இந்த உலகத்தில் திருச்சபை ஊழியப் பணிகளை எந்தமுறையில் செய்ய வேண்டும் என்று கர்த்தர் வேதத்தில் விளக்கியிருக்கின்ற விதிகளைப் பற்றி (Principles of Mission) 11/2-2005 இதழில் இருந்து தொடர்ச்சியாக எழுதி வந்திருக்கிறோம். அதைத் தொடருவதற்கு சூழ்நிலைகள் இடந்தரவில்லை. இந்த இதழில் இதுவரை நாம் பார்த்திருப்பவை பற்றி சுருக்கமாகக் கவனித்துவிட்டு தொடர்ந்து திருச்சபை ஊழியப்பணிகள் பற்றி வேதம் நமக்குத் தரும் போதனைகளை ஆராய முற்படுவோம். கிறிஸ்துவின் வழியில் திருச்சபை ஊழியங்களைச் செய்யவேண்டுமானால் நாம் அறிந்திருக்க வேண்டிய மூன்று முக்கிய வேதவிதிகளை இதுவரை பார்த்திருக்கிறோம்:
(1) திருச்சபையை இந்த உலகத்தில் கர்த்தர் தம்முடைய இறையாண்மையின் அடிப்படையில் அமைக்கிறார். இந்த சத்தியத்தை நாம் நினைவுகூருவதற்குக் காரணம் திருச்சபை ஊழியப்பணியில் ஈடுபடும்போது அந்தப்பணி சர்வ வல்லவராகிய கர்த்தருடையது என்பதையும், அந்தப்பணியில் கர்த்தருடைய அதிகாரத்துக்குட்பட்டு தேவ பயத்தோடேயே நாம் இந்த உலகத்தில் ஈடுபட வேண்டுமென்பதையும் நாம் ஆரம்பத்திலேயே உணரவேண்டு மென்பதற்காகத்தான். நம்முடைய திருச்சபை அமைப்புப் பணிகள் அனைத்தும் கர்த்தருடைய இறையாண்மையைக் கருத்தில் கொண்டு அதற்குக் கட்டுப்பட்டு அமைந்தவையாக இருக்க வேண்டும் (11/4-2005).
(2) கர்த்தரின் வார்த்தை சகல அதிகாரத்தையும் தன்னில் கொண்டு அனைத்தின் மீதும் அதிகாரமுள்ளதும், சகலத்துக்கும் போதுமானதாகவும் இருக்கின்றது. இந்த சத்தியத்தின் மூலம் நாம் திருச்சபை அமைக்கும் பணி கர்த்தரின் அதிகாரமுள்ள வார்த்தைக்குட்பட்டு அமையவேண்டுமென்பதை அறிந்து கொள்கிறோம். கர்த்தருடைய அதிகாரமுள்ள வார்த்தையே திருச்சபை அமைப்புப் பணி பற்றிய சகல போதனைகளையும் நமக்குத் தருவதாக இருக்கிறது. (12/1-2006).
(3) சுவிசேஷ ஊழியத்தில் திருச்சபையே அதிமுக்கியமானதும், அடிப்படையானதுமான இடத்தை வகிக்கிறது. சுவிசேஷ ஊழியங்கள் எப்போதும் திருச்சபையில் ஆரம்பித்து திருச்சபை அமைப்பதிலேயே போய் முடியவேண்டும். திருச்சபை அமைக்கும் பணியில் அல்லது திருச்சபையில் ஆத்துமாக்களைக் கொண்டு சேர்க்கும் பணியில் போய் முடியாத சுவிசேஷ ஊழியங்கள் அறைகுறை ஊழியங்களே. சுவிசேஷத்தைக் கர்த்தர் தந்திருப்பதற்குக் காரணமே அதனால் விடுதலை அடைகின்ற ஆத்துமாக்கள் அவருடைய சபையில் இருந்து வளரவேண்டுமென்பதற்காகத்தான் (12/2–2006).
இனி நாம் திருச்சபை ஊழியப்பணியைச் செய்வதற்கு அவசியமான வேதம் போதிக்கும் நான்காவது விதியை விளக்கமாகப் பார்ப்போம்.
(4) அப்போஸ்தலர்களுடைய போதனைகளையும் அவர்களுடைய வழிமுறைகளையும் பின்பற்றித் திருச்சபைகள் இந்த உலகத்தில் அமைய வேண்டும். – திருச்சபை அமைக்கும் பணியை நாம் எதிலிருந்து அறிந்துகொள்கிறோம்? பாவத்தில் இருக்கும் இந்த உலகம் அதைப் பற்றி நமக்கு விளக்க முடியாது. உலக ஞானம் இந்த ஆத்மீகப் பணிக்கான ஆலோசனைகளைத் தரமுடியாது. அப்படியானால் கர்த்தர் மட்டுமே தன்னுடைய திருச்சபையை இந்த உலகத் தில் எப்படி அமைக்க வேண்டும் என்பதை நமக்கு காட்டித்தர வேண்டும். அதை அவர் நமக்கு எதன் மூலம் காட்டித்தருகிறார்? ஆதியில் தேவன் பங்குபங்காகவும், வகைவகையாகவும் பேசினார். கர்த்தரின் வெளிப்படுத்தல் அனைத்தும் ஒட்டுமொத்தமாக எழுத்தில் வடிக்கப்பட்டு வேதமாக நமக்கு அளிக்கப்பட்டபின்பு கர்த்தர் நேரடியாக நம்மோடு பேசுவதையும், தீர்க்கதரிசிகள் மூலம் பேசுவதையும் நிறுத்திக்கொண்டுவிட்டார். கர்த்தர் இன்று வேதத்தின் மூலம் மட்டுமே நம்மோடு தொடர்ந்து பேசிக்கொண் டிருக்கிறார். அதனால்தான் ஏற்கனவே இரண்டாவது விதியில் கர்த்தருடைய வேதம் அதிகாரமுள்ளது என்பதைப் பார்த்தோம். நாம் எப்படி வாழ வேண்டும் என்றெல்லாம் கர்த்தர் தம்முடைய வேதத்தில் இருந்து மட்டுமே நமக்கு வழிகாட்டி வருகிறார். வேதமே அவருடைய நாவாக இன்று இருந்து வருகிறது. வேத போதனைகளே அவருடைய சித்தமாக இருந்துவருகிறது. வேதத்தை நிராகரிப்பது கர்த்தரை நிராகரிப்பதற்கு சமம்.
இதையெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால் திருச்சபை அமைப்புப் பணி பற்றி கர்த்தர் இன்றைக்கு தன்னுடைய வேதத்தின் மூலம் மட்டுமே நமக்கு வழிகாட்டி வருகிறார். சத்திய வேதம் ஆதியில் திருச்சபை எப்படி அமைக்கப்பட்டது என்பதை நமக்கு விளக்கி ஆதிசபையை உதாரணங் காட்டியும், அப்போஸ்தலர்களுடைய போதனைகள் மூலமாகவும் திருச்சபை ஊழியப் பணி பற்றிய சகல விளக்கங்களையும் நமக்குத் தருகிறது. அப்போஸ்தல நடபடிகள் விளக்கும் ஆதித் திருச்சபை அமைக்கப்பட்ட முறையும், புதிய ஏற்பாட்டு அப்போஸ்தலப் போதனைகளும் இல்லாமலிருந் திருந்தால் நாம் இந்த உலகத்தில் திருச்சபை ஊழியப்பணியில் ஈடுபடவே முடியாது. வேதம் விளக்குகின்ற அந்தப் போதனைகளை நாம் நிராகரிப் போமானால் நமது திருச்சபை ஊழியப்பணி கர்த்தரைச் சார்ந்ததாக ஒருபோதும் இருக்கமுடியாது. அப்போஸ்தல நடபடிகளும், புதிய ஏற்பாட்டு அப்போஸ்தலப் போதனைகளுமே திருச்சபை ஊழியப்பணியில் நாம் எப்படி ஈடுபட வேண்டும் என்ற விளக்கங்களையெல்லாம் தருகின்ற சத்திய வசனங்களாக இருந்து வருகின்றன. அந்தப் போதனைகளை மீறி அமைகின்றவையும், அந்தப் போதனைகளோடு ஒத்துவராதவையும் கர்த்தருடைய ஊழியங்களாக ஒருபோதும் நிச்சயமாக இருக்க முடியாது. இனி புதிய ஏற்பாட்டில் நாம் பார்க்கின்ற திருச்சபை ஊழியம் பற்றிய அப்போஸ்தலப் போதனைகளை விபரமாக ஆராய்வோம்.
அ. பெந்தகொஸ்தே தினத்தில் திருச்சபையின் பிறப்பு
இயேசு கிறிஸ்து பன்னிரெண்டு சீஷர்களைத் தயார் செய்து சுவிசேஷ ஊழியத்தின் மூலம் சபை நிறுவ மத்தேயு 28:18-20 கட்டளையின்படி அவர்களை அனுப்பி வைத்தார். எருசலேமில் அவர்கள் கூடி சுவிசேஷத்தை அறிவித்து பெந்தகொஸ்தே நாளில் திருச்சபை மூவாயிரம் பேரோடு வளர்ந்ததை அப்போஸ்தலர் நடபடிகள் நமக்கு விளக்குகின்றது. திருச்சபை பிறந்த இந்த ஆரம்பகாலப் பகுதியில் அது அப்போஸ்தலர்களால் ஆரம்பிக்கப்பட்டது என்பதை நாம் அறிய முடிகின்றது. இக்காலப்பகுதியில் விசுவாசிகளிடம் பழைய ஏற்பாடு மட்டுமே இருந்தது. கர்த்தர் இக்காலப்பகுதியில் அப்போஸ்தலர்கள் மூலமாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாகவும் தனது சித்தத்தைத் தொடர்ந்து தம் மக்களுக்கு வெளிப்படுத்தி வந்தார். இதனால் திருச்சபை தன்னுடைய ஆரம்ப காலப்பகுதியில் விசேஷமான வரங்களைக் கொண்டவர்களைத் தன்னில் கொண்டிருந்ததை அறிய முடிகிறது. திருச்சபை நிறுவப்பட்டு வளர்ந்து வந்தபோது இந்த அப்போஸ்தலர்களும், தீர்க்கதரிசிகளும், ஏனைய அற்புத வரங்களைக் கொண்டிருந்தவர்களும் மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தனர். அதற்குப் பிறகு கர்த்தர் சபைக்கு அப்போஸ்தலர்களைத் தரவில்லை. அப்போஸ்தலர்களுடைய காலம் ஆதி சபையோடு முடிந்துவிட்டது. அதற்குக் காரணம் கர்த்தருடைய சித்தம் முழுவதுமாக பழைய புதிய ஏற்பாட்டு நூல்களாக எழுதி முடிக்கப்பட்டதுதான். வேதம் நமக்கு பூரணமாகக் கொடுக்கப்பட்டபின் அப்போஸ்தலர்களுடைய அவசியம் திருச்சபைக்கு இல்லாமல் போனது. அதேபோல் தான் தீர்க்கதரிசிகளையும், அற்புத வரங்களைக் கொண்டிருந்தவர்களையும் கர்த்தர் அதற்குப் பிறகு தொடர்ந்து திருச்சபைக்குக் கொடுப்பதை நிறுத்திக் கொண்டார். எனவே, பெந்தகொஸ்தே தினத்திலும் அதற்குப்பிறகு திருச்சபை நிறுவப்பட்டு வளர்ந்த ஆதிகாலத்திலும் நிகழ்ந்த அனைத்து நிகழ்ச்சிகளையும், கிரியைகளையும் நாம் தொடர்ந்து திருச்சபையில் இன்று எதிர்பார்க்க முடியாது; கூடாது. இக்காலப்பகுதியில் நிகழ்ந்த செயல்களின் மூலம் போதிக்கப்படும் சத்தியங்களை மட்டுமே நாம் இன்று பின்பற்ற வேண்டும்.
பெந்தகொஸ்தே தினத்தில் அப்போஸ்தலர்கள் முதலில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்கள் என்று வாசிக்கிறோம். சுவிசேஷப் பிரசங்கமில்லாமல் திருச்சபை ஊழியம் செய்ய முடியாது. இயேசு கிறிஸ்துவே ஒரே தேவன் என்பதைத் தெளிவாக அவருடைய வருகை, சிலுவைத் தியாகம், மரணம், உயிர்த்தெழுதல் என்பவற்றோடு விளக்கி மக்கள் மனந்திரும்பி கிறிஸ்துவைத் தங்களுடைய இரட்சிப்புக்காக விசுவாசிக்க வேண்டுமென்று பிரசங்கித்தார்கள். அப்படி அவர்கள் சுவிசேஷத்தைச் சொல்லும்போது அதற்கு அவர்கள் பயன்படுத்திய ஆயுதம் பிரசங்கம் மட்டுமே என்பதையும் நாம் நினைவில் கொள்ளுவது அவசியம். பரிசுத்த ஆவியின் வல்லமையோடு கூடிய சுவிசேஷப் பிரசங்கமில்லாத எந்த ஊழியமும் திருச்சபைப் பணியாக இருக்க முடியாது. சுவிசேஷப் பிரசங்கத்தின் மூலம் பெந்தகொஸ்தே தினத்தில் திருச்சபை உதயமானது என்று வாசிக்கிறோம். இதிலிருந்து நாம் கவனிக்கும் சில முக்கிய உண்மைகள் பின்வருமாறு:
1. அன்று சுவிசேஷம் ஆவியின் வல்லமையால் பிரசங்கிக்கப்பட்டது.
2. அதைக் கேட்டு மனந்திரும்பிய விசுவாசிகள் (சீஷர்கள்) ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார்கள்.
