வேத போதனைகளை எந்தளவுக்கு பலர் தப்பாக விளங்கிக் கொள்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணத்தைத் தரவிரும்புகிறேன். அநேக பாப்திஸ்து சபைகளிலும், சகோதரத்துவ சபைகளிலும் ஒரு போதகர் அல்லது மூப்பர் மட்டுமே சபைத் தலைவனாக இருந்து, எல்லோரையும் அதிகாரம் செலுத்தி வருவதை தமிழினத்துக் கிறிஸ்தவத்தில் எங்கும் காணலாம். அத்தோடு இந்த உள்ளூர் சபைகள் அத்தனையும் எங்கள் மீது எவரும் ஆட்சி செலுத்தக்கூடாது, நாங்கள் “சுயாதீன சபைகள்” என்ற கோரஸைப் பாடிக்கொண்டு தனக்குத் தானே இராஜாவாக இருந்து வருகின்றன. இத்தகைய எண்ணப் போக்கில் என்ன தவறு இருக்கிறது என்பதை எண்ணிப் பார்ப்பது அவசியம்.
கர்த்தரின் வேதம் ஒவ்வொரு திருச்சபையும் தன்னைத்தானே ஆளூம் வசதிகளோடு இருக்கும்படி அறிவுறுத்துகிறது. அதாவது, வேதமுறைப்படி அமைந்த உள்ளூர் திருச்சபையில் ஒன்றுக்கு மேற்பட்ட போதகர்களும், உதவியாளர்களும் இருந்து திருச்சபை ஆளப்பட வேண்டும் என்பது இயேசு ஏற்படுத்தியிருக்கும் வழிமுறை. இதன்படி ஒரு சபையின் போதகர்களும், உதவியாளர்களும், அங்கத்தவர்களும் ஒருவருக்கொருவர் தங்களை ஒப்புக்கொடுத்து தங்களைக் கண்காணித்து வளர வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். பல போதகர்கள் அல்லது மூப்பர்கள் ஒரு சபையில் இருக்கும்படி கர்த்தர் எதிர்பார்ப்பதற்குக் காரணம் ஒரே போதகர் தானும் தவறு செய்து சபையையும் கெடுத்துவிடாமல் இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளத்தான். பல போதகர்கள் இருக்கும்போது அவர்கள் ஒருவருக்கொரு வர் தங்களை ஒப்புக்கொடுத்து இருதயங்களைக் காத்துக்கொள்ள முடியும். அவர்கள் ஒருவருக்கொருவர் accountable ஆக இருக்க வேண்டும். அதாவது ஒருவருக்கொருவர் கணக்குக்கொடுக்க வேண்டும். அப்படி அவர்கள் தங்கள் வாழ்க்கைக்கும், ஊழியத்துக்கும் ஒருவருக்கொருவர் கணக்குக் கொடுத்து நடந்துகொள்கிறபோதுதான் சபையாருக்கு அவர்கள் வேதத்தைப் போதித்து வழிநடத்தமுடியும்; சபையார் வேதபோதனைகளுக்குக் கட்டுப்படும்படி எதிர்பார்க்க முடியும். போதகர்கள் பொறுப்புணர்வோடு மற்றவர்களுக்குக் கணக்குக் கொடுத்து வாழ்ந்து சபையாருக்கு உதாரண புருஷர்களாக இருக்கும்போது எந்த சபை மக்களாவது அவர்களுடைய போதனைகளைப் பின்பற்றி நடக்காமல் இருப்பார்களா?
