இயேசு கிறிஸ்து திருச்சபையை உருவாக்க இந்த உலகத்துக்கு வந்தார். அதற்காகவே ஆரம்பத்தில் எழுபது பேரையும் பின்னால் பன்னிருவரையும் தயார் செய்து சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அனுப்பினார் (மத்தேயு 28). அவர்களை அடித்தளமாகக் கொண்டு பெந்தகொஸ்தே நாளில் திருச்சபை இந்த உலகத்தில் ஓர் அமைப்பாக நிறுவப்பட்டது (அப்போஸ். 2). இயேசு கிறிஸ்து மறுபடியும் இந்த உலகத்தை நியாயந்தீர்க்க வருகிறபோது தன்னுடைய சபையைத் தன்னோடு அழைத்துச் செல்லப்போகிறார். அந்த நாள் மட்டும் தொடர்ந்து அவர் தன்னுடைய சபைக்குத் தேவையான வரங்களை அளித்து (எபேசியர் 4), அதைப் பராமரித்து போஷித்துக் காத்து (எபேசியர் 5) வருவதைக் கடமையாகக் கொண்டிருக்கிறார். இயேசு கிறிஸ்துவைப் பொறுத்தவரை திருச்சபை ஒரு சாதாரண அமைப்பல்ல; அது அவருடைய மணவாட்டி. அவரைவிட அதன் மேல் அக்கறை கொண்டவர்கள் இருக்க முடியாது. பிதாவின் வலது பாகத்தில் வீற்றிருந்து ஆட்சி செய்யும் ஆண்டவ ராகிய இயேசு கிறிஸ்துவுக்கு திருச்சபையின் நலன்களே இலக்காக இருந்து வருகின்றன. திருச்சபை மேல் அவருக்கு அத்தனை அக்கறை இருப்பதால் தான் திருச்சபைப் பற்றிய போதனைகள் புதிய ஏற்பாடு முழுவதும் நிரம்பி வழிகின்றன. தன்னுடைய திருச்சபை இந்த உலகத்தில் தனக்கு சாட்சியாக, தனக்கு மகிமையளிப்பதாக உலகெங்கும், நாடெங்கும், நகரங்கள் தோறும் நிறுவப்பட்டு வளர்ந்து வரவேண்டுமென்பதே இயேசு கிறிஸ்துவின் எதிர்பார்ப்பு.
இந்தளவுக்கு திருச்சபை மேல் கர்த்தராகிய இயேசு அக்கறை கொண்டிருக்கிறபோது கிறிஸ்தவர்கள் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டு அதை யெல்லாம் கவனிக்காமல், அவர் காட்டுகின்ற அக்கறையை நாம் திருச்சபை மேல் காட்டாமல் இருப்பதைப் போன்ற முட்டாள்தனம் இருக்க முடியாது. இருந்தாலும் அந்தத் தவறையே இன்றைக்கு அநேகர் செய்து வருகிறார்கள். சுயநலம் அதிகரித்துப்போய் தனக்காக மட்டுமே வாழப் பழகிப்போன நவீன சமுதாய மக்களின் பிசாசுத்தனமான சிந்தனைகள் இன்று கிறிஸ்தவர்களிடம் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாததொன்று. கிறிஸ்துவின் திருச்சபைக்கு மதிப்புக் கொடுக்காமலும், அதன் நலனில் அக்கறை காட்டாமலும், அதோடு தன்னை இணைத்துக்கொண்டு வாழப் பழகாமலும் கிறிஸ்தவன் என்ற பெயரோடு இந்த உலகில் எவரும் நடமாடி வருவது அந்தப் பெயருக்கே களங்கம் ஏற்படுத்துவதாகும். கிறிஸ்தவன் என்ற பெயரை நாம் வைத்துக்கொண்டால் கிறிஸ்து அக்கறை காட்டிய விஷயங்களில் நமக்கு அக்கறைகாட்டத் தெரிந்திருக்க வேண்டும். கிறிஸ்துவின் இலக்குகள் நம்முடைய இலக்குகளாக இருக்க வேண்டும். கிறிஸ்துவின் நோக்கங்கள் நம்முடைய நோக்கங்களாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கிறிஸ்தவன் என்ற பெயரே பொருளற்றதாகிவிடும்.
இன்று என்னால் பொறுத்துக்கொள்ள முடியாமல் இருக்கும் ஒரு காரியம், கிறிஸ்தவர்கள் என்ற பெயரை வைத்துக்கொண்டு ஆயிரக்கணக்கானோர் கிறிஸ்துவின் திருச்சபைக்கு வெளியில் தான்தோற்றித்தனமாகத் திரிந்து வருவதுதான். இவர்கள் கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தின் மூலம் இரட்சிப்பை அடைந்திருப்பதாகக் கூறிக்கொள்ளுகிறார்கள். ஆனால், கிறிஸ்து தன் மணவாட்டியான சபைமேல் காட்டுகிற ஆர்வமும் அக்கறையும் இவர்களுடைய வாழ்க்கையில் துளிக்கூடப் பார்க்க முடிவதில்லை. கிறிஸ்துவின் திருச்சபையில் இணைந்து வாழ வேண்டிய அவசியத்தையும் இவர்கள் உணராதவர்கள் போல் வாழ்ந்து வருகிறார்கள். அநேகருக்கு திருச்சபை என்பது இருந்திருந்து ஓய்வு நாளில் மனசுக்கு இதமளிக்கும் ஒரு செய்தியைக் கேட்பதற்கும், திருவிருந்தில் கலந்துகொள்ளு வதற்கும் வசதியாக இருக்கும் ஓர் இடமாக மட்டுமே இருந்து வருகிறது. அதற்கு மேல் திருச்சபையைப் பற்றி அவர்கள் எண்ணியும் பார்ப்பதில்லை; அதன் நலன்களில் அக்கறை காட்டுவதில்லை. தன்னுடைய நலன்களுக் காகவே கிறிஸ்து அதை நிறுவியிருக்கிறார் என்ற உணர்வும் அவர்களுக்கு இருப்பதில்லை.