3. சீஷர்களுக்கான அடையாளங்களைக் கொண்டிருந்து ஞானஸ்நானம் பெற்றவர்கள் மட்டும் திருச்சபை அங்கத்தவர்களாக சேர்த்துக்கொள்ளப் பட்டார்கள்.
திருச்சபை ஆரம்பமாக இந்த மூன்றும் அவசியமாக இருந்ததைப் பெந்தகொஸ்தே தினத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் மூலமாக அறிந்து கொள்ளுகிறோம். இவை எக்காலத்துக்கும் பொருந்துகிற சத்தியங்கள். அத்தோடு பெந்தகொஸ்தே தின நிகழ்ச்சிகளில் இருந்து வேறு சில பாடங்களையும் படிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். வேதபூர்வமான சுவிசேஷ ஊழியம் சபைகள் இல்லாத இடங்களில் திருச்சபைகள் அமைவதில் போய் முடிய வேண்டும். அல்லது திருச்சபைகள் இருக்கின்ற இடங்களில் மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் திருச்சபைகளில் போய் இணைந்து கொள்ளுவதில் முடியவேண்டும். இந்த இரண்டில் ஒன்று சுவிசேஷ ஊழியத்தின் மூலம் நிகழ்வதையே கர்த்தர் விரும்புகிறார், எதிர்பார்க்கிறார். சுவிசேஷ ஊழியத்தின் மூலம் மனந்திரும்பினேன் என்று சொல்லிக்கொண்டு எந்தவொரு சபையிலும் தங்களை இணைத்துக் கொள்ளாமல் திரிகிறவர்களைப் பற்றி இயேசு கேள்விப்பட்டதில்லை; அவர்களைப் பற்றி வேதத்திலும் நாம் வாசிப்பதில்லை.
ஆ. திருச்சபை விஸ்தரிப்பு
பெந்தகொஸ்தே தினத்தில் எருசலேமில் நிறுவப்பட்ட திருச்சபை அப்போஸ்தலர் நடபடிகள் 1:8ன்படி சுவிசேஷத்தை ஏனைய பகுதிகள் தோறும் பிரசங்கிக்க ஆரம்பித்தது. இப்படியாக சுவிசேஷம் பிரசங்கிக்கப் பட்டு திருச்சபைகள் எவ்வாறு நிறுவப்பட்டன என்பதை அப்போஸ்தலர் நடபடிகள் 13ம் அதிகாரம் நமக்குத் தெளிவாக விளக்குகின்றது. இதிலிருந்து நாம் திருச்சபை ஊழியப்பணி பற்றி அறிந்துகொள்ள வேண்டிய சத்தியங்கள் அநேகம். இந்த சத்தியங்களைப் பின்பற்றியே இன்றைக்கு நாம் இந்த உலகத்தில் திருச்சபை ஊழியப்பணியில் ஈடுபட வேண்டும். வேதபூர்வமாக திருச்சபை ஊழியப்பணிகள் அமைய வேண்டுமானால் வேதம் விளக்குகின்ற போதனைகளைப் பின்பற்றுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. அப்போஸ்தலர் நடபடிகள் 13 அதிகாரத்தில் திருச்சபை அமைப்புப் பற்றி நாம் கவனிக்கின்ற சத்தியங்கள் யாவை என்பதை இனி ஆராய்வோம்:
1. திருச்சபை அமைப்புப் பணி ஏற்கனவே நிறுவப்பட்டு வளர்ச்சியடைந்திருந்த அந்தியோகியா சபையில் இருந்து ஆரம்பித்தது.
அந்தியோகியா திருச்சபை எப்படி நிறுவப்பட்டது என்பதை அப்போஸ்தல நடபடிகளின் மூலம் விபரமாக அறிந்துகொள்கிறோம். எருசலேமில் சபைக்குத் துன்பம் உண்டாகியபோது யூதேயா, சமாரியா எங்கும் சபையார் சிதறிப்போய் சுவிசேஷ வசனத்தைப் பிரசங்கித்தார்கள் என்றும் (8:4) அதன் மூலம் அங்கெல்லாம் சபைகள் நிறுவப்பட்டதாகவும் அறிந்து கொள்ளுகிறோம் (8:4-14; 9:31). அதேபோல் சிதறிப்போனவர்கள யூதேயா, சமாரிய நாடுகளுக்கு வெளியில் பெனிக்கே நாடு, சீப்பூரு தீவு, அந்தியோகியா பட்டணம்வரையும் சுற்றித் திரிந்து சுவிசேஷம் சொன்னார்கள் (11:20-21). அவர்கள் மூலமாகவே அந்தியோகியாவில் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டு சபை நிறுவப்பட்டது (11:19-24). இங்கேதான் முதன் முதலாக கிறிஸ்துவை விசுவாசித்தவர்கள் “கிறிஸ்தவர்கள்” என்ற பெயரால் அழைக்கப்பட்டார்கள் (11:26). எருசலேம் சபையால் அனுப்பப்பட்டு அங்கு ஊழியம் செய்து வந்த பர்னபா பின்பு தர்சுவுக்குப் போய் அங்கிருந்த பவுலைத் தன்னோடு அழைத்துக் கொண்டு அந்தியோகியாவுக்குப் போய் ஒரு முழு வருடம் சபையோடு இருந்து அவர்களுக்கு இருவருமாக உபதேசம் செய்தார்கள் (11:24-26). இந்த சபை இப்படியாக நிறுவப்பட்டு வளர்ந்து வந்தது. இந்நாட்களில் உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாயிற்று. யூதேயாவில் இருந்த சகோதரர்களின் குறை நீக்க அந்தியோகியா சபையார் தங்கள் திராணிக்குத் தக்கதாக பணத்தைச் சேகரித்து பர்னபா, பவுல் மூலமாக எருசலேம் சபை மூப்பர்களுக்கு அனுப்பி வைத்தார்கள் (11:27-30).
இவ்வாறாக வேதம் தருகின்ற சாட்சியங்களின் மூலமாக எவ்வாறு அந்தியோகியா சபை நிறுவப்பட்டு வளர்ந்து வந்திருந்தது என்பதை நாம் அறிந்துகொள்ளுகிறோம். இந்த சபையைப் பற்றித்தான் நாம் மறுபடியும் அப்போஸ். 13ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். இந்த அதிகாரம் இந்த சபையைப் பற்றிய மேலும் விபரங்களை நமக்குத் தருகின்றது. இதன் முதல் வசனத்திலேயே (13:1) இந்த சபையில் அநேக போதகர்களும், தீர்க்கதரிசிகளும் இருந்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது. இந்தளவுக்கு சபையில் போதிப்பதற்கும், சபை நடத்தவும் அதிகாரிகள் இருந்த காரணம் சபை பெருமளவுக்கு எண்ணிக்கையில் வளர்ந்திருந்ததுதான். அந்தளவுக்கு சபையில் போதகர்களின் தேவையும், அவர்களுடைய ஊழியமும் அவசியமாயிருந்தது. கர்த்தர் புறஜாதியினரின் மத்தியில் சுவிசேஷத்தை மேலும் பரவச் செய்து திருச்சபைகளை நிறுவுவதற்கு முதல் மிஷனரிகளை அனுப்பிவைத்தபோது இந்த சபையில் இருந்தே அதை ஆரம்பித்திருக்கிறார் என்பதை இந்த அதிகாரத்தின் 2ம், 3ம் வசனங்களில் இருந்து தெரிந்துகொள்ளுகிறோம்.
