உழைப்பதன் அவசியத்தைப் பற்றி இந்த இதழில் இதற்கு முந்திய ஆக்கத்தில் பார்த்திருக்கிறோம். ஆனால், நாம் எப்படிப்பட்ட தொழிலைச் செய்ய வேண்டும்? அதை எப்படித் தேடிக்கொள்வது? அதை எப்படிச் செய்வது? என்றெல்லாம் என்னைப் பல வாலிபர்கள் கேட்டிருக்கிறார்கள். வாலிபர்கள் மட்டுமல்லாமல் அந்த வயதை மீறியவர்களுக்கும் இது பற்றி ஆலோசனைகள் கொடுத்திருக்கிறேன். நம்மினத்தில் பெரியவர்கள் பெரும்பாலும் நாம் இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்களே தவிர எதையும் சொல்லிக் கொடுத்து வளர்ப்பது குறைவு. காரணம் கேட்டால், “எவன் சொல்லிக் கொடுத்து நான் படித்தேன், அதுபோல் நீயே எதையும் செய்யத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று இடக்காக பதில் சொல்லுவார்கள். இதற்கெல்லாம் காரணம், அவர்களை வளர்த்தவர்கள் அவர்களுக்கு எதையும் சொல்லிக் கொடுத்து வளர்க்காததுதான். இதுதான் நம்மினத்தில் வளர்ப்பு முறை. இதையே சபைகளிலும் பார்க்கிறோம். எந்தப் போதகருமே எவருக்கும் எதையும் சொல்லிக் கொடுத்து வழிகாட்டி வளர்ப்பதில்லை; காரணம் அவர்கள் எவரிடத்திலும் இருந்து எதையும் கற்றுக்கொள்ளாதது தான். இக்காரணங்களால் வாலிபர்களுக்கு நம்மினத்தில் தலைவலி அதிகம்தான். இனி தொழில் சம்பந்தமாக நாம் பின்பற்ற வேண்டிய சில வேத விதிமுறைகளைப் பார்ப்போம். இதுபற்றிக்கூட வேதம் விளக்குகிறதா என்று ஆச்சரியப்படாதீர்கள். வேதம் நாம் வாழ வேண்டிய வழிமுறைகள் பற்றி சகல ஆலோசனைகளையும் தரும் கர்த்தரின் வார்த்தை.
1. தொழிலுக்காக நம்மைத் தயார் செய்து கொள்ளவேண்டும்.
எந்தத் தொழிலைச் செய்ய விரும்பினாலும் அந்தத் தொழிலுக்கான தகுதிகளை நாம் அடையாமல் தொழில் கிடைக்கும் என்று நினைக்கக்கூடாது. ஒன்றுக்காக ஆசைப்படுவதில் தப்பில்லை; ஆனால், அதை அடையும் தகுதியும் நமக்கிருக்க வேண்டும். ஊர்க்குருவி பருந்தாக முடியாது. தகுதியில்லாதவர்களுக்கு எவரும் எந்த வேலையையும் கொடுக்கமாட்டார்கள். தகுதியில்லாதவர்கள் நிரம்பி வழியும் ஒரே தொழில் இன்றைக்கு ஊழியம்தான். ஏனென்றால், ஊழியக்காரரின் தகுதிகளை ஆராய்ந்து பார்த்து அனுமதிக்கும் எந்த அமைப்பும் இல்லை. கர்த்தர் அப்படி ஓர் அமைப்பை ஏற்படுத்தி வைத்திருந்தாலும் அதற்கு மதிப்புக்கொடுத்து எதை யும் செய்கிறவர்கள் நம்மத்தியில் குறைவு.
