எங்கே, எப்படி, யாருக்குக் கொடுப்பது காணிக்கை?

காணிக்கை கொடுப்பதைப் பற்றி நீங்கள் நிச்சயம் எழுத வேண்டும் என்று தமிழக நண்பர் ஒருவர் என்னைக் கேட்டுக் கொண்டார். அது பற்றி விபரமாக எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் இருந்தது. காணிக்கை யாருக்குக் கொடுக்க வேண்டும்? எங்கே, எப்படிக் கொடுக்க வேண்டும்? என்பது பற்றி சரியான விளக்கம் இல்லாமல் இருந்து வருகிறவர்கள் நம் மத்தியில் அதிகம். இந்த ஆக்கம் இதற்கு வழி செய்யுமானால் அது கர்த்தரின் ஆசீர்வாதமாக இருக்கும்.

கூட்டங்களில் காணிக்கை கேட்பதும், பல தடவைகள் காணிக்கை எடுப்பதும், பத்திரிகைகள், சஞ்சிகைகள், இ-மெயில்கள் வாயிலாகக் காணிக்கை கேட்டுப் பலரை நெருக்குவதென்பது ஊழியங்களில் இன்று வழக்கமாக நடந்து வருகிற நிகழ்ச்சி. காணிக்கைகள் இல்லாமல் ஊழியங்கள் நடக்க முடியாது என்பது உண்மையானாலும், காணிக்கை வாங்குவதில் மட்டும் பலர் காட்டி வருகிற தீவிர ஆர்வம் பெரும் சந்தேகத்தை ஊட்டிவிடுகிறது. ஒரே கூட்டத்தில் பல தடவைகள் காணிக்கை எடுக்கும் அயோக்கியத்தனத்தை இன்று பல கிறிஸ்தவ கூட்டங்களில் பார்க்கலாம். முதல் காணிக்கையில் பணமும், இரண்டாம் காணிக்கையில் நகையும், மூன்றாம் காணிக்கையில் இதற்கு மேலும் எவ்வளவு கொடுக்க முடியும் என்ற வாக்குறுதியையும் பெற்றுப் பல தடவைகள் காணிக்கை எடுத்து கூட்டத்துக்கு வந்தவர்கள் கையில் இருப்பதையெல்லாம் இழந்துவிட்டு வீட்டுக்குப்போக வைத்துக்கொண்டிருக்கிறார்கள் அநேக போலி ஊழியர்கள். காணிக்கை எடுப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு ஊழியத்தைப் பெரிய வியாபாரமாக நடத்தி வருகிறவர்கள் தொகை தமிழர்கள் மத்தியில் அதிகம். கர்த்தருக்காக எதையும் இழக்கலாம் என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்டு வாழ்கிறவர்களே இத்தகைய போலித்தனங்களுக்கு தங்களை ஒப்புக்கொடுத்து நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு வந்துவிடுகிறார்கள். இந்தளவுக்கு காணிக்கைப் பிரச்சனை இன்று அகோரமாக வளர்ந்து நிற்கிறது; கிறிஸ்தவ ஊழியத்தை அவிசுவாசிகளும் மதிக்கமுடியாமல் செய்து வைத்திருக்கிறது.

காணிக்கை எடுப்பதைப் பற்றி வேதம் என்ன சொல்கிறது என்று சிந்தித்துப் பார்ப்போம். கர்த்தரின் சித்தத்தை வெளிப்படுத்தும் வேதமே நமக்கு எல்லா விஷயங்களிலும் சரியான முடிவெடுக்க உதவும் கர்த்தரின் அதிகாரமாக இருக்கிறது. அதிலிருந்தே நாம் கர்த்தர் நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார், நம்மில் எதை வெறுக்கிறார் என்று அறிந்து கொள்கிறோம். கர்த்தரின் வேதமே எந்தக் காரியத்திலும் இறுதித் தீர்ப்பை வழங்கும் நியாயாதிபதியாக இருக்கிறது.

பழைய ஏற்பாட்டில் காணிக்கை

காணிக்கை பற்றி பழைய ஏற்பாடு தெளிவாகப் போதிக்கிறது. அது பழைய ஏற்பாட்டு ஆராதனையில் ஒரு பகுதியாக இருந்திருப்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. ஆதியாகமம் 4ம் அதிகாரத்தில் காயினும், ஆபேலும் கர்த்தரை ஆராதிக்க வந்தபோது காணிக்கை கொண்டு வந்திருக் கிறார்கள். இன்று பிரசங்கிகளில் அநேகர் இப்பகுதியில் காணிக்கையை மட்டுமே பார்க்கிறார்கள். அது முழுத்தவறு. இப்பகுதி ஆராதனையைப் பற்றி விளக்குகிறது. ஆராதனையின் ஓர் அங்கம் மட்டுமே காணிக்கை. காணிக்கை கொடுப்பதே ஆராதனையாகிவிடாது. “பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை” என்று எபிரெயர் 10:5ல் வாசிக்கிறோம். காயினின் ஆராதனை கர்த்தருடைய வார்த்தையின்படி அமையாததால் அதனைக் கர்த்தர் நிராகரித்தார். ஆபேலின் ஆராதனை கர்த்தரின் வார்த்தையின்படி அமைந்திருந்ததால் அதைக் கர்த்தர் அங்கீகரித்தார். கர்த்தருடைய ஆராதனையில் காணிக்கையும் உள்ளடங்கியிருக்கிறது.

அதற்குப் பிறகு ஆபிரகாமும் கர்த்தருக்கு தசமபாகத்தை அளித்திருப்பதைப் பார்க்கிறோம். (எபிரெயர் 7:2). மெல்கிசேதேக்கு ராஜா மட்டுமல்ல, கர்த்தருடைய ஆசாரியனாகவும் இருந்தான். பழைய ஏற்பாட்டில் தன்னுடைய ஆராதனையை ஆசாரியனை வைத்துச் செய்யக் கர்த்தர் கட்டளையிட்டிருந்தார். ஆசாரியர்கள் இல்லாமல் பழைய ஏற்பாட்டில் ஆராதனை இருக்க முடியாது. ஆகவே, எபிரெயர் 7ல் ஆபிரகாம் ஆராதனையில் ஈடுபட வந்தபோதே கர்த்தருடைய தசம பாகத்தை மெல்கிசேதேக்குக்கு அளித்திருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுகிறோம். ஆசாரியனான மெல்கிசேதேக்கின் வழியிலேயே ஆசாரியருக்கெல்லாம் ஆசாரியரான இயேசு வந்தார் என்பதே இப்பகுதி தரும் போதனை. இங்கே காணிக்கை கர்த்தருடைய ஆராதனையின் ஓர் அங்கமாக இருந்திருப்பதையும், அந்தக் காணிக்கை ஆசாரியன் முன் கர்த்தருக்கு வழங்கப்பட்டிருப்பதையும் கவனிக்கிறோம்.

பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலர்கள் எப்படி ஆராதனை செய்ய வேண்டும்? அதில் காணப்பட வேண்டியவை எவை? என்பதையெல்லாம் கர்த்தர் மோசேக்கு அளித்த கட்டளைகளில் தெளிவாக விளக்கியிருக்கிறார். அந்தக் கட்டளைகள் விளக்கமாக யாத்திராகமத்திலும், லேவியராகமத்திலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தன்னுடைய ஆலயத்தைக் கட்டுவதெப்படி? அந்த ஆலயத்தில் ஆராதனை செய்வதெப்படி? காணிக்கை கொடுப்ப தெப்படி? என்றெல்லாம் கர்த்தர் தெளிவாக அந்நூல்களில் விளக்கியிருக்கிறார். கர்த்தர் இவ்வாறு வெளிப்படுத்தியிருந்த கட்டளைகளை மீறி எந்த இஸ்ரவேலனும் ஆராதனை செய்ய முடியாது. இந்தக் கட்டளைகளை மீறி அந்நிய அக்கினியை கர்த்தருக்கு முன் வழங்கியவர்களைக் கர்த்தர் அழித்திருப்பதைப் பழைய ஏற்பாட்டில் பார்க்கிறோம்.

யாத்திராகமத்திலும், லேவியராகமத்திலும் இருந்து நாம் நான்கு உண்மைகளைக் கற்றுக்கொள்கிறோம் (1) கர்த்தருடைய ஆராதனை அவருடைய ஆலயத்தைச் சார்ந்ததாக இருந்தது. அதாவது, அவருடைய பிரசன்னமிருக்குமிடமான ஆலயத்திலேயே அவர் ஆராதிக்கப்படவேண்டு மென்பது அவருடைய கட்டளையாக இருந்தது. (2) அவருடைய ஊழியர்களான ஆசாரியர்களும், லேவியர்களுமே ஆராதனையை நடத்தும் அதிகாரத்தைக் கொண்டிருந்தனர். (3) சகல காணிக்கைகளும் ஆலயத்திற்கே கொண்டு வரப்பட்டன. (4) காணிக்கைகள் மூலமாக ஆலயத் தேவைகள் மட்டுமல்லாது லேவியர்களின் தேவைகளும் நிறைவேற்றப்பட்டன. இவற்றில் இருந்து ஆராதனையோடு தொடர்புடையதாக கர்த்தருடைய மக்கள் கொடுக்க வேண்டியிருந்த காணிக்கைகள் கர்த்தருடைய பிரசன்னம் இருந்த ஆலயத்திற்கே கொண்டுவரப்பட்டன என்பதைத் தெளிவாக அறிந்து கொள்கிறோம். இது கர்த்தருடைய ஏற்பாடு. இதை மீறி நடக்க பழைய ஏற்பாட்டில் எவருக்கும் உரிமை இருக்கவில்லை. மீறியவர்களைக் கர்த்தர் தண்டித்தார்.

புதிய ஏற்பாட்டில் காணிக்கை

பழைய ஏற்பாட்டில் நாம் இதுவரை பார்த்துள்ள கர்த்தருடைய விதிமுறைகள் புதிய ஏற்பாட்டில் தொடர வேண்டுமா? தமிழ் கிறிஸ்தவர்களில் அநேகர் பழைய ஏற்பாட்டிற்கும் நமக்கும் இன்று தொடர்பில்லை என்று தவறாக எண்ணி வருகிறார்கள். இதற்குக் காரணம் தெளிவான வேத அறிவு இல்லாததுதான். வைரஸ் போல் தமிழினத்தில் பரவியுள்ள “டிஸ்பென்சேஷனலிசம்” பலரை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளது. பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் சேர்ந்ததுதான் நம்மை ஆண்டு வரும் கர்த்தரின் வேதம். கர்த்தர் பழைய ஏற்பாட்டை இல்லாமலாக்கி விடவில்லை. இன்றும் நாம் பழைய ஏற்பாட்டைப் படிக்க வேண்டும். அதன் போதனைகளைக் கைக்கொள்ள வேண்டும். பழைய ஏற்பாட்டில் நாம் பின்பற்றத் தேவை யில்லாதது தகனப்பலிகளும், சர்வாங்கப் பலிகளுந்தான். இயேசு கிறிஸ்து தன்னையே பூரணப் பலியாக சிலுவையில் கொடுத்து கர்த்தரின் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றியிருப்பதால் அப்பலிகளைக் கர்த்தரே அகற்றி யிருக்கிறார். அத்தோடு, இன்றைக்கு இஸ்ரவேல் கர்த்தரின் நாடாக அவரால் நேரடியாக ஆளப்படவில்லை. எருசலேம் ஆலயத்திலிருந்து அவருடைய பிரசன்னமும் என்றோ அகன்றுவிட்டது. இதை எசேக்கியல் தீர்க்கதரிசனத்தில் வாசிக்கிறோம். இன்று அந்த ஆலய ஆராதனையைக் கர்த்தர் நம்மிடம் எதிர்பார்க்கவில்லை. இவற்றைத் தவிர பழைய ஏற்பாட்டில் காணப்படும் பத்துக் கட்டளைகள் உட்பட ஏனைய அநேக போதனைகளையும் நாம் இன்றும் தவறாது பின்பற்ற வேண்டும். கர்த்தர் புதிய ஏற்பாட்டிலிருந்து மட்டுமல்லாமல் பழைய ஏற்பாட்டின் மூலமும் நம்மோடு தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்.

பழைய ஏற்பாட்டில் கர்த்தர் ஏற்படுத்தியுள்ள காணிக்கை வழங்கும் முறை இன்றைக்கு எந்தவகையில் பொருந்தும்? பழைய ஏற்பாட்டில் இருவித காணிக்கை முறைகளைப் பார்க்கிறோம். (1) இஸ்ரவேலர்கள் கர்த்தருக்கு தசம பாகத்தை வழங்கினார்கள். இந்தத் தசம பாகம் லேவியர் களுக்காக வழங்கப்பட்டது. இது தவிர வேறு தசம பாகங்களையும் வருடாந்தரமாகவும், மூன்று வருடங்களுக்கு ஒரு முறையும் வேறு காரணங் களுக்காக ஆலயத்தில்  வழங்கியிருக்கிறார்கள். (2) அடுத்ததாக, தாங்களே தீர்மானித்து கர்த்தருக்காகக் காணிக்கை வழங்கினார்கள். இந்த இரு முறைகளில் பழைய ஏற்பாட்டில் காணிக்கை வழங்கப்பட்டிருக்கிறது. இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் இவை கர்த்தருடைய ஆலயத்தி லேயே வழங்கப்பட்டிருப்பதுதான்.

