வில்லியம் பிளமர் (1802-1880)
கிறிஸ்தவ வாழ்க்கையில் பின்வாங்கிப் போவதை நாம் சாதாரணமாக நினைத்துவிடக்கூடாது. அப்படிப் பின்வாங்கிப் போவது என்பது நிதர்சனமான உண்மை. அநேகர் இதுபற்றிக் கவலைப்படுவதில்லை. பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்துவதும், கர்த்தருக்கு எதிராகப் போவதும் வெகு சாதாரணமானதொன்றாக அவர்கள் எண்ணுகிறார்கள் என்பதை அவர்களுடைய வார்த்தைகளும் செயல்களும் வெளிப்படுத்துகின்றன. கர்த்தருக்கு எதிராக இருந்துவிடப்போகிறோமே என்ற பயம் அவர்களுக்கு இல்லை. அந்தப் பயம் அவர்களைக் கட்டுப்படுத்துவதாகத் தெரியவில்லை. சிறு பாவமும் நமது சிந்தனையில் உருவாகிவிட்டால் அதைத் தொலைத்து விடுவதற்கு நாம் முயற்சி எடுக்காவிட்டால் நாம் பெரிய ஆபத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம். கர்த்தரை விட்டு விலகிப்போவது இருட்டை நோக்கிப் போவதுபோலாகும்.
(1) பின்வாங்குதல் என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம்: இது மிகவும் முக்கியமானதாகும். நடைமுறைக் கிறிஸ்தவ வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் போலவே இதுவும் மிக அக்கறையோடும், எச்சரிக்கையோடும், பாரபட்சமில்லாமலும் கவனிக்க வேண்டிய அம்சமாகும். தன்னை ஏமாற்றிக்கொள்ள விரும்புகிறவர்கள் மட்டுமே இதில் அக்கறையில்லாமல் இருப்பார்கள்.
(அ) ஒருவர் தான் ஆத்மீக வாழ்க்கையில் பின்வாங்கியிருக்கவில்லை என்று நினைப்பது அவர் பின்வாங்கவில்லை என்பதற்கான தகுந்த ஆதாரமல்ல.
வாழ்க்கையில் பின்வாங்கியிருக்கும் மெய்யான பக்கிவிருத்தியுள்ள ஒருவர் தன்னைப் பெரிதாக எண்ணிக்கொள்ளவும், மதிக்கவும் பயப்படுவார். ஆனால், அநேகர் தங்களுடைய பாவத்தைப் பற்றி உணராமலேயே மிகவும் மோசமான விதத்தில் கர்த்தரைவிட்டு விலகிப் போகிறார்கள். மிகவும் வருந்த வேண்டிய ஒரு உண்மையென்னவென்றால், எல்லாப் பாவங்களுமே நமது சிந்தனையைக் குருடாக்கி இருதயத்தைக் கடினப்படுத்திவிடுகின்றன. எந்தவொரு மனிதனுடைய பாவத்தையும் உணரச் செய்வது மிகவும் கடினமான காரியம். வாயில் இருந்து துப்பிவிட வேண்டிய நிலைமையில் இருந்த ஒரு சபையைப் பற்றி நாம் வேதத்தில் வாசிக்கிறோம். அது குளிராகவோ, அனலாகவோ இல்லாமல் இருந்தது. இருந்தபோதும் தன்னுடைய நிலைமையைப் பற்றிய எந்தவிதக் கவலையோ உணர்வோ இல்லாமல், “நான் செல்வந்தனாக இருக்கிறேன், என் செல்வம் செழிக்கிறது, எனக்குத் தேவைப்படுவது ஒன்றுமேயில்லை” என்று அந்த சபை சொல்லிக்கொண்டிருந்தது. தான் நிர்ப்பாக்கிய நிலையிலும், பரிதபிக்கப்பட்ட நிலையிலும், தரித்திரனாகவும், குருடனாகவும், நிர்வாணியாகவும் இருப்பதை அந்தச் சபை உணரவில்லை. (வெளி. 3:17).
(ஆ) வெளிப்படையாக பாவம் செய்வதில் இருந்து கிருபையினால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதால் பலர் தங்கள் வாழ்க்கையில் ஏற்கனவே பின்வாங்கிப் போயிருப்பதை ஒத்துக்கொள்வதில்லை.
