கேள்வி 104: திருவிருந்து (கர்த்தருடைய பந்தி) என்றால் என்ன?
பதில்: புதிய உடன்படிக்கையின் திருநியமங்களில் ஒன்று திருவிருந்து. கிறிஸ்து ஏற்படுத்தியபடி அப்பத்தையும், திராட்சை இரசத்தையும் அளிப்பதன் மூலமும், அவற்றில் பங்குகொள்வதன் மூலமும் கிறிஸ்துவின் மரணம் திருவிருந்தில் எடுத்துக்காட்டப்படுகிறது. தகுதியோடு அதில் பங்குபெறுகிறவர்கள் சரீரப் பிரகாரமாகவோ, மாம்சப்பிரகாரமாகவோ அல்லாமல் விசுவாசத்தினால் கிறிஸ்துவின் சரீரத்திலும், திரு இரத்தத்திலும், அவருடைய சகல பலாபலன்களிலும் பங்காளர்களாகி ஆத்மீக போஷாக்கடைந்து கிருபையிலும் வளர்கிறார்கள்.
(1 கொரி. 11:23-26; 1 கொரி. 10:16).
கேள்வி 105: தகுதியோடு திருவிருந்தைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமானவை யாவை?
பதில்: திருவிருந்தைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ளவர்கள் அபாத்திரமாய் திருவிருந்தில் பங்குகொண்டு ஆக்கினைத்தீர்ப்பை அடையாதபடிக்கு, கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறிந்துகொள்ளுகிறோமா என்று தங்களுடைய அறிவையும், திருவிருந்தைப் புசிக்கும்படியாக தங்களுடைய விசுவாசத்தையும், தங்களுடைய மனந்திரும்புதலையும், அன்பையும் சோதித்துப் பார்த்து புதிய கீழ்ப்படிதலோடு திருவிருந்தில் பங்குகொள்ள வேண்டும்.
(1 கொரி. 11:28-29; 2 கொரி. 13:5; 1 கொரி. 11:31; 1 கொரி. 11:16-17; 1 கொரி. 5:7-8).
விளக்கக்குறிப்பு: கர்த்தரின் வேதம் புதிய ஏற்பாட்டின் நான்கு பகுதிகளில் திருவிருந்தைப் பற்றிய விளக்கத்தைத் தருகிறது. மத்தேயு 26:26-29; மாற்கு 14:22-25; லூக்கா 22:17-20; 1 கொரி. 11:23-26. இந்நான்கு பகுதிகளிலும் திருவிருந்து பற்றிய தெளிவான விளக்கங்களைக் கர்த்தர் நமக்குத் தந்திருக்கிறார். இருந்தபோதும் இதுபற்றிய பல தவறான போதனைகளை உருவாக்கி சுவிசேஷத்தைப் பலர் குழப்பப் பார்த்திருக்கிறார்கள். திருவிருந்து பற்றிய இந்த வினாவிடைப் போதனை அத்தகைய தவறுகளில் இருந்து நம்மைக் காப்பாற்ற முனைகின்றது.