இவர்கள் கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் தங்களுடைய வீடு, வேலை, குடும்பம், வசதிகள் அனைத்திற்கும் மட்டுமே முதலிடம் கொடுத்து வாழ்ந்து வருகிறார்கள். இதற்கெல்லாம் பங்கமேற்படாமல் இருந்தால் மட்டுமே திருச்சபைக்கும் இவர்களுடைய வாழ்க்கையில் எங்காவது ஒதுக்குப் புறமான ஓர் இடம் கிடைக்கும். ஓய்வு நாளில் வேலை செய்வதும், வேலை மாறினால் எந்த சபையிலும் நிலைத்திராமல் ஊர் ஊராகப் போய்க் கொண்டிருப்பதும், சக சகோதர்களின் வாழ்க்கை பற்றி அக்கறையில்லாமல் வாழ்வ தற்கும் பெயரா கிறிஸ்தவம்? கிறிஸ்து என் பாவங்களையெல்லாம் தன்னுடைய இரத்தினால் கழுவியிருக்கிறார், நான் அவருக்கே சொந்தம், அவரைப் பின்பற்றியே இனி வாழப்போகிறேன் என்றெல்லாம் சாட்சி சொல்லி ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொண்டு நாடோடிகளைப் போல கிறிஸ்துவின் பெயரை வைத்துக் கொண்டு வாழ்வதற்குப் பெயரா கிறிஸ்தவம்? இந்தமுறையில் வாழ்வதற்குப் பெயரா விசுவாச வாழ்க்கை? இதைவிட உலகத்து மனிதன் தன்னுடைய நோக்கங்களுக்காக உயிர் கொடுத்து வாழ்ந்து கிறிஸ்தவர்களுடைய முகத்தில் அசடு வழியச் செய்துவிடுகிறானே! கிரிக்கெட் விளையாட்டு சீஸன் ஆரம்பித்துவிட்டால் ஆபிஸ் வேலைகளைக் கூடத் தள்ளிவைத்துவிட்டு அது முடியுமட்டும் அதுவே வாழ்க்கையாக இருந்து விடுகிறான். மதுரை மீனாட்சி கோவிலுக்கு அன்றாடம் போய் வருகிற ஆயிரக்கணக்கான கூட்டத்தை நான் பார்த்திருக்கிறேன். ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்து லாட்ஜ் எடுத்துத் தங்கி பத்து நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் நடக்கும் அத்தனைப் பூசைகளிலும் அக்கறையோடும், ஆர்வத்தோடும் கலந்துகொள்கிற இந்துவுக்கு அவனு டைய போலித் தெய்வத்தில் இருக்கிற அக்கறைகூட ஜீவனுள்ள தேவனை விசுவாசிக்கிறோம் என்று பறைசாற்றும் நம் மக்களிடம் இல்லையே என்பதைப் பார்க்கிறபோது என்னால் பொறுக்க முடியாமல் போகிறது.
இதையும்விட அக்கிரமமான செயலாக நான் கருதுகிறதொன்றுண்டு. கிறிஸ்தவர்களாகிய சிலர் தங்களுடைய வேலை நிமித்தம் அடிக்கடி ஊர் மாறிக்கொண்டிருக்கிறார்கள். வேலை அவசியம்தான்; அது கொண்டுவரும் பதவியும், பணமும் அவசியந்தான். இல்லையென்று நான் சொல்ல வரவில்லை. இப்படி ஊர் மாறுகிறபோதெல்லாம் அவர்கள் திருச்சபை யொன்றை நாடிச் சென்று அங்கே தங்களை இணைத்துக் கொள்ளுவதில்லை. தாங்களே ஒன்றை பெட்டிக்கடை ஆரம்பிப்பதைப்போல தங்களைப் போலத் திரியும் ஒருசிலரைத் தேடிக்கொண்டு தங்களுக்கு வசதியாக ஆரம்பித்து விடுகிறார்கள். அடுத்தமுறை வேலை மாறும்போது இந்தப் பெட்டிக்கடை சபையை அம்போ என்று விட்டுவிட்டு இன்னொரு இடத்துக்குப் போய் அங்கும் வசதியாக ஒரு பெட்டிக்கடை சபையை ஆரம்பித்து விடுகிறார்கள். இவர்களைப் போலத்திரியும் சிலர் அந்த ஊரிலும் இதற்கு வசதியாக நிச்சயம் இருப்பார்கள். இந்த மாதிரியான திருச்சபை வாழ்க்கை முறையையும், கிறிஸ்தவ நடைமுறையையும் வேதத் தில் எங்கே வாசிக்கிறோம்? இதை வாசித்துவிட்டு இப்படி எழுதியிருக் கிறாரே என்று சிலர் ஆத்திரப்படலாம். அதைவிட்டுவிட்டு நீங்கள் ஏன் நான் சொல்லுகிறதில் உள்ள பொருளை ஒருமுறை சிந்தித்துப் பார்க்கக் கூடாது. இந்த மாதிரியான வாழ்க்கையை வாழவும், நடந்துகொள்ளவும் இயேசு விசுவாசிக்கு அனுமதியளித்திருக்கிறார் என்று வேதத்தில் இருந்து உங்களால் எனக்கு விளக்க முடியுமா? இப்படியெல்லாம் வாழ்வதற்குப் பெயர் கிறிஸ்தவமா என்றுதான் உங்களை நான் கேட்கிறேன்.
