உழைக்கப் பிறந்தவன் நீ!

உழைப்பைப் பற்றியும் அதற்குரிய ஒழுக்கத்தைப் பற்றியும் தமிழ் கிறிஸ்தவ உலகம் அறியாமல் இருக்கிறது. முக்கியமாக கர்த்தருடைய ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிற பெரும்பாலான போதகர்களும், உதவிக்காரர்களும், ஊழியக்காகர்களும் உழைப்பைப் பற்றிய வேதபூர்வமான போதனைகளை அறியாதிருப்பதோடு கர்த்தரை உழைப்பின் மூலம் மகிமைப்படுத்தாமலிருந்து வருவது மிகவும் கவலைக்குரிய விஷயம். அநேகர், ஊழியக்காரர்கள் தங்களுடைய கைகளைப் பயன்படுத்தி வேலை செய்வது ஊழியத்துக்கு இழுக்குத் தேடித்தரும் என்று தவறாக எண்ணி வாழுகிறார்கள். ஊழியக்காரன் என்றால் அவனுக்கு எங்கேயாவது இருந்து பணம் வர வேண்டுமே தவிர அவன் உழைத்து சம்பாதிப்பது தவறு என்று வேதம் சொல்வதாக அறியாமையால் அநேகர் எண்ணிவருகிறார்கள். வேதம் எல்லோரையுமே உழைக்கும்படி எதிர்பார்க் கிறது. சபை பணம் கொடுக்க முடியாத நிலையில் இருந்தால் எல்லா ஊழியக்காரர்களுமே உழைத்து சம்பாதித்து தங்களையும், குடும்பங்களையும் கவனித்துக்கொள்ள வேண்டும். பவுல் தெசலோனிக்கேயரைப் பார்த்து, “நாங்கள் உங்களிடத்திலே ஒழுங்கற்று நடவாமலும், ஒருவனிடத்திலும் இலவசமாய் சாப்பிடாமலும் உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலை செய்து சாப்பிட்டோம்” என்கிறார் (2 தெசலோ. 3:7, 8). அப்போஸ்தலனாகிய பவுலின் இந்த வார்த்தைகளுக்கு வேறு என்ன பொருள் கொடுக்க முடியும். திருச்சபை தனக்கு பணம் அனுப்பமுடியாதிருந்த நிலைமையில் பவுல் தன் கைகளைப் பயன்படுத்தி உழைத்திருப்பதோடு, தன்னோடிருந்தவர்களுக்கும் உதவி செய்திருக்கிறார். பவுல் ஊர் ஊராகப் பணம் கேட்டு அலையவில்லை. இன்றைக்கு ஊழியத்தில் அக்கறை காட்டுகிற வாலிபர்களும்கூட ஒரு தொழிலைத் தேடி உழைத்து அநுபவம் பெறாமல் ஊழியத்துக்குள் நுழைந்து விட்டால் எங்கோயிருந்து பணம் வரும் என்று கனவு காண்கிறார்கள். இந்தத தவறான எண்ணங்களும், அவற்றால் ஏற்படும் பாரதூரமான விளைவுகளும் நம்மத்தியில் தொடராமலிருப்பதற்காகவே உழைப்பைப் பற்றிய இந்த ஆக்கத்தை எழுத முனைந்தேன்.

அறியாமையை எப்போதுமே எதற்கும் ஒரு காரணமாக கர்த்தர் ஏற்றுக்கொள்ளுவதில்லை. அறியாமை, கர்த்தரை மகிமைப்படுத்த நமக்குத் தடையாக இருக்குமானால் அதைப்போக்கிக் கொண்டு கர்த்தருடைய கட்டளைகளை நம் வாழ்க்கையில் நிறைவேற்ற வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். உழைப்பைப் பற்றி நாம் ஆராயப் போகும் வேத போதனைகளை நாம் பின்பற்றி கர்த்தரை உழைப்பின் மூலம் மகிமைப் படுத்துவோம்.

கர்த்தரும் உழைப்பும்

வேதம் கர்த்தர் இந்த உலகத்தை எப்படிப் படைத்தார் என்று காட்டுவதோடு ஆதியாகமம் ஆரம்பமாவதைப் பார்க்கிறோம். ஒன்றுமில்லாததில் இருந்து கர்த்தர் அனைத்தையும் படைத்தார் என்று ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் வாசிக்கிறோம். ஆதி. 1:31, “கர்த்தர் தான் படைத்த எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது” என்று விளக்குகிறது. ஆதியாகமம் இரண்டாம் அதிகாரம் கர்த்தர் ஆதாமையும், ஏவாளை யும் படைத்தவிதத்தை விளக்குகிறது. அவர்களைப் படைத்த கர்த்தர் அவர்களை உழைக்கும்படியாகக் கட்டளையிட்டிருந்தார் (ஆதி. 2:15). இவற்றில் இருந்து நாம் சில முக்கிய உண்மைகளைக் கற்றுக்கொள்ளுகிறோம்.

(1) நம்மைப் படைத்த இறையாண்மையுள்ள கர்த்தர் உழைக்கும் கர்த்தராக இருக்கிறார். வெறும் மூச்சைவிட்டு அவரால் எதையும் படைத்திருக்க முடியும். அவர் மனதில் நினைத்த மாத்திரத்திலேயே சகலமும் உருவாகி யிருக்க முடியும். ஆனால், கர்த்தர் அப்படிச் செய்யவில்லை. அவர் சிரத்தையோடு காரியமாற்றியிருக்கிறார். அவர் உலகத்தைப் படைத்தவிதத்தில் இருந்து தன்னை உழைக்கின்ற தேவனாகக் காட்டிக்கொள்ளுகிறார். ஆதி. 2:9, “அவர் சகலவித விருட்சங்களையும் முளைக்கப் பண்ணினார்” என்கிறது. இதில் கர்த்தரின் கைவண்ணத்தைக் காண முடிகிறது. மனித னைக் கூட அவர் நிலத்தில் இருந்த மண்ணை எடுத்து உருவாக்கி அவனுக்கு ஜீவனைக் கொடுத்து, அதன் பிறகு ஏவாளை அவனுடைய விலா எலும்பை எடுத்து உருவாக்கினார் என்று வாசிக்கிறோம். இச்செயல்கள் மூலம் கர்த்தர் தன்னை சிரத்தையுள்ள ஒரு உழைப்பாளியாகக் காட்டிக்கொள்ளுகிறார். அவ்வாறாக ஆதியில் உழைத்த தேவன் இன்றைக்கும் உழைக்கும் தேவனாக இருந்து தான் படைத்த அனைத் தையும் பராமரித்து வருகிறார். உழைப்பு அவரோடு என்றுமிருந்தது.

(2) அடுத்ததாக படைப்பில் கர்த்தர் மூன்று காரியங்களை ஏற்படுத்தி யிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. அவர் உழைப்பையும், ஓய்வு நாளையும், திருமணத்தையும் ஏற்படுத்தினார். அவர் தன்னை உழைக்கும் தேவனாக படைப்பில் அறிவித்துக்கொண்டது மனிதன் தன்னைப் போல உழைக்கும் மனிதனாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். அதேபோல கர்த்தர் படைப்பில் ஆறு நாட்கள் நன்றாக சிரத்தையோடு உழைத்து, ஏழாவது நாள் ஓய்வு எடுத்தார் என்று வாசிக்கிறோம். அதையும் அவர் மனிதனின் நன்மையைக் கருதிச் செய்தார். மனிதன் தன்னைப் பார்த்துப் பழக வேண்டும் என்று செய்தார். ஆறு நாட்கள் கர்த்தர் உழைத்திருந்த உண்மையை அவருடைய ஏழாம் நாள் ஓய்வு வெளிப்படுத்துகிறது. வாரத்தின் ஆறு நாட்களைக் கர்த்தர் ஓய்விற்காகப் படைக்கவில்லை. மனிதன் உழைப்பதற்காகப் படைத்தார். உயர்வான, கடுமையான, நேர்மையான உழைப்பிற்குப் பிறகே அவன் ஓய்வு எடுக்க வேண்டுமென்பதைக் கர்த்தர் காட்டித் தந்திருக்கிறார். படைப்பில் கர்த்தரால் ஏற்படுத்தப்பட்டுள்ள மூன்று நியமங்களும் மனிதனால் உலகம் இருக்கும்வரை பின்பற்றப்பட வேண்டும். அதில் உழைப்பும் ஒன்று.

