சீர்திருத்த கிறிஸ்தவம்

தேவை இன்று தமிழினத்தில்

நமது பத்திரிகை வாசகர்களுக்கு “சீர்திருத்த கிறிஸ்தவம்” என்ற பதங்கள் புதியதாக இருக்காது. கடந்த பதினொரு வருடங்களாக அதுபற்றி எழுதி வந்திருக்கிறோம். சீர்திருத்த கிறிஸ்தவ நம்பிக்கைகளைக் கொண்டவர்களின் எழுத்துக்களையும் அறிமுகப்படுத்தி வந்திருக்கிறோம். அதன் அவசியத்தைப் பற்றியும் பல தடவைகள் எழுதி வாசகர்களின் சிந்தனைகளைத் தூண்டிவிட்டிருக்கிறோம். பதினாறாம் நூற்றாண்டில் கிறிஸ்தவ வரலாற்றில் கர்த்தர் செய்த பேரற்புதத்தின் விளைவே சீர்திருத்த கிறிஸ்தவம்.

நமது விசுவாசத்தைக் “கிறிஸ்தவம்” என்றும் நம்மைக் “கிறிஸ்தவர்கள்” என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டால் போதாதா? நமது கிறிஸ்தவ விசுவாசத்திற்கு இப்படிப் பெயர் கொடுப்பது அவசியமா? என்று சிந்திக் கிறவர்கள் நம்மத்தியில் இருக்கிறார்கள். சீர்திருத்தக் கிறிஸ்தவத்தைப் பற்றி அதிகம் தெரியாதவர்களும் இருக்கிறார்கள். இந்தப் பெயரில் தங்களையோ, தங்கள் சபைகளையோ அறிமுகப்படுத்திக்கொள்ளத் தயங்குகிறவர்களும் அதிகம். இதுபற்றி ஆத்துமாக்களுக்கு அதிகம் தெரியாதபோது இப்படி நம்மை அறிமுகப்படுத்திக் கொள்வதால் ஊழியத்துக்கு ஆபத்து ஏற்படும் என்று நினைப்பவர்களும் ஏராளம். இப்படிக் கிறிஸ்தவ வரலாறு, போதனைகள் என்றெல்லாம் நேரத்தை வீணடிப்பதைவிட வெறும் ஜெபத்தைச் செய்து, வேதம் வாசித்து ‘சிம்பிளாக’ இருந்துவிடுவதே மெய்யான கிறிஸ்தவம் என்று எண்ணி வாழ்கிறவர்கள் எண்ணிக்கையும் பெரிது.

கிறிஸ்தவத்தைப் பற்றிய பலருடைய எண்ணங்கள் எப்படி இருந்த போதும் உண்மையை எழுதித்தான் ஆக வேண்டும். சீர்திருத்த கிறிஸ்தவத்தை அறிந்து உணர்வுபூர்வமாக அதைப் பின்பற்றுவதும், அந்தப் பெயரில் நம்மை அறிமுகப்படுத்திக் கொள்வதும், அந்தப் போதனைகளை நமது சபைகள் நடைமுறையில் பின்பற்றும்படிப் பார்த்துக்கொள்வதும் ஏன் இந்தக் காலப் பகுதியில் அத்தனை அவசியம் என்பதை இந்த ஆக்கத்தின் மூலம் உங்கள் முன்வைக்க விரும்புகிறேன்.

(1) நமது விசுவாசத்தைத் தெளிவாக விளக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை வரலாறு இன்று நம்மேல் சுமத்தியிருக்கிறது.