இயேசு தன்னுடைய மணவாட்டியான திருச்சபையை நிறுவியிருப்பது எதற்காக? என்று தயவு செய்து கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். தன்னுடைய இரத்தத்தினால் நம்முடைய பாவங்களையெல்லாம் கழுவியெடுத்து நமக்கு மனந்திரும்புதலையும் விசுவாசத்தையும் கொடுத்து தன்னுடைய சரீரத்தில் நம்மை இணைத்துக்கொண்டுள்ள கிறிஸ்து நம்முடைய நலன்களையெல்லாம் மனதில் வைத்தே தன்னுடைய சரீரமாகிய சபையை இந்த உலகத்தில் நிறுவியிருக்கிறார். பாவிகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிற நமக்கு விடுதலை தந்த இயேசு நாம் பரிசுத்தமாக தொடர்ந்து இந்த உலகத்தில் வாழ்ந்து வருவதற்கு வசதியாகத்தான் தன்னு டைய சபையை இந்த உலகத்தில் நிறுவியிருக்கிறார். திருச்சபையால் இயேசு மகிமைப்படுத்தப்படுகிறாரே தவிர திருச்சபையால் இயேசுவுக்கு நன்மையல்ல. நம் நலனுக்காகவே திருச்சபை நிறுவப்பட்டிருக்கிறது. ஆகவே, கிறிஸ்துவின் சரீரத்தில் நாம் உண்மையிலேயே மனந்திரும்புதலினாலும், விசுவாசத்தினாலும் இணைக்கப்பட்டிருப்போமானால் இந்த உலகத்தில் கிறிஸ்துவின் சரீரமாக இருந்து வருகிற அவருடைய திருச்சபையில் நாம் அங்கம் வகிக்காமல் வாழ முடியாது. திருச்சபைக்கு வெளியே இருந்து வாழ்ந்து வருகிற கிறிஸ்தவனை கிறிஸ்து அறியாமல் இருக்கிறார். நம்முடைய சரீரத்தின் அங்கங்கள் நம்முடைய சரீரத்தை விட்டு விலகிப் போவதில்லை. நம்முடைய சரீரத்தில் தொடர்ந்து இருக்கும்போதே அவை நம்முடைய அங்கங்களாக இருக்கின்றன; உயிர்த்துடிப்போடு அவை தொடர்ந்து வாழவும் முடியும். கிறிஸ்துவின் சரீரத்துக்கு வெளியில் இருந்து அவருடைய அங்கங்கள் ஆத்மீக வாழ்க்கை வாழ முடியும் என்று எண்ணுவது வேதத்துக்கு முரணானது மட்டுமல்ல, இயற்கைக்கெல்லாம் அப்பாற்பட்டது.
கிறிஸ்து திருச்சபை மூலம் நம்முடைய ஆத்மீக நலன்களுக்காக என்ன செய்கிறார் என்பதை இனி நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
(1) நாம் ஜீவனுள்ள வாழ்க்கை வாழ்ந்து அவருடைய சரீரத்தில் இணைக்கப்பட்டுள்ள சக விசுவாசிகளோடு இணைந்து அவரை ஆராதிக்கும் வசதியைக் கர்த்தர் திருச்சபை மூலம் ஏற்படுத்தித் தந்திருக்கிறார். இதை அவர் நம்முடைய நன்மைக்காக மட்டுமல்லாமல் தன்னுடைய மகிமைக் காகவும் செய்திருக்கிறார் என்பதை நாம் உணர்வது அவசியம். கர்த்தரை ஆராதனை செய்து வாழ்வதற்காகவே மனிதன் ஆரம்பத்தில் படைக்கப்பட்டான். அது இயற்கையின் நியதி. விசுவாசத்தை அடைந்த மனிதன் கர்த்தரை ஆராதித்து வாழ வேண்டியது அவனுடைய விசுவாசத்தின் அடையாளமாகவும், கடமையாகவும் இருக்கிறது. விசுவாசி என்ற பெயரை வைத்துக்கொண்டு திருச்சபை மூலம் கர்த்தருடைய ஆராதனையில் அக்கறை காட்டாதவன் நிச்சயம் ஒருநாளும் விசுவாசியாக இருக்க முடியாது. நாம் ஒவ்வொரு நாளையும் கர்த்தரின் ஆராதனையோடு ஆரம்பிக்க வேண்டும். நம்முடைய வீட்டில் கர்த்தர் ஆராதிக்கப்பட வேண்டும். நம்முடைய வேலைகள் அனைத்தையும் கர்த்தரின் மகிமைக்காக தேவ பயத்தோடு அவரை ஆராதித்து செய்ய வேண்டும். இதுவே வேதம் போதிக்கும் விசுவாசியின் வாழ்க்கை முறை. இதனால்தான் கர்த்த ரின் திருச்சபை வாரத்தின் முதல் நாளில் கூடி அவரை ஆராதனை செய்து வருகிறது. அதைக் கர்த்தரே ஏற்படுத்தியிருக்கிறார். வார ஆரம்ப நாளான ஓய்வு நாளில் நாம் இருக்க வேண்டிய இடம் கர்த்தரின் திருச்சபை. அங்கே நாம் கூடி வருகிறபோதே அவர் தன் வார்த்தையில் சொல்லியிருக்கிறபடி நம் மத்தியில் பிரசன்னமாகி நம்மோடு பேசுகிறார் (மத்தேயு 18:20). இந்த வசதியும், ஆசீர்வாதமும் உலகத்து மக்களுக்கு இல்லை. திருச்சபையில் கூடிக் கர்த்தரைப் பாடி, ஜெபித்து, வசனத்தைக் கேட்டு ஆராதிப்பதும் அவருடைய மக்களோடு ஐக்கியத்தில் வருவதும் எத்தனை உயர்வான மகிமையான காரியம். இன்றைக்கு அநேக சபைகள் கர்த்தரின் ஆராதனையை அலங்கோலப்படுத்தி அவருக்கு விரோதமானச் செயலை ஆராதனை வேளைகளில் செய்து வருகிறார்கள். தன்னை ஆராதிக்க வேண்டும் என்று நமக்குக் கட்டளையிட்டுள்ள கர்த்தர் அந்த ஆராதனையை அவருடைய வார்த்தையைப் பின்பற்றி அவருக்குகந்த முறையில் மட்டுமே செய்யச் சொல்லியிருக்கிறார் (யாத்தி. 20:1-11). நம்முடைய விருப்பத்தின்படி நாம் ஆராதனையில் ஈடுபடாமல் ஆராதனை மூலம் கர்த்தரை மகிமைப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். கர்த்தருக்கு விரோதமான முறையில் ஆராதனை நடத்தப்படும் இடங்களில் கர்த்தரின் பிரசன்னம் இருக்காது. எருசலேம் தேவாலயத்தை விட்டு அவருடைய பிரசன்னம் விலகிப் போனதைப் போல அலங்கோல மாக ஆராதனை நடத்தப்படும் இடங்களில் இருந்தும் கர்த்தரின் பிரசன்னம் அகன்றுவிடும்.