(3) மனிதனைப் படைத்த கர்த்தர் அவனைத் தோட்டத்தைப் பண்படுத்தவும், அதைக் காக்கவும் வைத்தார் என்று ஆதி. 2:15ல் வாசிக்கிறோம். அவற்றில் இருந்து அவன் உணவைப் பெற்றுக்கொள்ளவும் செய்தார். அத்தோடு அவர் படைத்த ஜீவராசிகளுக்கு அவனைப் பெயரிடும்படியாகவும் பணித்தார். இதையெல்லாம் செய்ததன் மூலம் கர்த்தர் மனிதனை உழைக்கும்படிச் செய்ததைப் பார்க்கிறோம். அவன் தன்னுடைய கைகளைப் பயன்படுத்தி நிலத்தை ஆதியில் பண்படுத்த வேண்டியிருந்தது. அவன் தோட்டத்தை சிரத்தையோடு பயிரிட்டு, தண்ணீர் பாய்ச்சி வளர்க்க வேண்டியிருந்தது. அவன் தகுந்த காலத்தில் பயிர்களை உணவுக்காக அறுவடை செய்ய வேண்டியிருந்தது. ஆதியில் சகலமும் பூரணமான நிலைமையில் இருந்தபோதும், கர்த்தர் மனிதனை ஒன்றும் செய்யத் தேவை யில்லாதவனாக இருக்கும்படியாகப் படைக்கவில்லை என்பதை இங்கே புரிந்துகொள்ள முடிகிறது அல்லவா. எல்லாம் பூரணமாக இருந்த நிலைமையில் அவன் தன்னைப்போல உழைப்பவனாக இருக்க வேண்டும் என்பது கர்த்தரின் சித்தமாக இருந்தது. அவனை உழைக்கும் மனிதனாக அவன் உருவாக்கிப் பயிற்சியளித்தார்.

கர்த்தர் அவனை சிந்தித்து செயலாற்றும் மனிதனாகப் படைத்திருந்தார். அவன் எல்லாவற்றையும், சிந்தித்து, ஆராய்ந்து முடிவெடுத்து செய்ய வேண்டியிருந்தது. அவன் ஜீவராசிகளுக்கு அந்தவகையிலேயே பெயரிட வேண்டியிருந்தது. கர்த்தர் தான் படைத்த மனிதனை சோம்பேரியாக இருக்கப் படைக்கவில்லை. அவர் படைத்த மனிதன் நல்ல, திறமையான உழைப்பாளி. அவன் சிந்திக்கத் தெரியாத முட்டாளாக இருக்கவில்லை. தனக்கான துணையை அவன் ஜீவராசிகளின் மத்தியில் தேடிக்கொள்ளும்படி அவர் செய்தபோது முட்டாளாக இருந்து கண்ணில்பட்டதொன்றை அவன் உடனடியாகத் துணையாக்கிக் கொள்ளவில்லை. அவன் சிந்தித்துப் பார்த்து ஜீவராசிகளில் தனக்கு சரியான துணை இருக்க முடியாது என்று கண்டுகொண்டான். அவன் அதைத் தெரிந்துகொள்ள அனைத்து ஜீவராசிகளையும் ஆராய்ந்து பார்க்க வேண்டியிருந்தது. அதில் நாம் அவனுடைய உழைப்பைப் பார்க்கிறோம். இறுதியில் கர்த்தர் அவனுக்குத் தகுந்த துணையைக் கொடுத்தபோது ஏவாளை அவன் ஆராய்ந்து பார்த்து தனக்கு அவள்தான் தகுந்த துணை என்பதைக் கண்டுகொண்டான். இதெல்லாம் கர்த்தரின் மனிதன் எத்தனை நல்ல திறமையான உழைப்பாளியாக இருந்தான் என்பதை விளக்குகின்றனவல்லவா.

பாவத்தின் பின் உழைப்பு

சகலமும் பூரணமாக இருந்த நிலையில் மனிதன் உழைக்க வேண்டியிருந்தது என்று பார்த்தோம். மனிதன் பாவம் செய்தபின் என்ன நடந்தது என்பதையும் நாம் ஆராய்வது அவசியம். ஆதாமும், ஏவாளும் பாவம் செய்து ஏதேன் தோட்டத்தில் இருந்து விரட்டப்பட்டவுடன் உழைப்புக்கு அத்தோடு முடிவெற்படவில்லை. பாவம் மனிதனில் பல மாற்றங்களைக் கொண்டுவந்திருந்தபோதும், படைப்பின் நியமமாக இருந்த உழைப்பு அவனோடு தொடர்ந்தது. உண்மையில் பாவம் உழைப்பைக் கடுமையானதாக்கியது என்பதை அறிந்துகொள்ளுகிறோம். கர்த்தர் ஆதாமைப் பார்த்து சொன்ன வார்த்தைகளைக் கவனியுங்கள்: “பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதன் பலனைப் புசிப்பாய். . . . நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்.” (ஆதி. 3:17-19).

ஆரம்பத்தில் படைப்பு பூரணமாக இருந்த காலத்தில் ஆதாமும், ஏவாளும் கஷ்டங்கள் எதுவுமில்லாமல் உழைக்கும் வசதி இருந்தது. அவர்களுடைய பாவம் அனைத்தையும் பாழாக்கியது. துன்பத்தை அறிமுகப்படுத்தியது. அவர்களுடைய பாவத்திற்குத் தண்டனையாக கர்த்தர் அவர்கள் இனி துன்பப்பட்டு உழைத்து பலனடைய வேண்டிய நிலைமையை உண்டாக்கினார். மனிதன் உழைக்கும்போது பாவத்தின் காரணமாக நிலம் அவனுக்கு உதவாது. அதுவும் பாவத்தால் பாழாகியிருப்பதால் நல்ல விளைச்சளை எப்போதும் தராது. மனிதன் வியர்வை சிந்தி பாடுபட வேண்டிய நிலை உருவாகியது. தகுந்த நேரத்தில் மழை பொழியாது, இயற்கை நாசத்தில் அவன் பாடுபட்டு பயிரிட்டதும் அழிய நேரிடும். இதெல்லாம் மனிதன் செய்த பாவத்தினால் ஏற்பட்ட விளைவுகள். இன்றும் எல்லா மனிதர்களும் உழைக்க வேண்டியிருந்தபோதும் அவர்கள் கடுமையாக உழைத்தே எதையும் அடைய நேரிடும்.