கத்தோலிக்க மதத்தின் போதனை
இந்த இரு வினாவிடைகளில் இருந்து திருவிருந்தின் இரண்டு வெளிப்புற அம்சங்களாக அப்பமும், திராட்சை இரசமும் இருப்பதைக் கவனிக்கிறோம். சரீரபூர்வமாகவோ, உலகப்பிரகாரமாகவோ இவற்றில் கிறிஸ்துவின் சரீரமோ, இரத்தமோ இருக்கவில்லை என்கின்றன இந்த வினாவிடைகள். இவற்றின் மூலம் சரீரப்பிரகாரமாக கிறிஸ்து தன்னை ஒப்புக்கொடுப்பதில்லை. இவற்றை ஆத்துமாக்களுக்கு சபைப் போதகர் அளிக்கும்போது கண்கட்டி வித்தைபோல் இந்த இரண்டு அம்சங்களும் உருமாற்றமடைவது போன்ற எந்த அற்புதமும் அங்கே நிகழ்வதில்லை. ரோமன் கத்தோலிக்க மதம் இதைத்தான் போதித்து வருகிறது. இது பெருந்தவறு. கத்தோலிக்க மதம், மாஸ் ஆகிய அற்புதம் நிகழ்கிறபோது அப்பம் கிறிஸ்துவின் சரீரமாகவும், திராட்சை இரசம் கிறிஸ்துவின் இரத்தமாகவும் உடனடியாக மாறிவிடுகின்றன என்ற தவறான போதனையை அளிக்கின்றது. இதை ஆங்கிலத்தில் Transubstantiation என்று அழைக்கிறார்கள். இதன் மூலம் மாஸ் நிகழ்கிறபோது அப்பமும், இரசமும் அற்புதமாக உருமாறிவிடுகின்றன என்கிறது கத்தோலிக்க மதம். அப்பத்தையும், திராட்சை இரசத்தையும் பெற்றுக்கொள்கிறவர்கள் மெய்யாகவே கிறிஸ்துவின் சரீரத்தையும், இரத்தத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள் என்கிறது கத்தோலிக்க மதம். கத்தோலிக்க மதப்போதனை தவறானது. இருந்தபோதும் வேதத்தில் இத்தகைய அற்புதத்தை நம்மால் வாசிக்க முடிகிறது. இயேசு கானானில் நடந்த திருமண வைபவத்தில் தண்ணீரை மெய்யான திராட்சை இரசமாக மாற்றினார். அது உண்மையான Transubstantiation. இதை யோவான் 2:1-11ல் வாசிக்கலாம். அத்தினத்தில் வெறுந் தண்ணீரை இயேசு திராட்சை இரசமாக்கினார். அன்று இயேசு அற்புதம் செய்வதற்கு முன் தண்ணீர் தண்ணீராக மட்டுமே இருந்தது என்பதை எல்லோரும் அறிந்திருந்தார்கள். இயேசு அற்புதம் செய்த பிறகு தண்ணீர் திராட்சை இரசமாக மாறியதையும் எல்லோரும் உணர்ந்தார்கள். இந்த அற்புதத்திற்கு அன்று பெருந்தொகையான சாட்சிகள் இருந்தார்கள். இந்த அற்புதத்தை அவர்களுக்கு எவரும் விளக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஆனால், ரோமன் கத்தோலிக்க மதம் அப்பமும், திராட்சை இரசமும் கிறிஸ்துவின் சரீரமாகவும், இரத்தமாகவும் மாறுவதாக பொய்யைச் சொல்லி மனிதர்களை நம்பவைக்க முயல்கிறது. இயேசு கானானில் செய்த அற்புதத்தைப்போல மாஸின்போது அப்பமும், திரா ட்சை இரசமும் மாற்றமடைவதில்லை.
லூதரன் சபையின் போதனை
லூதரன் சபையினர் திருவிருந்து பற்றிய இன்னொருவித போதனையைக் கொடுக்கிறார்கள். இவர்களுடைய விளக்கத்துக்கு Consubstantiation என்று பெயர். இவர்களுடைய விளக்கத்தின்படி ஆரம்பத்தில் அப்பம் அப்பமாக வும், திராட்சை இரசம் திராட்சை இரசமாகவுமே இருக்கின்றன. ஆனால், திருவிருந்து கொடுக்கப்படுகின்ற நேரத்தில் திடீரென அப்பத்தில் கிறிஸ்துவின் சரீரம் வந்து இணைந்துகொள்வதாக அல்லது தங்கிவிடுவதாக அவர்கள் விளக்கமளிக்கிறார்கள். அதாவது அப்பம் அப்பமாகத்தான் இருக்கிறது; இருந்தபோதும் அதில் கிறிஸ்துவின் சரீரமும் புதிதாக சேர்ந்துகொள்கிறது என்பது அவர்களுடைய விளக்கம். உதாரணத்திற்கு, கொல்லனொருவன் இரும்பை உலையில் போட்டு சூடாக்குகிறான் என்று வைத்துக் கொள் வோம். அவன் அதை உலையில் இருந்து வெளியில் எடுக்கும்போது அந்த இரும்பு கொதிக்கும் சூட்டோடு இருப்பதைப் பார்க்கிறோம். இரும்பு இப்போதும் இரும்பாகத்தான் இருக்கிறது. இரும்பு தன் நிலையை இழந்து விடவில்லை. ஆனால், அதோடு தகிக்கும் வெப்பம் சேர்ந்திருப்பதால் இப்போது தகிக்கும் இரும்பாக அது இருக்கிறது. இந்தவிதமாகத்தான் லூதரன் சபையாரின் போதனை இருக்கிறது.