ஆத்தமாக்களறிய அவர்கள் பெரும் பாவத்தில் விழுந்திருந்தால் அதுபற்றி முகங்கோணி வெட்கப்படுவார்கள். தங்களுடைய பாவத்திற்காக கர்த்தரிடமும், ஆத்துமாக்களிடமும் மன்றாடுவார்கள். ஆனால், எல்லாமே இரகசியமாக இருக்கின்றன. அவர்கள் தங்களுடைய இருதயத்தில் பின் வாங்கிப் போயிருக்கிறார்கள். எந்தவொரு மனிதனும் அவர்களுடைய ஆத்மீகக் கேட்டை அறிந்திருக்கவில்லை. அவர்கள் பக்திவிருத்தி குன்றியிருக்கிறார்கள் என்றும், பாவத்தில் இருக்கிறார்கள் என்றும் எவரும் அவர்களைக் குற்றஞ்சாட்ட முடியாது. எல்லாமே நல்லபடியாக நடந்து வருகிறது என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பெருந்தவறு செய்கிறார்கள். எல்லாமே மனிதர்களுக்கு முன் வெகு சீக்கிரம் வந்துவிடும். தாவீதின் வாழ்க்கையில் அதுவே நடந்தது. அவனைப் பார்த்து கர்த்தர் சொன்னார், “நீ இரகசியமாகச் செய்தாய்: ஆனால், இதை நான் இஸ்ரவேல் மக்கள் முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்வேன்” (2 சாமுவேல் 12:12).
(இ) அத்தோடு, கர்த்தரிடம் இருந்து விலகிப் பின்வாங்கிப்போவது மிகவும் சுலபம் என்பதை நாம் உணர வேண்டும்.
தாயின் வயிற்றில் இருக்கும்போதே நாம் பொய்களைச் சொல்லி விலகிப்போயிருக்கிறோம். (சங்கீதம் 53:3). தீப்பொறி உயரெழுவதைப் போல பாவத்தைச் செய்வது நமக்கு இயற்கையானது. பரலோகத்தைப் நோக்கிப் போகிற நம் வாழ்க்கையில் காற்றும், அலைகளும் நமக்கு எதிராக இருக்கின்றன. அவற்றை எதிர்த்து நிற்க நாம் எந்தவொரு முயற்சியும் எடுக்காவிட்டால் அவை நம்மைத் தூக்கிச் சென்றுவிடும். அவற்றைத் தடுக்கும் எண்ணமில்லாமலும், எந்த முயற்சியும் எடுக்காமலும் நாம் நரகத்தை நோக்கிப் போய்விடலாம்.
(2) கிறிஸ்தவ வாழ்க்கையில் சகலவிதமான பின்வாங்குதல்களும் நம்முடைய தியான வாழ்க்கையில் நாம் தவறிப்போகும்போதே தோன்றுகின்றன.
தியானம் செய்தல், சுயபரிசோதனை, வேதத்தை வாசித்தல், கர்த்தரைத் துதித்தல், ஜெபம் செய்தல் ஆகியவையே நம்முடைய தியான வாழ்க்கையை மேன்மையடையச் செய்யும் கிருபையின் சாதனங்களாகும். கர்த்தரோடு நாம் நெருங்கி உறவாடும்போது இந்தக் கடமைகளை நாம் தொடர்ச்சியாகவும், உயிருள்ளவிதத்திலும் பின்பற்ற முடிகிறது. அவற்றை செய்யத் தயங்கி, குறைத்துவிடுகிறபோதே நம் ஆத்மீக வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப் பதற்கான முதல் அடையாளங்கள் தலைதூக்க ஆரம்பிக்கின்றன. இந்த அடையாங்கள் நமக்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சிலவேளைகளில் அவை எச்சரிக்கையாக அமைவதால் எதிரி நம்மை நிரந்தரமாக வெற்றி கொள்ள முடியாமல் போகிறது. ஆனால், பெரும்பாலும் நமது ஆத்துமா எச்சரிக்கையாக இருக்கத் தவறிவிடுவதால் பொதுக்கடமைகளில் நாம் அதிக கவனம் செலுத்தி தியான வாழ்க்கையில் செய்ய வேண்டியவற்றை செய்யத் தவறிவிடுகிறோம். மெய்க் கிறிஸ்தவன் தன்னுடைய வாழ்க்கையில் தனி ஜெபங்களைச் செய்யாமல் வாழ முடியாது. ஆனால், அவன் தன் வாழ்க்கையில் தியான வாழ்க்கைக்குரிய சாதனங்களைத் தொடர்ச்சியாக பின்பற்றாமல் இருந்துவிடக்கூடும். பக்திவிருத்திக்குரிய தியானம் குறைவாக இருந்துவிடலாம். வேதம் அவனுடைய ஆத்துமாவுக்கு தேனாகவும், தேன் கூடாகவும் இருக்கத் தவறிவிடலாம். திறக்கப்படாமல் இரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் கேடுகளை