கிறிஸ்துவை அடித்தளமாகக் கொண்டு அப்போஸ்தலர்களால் நிறுவப்பட்ட கிறிஸ்தவ திருச்சபைகள் முதல் நூற்றாண்டில் தனித்தியங்கி வந்தபோதிலும் அப்போஸ்தலர்களின் வழிநடத்தலின்படி ஒரே சத்தியத்தைப் பின்பற்றி வந்தன. அந்தக் காலத்திலேயே போலிப் போதனைகள் தலை தூக்க முயன்றதையும் புதிய ஏற்பாட்டில் நாம் வாசிக்க முடிகிறது. அதற் கெதிராக அப்போஸ்தலர்களும், சபைகளும் போராடியிருக்கின்றன. இருந்தபோதும் சபைகள் கர்த்தரால் வழிநடத்தப்பட்டு சத்தியத்தில் வளர்ந்தன. அப்போஸ்தலர்களின் காலத்திற்குப் பிறகு சபைப்பிதாக்களின் காலத்தில் போலிப்போதனைகள் தலையெடுத்து சத்தியக் கருத்து வேறுபாடுகள் தலைதூக்கியிருந்ததை வரலாறு நமக்கு விளக்குகிறது. சபைப் பிதாக்களின் காலத்துக்குப் பிறகு படிப்படியாக சபைத் தலைமை பலவீன மடைந்து, சபைகள் ஆவியின் வல்லமையை இழந்து வர ஆரம்பித்தன. பிற்காலத்தில் ரோமன் கத்தோலிக்க மதம் உருவாவதற்கான அடையாளங் கள் அன்றே காணப்பட்டன. இதன் காரணமாக திருச்சபையும், கிறிஸ்தவர் களும் அந்தக் காலத்திலேயே தங்களை யார் என்று இனங்காட்டிக் கொள்வதற்காக விசுவாச அறிக்கைகளை உருவாக்கி தாங்கள் விசுவாசிக்கும் சத்தியம் இதுதான் என்று ஆணித்தரமாக சமுதாயத்தின் முன்வைத்ததை வரலாற்றில் வாசிக்க முடிகிறது. சபைக் கவுன்சில்கள் அடிக்கடி கூடித் திருச்சபை சந்தித்த போலிப் போதனைகளை ஆராய்ந்து சத்தியம் எது என்று வேதத்தில் இருந்து விளக்கி கிறிஸ்தவ சபைகளைப் பாதுகாக்கும் நிலை உருவாகி இருந்ததையும் வரலாற்றில் வாசிக்கிறோம். இதெல்லாம் கிறிஸ்தவ சபை என்றும், கிறிஸ்தவர்கள் என்று மட்டும் பொதுவாக கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டு வந்த நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தி அவர்கள் தெளிவாக தங்களை இனங்காட்டிக்கொள்ள வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தின.

இன்று கிறிஸ்தவ சபை என்று மட்டும் அழைத்துக்கொண்டு, நேரடியாக புதிய ஏற்பாட்டில் இருந்து குதித்து வெளிவந்தவர்களைப்போல, இனங்காட்டிக்கொண்டு தாம் விசுவாசிப்பதை விளக்க முடியாமல் இருக்கிறவர்கள் ஒன்றில் இருபது நூற்றாண்டுகளுக்குரிய கிறிஸ்தவ வரலாற்றை உதறித்தள்ளியிருக்கிறார்கள்; இல்லாவிட்டால் அது பற்றிய எந்த ஞானமும் இல்லாதிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இன்று கீழைத்தேய நாடுகளில் காணப்படும் கிறிஸ்தவத்தின் பெருங்குறைபாடு கிறிஸ்தவ வரலாற்றை சபைகளும் ஆத்துமாக்களும் அறியாதிருந்து வரலாற்றுப் பாரம் பரியத்தைக் கொண்டிராமல் இருப்பதே. அத்தகைய பாரம்பரியத்தைக் கொண்டிராமல் ஆவியானவரிடம் இருந்து நேரடியாக உருவாகி வந்தவர்களைப் போலத் தங்களைக் காட்டி வருகிறவர்கள் கிறிஸ்தவத்தைப் பற்றிய எந்த அறிவும் இல்லாதவர்கள் என்று கூறுவது மிகைப்படுத்துவதாகாது.

பதினாறாம் நூற்றாண்டிற்குப் பிறகு கிறிஸ்தவத்தோடு எந்தத் தொடர்புமில்லாத ரோமன் கத்தோலிக்க மதப் போதனைகளில் இருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியது. கிறிஸ்துவின் பெயரை ஏதோ ஒருவிதத்தில் பயன்படுத்தி வரும் மோர்மன், யெகோவாவின் சாட்சிகள், கிரிஸ்டடொல்பியன் போன்ற மதங்களல்லாத  ஆத்துமாக்களைத் தவறான வழிகளில் இட்டுச்செல்லும் குழுக்களிடம் இருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டவேண்டிய அவசியம் இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் தோன்றி வேதத்தைத் தொடர்ந்தும் அங்கீகரித்தாலும், அதன் மூலம் மட்டுமே கர்த்தர் பேசுகிறார் என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்து மனம் போனவழியில் ஆவியின் செயல்கள் என்ற பெயரில் வேதத்துக்குப் புறம்பான காரியங்களைப் போதித்தும், நடத்தியும் வரும் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெடிக் இயக்கத்தாரிடம் இருந்து நம்மை வேறுபடுத்திக்காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தை கிறிஸ்தவ வரலாறு ஏற்படுத்தியிருக்கிறது.