இந்தத் தெளிவான வேத விபரங்கள் திருச்சபை ஊழியப்பணி பற்றி நமக்குத் தரும் போதனை என்ன? திருச்சபை அமைக்கும் ஊழியத்திற்கு கர்த்தர் தன்னுடைய சபையை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறாரே தவிர எந்த மிஷனரி ஸ்தாபனத்தையும், அசோசியேஷன்களையும் ஏற்படுத்தவில்லை என்பதை முதலில் நாம் உணர வேண்டும். திருச்சபை என்ற ஒன்று இருக்கின்றதே என்ற எண்ணமே இல்லாமலும், திருச்சபையைப் பற்றிய மேலான வேத எண்ணங்கள் இல்லாமலும் இன்றைக்கு சுவிசேஷப் பணியை ஏனோதானோவென்று ஸ்தாபனங்களைக் கொண்டு செய்து வருகின்றவர்கள் பெரிய தவறைச் செய்துவருகிறார்கள். இன்றைக்கு சுவிசேஷ ஊழியம் செய்கிற அநேகர் தங்களைத் தாங்களை அந்த ஊழியங்களுக்கு நியமித்துக்கொள்கிறார்கள் அல்லது வேதாகமக் கல்லூரிகளின் மூலமாகவோ, ஸ்தாபனங்களின் மூலமாகவோ அனுப்பப்படுகிறார்கள். ஆனால், வேதம் இந்தப் பணியைச் செய்யக்கூடிய கர்த்தர் நியமித்திருக்கும் ஒரே நிறுவனமாக சபையையே நமக்குக் காட்டுகிறது. சபையே ஊழியக் காரர்களைத் தெரிவுசெய்து இந்தப் பணிகளுக்கு அனுப்பிவைத்திருப்பதை அப்போஸ். 18ல் வாசிக்கிறோம். திருச்சபையை நிராகரித்து வேறு நிறுவனங்களை நாம் சுவிசேஷப் பணிக்காக நாடுகின்றபோது கர்த்தரின் திருச்சபையின் வல்லமையையும், அதன் மகிமையையும் நினைத்துப்பார்க்க மறந்துவிடுகிறோம்; அல்லது உதாசீனப்படுத்திவிடுகிறோம். திருச்சபை ஊழியத்தைச் செய்வதற்கு கர்த்தருக்கு தன்னுடைய சபையைத் தவிர வேறு எதுவும் தெரிந்திருக்கவில்லை; வேறு எதையும் அவர் பயன்படுத்தவுமில்லை. ஆரம் பத்தில் சுவிசேஷப் பணி திருச்சபை அமைப்பதில் முடிந்து அதிலிருந்தும் அதன் மூலமுமே ஏனைய இடங்களில் திருச்சபை நிறுவும் பணி நடந்திருக்கிறது.
2. ஏற்கனவே நிறுவப்பட்டிருந்த அந்தியோகியா சபை தகுதியான பல போதகர் களையும், வரங்களையும் தன்னில் கொண்டிருந்தது.
சுவிசேஷ ஊழியத்தின் மூலம் திருச்சபை அமைப்பதென்பது சாதாரண காரியமல்ல. உலகப் பிரகாரமாக நடந்து ஒரு தொழிலை ஆரம்பிப்பதற்கும் சபை அமைப்பதற்கும் இடையில் பெரிய வித்தியாசமுண்டு. திருச்சபைப் பணி ஆத்மீகப் பணியாகும். அது பரலோகத்தோடு தொடர்புடைய ஊழியம். கர்த்தர் படைத்துள்ள உலகத்தில் திருச்சபை நிறுவப்படுகின்ற போது உலகத்தோடு சம்பந்தமுள்ள சில விஷயங்களை நாம் திருச்சபையில் பின்பற்றுவதைத் தவிர்க்க முடியாது. உதாரணத்துக்கு திருச்சபை கூடிவர ஒரு கட்டிடமும், அது கூடிவரத் தகுந்த நேரமும் அவசியம். இதெல்லாம் உலகத்தில் வாழ்கிற எவரும் பின்பற்ற வேண்டிய விஷயங்கள். ஆனால், பரலோகத்துக்கு சொந்தமான இரட்சிப்படைந்த ஆத்துமாக்களை இணைத்து திருச்சபை கட்டப்படுவதால் அதன் கட்டுமானத்துக்கு நாம் முழுவதும் கர்த்தரிலேயே தங்கியிருக்கிறோம். இந்த மாபெரும் பணிக்கு ஆத்மீக வளர்ச்சியும், முதிர்ச்சியும், ஞானமும் இருப்பவர்கள் அவசியம். அத்தகைய தகுதியுள்ளவர்களையே இறையாண்மையுள்ள கர்த்தரும் தன் பணியில் பயன்படுத்துவார்.
இந்த உண்மையைத்தான் நாம் அந்தியோகியா சபையில் பார்க்கிறோம். அந்தச் சபை நிறுவப்பட்டு வளர்ந்து வந்திருந்தது. அது ஆத்மீகத்தில் சிறந்த சபையாக இருந்தது. கர்த்தரின் ஆவியானவரின் ஈடுபாட்டை அந்தச் சபை ஊழியங்களில் நம்மால் பார்க்க முடிகிறது. ஆத்மீகத்தில் வளர்ந்திருந்த அந்தச் சபை எண்ணிக்கையில் மட்டுமல்லாமல் வேறு துறைகளிலும் வளர்ச்சியடைந்திருந்தது. அதில் அநேக சபை அதிகாரிகள் இருந்தார்கள். அதாவது, அநேக போதகர்கள் இருந்தார்கள். அவர்கள் ஆத்மீக வளர்ச்சி யுள்ளவர்களாகவும், முதிர்ச்சியும், ஞானமும் உள்ளவர்களாகவும் இருந்தனர். அது மட்டுமல்லாமல் ஆத்மீகத்தில் சிறந்த வேத ஞானமுள்ளவர்களாகவும், திறமைசாலிகளாகவும் இருந்த அந்தப் போதகர்கள் அந்தியோகியா சபையை வேத அறிவிலும், ஆத்மீகத்திலும் நிச்சயம் வளர்த்திருப்பார்கள். அதற்கு அறிகுறியாக ஆவியானவர் சபையில் அதிக ஈடுபாட்டோடு அசைவாடியதையும், சபை மக்கள் திருச்சபைப் பணியில் வைராக்கியத்துடன் போதகர்களோடு ஜெபத்திலிருந்து ஒத்துழைத்திருந்ததையும் அப்போஸ். 13ம் அதிகாரத்தில் தெளிவாகக் கவனிக்க முடிகிறது.