திறக்கக்ககூடிய சுயபரிசோதனை அவன் வாழ்க்கையில் மிகவும் கடினமான பணியாக அமைந்துவிடலாம். கர்த்தருக்கு நன்றி கூறுவதும், துதிப்பதும் தவிர்¢க்கப்பட்டு அவை அவனுக்கு அந்நியமாகப்படலாம். இரவில் அவனுடைய இருதயத்தைப் பாடிக் களிக்கும்படிச் செய்தவர் அதை ந¤ம்மதியிழக்கச் செய்யலாம். ஜெபம் செய்வதை அவன் தனக்கு ஆனந்தமளிக்கும் பெரும் ஆசீர்வாதமாக எண்ணாமல் செய்யவேண்டியதொரு கடமையாக மட்டும் எண்ண ஆரம்பிக்கலாம். பத்திவிருத்தி அவனுடைய வாழ்க்கையில் தலைதூக்கி நின்றபோது தொடர்ச்சியாகவும், அன்றாட நடவடிக்கையாகவும் மட்டும் தியானவாழ்க்கை அமைந்திருப்பது போதாததாக இருந்தது. வெறும் கடமையாகக் கருதி அவற்றை செய்கிறவன் வாழ்க்கையில் பக்திவிருத்தி தலை தூக்கி நிற்க முடியாது. தொடர்ச்சியாக அவனுடைய வாழ்க்கையில் தியானம் அமைந்திராவிட்டால் இருந்திருந்தே அவனுடைய ஆத்துமா சுயபரிசோதனையில் ஈடுபட்டு, பக்திக்கான காரியங்களை சிந்தித்து வந்திருக்கும்: அது கொஞ்சமாவது கர்த்தரைத் துதித்திருக்கும். தொடர்ச்சியாக தியானவாழ்க்கை ஒருவனின் வாழ்க்கையில் அமைகிறபோது அவன் தன் இருப்பிடத்தில் இல்லாமல் வேறு இடத்தில் இருந்தாலும் அவனுடைய இருதயம் கர்த்தரை நோக்கிக் கதறும். தன்னுடைய உலகக் கடமைகளில் அவன் ஈடுபட்டிருக்கும்போதும் அவனுடைய இருதயம் கர்த்தரின் கிருபையை நாடி நிற்கும்.
(அ) ஒருவனுடைய வாழ்க்கையில் ஆத்துமப் பின்வாங்குதல் நிகழும்போது ஆத்துமப் பணிகள் அவனுடைய அன்றாட வாழ்க்கையில் இருந்து சிறிது சிறிதாக அகன்றுவிடும்.
அந்தப் பணிகளை அவன் ஒருபுறம் ஒதுக்கி வைக்கிறான், இல்லாவிட்டால் ஒவ்வொரு மணி நேரமும் அவற்றை நெருங்குவதைத் தவிர்க்கிறான். கர்த்தருக்கு செய்ய வேண்டியதை செய்துவிட்டோம் என்று சமாதானம் கூறி தன்னுடைய மனச்சாட்சியை அமைதிப்படுத்திவிட்டு உலகக் காரியங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பிக்கிறான். அவன் கர்த்தரைத் தொடர்ந்து பின்பற்றினாலும் முழு இருதயததோடு அதைச் செய்யவில்லை. அங்கேயே மிகவும் வருந்தவேண்டிய ஆத்மீகப் பின்வாங்குதல் ஆரம்பமாகிறது. அத்தோடு பாவமும் அவனுடைய வாழ்க்கையில் அதிகரிக்கிறது. பாவத்தால் சிறைபிடிக்கப்பட்டு அவன் தடுமாற ஆரம்பிக் கிறான். அவனுடைய ஆத்துமா ஏற்கனவே வலையில் அகப்பட்டுவிட்டது. இதையெல்லாம் வாசித்துவிட்டு எச்சரிக்கையடைந்து தன்னை திருத்திக் கொண்டு மறுபடியும் தன்னுடைய ஆத்மீகக் கடமைகளை ஆர்வத்துடனும், தேவ பயத்துடனும் செய்ய ஆரம்பிக்கிறவன் ஆசீர்வதிக்கப்படுவான். அவன் மறுபடியும் கிறிஸ்துவுக்குள் புதுப்பிக்கப்பட்டு நல்ல மனச்சாட்சியுடனும், சமாதானத்துடனும் கர்த்தரின் முகமலர்ச்சியைத் தன் வாழ்க்கையில் அநுபவிக்க ஆரம்பிப்பான். சிலவேளைகளில் பின்வாங்கிப் போயிருக்கிறவனில் இது நிகழ்கிறது. அப்படி வாழ்க்கிற ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் இது நிகழ்வது அவசியம். ஆனால், பாவம் இப்படி நடந்து விடாதபடி அவர்களில் வலிமையடைந்துவிடுகிறது. பின்வாங்குதலுக் குள்ளாகியிருக்கிறவர்கள் ஊக்கத்தோடு பாவத்தை செய்ய ஆரம்பிக்கிறார்கள்.
(3) ஆத்துமப் பின்வாங்குதலின் அடுத்த நடவடிக்கையாக ஒருவன் குடும்ப ஆராதனையையும், பொது ஆராதனையையும் தன் வாழ்க்கையில் தவிர்த்துக் கொள்ளுகிறான்.