இவை மட்டும் இல்லாமல் இரட்சிப்புப் பற்றிய தவறானதும், வேதத்தில் காணமுடியாதுமான ஆர்மீனியனிசப் போதனைகளில் இருந்தும், திரித்துவப் போதனைகளை மறுதலிக்கும் குழுக்களிடம் இருந்தும், திருச்சபையை முழு முற்றாக நிராகரிக்கும் கூட்டத்தாரிடம் இருந்தும் நம்மை வேறுபடுத்தி நாம் விசுவாசிப்பது என்ன என்பதை விளக்கி நமக்கென தகுந்த பெயரை வைத்துக்கொண்டு சமுதாயத்தில் நம்மை இனங் காட்டி கர்த்தரை மகிமைப்படுத்த வேண்டிய கடமையை கிறிஸ்தவ வரலாறு உருவாக்கியிருக்கிறது. “வரலாறு என்பது கர்த்தருடைய கதை” என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். அது சத்தியமான உண்மை. கர்த்தரில்லாத எதையும் உலகில் பார்க்க முடியாது. வரலாற்றில் பிரிக்க முடியாத அங்கமாக, நாயகனாக இருந்து பணியாற்றி வருகிறார் நம்மைப் படைத்தவர். அவர் இந்த உலகத்தில் நடத்தி வரும் செயல்களையே வரலாறு என்கிறோம். ஆகவே, நம்மை யார் என்று இனங்காட்டிக்கொள்ள வேண்டிய அவசியத்தைக் கர்த்தரே வரலாற்றின் மூலம் ஏற்படுத்தியிருக்கிறார்.

அப்படியிருக்க, வரலாற்றோடு தொடர்பில்லாமல் ஒரு கிறிஸ்தவத்தை உலகத்தில் நிலை நாட்ட முடியுமா? அப்படிச் செய்யப் பாடுபடுவது கல்லில் இருந்து கயிறு திரிக்கப் பார்ப்பது போலல்லவா அமையும். வரலா றில்லாமல் கிறிஸ்தவம் இல்லை. இன்றைக்கு கிறிஸ்தவத்தின் அங்கமாகத் தம்மைக் காட்டிக்கொள்கிற எத்தனையோ பிரிவுகள் வரலாற்றை நிராகரித்து நிற்க சீர்திருத்த கிறிஸ்தவம் வரலாற்றுக் கிறிஸ்தவமாக வல்லமையோடு கர்த்தரை மகிமைப்படுத்தி வருகிறது. தைரியத்தோடு ஆவியில் நிறைந்திருந்து ஆபிரகாம் முதல்கொண்டு லூதர், கல்வின், நொக்ஸ், ஓவன், பனியன், ஸ்பர்ஜன் என்று ஒரு பெரிய வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டு சீர்திருத்தக் கிறிஸ்தவர்களாக நம்மைக் இனங்காட்டிக் கொண்டு வாழ முடிகிறது.

(2) சீர்திருத்த கிறிஸ்தவமே வேதத்தின் போதனைகளுக்கு தெளிவான விளக்கத்தைக் கொடுத்து அப்போஸ்தலக் கிறிஸ்தவத்தைப் பிரதிபலிப்பதாக வரலாற்றில் இருந்து வருகிறது.

நமது விசுவாசம் வேதத்தையும், வரலாற்றுத் தொடர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். வேதத்தை அடிப்படையாகக் கொள்ளாத விசுவாசமும், வரலாற்றில் காணமுடியாததும் கிறிஸ்தவ விசுவாசமாக இருக்காது. சீர்திருத்த விசுவாசம் அப்போஸ்தலர்களின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டது. அதனை அப்போஸ்தலப் போதனை என்றழைப்பதிலும் தவறில்லை. அப்போஸ்தலப் போதனைகளுக்கு மாறானதை சீர்திருத்த விசுவாசத்தின் அடிப்படைப் போதனைகளில் காணமுடியாது.