வேலைக்கான தகுதிகளைப் பெற்றுக்கொள்ள எவரும் நன்றாகப் படிப்பது அவசியம். படிக்காமல் ஒரு நல்ல வேலையும் கிடைக்காது. படிப்பு எல்லாவற்றுக்கும் அவசியம். படிக்க வேண்டும் என்று நான் சொல்லுவது கல்லூரிப் படிப்பை மட்டுமல்ல. சூளை வைத்து செங்கல் செய்யத் தெரிந்து கொள்ளக்கூட, அதை எப்படிச் செய்வது என்பதைப் படித்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டும். அதை எவரிடமாவது கற்றுக்கொள்ள வேண் டும். ஆகவே, கற்றுக்கொள்ளுகிற மனப்பான்மை எல்லோருக்கும் தேவை. அது இல்லாமல் ஒரு தொழிலையும் செய்ய முடியாது. எதையும் கற்றுக் கொள்ளுகிறபோது பொறுமையாக அதைக் கற்றுக்கொள்ள வேண்டும். பொறுமையில்லாமல் கற்றுக்கொள்ள முடியாது.
கல்லூரிக்கும்போகும் வசதியுள்ளவர்கள் கல்லூரிப்படிப்பில் கவனமாக இருக்க வேண்டும். எந்தப் படிப்புப் படித்தால் எந்தத் தொழிலைச் செய்யலாம் என்றெல்லாம் ஆராய்ந்து பார்த்து, தெரிவுசெய்த படிப்பை வெற்றிகரமாக நிறைவேற்றப் பார்க்க வேண்டும். படிப்பில் கவனத்தைச் செலுத்தாமல் மூன்று வருட டிகிரியை ஆறுவருசத்தில் முடிக்கப் பார்ப்பது ஆண் மகனுக்கு அழகல்ல. இதையே சரியாக முடிக்கத் தெரியாமல் எந்த வேலையைப் பின்னால் உருப்படியாகச் செய்ய முடியும்? படிக்கின்ற படிப்பை நல்ல மார்க்குகள் வாங்கி நிறைவேற்ற வேண்டும். வெறும் பாஸ் மார்க் வாங்குவது அக்கறையோடு நாம் படிக்கவில்லை என்பதற்குத்தான் அடையாளம். எடுத்துக்கொண்ட படிப்பை நல்ல மார்க் வாங்கி முடித்தால் எந்த வேலைக்கும் அப்ளிகேஷன் போடமுடியும்.
படிப்பில் நல்ல மார்க் வாங்குவது மட்டுமல்லாமல் நாம் செய்யப்போகிற தொழிலுக்கான சகல தகுதிகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். நமது சரீர, மனவளர்ச்சியும் முக்கியம். பொது அறிவும் அவசியம். வாழ்க்கையில் ஒழுங்கைக் கற்றுக்கொண்டு ஒழுங்கைக் கடைப்பிடிக்கவும் வேண்டும். முடிந்தால் படிப்பு முடிந்த கையோடு செய்ய விரும்பும் தொழிலுக்கான செய்முறைப் பயிற்சியையும் (Practical training) முடிக்கப் பார்க்கலாம். இதெல்லாம் நல்ல தொழில்களைத் தேடிக்கொள்ள அவசியம்.
2. விசுவாசிகள் கர்த்தருடைய வேதம் அனுமதிக்காத தொழில்களில் ஈடுபடக் கூடாது.