ஆதாம் ஏதேனில் இருந்து விரட்டப்பட்ட பிறகு தன்னுடைய பிள்ளைகளுக்கு உழைக்கக் கற்றுத்தந்திருந்ததை ஆதி. 4ல் வாசிக்கிறோம். ஆபேல் ஆடு மேய்க்கும் தொழிலைச் செய்தான். காயின் நிலத்தைப் பயிரிடுகிறவனாக இருந்தான். இது பாவத்திற்குப் பின்பும் உலகத்தில் உழைப்பு தொடர்ந்ததை விளக்குகிறது. காயினின் பாவத்தின் காரணமாக மனிதன் மேலும் கடுமையாக உழைத்தே பலனடைய வேண்டியிருக்கும் என்பதைக் கர்த்தர் ஆதி. 4:11, 12ல் விளக்குகிறார். அதற்குப் பிறகு நோவாவின் காலத்தில் உழைப்பைப் பற்றிய மேலும் விளக்கங்கள் நமக்குக் கிடைக்கின்றன. மனிதனின் பாவங்கள் உலகத்தில் அதிகரித்ததால் கர்த்தர் உலகத்தை அழிக்கத் தீர்மானம் எடுத்தார். நேர்மையானவனாக நோவா மட்டுமே உலகத்தில் இருந்தான். நாற்பது நாட்கள் மழை இடைவிடாமல் பொழிந்து அதன் மூலம் உலகத்தை அழிக்கப் போகிறேன் என்றும் அதிலி ருந்து தப்பிக்கொள்ள ஒரு படகைக் கட்டி அதில் தன் குடும்பத்தோடு இருந்துகொள்ளுமாறு கர்த்தர் நோவாவுக்கு கட்டளையிட்டார். கர்த்தரின் பிள்ளையாக இருந்த நோவா எத்தனை உழைப்பாளி என்பதை அவன் படகைக் கட்டியவிதத்தில் இருந்து தெரிந்துகொள்ளுகிறோம். அவன் பல வருடங்களாக தனியாக குடும்பத்தோடு உழைத்து அந்தப் படகை கர்த்தர் விதித்திருந்தவிதமாகக் கட்ட வேண்டியிருந்தது. அவனுடைய பிள்ளைகள் அந்தப் படகோடு சேர்ந்து வளர்ந்திருக்கிறார்கள். பல இடையூறுகளுக்கு மத்தியிலும் மனந்தளராமல் அந்தப் படகைக் கட்டி முடிக்க உழைத் திருக்கிறான் நோவா. ஒரு சோம்பேரியால் அதைச் செய்திருக்க முடியாது. இன்றைக்கு ஊழியப்பணிபுரிகிற எந்த மனிதன் நோவாவைப்போல பிரதிபலன் எதிர்பார்க்காது கர்த்தருடைய பணியை உழைத்துச் செய்துவருகிறான்? ஜெபம் செய்கிறேன் என்று நேரத்தை வீணாக்கி, ஒப்புக்கு சிலபேரை வீட்டில் போய்ப் பார்த்துவிட்டு ஆத்துமாக்களை ஏமாற்றி கைநிறைய வாங்கிக்கொண்டு சும்மா இருப்பதே அநேகமா னோருக்கு தொழிலாக இருக்கிறது. உழைக்கும் தன்மையே உதிரத்தில் இல்லாத பெருச்சாளிகளைத்தான் இன்று ஊழியம் சுமக்க வேண்டிய நிலைமை இருக்கிறது.

கர்த்தர் உலகத்தைத் தண்ணீரால் அழித்தபிறகு நோவாவும் அவனோ டிருந்தவர்களும் மட்டுமே உயிர்வாழ்ந்தார்கள். கர்த்தர் அவர்களை ஆசீர்வதித்தார். அவர்கள் உலகில் பல்கிப் பெருகும்படி ஆசீர்வதித்தார். அதன்பிறகு ஆதி. 9:20ல் “நோவா பயிரிடுகிறவனாகி திராட்சைத் தோட்டத்தை நாட்டினான்” என்று வாசிக்கிறோம். நோவாவின் பணி முடிந்த பிறகு அவன் மறுபடியும் உழைத்து வாழ்வதைத் தொழிலாகக் கொண்டான் என்று பார்க்கிறோம். தன்னுடைய பிள்ளைகளையும் உழைப்பவர்களாக வளர்த்தான் என்று பார்க்கிறோம். அதற்குப் பிறகு ஆபிரகாமை உழைப்புக்கு அடையாளமாகப் பார்க்கிறோம். அவனும், சாராளும் மந்தை மேய்க்கிறவர்களாக இருந்து பெரும் சொத்துக்கு அதிபதியாக இருந்தார்கள். அவர்களுடைய நேர்மையான உழைப்பு அவர்களைக் கர்த்தருக்கு முன்பு உயர்த்தியது. பாவமுள்ள உலகத்தில் வாழ்ந்த நோவாவும், ஆபிரகாமும் கர்த்தரின் பிள்ளைகள். கர்த்தரின் பிள்ளைகளின் நேர்மையான உழைப்பைக் கர்த்தர் ஆசீர்வதித்தார். அத்தோடு கர்த்தரின் பிள்ளைகள் பணம் பண்ணுவதை நோக்கமாகக் கொண்டு உழைக்கவில்லை. உழைப்பதே மனிதன் மனிதனாக வாழ வழி என்பதை உணர்ந்திருந்ததால் உழைத்தார்கள். பணத்துக்காக ஆபிரகாம் வாழாததால்தான் தன்னுடைய நல்ல நிலங்களையெல்லாம் லோத்துக்கு கொடுத்தான். நேர்மையாக கர்த்தரை நம்பி உழைக்கிறவனுக்கு மோசமான நிலமும் பலன் கொடுக்கும் என்பதை ஆபிரகாமின் வாழ்க்கையில் இருந்து தெரிந்துகொள்ளுகிறோம். இவ்வாறாக மனித குலத்தில் உழைப்பு தொடர்ந்தது. மனிதனாகப் பிறந்தவன் உழைப்பதைத் தன்னுடைய ஆண்மையின் இலக்கணமாக எந்த சமுதாயத்திலும் கொண்டிருந்திருக் கிறான் என்பதை வேத வரலாறு நமக்குத் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.

பத்துக் கட்டளையும் உழைப்பும்

இஸ்ரவேல் ஒரு நாடாக உருவாகுவதற்கு முன்பு கர்த்தர் தந்த பத்துக் கட்டளைகள் மனிதன் உழைக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது. நான்காம் கட்டளையில் உழைப்பை ஓய்வு நாளோடு சம்பந்தப்படுத்தி விளக்குகிறார் கர்த்தர் (யாத்தி. 20:9-11). வாரத்தின் ஆறு நாட்கள் வேலையும், ஓய்வுநாளும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. வாரத்தின் ஆறு நாட்களில் மனிதன் சரீரத்தை வருத்தி உழைக்க வேண்டு¢ம் என்பது கர்த்தரின் கட்டளை. அந்த நியாயமான உழைப்பின் மூலம் அவன் தன்னையும், தன்னுடைய குடும்பத்தாரையும் போஷிக்க வேண்டும். அந்த ஆறு நாட்களில் அவன் சோம்பேரித்தனமாக இருக்கக்கூடாது. பணத்தை மட்டும் நோக்கமாக வைத்து மனிதன் அந்த ஆறுநாட்களிலும் உழைப்பில் ஈடுபடக் கூடாது. உழைப்பது தன் வாழ்க்கையில் கர்த்தர் எதிர்பார்க்கும் ஒன்று என்ற எண்ணத்தோடும், உழைப்பதற்காகத்தான் படைக்கப்பட்டிருக் கிறோம் என்ற எண்ணத்தோடும் அவன் உழைக்க வேண்டும். தன்னுடைய வீட்டாரும், தனக்குக் கீழுள்ளவர்களும்கூட உழைக்கும்படி அவன் பார்த்துக் கொள்ள வேண்டும். உழைப்பின் மூலம் மட்டுமே எவரும் தங்களுக்கான பலன்களை அடைய வேண்டும் என்பது கர்த்தரின் நியதி. சோம்பேரித்தனத்தையும், உழைக்காமல் இலகுவாக பணத்தை அடைவதையும், சூதாடுவது போன்ற நியாயமற்ற வழிகளில் போவதையும், மற்றவர் உழைப்பில் வாழ்வதையும், பெறுகிற பணத்திற்கு ஏற்ற உழைப்பைக் கொடுக்காமல் இருப்பதையும், நமக்கு ஊதியம் தருகிறவர்களுக்கு கொடுக்க வேண்டிய உழைப்பைக் கொடுக்காமல் இருப்பதையும் கர்த்தர் வெறுக்கிறார்; தன்னை அவமதிக்கும் செயல்களாகக் கருதுகிறார். ஆத்துமாக்கள் தரும் காணிக்கைகளை அள்ளி வாங்கிக்கொண்டு உழைத்துத் தயாரிக்காமல் அறைகுறைப் போதனைகளைக் கொடுக்கும் அதிகப் பிரசங்கிகள் எந்தளவுக்கு கொடுமைக்காரர்கள் என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்ள லாம்.