புதிய ஏற்பாட்டைப் பொறுத்தவரையில் தசம பாகம் வழங்கும் முறை இன்றும் தொடர வேண்டும். சிலர் இது இன்று அவசியமில்லை என்பார்கள். ஆனால், இதன் அவசியத்தைப் புதிய ஏற்பாட்டின் சில பகுதிகள் சுட்டிக் காட்டுகின்றன. (1) தசம பாகம் வழங்கும் முறை நியாயப்பிரமாணம் மோசேக்கு கொடுக்கப்படுவதற்கு முன்பே இருந்திருப்பதால் அது ஆராதனையின் ஒரு பகுதியாக படைப்பில் இருந்தே தொடர்ந்த முறையாக இருக்கிறது. ஆகவே, அது இன்றைக்கும் பொருந்தும். (2) ஆபிரகாம் தசம பாகம் வழங்கியது பற்றி எபிரெயர் நிருபத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. தசம பாகம் என்பது நமக்குச் சொந்தமான அத்தனை சொத்திலும் செலவழிப்பதற்கு முன்பாக பத்திலொன்றைக் கர்த்தருக்கு வழங்குவதாகும். கையில் சம்பளம் கிடைத்தவுடன் செலவுகளைக் கழித்துவிட்டு மிகுதி இருப்பதில் பத்தில் ஒன்றைக் கொடுப்பது திருடுவதற்கு சமமாகும். தசம பாகம் கர்த்தருக்கு சொந்தமானது. நமது காணிக்கைகளில் தசம பாகம் வெறும் ஆரம்பத் தொகை மட்டுமே. தசம பாகம் கொடுப்பது மட்டுமே காணிக்கையாகிவிடாது. காணிக்கைத் தொகை நமது ஆத்தும ஆழத்தில் இருந்து விசுவாசத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டியது. அது தியாகத்தோடு கொடுக்கப்பட வேண்டியது. தசம பாகம் மிக அவசியமானபோதும் அது நாம் கர்த்தருக்குக் கொடுக்க வேண்டிய காணிக்கைகளின் ஒரு பகுதி மட்டுமே என்பதை உணர்வது அவசியம்.

இன்றைக்கு நாம் தசம பாகம் மட்டுமல்லாமல் நாம் மனதில் விரும்பித் தீர்மானிக்கின்ற காணிக்கைகளையும் (Free will offering) கர்த்தருக்கு கொடுக்க வேண்டும். புதிய ஏற்பாட்டுப் போதனையின்படி, சுயமாக நமது மனதில் ஒரு தொகையைத் தீர்மானித்து சுதந்திரமாகவும், உற்சாகமாகவும் வாராவாரம் நாம் கர்த்தருக்கு காணிக்கையாக வழங்க வேண்டும். இதை 2 கொரிந்தியர் 9ம் அதிகாரம் மக்கெதோனியர் காணிக்கை கொடுத்த விதத்தை உதாரணம் காட்டி விளக்குகிறது. அவர்கள் விசனத்தினால் அல்லாமலும், கட்டாயத்தினால் அல்லாமலும், உற்சாகமாய் கர்த்தருக்கு காணிக்கை வழங்கியிருக்கிறார்கள். அதையே நாமும் செய்ய வேண்டும்.

காணிக்கை அளிக்க வேண்டிய இடம்

இதுவரை கர்த்தருக்குக் கொடுக்க வேண்டிய காணிக்கை எது என்று பார்த்தோம். இனி அதை எங்கே கொடுப்பது என்று பார்ப்போம். இங்கு தான் நாம் சிந்திக்க வேண்டிய அவசியமிருக்கிறது. பழைய ஏற்பாட்டில் காணிக்கைகளை ஆராதனையின் பகுதியாக ஆலயத்திற்குக் கொண்டுவர வேண்டியிருந்தது என்று பார்த்தோம். அதற்கு வெளியில் கொடுப்பது கர்த்தருக்கு கொடுத்ததாகாது. இதற்குக் காரணம், (1) கர்த்தர் ஆராதனையை ஏற்படுத்தி காணிக்கை வழங்குவதை அதன் ஒரு பகுதியாக்கினார். (2) ஆராதிக்கிறவர்கள் காணிக்கைகளைக் கர்த்தரின் பிரசன்னம் காணப் படுகின்ற ஆலயத்திற்கே கொண்டு வரவேண்டும் என்ற விதி இருந்தது. (3) அந்தக் காணிக்கைகளை எங்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் கர்த்தரே தீர்மானித்திருந்தார். பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்ற இந்த மூன்று வழிமுறைகளும் புதிய உடன்படிக்கை காலத்தில், புதிய உடன்படிக்கை ஆராதனைமுறையில் இருந்து அகற்றப்படவில்லை. ஆராதனை செய்யும் இடமும், ஆராதனை வழிமுறைகளுந்தான் மாற்றப்பட்டிருக்கின்றனவே தவிர மேலே நாம் பார்த்த மூன்று உண்மைகளும் இன்றும் பொருந்தும்.

