). அதாவது, சகோதரனுக்கு எதிராக அவதூறாகப் பேசுவது நம் கூடப்பிறந்தவனுக்கு எதிராகக் குழிபறிப்பது போலாகும் என்கிறார் சங்கீதக்காரன். நீதி. 10:18, “புறங்கூறுகிறவன் மதிகேடன்” என்கிறது. இங்கே நீதிமொழிகள் அவதூறு என்ற சொல்லுக்கு ‘புறங்கூறுதல்‘ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பதைக் காண்கிறோம். இந்தளவுக்கு மோசமான அவதூறு சொல்லுதலைப் பற்றிக் கர்த்தர் சங்கீதம் 101:5ல், “அயலானை இரகசியமாய் அவதூறு பண்ணுகிறவனை அழிப்பேன்” என்கிறார். எனவே, அவதூறு சொல்லுவதைக் கர்த்தர் நிச்சயமாக விரும்பவில்லை; அவதூறு சொல்லுகிறவனையும் அவர் மதிக்கவில்லை என்பதை வேதத்தில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. இன்றும் நாம் தொடர்ந்து பின்பற்றிவர வேண்டிய கர்த்தரின் பத்துக் கட்டளைகளில் இரண்டு கட்டளைகள் அவதூறு சொல்லுவதைத் தடைசெய்கின்றன.

அவதூறு சொல்லுவது என்றால் என்ன?

‘அவதூறு செல்லுவது’ என்றால் என்ன என்று இனி விளக்கமாகக் கவனிப்போம். இதற்கு வேதம் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தை Slander என்பதாகும். இது 1 தீமோ. 3:11ல் ‘அவதூறு’ என்று மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டில் எண்ணாகமம் 14:36ல் இது ‘துர்ச்செய்தி’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. சங்கீதம் 31:13ல் இதற்கு ‘அவதூறு’ என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தைக்கு துர்ச்செய்தி என்பது பொதுவான பொருளானாலும் அதைப் பூரணமாக விளங்கிக் கொள்ள மெலும் அதை ஆராய வேண்டியது அவசியமாகும். அவதூறு சொல்லுவதில் எத்தனை பாவமான செயல்கள் அடங்கியிருக் கின்றன என்பதை நாம் வேதத்தைப் படித்துப் பார்க்கின்றபோது தெரிந்து கொள்ள முடிகின்றது. அவதூறு சொல்லுவதில் அடங்கியிருக்கின்ற துர்ச்செயல்களைக் கவனிப்போம்:

1. இரகசியமாய்ப் பேசுதல் (Whispering) – ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் தவறான முறையில் இரகசியமாகப் பேசுதல் (ரோமர் 1:30; 2 கொரி. 12:20).

2. அவதூறு சொல்லுதல் (Backbiting) – இதைப் புறங்கூறுதல் என்கிறோம் (ரோமர் 1:30; 2 கொரி. 12:20).

3. கேடான சந்தேகங்கள் (Evil surmising) – இதை தமிழ் வேதம் ‘பொல்லாத சம்சயங்கள்’ என்று மொழிபெயர்த்திருக்கிறது. ஒருவரைப் பற்றி ஆதாரமே யில்லாமல் சந்தேகங்களை எழுப்பி தவறாகப் பேசுதல் (1 தீமோ. 6:4).

4. கோள் சொல்லுதல் (Tale-bearing) – லேவி. 19:16.

5. அலப்புவாயன் (Babbling) – ஒன்றுக்கும் உதவாத வீண்பேச்சு பேசுகிறவன்  (பிரசங்கி 10:11).

6. அலப்பல் (Tattling) – நேரத்தை வீணாக்கி அடுத்தவர்களைப் பற்றிப் பேசித்திரிதல் (1 தீமோ. 5:13).

7. மற்றவர்களுக்கு விரோதமாகப் பேசுதல் (Evil speaking) – சங். 41:5; 109:20.

8. அவதூறு சொல்லுதல் (Defaming) – மற்றவர்களைப் பற்றி இல்லாததைச் சொல்லி அவர்களுடைய பெயரைக் கெடுத்தல் (யெரே. 20:10; 1 கொரி. 4:13).

9. பொய்சாட்சி சொல்லுதல்  (Bearing False witness) – பார்க்காத ஒன்றைப் பார்த்ததுபோல் ஒருவருக்கெதிராக சாட்சியமளித்தல் (யாத்தி. 20:16; உபா. 5:20; லூக்கா 3:14).

10. மற்றவர்களைத் தவறாக எடைபோட்டு பழித்துப் பேசுதல் (Judging uncharitably) – யாக். 4:11-12.

11. மற்றவர்களைப் பற்றி தவறான செய்தி கொடுத்தல் (Raising false reports) – யாத்தி. 23:1.

12. ஒருவர் செய்த தவறைத் திரும்பத் திரும்பச் சொல்லி இன்பம் காணுதல் (Repeating matters) – நீதி. 17:9.

