கேள்வி 103: முறையாக திருமுழுக்கு எவ்வாறு கொடுக்கப்பட வேண்டும்?
பதில்: கிறிஸ்து ஏற்படுத்தித் தந்துள்ள முறையின்படியும், அப்போஸ்தலர் களுடைய நடைமுறையின்படியும், பிதா, குமாரன், ஆவியானவரின் நாமத்திலே விசுவாசியின் சரீரம் முழுவதையும் தண்ணீரிலே அழுத்தி திருமுழுக்கு கொடுக்க வேண்டும். தண்ணீரை விசுவாசியின் மீது தெளிப்பதன் மூலமாகவோ, அவர்களுடைய சரீரத்தின் ஒரு பகுதியை மட்டும் தண்ணீரில் அழுத்துவதன் மூலமாகவோ திருமுழுக்கு கொடுக்கப்படக்கூடாது.
(மத்தேயு 3:16; யோவான் 3:23; அப்போஸ்தலர் 8:38-39).
திருமுழுக்கு கொடுக்க வேண்டிய சரியான முறை
திருமுழுக்கைக் குறிக்கப் புதிய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தைக்கு (Baptidzo) ‘தண்ணீரில் அழுத்துதல் அல்லது தாழ்த்துதல்’ (dip, immerse, submerge) என்பதே பொருள். இந்த முறையிலேயே இந்த வார்த்தைக்கு கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் சமுதாயத்தில் அர்த்தம் கொண்டிருந்தார்கள். திருமுழுக்கு என்றால் அதற்கு தண்ணீரில் தாழ்த்துதல் என்று மட்டுமே பொருள்; வேறு பொருள் கிடையாது.
அதுமட்டுமல்லாமல் திருமுழுக்கு எதை விளக்கப் பயன்படுத்தப்படுகிறதோ அதோடும் நடைமுறையில் ஒத்துப்போவதாக இருக்கிறது. ஒருவருடைய பாவம் கிறிஸ்துவின் திரு இரத்தத்தால் கழுவப்படுகிறதை திருமுழுக்கு குறிக்கிறது (அப்போஸ். 22:16). அவ்வாறாக பாவம் முழுவதுமாக கழுவியெடுக்கப்படுவதை தண்ணீரில் முழுவதுமாக விசுவாசியின் சரீரத்தை தாழ்த்தும் முறையாலேயே விளக்க முடியும். தண்ணீரை ஒருவர் மேல் தெளித்து இதை விளக்க முடியாது. அத்தோடு திருமுழுக்கு நாம் கிறிஸ்துவோடு பாவத்திற்கு மரித்து புதிய ஜீவனோடு உயிர்த்தெழுவதையும் விளக்குகிறது. இதை வெறும் தெளிப்பு ஞானஸ்நானத்தால் விளக்க முடியாது. இவ்வாறாக கிறிஸ்துவின் மரணத்திலும், உயிர்த்தெழுதலிலும் கிறிஸ்துவில் நாம் வைக்கும் விசுவாசத்தின் மூலம் பங்குகொண்டு அவரோடு நாம் ஆத்மீக ரீதியாக இணைக்கப்படுவதை பவுல் ரோமர் 6:3-5 வரையிலான வசனங்களில் விளக்குகிறார். கிறிஸ்துவுக்குள் நாமடைந்துள்ள இத்தகைய ஆத்மீக அனுபவங்களையே திருமுழுக்கு விளக்குகிறது. அதை விசுவாசியைத் தண்ணீருக்குள் தாழ்த்துவதைத் தவிர்த்த வேறு முறைகளால் விளக்க முயல்வது திருமுழுக்கின் அர்த்தத்தையே மாற்றிவிடும். திருமுழுக்கு நமக்கு விசுவாசத்தைக் கொடுக்கும் திருநியமம் அல்ல; அது நம்முடைய இரட்சிப் பின் அநுபவத்தை விளக்கும் திருநியமம். ஆகவே, அதை நாம் அலட்சியப் படுத்தக்கூடாது. திருமுழுக்கு அளிக்கப்படவேண்டிய முறை எப்படியும் இருக்கலாம் என்று அலட்சியமாக இருந்துவிட முடியாது. அதைக் கொடுக்கும் முறை வேதத்தோடு முழுவதும் பொருந்திவருவதாக இருக்க வேண்டும். தண்ணீரில் விசுவாசியைத் தாழ்த்துவதனால் மட்டுமே அதை நாம் முறையாக செய்ய முடியும்.