முதலில் கர்த்தரின் பிரசன்னம் இன்று எங்கிருக்கிறது என்று பார்ப்போம். இரண்டு மூன்று விசுவாசிகள் கூடுகிற இடத்திலெல்லாம் அவர் இருக்கிறார் என்று வெகு சுலபமாக சிலர் பதிலளிப்பார்கள். ஆனால், மத்தேயு 18:20ல் இருந்து அவர்கள் இதற்கு ஆதாரம் காட்டினாலும் அந்தப் பகுதியில் தரப்பட்டுள்ள போதனையை அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.  மத்தேயு 18:20, கர்த்தர் சிறப்பாக பிரசன்னமாக இருப்பது அவருடைய சபையில்தான் என்பதை விளக்குகிறது. இந்தப் பகுதியை முறையாக விளங்கிக்கொள்ளுவது அவசியம். இதில் இயேசு உள்ளூர் திருச்சபை அங்கத்தவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது எப்படி என்று விளக்குகிறார். 17ம் வசனத்தில் இரண்டு முறை “சபை” என்ற வார்த்தை உள்ளூர் திருச்சபையைக் குறித்துப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கர்த்தரின் பெயரில் சபைகூடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்போது கர்த்தரே முன்வந்து அதை அங்கீகரிக்கிறார். இது சபையின் அதி உயர்ந்த விசேஷ தன்மையையும், அதன் அதிகாரத்தையும் விளக்குகிறது. “இரண்டு மூன்று பேர்” என்ற பதங்கள் சபையைக் குறிக்கின்றன. அதாவது, சபை சிறியதாக இருந்தாலும் பெரிதாக இருந்தாலும் கர்த்தரின் அதிகாரமுள்ள விசேட பிரசன்னம் அது கூடிவரும்போது இருக்கிறது என்பது இந்த வசனத்திற்குப் பொருள். பழைய ஏற்பாட்டில் கர்த்தரின் பிரசன்னம் எருசலேம் ஆலயத்தில் இருந்தது. இன்றைக்கு நாம் ஆராதிக்க ஆலயத்தையோ அல்லது விசேட கட்டங்களையோ கர்த்தர் கட்டச்சொல்லவில்லை. வேத அடிப்படையில் இரட்சிக்கப்பட்ட ஆத்துமாக்களை மட்டும் கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ள முறையான சபைகளே இன்றைக்கு கர்த்தரின் பிரசன்னம் காணப்படும் ஆராதனை ஸ்தலங்கள். வேதம் சபையென்று குறிப்பிடுவது ஓரிடத்தில் ஆராதனைக்கு கூடிவரும் சபையாரையே. அவ்வாறு கூடிவருவதற்கு தம்மை ஒப்புக்கொடுத்த இரட்சிக்கப்பட்ட ஆத்துமாக்களின் மத்தியிலேயே கர்த்த ரின் பிரசன்னம் இருக்கிறது.

விசுவாசத்திற்குரிய முக்கியமான செயல்களையெல்லாம் கர்த்தர் சபை கூடிவந்து செய்யும்படியே பணித்திருக்கிறார். உதாரணமாக தனி ஜெபங்கள் நமது விசுவாச வாழ்க்கைக்கு அவசியமானாலும், கர்த்தருக்குரிய ஆராதனையை சபைகூடிவந்தே கொடுக்க வேண்டுமென்று கர்த்தர் கட்டளையிட்டு சபையையும், ஓய்வு நாளையும் ஏற்படுத்தியிருக்கிறார். விசுவாசிகளைத் திருத்தி, பரிசுத்தப்படுத்த அவசியமான ஒழுங்கு நடவடிக்கையை எடுக்கும் அதிகாரத்தைக் கர்த்தர் சபைக்கே அளித்திருக்கிறார் (மத்தேயு 18, 1 கொரிந்தியர் 5). சபை கூடிவரும்போது மட்டுமே திருவிருந்து அளிக்கப்பட வேண்டும் என்பதும் கர்த்தரின் கட்டளை (1 கொரிந்தியர் 11). சபை மட்டுமே திருமுழுக்கைக் கொடுக்கும் அதிகாரத்தையும் கொண்டிருக்கிறது (மத்தேயு 18). கர்த்தர் ஊழியக்காரர்களை சபைக்கே அளிக்கிறார். சபையிலேயே அவர்களை இனங்காண முடியும் (எபேசியர் 4:11-13). ஊழியக்காரர்களை சபையில் மட்டுமே இனங்காண முடியும் என்பதால்தான் எபேசு சபைப் போதகராக இருந்த தீமோத்தேயுவுக்கு ஊழியக்காரர்களை இனங்கண்டுகொள்ள அவசியமான இலக்கணங்களை 1 தீமோத்தேயு 3லும், தீத்துவிலும் பவுல் விளக்கியிருக்கிறார். அந்த நிருபங்கள் சபையில் வாசிக்கப்படுவதற்காக சபைக்கு எழுதப்பட்ட நிருபங்கள். சபை மட்டுமே சுவிசேஷத்தை அறிவித்து சபை நிறுவும் பணியைச் செய்ய ஊழியர்களை அனுப்பும் அதிகாரமுள்ள கர்த்தரின் அமைப்பு (அப்போஸ். 13). இதிலிருந்து சபைகூடி வரும்போது கர்த்தரின் அதிகார பூர்வமான பிரசன்னம் அங்கு மட்டுமே காணப்படுவதற்கான காரணத்தைப் புரிந்து கொள்வது நமக்குக் கடினமாக இருக்காது. இத்தனைப் பெருமைகளைக் கொண்டிருக்கும் கர்த்தரின் சரீரமான சபை மட்டுமே இந்த உலகில் அவருடைய பிரசன்னத்தைக் கொண்டிருக்கும் தெய்வீக அமைப்பு. ஒரு சபை சிறியதோ, பெரியதோ அதுவல்ல முக்கியம். அது வேத இலக்கணங்களைக் கொண்டமைந்து, வேத அடிப்படையில் இயங்கி வருமானால் அது கர்த்தரின் பிரசன்னத்தைக் கொண்டிருக்கும் தெய்வீக அமைப்பு.

சபையே இவ்வாறு கர்த்தரின் பிரசன்னத்தைக் கொண்டிருப்பதால் தசம பாகம் மற்றும் காணிக்கைகள் அங்கேயே கொடுக்கப்பட வேண்டும். இதனாலேயே 1 கொரிந்தியர் 16ம் அதிகாரத்தில் பவுல் அப்போஸ்தலன் தர்மபணத்தைப் பற்றி கலாத்திய நாட்டுச் சபைகளுக்கு கொடுத்த ஆலோசனையைக் கொரிந்து சபையும் பின்பற்ற வேண்டும் என்கிறார். அவ்வாலோசனை என்ன? “நான் வந்திருக்கும்போது பணஞ்சேர்க்குதல் இராதபடிக்கு உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்து வைக்கக்கடவன்” என்கிறார் பவுல். இங்கே இரண்டு உண்மைகளை பவுல் விளக்குகிறார். முதலாவது, சபையைச் சார்ந்த ஒவ்வொரு அங்கத்தவரும் தன்னுடைய வருமானத்திற்கு ஏற்றமுறையில் ஒரு தொகையை காணிக்கையாக சேர்த்து வைக்க வேண்டும். இரண்டாவதாக, வாரத்தின் முதல் நாளான ஓய்வு நாளில் சபைகூடிவரும்போது அந்தக் காணிக்கையை சபைக்குக் கொடுக்க வேண்டும். பவுல் கொரிந்துக்கு வருகிறபோது ஓய்வு நாளில் அவரும் சபையிலேயே ஆத்துமாக்களை சந்திக்கப் போகிறார், கர்த்தரை ஆராதிக்கப் போகிறார். அன்றைய தினமே ஆராதனையின் ஒரு பகுதியாக ஆத்துமாக்கள் காணிக்கைகளையும் கர்த்தருக்கு வழங்கு வார்கள். இதன் மூலம் ஆத்துமாக்கள் தசம பாகம் மற்றும் காணிக்கைகள் வழங்க வேண்டிய ஒரே இடம் உலகமெல்லாம் கர்த்தர் நிறுவியுள்ள உள்ளூர் திருச்சபைகள் என்பதை நாம் சந்தேகமில்லாமல் அறிந்துகொள்ள முடிகிறது.