அவதூறு சொல்லுவதில் இத்தனையும் அடங்கியிருக்கிறது. அவதூறு சொல்லுவது இத்தனைப் பெரிய பாவமாக இருப்பதால்தான் அதைச் செய்வதற்கு நமது சரீரத்தில் இருந்து உதவுகின்ற நாவை நாம் எப்படி அடக்கியாள வேண்டும் என்று யாக்கோபு 3ம் அதிகாரத்தில் அனேக உதாரணங்களுடன் ஆணித்தரமான போதனையைத் தருகிறார்.

ஒருவரைப் பற்றி இல்லாததை இருப்பதுபோலும், நடக்காததை நடந்தது போலும் வர்ணித்துச் சொல்லுவதற்குப் பெயர்தான் அவதூறு சொல்லுதல். அவதூறு சொல்லுதல் புறங்கூறுதல், பொல்லாங்கு சொல்லுதல், பழித் துரைத்தல் என்று பல பெயர்களில் விளக்கப்படுகின்றது. தவறானவிதத்தில் ஒருவரைப் பற்றி மற்றவர்களிடம் இரகசியமாகவோ அல்லது பலருமறியப் பேசுவதை இது குறிக்கிறது. உடனேயே அவதூறு சொல்லுவதை வழக்க மாகக் கொண்டிருக்கிறவர்கள், “ஐயா! நான் நடக்காததைச் சொல்ல வில்லையே, நடந்ததைப் பற்றித்தானே சொல்கிறேன்” என்பார்கள். ஒரு மனிதன் தவறாக நடந்துவிட்டால் நாம் மற்றவர்களோடு அதைப்பற்றிய விவாதத்தில் ஈடுபடவேண்டும் என்றும், எழுத்தில் வடித்து ஊரே அறியும்படிச் செய்யவேண்டும் என்றும் வேதம் எங்கே சொல்லுகிறது? அதைப் பற்றிப் பேசாதே என்றுதான் வேதம் சொல்லுகிறதை நான் பார்க்கிறேன். அந்த மனிதன் அப்படியே அதை செய்திருந்தாலும் அவனைப் பற்றிப் பேசியும், எழுதியும் பலரறியச் செய்வதால் அவனைத் திருத்த முடியும் என்று வேதம் எங்கே சொல்லுகிறது? நடந்த விஷயம் தங்களுக்கு இனிப்பா யிருப்பதாலேயே அவதூறு சொல்லுகிறவர்கள் அதைப்பற்றி மற்றவர்க ளோடு பேச முயல்கிறார்கள். தற்செயலாக ஒருவன் இறக்கக் காரணமாக இருந்தவர்களைக் காப்பாற்றுவதற்காக அடைக்கலப் பட்டணங்களைக் (Cities of Refuge) கர்த்தர் ஏற்படுத்தித் தந்திருந்தார் என்று பழைய ஏற்பாட்டில் வாசிக்கிறோம். நீதியுள்ள கர்த்தர் எவருடைய தவறுகளையும் சுட்டிக் காட்டித் திருத்த நீதியான அனுகுமுறைகளைக் கையாண்டிருக்கிறார். அவர்களைத் தெருவில் வைத்து மானபங்கப்படுத்த ஒருபோதும் நினைக்கவில்லை. எல்லாவிதத்திலும் ஒருவன் செய்தது தவறு என்று நிரூபிக்கப்பட்ட பிறகே கர்த்தர் தண்டனையையும் அளிக்கிறார். ஒருவன் செய்தது தவறா என்பதை கர்த்தருடைய வார்த்தையைப் பின்பற்றி வேத அடிப்படையில் தீர்மானிக்க வேண்டிய இடத்தில் தீர்மானிக்காமல் நம்மை நாமே நீதிபதி யாக்கிக் கொண்டு அவனைப் பற்றி அவதூறாகப் பேசியும், எழுதியும் வருவது அவனைக் கொலை செய்வதற்கு சமமானதாகும்.