இயேசு கிறிஸ்து நமக்கு உதாரணமாக இருக்க திருமுழுக்கு பெற்றுக் கொண்டபோது தண்ணீருக்குள் இறங்கி அதற்குள் இருந்து வெளியில் தந்தார் (மத்தேயு 3:16). தண்ணீர் தெளிப்பது மட்டும் அவசியமாக இருந்திருந்தால் இயேசு கிறிஸ்து இப்படி நமக்கு உதாரணமாக இருக்கும்படியாக தண்ணீருக்குள் போய் வெளியில் வந்து திருமுழுக்கு பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த முறையிலேயே யோவான் ஸ்நானனும் திருமுழுக்களித்திருக்கிறார்.
ஆகவே, விசுவாசிகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்போது அவர்களுடைய சரீரம் முழுவதும் தண்ணீருக்குள் தாழ்த்தப்பட வேண்டியது அவசியம். தண்ணீரை அவர்கள் மேல் தெளிப்பதோ, அல்லது சரீரத்தின் ஒரு பகுதியை மட்டும் தண்ணீரில் தாழ்த்துவதோ சரியான முறையாகாது. ஞானஸ்நானம் கொடுப்பது மட்டுமே முக்கியமானது, அதை எப்படிக் கொடுத்தாலும் பரவாயில்லை. ஏனென்றால், அதுபற்றி வேதம் தெளிவாக விளக்கவில்லை என்ற அசட்டு வாதங்கள் எடுபடாது. வேதம் மிகத் தெளிவாகவே ஞானஸ்நானம் கொடுக்கப்பட வேண்டிய முறையை யோவான் ஸ்நானன் மூலமும், இயேசு கிறிஸ்துவின் உதாரணத்தின் மூலமும், அப்போஸ்தலர்களின் போதனைகளின் மூலமும் வெளிப்படுத்துகிறது.
இயேசு கிறிஸ்து ஏன் திருமுழுக்கு பெற்றார்?
புதிய உடன்படிக்கையின்படி கிறிஸ்தவ திருச்சபை திருச்சபைக்குரிய பணிகளைக் கிறிஸ்து புதிய ஏற்பாட்டில் போதித்தும், உதாரணமாகவும் தந்துள்ள நடைமுறைகளின்படி நடத்தி வரவேண்டும். அதன்படி திருச்சபையில் விசுவாசிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய திருமுழுக்கு கிறிஸ்துவின் உதாரணத்தைப் பின்பற்றிக் கொடுக்கப்பட வேண்டும். மத்தேயு 3:16 இயேசு கிறிஸ்து தன்னுடைய ஊழியப்பணிகளை ஆரம்பிப்பதற்கு முன் திருமுழுக்குப் பெற்றுக் கொண்டார் என்பதை விளக்குகிறது. திரித்துவ தேவனில் இரண்டாம் அங்கத்தவரான இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவர் நம்மைப் போல பாவத்தில் இருந்து மனந்திரும்பி விசுவாசிக்க வேண்டிய அவசியமும் இல்லை. வேதம் அவரில் பாவம் இல்லை என்பதைத் தெளிவாக நமக்கு விளக்குகிறது. அப்படியானால் கிறிஸ்து திருமுழுக்கு பெற்றுக்கொண்ட தற்கான காரணம் என்ன என்பதை ஆராய்வது அவசியம். இயேசு தனக்குத் திருமுழுக்குக் கொடுக்கும்படிக் கேட்டவுடன் யோவான் ஸ்நானன் திகைத்துப் போனார் (யோவான் 1:29). இருந்தபோதும் இயேசு யோவான் ஸ்நானனை வற்புறுத்தி திருமுழுக்கைப் பெற்றுக்கொண்டார். தன்னுடைய ஊழியத்தின் ஆரம்பத்திலேயே இவ்வாறாக திருமுழுக்குப் பெற்றுக் கொண்டதன் மூலம் புதிய உடன்படிக்கை காலத்தில் திருமுழுக்கின் முக்கியத்துவத்தை கிறிஸ்து நமக்கு உணர்த்துகிறார். இரட்சிக்கப்பட்ட மக்களோடு தமக்கிருக்கும் தொடர்பையும், தம்மை அவர்களோடு இணைத் துக் கொள்ளப்போவதையும் உணர்த்துவதற்காகக் கிறிஸ்துதானே ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார். தன்னுடைய மரணத்தினாலும், உயிர்த்தெழுதலின் மூலமாகவும் பெறப்பட்ட நீதியை நமக்குத் தரப்போவதை உணர்த்துவதற்காக அவர் ஞானஸ்நானம் பெற்றார் (2 கொரி. 5:21). அவருடைய சரீரத்தின் அங்கத்தவராகிறவர்களும் இயேசு கிறிஸ்துவின் உதாரணத்தைப் பின்பற்றி மரணத்திலும், உயிர்த்தெழுதலிலும் அவரோடு தங்களுக்கிருக்கும் ஐக்கியத்தை உணர்த்துமுகமாக ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அப்போஸ்தலர்களின் நடைமுறை