தனிப்பட்ட தியானவாழ்க்கையை நிரந்தரமாக ஆனந்தத்தோடு நடத்திவராதவர்கள் குடும்ப ஜெபத்தையும், பொது ஆராதனையையும் நிரந்தரமாக செய்வார்கள் என்று சொல்ல முடியாது. போலித்தனம் ஓருவனின் வாழ்க்கையில் இந்தளவுக்குப் போகாது. ஆத்துமாக்கள் தங்களுடைய இருதயம் மோசமாகிக் கொண்டுவருவதால் அதற்கேற்றவாறு குடும்ப ஜெபத்தையும், பொது ஜெபங்களையும் தவிர்த்துக்கொள்ளும் சோதனைக்குள்ளாகிறார்கள். உயிர்த்துடிப்போடு இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கிறிஸ்தவனை நாடி பிசாசு வந்தபோதும் அவனைப் பொறுத்தவரையில் அது ஒரு பொருட்டே அல்ல. பிசாசின் மாய்மாலங்கள் அவனை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், ஆத்தும காரியங்களில் அசட்டையாக இருந்து வருகிறவனை பிசாசு தைரியத்தோடு அணுகுவான். அவன் பிசாசின் பேச்சுக்கு இடங்கொடுத்து அதன் வழியில் சரிவான். அதன் காரணமாக குடும்ப ஜெபமாகிய கட்டிடத்தின் சுவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டு, ஜெபத்துக்குக் கூடிவந்த சிறு கூட்டம் இனிக்கூடிவராமல் போய்விடும். மிகவும் வருந்தவேண்டிய ஒரு நிலை இது. கர்த்தர் மட்டுமே ஒருவனை இத்தகைய மோசமான பின்வாங்குதலில் இருந்து காப்பாற்ற முடியும்.
(அ) இந்த நிலைமையில் ஒருவன் வெகுவிரைவிலேயே இருதயத்தில் குற்றவுணர்வடைந்து, நிம்மதியிழக்க நேரிடும்.
ஆத்தும வாழ்க்கையில் பின்வாங்குதலுக்குள்ளாகி இருக்கும் ஒருவன் தன்னுடைய மனச்சாட்சியை அடக்கவும், மற்றவர்கள் முன் நல்லவன் போல் நடந்துகொள்ளவும் பொது வாழ்க்கையில் கட்டுப்பாட்டோடு நடப்பதுபோல் நடந்துகொள்ளவும், நேரத்தோடு காரியங்களை செய்யவும் முற்படுவான். பொது ஆராதனையில் அவன் கலந்துகொள்ளாமல் இருக்கமாட்டான். ஆத்மீக காரியங்கள் சிலவற்றில் தீவிர ஆர்வம் காட்டவும் தவறமாட்டான். அல்லது தானறிந்துகொண்டிருக்கிற சத்தியத்தை வற்புறுத்திப் பேச முயற்சி செய்வான். அல்லது நடைமுறைக் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றி பேசமுயல்வான். அப்படிப் பேசினால் அது தனக்குள் நல்ல உணர்வுகள் இருக்கின்றன என்பதற்கான அடையாளம் என்ற தவறான எண்ணத்தைத் தனக்குள் உருவாக்கிக் கொள்கிறான். தன்னில் இருக்கும் கேட்டை உணர்ந்துகொள்ளாத குருடனாக அவன் இப்போது மாறியிருக்கிறான். இந்தளவுக்கு அவன் வந்திருந்தால், ஓருகாலத்தில் அவனுக்கு எந்தத் தடையும் ஏற்படுத்தியிராத விஷயங்கள் வெகு விரைவிலேயே அவன் திருச்சபைக்கு வராமல் இருக்கச் செய்துவிடும். வெகுவிரைவிலேயே சத்தியத்தின்மீதும், கிறிஸ்தவ வாழ்க்கை மீதும் புறத்தில் அவன் காட்டிவந்த ஆர்வங்கள் அவனை பலவீனனாகவும், கோபக்கார னாகவும், தவறான விஷயங்களுக்கு வாதாடுகிறவனாகவும் காட்டிக் கொடுக்கும். இப்போது அவனுடைய இருதயம் மெய்க்கிறிஸ்தவத்திற்கு புறம்பான காரியங்களில் முழுமையாக கவனம் செலுத்த ஆர்ம்பித்து விட்டது. அவன் மறுபடியும் பழைய நிலைக்கு வருவதை இந்த நிலையில் எதிர்பார்¢ப்பது வீண். நம்மிலிருக்கும் சகலவிதமான நேர்மையின்மையும் பிசாசின் கரத்தில் இருந்து நாம் விடுபடுவதற்கு உதவாத எதிரிகளாகும்.
(ஆ) இந்த நிலைமையில் பின்வாங்குதலுக்குளளாகி இருக்கும் ஆத்துமா ஆத்தும பணிகளையும், கிருபையின் சாதனங்களையும் பிரயோஜனமானவைகளாகக் கருதத் தவறும்.