நடக்காத ஒன்றை நடந்ததுபோல் காட்டி ஒருவரைப் பற்றிப் பேசுவது மட்டும் அவதூறு அல்ல. நடந்த ஒரு விஷயத்தைத் திரித்து அதைப் பூதாகாரமாக்கி தவறானவிதத்தில் அது மற்றவர்களுடைய பார்வைக்குத் தெரியும்படிச் சொல்லுவதும் இதில் அடங்கும். ஒருவர் செய்த அல்லது செய்கின்ற காரியத்திற்கு தவறான உள்நோக்கம் கற்பித்து இல்லாததை இருப்பதுபோல் பாவித்துப் பேசுவதும் அவதூறு சொல்லுவதாகும். இயேசு கிறிஸ்து பாவிகளோடு சமமாக இருந்து பேசிப் பழகியதைத் திரித்து பரிசேயர்கள் அவரைப் பற்றித் தவறான எண்ணத்தை மற்றவர்கள் மத்தியில் ஏற்படுத்த முயலவில்லையா? பரிசேயர்கள் இங்கே உள்ளதை உள்ளபடிப் பார்க்கவில்லை; அதைத் தவறான நோக்கத்தோடு பார்த்தார்கள். இதைத்தான் அவதூறு செய்வது என்கிறது கர்த்தரின் வேதம். பவுல் அப்போஸ்தலனைப் பற்றி அவதூறாகப் பேசியவர்கள் கொரிந்து சபை யிலும், கலாத்தியாவிலும் இருந்ததைப் பவுலே அந்நிருபங்களில் நமக்கு விளக்குகிறார். அவதூறு சொல்லுகிறவர்கள் பொய்யாக ஒரு செயலை வர்ணித்துக் காட்டுவதைக் கடமையாகக் கொண்டிருப்பதால் அந்தக் காரியத்துக்கு ஒருபோதும் மெய்யான சாட்சிகள் இருக்காது. இப்படிக் கேள்விப்பட்டேன், அப்படித்தான் என் பார்வைக்குப்பட்டது, இப்படி யொருவர் சொன்னார் என்றுதான் அவர்கள் சொல்லுவார்களே தவிர அவதூறு சொல்லுகிறவர்கள் நல்ல நோக்கத்தோடு ஒருபோதும் அதைச் செய்வதில்லை. அவதூறு சொல்லுகிறவர்கள் ஒருவரைப் பற்றிய தப்பான அபிப்பிராயத்தை மற்றவர்களின் இருதயத்தில் ஏற்படுத்துகிறார்கள்.

அவதூறு சொல்லுவது தமிழினத்தில் அதிகம். கர்த்தரை அறியாத மக்கள் மத்தியில் இது வெகுசகஜம். இதற்கு தமிழினத்து நாளிதழ்களே நல்ல உதாரணம். அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள் என்று இந்நாளிதழ்கள் ஒருவரையும் விடுவதில்லை. இந்தமாதிரியான பொய்யான செய்திகள்தான் பத்திரிகை விற்பனையை உயர்த்தும் என்பதால் நெஞ்சில் ஈரமில்லாமல் யார், எவர் என்று பார்க்காமலும், அவர்களுக்கு மனைவி, பிள்ளைகள் இருக்கிறார்கள் என்ற அக்கறையில்லாமலும் பத்திரிகையில் எழுதுவார்கள். அப்படி செய்திகள் வாராத பத்திரிகையே இருக்காது. எவராவது தங்கள் மேல் வழக்குப் போட்டுவிடுவார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டால் ‘சிட்டுக் குருவியார்’ சொன்னார் என்ற பெயரில் இந்தப் பத்திரிகைகள் அவதூறு செய்திகளை வெளியிடும். இதேபோலத்தான் கிராமத்துக் கிணத்தடியும். அங்கே கூடிவரும் பெண்களுக்கு வாய்க்கு அவல் போட்டதுபோலத்தான் அவதூறு செய்திகள். நாக்கூசாமல் அடுத்தவர்களைப் பற்றி அவதூறு சொல்லிப் பேசுவதில் அவர்கள் இன்பம் காண்கிறார்கள். இதிலேயே அவர்கள் நாளைப் போக்கிவிடுவார்கள். எத்தனை மகான்கள் நம்மினத்தில் பிறந்திருந்தும், வள்ளுவர் குறள்களை எழுதியிருந்தும் இந்தக் கலாச்சாரம் தொலைந்தபாடில்லை. இது தவறு என்ற உணர்வே இல்லாமல் நம்மினம் வாழ்ந்து வருகின்றது. நம் சமுதாயத்தில் இதற்கெதிராக சட்டங்கள் இல்லை என்று சொல்லிவிட முடியாது. சட்டங்கள் இருந்தாலும் எல்லோராலும் சட்டத்தைப் பயன்படுத்தி நீதிமன்றம் போய் தங்களுடைய பெயரைப் பாதுகாத்துக்கொள்ளுமளவுக்கு பணம் இருப்பதில்லை. ஆனால், அவதூறு சொல்லுவதற்கெதிராக சட்டம் நாட்டில் இருப்பதற்குக் காரணமே அவதூறு சொல்லுவது பெருங்குற்றம் என்பதால்தான். கர்த்தரை அறியாமல் இருப்பதாலும், அவருடைய நீதிக்குக் கட்டுப்படாமல் இருப்பதாலுந்தான் கர்த்தரை அறியாதவர்கள் அவதூறு சொல்லுகிறார்கள் என்பது நமக்குத் தெரியாமலில்லை. அதிலும் கர்த்தரை அறியாதவர்கள் மத்தியிலும்கூட பலர் அவதூறு சொல்லுவதை அசிங்கமான செயலாகத்தான் கருதுகிறார்கள். அவதூறு சொல்லுவது நம்மினத்துக் கலாச்சாரமாகப் போய்விட்டபோதிலும் கர்த்தரின் ஒழுக்கக் கட்டுப்பாட்டின்படி வாழும் வல்லமையற்ற புறஜாதியார் கூட இதை யோக்கியமான செயலாகக் கருதுவதில்லை.