(2) திருச்சபைக்குப் போதகர்களை அளித்து நாம் பரிசுத்தத்தில் வளர்ந்து பூரணமடையும்படி அவர்கள் மூலமாக நம்மைப் போஷிக்கிறார் (எபேசியர் 4:11-16). கர்த்தர் திருச்சபை மட்டும் நிறுவாமல் அந்தத் திருச்சபைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார். திருச்சபைக்குத் தானே தலையாக இருப்பதால் (எபேசியர் 5) தன்னுடைய கட்டளைகளின்படி அந்தத் திருச்சபை நடந்துவர அவசியமான போதகர்களை தொடர்ந்து அதற்கு அளித்து வருகிறார். ஆதியில் அப்போஸ்தலர்களையும், தீர்க்கதரிசிகளையும், சுவிசேஷகர்களையும் அளித்த தேவன் இன்றைக்கு போதகர்களை அளித்து வருகிறார் (எபேசி. 4:11-16; 1 தீமோ. 3). வேதத்தை மட்டும் தெளிவாகப் பிரசங்கித்து வேத வழிகளில் மட்டும் ஆத்துமாக்களைத் திருச்சபைகளில் வழிநடத்துவது இவர்களுடைய கடமையாக இருக்கின்றது (2 தீமோ. 4:2, 3). அதுமட்டுமல்லாமல் ஆத்துமாக்களுடைய ஆத்மீகத் தேவைகளுக்குத் தகுந்த விதத்தில் வேத ஆலோசனைகளை அவசியமான நேரங்களிலெல்லாம் வழங்கி வழிநடத்துவதும் அவர்களுடைய பணியாக இருக்கிறது. இதைப் போதகக் கண்காணிப்பு என்று வேதம் அழைக்கிறது (1 பேதுரு 5:1-4). இந்தப் பணிகளைச் செய்வதற்காக ஒவ்வொரு சபையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட போதகர்கள் இருந்து ஆத்துமாக்களைக் கர்த்தரின் பாதையில் வழிநடத்த வேண்டுமென்று கர்த்தர் விதித்திருக்கிறார். இங்கே நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம் எவரும் தங்களைத் தாங்களே போதகர்களாக நியமித்துக்கொள்ள முடியாது என்பதுதான். எபேசியர் 4:11-16, கிறிஸ்துவே அவர்களை சபைக்குக் கொடுக்கிறார் தெளிவாக என்று விளக்குகிறது. கர்த்தர் சபைக்குக் கொடுக்காமல் தங்களைத் தாங்களே போதகர்களாக நியமித்துக் கொள்ளுகிறவர்கள் ஆடுகளை மேய்க்க வந்தவர்களல்ல; திருட வந்தவர்கள்.
ஆத்துமாக்கள் தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் பரிசுத்தமாக வளர்ந்து கர்த்தரை மகிமைப்படுத்த அவர்களுக்கு திருச்சபையும் அதன் போதகர்களும் இன்றியமையாதவர்கள். இவையில்லாமல் கிறிஸ்தவ வாழ்க்கையை இந்த உலகத்தில் சிறப்பாக நடத்திவிடலாம் என்று நினைப்பது வெறுங்கனவு. அப்படி வாழ்ந்துவிட முடியுமானால் கர்த்தர் தன்னுடைய ஞானத்தின்படி சபையை நிறுவி அதற்குப் போதகர்களைத் தொடர்ந்து அளித்து வரமாட்டார். திருச்சபையும், போதகக் கண்காணிப்பும் இல்லாமல் வாழ முயல்கிறவர்கள் வேதத்தைப் பொறுத்தவரையில் ஆணவமுள்ளவர்களாகவும், கர்த்தருக்குக் கீழ்ப்படியாத இருதயத்தை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
(3) திருச்சபை மூலம் சத்திய வசனத்தைப் பிரசங்கங்களினாலும் வேத பாடங்களின் மூலமும் கேட்டு ஆத்மீக வளர்ச்சியடையும்படிச் செய்கிறார். கிறிஸ்தவன் தன் வாழ்க்கையில் பரிசுத்தமாக வாழ்ந்து கர்த்தரை மகிமைப் படுத்த திருச்சபை மூலம் அவன் வேத பிரசங்கங்களைக் கேட்கும் வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கிறார் கர்த்தர். இதற்காகவே அவர் திருச்சபைக்குத் தொடர்ந்து போதகர்களை அளித்து வருகிறார். போதகர்களின் மிக முக்கியமான பணிகளில் ஒன்று தங்களுடைய நேரத்தைப் பயன்படுத்தி வேதத்தை அன்றாடம் ஆராய்ந்து படித்து ஆத்துமாக்களைப் போஷிக்கும்படியான நல்ல வேதப் பிரசங்கங்களைத் தயாரித்து வாரா வாரம் அளிப்பது. அதைத் தவிர வேத பாடங்களையும் அவர்கள் தயார் செய்து ஆத்துமாக்களுக்கு அளித்து அவர்கள் வேத வசனங்களில் வளரத் துணை செய்ய வேண்டும். திருச்சபையோடு தன்னை இணைத்துக் கொண்டு இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு கிறிஸ்தவனதும் கடமையாக இருக்கின்றது. இது கிறிஸ்தவர்கள் ஆத்மீக வளர்ச்சிபெற அவசியமானது. இது இல்லாமல் இருந்துவிடலாம் என்று நினைப்பது ஆணவத்தின் அடையா ளம். நாமே வேதத்தை வாசிக்கும் வசதி இருந்த போதும், இந்த முறையில் வேத விளக்கங்களைப் பிரசங்கத்தின் மூலம் கேட்கிறபோது கர்த்தர் நம்மோடு விசேஷமாக வல்லமையோடு பேசுகிறார். இதை உதாசீனம் செய்வது நம்முடைய அழிவுக்குத்தான் வழிவகுக்கும்.