பின்வாங்குதலுக்குள்ளாகி இருக்கும் ஆத்துமா இனி வேதம் வாசிப்பதையும், ஜெபிப்பதையும், பிரசங்கங்களைக் கேட்பதையும் ஏன், திருவிருந்தில் பங்குகொள்ளுவதையும்கூட தவிர்த்துக்கொள்ளும். இனி தாழ்மையைத் துறந்து, பரிசுத்தத்திற்கான வழிகளைத் துறந்து, ஆத்மீக தாகத்தை இழந்து, சோதனைகளை வெற்றிகொள்ளும் மனப்பாங்கையும் இழந்து நிற்கும். சிலவேளைகளில் இப்படி வாழ்ந்து வாழ்க்கையில் வெற்றி அடைகிறேன் என்று அந்த ஆத்துமா எண்ணிக்கொண்டாலும் அதன் நடவடிக்கைகள் அது முழுத்தொல்வியையே அடைந்துவருகிறது என்பதைத் தெளிவாக உணர்த்தும். இந்தமுறையில் வாழ்கிறவனுடைய எதிர்பார்ப்புகள் அவனை ஏமாற்றிவிடுகின்றன. அவன் “நியாயத்துக்கு காத்திருப்பான், ஆனால், அதைக் காணமாட்டான். இரட்சிப்புக் காத்திருப்பான். ஆனால், அது அவனுக்குத் தூரமாயிருக்கும்” (ஏசாயா 59:11). அந்த நிலைமையில் அவன், “தேவனை சேவிப்பது விருதா, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதினாலும், சேனைகளின் கர்¢தருக்கு முன்பாகத் துக்கித்து நடக்கிறதினாலும் என்ன பிரயோஜனம்?” என்று கேட்பான் (மல்கியா 3:14). அத்தோடு அவன், “தாகமாயிருக்கிறவன் தான் குடிக்கிறதாகக் கனவு கண்டும், விழிக்கும்போது அவன் விடாய்த்துத் தாகத்தோடிருக்கிறது போலவும்” இருப்பான் (ஏசாயா 29:8). அவனுடைய ஆத்துமா இந்த நிலையிலேயே இருக்கும். சிலவேளைகளில் கிருபையின் சாதனங்கள் அவனுடைய கண்களுக்கு இனிமையாகத் தென்படும். ஆனால், அவற்றை அவன் பயன்படுத்துகிறபோது அவை அவனுக்கு தீர்க்கதரிசி தன் வாயிலிட்டு சுவைத்த புத்தகச் சுருள் அவனுக்கு கசப்பாயிருந்ததுபோல இருக்கும். ஆகவே, பாவம் விலைமதிப்பற்ற ஆசீர்வாதங்களையும் நமக்குக் கசப்பான தாக்கிவிடும். பின்வாங்குதலுக்குள்ளானவர்கள் கர்த்தரை நாடும்போது அவர்கள் இருதயத்தில் மிகவும் கசப்பை அநுபவிப்பார்கள். அதற்கு அவர்கள் தயாராக இருப்பதில்லை.
(இ) ஆத்துமாவில் இவ்வாறாக பக்திவிருத்தி மரிக்கும்போது அன்பு தணிந்துபோய் எதையும் குறைகூறிக் குற்றஞ்சாட்டும் வழக்கம் அதிகரிக்கும்.
பின்வாங்குதலுக்குள்ளாகியிருக்கிறவன் சக விசுவாசிகளின் நற்சிந்தனைகளையும், தூய்மையான எண்ணங்களையும் தவறான கண்ணோட்டத்தோடு பார்ப்பான். மற்றவர்கள் மேல் குறைகூறுவதில் அவன் முன்நிற்பான். சிலவேளைகளில் சக விசுவாசிகளின் செய்கைகளை கடுமையாக விமர்சனம் செய்வான். தன்னில் மிகக் குறைந்தளவே காண்படுகின்ற பக்தியைப் பற்றிப் பெருமையாகப் பேசி மற்றவர்களிடம் அது இல்லை என்று வியந்து கூறுவான். கிறிஸ்தவர்களின் நடவடிக்கை களில் குறைகூறுவதில் முன் நிற்கும் அவன் தன்னில் இருக்கும் கேடான குறைகளைக் காண மறுப்பான். அவனுடைய இருதயம் விரைந்து செயல்பட்டு மற்றவர்களுடைய குறைகளை மறக்க முற்படாது. மற்றவர்கள் மேல் கருணை காட்ட முற்படாத அவன் பாவிகளை இன்னும் மோச மாகவே பார்ப்பான். பாவிகளை வருந்தி அழைப்பதைவிடக் குறைகூறியும், அன்பு காட்டுவதைவிட அறுவறுத்தும் நடந்துகொள்வான். அவனைக் குறித்து “அவன் கேடான சிந்தனையுள்ளவனல்ல” என்றும் “இரக்க மானவன்” என்றும் (1 கொரி. 13:4, 5) சொல்ல முடியாது.