கர்த்தருடைய மக்கள் அவதூறு சொல்லுவது கர்த்தருக்கு பொறுக்க முடியாத காரியம். இது கர்த்தருடைய மக்கள் மத்தியில் இருக்கக்கூடாத காரியம். அவதூறு சொல்லுகிறவர்கள் அதைத் தெரிந்துதான் செய்கிறார் களா என்பது தெரியவில்லை. அது எத்தனைப் பெரிய குற்றம் என்பது தெரிந்தால் இதயமிருப்பவர்கள் அதைச் செய்யக்கூசுவார்கள். கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கிறவர்கள் அவதூறு சொல்வார்களானால் அதற்கு மூன்று காரணங்கள் மட்டுமே இருக்க முடியும். (1) அவர்களுடைய இருதயம் பாழாகிவிட்டது. (2) அவர்களுக்கு கர்த்தரின் கட்டளைகளைப் பற்றியோ அல்லது பரிசுத்த வாழ்க்கையைப் பற்றியோ எந்த அறிவும் அக்கறையும் இல்லை. (3) சக சகோதரர்கள் மேல் அவர்களுக்கு காழ்ப்புணர்ச்சியும், எரிச்சலும், பொறாமையும் இருக்கிறது. அவதூறு சொல்கிற எவருமே இன்றுவரை இந்த மூன்றையும் ஏற்றுக் கொண்டதில்லை. அதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது!

அவதூறு சொல்லுகிறவர்கள் தாம் செய்யும் அநியாயத்தை உணராமல் அதற்குக் காரணம் கற்பிப்பார்கள். தப்பு செய்கிறவன் திருந்த வேண்டும் என்றும், அவனால் அடுத்தவர்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற் காகவுமே அவனுடைய செயல்களை பகிரங்கப்படுத்துகிறேன் என்பார்கள். இதற்காக இவர்கள் ஒருவரைப் பற்றிப் பலரிடம் வாய்கூசாமல் பேசுவதோடு, அவர்களைப் பற்றி அநியாயமாக எழுதிப் பலருக்கும் அனுப்பி வைப்பார்கள். இப்படி அந்தச் சகோதரனுடைய செயலை பலருக்கும் பகிரங்கப்படுத்தினால் அவன் திருந்த வாய்ப்பிருக்கிறது என்பது இவர்களுடைய வாதமாக இருக்கும். இந்தவிதமான செயலில் இருக்கும் ஒழுக்கக் குறைவை சிறிது சிந்தித்துப் பார்ப்போம்.

(1) முதலில் அவதூறாகப் பேசுகிறவர்கள் ஒரு விஷயத்தைப் பலபேரிடம் இருந்து கேள்விப்பட்டிருப்பார்களே தவிர அது உண்மையானது என்பதற் கான ஆணித்தரமான வேதம் எதிர்பார்க்கும் எந்த சாட்சியங்களையும் வைத்திருக்க மாட்டார்கள். எப்போதுமே நமக்கு நேரடியாகத் தொடர் பில்லாத, ஒரு சகோதரனின் வாழ்க்கை பற்றிய எந்த விஷயத்தையும் (affairs of his personal life) காதால் கேட்டு அதைப்பற்றி மற்றவர்களோடு பேசுவது ஒழுக்கக் கேடான செயல்.

(2) உண்மையிலேயே தவறு செய்துவிட்டதாக தாங்கள் நினைக்கும் சகோதரன் திருந்த வேண்டும் என்ற உணர்வும், அவன் மேல் அன்பும் இருந்தால் அவனோடு மட்டுமே அதைப்பற்றிப் பேச வேண்டும் என்ற வேத உண்மையைக் (மத்தேயு 18:15) குற்றஞ்சாட்டுகிறவர்கள் மறந்து விடுகிறார்கள் அல்லது அறியாதிருக்கிறார்கள். அவதூறு சொல்லுகிறவர்கள் ஒருபோதும் சம்பந்தப்பட்டவர்களோடு அதைப்பற்றிப் பேசுவதில்லை. அவர்களுடைய செயலுக்கான உள்நோக்கமே வேறு.

(3) எந்த விஷயமும் யார் வாய்வழி வந்தாலும் தகுந்த சாட்சியங்களோடு நிரூபிக்கப்பட வேண்டிய இடத்தில் நிரூபிக்கப்படும்வரை அது எந்த விதத்திலும் பகிரங்கப்படுத்தப்படக்கூடாது என்ற வேத உண்மையை (மத்தேயு 18:15-17) இவர்கள் புறக்கணித்து விடுகிறார்கள்.

(4) சகோதரனைத் திருத்துவதற்காக கர்த்தர் ஏற்படுத்தித் தந்திருக்கும் ஒரே நியாயஸ்தலமான உள்ளூர் திருச்சபைக்கு வேதபூர்வமான முறையில் விஷயத்தைத் தெரியப்படுத்தாமல் வெளியில் அதை பகிரங்கப்படுத்துவது பெருந்தவறு.