பிரசங்கம் (Preaching) ஆத்துமாக்களைப் போஷிக்க கர்த்தர் ஏற்படுத்தித் தந்திருக்கும் அற்புதமான கிருபையின் சாதனம். இதை எல்லோரும் பயன்படுத்திவிட முடியாது. கர்த்தரால் திருச்சபைக்குத் தரப்பட்டுள்ள திறமையான போதகர்களே இதைச் செய்ய முடியும். ஒருவன் தன்னை டாக்டர் என்று அழைத்துக் கொண்டால் மட்டும் அவன் டாக்டராகிவிட முடியாது. அதற்கான தகுந்த பயிற்சிகளையும், அங்கீகாரத்தையும் அவன் அடைய வேண்டும். அதேபோல்தான் கர்த்தர் பிரசங்கிகளைச் (Preachers) சபைக்கு அளிக்கிறார். பிரசங்கிகளுடைய பணி பெரியது. அவர்கள் வேதத்திற்கு மட்டும் கட்டுப்பட்டு வேதபோதனைகளில் இருந்து சிறிதும் விலகாது பிரசங்கத்தைக் கர்த்தர் மகிமை அடையும்படி திருச்சபைகளில் கொடுக்க வேண்டும். பிரசங்கிகள் பிரசங்கத்தை ஆவியின் வல்லமையோடு செய்ய வேண்டும்.
இன்றைக்கு திருச்சபையோடு தங்களை இணைத்துக் கொள்ளாமலும் வேதப்பிரசங்கத்திற்குத் தங்களை ஒப்புக்கொடுக்காமலும் ஊர் ஊராக வாழ்ந்து வருகிறவர்கள் தொகை நம்மினத்தில் அதிகம். ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லி திருச்சபைக்கு வெளியில் இருந்து கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் இவர்கள் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். இது தெய்வத் துரோகம். இந்திய நாட்டில் பிறந்து வாழ்ந்து கொண்டு இந்திய அரசிய லமைப்புக்குக் கட்டுப்பட மாட்டேன், இந்திய குடியுரிமை பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று விதண்டாவாதம் செய்கிறவர்களை நாம் பார்த்ததில்லை. ஆனால், கர்த்தரிடமிருந்து இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லுகிற அநேகர் கர்த்தரின் திருச்சபையை உதறிவிட்டும், பிரசங்கங்களை வாராவாரம் கேட்காமலும் தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். உலகத்தில் காணப்படும் உள்ளூர் திருச்சபையோடு தன்னை இணைத்துக்கொள்ளாமல் தன் மனம்போன போக்கில் வாழ்க்கிறவர்களை கிறிஸ்து அறியாதிருக்கிறார். அவர்கள் கிறிஸ்துவின் ஆளுகைக்குக் கட்டுப்பட மறுக்கிறவர்கள். கிறிஸ்துவின் பெயரை சூட்டிக்கொண்டு கிறிஸ்துவின் திருச்சபைக்கு எதிராக நடக்கிறவர்கள்.
(4) கிருபையின் சாதனங்களில் ஒன்றான திருவிருந்தில் கலந்துகொண்டு கிறிஸ்துவின் பரிகாரப் பலியை நினைவுகூர்ந்து அவரை மகிமைப்படுத்தும் வசதியேற்படுத்தித் தந்திருக்கிறார். திருவிருந்தின் மூலம் சபை மக்கள் கிறிஸ்து கல்வாரியில் செலுத்திய பரிகாரப்பலியையும், அவருடைய தியாகத்தையும் அன்போடும் விசுவாசத்தோடும் நினைவுகூருகிறார்கள். அப்படிச் செய்வதன் மூலம் அவர்கள் தங்களுடைய விசுவாசத்திலும், சக விசுவாசிகளுடனான ஐக்கியத்திலும் உறுதிபெறுகிறார்கள். இந்த உலகத்தில் வாழ்கின்ற நாட்கள் முழுவதும் கிறிஸ்தவர்கள் திருச்சபையில் வாழ்ந்து திருவிருந்து பெற்றுக்கொள்ளுவது அவர்களுடைய விசுவாச வாழ்க்கைக்கும், கர்த்தரை மகிமைப்படுத்துவதற்கும் அவசியமானது. இதைச் செய்யாமல் ஒருவன் கிறிஸ்தவன் என்ற பெயரோடு வாழ முடியாது.