(1) வேதம் – இன்று மெய்க்கிறிஸ்தவத்தைப் போலியில் இருந்துப் பிரித்துப் பார்க்க வேண்டுமானால் வேதத்தைப் பற்றிய அதனுடைய நிலை என்ன என்பதை ஆராய்ந்து பார்ப்பது அவசியம். கர்த்தரின் வேதத்திற்கு கொடுக்க வேண்டிய இடத்தைக் கொடு¢க்காத எதுவும் மெய்க்கிறிஸ்தவமாக இருக்க முடியாது. சீர்திருத்த கிறிஸ்தவம் கர்த்தரின் வேதத்தை அடிப்படையாகக் கொண்டமைந்திருக்கிறது. “வேதம் மட்டுமே” என்பதே அதனுடைய உயிர் மூச்சு. வேதத்தின் அதிகாரத்தைப் பற்றி ஆர்மீனியனிசமும், ஏனைய பிரிவுகளும் பெரிதாகப் பேசினாலும் அவை வேத அதிகாரத்தை சரிவர புரிந்து கொண்டு அதற்கு தம்மை ஒப்புக்கொடுப்பதாயில்லை. வேதத்தின் மூலம் கர்த்தரின் சித்தத்தை அறிந்துகொள்வதைப் புறக்கணித்துவிட்டு புதுப்புது வாக்குறுதிகளையும் செய்திகளையும் ஆவியானவர் தருவார் என்று தேடி அலைந்துகொண்டிருக்கிறது கெரிஸ்மெடிக் இயக்கம். வேதத்தின் மூலம் மட்டுமே கர்த்தர் பேசுகிறார் என்ற அசைக்க முடியாத சத்தியத்தை ஏற்றுக் கொள்கிறவரை பெந்தகொஸ்தே, கெரிஸ்மெடிக் இயக்கங்கள் வேத அதிகாரமும், வல்லமையும் இல்லாமலேயே இருந்துவரும். வேதத்தைப் பற்றிய அதனுடைய பலவீனமான, குளருபடியான எண்ணங்களே அதனுடைய பலவிதமான கோளாருகளுக்கும் காரணமாக அமைந்திருக்கின்றன.

வேதம் கர்த்தருடையது என்று சொன்னால் மட்டும் போதாது. வேத போதனைகளின்படி நடக்க வேண்டும் என்று ஆர்மீனியனிசமும் சொல்லத்தான் செய்கிறது. ஆனால், வேதம் இதுதான், அதன் அதிகாரம் இதுதான் என்று சுட்டிக்காட்டி, வேதம் எதைப் போதிக்கிறதோ அதற்கு முழுமையான விளக்கமளித்து அவ்விளக்கங்களைப் பின்பற்றி நடந்துகொள்வதை வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டு அமைந்திருப்பது சீர்திருத்தக் கிறிஸ்தவம் மட்டுமே. அதனால்தான் பன்னிரண்டு நூற்றாண்டுகளாக ஐரோப் பாவைத் தன் கையில் வைத்து காட்டாட்சி செய்து வந்த கத்தோலிக் கத்தின் அராஜகத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது சீர்திருத்தவாதம். சீர்திருத்தவாதிகள் வேதத்தை மக்களின் மொழியில் மொழிபெயர்த்தற்குக் காரணம் கர்த்தரைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளவும், விசுவாசிக்கவும் அது இருந்தால் மட்டுமே முடியும் என்று உறுதியாக நம்பியதால்தான்.  அதுமட்டுமல்லாமல் வேதபூர்வமாக, வேதபோதனைகளின்படி மட்டுமே கர்த்தருக்குரிய திருச்சபை ஆராதனை அமைய வேண்டும் என்று அவர் களும், அவர்களுக்குப் பின்வந்த பியூரிட்டன் பெரியவர்களும் பாடுபட்டார்கள். போதக ஊழியமும் வேத அடிப்படையில் அமைய வேண்டும் என்று போதித்து, அதை நிலைநாட்டுவதற்காக அரும்பாடுபட்டார்கள் சீர்திருத்த வாதிகளும், பியூரிட்டன்களும். இதையெல்லாம் சீர்திருத்தக் கிறிஸ்தவத்தில் அல்லாமல் வேறு எங்கும் பார்க்க முடியாது. வேதம், வேதம், வேதம் என்று வேதத்தை ஆதாரமாகக் கொண்டு அனைத்தையும் அதன் அடிப் படையில் ஆராய்கிறது சீர்திருத்த கிறிஸ்தவம். ஆக்கபூர்வமான சபை ஊழியத்தில் ஈடுபட நம்மை வற்புறுத்துகிறது; கர்த்தரை ஆராதிக்கத் தூண்டுகிறது. இதையெல்லாம் இன்று தமிழினத்துக் கிறிஸ்தவத்தில் காண முடியவில்லை. சீர்திருத்த கிறிஸ்தவத்தை அறியாமலும் அதன் வல்லமையை அநுபவிக்காமலும் இருந்துவருகின்றன தமிழினத்து திருச்சபைகள்.