இவை மட்டுமல்லாமல் அந்தியோகியா சபையில் சுவிசேஷத்தை வல்லமையோடு பிரசங்கித்து, வேத சத்தியங்களைத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் போதிக்கக்கூடிய வரங்களைக் கொண்டவர்களைக் கர்த்தர் எழுப்பியிருந்தார். அங்கே பர்னபாவையும், பவுலையும் நாம் பார்க்கிறோம். இவர்கள் சபை அமைப்புப் பணிக்குத் தேவையான ஆத்மீக வளர்ச்சியையும், வரங்களையும் கர்த்தரிடம் இருந்து பெற்றிருந்தார்கள். பல வருடங்கள் திருச்சபையில் இருந்து சபைப் போதகர்களாலும், சபையாராலும் ஆராயப்பட்டு அவர்கள் மத்தியில் நன்மதிப்புப் பெற்றிருந்தார்கள். தங்களுடைய ஆத்மீக வரங்களை திருச்சபையில் ஏற்கனவே போதகர்களுக்குக் கீழிருந்து பயன்படுத்தி சபை ஆத்துமாக்களின் வளர்ச்சிக்குக் காரணமாயிருந்திருக்கிறார்கள். கிறிஸ்துவை விசுவாசித்து பதினான்கு வருடங்களுக்குப் பின்பே பவுல் அந்தியோகியா சபையால் சுவிசேஷ ஊழியத்துக்கு பிரித்தெடுக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டார். இயேசுவால் நேரடியாக அழைக்கப்பட்டிருந்தும் அதுவரை அவர் சபைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து அதிலிருந்து கற்று, அனுபவத்தைப் பெற்று வளர வேண்டி யிருந்தது. திருச்சபையாகிய பட்டறையில் புடம்போடப்பட்டு திருச்சபை ஊழியத்துக்காகக் கர்த்தரால் தயார் செய்யப்பட்ட நல்ல ஆயுதங்களாக பர்னபாவும், பவுலும் இருந்திருக்கிறார்கள். ஆவியானவர் சபை மத்தியில் பிரசன்னமாகி இவர்களை திருச்சபைப் பணிக்கு அனுப்பிவையுங்கள் என்று சபைத் தலைவர்களுக்கு சொல்லியிருக்கிறார் என்றால் அப்பணிக்குரிய அத்தனைத் தகுதிகளையும் பெற்றிருந்து அந்த ஊழியத்துக்கு இவர்கள் இருவரும் தயாராக இருந்ததுதான் அதற்குக் காரணம். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமேயில்லை.
இதுவரை அந்தியோகியா சபையைப் பற்றி நாம் பார்த்திருப்பதெல்லாம் அந்தச் சபையின் வளர்ச்சியையும், வல்லமையையும் நமக்கு விளக்குகிறது. இதையெல்லாம் நாம் கவனத்தோடு ஆராய்வதற்குக் காரணம் சுவிசேஷத்தின் மூலம் திருச்சபை அமைக்கும் பணியில் எத்தகைய திருச்சபையைக் கர்த்தர் பயன்படுத்தியிருக்கிறார் என்பதை நாம் தெளிவாக அறிந்துகொள்ளத்தான். சுவிசேஷப்பணி மூலம் திருச்சபை அமைப்பதற்கு அதைச் செய்யக்கூடிய, வேதம் எதிர்பார்க்கின்ற வளர்ச்சியும், வரங்களும், வலிமையும் ஒரு சபைக்கு இருக்க வேண்டும். இருக்க வேண்டியதெல்லாம் இல்லாத நிலையில் ஒரு சபை இன்னொரு ஒழுங்கான சபை உருவாவதற்கு ஏதுவாக அமைய முடியாது. வேதபூர்வமான சபைகளை அமைக்கும் பணியில் வேதத்தைப் பின்பற்றி வியர்வை சிந்தி உழைக்காமல், வெறும் ஆர்வக்கோளாருடன் ஊரெல்லாம் சபை அமைக்கத் திரிவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. இப்படிச் செய்கிறவர்கள் இயேசு கிறிஸ்துவின் சபையை உருவாக்க முயலவில்லை; தங்களுடைய சுயநல நோக்கங்களுக்காக எதையாவது செய்யும் முயற்சியிலேயே ஈடுபட்டிருக்கிறார்கள். இன்றைக்கு தன்னையே தாங்க முடியாத சபையென்ற பெயரில் கூடிவரும் கூட்டங்களும், ஒரே போதகரை மட்டும் கொண்டிருந்து ஆத்மீக ஞானமும், வளர்ச்சியும், வலிமையும் இல்லாத குழுக்களும், இரட்சிப்பு அடைந்திருக் கிறார்களா? என்று கேள்வியெழுப்பக்கூடிய அளவுக்கு ஆத்மீகத்துக்கான அறிகுறிகளைக் காணமுடியாதவர்களைக் கொண்டிருக்கும் குழுக்களும் திருச்சபை அமைக்கும் பணியில் நம்மத்தியில் ஈடுபட்டிருப்பதற்கும், வேதத்தில் தெளிவாக நாம் பார்க்கின்ற, சபை அமைப்புப் பணியில் கர்த்தர் பயன்படுத்தியிருக்கிற அந்தியோகியா சபைக்கும் எத்தனை பெரிய இடைவெளி இருக்கின்றது என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறதல்லவா?
3. அந்த சபை புதிதாக நிறுவப்படப்போகிற ஊழியத்தைத் தாங்கக் கூடிய வசதியைக் கொண்டிருந்தது.
திருச்சபை அமைப்புப்பணியில் கர்த்தர் பயன்படுத்திய அந்தியோகியா திருச்சபை அந்தப்பணியைச் செய்வதற்கான வரங்களை மட்டும் கொண்டிராமல் புதிதாக ஆரம்பிக்கப்போகிற ஊழியத்தைத் தாங்குகின்ற வசதியையும் கொண்டிருந்தது. ஏற்கனவே அதில் ஒன்றுக்கு மேற்பட்ட போதகர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் சிலராவது முழுநேர ஊழியத்தில் இருந்திருக்கலாம். அப்படியானால் சபை அவர்களுடைய தேவைகளை சந்தித்திருக்கிறது. அந்த சபை எண்ணிக்கையில் வளர்ந்ததாகவும் அங்கத்தவர்கள் தொகை அந்த சபையை மட்டுமல்லாமல் வேறு ஊழியங்களையும் தாங்கக்கூடிய அளவுக்கு காணிக்கை கொடுக்கக் கூடியதாகவும் இருந்திருக்கிறது. பர்னபாவையும், பவுலையும் சுவிசேஷத்தைச் சொல்லி திருச்சபை அமைக்க கரம் வைத்து ஜெபித்து அனுப்பி வைத்த சபை கையில் பத்து ரூபாவை மட்டும் கொடுத்துவிட்டு கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்று அறிவுரைகூறி அவர்களை அனுப்பிவைக்கவில்லை. இதைத்தான் இன்றைக்கு ஊழியம் என்ற பெயரில் பலர் செய்து வருகிறார்கள். அந்தியோகியா சபை புதிதாக ஆரம்பிக்கப்போகிற ஊழியத்தின் பொறுப்புக்களை ஏற்கனவே ஆராய்ந்து அலசிப்பார்த்து, கர்த்தரில் ஜெபத்தில் தங்கியிருந்து சபையாக போதகர்கள், உதவிக்காரர்கள், அங்கத்தவர்கள் அனைவரும் கலந்தாலோசித்து அந்த ஊழியத்திற்கான அத்தனை தேவைகளையும் நிறைவேற்றப்போவதாகத் தீர்மானம் எடுத்து அதன்பிறகே பர்னபாவையும், பவுலையும் அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆரம்பிக்கப் போகிற ஊழியத்தைக் கொண்டு நடத்துமளவுக்கு அவர்களுடைய சபைக்கு எல்லா வசதியும் இருந்திருக்கிறது. வீணாக அவர்கள் கர்த்தர் பார்த்துக் கொள்ளுவார் என்று சொல்லி கண்மூடித்தனமாக இந்த ஊழியத்தில் ஈடுபடவில்லை.