(5) சகோதரனைத் திருத்துவதற்காக கர்த்தர் ஏற்படுத்தித் தந்திருக்கும் செயல் முறைகளை நிராகரித்து இவர்கள் கண்டவர்களிடமும் அந்தச் சகோதரனைப் பற்றிப் பேசுவதாலும், எழுதி பகிரங்கப்படுத்துவதாலும் அவனுடைய மரியாதைக்கும் குடும்ப மரியாதைக்கும் பங்கமேற்படுத்துகிறோம் என்பதை உணராமல் போகிறார்கள். குற்றம் நிரூபிக்கப்படுகிறவரை எவரும் நிரபராதி என்பது அவிசுவாசிகளுக்குக்கூடத் தெரிந்திருக்கிற உண்மை.

(6) பகிரங்கமாக ஒரு சகோதரனைப் பற்றி அவதூறாக எழுதிப் பேசியவுடனேயே குற்றஞ்சாட்டியவர்கள் கர்த்தருக்கு முன் குற்றவாளிகளாக தங்களை நிறுத்திக்கொள்வதை உணராது போய்விடுகிறார்கள்.

(7) ஒரு சகோதரனைப் பற்றி அவதூறாகப் பேசிக் குற்றஞ்சாட்டுகிறவர்கள் எந்தளவுக்கு நிலைதடுமாறி பாவத்தால் தங்களுடைய இருதயம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையை மறந்துவிட்டிருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இத்தனை உண்மைகளையும் மறந்தோ, அறியாமலோ அல்லது அறிந்திருந்தும் நிராகரித்தோ நடந்துகொள்கிறவர்கள் கர்த்தருக்கு முன் பெருந்தவறு செய்கிறார்கள். இப்படி நடந்துகொள்வதை வேதம் முறைகேடானதும், ஒழுக்கக் கேடானதுமான செயலாகக் கருதுகிறது. இதனால்தான் அவிசுவா சிகள் கூட சமுதாயத்தில் ஒருமனிதனின் பெயருக்குக் களங்கம் ஏற்படக் கூடாதென்பதற்காக முறையான சட்டங்களை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் (Privacy laws, Defamation laws). அந்தச் சட்டங்கள் உருவாவதற்கு அடிப்படை கர்த்தரின் பத்துக் கட்டளைகளே. அந்தக் கட்டளைகளே அவதூறு சொல்லுவதை விசுவாசிகளின் மத்தியிலும் தடைசெய்கிறது. அத்தோடு கர்த்தர் சகல விசுவாசிகளுடைய பரிசுத்தமும் பாதுகாக்கப்படத் தேவை யான நடைமுறைகளைக் கையாள திருச்சபையையும் நமக்குத் தந்திருக்கிறார்.

இனி எவருடைய தவறையும் திருத்துவதற்கான வேத நடவடிக்கைகளில் ஈடுபடாமல் அதைப்பற்றி அவதூறாக எழுதியும், பேசியும் வருகிறவர்கள் அந்த சகோதரனை எப்படி அவமதிக்கிறார்கள் என்பதை விளக்கமாகப் பார்ப்போம். மனிதனைத் தன்னுடைய சாயலில் படைத்திருப்பதாக கர்த்தர் சொல்லுகிறார் (யாக்கோபு 3:9). அதாவது அவிசுவாசியாக இருக்கிறவனும் பாவத்தில் இருந்தபோதும் அவன் கர்த்தருடைய சாயலைத் தன்னில் தொடர்ந்து கொண்டிருக்கிறான். ஆகவே அவிசுவாசியையோ அல்லது விசுவாசியையோ நாம் அசிங்கமாகப் பேசக்கூடாது; அவர்களுடைய மரியாதைக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் எந்தவிதமான பொய்க் குற்றச்சாட்டுகளையும் அவர்கள் மேல் சுமத்தவும் கூடாது. மற்றவர்கள் அவர்களைப் பற்றி தவறாக நினைப்பதற்கு நாம் காரணமாக இருந்துவிடக் கூடாது. அவர்களுடைய செயல்களில் நமக்கு சந்தேகம் ஏற்பட்டால் அவற்றை வேதமுறைப்படி திருச்சபைக்கு அடங்கி அது அனுமதிக்கும் முறையிலேயே சபை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதற்கு மாறாக நடந்து அவர்களைப் பற்றி அவதூறாக பகிரங்கமாக பேசியும் எழுதியும் வந்தால் அவர்களுடைய தரத்தை நாம் கிறிஸ்தவ சமுதாயத்தில் குறைவடையச் செய்துவிடுகிறோம். கர்த்தரின் பிள்ளைக்கெதிராக அப்படி அநியாயமாக நடந்துகொள்ளும்போது கர்த்தரையே நாம் நிந்திக்கிறோம் என்கிறார் கர்த்தர். அந்த சகோதரனின் பெயருக்கு நாம் களங்கத்தை ஏற்படுத்தும் போது கர்த்தரை களங்கப்படுத்துகிறோம்; அந்தச் சகோதரனின் மானத்துக்கு இழுக்கு ஏற்படுத்துகிறோம். அத்தோடு அவனுடைய மனைவி, பிள்ளைகளுடைய மானத்துக்கும் களங்கத்தை ஏற்படுத்துகிறோம். அநீதி யாக நடந்து சகோதரர்களைப் பற்றி தனிப்பட்ட முறையிலும், அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி இழிவாகவும் பகிரங்கமாகவும் பேசி எழுதுகிறபோது ஒரு பெண்ணை பலர் முன்னால் மானபங்கப்படுத்துவது போல் கிறிஸ்தவ சமுதாயத்தின் முன் அவர்களை அசிங்கப்படுத்துகிறோம். ஒருவருடைய பெயருக்கு இழுக்கு ஏற்படுத்துவது அவருடைய தகப்பன் பெயருக்கும், குடும்பப் பெயருக்கும் இழுக்கை ஏற்படுத்துவதாகும். சங்கீதம் 101:5ல் கரத்தர், “அயலானை இரகசியமாய் அவதூறு பண்ணுகிறவனை அழிப்பேன்” என்று ஏன் சொன்னார் என்று இப்போது தெரிகிறதா? சகோதரனை மானபங்கப்படுத்துவதன் மூலம் தன்னையே மானபங்கப்படுத்துகிறவர் களை கர்த்தர் அழிக்காமல் என்ன செய்வார்?