சீர்திருத்தவாதிகள் வேதத்திற்கு எத்தனை மதிப்பளித்திருக்கிறார்கள் என்று அறிந்துகொள்ள வேண்டுமானால் சீர்திருத்தக் கிறிஸ்தவ விசுவாச அறிக்கைகளை வாசித்துப் பார்த்தாலே போதும். 1689 விசுவாச அறிக்கையின் (1689 Confession of Faith) முதலாவது அதிகாரம் வேதத்தைப் பற்றி விளக்குகிறது. அதில் சீர்திருத்தவாதிகள் வேதத்தின் அதிகாரத்தையும் அதன் போதுமான தன்மையைப் பற்றியும் தெள்ளத் தெளிவாக எழுதித் தந்திருக்கிறார்கள். இது ஒவ்வொரு விசுவாசியும் வாசித்துப் பயனடைய வேண்டிய அற்புதமான படைப்பு. வாசிப்பது மட்டுமல்லாமல் அதன் போதனையின்படி வாழ்வதும் சபைகள் வேதபூர்வமாக இயங்கும்படிப் பார்த்துக்கொள்ள வேண்டியதும் நமது பணி.

(2) கர்த்தரின் இறையைண்மை – அப்போஸ்தலப் போதனைகளைத் தெளிவாக விளக்குகிறது சீர்திருத்த விசுவாசம். கர்த்தரின் இறையாண்மையை அடிப்படையாகக் கொண்டு அதன் போதனைகள் அமைந்திருக்கின்றன. கர்த்தரின் படைப்புகளிலெல்லாம் சிறப்பான மானுடத்திற்கு மதிப்புத் தருகின்ற அதைவேளை மானுடம் பாவத்தினால் கறைபடிந்திருப்பதைக் கருத்தில் கொண்டு கர்த்தரின் ஆளுமைக்கு அது எந்தவிதத்திலும் மாசேற்படுத்திவிடாபடி அதன் போதனைகள் அமைந்திருக்கின்றன. மானுடத்தை முன்னிலைப்படுத்தி கர்த்தருக்குக் கொடுக்க வேண்டிய இடத்தைக் கொடுக்கத் தவறும் ஆர்மீனியனிசப் போதனைக்கு எதிர்மறையானது சீர்திருத்த கிறிஸ்தவம். ஆரம்பம் முதல் கடைசிவரை இரட்சிப்பு கர்த்தருக்கே சொந்தம் என்றும், கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் இரட்சிப்பும் மகிமையும் தேவ மகிமைக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் விளக்குகிறது சீர்திருத்த விசுவாசம். கர்த்தரின் இறையாண்மையை அது அடிப்படையாகக் கொண்டிருப்பதால் கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் அவரிடம் வந்துசேர தங்களுடைய சொந்த வல்லமையில் தங்கியிராமல் கர்த்தரின் தெளிவான, வல்லமையான திட்டத்திலேயே தங்கியிருக்கிறார்கள் என்று அது விசுவாசிக்கிறது.