கர்த்தருடைய குணாதிசயங்கள் வெறுக்கும் தொழில்களையும், பத்துக் கட்டளைகளுக்கு முரணான தொழில்களையும் செய்யக்கூடாது. சூதுவா துள்ள தொழில்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். நமது விசுவாசத்திற்கு சாட்சி இல்லாத எந்தத் தொழில்களிலும் ஈடுபடக்கூடாது. ‘பாரில்’ (Bar) வேலை செய்வது நல்ல சாட்சியாக இருப்பதற்குத் தடையாகும். இதை யெல்லாம் முன்யோசனையோடு சிந்தித்து ஆராய்ந்து வேலைகளைச் தேடிக்கொள்ள வேண்டும். உலகத்தில் அவிசுவாசிகள் மத்தியில் வேலை செய்வதையும், அவர்களிடம் வேலைக்கமர்வதையும் தவிர்¢க்க முடியாது. அதற்காக, அவர்கள் வழியில் போக வேண்டிய அவசியமில்லை. தானியேல் அவிசுவாசிகள் மத்தியில் வாழ்ந்து பல போராட்டங்களுக்கிடையில் அவர்களுக்குக் கீழ் வேலை செய்து கர்த்தரை மகிமைப்படுத்தியிருக்கிறான். அதேபோல்தான் அவனுடைய நண்பர்களும் வாழ்ந்து காட்டினார்கள். நெகேமியாவும் அவனோடிருந்தவர்களும் அந்த முறையில் நற்சாட்சியுடன் வாழ்ந்து தேசத்து ராஜாவின் அங்கீகரிப்பை அடையவில்லையா? அத்தோடு விசுவாசிகள் ஓய்வு நாளில் வேலை செய்வதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மருத்துவத் தொழில், அத்தியாவசிய தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்கள் தவிர ஏனையோர் ஓய்வு நாளில் வேலைக்குப் போய் ஆத்மீக வாழ்க்கையை இழந்துவிடக்கூடாது. பணம் வரும் போகும்; ஆத்மீக வாழ்க்கையை இழப்பதற்கு எடுக்கும் நடவடிக்கைகள் நம்மைப் பேராபத் தில் கொண்டுபோய்விட்டுவிடும். குடும்பத்தைவிட்டு விலகிப் பலமாதங்கள், வருடங்களாகப் பிரிந்திருக்க வைக்கும் தொழில்களில் ஈடுபடுவதும் தவறு. குடும்ப வாழ்க்கையை அழித்துக் கொண்டு பணம் பண்ணும்படிக் கர்த்தர் நம்மைக் கேட்கவில்லை. பணத்தையும், வாழ்க்கை வசதிகளையும் அதிகரித்துக்கொள்வதற்காக இப்படிக் குடும்பத்தை விட்டுப்பிரிந்து வாழ்ந்து வேலை செய்து மனைவியையும், பிள்ளைகளையும் இழந்தவர்கள் அநேகர். விசுவாசிகள் இத்தகைய முட்டாள்த்தனத்தில் ஈடுபடக்கூடாது. சில போலிப் போதகர்கள் இத்தகைய நடவடிக்கைகளை ஆதரிக்கிறார்கள். ஏனெனில், பணத்திற்காக ஒருவன் குடும்பத்தைவிட்டு விலகிப்போய் சம்பாதித்து ஊழியத்துக்கு அதிகப் பணம் கொடுப்பான் என்ற நப்பாசை யில்தான். இது கொடூரமான செயல்.
3. எல்லா நற்தொழில்களும், ஊழியம் உட்பட கர்த்தருக்கு முன் பரிசுத்தமானவை.
சிலர் ஊழியத்தைப் பரிசுத்தமானதாகவும் அதன் மூலம் மட்டும்தான் கர்த்தரை மகிமைப்படுத்த முடியும் என்று தவறாக எண்ணிக் கொண்டிருக் கிறார்கள். இப்படி ஒரு மாயையை தமிழினத்துக் கிறிஸ்தவத்தில் பார்க்கலாம். இதனால்தான் அநேக ஊழியக்காரர்கள் தங்களுடைய குடும்பத்தில் ஒருவரையாவது ஊழியத்துக்கு அர்ப்பணிக்கும் செயலைச் செய்கிறார்கள். முக்கியமாக, தங்களுடைய மகனை அதற்குப் பிரதிஷ்டை செய்துவிடுவார் கள். இப்படித் தகப்பன் வழி ஊழியம் செய்யும் அநேக மகன்களைத் தமிழினத்து ஊழியப்பணியில் பார்க்க முடியும். பழைய ஏற்பாட்டை உதாரணம் காட்டி இந்தப் பணி நடந்து வருகிறது. ஆனால், திருச்சபை ஊழியத்தைப் பற்றி அதிக விளக்கங் கொடுக்கும் புதிய ஏற்பாட்டில் இந்த வழிமுறைக்கு இடமில்லை. எந்த ஊழியக்காரனாக இருந்தாலும் 1 தீமோத் தேயு 3ம், தீத்தும் எதிர்பார்க்கின்ற அதற்கான தகுதிகளைக் கொண்டிருந்து, திருச்சபை அங்கத்தவர்களால் முறையாக ஆராயப்பட்டு, திருச்சபையால் நியமிக்கப்பட்டே ஊழியம் செய்யவேண்டுமென்பது வேத போதனை; கர்த்தரின் நியதி. கர்த்தரின் வார்த்தையை உடப்பில் போட்டுவிட்டு இன்று குடும்ப வாரிசுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது தமிழினத்து கிறிஸ்தவம்.