திருச்சபை மட்டுமே ஆத்துமாக்களுக்கு திருவிருந்தை அளிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது. ஆத்துமாக்கள் கூடிவருகிறபோது மட்டுமே திருவிருந்து ஓய்வு நாளில் அளிக்கப்பட வேண்டும். திருச்சபையோடு தங்களை இணைத்துக் கொண்டு ஏனைய ஆத்துமாக்களோடு ஐக்கியத்தில் வருகிறவர்களே திருவிருந்தில் கலந்துகொள்ளும் உரிமையைக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பவுல் அப்போஸ்தலன் 1 கொரி. 11ம் அதிகாரத்தில் தெளிவாக விளக்கியிருக்கிறார். திருவிருந்தின் மூலம் எந்த மேஜிக்கும் நிகழ்வதில்லை. விசேஷமாக நமக்குள் ஏதாவது நடக்கும் என்று நினைத்து நாம் ஒருபோதும் திருவிருந்தில் பங்குகொள்ளக்கூடாது. திருவிருந்தைப் பற்றிய தெளிவான அறிவு கிறிஸ்தவர்களுக்கு இருப்பது அவசியம். மெய்க் கிறிஸ்தவர்கள் மட்டுமே, அதாவது கிறிஸ்துவில் மெய்யாக இரட்சிப்பை அடைந்தவர்கள் மட்டுமே திருவிருந்தில் கலந்துகொள்ள வேண்டும். அதுவும் திருச்சபையில் ஞானஸ்நானத்தைப் பெற்று அதோடு தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கே திருவிருந்து கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில், இவர்களே தாங்கள் இரட்சிக்கப் பட்டிருக்கிறோம் என்று அறிவித்து சபையை நாடிப் போதகர்களுக்கு தங்களை ஒப்புவித்து தங்களுடைய விசுவாசத்தின் அடையாளமாகவும், கீழ்ப்படிதலின் அடையாளமாகவும் ஞானஸ்நானத்தைப் பெற்று முறையாக திருவிருந்தில் கலந்துகொள்ளும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள். திருச்சபைக்குத் தொடர்ந்து வராமலும், நிலையான கிறிஸ்தவ வாழ்க் கையை நடத்தாமலும், இருந்திருந்து சபையில் தலையைக் காட்டுகிறவர்களுக்கு ஒருபோதும் திருவிருந்து கொடுக்கக்கூடாது. வருகிறவர்கள் போகிறவர்களெல்லாம் கோவில் பிரசாதம் பெற்றுக் கொள்ளுகிறதைப் போல திருச்சபையில் திருவிருந்து கொடுக்கப்படக்கூடாது.
(5) திருச்சபையில் சக அங்கத்தவர்களோடு ஐக்கியத்தில் வந்து வளரும்படிச் செய்கிறார். இந்த உலகத்தில் கிறிஸ்தவன் தனிமையில் வாழ முடியாது. கிறிஸ்துவின் சரீரத்தில் பல அங்கங்கள் இருக்கின்றன. கிறிஸ்து ஆத்துமாவுக்கு இரட்சிப்பை அளிக்கும்போது தன்னுடைய சரீரத்தோடு அந்த ஆத்துமாவை இணைத்துக்கொள்ளுகிறார். அதற்கு அடையாளமாக இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டுள்ள ஆத்துமாக்கள் வேத போதனையின்படி கிறிஸ்துவின் சரீரமாகிய உள்ளூர் திருச்சபைகளை நாடி அவற்றோடு தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுமென்று வேதம் எதிர்பார்க்கிறது. கிறிஸ்தவர்கள் உள்ளூர் சபைகளில் சக கிறிஸ்தவர்களோடு ஐக்கியத்திலும், ஜெபத்திலும் வருவது அவசியம். புதிய ஏற்பாடு முழுவதும் அதை எழுதியிருக்கிறவர்கள் கிறிஸ்தவர்கள் சபைகளில் இருந்து கூடி வாழ வேண்டிய வாழ்க்கையைப் பற்றி அடிக்கடி எழுதியிருக்கிறார்கள். 1 கொரி. 12ல் பவுல் அந்த சபையில் விசுவாசிகள் பலராக இருந்தபோதும் ஒரே சரீரமாக இருக்கிறார்கள் என்றும், பலமுள்ளவர்கள் பலவீனர்களை அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவசியமான பல போதனைகளைத் தந்திருக்கிறார். அத்தோடு. ஒருவருக்கொருவர் சபைகளில் நாம் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றியும் புதிய ஏற்பாடு தெளிவாக விளக்குகிறது. சபையில் ஏனைய ஆத்துமாக்களின் மீது அன்பு காட்டுவதும், அவர்களை நம் வீடுகளுக்கு அழைத்து விருந்துபசாரம் செய்வதும், அவர்களோடு இணைந்து ஜெபத்தில் ஈடுபடுவதும், அவர்களோடு சேர்ந்து சுவிசேஷத்தை மற்றவர்களுக்கு அறிவிப்பதும், ஆவிக்குரிய பல காரியங்களில் சபைகளில் அவர்களோடு இணைந்து ஈடுபடுவதும் போன்ற பல கடமைகளை நாம் சக அங்கத்தவர்களோடு சேர்ந்து செய்ய வேண்டும். கிறிஸ்தவ ஐக்கியத்தையும் நாம் சபையில் பெலப்படுத்த வேண்டும். கிறிஸ்தவ ஐக்கியத்துக்கு தடையாக இருக்கும் செயல்களை அறவே வெறுக்க வேண்டும். சக கிறிஸ்தவ சகோதர்களைப் பற்றி வீண் பேச்சு பேசுவதையும், அப்படிப்பட்ட பேச்சுக்களைக் காது கொடுத்து கேட்பதையும் வெறுக்கப் பழக வேண்டும்.