(3) கிருபையின் போதனைகள் – இரட்சிப்புப் பற்றிய சீர்திருத்தவாத கிறிஸ்தவத்தின் போதனைகளை வரலாறு கிருபையின் போதனைகள் என்று அழைக்கிறது. இதைக் கல்வினிச ஐம்போதனைகள் என்றும் அழைப்பார்கள். இந்தக் கிருபையின் போதனைகள் இரட்சிப்பாகிய கிருபையைப் பற்றிய தெளிவான வேத சத்தியங்களை விளக்குகின்றன. கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் உள்ளம்சங்களை வேதபூர்வமாக கர்த்தரின் இறை யாண்மையின் அடிப்படையில் விளக்குகின்றன. பாவத்தில் வீழ்ந்திருக்கும் மனிதனின் நிலைமையை வெளிப்படுத்தி அவனுடைய விடுதலைக்காக கர்த்தர் ஏற்படுத்தி கிறிஸ்துவின் மூலம் நிறைவேற்றியிருக்கும் திட்டத்தை அப்பழுக்கில்லாமல் வேதத்தில் இருந்து நம்முன் வைக்கின்றன. இந்தப் போதனைகளை இன்றும் கூட தமிழினத்துக் கிறிஸ்தவம் பெருமளவுக்கு அறியாமல் இருட்டில் இருந்து வருகிறது. அதனால்தான் இன்றைக்கு சுவிசேஷ ஊழியம் தமிழினத்தில் தரம் குறைந்து தனி மனித சுயநலத்தைத் திருப்திப்படுத்திக் கொள்ளுவதற்காகவும், தனிமனிதர்களின் வியாபார நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளுவதற்காகவும் நடந்து வருகின்றன. வேதம் போதிக்கும் கிருபையின் போதனைகள் இரட்சிப்பின் நிறை வேற்றத்தின் மூலம் கர்த்தருக்கே சகல மகிமையும் போய் சேரும்படியாகச் செய்கின்றன.

(4) கர்த்தரின் ஆராதனை – தமிழினத்தில் கர்த்தருக்குக் கொடுக்கப்படுகின்ற ஆராதனை இன்றைக்கு வேதபூர்வமாக அமைந்திருக்கவில்லை. ஆர்மீனியனிசத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருக்கும் பெரும்பாலான ஊழியங்கள் மனித உணர்ச்சிக்கு மட்டுமே இடம் கொடுத்து மனம்போன போக்கில் கர்த்தரை ஆராதனை என்ற பெயரில் துதிக்கும்படி ஆத்துமாக்களுக்கு வழிகாட்டி வருகின்றன; அந்நிய அக்கினியை அவர் முன் அள்ளிக் குவித்து வருகின்றன. வேத போதனைகளுக்கும், கர்த்தரின் ஆராதனை வழி முறைகளுக்கும் அங்கே இடமில்லை. அறியாமை இதற்கு மூல காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது. வேத அதிகாரமும், திருச்சபை வரலாறும் அறியாதவர்களுக்கு கர்த்தரின் ஆராதனை பற்றிய வேதபூர்வமான அறிவும் அநுபவமும் இருக்க இடமில்லை.

கர்த்தரின் வேதமோ, கர்த்தரின் வார்த்தையின்படி மட்டுமே அவருடைய ஆராதனை அமைய வேண்டும் என்று தெளிவாக விளக்குகிறது. அதில் மனித சிந்தனைகளுக்கும், உலக அநுபவங்களும் இடமில்லை. உணர்ச்சி வெளிப்பாட்டுக்கு இடமிருந்தபோது அது வேதத்தின் கட்டுப்பாட்டுக்குள் அமைந்தே வெளிப்பட வேண்டும். இதுவே ஆராதனை பற்றி வேதம் போதிக்கும் உண்மை. சீர்திருத்த கிறிஸ்தவம் இந்தப் பகுதியில் கிறிஸ் தவத்திற்கு பெரும் சேவை செய்திருக்கிறது. சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன்களும் இதுபற்றி போதித்து, விளக்கி, நூல்களைப் படைத்து திருச்சபை க்கு பெரும்பணிபுரிந்திருக்கிறார்கள். ஆராதனையில் இருக்க வேண்டிய அம்சங்களைத் தெளிவாக விளக்கிக்காட்டி, இருக்கக்கூடாதவற்றையும் சுட்டிக்காட்டி நம்மை எச்சரித்திருக்கிறார்கள். தமிழினம் தொடர்ந்து இவற்றை அறியாதிருந்து வருகிறது. தமிழினத்து திருச்சபைகள் இதை அறிந்துகொள்ள இடம் தருவதாயில்லை. பெந்தகொஸ்தே ஆராதனை முறைகளைப் பின்பற்றி தனிமனித இச்சைப்படி கர்த்தருக்கான ஆராதனையை அளித்துவருகிறார்கள் அநேகர். கூட்டத்தைக் கூட்டுவதற்கும் அதன் மூலம் பணம் சேர்த்துக்கொள்வதற்கும் எதெல்லாம் பயன்படுமோ அவற்றில் மட்டுமே கண்ணாய் இருந்துவருகிறார்கள் ஊழியக்காரர்கள் என்ற பெயரில் உலவும் அநேகர். கர்த்தரின் ஆராதனை இன்றைக்கு ஆகாபின் காலத்திலும், மனாசேயின் காலத்திலும் இருந்ததைப் போல கர்த்தருக்கு அவமதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த ஆபத்து நீங்க நம்மத்தியில் வேதபூர்வமான சீர்திருத்த கிறிஸ்தவம் வளர்வது அவசியம். அது இருக்குமிடத்தில்தான் வேத அடிப்படையிலான கர்த்தருக்குரிய ஆராதனை வழிகளைப் பார்க்க முடியும். கர்த்தருக்கு மகிமை தரும் துதியைப் பார்க்க முடியும்.