வேதம் எல்லா நற்தொழில்களையும் நன்மையானதாகப் பார்க்கிறது. செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் அதன் மூலம் நாம் கர்த்தரை மகிமைப்படுத்த வேண்டும். ஒரு வைத்தியனோ, கணக்காளனோ, என்ஞினியரோ அந்தத் தொழில் மூலம் கர்த்தரை மகிமைப்படுத்த முடியும். ஊழியம் இதையெல்லாம் விட விசேஷமானது என்று நினைப்பது தவறு. ஊழியம் அதற்கு அழைக்கப்பட்டவர்களுக்கு மட்டுந்தான். அழைக்கப்படாதவர்கள் அதைச் செய்தால் அது தவறானது. அவர்கள் அதில் நிலைத் திருக்கவும் முடியாது. அழைக்கப்பட்ட இடத்தில் இருக்க வேண்டும் என்கிறது வேதம். (1 கொரிந்தியர் 7:24). நெகேமியா பானபாத்திரக்காரனாக இருந்தான். இயேசு கிறிஸ்து தச்சு வேலை செய்தார். தாவீது முதலில் மேய்ப்பனாகவும், பின்பு போர்வீரனாகவும் இருந்து அதன் பிறகே அரசனானான். ஆபிரகாம் மந்தைகளின் உரிமையாளனாக இருந்தான். யோசேப்பு அரச ஊழியனாக இருந்தான். யோசுவா இராணுவத் தளபதியாக இருந் திருக்கிறான். ரூத் இல்லத்தரசியாக இருந்தாள். ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாவும் கூடாரத் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். இதிலிருந்து இந்தத் தேவ மனிதர்கள் அனைவருமே வாழ்க்கையில் ஏதோவொரு தொழிலைக் கர்த்தருக்காகச் செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளுகிறோம். அந்தத் தொழில்களை அவர்கள் மதிப்பற்றதாகவும், உலகத்தைச் சேர்ந்ததாக வும் எண்ணவில்லை. அந்தத் தொழில்களைச் செய்து அவர்கள் கர்த்தரை மகிமைப்படுத்தியிருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து ஊழியப் பணியை ஆரம்பித்த பிறகும் சமுதாயத்தில் ஒரு தொழிலைச் செய்து வாழ்ந்திருந்திருக்கிறார். கூடாரம் செய்யும் தொழில் தெரிந்திருந்த பவுல் அப்போஸ்தலன் அந்தத் தொழிலைத் தரக்குறைவானதாக எண்ணாமல் திருச்சபைக்கு தன்னால் பாரமேற்படக்கூடாதென்று அந்தத் தொழிலைச் செய்து தன் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார் என்று புதிய ஏற்பாடு விளக்குகிறது. இதையெல்லாம் விட்டுவிட்டு ஊழியம் செய்வது உழக்கை பிடிப்பதைவிட மேல் என்று நினைப்பதைப் போன்ற முட்டாள்த்தனம் வேறொன்றில்லை.