அப்போஸ்தலர் நடபடிகளில் ஆதிசபை எவ்வாறாக நிறுவப்பட்டது என்பதை வாசிக்கிறோம். அங்கே அப்போஸ்தலர்களின் தலைமையில் சபைகள் அமைக்கப்பட்டு இயங்கி வந்ததைப் பார்க்கிறோம். அக்காலத்தில் கிறிஸ்துவை விசுவாசித்த அனைவரும் சபைகளிலேயே தங்களை இணைத் துக் கொண்டிருந்தார்கள். விசுவாசிகள் என்று தம்மை அழைத்துக் கொண்டு அந்த சபைகளுக்கு வெளியில் எவராவது இருந்திருந்தால் அவர்களுக்கும் அப்போஸ்தலர்களுக்கும் எந்தத் தொடர்பும் இருந்திருக்காது. புதிய ஏற்பாட்டு நிருபங்களும் சபைகளுக்கே எழுதப்பட்டிருந்தன. சபைகளில் தங்களை இணைத்துக் கொண்டிருந்தவர்களுக்கே அன்றைக்கு வேத வார்த்தைகள் கிடைத்தன. அத்தோடு விசுவாசிகள் சபைகளில் இருந்து சபைகளுக்கு காணிக்கைகளை அளித்து சபைகள் மூலமாகவே சகல ஊழியங்களிலும் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள். கர்த்தரின் திருச்சபைக்கும் காணிக்கைக்கும் இவ்வாறாக பிரிக்க முடியாத பெருந்தொடர்பிருப்பதை விசுவாசிகள் உணர்வது அவசியம்.

இன்றைய ஊழியங்களின் நிலை

கர்த்தரின் வேத போதனைகளின்படி அவருடைய விசேட பிரசன்னத்தை நாம் காணமுடிகின்ற அவருடைய சரீரமான திருசபைக்கே தசம பாகத்தையும், காணிக்கைகளையும் அளிக்க வேண்டும் என்று பார்த்தோம். அப்படியிருக்க திருச்சபைகள் என்று அழைக்கப்படுகின்ற அனைத்து அமைப்பு களையும் மெய்த்திருச்சபைகள் என்று அழைக்க முடியுமா? என்று எவராது நிச்சயம் கேட்டுவிடலாம். உண்மையில் இன்று பெரும்பாலான பாரம்பரிய சபைகள் (சீ. எஸ். ஐ, மெத்தடிஸ்டு, பிரெஸ்பிடீரியன், லூதரன், பாப்திஸ்து சபைகள்) கர்த்தரின் வேதத்தை நிராகரித்து பாரம்பரியத்துக்கும், பண்பாட் டுக்கும் இடம்கொடுத்து ஆத்தும ஈடேற்றத்துக்கு இடமில்லாத சாத்தானின் கூடாரங்களாக மாறிவிட்டன. இரட்சிப்புக்கு இன்று அங்கே வழி இல்லை. அவை சாதிப்பித்தும், சம்பிரதாயமும் தலைவிரித்தாடும் பிண ஊழியக் கூடங்களாக இருக்கின்றன. இத்தகைய பாரம்பரிய சபைகளில் தொடர்ந் திருப்பது திருமண வைபவத்துக்கு கட்டடத்தையும், மரண சடங்குகள் நடத்துவதற்கு ஒரு பிசப்பையோ, ரெவரண்டையோ மட்டுமே கிடைக்க வழி செய்யும். இந்த அமைப்புகளுக்கெல்லாம் தசம பாகத்தையும், காணிக்கைகளையும் கொடுப்பதால் இரட்சிக்கப்பட்ட ஆத்துமாக்கள் கர்த்த ரின் தண்டனையை மட்டுமே அநுபவிக்க முடியும். கர்த்தருக்குரிய பணத்தை அவருடைய வேதத்தை நிராகரித்து நடப்பவர்கள் கையில் கொடுப்பதை கர்த்தர் எப்போதுமே வெறுக்கிறார்.

சபை ஊழியங்களில் ஈடுபடாது தனி மனிதனை முதன்மைப்படுத்தி நடந்து வரும், தினகரனின் இயேசு அழைக்கிறார், மோகன் சி. லாசரஸ், சாம் ஜெபத்துரை, எமில் ஜெபசிங் (விஸ்வவானி) போன்றவர்களின் ஊழியங்களுக்கும் தமிழினத்தில் குறைவில்லை. இவர்கள் கிறிஸ்தவர்களிடம் பணம் பண்ணுவதில் முன்னணியில் இருக்கிறார்கள். இவர்கள் வாங்கும் பணம் கொஞ்ச நஞ்சமல்ல. இவர்களுடைய கூட்டங்களெல்லாம் பணம் சேர்ப்பதையே பெருநோக்கமாகக் கொண்டு நடத்தப்படுகின்றன. கர்த்தரின் பெயரை இவர்கள் கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவதால் கர்த்தருடைய ஊழியக்காரர்களைப் பற்றித் தவறாகப் பேசக்கூடாதென்ற பயத்தில் பணத்தை வாரி வழங்கிவிட்டு மனதைத் தேற்றிக்கொள்ளுகிற ஏமாளிகள் நம்மத்தியில் அதிகம். இவர்கள் வாங்கும் பணத்தின் கணக்கு இவர்க ளுக்கே தெரியுமோ தெரியாது. இவர்கள் எவருக்கும் கணக்குக் கொடுப்பதே யில்லை. இவர்கள் யாருக்கும் கட்டுப்பட்டவர்களுமல்ல. இந்துக் கோயில்களுக்குக்கூட கணக்குப் பார்க்க தேவஸ்தான நிர்வாகிகள் இருக்கிறார்கள். இந்த இயேசு பக்தர்கள் எவரையும் தங்களுக்கு நிர்வாகிகளாக வைப்பதில்லை. இவர்கள் தங்களுடைய சொந்தக் குடும்பத்தை மட்டுமே பண விஷயத்தில் நம்பி நடந்துகொள்ளுவார்கள்.