(5) திருச்சபை –  தமிழினத்தில் பரவலாக காணப்படும் திருச்சபை ஊழியத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. குடிசைத் தொழிலாக, எவருக்கும் கணக்குக்கொடுக்காத தனிநபர் வீட்டூழியங்களும், சபையை முழு முற்றாக நிராகரித்து சினிமா ஸ்டார்போல் கவர்ச்சி ஊழியம் நடத்தி வரும் சுவிசேஷகர்களுமே இன்றைக்கு ஆத்துமாக்களை வலைவீசிப்பிடித்து அவர்களை ஆண்டு வருகிறார்கள். வேதம் அறியாது வாழ்ந்து வரும் மக்கள் மத்தியில் இவர்களைப் பார்த்து கேள்வி கேட்கிறவர்கள் எவரும் இல்லை. இவர்களைத் தவிர கிறிஸ்தவ ஸ்தாபனங்களும் பெருகி கர்த்துருக்கு ஆள் சேர்க்கிறோம் என்று ஒரு சில மனிதர்களை மட்டும் தலைவர்களாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இவர்கள் எல்லோருமே ஆர்மீனியனிச இறையியல் போதனைகளை அறிந்தோ அறியாமலோ பின்பற்றி வருகிறார்கள். இவர்கள் மத்தியில் வேதபூர்வமான திருச்சபை அமைப்புக்கு இடமில்லை.

இதற்கெல்லாம் மாறாக சீர்திருத்த கிறிஸ்தவம் வேத அடிப்படையிலான திருச்சபை அமைவதில் கண்ணாக இருக்கின்றது. தனி மனிதர்களை முதனமைப்படுத்தாமல், கர்த்தரின் வேதத்திற்கு மதிப்புக்கொடுத்து அவர் நேசிக்கும் திருச்சபையை கிறிஸ்துவை அடிப்படையாகக் கொண்டு கட்டும் பணியில் ஊக்கம் காட்டுகிறது. அதன் அமைப்பு, நிர்வாகம், தலைமை, அங்கத்துவம், கட்டுப்பாடு, ஆராதனை அனைத்தும் வேதம் தரும் போதனைகளை மட்டுமே பின்பற்றி அமைய வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து வைராக்கியத்தோடு போதிக்கிறது. இன்றைக்கு தமிழினத்தில் கர்த்தரை மகிமைப்படுத்தும் திருச்சபை உருவாக வேண்டுமானால் சீர்திருத்த கிறிஸ்தவத்தை முழுமனத்தோடும், வைராக்கியத்தோடும், தியாகத்தோடும், பக்கிவிருத்தியோடும் பின்பற்று கிறவர்கள் எழுந்தால் மட்டுமே முடியும்.