இதையெல்லாம் ஒரு கிறிஸ்தவன் தனிமையில் வாழ்ந்து செய்ய முடியாது. திருச்சபைக்கு வெளியில் இருந்தும் ஒருவரும் செய்ய முடியாது. இதையெல்லாம் செய்யாமல் ஒருவன் பரிசுத்தத்திலும், ஐக்கியத்திலும் வளர முடியாது. கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கமாக இருக்கிறேன் என்று பறை சாற்றிக்கொண்டு அந்த சரீரத்தின் வெளிப்பாடாக உலகத்தில் இருக்கும் உள்ளூர் சபைகளை நிராகரிக்கிறவர்கள் வேதம் தெரியாதவர்கள் மட்டுமல்ல, வேத போதனைகளுக்கெல்லாம் விரோதமாக நடந்துகொள்ளகிறவர்களாக இருக்கிறார்கள்.
(6) நம்முடைய ஆவிக்குரிய வரங்களை திருச்சபை மூலம் பயன்படுத்தி சபை வளர்ச்சிக்குத் தேவையானவற்றைக் கிறிஸ்து செய்கிறார். கிறிஸ்து சுவிசேஷ ஊழியம் வளரவும், தன்னுடைய திருச்சபை வளரவும் தன்னுடைய மக்களைப் பயன்படுத்தி வருகிறார். திருச்சபை வளர்சிக்குத் தேவையான வரங்களை அவர் ஆத்துமாக்களுக்கு அளித்து அவை சபை மூலமாகப் பயன்படுத்தப்பட வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். ஒவ்வொரு கிறிஸ்தவனும் கிறிஸ்துவிடம் இருந்து ஒரு வரத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறான். ஒரு வரமாவது இல்லாத கிறிஸ்தவன் உலகத்தில் இல்லை. வரம் என்பது கிறிஸ்துவின் கிருபையின் மூலமாக நாம் செய்யக் கூடிய ஆவிக்குரிய காரியம். அன்பு காட்டுவது அவற்றில் ஒன்று (1 கொரி. 13). தனக்கு அந்த வரம் இல்லை என்று ஒரு கிறிஸ்தவனாவது சொல்ல முடியாது. அநாவசியமாக வரங்களை நாடி ஓடிக் கொண்டிராது கிறிஸ்தவர்கள் தங்களால் செய்ய முடிந¢ததையெல்லாம் சக சகோதர்களுக்கும், திருச்சபைக்கும் செய்ய வேண்டும். தங்களுடைய நேரத்தையும், பணத்தையும், உழைப்பையும் சபை வளர்ச்சிக்கு அளிக்க வேண்டும். அதை ஏதோ ஒரு வகையில் செய்ய முடியாதவன், செய்யாதவன் கிறிஸ்தவனாகவே இருக்க முடியாது. புறஜாதியார் உயிரில்லாத, பேச முடியாத கல்லைத் தெய்வமாக நினைத்து உயிரையே அதற்குக் கொடுத்து பணி செய்கிறார்கள். மூளையில்லாத அவர்களுக்கு இருக்கும் அக்கறையும், வாஞ்சையும், ஆர்வமும் ஆயிரம் மடங்கு அதிகம் கண் திறக்கப்பட்டிருக்கிற நமக்கு இருக்க வேண்டும்.
சுவிசேஷத்தைச் சொல்லுவது திருச்சபைக்குக் கர்த்தர் இட்டிருக்கும் கட்டளை (மத்தேயு 28). திருச்சபைப் போதகர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதைத் தவிர சபை மக்கள் ஒவ்வொருவரும் சுவிசேஷத்தை எந்த வகையிலாவது எல்லோருக்கும் அறிவிக்கும் கடமையைக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் பிரசங்கிகளாக வேண்டியதில்லை. வீட்டில் குடும்பத்தவர்களுக்கு அவர்கள் சுவிசேஷத்தைச் சொல்ல வேண்டும். வேலைத்தளத்தில் இருப்பவர்களிடம் நட்புக்காட்டி சுவிசேஷத்தை அவர்களுக்கு ஞானத்தோடு சொல்ல வேண்டும். இதைத் தவிர திருச்சபைக் காரியங்களில் ஊக்கத்தோடு பங்கு கொண்டு தங்களுடைய பங்கு என்ன என்று ஆராய்ந்து பார்த்து அதை நிறைவேற்ற வேண்டும். வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளி போல் ஞாயிற்றுக்கிழமை சபைக்கு வந்துபோய்க்கொண்டிருப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளக் கூடாது. அதைத்தான் இன்று அநேகர் செய்து வருகிறார்கள்.