நான்காம் கட்டளை ஓய்வுநாளைப் பற்றியும் விளக்குகிறது. வாரத்தின் ஆறு நாட்களிலும் வேலை செய்வது எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவுக்கு வாரத்தின் முதலாம் நாளில் ஓய்வு எடுக்க வேண்டும். இங்கே ஓய்வெடுப்பது என்பது தூங்குவதையும், பீச்சிலோ, பார்க்கிலோ காற்று வாங்கப் போவதையும், அல்லது விடுமுறையில் உல்லாசமாக இருப்பதற்கு எங்காவது போவதையும் குறிப்பிடவில்லை. இந்த ஓய்வு ஆத்மீக ஓய்வைக் குறிக்கிறது.

முதல் நான்கு கட்டளைகளுமே கர்த்தரை நாம் எப்படி ஆராதிக்க வேண்டும் என்பதைப் பற்றிப் போதிப்பதைக் கவனியுங்கள். வாரத்தின் முதல் நாளில் நாம், நாம் சார்ந்துள்ள சபை ஆராதனைகளில் கலந்து கொண்டும், மிகுதி நேரங்களில் ஆவிக்குரிய காரியங்களைச் செய்வதையுமே இங்கே கர்த்தர் வலியுறுத்துகிறார். இந்த நாளில் நாம் வாரத்தின் ஏனைய ஆறுநாட்களிலும் செய்கின்ற வேலைகளை செய்யக் கர்த்தர் அனுமதிக்க வில்லை. ஆத்மீக ஓய்விலும் உழைப்பிருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், இது வேறுவகையான உழைப்பு. ஆவிக்குரிய உழைப்பு. ஆவிக்குரிய ஓய்வை நாம் வாரத்தின் முதல் நாளில் எடுத்துவிட்டு ஏனைய ஆறு நாட்களிலும் நேர்மையாக, உடலை வருத்தி கர்த்தருக்காக உழைக்க வேண்டும் என்பதே நான்காம் கட்டளை தரும் போதனை. இது மனித வர்க்கம் முழுவதற்கும் கொடுக்கப்பட்டிருக்கிற கர்த்தரின் கட்டளை. மனித வர்க்கத்தின் நலத்திற்காகவே படைத்தவர் தன்னுடைய அளப்பரிய ஞானத்தின் மூலம் இத்தகைய ஏற்பாட்டைச் செய்து வைத்திருக்கிறார்.

இஸ்ரவேலும் உழைப்பும்

தன்னுடைய சித்தத்தை தான் படைத்த இந்த உலகில் நிறைவேற்றிக் கொள்ள கர்த்தர் இஸ்ரவேலைத் தெரிந்தெடுத்து அதற்கு இராஜாவாக இருப்பதன் மூலம் ஏனைய நாடுகளுக்கும் தன்னை அறிவிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தார். தான் தெரிந்துகொண்ட இஸ்ரவேல் நாடு தன்னை மகிமைப்படுத்தும்படியாக நீதியாக நடந்துகொள்ள அவர் அந்நாட்டிற்கு நீதிச்சட்டங்களை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆலய வழிபாட்டுக்குரிய சட்டங்கள் மட்டுமல்லாமல் தேச மக்களின் வாழ்க்கைக்குரிய சமுதாய ஒழுங்குக் கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தினார்.

நிலத்தைப் பண்படுத்திப் பயிரிட்டும், மந்தையை மேய்த்தும் மனிதன் உழைப்போடு சம்பந்தப்பட்டதாக பணம், ஊதியம், பொருள் என்பவற்றை அனுபவிக்க ஆரம்பிப்பதால் கர்த்தர் அவற்றிற்குரிய நீதியொழுக்க சட்டங்களையும் ஏற்படுத்தினார். யாத்திராகமம் 21, 22ல் அவற்றை நாம் வாசிக்கிறோம். பாவத்தின் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் உழைப்பைக் கர்த்தர் பரிசுத்தமானதாகப் பார்க்கிறார். அதைப் பரிசுத்தத்தோடு செய்யும் படிக் கட்டளையிட்டார். ஆகவேதான், உழைப்பிலும் அதோடு தொடர்புடைய காரியங்களிலும் பரிசுத்தமற்ற செயல்களை அவர் அனுமதிக்கவில்லை. நமது உழைப்பில் மட்டுமன்றி நமக்காக உழைப்பவர்களையும் நாம் நியாயமாக நடத்த பத்துக்கட்டளைகள் வலியுறுத்துகின்றன. நமது வேலையாட்கள், மிருகங்களைக்கூட நாம் நியாயமாக நடத்த வேண்டும். உழைக்கிறவன் ஊதியத்தைப் பெறத்தகுதியுள்ளவனாகிறான். மிருகங்களும் அந்தத் தகுதியை அடைகின்றன. (2 தீமோத். 5:17; உபாகமம் 25:4; இதையும் கவனிப்பது அவசியம், லூக்கா 10:7).

அத்தோடு வறுமையை அநுபவிக்கிறவர்களுக்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டியதும் உழைக்கிறவர்களின் கடமையாகும். (யாத்திராக மம் 23:3-12). ஆறுநாட்களில் உழைப்பின் அவசியத்தை மறுபடியும் யாத்திராகமம் 23:10-12 வசனங்கள் வலியுறுத்துகின்றன. நமது உழைப்பின் மூலம் வறியவர்களின் துன்பம் போக்கப்பட வேண்டுமென்பதை 23:10-11 வரையுள்ள வசனங்கள் அறிவுறுத்துவதைக் காண்கிறோம். கர்த்தருடைய வழிமுறைகளைப் பின்பற்றி உழைத்தால் உணவுப் பற்றாக்குறை ஏற்படாது என்பதையும், வறுமைக்கு இடமில்லை என்பதையும் லேவியராகமம் விளக்குகின்றது. (லேவியர் 25:18-22). பாவமே இன்றைக்கு உழைப்பைப் பாதித்து மனிதர்கள் மத்தியில் சுரண்டலை ஏற்படுத்தியிருக்கிறது. அதைக் கர்த்தர் அடியோடு வெறுக்கிறார். (எரேமியா 22:14; யாக்கோபு 5:4).