இந்த ஊழியத்தில் அந்தியோகியா சபைக்கு உதவ நிச்சயம் எருசலேம் சபை முன்வந்திருக்கலாம். உதவியும் செய்திருக்கலாம். அதை எவரும் மறுக்க முடியாது. இருந்தபோதும் அப்போ. 18ம் அதிகாரம் இந்தப் புதிய ஊழியத்துக்கான அத்தனை உடனடி நடவடிக்கைகளையும், பொறுப்புக்களையும் அந்தியோகியா சபையே மேற்கொண்டதாக நமக்குத் தெரிவிக் கிறது. இதிலிருந்து திருச்சபை ஊழியப்பணி பற்றி கர்த்தர் நமக்கு விளக்குகின்ற பாடங்களை நாம் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும்: (1) ஒரு புதிய ஊழியத்தை ஆரம்பிக்க எந்த சபையும் அதற்குரிய தகுதிகளையும், வசதியையும் கொண்டிருக்க வேண்டும். வெறும் ஊழிய ஆசையையும், மற்றவர்களிடம் பெயர் வாங்க வேண்டும் என்ற ஆசையிலும் இங்கொன்றும் அங்கொன்றுமாக பொட்டிக்கடை ஆரம்பிப்பதுபோல் சபை நிறுவ முயலக்கூடாது. தன்னையே தாங்க முடியாத ஒரு சபை இன்னொரு ஊழியத்தை ஆரம்பிக்க முயல்வது சமுத்திரத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறவன் இன்னொருவனைக் காப்பாற்ற முனைவதுபோலத்தான் இருக்கும். ஒரு சபை வேத அடிப்படையில் முதலில் தன்னை வளர்த்துக்கொண்டு, அதன்பிறகே ஊழியத்தைப் பெருக்குவதில் ஈடுபட வேண்டும். இது உலகத் தானுக்குக்கூட தெரிந்திருக்கிற உண்மை. (2) புதிய ஊழியத்துக்கு அனுப்பப் படுகிறவர்களின் தகுதிகளை ஆராய்ந்து பார்த்து சரியானவர்கள் என்று தீர்மானித்து அவர்களை அனுப்புகிறபோது அவர்களுடைய தேவைகளை நிறைவேற்ற சபை பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும். இன்று பலர் செய்வதுபோல் தங்களுடைய தேவைகளுக்காக அவர்களை ஜெபிக்கச் சொல்லி ஆலோசனை மட்டும் தந்து அனுப்பக்கூடாது. உண்மையில் கர்த்தர் ஒரு புதிய ஊழியத்தை நாம் ஆரம்பிக்க அனுமதித்தால் அதற்கான தேவைகளையும் நம் சபை மூலமாக நிறைவேற்ற வழியேற்படுத்தித் தருவார்.
4. திருச்சபை ஊழியப்பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள் அதற்கான சகல தகுதிகளையும் கொண்டிருந்தார்கள்.
பர்னபாவும், பவுலும் மிகவும் திறமைசாலிகள். நல்ல விசுவாசிகள், பிரசங்கிகள். அந்தியோகியா சபை சுவிசேஷ ஊழியத்துக்கு அனுப்பப்பட வேண்டியவர்களைத் தேடி அலைய வேண்டிய நிலை இருக்கவில்லை. ஏற்கனவே பர்னபாவும், பவுலும் சபையில் வளர்ந்துகொண்டிருந்தார்கள். சபைத் தலைவர்களாக இருந்தார்கள். அவர்கள் ஊழியத்துக்கு புதியவர்கள் அல்ல; கத்துக்குட்டிகள் அல்ல. அனுபவமும், முதிர்ச்சியும் அடைந்திருந்த, சகல தகுதிகளையும் கொண்டிருந்த ஊழியக்காரர்கள். சுவிசேஷ ஊழியத்தில் ஏற்கனவே ஈடுபட்டு அதில் கர்த்தரின் ஆசீர்வாதத்தைப் பெற்றிருந்தவர்கள். பிரசங்க வரத்தைப் பெற்றிருந்து அதை சபையில் பயன்படுத்தி சபை வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தவர்கள். சபை மக்களுக்கு அவர்கள் எத்தனை பெரிய பிரசங்கிகள் என்பது தெரிந்திருந்தது. ஆத்துமாக்களுக்கு ஆத்தும ஆலோசனைகளை வழங்கி அவர்கள் ஆத்தும விருத்தி அடையக்கூடிய ஊழியத்தில் ஏற்கனவே சபையில் ஈடுபட்டு சபைப் போதகர்களாக இருந்திருக்கிறார்கள்.