ஓர் உள்ளூர் சபையில் ஒருவருக்கொருவர், போதகர்களில் இருந்து அங்கத்தவர்கள்வரை கணக்குக் கொடுத்து நடக்கும் கடமையை கர்த்தர் நியமித்திருக்கும்போது “சுயாதீனம்” என்ற பெயரில் எதேச்சாதிகாரமாக நடந்துகொள்ள போதகர்களுக்கோ அல்லது அங்கத்தவர்களுக்கோ உரிமை இல்லை. எல்லோருமே, வேதத்திற்கும், கர்த்தருக்கும், ஒருவருக்கொருவரும் கட்டுப்பட்டு கணக்குக் கொடுத்து நடக்க வேண்டும். ஆகவே, மெய்யான உள்ளூர்சபை சுயாதீனத்தில் இது அடங்கியிருப்பதைப் பலர் உணராது போகிறார்கள். உண்மையில் கர்த்தருடைய சிருஷ்டியில் எவரும் தனக்குத் தானே இராஜாவாக இருப்பதைக் கர்த்தர் விரும்பவில்லை. அதற்குப் பெயர் “சுயாதீனமும்” இல்லை. சிருஷ்டிகள் எல்லாமே கர்த்தரின் ஆட்சிக்குக் கீழிருக்கின்றன. அவருடைய ஆட்சிக்குக் கீழ் வராதவைகளோ, வராதவர் களோ இல்லை. அவருடைய ஆட்சிக்குக் கீழ் நாமெல்லோருமே எல்லா இடங்களிலும் ஏதாவதொரு அதிகாரத்துக்குட்பட்டவர்களாகவே இருக்கிறோம். உலக நாடுகளும் தங்களுடைய சுயாதீனத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே “ஐக்கிய நாடுகள் சபையை” ஏற்படுத்தி அதற்குக் கட்டுப்பட்டு நடந்துவருகின்றன. நாட்டு மக்கள் அரசாங்கங்களுக்கு கட்டுப்படவேண்டியிருக்கிறது, போலிஸுக்குக் கட்டுப்பட வேண்டியிருக்கிறது. பிள்ளைகள் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் கட்டுப்பட வேண்டியிருக்கிறது. நாம் வேலைத்தளங்களில் நம்முடைய எஜமானர்களுக்கு கட்டுப்பட வேண்டியிருக்கிறது. கணவனுக்கு மனைவி கட்டுப்பட்டு நடக்க வேண்டியிருக்கிறது. ஆகவே, எந்த சமுதாயத்திலும் ஏதாவது ஒரு அதிகாரத்தின் கீழ் வராத எந்த மனிதனையும் நாம் பார்க்க முடியாது. நான் ஓட்டும் கார் எனக்கு சொந்தமாக இருந்தாலும் தெருவில் இறங்கிவிட்டால் தெருச் சட்டங்களுக்கு கட்டுப்பட்டே அதை நான் ஓட்டவேண்டியிருக்கிறது. என்னுடைய கார்தானே என்று தெருவில் எனக்கு நானே ராஜாவாக இருக்க முடியாது. அப்படி நான் நடக்கும்போதே தெருவில் போகும் மக்களுக்கும், ஏனைய வாகனங்களுக்கும் நான் ஆபத்தாக இருந்துவிடுவேன். எனக்கு நானே ராஜா என்ற மனப்பான்மைக்கு உண்மையில் பெயர் “எதேச்சாதிகாரம்”.
இதையெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால் எந்த ஒரு திருச்சபையும் “சுயாதீனம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி யாருக்கும் கட்டுப்படாமல் நடப்பது எதேச்சாதிகாரம் என்பதை உணர்த்தத்தான். அதைக் கர்த்தர் விரும்பவில்லை. உலகத்தில் எந்த உள்ளூர் சபையும் முழுத் தன்னிறை வோடு ஒருபோதும் இருந்துவிட முடியாது. ஏனெனில், ஒரே திருச்சபைக்கு கர்த்தர் எல்லா வரங்களையும் ஒட்டுமொத்தமாகக் கொடுப்பதில்லை. சில சபைகள் சிறப்பான வரங்களைப் பெற்றிருக்கும். வேறு சில சபைகள் இன்னொரு சபையில் இராத சில வரங்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு சபையும் இந்த உலகத்தில் ஏனைய சபைகளில் ஏதாவதொரு விதத்தில் தங்கியிருக்கும்படியே கர்த்தர் நியமித்திருகிறார். முக்கியமாக தன்னைப் பணவிஷயத்தில் அங்கத்தவர்களின் காணிக்கை மூலம் தாங்கி நடத்த முடியாத சபைகள் ஒருநாளும் “சுயாதீனத்தைப்” பற்றிப் பேசவே கூடாது. ஒரு போதகரைக்கூட காணிக்கை மூலம் தாங்கிக் கொள்ள முடியாதபடி இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் சபைகளை நிறுவுவதில்லை. அப்படி சபைகள் அமைக்கப்பட்டு இருந்துவருமானால் அது மனிதன் விட்ட தவறாலேயே அவ்வாறு நடந்து வருவதாக இருக்கவேண்டும். மெய்ச் சீடர்களாக இருந்து விசுவாசத்தோடும், பக்தியோடும், காணிக்கைகளைக் கர்த்தருக்கு கொடுத்து வரும் அங்கத்தவர்களை ஆரம்பத்திலேயே கொண்டு சபைகளை அமைத்தால் குற்றுயிரும், குலையுயிருமாக இன்றைக்கோ, நாளைக்கோ என்ற நிலையில் இருக்கும்படி சபைகள் எப்படி உருவாகும்? வேலை செய்து தங்களையும், குடும்பத்தையும் கவனிக்க வக்கில்லாதவர்களே ஊழியம் என்ற பெயரில் ஓரிரு குடும்பங்களை மட்டும் வைத்துக்கொண்டு பணத்திற்காக இங்கும் அங்கும் அலைந்து சபை நடத்துகிறோம் என்ற பெயரில் சுயநல வாழ்க்கை வாழ்ந்து வருவார்கள். இந்த மாதிரியான “ஊழி யங்கள்” கர்த்தரின் பெயருக்கு இழுக்குத் தேடித்தருவனவாயிருக்கின்றன. சுவிசேஷத்தின் வல்லமையையும், கிறிஸ்துவின் இறையாண்மையையும் இவற்றில் பார்க்க முடியாது. தன்னையே தாங்கி நிற்கமுடியாத இத்தகைய ஊழியங்கள் சுவிசேஷத்தை எப்படிச் சொல்லி பாவிகளைக் கரைசேர்க்கப் போகின்றன? இத்தகைய ஊழியங்கள் தங்களை “சுயாதீன சபைகள்” என்று அழைத்துக்கொண்டு தன்னிச்சையாக நடந்து வருவது மிகவும் பரிதாபம். இப்படிப்பட்ட ஊழியங்களை புதிய ஏற்பாட்டில் நாம் பார்ப்பதில்லை.