அவதூறு சொல்லுவதை நிறுத்து

அவதூறு சொல்லுவது எத்தனைப் பெரிய பாவம் என்பது பற்றி வேதம் தரும் போதனைகளை இதுவரை விளக்கியிருக்கிறோம். கிறிஸ்தவர்கள் அவதூறு சொல்லுவதை நிறுத்த வேண்டும். மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசித்திருப்பவர்களில் இந்தப் பாவம் தொடர்ந்திருக்கக்கூடாது. தொடர்ந்து பாவத்தை செய்கிறவன் கிறிஸ்தவனாக இருக்க முடியாது என்கிறது கர்த்தரின் வேதம். இருதயம் கெட்டுப்போவதனால் ஏற்படும் இந்தப் பாவத்தை நிறுத்த வேதம் மூன்று நடமுறை வழிகளை நமக்குக் காட்டுகிறது:

(1) அவதூறு சொல்லுகிறவர்களின் பேச்சை நாம் ஒருபோதும் கேட்கக் கூடாது. பேசுகிறவன் இன்னொருவரைப் பற்றித் தவறாகப் பேசுகிறான் என்று தெரிந்தவுடனேயே அதை நாம் தடுத்துவிடவேண்டும்; அதற்கு இடங் கொடுக்கக் கூடாது. அப்படித் தடுத்துவிடுவதால் பேசுகிறவன் தான் பேசுவதை நிறுத்திக்கொள்ளப் போவதில்லை. ஆனால், அதைக் கேட்க மறுப்பதனால் நம்முடைய இருதயத்தை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும். இன்னொருவரைப் பற்றி நாம் தப்பாக நினைக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்திலேயே அவதூறு சொல்லுகிறவர்கள் நம்மிடம் பேச வருவார்கள். அதற்கு இடங்கொடுக்காமல் ஆரம்பத்திலேயே அவர்கள் வாயை அடக்கி விட்டால்  இன்னொருவரைப் பற்றி நாம் தப்பாக நினைக்க இடமிருக்காது. நம் காதுகள் நல்லதைக் கேட்கவே எப்போதும் கூர்மையாக இருக்க வேண்டும். அவதூறுகளைக் கேட்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

(2) அவதூறான செய்திகளைத் தாங்கி வரும் பத்திரிகைகள், நியூஸ் லெட்டர்கள், கடிதங்களை நாம் வாசிக்கக் கூடாது. அவற்றை வாசிப்பதனால் நம் இருதயத்தில் தப்பான எண்ணங்கள் உருவாக இடங்கொடுத்துவிடுகிறோம். தனி மனிதனின் சொந்த வாழ்க்கையைப் பற்றிய, அவர்களுடைய கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் எந்தச் செய்தியையும் வாசிக்க நம் கண்களுக்கு நாம் இடங்கொடுக்கக் கூடாது. நம் இருதயத்தை நாம் பரிசுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

(3) அவதூறு பேசாமல் இருக்க நம் வாயை நாம் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். எதைப் பேசினாலும் நல்லதைப் பேச மட்டுமே நாக்கைப் பயன் படுத்தவேண்டும். சக மனிதர்களைப் பற்றியும், சகோதரர்களைப் பற்றியும் நாம் பேசாமல் இருக்க முடியாது. பேசினால் அவை நல்லதாகவே இருக்கு மாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இருதயம் பரிசுத்தமாக இருந்தால் மட்டுமே அடுத்தவர்களைப் பற்றி நாம் அசிங்கமாக சிந்திக்கவும், பேசவும் மாட்டோம்.

