சில பாப்திஸ்து போதகர்கள் தங்களிடம் ஆசீர்வாதத்திற்காக வருகிறவர்களுக்கு நெற்றியில் சிலுவைக் குறியிடுவதை நான் பார்த்திருக்கிறேன். பிறந்த நாளிலும், திருமண வைபவத்திலும், வேறு விசேஷ நிகழ்ச்சிகளிலும் ஆத்துமாக்களின் நெற்றியில் விரலை வைத்து சிலுவைக்குறியிடுவதோடு தாலியையும் தொட்டு அதிலும் சிலுவைக் குறியிடுவார்கள் இந்தப் போதகர்கள். எல்லா பாப்திஸ்து போதகர்களும் இப்படிச் செய்கிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. இரண்டு இடங்களில் இதை நான் நேரடியாகவே பார்த்திருக்கிறேன். இந்த முறை சரியா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்காமல் இருக்க முடியாது.
சிலுவைக்கு மதிப்புக் கொடுத்து அதில் ஏதோவொரு தெய்வீகம் இருப்பதுபோல் எண்ணி அதைத் தோளில் சுமப்பது, சபையில் வைத்து வணங்குவது, கைகளில் துணியால் சுற்றி வைத்திருப்பது, தலையனைக் கடியில் வைத்துக் கொண்டுபடுப்பது, அதைக் கையில் வைத்து மற்றவர்களை ஆசீர்வதிப்பது போன்ற செயல்களை ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள் செய்து வருகிறார்கள். ரோமன் கத்தோலிக்க மதம் என்றோ வேதத்தைத் தூக்கியெறிந்துவிட்டு சாத்தானின் ஊழியக் காரனாக மாறி முற்றிலும் கிறிஸ்துவுக்கு எதிரான ஒரு மதமாக இன்றைக்கு உலகில் இருந்து வருகிறது. யாரோ ஏற்படுத்தி வைத்த ஒரு பாரம்பரியச் செயலாக சிலுவைக்கு தேவையில்லாத தெய்வீகத்தை சூட்டி அதைப் பரிசுத்தமான ஒரு பொருளாக நினைத்து பயபக்தியோடு அதை வணங்கி வருகிறது. கத்தோலிக்க மதத்தில் இருந்து இந்த முறை ஆங்கிலிக்கன், மெத்தடிஸ்ட் சபைகளுக்கும் பரவியிருப்பதும் நாமறிந்த உண்மை. இந்த சபைப்பிரிவுகளும் வேதபூர்வமாக நடப்பதை என்றோ தள்ளி வைத்து விட்டன. எனவே, சிலுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடக்கும் வழக்கம் ரோமன் கத்தோலிக்க மதத்தில் இருந்து வந்த ஒரு முறையென்பது தெளிவாகத் தெரிகின்ற உண்மை.
கத்தோலிக்க மதத்தோடு தொடர்பில்லாத சுவிசேஷ சபைகள் பொதுவாக கர்த்தரின் வேதத்துக்கு மதிப்புக்கொடுத்து அதன் வழிமுறைகளின்படி நடந்து வருகின்ற, நடந்து வர வேண்டிய சபைகள். இந்த சுவிசேஷ இயக்கத்தைச் சேர்ந்த பாப்திஸ்து சபைப் போதகர்கள் சிலுவைக் குறியிடுவது முற்றிலும் தவறானது. உண்மை தெரியாமல் இவர்கள் ரோமன் கத்தோலிக்க மத வழக்க முறையைக் கையாண்டு வருகிறார்கள். எல்லா பாப்திஸ்து சபைப் போதகர்களும் இதைச் செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், அவர்களில் சிலர் என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்பதே தெரியாமல் சிலுவைக் குறியிட்டு வருகிறார்கள். இது அவர்களுக்கு மத்தியில் இருக்கும் வேதபோதனைகள் சம்பந்தமான பெருங்குழப்பத்தையே காட்டுகிறது. ரோமன் கத்தோலிக்கப் பிசாசின் செயல் முறை என்ற உணர்வே இல்லாமல் அந்த முறையை சுவிசேஷ சபைப் போதகர்கள் செய்வது மிகவும் வெட்கப்பட வேண்டிய, துயரமளிக்கும் ஒரு செயல்.