4. தொழில்கள் பற்றிய விபரங்களைச் சேகரித்துக் கொண்டு முயற்சி திருவினையாக்கும் என்பதை மனதில் வைத்து கர்த்தரில் தங்கியிருந்து தொழிலை நாட வேண்டும்.
இறுதியாக, தொழிலுக்கான தகுதிகளை அடைந்தபிறகு செய்யவிரும்புகிற தொழில் பற்றிய விபரங்களைச் சேகரித்துக் கொண்டு கர்த்தரில் தங்கியிருந்து அத்தொழிலைத் தேட ஆரம்பிக்க வேண்டும். பல கம்பேனிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பி இன்டர்வியூக்குப் போய் தொழிலில் சேர வேண்டும். நம்முடைய தகுதிகளை விளக்கும் ஒரு Resume ஐத் தயாரித்து வைத்துக்கொள்வது அவசியம். அது காலத்துக்கு உகந்தாக அமைந்திருக்க வேண்டும். அது வேலை கொடுப்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும், அவர்கள் அதைப் பார்த்துவிட்டு நம்மை இன்டர்வியூவுக்கு அழைக்கும்படியானதாகவும் இருக்க வேண்டும். இன்றைக்கு உலகம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. தொழிலகங்கள் தகுதியுள்ளவர்களையும், உழைக்கக்கூடியவர்களை மட்டும் தேடாமல் அதற்கு மேலும் திறமைகளையும், உத்திகளையும் கொண்டவர்களை நாடுகின்றன. திறமையற்றவர்கள் இந்த நவீன உலகத்தில் பின்தங்கிவிடுவார்கள். இதற்காக நாம் பொய்சொல்லத் தேவையில்லை, நாடகமாடத் தேவையில்லை, இல்லாததை இருப்பதாகக் காட்டிக் கொள்ளத் தேவையில்லை. நேர்மையாகவே எப்போதும் நடந்து கொள்ள வேண்டும்.
வசதியுள்ளவர்களால் மட்டுமே இதெல்லாம் முடியும் என்ற தவறான நம்பிக்கையும் பலரிடம் இருக்கிறது. அதெல்லாம் கஷ்டப்பட்டு படித்து உயரத் தயங்குகிறவர்களின் சாக்குப்போக்கு. வசதியில்லாத பலர் வாழ்க்கையில் உயர்ந்திருப்பதை உலகம் நமக்கு அன்றாடம் சுட்டிக்காட்டி வருகின்றது. வேதத்தில் அதற்கான பல உதாரணங்களைப் பார்க்கலாம். இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களில் பலர் வாழ்க்கையில் வசதியில் லாதவர்களாகத்தான் ஆரம்பத்தில் இருந்திருக்கிறார்கள். அப்போஸ்தலர்களாக வந்தபிறகும் அவர்களுடைய வசதிகள் அதிகரித்துவிடவில்லை. ஆனால், அவர்கள் அப்போஸ்தலர்களாக இயேசு கிறிஸ்துவால் நியமிக்கப்படுவதற்கு அவர்களுடைய வசதிக்குறைவு தடையாக இருக்கவில்லை. பேதுரு மீன் பிடிக்கும் தொழிலைச் செய்து வந்தார். அவர் பின்னால் பெரும் பிரசங்கியாக மாற முடிந்தது. பேதுரு ஆரம்பத்தில் முதிர்ச்சியுடையவராக இருக்கவில்லை. ஆனால், அவருடைய விடாமுயற்சியும், தன்னைத் திருத்திப் பக்குவப்படுத்திக்கொள்ளும் தன்மையும் அவருக்கு கைகொடுத்தன; வாழ்க்கையில் அவரை உயர்த்தின. திறமையுள்ளவன் எங்கும், எப்போதும் சிறக்கலாம்.
தொழிலில் அக்கறை
இதுவரை ஒரு தொழிலைத் தேடிக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் விளக்கினோம். இனி ஒரு தொழிலைத் தேடிக்கொண்ட பிறகு அந்தத் தொழிலை எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கான சில ஆலோசனைகளைப் பார்ப்போம்.