இத்தனைக்கும் மேலாக புதிதாக ஆரம்பிக்கப்படப்போகின்ற ஊழியத்துக்கான விசேஷ தகுதிகளையும் கொண்டிருந்தார்கள். புதிய பிரதேசங்களுக்குப் போய் சபைகளை நிறுவுவது என்றால் அதற்கு விசேஷ தகுதிகள் தேவை. போகின்ற இடங்களில் வாழ்கின்ற மக்களின் மொழி தெரிந்திருக்க வேண்டும். அந்த மக்களின் பண்பாடு தெரிந்திருக்க வேண்டும். அத்தகைய ஊழியத்துக்கான உடல் வளம் இருக்கவேண்டும். அந்த ஊழியத்துக்கு அவசியமான முதிர்ச்சியும், நுனுக்கங்களும் இருக்க வேண்டும். இந்த இருவரிடமும் இவை இருந்தன. பவுலுக்கு ஆறு மொழிகளுக்குக் குறையாமல் தெரிந்திருந்தது. பர்னபா சிப்புரு பிரதேசத்தைச் சேர்ந்தவரானதால் அந்த மக்களை நன்கு அறிந்திருந்தார். அந்த மக்களின் பண்பாடு இவர்கள் இருவருக்கும¢ புதிதல்ல. பவுலுக்கு யூத மக்களின் கலாச்சாரத்தைத் தவிர கிரேக்க கலாச்சாரத்திலும் நல்ல பரிச்சயம் இருந்தது. பவுல் ரோம நாட்டுரிமையையும் கொண்டிருந்தார். இதனால் பவுலுக்கு ரோம ராஜ்ஜியத்தில் எங்கும் போய் வாழ்ந்திருக்க முடியும். பவுலுக்கு பல மொழி இலக்கணங்களும், பேச்சு வழக்கும் தெரிந்திருந்தது. அந்தந்த மொழி இலக்கியத்திலும் தேர்ச்சி அடைந்திருந்தார். பர்னபாவையும் பவுலையும் நாம் விசேஷ பிறவிகளாகப் பார்க்கக் கூடாது இத்தனைத் தகுதிகளும் இருந்தவர்களை சுவிசேஷ ஊழியத்திற்காக அந்தியோகியா சபையைக் கொண்டு கர்த்தர் ஏன் பிரித்தெடுத்து அந்த சபை மூலமாக அனுப்பி வைத்தார் என்பதை நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவற்றின் மூலம் கர்த்தர் சுவிசேஷப்பணி பற்றி என்ன சொல்லுகிறார் என்பதை ஆவியானவர் மூலம் அறிந்துகொள்ள முயல வேண்டும். இவற்றில் இருந்து நாம் பின்வரும் விதிகளை அறிந்துகொள்ளுகிறோம்: (1) எந்த ஊழியத்தையும் ஆரம்பிக்கப் போகிறவர்கள் அதற்குரிய தகுதிகளையும், வரங்களையும் கொண்டிருக்க வேண்டும். வெறும் குருட்டார்வம் மட்டும் இருந்துவிட்டால் போதாது. இந்தக் குருட்டார்வத்தைப் பலர் கர்த்தர் கொடுத்த அழைப்பாக எண்ணி வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். விசுவாசிகளாக இருப்பதைத் தவிர இருக்க வேண்டிய வேறு எந்தத் தகுதியும் இல்லாமல் பீகாருக்கு சுவிசேஷம் அறிவிக்கப் போகிறேன், மலைவாழ் மக்களுக்கு இயேசுவைப் போதிக்கப் போகிறேன் என்று அலைவதால் எந்தப் பயனும் இல்லை. (2) இருக்க வேண்டிய தகுதிகள் இருந்துவிட்டால் மட்டும் போதாது. அவற்றையும் நம்மையும் சபை அறிந்திருக்க வேண்டும். சபை நம்மை ஆராய்ந்து அங்கீகரிக்க வேண்டும். கர்த்தர் ஊழியத்துக்கு அனுப்புகிற எவரும் சபையால் அங்கீகரிக்கப்பட்டே அனுப்பப்படுகிறார்கள். அதைத்தான் நாம் வேதத்திலிருந்து தெரிந்துகொள்ளுகிறோம். பரிசுத்த ஆவியானவர் சபையோடு உறவாடி அந்தியோகியா சபையை வழிநடத்தி அதன்படி அந்தச்சபையே பர்னபாவையும், பவுலையும் ஊழியத்துக்கு அனுப்பி வைத்தது.
5. ஊழியத்திற்காக அனுப்பிவைக்கப்பட்டவர்கள் ஆரம்பத்தில் தங்களுக்குப் பரிச்சயமான இடங்களுக்கும், அருகாமையில் இருந்த இடங்களுக்கும் போனார்கள்.
பர்னபாவும், பவுலும் முதலில் செலூக்கியாவுக்குப் போனார்கள். அதன்பிறகு அங்கிருந்து சிப்புரு தீவுக்குப் போனார்கள். பின்பு சாலமி பட்டணத்துக்கு வந்தார்கள். பின்பு பாப்போவுக்கு போனார்கள். இந்த இருவருடைய ஆரம்ப ஊழியங்களை ஆராய்ந்து பார்க்கிறபோது இந்தப்பிர தேசங்களெல்லாம் இவர்களுக்குப் பரிச்சயமில்லாத பிரதேசங்களல்ல என்பதை அறிந்துகொள்ளலாம். இந்தப் பிரதேசங்களுக்கு இவர்கள் ஏற்கனவே போயிருந்ததோடு இந்தப் பிரதேசங்களை நன்கு அறிந்திருந் தார்கள் என்பதையும் அறிந்துகொள்கிறோம். இவர்களுக்கு இந்தப் பிரதேச மக்கள் பாஷை, பண்பாடெல்லாம் நன்கு தெரிந்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இதையெல்லாம் நான் நினைவூட்டுவதற்குக் காரணமுண்டு. ஏனெனில், ஆரம்பத்தில் ஊழியத்தைச் செய்து சபை அமைக்கப்போகும்போது பரிச்சயமான இடங்களுக்குப் போவதே புத்தி சாலித்தனம். முற்றிலும் புதிய இடங்களுக்குப் போவதால் நமக்கு பிரச் சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தெரிந்த, அறிமுகமான பிரதேசங்களில் மக்களோடு நல்ல ஈடுபாட்டை உடனடியாக ஏற்படுத்திக் கொள்ள வாய்ப் புண்டு. கேரியையும், ஜிம் எல்லியட்டையும் உதாரணங்காட்டி அவர்கள் புதிய இடங்களுக்குப்போகவில்லையா என்று விதண்டாவாதம் செய்வதில் பிரயோஜனம் இல்லை. அவர்கள் ஒருவிதத்தில் சாதாரண மனிதர்கள் இல்லை. உலகத்தில் ஒரு கேரியும், ஒரு ஜீம் எல்லியட்டையுமே பார்த்திருக்கிறோம். நாமெல்லோரும் அவர்களைப்போல வந்துவிட முடியாது. அத்தோடு அவர்கள் போன இடங்களில் படாதபாட்டைப் படவேண்டி யிருந்ததை அவர்களுடைய வாழ்க்கை நமக்கு இன்றும் விளக்குகின்றது. ஜிம் எல்லியட் இளம் வயதிலேயே இறந்தார். அப்போஸ்தலர் நடபடிகள் 13ன் மூலம் கர்த்தருடைய வார்த்தை காட்டும் வழி அறிமுகமான பிரதேசங் களுப்போய் ஆரம்ப ஊழியத்தைச் செய்வதே சிறந்தது என்பதுதான்.