கர்த்தருடைய கட்டளைகளை உள்ளது உள்ளபடி பின்பற்றுவதன் மூலம் மட்டுமே அவருடைய ஆசீர்வாதங்களை உழைப்பின் மூலம் அடைய முடையும். அதாவது, நமது உழைப்பு கர்த்தருடைய வார்த்தையின்படி நியாயபூர்வமானதாகவும், கர்த்தருக்குரியதாகவும், அவரை மகிமைப்படுத்து வதாகவும் அமைந்தால் மட்டுமே அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்று, உழைப்பால் உயரவும் முடியும் என்பதை உபாகமம் 28:1-15 வரையுள்ள வசனங்கள் விளக்குகின்றன. இஸ்ரவேலர்கள் கர்த்தருடைய வார்த்தையின் படி உழைக்கும்படி எதிர்பார்க்கப்பட்டார்கள். கர்த்தர் இஸ்ரவேலர்களுக்கு தந்த உழைப்பைப்பற்றிய ஒழுங்குக் கட்டுப்பாடுகள் என்றும் பொருந்தும். அவை பழைய ஏற்பாட்டு மக்களுக்கு மட்டும் கொடுக்கப்படவில்லை. இன்றைக்கு “புரொஸ்பரிட்டி” (Prosperity) போதனைகளை வழங்கி உழைக்காமலேயே பணக்காரர்களாக முடியும் என்று ஆத்துமாக்களை அநியாய வழியில் நடத்த முயலும் கெரிஸ்மெட்டிக் இயக்கம் வேதத்தை சரியாக வாசிப்பதில்லை. ஆத்துமாக்களுக்கு வேதம் தெரியாதென்ற தைரியத்தில் அவர்களுக்குப் பொய்யைச் சொல்லி அது தன்னை வளர்த்துக் கொள்ளுகிறது. பெரிய ஊழியக்காரர்கள் என்ற பெயரில் திரியும் அநேக கெரிஸ்மெட்டிக் சுவிசேஷகர்கள் பணத்தில் இன்று புரளுவதற்குக் காரணம் உழைக்காமல் ஆத்துமாக்களை ஏய்த்துப் பணம் பெறுவதால்தான்.

அதுமட்டுமல்லாமல் இஸ்ரவேலில் ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் உழைக்கிறவர்களாக இருந்தனர். ஆண் செய்கிற வேலையை அவர்கள் செய்யும்படிக் கர்த்தர் எதிர்பார்க்கவில்லை. ஆனால், பெண்கள் தங்களுக்குரிய பணியைக் கர்த்தருக்காக செய்யவேண்டியிருந்தது. நீதிமொழிகள் 31ல் நாம் வாசிக்கும் பெண் விசுவாசிகளாகிய பெண்களுக்கு நல்ல உதாரணம். அவள் சோம்பேரியாக வாழவில்லை. அவளுடைய திறமைகளைப் பயன்படுத்தி கணவனுக்கு நல்ல பெயர் பெற்றுத்தரும் அளவுக்கு அவள் உழைத்திருக்கிறாள்.

ஆத்மீக ஆராதனையும் உழைப்பும்

ஏற்கனவே ஓய்வு நாளில் ஆத்மீக உழைப்பின் அவசியத்தைக் கவனித்தோம். ஆத்மீகக் காரியங்களில் ஆவிக்குரிய உழைப்பிருப்பதை உணர வேண்டியது அவசியம். யாத்திராகமத்திலும், லேவியராகமத்திலும் கர்த்தர் தன்னுடைய ஆராதனைக்குரிய சடங்குகளைப்பற்றியும், ஆலயக் கட்டுமானத்திற்கான விபரங்களையும் தந்திருக்கிறார். இவை ஆத்மீக ஆராதனையில் காணப்பட வேண்டிய மூன்று உண்மைகளை விளக்குகின்றன. (1) ஒழுங்கு – ஆராதனையில் கர்த்தரின் வார்த்தையின்படியிலான ஒழுங்கு இருக்க வேண்டும். கர்த்தர் ஒழுங்கின் தேவனாக இருக்கிறார். ஆராதனையில் ஒழுங்கிருக்க வேண்டுமானால் சிந்தித்து செயலாற்றாமல் ஒழுங்கைக் கொண்டுவர முடியாது. (2) உழைப்பு – ஆத்மீக ஆராதனை என்பது வெறுமனே வானத்தை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதோ அல்லது கண்களை மூடிக்கொண்டு சிந்திக்காமல் இருப்பதோ அல்ல; ஆத்மீக ஆராதனையில் உழைப்பு அதிகம் இருக்கிறது. சரீர உழைப்பு, உணர்ச்சி வெளிப்பாடு, அறிவுபூர்வமான சிந்தனை ஆகிய மூன்றிற்கும் அதிக உழைப்பு உண்டு. இது பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் பொருந்தும். இதையெல்லாம் சிந்தித்து உழைக்காமல் செய்ய முடியாது. (3) பரிசுத்தம் – கர்த்தரின் வார்த்தையின்படி அனைத்தையும் செய்து கர்த்தரின் மகிமைக்காக ஆராதித்தல்.

இதையே புதிய ஏற்பாட்டிலும் பார்க்கிறோம். ஓய்வு நாளில் நாம் பரிசுத்த ஆத்மீக உழைப்பில் ஈடுபடுகிறோம். அறிவுபூர்வமான ஆத்மீகப் பிரசங்கத்தைச் செய்தல், பிரசங்கத்தைக் கவனமாக அறிவுபூர்வமாகக் கேட்டு சிந்தித்து ஆராய்ந்து அதன்படி நடக்க முயலுதல், சங்கீதங்களையும், பாடல்களையும் உணர்ச்சியோடும், ஆனந்தத்தோடும் பாடுதல், ஜெபித்தல், வேத வாசிப்பு, திருவிருந்தில் பங்கு பெறுதல், ஆத்மீகப் பரிசோதனையில் ஈடுபடுதல், ஐக்கியத்தில் வருதல், ஆத்மீக சம்பாஷனையில் ஈடுபடுதல், சுவிசேஷத்தை அறிவித்தல், கருணைக்கிடமான காரியங்களைச் செய்தல் இவையனைத்தையும் உழைப்பில்லாமல் செய்ய முடியாது. உழைப்பில்லாத ஆத்மீக ஆராதனையைக் கர்த்தரின் வேதத்தில் நாம் காண முடியாது. (லூக்கா 10:27).

இயேசு கிறிஸ்துவும், உழைப்பும்

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை, அவர் பிறந்ததில் இருந்து ஒன்றுவிடாமல் அவருடைய அன்றாட நடவடிக்கைகள் அனைத்தையும் தொகுத் தளிப்பது புதிய ஏற்பாட்டின் நோக்கமல்ல. இருந்தாலும் முதல் நான்கு சுவிசேஷ நூல்களும் இயேசு கிறிஸ்து உழைப்புக்குத் தன் வாழ்க்கையில் அளித்த இடத்தைக் குறிப்பாக உணர்த்தாமலில்லை. வேதம் லூக்கா 2:40; 52 ஆகிய வசனங்களில் இயேசுவின் வளர்ச்சி பற்றிக் குறிப்பிடுகிறது. அத்தோடு அவருடைய ஞானத்தைப் பற்றி லூக்கா 2:46, 47ல் வாசிக்கிறோம். சிறு வயதிலிருந்தே இயேசு பழைய ஏற்பாட்டு நூல்களைத் திறமையாகக் கற்று வளர்ந்தார். அவர் தேவனாக இருந்தபோதும் தன்னுடைய முழுமையான மானுடத் தன்மையின்படி கற்று வளர வேண்டியிருந்தது. அவர் தன்னுடைய தந்தையின் தொழிலான தச்சு வேலையை, அவருக்கு உதவியாக இருந்து செய்து வந்திருக்கிறார். இயேசு எல்லாவற்றிலும் கர்த்தருக்குப் பூரணமாகக் கீழ்ப்படிந்தார் என்று வாசிக்கிறோம். அவ்வார்த்தைகளின்படி அவர் தன்னுடைய பெற்றோருக்கு (லூக்கா 2:51) கீழ்ப்படிந்து எல்லாக் கிரியைகளையும் தன் வாழ்க்கையில் செய்து வளர வேண்டியிருந்தது. தனது முப்பதாம் வயதில் அவர் ஊழியத்தை ஆரம்பிக்கும்வரை தனது கைகளைப் பயன்படுத்தி உழைத்துப் பெற்றோருக்கு உதவி செய்து, தேவ வார்த்தைகளைக் கற்றுப் பொறுப்புணர்வோடு சமுதாயத்தில் நடந்து வந்திருந்தார். மற்றவர்களுக்குப் போதித்த அனைத்தையும் தன்னு டைய வாழ்க்கையில் பின்பற்றியிருந்தார்.