1. செய்யும் தொழிலில் அக்கறை காட்டி கடுமையாக உழைக்க வேண்டும். – எந்தத் தொழிலாக இருந்தாலும் அதில் இணைந்துகொண்ட பிறகு அதில் அதிக அக்கறை காட்டி நல்ல முறையில் கடுமையாக உழைக்க வேண்டும். வேலை கொடுத்தவர்களுக்காக உழைக்காமல் கர்த்தருக்காக உழைக்க வேண்டும். அதற்காக கர்த்தர் நம்மிடம் கணக்குக் கேட்பார். கர்த்தருடைய வார்த்தையை மீறாமலும், அதேநேரம் தொழிலைத் தந்திருப்பவர்களின் முகங்கோணாமலும் வேலை செய்ய வேண்டும். சம்பளத்துக்காக மட்டும் வேலை செய்யாமல் உழைப்பைக் கர்த்தர் எதிர்பார்க்கிறார் என்ற எண்ணத்தோடு வேலையை சிறப்பாகச் செய்ய வேண்டும். விசுவாசிகளில் அநேகர் இன்று அவிசுவாசிகள் போல் நடந்து அக்கறையில்லாமல் வேலை செய்கிறார்கள். அவிசுவாசிகள்கூட இன்றைக்கு வேலை செய்வதில் நமக்கு உதார ணமாக இருந்துவிடுகிறார்கள்.
தொழிலில் அக்கறை காட்டுவது என்பது அநேகருக்கு புரியாததொன்றாக இருக்கிறது. ஒழுங்கில்லாமல் வாழ்க்கையில் வளர்ந்ததனால் ஏற்பட்ட பாதிப்பு அது. அதை விசுவாசிகள் நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். தங்களுக்கென்று ஓர் ஒழுங்கை ஏற்படுத்திக் கொண்டு சகல வேலைகளையும் முறையோடு செய்வது அவசியம். வீணாக நேரத்தை செலவழிக்கிறவர்கள் நம்மத்தியில் இன்று அதிகம். வெறும்பேச்சுப் பேசியும், அரட்டை அடித்தும் அநேகர் நேரத்தை வீணாக்குகிறார்கள். இதெல்லாம் நல்ல உழைப்புக்கு அடையாளமில்லை. கடுமையாக நேர்மையோடு உழைப்ப தானால் இதையெல்லாம் விட்டுவிட வேண்டும். செய்யும் தொழிலில் சிரத்தை காட்ட வேண்டும். அதை அலட்சியமாக எண்ணக்கூடாது. நம்மை நம்பி வேலைக்கு எடுத்துக்கொண்டவர்கள் நம்பக்கத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கர்த்தருக்கென்று அந்த வேலையை சிரத்தையோடு செய்து முடிக்க வேண்டும்.