வேதம் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார் என்று விளக்குகிறது. சிலுவையில் அன்றைக்கு இயேசு மட்டும் அறையப்படவில்லை. கொடியவர்களான வேறு இரு சாதாரண மனிதர்களும் அறையப்பட்டார்கள். இயேசுவின் சிலுவை மட்டும் விசேஷமான மரத்தால் செய்யப்பட் டிருக்கவில்லை. இயேசு அதில் கையை வைத்துத் தூக்கியதாலோ, முதுகில் சுமந்ததாலோ அல்லது அதில் மரித்ததாலே அந்த சிலுவை மரம் அன்று எந்தவிதமான புனிதத் தன்மையையும் அடையவில்லை. இயேசு மரித்த பிறகும் இது தொடர்ந்து சாதாரண மரமாகவே இருந்தது. இயேசு அதில் மரித்ததால் அதற்கு விசேஷ மதிப்பளித்து அவருடைய சீஷர்கள் அதைப் பாதுகாத்து தெய்வீகம் கொண்டதாக அதைப் பயன்படுத்தினார்கள் என்று வேதத்திலோ, வரலாற்றிலோ நாம் வாசிப்பதில்லை. அப்போஸ்தலர் காலத்து ஆதித்திருச் சபையில் சிலுவைக்குப் பெருமதிப்பளிக்கப்பட்டு ஆராதனையில் அதற்கு விசேஷ இடமளிக்கப்பட்டதாகவும் புதிய ஏற்பாட்டில் நாம் எங்கேயும் வாசிப்பதில்லை. இயேசுவும், தான் மரித்தபிறகு சிலுவைக்கு விசேஷ இடத்தை நம் வாழ்க்கையில் கொடுக்க வேண்டும் என்று அப்போஸ்தலர்களுக்குக் கட்டளையிடவில்லை. ஆக மொத்தத்தில் இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்பதைத் தவிர வேறு எந்தவித மான விளக்கங்களும் சிலுவை பற்றி புதிய ஏற்பாட்டில் நாம் வாசிப்ப தில்லை. உண்மை நிலை இப்படியிருக்க சிலுவைக்குப் பெருமதிப்பளித்து அதை வணங்குவதும், கையிலும், காதிலும், கழுத்திலும் மாட்டிக்கொள்ளு வதும், வீட்டில் வைத்து வணங்குவதும், போதகர்கள் சிலுவைக் குறியிடுவதும் எத்தனை பெரிய பாவமான செயல். ஏன் இது பாவமான செயல்? கிறிஸ்துவின் போதனைகளைத் தவிர வேறு எந்தக்காரியத்தையும் பின்பற்றுவதற்கு வேதம் தரும் பெயர்தான் பாவம். அத்தோடு கர்த்தரின் பத்துக் கட்டளைகள் மிகவும் தெளிவாக, நாம் கர்த்தரை எதை வைத்தும் வணங்கக்கூடாது என்று எச்சரித்துக் கட்டளையிடுகிறது. கர்த்தருக்கு மட்டுமே உரிய தெய்வீகத்தை அவரால் படைக்கப்பட்ட எதோடும் தொடர்புபடுத்திப் பார்க்கக் கூடாதென்றும் வேதம் சொல்லுகிறது. அப்படியிருக்க கர்த்தர் எவரோடும், எதோடும் பகிர்ந்துகொள்ளாத அவருடைய தெய்வீகத்தை சிலுவைக்கு நாம் கொடுக்கலாமா? அது எத்தனை பெரிய பாவம் என்பதை சிறிது சிந்தித்துப் பாருங்கள். அதுவும் போதகர்கள் சிலுவைக் குறியிட்டு ஆத்துமாக்களின் உள்ளத்தில் தவறான எண்ணங்களை உருவாக்கலாமா? மற்றவர்களின் விசுவாசத்திற்கு நாம் எந்தவிதத்திலும் தடையாக இருந்து விடக்கூடாதென்று இயேசு எச்சரித்திருக்கிறார். இனி யாவது, இதை வாசித்த பிறகாவது சிலுவைக்குத் தனி மதிப்புக் கொடுக்கிறவர்கள் கர்த்தருக்கெதிரான தங்களுடைய பாவச் செயலை நீக்கிவிடுவது நல்லது. சிலுவைக் குறியிடுவதை உடனடியாக நிறுத்துவது நல்லது.