நாவை அடக்கு

யாக்கோபு 3ம் அதிகாரத்தில் நாவை அடக்க வேண்டியதன் அவசியத்தை விளக்குகிறார். சத்தியத்தைப் பூரணமாக அறிந்துகொள்ளாமல், அறிந்து கொண்டிருக்கிறோம் என்ற திமிரில் அதைப் புரட்டிப்போட்டு போதிக் கின்றவர்களைக் கண்டித்து இங்கே யாக்கோபு எழுதுகிறார். சத்தியத்தைப் பேச மட்டுமே வாய் பயன்படுத்தப்பட வேண்டும். அதை மாற்றிப் பேச அது பயன்படுத்தப்படக்கூடாது. வாய் சத்தியத்துக்கு எதிராகப் பேசக் காரணமே இருதயம் பாழாய்ப் போவதுதான். அதனால்தான் “உங்கள் இருத யத்தில் கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால் . . பெருமைபாராட்டாதிருங்கள்; சத்தியத்துக்கு விரோதமாகப் பொய் சொல் லாமலுமிருங்கள்” என்று 3:14ல் யாக்கோபு சொல்லுகிறார். அதற்கு அடுத்த வசனத்தில், அப்படிச்செய்வது பேய்த்தனமானது என்றும் சொல்லுகிறார். இங்கே யாக்கோபு நாவை அடக்கும்படித் தருகின்ற விளக்கம் பொதுவாக வாய் சம்பந்தமான எல்லா விஷயத்துக்கும் பொருந்தும். அவதூறு சொல்லுவதற்கும் இந்த வாயைத்தான் அவதூறு சொல்லுகிறவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஒருவரைப் பற்றிய உண்மையைச் சொல்லாமல் அதை மறைத்து பொய்யாய் அவரைப் பற்றி திரித்துப் பேசுவது அவதூறு. அதைச் சொல்லுகிற வாய் அடக்கப்பட வேண்டும் என்கிறார் யாக்கோபு. அவதூறு சொல்லுகிறவன் அதிக ஆக்கினையை அடைவான் என்கிறார் யாக்கோபு. நம் வாய் மிகவும் சக்திமிக்கது. “அதை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது” என்று 3:8ல் யாக்கோபு கூறுவதற்குக் காரணம் அது எத்தனை பலமுள்ளது என்பதை நமக்கு உணரவைக்கத்தான். தொடர்ந்து “அது அடங்காத பொல் லாங்குள்ளதும், சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது” என்கிறார் யாக்கோபு. தன்னுடைய இருதயத்தை பாழாக்கிக் கொண்டிருக்கிற மனிதன் தன் சரீரத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பலத்தை இழந்து குரோதத் தாலும், பொறாமையாலும் சக மனிதர்களைத் தன்னுடைய பொல்லாத வாயைப் பயன்படுத்தி அழிக்கப் பார்க்கிறான். ஒரு விசுவாசி அப்படிச் செய்யும்போது தான் நிந்தனை செய்யும் சகோதரன் கர்த்தரின் சாயலில் படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை நினைத்துப் பார்க்க மறந்துவிடுகிறான். கர்த்தரின் சாயலைக் கொண்டிருக்கின்ற சகோதரர்களையும், சக மனிதர்களையும் நிந்தனை செய்வது கர்த்தரையே நிந்தனை செய்வதாகும்; அவருடைய படைப்பை நம் வாயால் அழிக்கப் பார்ப்பது அவரையே எதிர்க்கும் பேய்த்தனம் என்று விளக்குகிறார் யாக்கோபு.

நம் வாயை நாம் அடக்கி ஆளப் பழகிக்கொள்ள வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துவதற்காக யாக்கோபு ஐந்துக்கு மேற்பட்ட உதாரணங்களை இங்கு பயன்படுத்தியிருக்கிறார். குதிரைக் கடிவாளம், கப்பல் சுக்கான், நெருப்பு, அத்திமரம், திராட்சை செடி என்று பல உதாரணங்களை இங்கு பயன்படுத்தியிருக்கிறார். ஏன் இத்தனை உதாரணங்கள்? ஒரு தடவை விளக்கினால் போதாதா? என்று எவராவது கேட்கக் கூடும். சிறு பிள்ளைக்கு விளக்குவது போல் இத்தனை உதாரணங்களைத் தர வேண்டுமா? என்று கூட சிலர் எண்ணக்கூடும். இந்தக் கேள்விகள் நியாயமானவைதான். இத்தனை உதாரணங்களை நமக்கு யாக்கோபு தந்திருப்பதற்குக் காரணம் நாவைப் பயன்படுத்தி இன்னொருவருக்கு களங்கத்தை ஏற்படுத்துவது எத்தனை பெரிய பாவம் என்பதை நாம் தெளிவாக உணர்ந்துகொள்ள வேண்டுமென்பதற்குத்தான். அத்தோடு தேவையான ஆத்மீக நடவடிக்கை களை எடுத்து நம்முடைய வாயால் நலமானதையும், சத்தியத்தையும் மட்டுமே பேச நாம் பெருமுயற்சி எடுக்க வேண்டும் என்பதையும் யாக்கோபு உணர்¢த்துகிறார். யாக்கோபு வாயைப் பற்றி இங்கு சொன்ன அத்தனையும் ஒருவரைப் பற்றி எழுதி அவதூறு சொல்லும் தீச்செயலுக்கும் பொருந்தும்.