2. காலந்தவறாமல் தொழிலில் ஈடுபட்டு காலநேரத்துடன் தொழில்களை நிறைவு செய்ய வேண்டும். – செய்ய எடுத்துக்கொண்ட பணியை எப்படிச் செய்வது என்று சிந்தித்து அதை செய்து முடிப்பதற்கான ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டு கொடுக்கப்பட்ட காலத்தில் அதை நிறைவேற்றி முடிப்பது அவசியம். இப்படித்தான் நெகேமியா எருசலேம் மதில்களைக் கட்டி முடித்தான். இப்படித்தான் சாலமோன் ஆலயத்தைக் கட்டி முடித்தான். இந்த முறையில்தான் பவுல் திருச்சபை ஊழியத்தைச் செய்திருக்கிறார். திட்டமிடாமல் எந்தப் பணியையும் செய்ய முடியாது. திட்டமிட்டுப் பணி செய்ய வேண்டுமானால் நாம் நேரத்திற்கு வாழ்க்கையில் மதிப்புக் கொடுக்க வேண்டும். நம்மவர்கள் மத்தியில் நேரத்தை வீணாக்குவது என்பது சாதார ணமாக நடந்துவருகிற ஒன்று. நம் நேரத்தையும் வீணாக்கி அடுத்தவர்களின் நேரத்தையும் வீணாக்குகிறோம். ஆபீசில் ஒரு மணி நேரத்தில் முடிக்கப்பட வேண்டிய கோப்பை இரண்டு நாளெடுத்து முடிப்பது சகஜமாக நடந்து வருகிறது. விசுவாசியிடம் இதெல்லாம் இருக்கக் கூடாது. நேரத்திற்கு நாம் மதிப்புக் கொடுக்கப் பழக வேண்டும். நேரம் கர்த்தருக்கு சொந்தமானது. நேரத்திற்கு மதிப்புக் கொடுக்கத் தெரிந்தவர்கள்தான் திட்டமிட்டு காரிய மாற்ற முடியும். ஒவ்வொருவரும் நாம் எவ்வளவு நேரத்தை வீணாக்கு கிறோம் என்பதைக் கணக்குப் பார்த்து அதைத் திருத்திக் கொள்ள வேண்டும். எடுத்துக் கொண்ட வேலைகளைக் கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் செய்து முடிக்க வேண்டும்.
ஊழியத்திற்கும் இதே வழிமுறைதான். அநேக போதகர்கள் வாழ்க்கையில் இன்று நேரத்திற்கு மதிப்புக்கொடுப்பதில்லை. நேரத்தைப் பயன்படுத்தி உழைப்பதில்லை. வாழ்க்கையில் இதையெல்லாம் கற்று, பின்பற்றி நடக்காதவர்களே இன்றைக்கு ஊழியத்தில் இருந்து கர்த்தரை அவமதிக்கிறார்கள். செய்கிறேன், நிச்சயம் வருகிறேன், முடித்து விடுகிறேன் என்றெல்லாம் வாக்குக் கொடுத்துவிட்டு நேரத்தை வேறெதிலாவது செலவிட்டுவிட்டு சாக்குப்போக்குச் சொல்லுகிற எத்தனை ஊழியக்காரர்களை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். உதட்டில் சிரிப்பை அள்ளி வாரிவிட்டு அலட்சியமாக நடந்து வருகிற ஊழியர்களால் ஆத்துமாக்களுக்கு ஆபத்து. இன்றைக்கு பிரசங்க ஊழியமும், திருச்சபை ஊழியமும் பாழாகி இருப்பதற்கு இவர்கள் தான் காரணம். ஊழியத்தை நாடி வரும் வாலிபர்கள் முதலில் தங்களுடைய வாழ்க்கையில் நேரத்தைப் பயன்படுத்தி நேர்மையாக நடந்து கொள்ளப் பழக வேண்டும். பரிசுத்த வாழ்க்கைக்கு இதுவும் ஓர் அறிகுறி.
3. சாட்சியுள்ளவர்களாக தொழில் செய்யும் இடத்தில் நடந்துகொள்ள வேண்டும். – தொழில் செய்யுமிடத்தில் நாம் சாட்சியுள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும். சக ஊழியர்களோடு நாம் நடந்துகொள்ளும் முறை நமது விசுவாசத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். நமது நடத்தையால் நம்முடைய சாட்சியத்துக்கு எந்தப் பங்கமும் ஏற்படக்கூடாது. தானியேல் தன்னுடைய நடவடிக்கைகளால் புறஜாதியார் மத்தியில் கர்த்தருக்கு மகிமை வரும்படிச் செய்திருக்கிறான். நம்மிடத்தில் இருக்கும் மிகப் பெரிய பலமே நமது விசுவாசம்தான். அதன்படி வேலைத்தளத்தில் நடந்து கொள்வது அவசியம். நாம் வேலை செய்யும் விதத்தையும், நடந்து கொள்ளும் முறையையும் பார்த்துப் புறஜாதியினர் நமது விசுவாசத்தைப் பற்றி அறிந்துகொள்ளும் நிலைமையை நாம் உருவாக்க வேண்டும். நமது விசுவாச நடத்தையே நமது பேச்சைவிட பலமுள்ள சாட்சி.