சீர்திருத்த சபையாரின் போதனை
இதுவரை நாம் பார்த்த இந்த இரண்டு விளக்கங்களின்படியும் கிறிஸ்துவின் சரீரத்தையும், இரத்தத்தையும் திருவிருந்தில் பங்குபெறுகிறவர்கள் “சரீரப்பிரகாரமாகவும் உலகப்பிரகாரமாகவும்” அநுபவிக்கிறார்கள். அதாவது திருவிருந்தில் பங்குபெறுகிறவர்கள் நரமாமிசத்தை உண்கிறவர்கள் போல் கிறிஸ்துவின் சரீரத்தை உண்டு அவருடைய இரத்தத்தை அருந்துகிறார்கள். ஆனால், இந்த இரண்டு போதனைகளும் முற்றிலும் வேதத்துக்குப் புறம்பானவை. இப்போதனைகளுக்கு மாறாக சீர்திருத்த திருச்சபைப் போதனையாளர்களின் திருவிருந்து பற்றிய விளக்கம் அமைந்திருக்கின்றது. சீர்திருத்தப் போதனையின்படி அப்பமும், திராட்சை இரசமும் திருவிருந்து கொடுக்கும்போது அதே நிலையிலேயே எந்தவித மாற்றத்தையும் அடையாமல் இருக்கின்றன. அவற்றைப் பெற்றுக்கொள்கிறவர்கள் கிறிஸ்துவின் சரீரத்தையும், இரத்தத்தையும் நினைப்பூட்டும் அம்சங்களாக மட்டுமே அவற்றைக் கருதி, தங்களுடைய விசுவாசத்தினால் ஒரே தடவை நிறை வேறிய கிறிஸ்துவின் கல்வாரி சிலுவைப் பலன்களை ஆத்மீகரீதியில் அடையும்படியாக அவற்றைப் பெற்றுப் புசிக்கிறார்கள். இதுவே சீர்திருத்தப் போதனை (Reformed Doctrine) திருவிருந்துக்கு தரும் விளக்கம். இந்த விளக்கமே வேதபூர்வமான விளக்கமாகும்.
இயேசு கிறிஸ்து தன்னுடைய சீஷர்கள் மத்தியில் திருவிருந்தை ஏற்படுத் தியபோது சீஷர்கள் அவருடைய சரீரத்தையும், இரத்தத்தையும் புசிக்கவில்லை. அப்போது அப்பமும், திராட்சை இரசமும் மாற்றமடையவில்லை. அவற்றில் இயேசு சரீரப்பிரகாரமாக இருக்கவில்லை. இயேசு அவர்களுக்கு தன்னுடைய சரீரத்தையோ, இரத்தத்தையோ கொடுக்கவில்லை. இயேசு அவர்கள் மத்தியில், அவர்களோடு இருந்து அப்பத்தையும், திராட்சை இரசத்தையும் மட்டுமே அவர்களுக்கு அளித்தார். இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து பின்னால் பவுல் திருவிருந்து பற்றி 1 கொரி. 11ல் விளக்கம் கொடுக்கும்போது பின்வருமாறு கூறுகிறார்: “நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாக இருக்கிற தல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமா யிருக்கிறதல்லவா?” (1 கொரி 10:16). “ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்” (1 கொரி. 11:26). பவுலின் வார்த்தைகளில் இருந்து அப்பமும், இரசமும் கிறிஸ்துவின் மரணத் தின் மூலம் நாமடைந்திருக்கிற ஆத்மீகப் பலன்களைக் குறிப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. திருச்சபைத் தலைவர்களில் ஒருவரான ஆகஸ்டீன் (Augustine) ஒருமுறை சொன்னார்: “யூதாஸ் இயேசுவோடிருந்து அப்பத்தைச் சாப்பிட்டான், ஆனால், அப்பத்தோடு இயேசுவைச் சாப்பிடவில்லை”.