தனி ஊழியங்களாக தனி மனிதர்களால் காளான்கள் போல் நாள் தோறும் முளைத்து பட்டிதொட்டியெல்லாம் இருந்து வரும் ஊழியங்களைப் பார்த்தால் இங்கே தனி மனிதனும் அவனுடைய குடும்பமும் மட்டுமே பேங்க் அக்கவுன்ட்டுக்கும், பணப்பெட்டிக்கும் பொறுப்பாக இருப்பார்கள். கொடுக்கப்படும் எந்தப் பைசாவுக்கும் இவர்களிடம் இருந்து எவருக்கும் கணக்குக் கிடைக்காது. கேட்டுவிட்டால், “கர்த்தருடைய பணத் துக்கு கணக்குக் கேட்கக் கூடாது. வலது கை கொடுப்பது இடது கைக்குக் தெரியக்கூடாதென்று” இனிப்பாக பேசி ஏமாற்றி வருகிறார்கள். இந்த சிற்றூ ழியங்களை நடத்துகிறவர்கள் தங்களுக்கு வருமானம் தரும் ஒரு வேலை யாகவே கருதி அதை நடத்தி வருகிறார்கள். இவர்கள் கையில் போய்ச் சேரும் எந்தப் பணமும் ஆற்றில் போட்ட வெல்லத்தைப் போலத்தான் போய் முடியும்.

இவற்றையெல்லாம்விட நூற்றுக்கணக்கில் இருக்கும் ஸ்தாபனங்களுக்கும் குறைவில்லை. தமிழ் கிறிஸ்தவர்கள் தங்களை ஏமாற்றிக்கொண்டு, இவர்களி டமும் ஏமாந்து காணிக்கை கொடுத்துவரும் ஊழியங்கள் இப்படிப் பட்டவைதான். இவையெல்லாம் கர்த்தரின் ஊழியங்களா? இவர்கள் சம்பாதிக்கும் பணத்துக்கு எங்கே கணக்குக் காட்டி எவ்வளவு வருமானவரி கட்டுகிறார்கள்? வருமான வரி விலக்குப் பத்திரம் பெறக்கூட கணக்குக் காட்ட வேண்டும் என்று விதி இருக்கிறது. பணம் கொடுப்பவர்களுக்கு ஒரு ரசீதோ அல்லது வருடாந்தர கணக்கோ கொடுக்காதவர்களுக்கு பணம் கொடுக்கும்படி கர்த்தர் எங்கே சொல்லியிருக்கிறார். நாம் கொடுக்கிற பணம் அவருடைய வார்த்தையின் அடிப்படையில் நடக்கும் ஊழியத்துக்கு மட்டுமே போய்ச் சேர வேண்டுமென்று கர்த்தர் சொல்லியிருக்க கண்மூடித் தனமாக நாம் கண்டவர்களுக்கு பணத்தைக் கொடுப்பது எப்படிச் சரியாகும்? அது கர்த்தருக்குப் போகிறது என்று நம்மை நாமே சமாதானப் படுத்திக் கொள்வதை கர்த்தர் எப்படி விரும்புவார்?

எது மெய்ச்சபை?

காணிக்கையை முறையாகக் கொடுக்க என்ன செய்ய வேண்டும்? என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு முதலில் நல்ல சபைகளை நாம் அடையாளங் கண்டு அந்த சபைகளுக்கு நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். அந்த சபைகளில் இருந்து ஆராதனை செய்து கர்த்தருக்கு காணிக்கை கொடுக்க வேண்டும். கர்த்தர் காணிக்கையைவிட முதலில் நாம் நல்ல உள்ளூர் சபைகளில் இருந்து ஆராதித்து வளர்வதையே விரும்புகிறார்; அதுவே அவரின் கட்டளையுமாகும். அப்படியானால் மெய்த்திருச்சபைகளை எப்படி அடையாளம் காணுவது என்று நீங்கள் கேட்கலாம். உங்கள் கேள்விக்கு வேதம் தெளிவாக பதில் தருகிறது. ஆனால், அதைக் கேட்டு நடக்கும் இதயமற்றவர்களாகத்தான் நம்மில் பலர் தொடர்ந்தும் இருந்து வருகிறோம். வேத அறிவின்றியும், சிந்தித்து செயல்படும் திறனின்றும், மனித பயத்தால் வாழ்ந்தும் செய்ய வேண்டியதை செய்யத் தவறிவிடுகிறார்கள் அநேகர். எந்தக் காரியத்தையும் பொறுப்பேற்று செய்து முடிக்கவும் நம்மில் பலருக்கு இதயமில்லை இன்று. இனி நாம் விளக்கப்போவதையாவது சிலர் சிந்தித்துப் பார்த்து செயல்பட்டால் கர்த்தர் மனம் நிச்சயம் மகிழும். வேதம் இனங்காட்டும் மெய்திருச்சபைகளை எப்படிக் கண்டுபிடிப்பது? கீழ்வரும் அம்சங்கள் காணப்படுகிற சபைகள் மட்டுமே மெய்ச்சபைகளாக இருக்க முடியும் என்பது புதிய ஏற்பாடு தெளிவாக விளக்கும் சத்தியம்.

(1) அத்தகைய சபைகளில் வேத அதிகாரத்துக்கு உயர்வான இடங்கொடுக் கப்பட்டிருக்கும். அங்கே பிரசங்கங்களுக்கும், போதனைகளுக்கும் மட்டுமே உயர்ந்த இடம் இருக்கும். வெறும் உளரல்களுக்கும், தனிமனித சாட்சியங்களுக்கும், இசை நிகழ்ச்சிகளுக்கும் அங்கே இடமிருக்காது. ஆராதனை தேவ பயத்துடன் நடத்தப்படும். இரட்சிப்புக்குரிய சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதும், ஆத்தும ஈடேற்றத்துக்கான சத்துள்ள பிரசங்கங்களையும், போதனைகளையும் அளிப்பதும் மட்டுமே இத்தகைய சபைகளின் குறிக்கோளாக இருக்கும். எந்தக் காரியத்திலும் இறுதி முடிவெடுக்க இச்சபைகள் வேதத்தையே நாடி வரும். வேதம் சொல்லுகிறபடி செய்வோம்; அது சொல்லாததைக் கனவிலும் எண்ணமாட்டோம் என்ற வைராக்கியத்தோடு செயல்படுகிறதாக இச்சபைகள் இருக்கும்.