(4) வெகுவிரைவிலேயே பின்வாங்குதலுக்குள்ளானவன் பிரயோஜனமற்றவன் என்றும், தன்னுடைய திட்டங்களிலும், பேச்சிலும் சுத்தமற்றவன் என்றும் நீங்கள் கண்டுகொள்வீர்கள்.
அவன் பிரயோஜனமில்லாதவர்களின் சகவாசத்தை நாடுவான். பிரயோஜனமில்லாத நூல்களை வாசிக்க ஆரம்பிப்பான். தன்னுடைய ஆத்துமாவுக்கு உதவுகிறவற்றையல்லாமல் தன்னைக் குசிப்படுத்துகிறவைகளையே நாடி நிற்பான். தன்னுடைய ஆசையைத் தணிப்பவற்றையே நாடிப்போவான். அவன் ஆவியில் உயிர்த்துடிப்போடிருந்த காலத்தில் அவனுடைய பேச்சு மற்றவர்களுக்கு பிரயோஜனமுள்ளதாக ஆவிக்குரியதாக இருந்தது. இப்போது ஆவிக்குரியவைகளைவிட வேறு எதையும் பேசுவதற்கு அவன் தயாராக இருப்பான். தன்னுடைய உணர்ச்சிகளுக்கு ஏற்ற பேச்சுக்களையே நாடுவான். ஆவிக்குரிய சம்பாஷனை அவனுக்கு உயிரூட்டுவதாக இருக்காது. இருந்தபோதும் கிறிஸ்தவர்களின் சகவாசத்தை அவன் முற்றாக நிறுத்திக்கொள்ள மாட்டான். அதேநேரம், முட்டாள்களையும், கேலி பேசுகிறவர்களையும் அவன் தவிர்க்கவும் முயலமாட்டான். ஒரு காலத்தில் அவனுடைய இருதயத்துக்கு ஆனந்தத்தை அளித்த சத்துள்ள போதனைகளைவிட காதுக்கு இனிமையூட்டும் வெறும் கேலிப்பேச்சுக்கு அவனுடைய இருதயம் இடங்கொடுக்கும். முன்பிருந்ததுபோல் வேதம் அவனுடைய ஆவியை உயிர்ப்பிக்காது. அவனுடைய பக்திவிருத்தியுள்ள நண்பர்கள் அவனுடைய நிலைமையைப் பார்த்து இரகசியமாக அவனுக்காகக் கண்ணீர் வடிப்பார்கள்.
(அ) இந்த நிலைமையில் அவன் கிறிஸ்துவை மகிமைப்படுத்துவதை தன்னு டைய வாழ்க்கையில் முக்கிய கடமையாக எண்ணாமல் அவரை சட்டைசெய்யாமல் இருந்துவிடுவான்.
ஒரு காலத்தில் கிறிஸ்துவை விட்டு விலகிப் போவது அவனுடைய இருதயத்தில் கசப்பை ஏற்படுத்திக் கண்ணீர் சொட்ட வைத்தது. இப்போது அது அவனுக்கு ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை. இப்போது அவன் கிறிஸ்துவைக் கேவலப்படுத்தாவிட்டாலும், ஓய்வு நாளை அசிங்கப்படுத்தாவிட்டாலும், வார்த்தையை உதறித்தள்ளாவிட்டாலும் மற்றவர்கள் அத்தகைய பாவச் செயல்களைச் செய்கிறபோது அது அவனுடைய இருதயத்தில் வலியை ஏற்படுத்துவதில்லை. மற்றவர்கள் பாவத்தில் விழுகிறபோது அவனுடைய உள்ளத்தில் ஆவி உறுத்தப்படுவதில்லை. யோசேப்புவின் துன்பத்தைக் கண்டு அவன் வருதப்படுவதில்லை. “கர்த்தாவே! உம்முடைய பிள்ளைகளைகளைக் கரை சேரும்” (யோவேல் 2:17) என்று அவன் அவருடைய மக்களுக்காக கதறுவதில்லை.
(ஆ) அத்தோடு பாவிகள் மனந்திரும்புவதையும், சத்தியம் பரவுவதையும், சுவிசேஷ ஊழியங்கள் வளர்ந்துவருவதையும் கண்டு போரானந்தம் அடையத் தவறுவான்.