நம்மை நாமே சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் (Self Examination)
ருவிருந்தைப் பெற்றுக்கொள்ள வரும்போது ஆத்துமாக்கள் தங்களைத் தாங்களே நிதானித்து அறிய வேண்டு¢ம் என்று பவுல் சொல்லுகிறார். அதாவது, அவர்கள் தங்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது இதன் பொருள். திருவிருந்தின் மூலம் நாம் ஆத்மீக பலன்களை அடைவதால் சுயபரிசோதனை அவசியமாகிறது. இது திரு விருந்தெடுக்கும்போது மிகவும் அவசியமாகிறது. 1 கொரி. 11ல் பவுல் திருவிருந்து பற்றி விளக்கம் கொடுக்கும்போது, “அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசிக்கக்கூடாது” என்று சொன்னதன் பொருளை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். பொதுவாகவே அநேகர் திருவிருந்தெடுப்பதற்கு தாம் தகுதியற்றவர்கள் என்று எண்ணி இருந்து விடுகிறார்கள். நம்மில் எவருமே திருவிருந்தில் பங்குகொள்ளத் தகுதியற்றவர்கள்தான். நாமெல்லோருமே பாவிகளாக கர்த்தருக்கு முன் தேவ மகிமையை இழந்து நிற்கிறோம் (ரோமர் 3:23). திருவிருந்தெடுப்பதற்கு தகுதியுள்ளவர்களாய் இருப்பது அவசியம். ஆனால், அதற்குப் பொருள் கர்த்தருடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு நாம் தகுதியுள்ளவர்களாய் இருப்பது என்பதல்ல. கிறிஸ்துவின் மரணத்தை நினைவுறுத்தும் திருவிருந்தில் பங்குகொள்ள வருகிறோம் என்ற சிந்தனையோடும், செய்யப்போகிற காரியத்துக்குத் தகுந்த மனநிலையோடும், சிந்தனையோடும், இருதயத்தில் பரிசுத்தத்தோடும் வருவதையே அது குறிக்கிறது. இதன் மூலம் திருவிருந்து எடுக்க வருகிற வேளையில் ஏனோதானோவென்று அலட்சியமாக வந்து அதை அசட்டை செய்யக்கூடாது என்று விளக்குகிறார் பவுல். அதற்கு மாறாக திருவிருந்து எடுக்க வருகிறவர்கள் சுயபரிசோதனைக்கு தம்மை உட்படுத்தி கர்த்தருக்கு முன் நாம் பாவிகள் என்ற சிந்தனையோடு, அவருடைய எந்த ஆசீர்வாதத்துக்கும் நாம் தகுதியற்றவர்கள் என்ற தாழ்மையுணர்வோடு, கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் மூலம் மட்டுமே பரலோக பாக்கியம் தமக்குண்டு என்ற ஆத்மீக சிந்தனைகளோடும் தேவபயத்தோடும் அதில் பங்குகொள்ள வேண்டும்.