திருச்சபை பல கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது. அதன் கற்கள் நாமே. அதில் இருக்கும் ஒவ்வொரு கல்லுக்கும் ஒரு கடமை இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்களுடைய கடமையை நிறைவேற்ற வேண்டும். எனக்கு வேலைத் தளத்தில் வேலை அதிகம், வீட்டில் சின்னக் குழந்தைகள் இருக்கிறார்கள், பல ஜோலிகள் இருக்கின்றன என்றெல்லாம் கிறிஸ்துவின் சபையைச் சார்ந்த மெய் விசுவாசிகள் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள். எத்தனை ஜோலிகள் இருந்தாலும் தாங்கள் செய்ய வேண்டிய பணிகளை அவர்கள் செய்து முடிக்கத்தான் செய்வார்கள். ஏனென்றால், அந்தக் கிருபையை அவர்கள் கிறிஸ்துவிடம் இருந்து பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய தன்மையின்படி அதைச் செய்யாமல் இருக்க முடியாது. மீன் நீத்தத்தான் செய்யும். அதற்கு நீச்சல் கற்றுக்கொடுக்கத் தேவையில்லை. நீந்தும்படி அதற்கு போதனை செய்யவேண்டிய அவசியமில்லை. நீந்த முடியாத மீனாக இருந்தால் அது செத்துப்போன மீனாக மட்டுந்தான் இருக்க முடியும். அதுபோல கிறிஸ்தவன் தான் பெற்றுக்கொண்டிருக்கிற கிருபையின்படி நடக்காமல் இருக்கமாட்டான். கர்த்தருக்கும் அவருடைய சபைக்கும் செய்ய வேண்டியதை செய்யாமல் இருக்கமாட்டான். எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து, தன் வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக்கொண்டு, வீட்டிலும், வேலைத்தளத்திலும், திருச்சபையிலும் எல்லாப் பணிகளையும் சரிவர அவன் செய்துமுடிப்பான். அவற்றைக் கர்த்தரின் துணையோடு செய்து முடிப்பான். அவன் நீந்துகிற மீனாக இருப்பான்.
இதுவரை கிறிஸ்து தன்னுடைய சபை மூலம் நம்முடைய ஆத்மீக வளர்ச்சிக்காக என்னென்ன வசதிகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறார் என்று பார்த்திருக்கிறோம். இதையெல்லாம் நிராகரித்துவிட்டு நம்மால் எப்படி விசுவாசத்தில் வளர முடியும்; உயர முடியும்? செடி வளர தண்ணீர் எப்படி அவசியமோ அதுபோல நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர இதுவரை நாம் பார்த்துள்ளவையெல்லாம் மிகவும் அவசியம். இவையில்லாமல் நாம் ஆவியில் உயிர்வாழ முடியாது. இவற்றை அறிந்தும் அறியாமலும் வாழ்க்கை யில் பின்பற்றாதவர்கள் மிகவும் மந்தமான ஆவிக்குரிய பெலனற்ற வாழ்க்கையை மட்டுமே வாழ முடியும். அத்தோடு, குடும்பஸ்தர்கள் தங்களுடைய குடும்பத்தை சபை வாழ்க்கையில்லாமல் கிறிஸ்தவ விசுவாசத்தில் எவ்வாறு வளர்க்க முடியும்? அவர்களுடைய பிள்ளைகள் சுவிசேஷத்தைக் கேட்டு எப்படி மனந்திரும்ப முடியும்? மனைவிமார் ஆவிக்குரிய வாழ்க்கையில் எவ்வாறு வளரமுடியும்? சுயநலம் அதிகரித்துப் போய் சபையில் தங்களை இணைத்துக்கொள்ளாமல் சுவிசேஷ ஊழியம் செய்கிறேன் என்று தனியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிற எத்தனை பேருடைய குடும்பங்கள் சீரழிந்து ஆத்மீகவிருத்தியில்லாமல் இன்று இருந்து வருகின்றன என்பது நமக்குத் தெரியாதா என்ன! அவர்களுடைய மனைவி, பிள்ளைகள் வாழ்க்கையில் சபை என்பதே என்னவென்று அறியாமலும், சபை வாழ்க்கையை ருசி பார்க்காமலும் வளருகிறபோது அவர்கள் பரிசுத்தத்தில் வளர்ந்து பரலோகம் போவதற்கு எங்கே வழி இருக்கிறது? “கோவில் இல்லாத ஊரில் குடியிருக்காதே’ என்று கர்த்தரை அறியாத இந்துகூட அவனுடைய கல் தெய்வமிருக்கும் கோவிலுக்குத் தன் வாழ்க்கையில் அத்தனை முக்கியத்துவமளிக்கிறான். ஜீவனுள்ள நம் கர்த்தர் நாம் பரிசுத்தத்திலும், கர்த்தரின் ஐக்கியத்தில் வளருவதற்காகவும், இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரைக்கும் விசுவாசத்தில் நாம் நிலைத்திருப்பதற் காகவும், சத்தியம் போதிக்கப்பட்டு ஆத்துமாக்கள் வந்து சேரவும் தன்னு டைய திருச்சபையை இந்த உலகத்தில் நிறுவியிருக்கிறார். அந்தத் திருச்சபை இல்லாத இடத்தில் இருப்பது தவறு, அது இல்லாமல் நாம் விசுவாசத்தில் வளர முடியாது என்ற உணர்வே இல்லாமல் வாழ்கிறவர்களை மெய்யான விசுவாசிகள் என்று எந்த அடிப்படையில் நாம் சொல்ல முடியும்.
நண்பர்களே! சபையில்லாமல் இதுவரை வாழ்ந்திருக்கிறீர்களா? உடனடியாக நல்ல சபையொன்றை நாடிச் சேர்ந்துகொள்ளுங்கள். உங்களுடைய வாழ்க்கை சிறக்கவும், குடும்பம் சிறக்கவும் அது அவசியம். சுயநலத்தால் பணத்துக்கும், உலகசுகத்துக்கும் ஆசைப்பட்டு சபையைவிட்டு விலகிப் போய் சபையில்லாத இடங்களில் இருந்து உங்களை அழித்துக் கொள்ளாதீர்கள். கர்த்தர் நமக்கு அளிக்கக்கூடிய அத்தனை ஆசீர்வாதங்களும் சபை வாழ்க்கையில் சிறக்காமல் நமக்கு வந்து சேரும் என்று கனவு கானாதீர்கள். இயேசு தன் மணவாட்டியான சபையை உயிருக்குயிராக நேசிக்கிறார். அவருடைய சபையில் இருந்து வாழத் தயங்குபவர்களை அவர் நிச்சயம் நேசிப்பார் என்று நம்மால் எப்படிச் சொல்ல முடியும்?