இயேசு கிறிஸ்துவின் போதனையையும், உதாரணத்தைப் பின்பற்றி அவருடைய அப்போஸ்தலர்களும் விசுவாசிகளுக்கு மட்டும் ஞானஸ்நானம் கொடுத்தார்கள். எத்தியோப்பிய மந்திரிக்கு பிலிப்பு ஞானஸ்நானத்தை இந்த முறையிலேயே கொடுத்திருக்கிறார். “அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் தண்ணீரில் இறங்கினார்கள். பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங் கொடுத்தான். அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது . . .” என்று எழுதியிருப்பதை அப்போஸ். 8:38, 39ல் வாசிக்கிறோம். இந்த வசனங்கள் அங்கே ஞானஸ்நானம் எந்த முறையில் கொடுக்கப்பட்டது என்பதைத் தெளிவாக விளக்குகின்றன. இந்தப் பகுதியை வைத்து தெளிப்பு ஞானஸ்நானத்தை எவரும் வலியுறுத்த முடியாது. இந்த முறையிலேயே ஆதி சபைக் காலத்தில் மனந்திரும்பி இரட்சிப்பைப் பெற்றுக்கொண்ட அனைவரும் ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.
திரித்துவ தேவனின் பெயரில் ஏன் திருமுழுக்கு அளிக்கப்பட வேண்டும்?
இரட்சிக்கப்பட்டவர்கள் கர்த்தரோடு இணைக்கப்பட்டு ஐக்கியத்தில் வந்திருப்பதை ஞானஸ்நானம் குறிக்கிறது. அவர்கள் கிறிஸ்துவின் சரீரத்தில் இணைக்கப்பட்டிருப்பதை அது குறிக்கிறது. ஆனால், விசுவாசிகள் கிறிஸ்துவோடு மட்டும் ஞானஸ்நானத்தினால் இணைக்கப்படவில்லை, திரித்துவ தேவனின் ஏனைய அங்கத்தவர்களான பிதாவோடும், ஆவியானவரோடும் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். இரட்சிக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவோடு மட்டும் ஐக்கியத்தில் வருவதில்லை; பிதாவோடும், ஆவியானவரோடும் ஐக்கியத்தில் வருகிறார்கள். இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டபோது பிதாவும், ஆவியானவரும் அன்றைய தினம் அவருக்குச் சாட்சி சொன்னார்கள் என்று வேதம் சொல்லுகிறது. இது கர்த்தர் திரித்துவ தேவனாக இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. பிதா, குமாரன், ஆவியான வராகிய மூவரும் மீட்பை நமக்குப் பெற்றுத்தரும் பணியில் பங்கேற்பதோடு, விசுவாசத்தின் மூலம் இரட்சிப்பை நமக்கு வழங்குவதிலும் அக்கறையோடு செயல்படுகிறார்கள். இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டிருக்கிற நாம் திரித்துவ தேவனோடு, அதாவது பிதா, குமாரன், ஆவியானவரோடு ஐக்கியத்தில் வருகிறோம். இதைத்தான் மத்தேயு 28ல் காணப்படும் கட்டளையின் மூலம் இயேசு நமக்கு சொல்லாமல் உணர்த்துகிறார். இயேசுவின் பெயரில் மட்டுமே ஞானஸ்நானம் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறவர்கள் வேதபோதனைகளை தெளிவாக அறிந்துகொள்ளவில்லை.