இந்த வினாவிடை “கர்த்தருடைய சரீரத்தை நிதானித்து அறிந்து கொள்ளுகிறோமா” என்று நம்முடைய அறிவை ஆராய்ந்து பார்க்கும்படி சொல்லுகிறது. இதற்கு அர்த்தம், கிறிஸ்துவின் மரணத்துக்கும் ஏனைய எல்லா மரணங்களுக்கு இடையில் உள்ள வேறுபாட்டை நாம் அறிந்திருக்கிறோமா என்று நம்மையே ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதுதான். இதன் மூலம் தன்னுடைய மக்களுக்காக அவர்களுடைய பாவங்களையும், தேவ கோபத்தையும் தன்மேல் தாங்கி மரித்திருக்கும் கிறிஸ்துவின் மரணத்தை நாம் உணர்ந்து மதித்து திருவிருந்தில் கலந்துகொள்ள வேண்டும் என்பது பொருள். சுருக்கமாக சொல்லப்போனால், கிறிஸ்து நமக்காக தம்மையே பலிகொடுத்து நமது இரட்சிப்புகுரிய அனைத்தையும் நிறை வேற்றி நம்மை இரட்சித்திருக்கிறார் என்பதை நாம் உணர்ந்து தாழ்மையோடு திருவிருந்தில் பங்குகொள்ள வேண்டுமென்பதுதான். ஆகவே, திருவிருந்தில் பங்குகொள்ள பாத்திரமான மனிதன் தான் எந்தளவுக்கு தகுதியற்றவன் என்பதை உணர்ந்து கர்த்தரிடம் மிகுந்த நன்றியறிதலோடு வருகிறவனாக இருக்க வேண்டும்.
திருவிருந்தில் கலந்துகொள்ள பாத்திரமுள்ளவனாக இருக்க கிறிஸ்து நமக்காக என்ன செய்திருக்கிறார் என்பதை அறிவுபூர்வமாக உணர்ந்திருப்பது மட்டும் போதாது. அதற்கும் மேலாக நம்முடைய இருதயத்தை நாம் சோதித்துப் பார்த்து கர்த்தரோடு நமக்கு நல்ல ஆத்மீக உறவும், ஐக்கியமும் இருக்கிறதா என்றும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். நொருங் குண்டதும், நறுங்குண்டதுமான இருதயத்தை நாம் கொண்டிருக்கிறோமா என்றும், கிறிஸ்துவில் நாம் தொடர்ந்து விசுவாசத்தோடு இருக்கிறோமா என்றும், அவரில் அன்பு தொடர்ந்து நிலையாக இருக்கிறதா என்றும், அந்த அன்பின் அடிப்படையில் அவருக்குக் கீழ்ப்படிந்து நடந்து வருகிறோமா என்றும் நம்மை நாம் ஆராய்ந்து பார்த்துக்கொள்ளும்படி வேதம் வற்புறுத்துகிறது. இந்த இடத்தில்தான் அநேக விசுவாசிகள் தங்களைப் பற்றிய சந்தேகத்துடன் வாழ்கிறார்கள். கர்த்தரில் இருக்க வேண்டிய அளவுக்கு விசுவாசம் இல்லையே, அன்பு இல்லையே, மனந்திரும்புதல் இல்லையே என்று எண்ணிப் பார்த்து தங்களைப் பற்றிய சந்தேகத்துடன் வாழ்கிறார்கள். இத்தகைய எண்ணப்போக்கைப் பொதுவாகவே பல விசுவாசிகளில் காணலாம். ஆனால், இந்த இடத்தில் விசுவாசிகள் கவனமாக நடந்துகொள்ள வேண்டியது அவசியம். நம்மை நாம் பரிசோதித்து மனந்திரும்புதலும், அன்பும், விசுவாசமும், கீழ்ப்படிதலும் உண்டா என்று ஆராய்ந்து பார்ப்பது அவசியம். ஆனால், அத்தகைய பரிசோதனைக்குப் பிறகு இவையெல்லாம் நம்மில் மிகவும் அதிகமாகவும், பூரணமாகவும் இருப்பதாக உணர்ந்து முழுத்திருப்தியுடன் நமது முதுகை நாமே தட்டிக்கொடுக்க வேண்டும் என்று வேதம் எந்த இடத்திலும் சொல்லவில்லை. அப்போஸ்தலனாகிய பவுல் கூடத் தன்னுடைய இருதயத்தைப் பரிசோதித்துப் பார்த்து, “நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? என்றுதான் அங்க