அத்தோடு, அருகாமையில் இருந்த இடங்களுக்கே பர்னபாவும், பவுலும் போயிருப்பதைப் பார்க்கிறோம். இதில் பல வசதிகள் உண்டு. முக்கியமாக அந்தக் காலத்தில் இன்றைக்கு நாம் கொண்டிருக்கும் வசதிகள் இல்லை. வெஸ்டர்ன் யூனியன் பேங்க் மூலம் அன்று பணம் அனுப்பக்கூடிய வசதி கள் இல்லை. ஈமெயில் மூலம் ஊழிய விபரங்களைக் கொடுக்கும் வசதிகள் இருக்கவில்லை. பர்னபாவும், பவுலும் சபை எட்டமுடியாத இடங்களுக்குப் போயிருந்தால் அந்தியோகியா சபையோடு நெருங்கிய தொடர்பு வைத் திருந்திருக்க முடியாது. தேவையான உதவிகளைப் பெற்றுக் கொண்டிருக்க முடியாது. ஊழியத்துக்கு அனுப்பி வைத்திருக்கும் சபையின் உதவிகள் புதிதாக ஆரம்பமாகும் ஊழியங்களுக்கு ஆரம்பத்தில் அதிகம் தேவை. அருகாமையில் இருக்கும் பிரதேசங்களில் ஆரம்பிக்கப்படும் ஊழியங் களுக்கு அந்த உதவிகளை அனுப்பி வைத்த சபையால் செய்ய முடியும்.
6. ஊழியத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டவர்கள் முதலில் பட்டணங்களுக்கும், நகர்ப்புறங்களுக்கும் போய் ஊழியத்தைச் செய்தார்கள்.
ஆரம்பத்தில் சுவிசேஷத்தை சொல்லி சபை நிறுவ அனுப்பிவைக்கப்பட்ட பர்னபாவும், பவுலும் முதலில் நகர்ப்புறங்களுக்கும், பட்டணங்களுக்கும் போய் ஊழியம் செய்திருப்பதைக் கவனிக்க முடிகின்றது. அவர்கள் செலூக்கியா பட்டணத்துக்கும், சிப்புரு தீவுக்கும், சாலமி பட்டணத்துக்கும், பாப்போ பட்டணத்துக்கும் போய் பணிபுரிந்திருக்கிறார்கள் (13:4-6). அதற்குப் பிறகு பம்பிலியாவிலிருக்கும் பெர்கே பட்டணத்துக்குப் போனார்கள் (13:13). அதற்குப் பிறகு பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியாவுக்குப் போனார்கள் (13:14). அங்கு பல எதிர்ப்புக்கு மத்தியிலும் ஊழியம் செய்த பிறகு இக்கோனியா பட்டணத்துக்குப் போனார்கள் (13:51).
இப்படியாக இவர்கள் பட்டணம் பட்டணமாக போகக் காரணமென்ன? ஆவியானவர் இதன் மூலம் நமக்கு வெளிப்படுத்துவதென்ன? பர்னபாவும், பவுலும் பட்டணங்களுக்குப் போனதற்கு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. இவ்வாறாக பட்டணங்களில் சுவிசேஷத்தைச் சொல்லுவதால் ஏனைய இடங்களைவிட அங்கு திருச்சபை அமைத்து அவை வளர்வதற்கு பெரும் வாய்ப்புகள் இருந்தன. பட்டணகளில் பல தரப்பட்ட மக்களும் வாழ்வார்கள். அத்தோடு அவர்கள் நல்ல தொழில்களைச் செய்து வாழ்க்கையில் வளத்தோடும் இருப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் படிப்பறிவுள்ளவர்களாகவும் இருப்பார்கள். பெரும்பாலும் எல்லோருமே தங்களைத் தாங்களே தாங்கிக்கொள்ளக்கூடிய வசதியுள்ளவர்களாக இருப்பார்கள். சுவிசேஷத்தை பட்டணங்களில் முதலில் அறிவித்து திருச்சபை அமைத்தால் அமைக்கப்பட்ட சபை வெகுவிரைவிலேயே தன்னைத் தாங்கி நிற்கக் கூடியதாக இருக்கும். சபைப் போதகர்களைக் கவனித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். அத்தோடு பக்கத்து நகரங்கள், கிராமங்களில் நிறுவப்படுகின்ற சபைகளைத் தாங்கக்கூடிய பொருளாதார வசதியையும் கொண்டிருக்கும். மேலும், பட்டணத்து மக்கள் படித்தவர்களாக இருப்பதால் அவர்களை போதக ஊழியத்துக்கு இறையியல் போதனைகளை அளித்து தயார் செய்யவும் வசதியாக இருக்கும். இப்படித் தயார் செய்யப்பட்டவர்களை நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் ஊழியம் செய்ய அனுப்பிவைக்க முடியும். பர்னபாவும், பவுலும் காரணமில்லாமல் பட்டணங்களுக்கு ஊழியம் செய்யப்போகவில்லை. அத்தகைய ஆலோசனைகளைத் தந்து அவர்களை அனுப்பி வைத்ததும் பரிசுத்த ஆவியானவரே. இதனால்தான் ஆதிசபை வேகமாக வளர்ச்சியடைந்தது. அவை தன்னிறைவுள்ளவைகளாகவும், வளர்ச்சியடைந்தவையாகவும் இருந்தன.
அப்போஸ்தலர் நடபடிகள் 13ல் நாம் காண்கின்ற இந்த வேத விதி முறையை நாம் சாதாரணமானதாகக் கருதக்கூடாது. இன்றைக்கு தமிழினத் தைப் பொறுத்தவரையில் ஊழிய ஆசை பிடித்து ஊழியத்துக்கு வருகிறவர் களில் பெரும்பாலானோர் போவது கிராம ஊழியங்களையும், மலைவாழ் மக்களையும், ஆதிவாசிகளையும் தேடித்தான். ஆதிவாசிகள் மத்தியிலும், கிராமப்புறங்களிலும் தன்னைத் தாங்கி நிற்கக்கூடிய சபைகளை நிறுவுவது மிகவும் கஷ்டம். பொருளாதாரத்தில் வளர்ச்சியுறாத அந்தப் பகுதி மக்க ளில் அநேகர் வயிற்றுப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இப்பகுதிகளில் ஊழியம் செய்கிறவர்கள் காலத்துக்கும் எங்காவது ஊழியத்துக்காக கைநீட்டிக்கொண்டுதான் இருக்க வேண்டும். இதனால்தான் இன்றைக்கு வேத அறிவுள்ள, வல்லமையுள்ள, தன்னைத்தானே தாங்கி நிற்கக்கூடிய, போதக சமர்த்தராகிய போதகர்களைக் கொண்ட சபைகளை நாம் தமிழினத்தில் காணமுடியாதிருக்கின்றது. ஆரம்பத்தில் பட்டணங் களில் சபை முறையாக அமைக்கப்பட்டால் பின்னால் கிராம, நகர சபைகளை அவைகளால் தாங்கக் கூடியதாக இருக்கும். கிராம மக்களுக்கும் ஆதிவாசிகளுக்கும் சுவிசேஷம் சொல்லக்கூடாதென்றில்லை. திருச் சபையை வேதபூர்வமாக நல்ல முறையில் எங்கும் அமைக்க சரியான வழிகளைப் பின்பற்றவேண்டும். பட்டணங்களில் ஆரம்பித்து அங்கு நின்றுவிடாமல் நகர, கிராமப்புறங்களுக்கும் ஏனைய பகுதிகளுக்கும் போவது வேதம் காட்டித் தரும் வழி.
(இன்னும் வரும்)