(2) இச்சபைகள் இரட்சிக்கப்பட்டவர்களை மட்டுமே கொண்டமைந்த தெளிவான அங்கத்துவ அமைப்பைக் கொண்டிருக்கும். அவ்வாறு அமைக் கப்பட்ட அங்கத்துவமும், அச்சபை மூப்பர்களும் தாம் கட்டுப்பட்டு நடக்கக்கூடியதாக ஒரு விசுவாச அறிக்கையையும், சபை நிர்வாக விதி முறைகளை விளக்கும் சபை சட்ட விதிகளையும் கொண்டிருப்பார்கள். இந்தச் சபைகளில் இணையும் எந்த ஆத்துமாவும் இவற்றை விளங்கி ஏற்று இவற்றிற்கு கட்டுப்பட்டு நடக்கும்படியாக எதிர்பார்க்கப்படுவார்கள். இத்தகைய சபைகளில் இவற்றை மீறிப் போதகர்களோ அல்லது அங்கத்த வர்களோ நடக்க முடியாது.

(3) ஆத்தும ஆதாயமும், ஆத்தும ஈடேற்றமும் மட்டுமே இந்தச் சபைகளின் இறுதி இலட்சியமாக இருக்கும். ஆத்துமாக்களுக்கு நல்ல தெளிவான வேதபோதனைகள் மட்டுமல்லாது, போதகக் கண்கானிப்பும் தவறாது கிடைக்கும். போதகர்கள் ஆடுகளைவிட்டு தள்ளி நிற்காமல் அவர்களுக்கு அருகிலேயே இருப்பார்கள். எந்த ஆத்துமாவும் தேடிப்போய் தன் ஆத்தும தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளக்கூடிய வசதிகளை இந்த சபைப் போதகர்கள் ஏற்படுத்தித் தந்திருப்பார்கள்.

(4) வேதபூர்வமான சபை அமைப்பை இச்சபைகள் கொண்டிருக்கும். வேத அடிப்படையில் ஆராயப்பட்டு நியமிக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட மூப்பர்களை இச்சபைகளில் காணலாம். அத்தோடு உதவிக்காரர்களும் இங்கிருப்பார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட மூப்பர்கள் இல்லாத நிலையில் ஒரேயொரு போதகர் மட்டுமே இத்தகைய சபை ஒன்றில் பணிபுரிவா ரானால் அவர் சபைப் பணவிடயங்களில் தனக்கு பெயர் கெட்டுவிடக் கூடாதென்பதற்காக உதவிக்காரர்களை அல்லது முதிர்ந்த சபை அங்கத்தவர்களில் சிலரைப் பணவிஷயங்களில் பொறுப்போடு நடக்க சபை அனுமதியுடன் நியமித்திருப்பார். அவருடைய பெயரில் நிச்சயம் சபை பேங்க் அக்கவுன்ட் இருக்காது. சபை ஆத்துமாக்களின் தசமபாகமும், காணிக்கைகளும் பொறுப்போடு அதற்குரிய பொறுப்பாளிகளால் சேர்க்கப்பட்டு சபை அங்கத்தவர் கூட்டங்களில் விபரமாக சல்லிக்காசு தவறாமல் கணக்குக் கொடுக்கப்படும். சபை மக்களுக்கும் அந்தக் கணக்கு விபரங்கள் தெரிவிக்கப்படும். போதகரின் சம்பளம் முதற்கொண்டு அங்கத்தவர்களுக்கு விபரங்கள் தெரியக்கூடிய விதத்தில் நிர்வாகம் அமைந்திருக்கும். யார், யார் அங்கே காணிக்கை கொடுக்கிறார்களோ அவர்களுக்குத் தெரியாத எந்தக் கணக்கு விபரமும் இருக்காது. பெரிய செலவுகள் எல்லாம் சபை அங்கத்தவர்கள் கூட்டங்களிலேயே முடிவு செய்யப்பட்டு சபை அதிகாரி களான மூப்பர்களாலும், உதவிக்காரர்களாலும் ஊழியத்தில் பயன்படுத்தப் படும்.

இந்த நான்கு அடிப்படை இலக்கணங்களையும் ஒரு சபை கொண்டிராமல் இருந்தால் அதை சபையென்று அழைப்பதற்கு வேதம் நமக்கு அதிகாரம் தரவில்லை. ஒரு மெய்ச்சபை ஒருபோதும் இவ்வுலகில் பூரண மானதாகக் காணப்படாது. அதில் பல குறைபாடுகளும் காணப்படும். ஆனால், அவற்றில் நாம் மேலே பார்த்த நான்கு அம்சங்களையும் தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கும். இந்த இலக்கணங்களைக் கிறிஸ்துவே நமக்குத் தந்திருக்கிறார். வெளிப்படுத்தல் விசேஷத்தின் முதல் மூன்று அதிகாரங்களிலும் நாம் வாசிக்கின்ற ஏழு சபைகளும் சபைகள்தான். அவற் றில் குறைபாடுகள் இல்லாமலில்லை. ஆனால், இந்த நான்கு அம்சங்களும் அவற்றில் நிச்சயம் இருந்தன. இவை இல்லாமலிருந்திருந்தால் சபை அமைப்பை உருவாக்கி சபைகள் எப்படி இயங்க வேண்டும் என்று புதிய ஏற்பாட்டில் தெளிவாக விளக்கியிருக்கும் கர்த்தர் அவைகளை சபைகள் என்று அழைத்துப் பேசியிருக்கமாட்டார்.