லாய்த்திருக்கிறார். இதிலிருந்து அவர்கூடத் தன்னில் விசுவாசமும், அன்பும், கீழ்ப்படிதலும் வெறும் ஆரம்ப நிலையில் இருந்ததையே உணர்ந்திருக்கிறார் என்று அறிந்துகொள்ளுகிறோம். அப்படியானால் பவுல் எப்படி திருவிருந்தில் கலந்துகொள்ள வந்தார்? ஏனென்றால், கிறிஸ்து பாவிகளை இரட்சிக்க இந்த உலகத்துக்கு வந்தார் என்பதை அவர் அறிந்திருந்தார். அத்தோடு தான் வெறும் அடிமட்டப்பாவியாக இருந்தபோதும் கிறிஸ்து மட்டுமே தனக்கு எல்லாம் என்பதையும், தன்னுடைய இருதயத்தின் ஆனந்தமும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். கர்த்தரின் கிருபையின் விளைவுகளுக் கான சாட்சியங்களைத் தன் இருதயத்தில் சிறிதளவாகவே அவர் கண்ட போதும், கிறிஸ்துவின் நிறைவேறிய சிலுவைத் தியாகமும், அவரும் இல்லாவிட்டால் தனக்கு பரலோகமில்லை என்பதை அவர் உணர்ந்திருந்தார். இன்னொருவிதமாக சொல்லப்போனால் எந்தளவுக்கு இந்தக் கிருபைகள் நம்மில் வளர்ந்திருக்கின்றன என்பதைப் பற்றியல்லாமல் அந்தக் கிருபைகள் நம்மில் தொடர்ந்திருக்கின்றனவா என்பதை அறிந்துணர்வதிலேயே நாம் அதிக அக்கறை காட்டவேண்டும். இந்தவிதமான எண்ணங்களோடு திருவிருந்தில் கலந்துகொள்ள வராதவர்களே ஆபத்தான நிலையிலிருக் கிறார்கள். அப்படிப்பட்டவர்களே இஸ்ரவேலின் பரிசேயர்கள். அவர்கள் தங்களைப் பற்றிய பெருமிதமான எண்ணங்களோடு கர்த்தரின் ஆலயத்துக்கு வந்தார்கள். கர்த்தரை ஆராதிக்கவும், அவர் முன் ஜெபிக்கவும் தங்களுக்கு எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன என்ற அகங்காரத்துடன் ஆலயத்துக்கு வந்தார்கள். பாவ உணர்வு துளியும் அவர்களுடைய இருதயங்களில் இருக்கவில்லை. ஆனால், புறஜாதியானோ, “கர்த்தாவே, என் பாவங்களை மன்னியும்” என்று கர்த்தரின் முன் மண்டியிட்டான் (லூக்கா 18:10-13). பாவத்தைத் தவிர தன்னில் வேறு எதுவுமில்லை என்ற உணர்வோடு அந்தப் பாவத்துக்கு கர்த்தர் மட்டுமே பரிகாரம் செய்ய முடியும் என்ற தூய உணர்வுகளோடு அவன் கர்த்தரின் முன் பணிந்தான். அவனையே நாம் பின்பற்ற வேண்டும்.
திருவிருந்தில் பங்குகொள்ள வரும்போது பாவமன்னிப்பைப் பெறவும், இயேசுவின் திருஇரத்தத்தால் நாம் கழுவப்பட வேண்டும் என்ற எண்ணத் தோடும், நாம் மேலும் மேலும் பரிசுத்தராக வாழ கர்த்தர் நமக்கு வல்லமையைத் தரவேண்டும் என்ற எண்ணத்தோடும் வந்து அதில் கலந்துகொண்டு கர்த்தரில் களிப்படைய வேண்டும். அப்படித் திருவிருந்தில் நாம் கலந்து கொள்ளுகிறபோது, அவ்வேளையில் அப்பம் பகிர்ந்து கொடுக்கப்பட்டு, திராட்சை இரசம் எல்லோருக்கும் விநியோகிக்கப்படுகிறபோது, கிறிஸ்துவின் ஒரே தடவை நிறைவேறிய கல்வாரி சிலுவைத் தியாகத்தினால் மட்டுமே நமக்கு இரட்சிப்பு கிடைத்திருக்கிறது, வேறு எதனாலும் அல்ல என்று நாம் அவருக்கே சகல மகிமையையும் அளிக்கிறோம். திருவிருந்தின் மூலம் அவர் மட்டுமே சகல மகிமையையும் அடைய வேண்டும்.