உண்மையில் கிறிஸ்துவின் எந்த நல்ல மெய்ச் சபையும், அது தன்னைத் தாங்கி நிற்கக்கூடிய நிலையில் இருந்தாலும்கூட அதே சத்தியத்தைப் பின் பற்றுகிற ஏனைய சபைகளை மதித்து அவற்றின் வரங்களையும், வல்லமை களையும் பயன்படுத்திக்கொள்ளும். அவற்றோடு ஐக்கியத்தைப் பெலப்படுத்திக் கொள்ளும். ஐக்கியத்தில் இருக்கும் சபைகளுக்கு கணக்குக் கொடுத்து பொறுப்போடு நடந்துகொள்ளும். தன்னால் எல்லாவற்றையும் சாதித்துவிட முடியும் என்ற மனப்பான்மையை அது கொண்டிராது. அதன் போதகர்கள் தாழ்மையோடு சக சபைகளை மதித்து நடந்துகொள்ளுவார்கள். ஊழியத்தின் நிமித்தம் சக சபைகளின் உதவியைப் பெற்றிருந்தால் அவர்களுக்கு நேர்மையாக கணக்குக் கொடுத்து அச்சபை நன்றியோடு நடந்து கொள்ளும். அப்போஸ்தலர்கள் நம்மத்தியில் இன்றைக்கு இல்லாதபோதிலும், அவர் களைப்போல அதிக வரங்களைக் கொண்டவர்களைக் கர்த்தர் சபைகளுக்கு இன்றைக்கும் அளிக்கிறார். அதாவது, நம்மைவிட பிரசங்க வரத்திலும், போதிக்கும் வரத்திலும் சிறந்தவர்களையும், ஊழியத்தில் முதிர்ச்சி அடைந்தவர்களையும் கர்த்தர் தன் சபைக்கு அளிக்கிறார். அத்தகையவர்களைக் கொண்டிருக்கும் சபைகள் ஏனைய சபைகளைவிட வல்லமையுள்ளவை களாக இருக்கும். அத்தகைய சபைகளைக் கர்த்தர் ஏனைய சபைகளைவிட அதிகம் பாவிப்பதிலும் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. இதனால் ஏனைய சபைகள் தரத்தில் குறைந்தவையாகிவிடாது; வலிமையற்றவை யாகிவிடாது. வளர்ந்த, அதிக வரங்களைப் பெற்றிருக்கும் சபைகளை நமது சபையின் வாழ்க்கையில் கர்த்தர் பயன்படுத்துவாரானால் அதனால் நாம் தாழ்ந்து விடுவதுமில்லை; நம்முடைய உள்ளூர் சபை “சுயாதீனத்துக்குப்” பங்கம் வந்துவிடுவதும் இல்லை. பவுலின் ஊழியத்தைப் பயன்படுத்திக் கொண்டதாலும், அவரின் மேற்பார்வையைப் பெற்றுக்கொண்டதாலும் எபேசு சபை தாழ்ந்துவிடவில்லை; பவுலை அனுப்பிவைத்த அந்தியோகியா சபை உயர்ந்துவிடவில்லை. சுயநல லாபத்திற்காக ஒருவரையும் சாராது, எவருக்கும் கணக்குக்கொடுக்காது தன்னிச்சையாக நடந்து உலகத்தின் கண்களில் உப்பைத் தூவுவதற்காக நாங்கள் “சுயாதீன சபை” என்ற பல்லவியைப் பாடிவருகிறவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.