இந்த நான்கு அடையாளங்களையும் காணமுடியாத சபைகளாக தங்களை அறிவித்துக்கொள்ளும் அமைப்புகளில் இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் இணைந்து வாழ்ந்து தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை அழித்துக் கொள்ளக்கூடாது. இந்த நான்கு அம்சங்களும் இருக்கின்றனவா என்பதை ஆராய்ந்து பார்த்துவிட்டே எந்த அமைப்புகளிலும் இரட்சிப் படைந்த ஆத்துமாக்கள் இணைய வேண்டும். இந்த அம்சங்கள் காணப் படாத எந்த சபைகளுக்கும் எவரும் காணிக்கை கொடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். வேத அடிப்படையில் நடந்து வராத அமைப்புகளுக்கு பணம் கொடுப்பதால் நமது பாவம் மட்டுமே அதிகரிக்கும். வேத அடிப்படையில் நடந்துவராத அமைப்புகளுக்கு போய்ச் சேரும் பணம் கர்த்தரின் பணிகளுக்காக அவருடைய சித்தப்படி செலவழிக்கப்படுவதில்லை. அவர்கள் அப்பணத்தை விரயமாக்கி கர்த்தரின் பணிக்குத் தடையாகவே இருந்துவிடுகிறார்கள். எத்தனை சீ. எஸ். ஐ சபைகள் தினகரனின் ஊழியத்துக்கு பணத்தை வாரிவழங்கி பல தவறுகளுக்கு உடன் போய்க்கொண்டிருக்கின்றன. எத்தனை ஊழியக்காரர்கள் சபை மக்களுக்குக் கணக்குக் காட்டாமல் காணிக்கைப் பணத்தை ஏப்பம்விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இதை வாசிக்கும் சிலர், தவறு அவர்களுடையதுதான், என் பணி கர்த்தருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுப்பது, அவர்கள் செய்யும் தவறுக்கு அவர்களே பொறுப்பாளி, நாங்களல்ல என்பார்கள். அதுதான் தவறு. நீங்கள் சிந்தித்து ஆராயாமல் இந்தத் தவறான அமைப்புகளுக்குக் காணிக்கை கொடுப்பதால் அதைக் கொடுக்கும் நீங்கள் கர்த்தருக்கு நிச்சயம் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். கர்த்தருக்குக் கொடுக்க வேண்டியதை, பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட்டு தவறான அமைப்புக்குக் கொடுக்கும் உங்களைக் கர்த்தர் சும்மாவிட்டுவிடமாட்டார். இதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் இரட்சிக்கப்பட்டவராக இருந்தால் இந்த அமைப்புகளுக்கும், சபைகளுக்கும் காணிக்கை கொடுப்பதை நீங்கள் உடனடியாக நிறுத்திவிட்டு மெய்ச்சபைகளை நாடிப்போங்கள். மேலே நாம் பார்த்த நான்கு அம்சங்கள் இருக்கும் சபைகளைத் தேடிப்போய் உங்கள் ஆத்தும விருத்திக்கு வழிதேடிக் கொள்ளுங்கள்.

கிறிஸ்தவ ஸ்தாபனங்களுக்கு காணிக்கை அனுப்பலாமா?

நல்ல சபைகளில் நாம் இணைந்து வாழ்கிறபோது, அந்த சபை நமது காணிக்கைகளைப் பயன்படுத்தி தனது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு அதற்குமேலாக வேதபூர்வமாக நடந்து கணக்குக் காட்டி வரும் நியாயமான ஸ்தாபனங்களுக்கு உதவி செய்யலாம். அதாவது, சபை செய்ய வேண்டிய வேலைகளை செய்யாமல் வேறு நல்ல பணிகளைச் செய்யும் ஸ்தாபனங்களாக நாம் உதவும் ஸ்தாபனங்கள் இருக்க வேண்டும். உதாரண மாக வேதப் புத்தகத்தை வெளியிடுவது, விநியோகிப்பது மற்றும் பெற்றொர்களில்லாத குழந்தைகளைப் பராமரிப்பது போன்ற பணிகள். கண்களை மூடிக்கொண்டு எல்லோருக்கும் காணிக்கை அனுப்புவது பெரும்பாவம். மெய்ச் சபைகள் நல்ல போதகர்களையும், சபை அதிகாரிகளையும் கொண்டிருக்கும்போது அவர்கள் எந்த அமைப்பையும் தெளிவாக ஆராய்ந்து பார்த்தே காணிக்கைகளை அனுப்புவார்கள்.

இதைத் தவிர நாம் எந்த ஸ்தாபனங்களுக்கும் தனிப்பட்டவிதத்தில் பணம் அனுப்பக்கூடாது. கர்த்தர் தன்னுடைய பணிகளை நிறைவேற திருச்சபையைத் தான் ஏற்படுத்தியிருக்கிறாரே தவிர ஸ்தாபனங்களை அல்ல. நாம் சார்ந்திருக்கும் நல்ல சபைகளுக்கு மட்டுமே காணிக்கைகளைக் கொடுக்க வேண்டும். சிந்தித்து செயல்படாமல் பணம் அனுப்புவதால்தான் இன்று தான்தோன்றித்தனமாக நடக்கும் அநேக போலி ஊழியங்களை நாம் உருவாக்கிவிட்டிருக்கிறோம். இவர்களைக் கர்த்தர் உருவாக்கவில்லை. நம்முடைய அறியாமையும், முட்டாள்தனமான செயல்களுமே உருவாக்கி விட்டிருக்கின்றன. எந்தவகையில் நமது நாட்டு அரசியல் மோசடிகளுக்கு நாமே காரணமாக இருக்கிறோமோ அதேபோல ஊழிய அவலங்களுக்கும் நாமே காரணமாக இருக்கிறோம். இரட்சிக்கப்பட்ட எல்லாத் தமிழ் கிறிஸ்தவர்களும் இந்தக் காரியத்தில் மனந்திரும்புவது என்று தீர்மானித்து விட்டால் ஊழிய ஊழல்களுக்கு நிச்சயம் முடிவு கட்டிவிடலாம்.

3 thoughts on “எங்கே, எப்படி, யாருக்குக் கொடுப்பது காணிக்கை?

  1. அல்லேலூயா ஆராதனையே காணிக்கை நெற்றியடி அடித்துள்ளீர்கள் நன்றி

    Like

    • நன்றி! இன்று காலையில்தான் செய்தியில் கவனித்தேன். என் நாட்டில் ஒரு பிரசங்கி (பிரயன் தமாக்கி) லொக்டவுனுக்குத் தப்பி இன்னொரு ஊரில் போயிருந்து, அங்கிருந்து இணையதளத்தின் மூலம் தன் சபையாரைத் தவறாமல் இணையதள வங்கிக் கணக்கைப் பயன்படுத்தியாவது ஓய்வுநாளில் காணிக்கை கொடுக்க வற்புறுத்தியிருக்கிறார். காணிக்கை கொடுப்பதை இவர்கள் சுவிசேஷ செய்தியாக்கியிருக்கிறார்கள். உழைத்துப் பணம் சம்பாதிக்க சோம்பேரித்தனமுள்ளவர்கள் மட்டுமே சுவிசேஷத்தைப் பயன்படுத்திப் பணம் சேர்க்கப் பார்ப்பார்கள். நம்மினத்தில் இந்த விஷப்பூச்சிகள் கொரோனாவைவிட ஏராளம்; மோசமானவையுங்கூட.

      Like

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s