அவருடைய வேத ஞானத்தைக் கண்டு ஆச்சரியப்படுகின்ற நாம் அவர் எந்தளவுக்கு அவற்றை உழைத்துக் கற்று வளர்ந்திருந்தார் என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை.  பரிசேயர்களும், சதுசேயர்களும் வேறு பலரும் அவரை அன்றாடம் சோதித்துக் குறைகண்டு கவிழ்க்கப் பார்த்தார்கள் (லூக்கா 10:25).  வேத ஞானத்தை இயேசு தம்மில் வளர்த்துக்கொண்டதோடு சிந்தித்து அறிவுபூர்வமாக வாதிடக் கற்றுக்கொள்ளாமலிருந்திருந்தால் அவரால் அவர்களை வென்றிருக்க முடியாது. இவையெல்லாம் அவர் தேவனாக இருந்ததால் இலகுவாக அவரிடம் காணப்பட்டன என்றால் அது அவருடைய மானுடத்தைக் குறைவுபடுத்தி தெய்வீகத்தை மாசுபடுத்திவிடும். ஆறுநாள் வேலையை வலியுறுத்தும் பத்துக் கட்டளையை அந்தக் கட்டளைக்கே தேவனாகிய இயேசு கடைப்பிடிக்காமல் இருந்திருக்க முடியாது.  வாரத்தில் ஆறுநாட்களில் அவர் சகலவிதத்திலும் உழைத்தார். அவர் கர்த்தரின் கட்டளைகள் அனைத்தையும் பூரணமாகத் தன் வாழ்வில் கைக்கொண்டிருந்தார். ஏழாம் நாளிலும் அவர் ஆராதனையில் முழுமை யாகப் பங்குகொண்டு ஆலயத்தில் வழிபட்டுப் போதனை செய்தார்.

அவருடைய ஊழிய உழைப்பைப் பற்றி வேதம் தெளிவாக விளக்குகிறது. நாடு, நகரங்கள், கிராமங்கள் என்று அவர் திட்டமிட்டு பிரயாணம் செய்து மக்களிடத்தில் சுவிசேஷத்தை அறிவித்தார் (லூக்கா 4:43; யோவான் 4:34).  அவருடைய ஊழியத்தில் ஒழுங்கையும், கடுமையான உழைப்பையும், பார்க்க முடிகிறது. அவருடைய உழைப்புக்கு மத்தியில் நேர்மையையும் பார்க்கிறோம். அவருடைய ஆத்மீக உழைப்பைக் கவனிக்காமல் இருந்துவிட முடியாது. வேதப் படிப்பு, உழைப்பின் திறத்தைக் காட்டும் பிரசங்கங்கள் (மலைப்பிரசங்கம்), வாதங்கள் போன்றவற்றோடு அவருடைய ஜெப உழைப்பைக் கவனிப்பதும் அவசியம். அவர் உழைத்து ஜெபித்தார். தன்னுடைய சரீரத்தையும், மனதையும் கட்டுப்படுத்தி நீண்ட நேரம் ஜெபத்தில் ஈடுபட்டார் (லூக்கா 5:16). தன்னோடு இணைந்து உழைத்து ஜெபிக்கத் தவறியதற்காக தன்னுடைய சீடர்களையும் கடிந்து கொண்டார் (லூக்கா 22:44-46).

அவர் சுவிசேஷத்தை அறிவித்துப் போதித்தது மட்டுமல்லாமல் தன்னுடைய சீடர்களுக்கு மூன்று வருடங்கள் கடுமையான பயிற்சி அளித்து வளர்த்தார். அதில் அவருடைய உழைப்பையும் அவருடைய சீடர்களின் உழைப்பையும் கண்கிறோம். அவர் எழுபது பேரை சுவிசேஷ ஊழியத்துக்கு அனுப்பினார். அவர்களுக்குப் பயிற்சியளிக்காமல் அவர் அனுப்பியிருக்க முடியாது. அவர் ஊழியக்காரர்களின் அவசியத்தை உணர்ந்து அவர் களுக்காக ஜெபிக்கும்படிக் கூறினார் (லூக்கா 10:2). ஆனால், ஊழியக்காரர் கள் வேண்டும் என்பதற்காக அவர் ஊழியக்காரர்களின் தரத்தைக் குறைத்துவிடவில்லை. பயிற்சியளிப்பதில் கவனக்குறைவாக இருந்துவிட வில்லை. ஊழியம் தானே வளரும் என்று சும்மா இருந்து விடவும் இல்லை. இயேசுவின் வாழ்க்கையில் மட்டும் நாம் உழைப்பின் அவசியத்தைப் பார்ப்பதில்லை; அவருடைய போதனைகளிலும் பார்க்கிறோம்.

அப்போஸ்தலர்களும், உழைப்பும்

இயேசு கிறிஸ்துவின் சீடர்களான அப்போஸ்தலர்கள் இயேசுவைப் பின்பற்றுவதற்கு முன்பு பல தொழில்களை வாழ்க்கையில் செய்திருக்கின்றனர். இயேசுவோடிருந்தபோது அவர்கள் அவரிடம் உழைக்கக் கற்றுக்கொண்டதோடு கடுமையாக உழைத்தனர். ஊழியத்தைச் செய்த நேரத்தைத் தவிர ஏனைய நேரங்களில் அவர்கள் நிச்சயம் வேலைகளைச் செய்திருக்கின்றனர். அவர்கள் என்ன வேலை செய்தார்கள் என்பதை வேதம் நமக்கு விளக்கவில்லை என்பதால் அவர்கள் வேலை செய்யாமல் சாப்பிட்டார்கள், வாழ்ந்தார்கள் என்று நாம் முடிவு கட்டுவது தவறு. இயேசுவும், அவருடைய அப்போஸ்தலர்களும் ஊழியம் செய்த நேரந்தவிர்த்த ஏனைய நேரங்களில் தங்களுடைய உணவுக்காகவும், ஏனைய தேவைகளுக்காகவும் உழைத்திருக்கின்றனர். உழைக்காதவன் உணவருந்தத் தகுதியில்லாதவன் என்று போதித்துள்ள அவர்கள் தாங்களே அவ்வார்த்தைகளுக்கு எதிராக நடந்திருக்க முடியாது.