ஒரு காலத்தில் கிறிஸ்தவத்தின் வளர்ச்சியைக் கண்டு அவனுடைய இருதயம் ஆனந்தத்தில் திளைத்து அன்பில் ஊறியிருந்தது. உயிருள்ள கிறிஸ்தவன் பாவிகள் மனந்திரும்புவதைப் பார்த்து பரலோகத்தில் இருக்கிற தேவதூதர்களோடு இணைந்து மகிழ்வார்கள். ஆனால், ஆத்துமப் பின்வாங்குதலுக்கு உள்ளாகியிருக்கிறவனுக்கு இந்த ஆனந்தமெல்லாம் இருக்காது. அவன் தன்னை அதிகம் நேசிக்கிறானா அல்லது கர்த்தரை அதிகம் நேசிக்கிறானா என்பதே கேள்விக்குறியாக இருக்கும். கிறிஸ்துவை மற்றவர்கள் அவமதிப்பதைக் கேட்டு வருந்துவதைவிட தன்னை மற்றவர்கள் அவமதிப்பதையே அவன் பெரிதாக எண்ணி வருந்துவான். கிறிஸ்துவின் நாமத்தை மற்றவர்கள் பெரிதுபடுத்துவதைக் கேட்டு ஆனந்தமடைவதைவிட தன்னை மற்றவர்கள் பெரிதாக எண்ணிப் பேசுவது அவனுடைய இருதயத்தைக் குளிரச் செய்யும். இப்படி வாழ்கிறவன் உண்மையில் கிறிஸ்துவை விசுவாசித்திருக்கிறானா என்பதே சந்தேகந்தான். தன்னுடைய சொந்த மனந்திரும்புதலில் அவனுக்கிருக்கும் நம்பிக்கையை இத்தகைய அவச்செயல்கள் அசைக்காவிட்டால் அது மிகவும் பாரதுராமானதாகும், ஆபத்தானதுமாகும்.
மேலே நாம் பார்த்தவை உறுதியான ஆத்மீக ஆறுதலை அடைய முடியாதபடி செய்துவிடுகின்றன. அவனால் பரிசுத்த ஆனந்தத்தோடு பாடுவதற்கு அதிக வாய்ப்பில்லை. அவனுடைய இருதயம் குளிரடைந்து ஆத்மீகக் கடமைகளைச் செய்யும் ஆர்வமற்று காணப்படும். தன்னுடைய கடந்த கால வாழ்க்கையை அவன் ஆர்வத்தோடு பார்ப்பதில்லை. அவனுடைய கடந்த காலம் அவனுக்கு நேரத்தை வீணடித்ததொன்றாகவும், வாய்ப்புகளை இழக்கக்காரணமானதொன்றாகவும், ஆறுதல்களை இல்லாமலாக்கியதொன்றாகவுமே தோன்றும். எதிர்காலத்தைப் பற்றிய பயத்தோடேயே அவன் வாழ்வான். கர்த்தரை நினைத்துப் பார்த்து அவன் கலக்கமடைவான். கேடான செய்திகளைக் கேட்டு அவன் பயமடைவான். பெருந்துன்பங்களை வாழ்க்கையில் அவன் நாடி நிற்கிறான்.
(இ) அவனில் அவனுடைய பழைய பாவங்கள் மிகுந்த வலிமையோடு வெளிப்படும்.
வாழ்க்கையில் அசட்டைத் தன்மை நுழைந்து அவனுடைய ஆத்மீக ஜாக்கிரதையை இல்லாமலாக்கிவிடுகிறது. தாழ்மை ஓடிப்போய் அதனிடத்தில் சாதிக்க வேண்டும் என்ற வெறி நுழைந்துவிடுகிறது. போதுமென்று வாழ்ந்த மனப்பான்மை ஓடி ஒளிந்துவிடுகிறது. பொருளாசை உள்ளத்தை ஆக்கிரமிக்கிறது. நிச்சயமின்றி அவன் ஓடிக்கொண்டிருப்பான். பலவீனத்தோடு அவன் சண்டையிடுவான்.
இவ்வாறாக கர்த்தரைவிட்டு விலகியோடுகிறவர்கள் சொந்தமாக எதையும் செய்துகொள்ளும் நிலைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ளுகிறார்கள். அந்த வழியில் போகும்படி கர்த்தர் அவர்களை அனுமதிக்கிறார். “அவர்கள் தங்கள் குற்றங்களை உணர்ந்து, என் முகத்தைத் தேடுமட்டும் நான் என் ஸ்தானத்துக்குத் திரும்பிப் போய்விடுவேன்; தங்கள் ஆபத்தில் என்னைக் கருத்தாய் தேடுவார்கள்” என்கிறார் கர்த்தர் (ஓசியா 5:15). தன் தலைமயிரை இழந்த சிம்சோனைப்போல அவன் இப்போது பலவீனத்தோடு இருக்கிறான். பாலஸ்தீனர்களின் கேலிக்கு அவன் உட்படாமல் இருந்தால் அது நன்மையானதே. எத்தனைக் காலத்துக்கு ஒருவன் அந்த நிலைமையில் இருப்பான் என்பதை விளக்க முடியாது. அத்தகைய தவறுகளிலும், பாவச்செயல்களிலும் இருந்து தப்பிவருவது இலேசானதல்ல. ஆண்டவரைத் தெரியாது என்று கூறிய பேதுருவை உடனடியாகத் திருத்த கர்த்தர் சித்தங்கொண்டார். ஆனால், தன்னுடைய பாவங்களை உணர்ந்து அவற்றிற்காகக் கண்ணீர்விட்டு மனந்திரும்ப தாவீதுக்கு சில மாதங்கள் எடுத்ததாக அறிகிறோம். சாத்தானின் கரத்தில் அகப்பட்டு அவன் பிடியில் சிறையிருந்த பிறகு அதிலிருந்து தப்பி வருவதென்பது அத்தனை சுலபமான காரியமல்ல.