குற்றம், குறைகளை நிவர்த்தி செய்வதற்கான வேத வழிமுறைகள்

மற்றவர்களுடைய தவறுகளைத் திருத்தப் பிறந்திருப்பதுபோல் அவர்களைப் பற்றி அவதூறு சொல்லும் அசிங்கமான செயலைச் செய்பவர்கள் கர்த்தருடைய வார்த்தைக்கு மதிப்புக் கொடுப்பதில்லை. குற்றம், குறைகளைத் திருத்துவதற்கு கர்த்தர் சில வழிகளை ஏற்படுத்தி கிறிஸ் தவர்கள் அவற்றைத் தவறாது பின்பற்ற வேண்டும் என்று கட்டளை யிட்டிருக்கிறார். இப்படி அவர் செய்திருப்பதற்குக் காரணம் தான் படைத்த மனிதனின் கௌரவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான். அந்த வழிகளை இனிப் பார்ப்போம்.

(1) ஒரு விசுவாசி தான் செய்யும் எந்த ஆத்மீகத் தவறுகளையும், தன்னுடைய ஆத்மீகக் கடமைகளை உணர்ந்து கர்த்தர் அளித்திருக்கும் திருநியமங்களைப் பயன்படுத்தி இந்த உலகில் பரிசுத்தமாக வாழவும், பரலோக வாழ்க்கைக்குத் தன்னைத் தயார் செய்துகொள்ளவும் தன்னைத் தானே திருத்திக்கொள்ள வேண்டும். இது அவனுடைய கடமை.

(2) ஒரு சகோதரன் நமக்கெதிராக பாவம் செய்திருப்பானானால் அவனைத் தனியே நேரில் பார்த்துப் பேசி அவன் திருந்த உதவ வேண்டும். அவன் திருந்திவிட்டால் அதற்குப் பிறகு இது வேறு எவருக்கும் தெரியவரக்கூடாது. அத்தோடு அந்த விஷயம் முடிந்துவிட்டதாகக் கருதப்பட வேண்டும். (மத்தேயு 18:15).

(3) நமக்கெதிராகப் பாவம் செய்திருக்கும் அந்தச் சகோதரன் திருந்த மறுத்தால் திருச்சபை மூப்பருக்கு அதைத் தெரிவித்து அவரோடு போய் அவனைச் சந்தித்து பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். அவன் திருந்திவிட்டால் இந்த விஷயம் அந்த மூன்று பேர்களைத் தவிர வேறு எவருக்கும் ஒருபோதும் தெரிய வரக்கூடாது. (மத்தேயு 18:16).

(4) அவன் தொடர்ந்தும் திருந்தாதிருப்பானேயானால் இரண்டு பேரிலிருந்து மூன்று பேர்வரைப் போயிருக்கும் அந்தப் பிரச்சனை சபை மூப்பர்களுக்கு அறிவிக்கப்பட்டு அவன் திருந்த தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவும் தவறினால் மூப்பர்கள் சபை அங்கத்தவர்களைக் கூட்டி தகுந்த ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். (மத்தேயு 18:17; 1 கொரி. 5).

(5) உள்ளூர் சபைகளில் அங்கத்துவம் வகிக்காது மனம் போனபோக்கில் வாழ்கிறவர்கள் மத்தியில் தவறு செய்கிறவர்களைத் திருத்துவதற்கு வேதம் எந்த வழிமுறைகளையும் காட்டவில்லை. கர்த்தர் ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒரு உள்ளூர் சபையில் அங்கத்தவனாக இருக்க வேண்டும் என்பதை எதிர்பார்த்து அந்த அடிப்படையிலேயே திருத்த ஒழுங்கு நடவடிக்கைகளை சபை பின்பற்றும்படியாக எழுத்தில் தந்திருக்கிறார். சபைக்கு வெளியில் கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் வாழ்கிறவர்கள் தங்களுக்கும் மற்றவர்க ளுக்கும் ஆபத்தாகவே எப்போதும் இருப்பார்கள். அவர்கள் செய்யும் தவறுகளைத் திருத்த அதிகாரமுள்ள ஒரு ஆத்மீக அமைப்பு இல்லை. அத்தகைய ஒரு அமைப்பை வேதம் அமைத்துத் தரவில்லை.

நம்மோடும், நமது சபைகளோடும் தொடர்பில்லாதவர்கள் செய்கின்ற காரியங்களை நியாயம் விசாரித்து நீதி வழங்க கர்த்தர் நம்மை நியமிக்கவில்லை. அவற்றைப் பற்றிப் பேசி, எழுதி அவதூறு சொல்லுவதில் எவரும் ஈடுபடக்கூடாது. இதுவரை நாம் பார்த்த வேத முறைகளைப் பின்பற்றி நாமும், சக சகோதர்களும் திருந்தி வாழவேண்டும். இந்த முறைகளை மீறி நடப்பது அறுவறுக்கத்தக்க செயல். அப்படி நடந்துகொள்ளுகிறவர்கள் கர்த்தரின் சபைக்கும், அவருடைய மக்களுக்கும் தீங்கு செய்வதால் கர்த்தர் அவர்களை நிச்சயம் சும்மாவிடமாடடார்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s