அப்போஸ்தலனாகிய பவுல் தனக்குத் தெரிந்த கூடாரம் செய்யும் தொழிலைச் செய்து ஊழியத்தைக் கவனித்துக் கொள்ளத் தவறவில்லை. அப்போஸ்தலனாக இருப்பதால் கரங்களைப் பயன்படுத்தி உழைப்பது தனக்கு மதிப்பளிக்காது என்று எண்ணிப் பவுல் பணம் கேட்டு ஒருபோதும் அலையவில்லை. உழைத்துத் தன்னையும். தன்னோடிருந்தவர்களையும் கவனித்துக் கொண்டார். கொரிந்தியர்கள் தனக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுக்க மனதில்லாதிருந்தபோது பவுல் அவர்கள் திருந்தவேண்டுமென்பதற்காகத் தானே கைவருந்தி உழைத்து ஊழியத்தைச் செய்திருக்கிறார். கொரிந்தியர்களிடம் பணம் வாங்குவதைத் தவிர்த்திருக்கிறார். இதன் மூலம் பணத்துக்காக ஊழியம் செய்கிறவர்களல்ல அப்போஸ்தலர்கள் என்று நிரூபித்திருக்கிறார் பவுல்.

புதிய ஏற்பாடும் உழைப்பும்

புதிய ஏற்பாட்டு நூல்கள் உழைப்பைப் பற்றிய அநேக போதனைகளைக்  கட்டளைகளாகவும், உதாரணங்களின் மூலமும் தருகின்றது. பவுல் அப்போஸ்தலன் தன்னுடைய நிருபங்களில் உழைப்பின் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார். 1 தெசலோ. 4:12ல், “நாங்கள் உங்களுக்குக் கட்டளை யிட்டப்படியே . . . உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்” என்கிறார் பவுல். விசுவாசிகள் தங்களுடைய நேரத்தை வீண்பேச்சுப் பேசி செலவழிக்காமல் கைகளைப் பயன்படுத்தி உழைக்க வேண்டுமென்று பவுல் விளக்குகிறார்.

இதேபோல 2 தெசலோ. 3ம் அதிகாரத்திலும் உழைப்பின் அவசியத்தைப் பவுல் வலியுறுத்தியிருக்கிறார். அதற்கு தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையையே உதாரணமாகக் காட்டுகிறார். “இன்னவிதமாய் எங்களைப் பின்பற்ற வேண்டுமென்று அறிந்திருக்கிறீர்களே; நாங்கள் உங்களுக்குள் ஒழுங்கற்று நடவாமலும், ஒருவனிடத்திலும் இலவசமாய் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலை செய்து சாப்பிட்டோம்.” (2 தெசலோ. 3:7-8). இன்றைக்கு எத்தனைப் போதகர்கள் இந்த வார்த்தைகளைக் கவனித்துப் படித்திருக்கிறார்கள்? ஊழியம் செய்ய ஆரம்பித்துவிட்டால் கைகளைப் பயன்படுத்தி உழைப்பது அவமானம் என்று கருதும் அரைவேட்காடுகளைத் தான் நாம் தொடர்ந்து நம்மத்தியில் பார்க்கிறோம். பவுல் அப்படி நினைக்கவில்லை. இலவசமாய் ஒருவனிடத்திலும் கைநீட்டி எதையும் வாங்குவது பத்துக்கட்டளைகளுக்கு எதிரானது என்று தெரிந்து வைத்திருந்த பவுல் அதற்கு ஒருபோதும் தன் வாழ்க்கையில் இடங்கொடுக்கவில்லை. மாதக் கடைசியில் ‘ஹவுஸ் விசிட்டிங்’ என்று வீடு வீடாய்ப்போய் ஆத்துமாக் களிடம் கைநீட்டி வசூல் செய்து வயிற்றை நிரப்பிவரும் வசூல் மன்னர்களே இன்று தமிழினத்து ஊழியக்காரர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கும் பவுலுக்கும் வெகுதூரம்.

எவருக்கும் பாரமாய் இருக்கவும் பவுல் ஒரு போதும் விரும்பவில்லை. அதற்கு வாழ்க்கையில் இடமும் கொடுக்கவில்லை. அதைத் தவிர்ப்பதற்காக பவுல் இரவும், பகலும் பிரயாசத்தோடும், வருத்தத்தோடும் வேலை செய்து சாப்பிட்டிருக்கிறார். 1 தெசலோ. 3:9ல், சொல்லுவதைக் கவனமாகக் கவனியுங்கள். இதில் பவுலின் மெய்யான போதக உள்ளத்தை அடையாளம் காணமுடிகிறது. “உங்கள் மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்க ளுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்க வேண்டுமென்றே அப்படிச் செய்தோம்.” அப்போஸ்தலனாகிய பவுலால் அதிகாரத்தோடு சபை தன் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டிருக்க முடியும். அதற்கான அதிகாரம் பவுலுக்கு இருந்தது. அத்தோடு, அதற்கான வேத போதனைகளும் இருந்தன. இருந்தாலும் பண விஷயத்தில் தன்னையும் தன்னைச் சார்ந்த ஊழியக்காரர்களையும் எவரும் தவறாகக் கருதிவிடக் கூடாது என்பதற்காகவும், உழைப்பதற்கு எவருமே தயங்கக் கூடாது என்பதை ஆத்துமாக்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்தற்காகவும், அதாவது அவர்கள் பின்பற்றும்படியான உதாரண புருஷர்களாக தாங்கள் இருக்க வேண்டுமென்பதற்காகவும் பவுலும், அவரைச் சார்ந்தவர்களும் வேலை செய்து சாப்பிட்டார்கள். இதுவல்லவா போதக ஊழியத்துக்கு இலக்கணம்! இதை இன்று எங்கே நாம் பார்க்கிறோம். வேதம் சொல்லுவது ஒன்று; ஊழியக்காரர்கள் என்ற பெயரில் நம்மத்தியில் இன்று நடந்து வருவது இன்னொன்று. பவுல் இங்கே ‘வேலை’ என்று விளக்குவது ‘ஊழியப் பணியை’ அல்ல; தனக்கு வருமானத்தைத் தரக்கூடிய, தான் கைகளைப் பயன்படுத்தி செய்த உழைப்பையே அவர் வேலை என்று விளக்குகிறார். இதற்கு மேலும் வேலை செய்வதை அவமானமாய்க் கருதி வாழும் சோம்பேரிப் போதகர்களுக்கும், ஊழியக்காரர்களுக்கும் நாம் புத்தி சொல்ல முடியாது.