வேதம் சொல்லுகிறது, “பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலே . . திருப்தியடைவான்” (நீதி. 14:14). அவன் ஜீவத்தண்ணீரை அளிக்கும் ஊற்றாகிய கர்த்தரை தூக்கியெறிந்திருக்கிறான். அதுவே அவனுடைய முதலாவது தவறு. அடுத்தபடியாக, அவன் தண்ணீர் நிலைத்திருக்க முடியாத ஓட்டையுள்ள பானைகளைத் தனக்காக ஏற்படுத்திக்கொண்டான் (யெரே. 2:13). அது அவனுடைய இரண்டாவது தவறு. கர்த்தர் இப்போது அவன் தன்னுடைய பாவத்தில் மூழ்கிப்போகச் செய்வார் அல்லது சாத்தானின் செய்தியாளனை அனுப்பி அவனைத் துன்புறுத்தச் செய்வார். அவன் இப்போது துன்பத்தை அநுபவிப்பான். அலைகளால் தூக்கி யெறியப்பட்டு ஆறுதல்களை வார்த்தையில் இழந்து நிற்பான். அவன் வெட்கத்தால் நிறைந்து கண்களைத் தூக்கிப் பார்க்க முடியாத நிலைமையில் இருப்பான். வெறுக்கப்படுவதே தனக்குக் கிடைக்கும் சரியான வெகுமதி என்பதை அவன் இப்போது நம்புகிறான். ஆத்மீக வாழ்க்கையில் பின்வாங்குதலுக்கு உள்ளாகி மனந்திரும்புகிறவன் அநுபவிக்கிற வலி அவனுடைய முதலாவது மனந்திரும்புதலைவிட மிகவும் அதிகமானது.
வாசகனே! நீ ஆத்தும வாழ்க்கையில் பின்வாங்கி நிற்கிறாயா? உன் இருதயம் குளிரடைந்து, ஆத்தும பலனற்று, தியான வாழ்க்கையில் தவறிழைத்து வருகிறாயா? ஆத்துமாவில் குற்றவுணர்வோடு அமைதியற்று இருந்து வருகிறாயா? கேடுகளைக் குறித்து பயத்தோடு வாழ்ந்து வருகிறாயா? வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பெருஞ்சோதனைகளை எண்ணி வாழ்ந்து வருகிறாயா? கிருபையின் சாதனங்கள் உனக்கு ஆசீர்வாதமாக இல்லாமல் போய்விட்டனவா? தொடர்ந்து வாழ்க்கையில் அன்போடு இருந்து வருகிறாயா? அல்லது எல்லாவற்றிலும் குறைகண்டு குற்றஞ் சாட்டும் இருதயத்தோடு இருந்து வருகிறாயா? பக்திவிருத்தியுடையோருடைய நட்பு உனக்குப் பெரிதாகப்படுகிறதா? எத்தவிதமான நூல்களை வாசிப்பதை நீ கடமையாகக் கொண்டிருக்கிறாய்? கிறிஸ்துவின் மகிமைக்காக உன் வாழ்க்கையில் அனலோடு இருந்து வருகிறாயா? கிறிஸ்தவ வாழ்க்கையில் ஆனந்தத்தை அநுபவித்து வருகிறாயா? இந்தக் கேள்விகளை நீ அடிக்கடி கேட்டு அவற்றிற்கு நேர்மையான பதில்களை அளிப்பது அவசியம், ஏனெனில் நீ கர்த்தருக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியவனாக இருக்கிறாய்.
[வில்லியம் எஸ். பிளமர் (William Plumer 1802-1880): மேல்வரும் ஆக்கத்தைப் படைத்த வில்லியம் பிளமர் அமெரிக்காவில் வாழ்ந்த ஒரு பிரெஸ்பிடீரியன் போதகர். சத்தியத்தில் சிறந்த ஞானியாகவும், நடைமுறைக் கிறிஸ்தவப் போதனையில் தீவிரம் காட்டியவராகவும், நடைமுறைப் போதனையில் ஜோடனைகளற்ற மெய்ப் பிரசங்கியாகவும் கருதப்பட்டவர். பல நூல்களையும் தன் வாழ்நாளில் இவர் படைத்திருக்கிறார்.]