4. கர்த்தருடைய வேதத்துக்கு முரணான விதத்தில் தொழில் செய்யும் இடத்தில் தொழில் சம்பந்தமான விஷயங்களில் நடந்துகொள்ளக்கூடாது. – தொழில் செய்யும் இடத்தில் தொழில் சம்பந்தமான எந்த விஷயத்திலும் கர்த்தரின் வேதத்திற்கு முரணாக நடந்துகொள்ளக்கூடாது. இலஞ்சம் வாங்குகிறவர்களும், கொடுக்கிறவர்களும் நம்பக்கத்தில் இருந்தபோதும் அது எந்தவிதத்திலும் நம்மைத் தீண்டிவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு நம்ம வாழ்க்கையில் இடங்கொடுக்கக் கூடாது. அது பெரும் அக்கிரமம்; அநியாயம். வேறோடு கிள்ளியெறியப்பட வேண்டிய எயிட்ஸ் வைரஸ். பலருடைய வாழ்க்கையை நிர்மூலமாக்கும் பிசாசு. விசுவாசிகளில் இதன் சாயல்கூடப் படக்கூடாது.
அதுமட்டுமல்லாமல், வேலை செய்யும் இடத்தில் இருக்கும் எந்தப் பொருளையும் நம்முடைய சொந்தத் தேவைகளுக்காகப் பயன்படுத்தக் கூடாது. அநேகர் இதுபற்றி சிந்திப்பதேயில்லை. வேலை நேரம், நம் மேசையில் இருக்கும் பொருள்கள், வேளைத்தளத்தில் இருக்கும் வாகனங்கள், வேலையைச் செய்து முடிப்பதற்காக நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகள் எல்லாவற்றையும் நம்முடைய சொந்த நன்மைக்காகப் பயன்படுத்தக் கூடாது. வேலை நேரத்தில் தொலைபேசியில் கண்டவர்களோடும் மணிக்கணக்கில் பேசி நேரத்தை வீணடிக்கக் கூடாது. ஒரு காப்பி குடிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட நேரத்தைப் பதினைந்து காப்பி குடிக்கும் நேர அளவுக்கு உயர்த்தி நேரத்தை வீணாக்கக் கூடாது. நம்மினத்தின் பொருளா தார, சமுதாயப் பின்தங்களுக்குக் காரணமே நம்மினத்து மக்கள் அநாவசியமாக அன்றாடம் வீணாக்குகிற நேரமே. நேரத்தைப் பயன்படுத்தி நாம் உழைக்கத் தீர்மானித்தோமானால் நம்மினம் குறுகிய காலத்தில் துரித முன்னேற்றத்தை அடைந்துவிடும்.
இதுவரை நாம் பார்த்தவைக்கும் கர்த்தருக்கும் சம்பந்தமில்லை என்று நினைக்கின்ற பலவீனமான விசுவாசிகள் நம்மத்தியில் இன்று அதிகம். அவர்களுடைய பலவீனம், அவர்கள் வாழ்க்கையில் உயர்வதற்குப் பெருந்தடையாக இருந்துவிடும். ஒழுங்கின் தேவன் நாம் ஒழுங்கற்றவர்களாக வாழ்வதற்காகப் படைக்கவில்லை. ஒழுங்கோடு வாழ்ந்து அவரை நாம் வாழ்க்கையில் மகிமைப்படுத்த வேண்டுமென்பதற்காகவே படைத்திருக்கிறார். அதைச் செய்வதை நாம் வாழ்க்கை இலட்சியமாகக் கொள்ள வேண்டும்.