பவுல் அத்தோடு நிறுத்திவிடவில்லை. 10ம் வசனத்தில் ஒரே போடாக, “ஒருவன் வேலை செய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளை யிட்டோமே” என்கிறார். தெசலோனிக்கேய சபையில் சிலர் வேலை செய்ய மனமில்லாமல் இருந்திருக்கிறார்கள் (11ம் வசனம்). அவர்கள் நேரத்தை வீணடித்து ஒழங்கில்லாமல் திரிந்திருக்கிறார்கள். பவுல் அபபடிப்பட்டவர்கள் திருந்தாவிட்டால் அவர்களோடு சேராதீர்கள் என்று 14ம் வசனத்தில் சொல்லுகிறார். அப்படிப்பட்டவர்களைத் திருத்தும்படி 15ம் வசனத்தில் சொல்லுகிறார். விசுவாசிகள் எல்லோரும் தங்களையும், குடும்பத்தையும் காப்பாற்ற ஒரு நல்ல வேலையைத் தேடி உழைத்து வாழ வேண்டியது அவசியம். அப்படிச் செய்யாதவர்கள் விசுவாசிகளாக இருக்க முடியாது. நம்மில் எவருமே சோம்பேரிகளாக இருக்கக்கூடாது. உழைக்காமல் இருக்கிற சோம்பேரி எப்பொழுதுமே வீண் வேலைகளில் ஈடுபடுவான். அவன் வாழ்க்கையில் ஒழுங்கு இருக்காது. பவுல் இரண்டு முறை இந்தப் பகுதியில் ‘ஒழுங்கு’ என்ற வார்த்தையை 7ம் வசனத்திலும், 11ம் வசனத்திலும் பயன் படுத்தியிருக்கிறார். உழைத்துச் சாப்பிடாதவன் வாழ்க்கையில் ஒரு போதும் ஒழுங்குக்கு இடமிருக்காது. ஒழுங்கு என்பதை ஆங்கிலத்தில் Disciplined life என்று சொல்லுவோம். வேலையும், உழைப்பும் நமக்கு வருமானத்தை மட்டும் தராமல் வாழ்க்கையில் ஒழுங்கை வளர்த்துக்கொள்ள உதவும். நேரத்துக்கு தூங்குவதும், நேரத்துக்கு எழுவதும், வேலைக்குப் போவதும், வேலை நேரத்தில் வேலையை மட்டும் செய்வதுமாக அநேக ஒழுங்கை வாழ்க்கையில் கற்றுக்கொள்கிறோம். வேலை செய்ய எவராவது தயங்கி னால் அவர்களுக்கு ஒழுங்காயிருக்க விருப்பமில்லை என்றுதான் அர்த்தம். சபையில் சம்பளம் வாங்கிக்கொண்டு வாரத்தில் ஐந்து நாட்களையும் ஊழியம் என்ற பெயரில் எதையோ செய்து ஒப்பேத்திவிட்டு ஒருவருக்கும் புரியாத பிரசங்கங்களைச் சனிக்கிழமை இரவு தயாரித்து ஓய்வு நாளில் உளறித்தள்ளிவிட்டுக் காலத்தைப போக்கிக் கொண்டிருக்கும் அநேக போலிப் பிரசங்கிகளை பவுல் இந்தப் பகுதியின் மூலம் கடுமையாக சாடுகிறர். அப்படிப்பட்டவர்களை சபை ஒழுங்கு நடவடிக்கை எடுத்துத் திருத்த வேண்டுமென்கிறார். ஒழுங்கில்லாத விசுவாசிக்கு மட்டுமல்ல ஒழுங்கு நடவடிக்கை, ஒழுங்கில்லாமல் நடக்கும் போதகர்களுக்குந்தான்.

இதுவரை உழைப்பின் அவசியத்தையும் வேதம் அதுபற்றி என்ன சொல்லுகிறது என்பதையும் விபரமாகப் பார்த்திருக்கிறோம். இதிலிருந்து நாம் படிக்க வேண்டிய பாடங்கள் என்ன என்பதை இனிப் பார்ப்போம்,

1. உழைக்காமலிருப்பது மனிதத் தன்மையையே இழந்ததற்கு ஒப்பானதாகும். (பிரசங்கி 3:13; 5:18-20; நீதி 14:23). – கர்த்தர் தான் படைத்த மனிதனை உழைப்பவனாக, உழைக்கும் நோக்கத்திற்காகப் படைத்திருப்பதால் அதைச் செய்யாதவன் மனிதனாகவே இருக்க முடியாது. ஒருவன் உண்மையில் மனிதன் என்றால் அவன் உழைப்பை உயர்வாகக் கருதுபவனாக இருக்க வேண்டும்.

2. உழைப்புக்கேற்ற ஊதியம் தரப்பட வேண்டும்; ஆனால் ஊதியத்திற்காக மட்டும் உழைக்கக்கூடாது. – உழைப்பின் அருமை தெரியாதவர்கள்தான் உழைப்பது வருமானத்துக்காக மட்டும் என்று எண்ணுவார்கள். பணத்துக் காக மட்டும் உழைப்பவர்கள் மனிதர்களே அல்ல. நாம் உழைப்பதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என்ற எண்ணம் நமக்கு இருக்க வேண்டும். பணம் கிடைக்கிறதோ இல்லையோ எந்த வேலையையும் நேர்மையுடன் கர்த்தருக்காக செய்ய வேண்டியது நமது கடமை. அதையே கர்த்தர் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

3. உழைத்த ஊதியத்திலேயே நாமும் நம் குடும்பமும் வாழ வேண்டும். –  நாம் சரீரத்தைப் பயன்படுத்தி உழைத்த ஊதியத்திலேயே குடும்பம் நடத்தப் பழக வேண்டும். அதையே நம் குழந்தைகளும் பின்பற்ற அவர்களுக்கு உதவ வேண்டும். இலகுவாகவும், உழைக்காமலும் கிடைக்கும் பணம் நல்லதல்ல. அவ்வாறு வரும் வருமானமும் நன்மைக்கானதல்ல. நம் உழைப்பின் மூலம் கிடைத்தவையே நமக்குச் சொந்தமானவை.

4. உழைக்கத் தயங்குகிறவர்கள் ஊழியத்திற்கு தகுதியற்றவர்கள். – உழைக் காதவன் உணவருந்தத் தகுதியில்லாதவன் என்று பவுல் கூறியிருக்கிறார். உழைக்க மறுக்கிறவனும், சரியாக உழைக்காதவனும் ஊதியம் பெறத் தகுதியற்றவன். போதகர்களைப் பற்றி புவுல் எழுதுகிறபோது நன்றாகப் படித்து உழைத்துப் பிரசங்கித்து, ஆத்துமாக்களைக் கர்த்தரைப் போல கவனிக்கிறவர்களுக்கே இரு மடங்கு பலன் கொடுக்க வேண்டும் என்று எழுதுகிறார். இதிலிருந்து ஊழியத்திலும்கூட நன்றாக கர்த்தரின் மகிமைக்காக உழைக்கிறவர்களையே நாம் மதிக்க வேண்டும் என்பது தெரிகிறது.

5. உழைப்பில்லாமல் ஊழியம் உயராது; ஊதியத்தை நம்பி ஊழியம் செய்யக்கூடாது. – உழைப்பில்லாத ஊழியம் இல்லை. சரியான உழைப்பில் லாமல் எந்த ஊழியமும் உயரமுடியாது. இரவும் பகலும் கண்ணிரோடு உழைத்திருக்கிறார் பவுல் (அப்போஸ். 20). அப்போஸ்தலர்கள் அனைவரும் அவ்வாறு உழைத்தவர்கள்தான். அவ்வாறு உழைப்பது அவசியமாக இருப்பது மட்டுமல்லாமல் ஊதியத்தை அடிப்படையாக வைத்து நாம் எந்த ஊழியத்தையும் செய்யக்கூடாது. அப்படிச் செய்கிற மனிதன் ஊழியத்துக்கே தகுதியில்லாதவன். பணத்தின் பக்கமே ஊழியக்காரர்கள் போகக்கூடாது என்று வேதம் போதிக்கிறது. அதனால்தான் திருச்சபைகளில் பண விஷயத்தைப் பார்க்க உதவிக்காரர்களைக் கர்த்தர் நியமிக்கும் படி வேதத்தில் விளக்கியிருக்கிறார். பண இச்சையுள்ளவன் போதக ஊழியத்துக்கு தகுதியற்றவன் என்பதை 1 தீமோத்தேயு 3ம், தீத்தும் போதகர் களுக்கான இலக்கணத்தை விவரிக்கும் பகுதியில் விளக்கமாகக் கூறுகின்றன. பணத்திற்காக ஊழியம் செய்கிறவன் பிசாசின் ஊழியன். (1 தீமோ. 5:8, 2 தெச. 3:10; 2 தெச. 3:7-12; நீதி 21:25; ரோமர் 12:1-2).

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s