மெய்யான சீர்திருத்த கிறிஸ்தவம் இருக்குமிடத்தில் குடும்ப ஊழியத்துக்கும், எவருக்கும் கணக்குக் கொடுக்க மறுக்கும் தனிநபர் ஊழியத்துக்கும், ஆத்துமாக்களைப் பணம் சேர்ப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்ளும் புல்லுருவிகளுக்கும், தன்னை உயர்த்திக் கொள்ளுவதற்காக ஏணிப்படியாக சபையைப் பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்களுக்கும் இடம் கிடையாது. வெறும் பிணம் போன்ற பாரம்பரியத்துக்கும், கலாச்சார சீரழிவுகளுக்கும் அங்கே இடமிருக்காது. வேதம் அங்கே பயபக்தியோடு ஆளும்; போதகர்கள் உயிரைக் கொடுத்து ஆத்துமாக்களின் உயர்வுக்காக மட்டும் உழைப்பவர்களாக இருப்பார்கள், அவர்களிடம் பந்தா இருக்காது, பகட்டு இருக்காது, பாம்பின் குணம் இருக்காது, பண ஆசை இருக்காது, மொத்தத்தில் அவர்கள் பிணமாக இருக்க மாட்டார்கள். திருச்சபை சபை அங்கத்தவர்கள் கடமைப்பாட்டோடு கர்த்தரின் வேதத்தைப் பின்பற்றி அவரை மகிமைப்படுத்தப் பார்ப்பார்கள். சுயநலநோக்கத்தோடு சுவிசேஷ ஊழியங்கள் அங்கே நடக்காது; ஆத்துமாக்கள் வேதமறிந்தவர்களாக பக்தி வைராக்கியத்தோடு வளர்பவர்களாக இருப்பார்கள். பழைய வாழ்க்கையைத் தூக்கி எறிந்துவிட்டு வேதபோதனைகளின்படி தங்களை மாற்றிக்கொண்டு அன்றாடம் கர்த்தருக்குப் பிரியமான வாழ்க்கையை வாழுகிறவர்களாக இருப்பார்கள். அவர்கள் பூரணமானவர்களாக இல்லாவிட்டாலும் அவர்கள் மத்தியில் உண்மை இருக்கும், அங்கு நடக்கும் ஜெபத்தில் உயிரிருக்கும், அவர்கள் வார்த்தை சுத்தமாக இருக்கும், இருதயத்தில் பக்தி இருக்கும். இதுவே சீர்திருத்த கிறிஸ்தவம் உருவாக்குகிற திருச்சபை அமைப்பு. இதில்லாமல் தமிழினம் எப்படி கர்த்தரை மகிமைப்படுத்த முடியும்?

சீர்திருத்த கிறிஸ்தவம் நம்மத்தியில் இருக்க வேண்டியதற்கான அவசியத்தை உங்கள் முன் இதுவரை விளக்கிக் காட்ட முயன்றிருக்கிறேன். இதுவரை நாம் பார்த்த முக்கியமான அம்சங்களை இன்றைக்கு நம்மத்தியில் பார்க்க முடியாதபடி கிறிஸ்தவ சபைகள், ஊழியங்கள் என்ற பெயரில் வியாபாரம் நடத்துகிறவர்கள் செய்து வைத்திருக்கிறார்கள். நமது பத்திரிக்கையை வாசித்து வருகிற அநேக வாசகர்களும், நண்பர்களும் நான் சொல்வதை நிச்சயம் புரிந்துகொண்டிருப்பீர்கள். நம் கண்களுக்குத் தெரியாமலா நாம் பார்க்கிற காரியங்கள் நடந்துவருகின்றன. இந்நிலைமை மாற நாம் என்ன செய்ய வேண்டும்? சீர்திருத்த கிறிஸ்தவம் உருவாக வழி உண்டா? ஆத்துமாக்கள் சத்தியவேதத்தை சத்தியமாக அறிந்துகொள்ள, அதன்படி வாழ வழி இருக்கிறதா? இருக்கிறது நண்பர்களே! அதற்கு உங்கள் பணி என்ன?

அ. கர்த்தர் கருணைகூர்ந்து நம்மத்தியில் அத்தகைய கிறிஸ்தவத்தை ஏற்படுத்த ஜெபியுங்கள். வேதம் வேதமாக பிரசங்கிக்கப்பட ஜெபியுங்கள். நல்ல திருச்சபைகள் உருவாக ஜெபியுங்கள். நல்ல ஊழியர்கள் உருவாக ஜெபியுங்கள். ஊக்கமாக, உயிர்த்துடிப்போடு, தியாகத்தோடு ஜெபியுங்கள்.

ஆ. இந்த உண்மைகள் உங்களைத் தொட்டிருந்தால் நீங்கள் செய்ய வேண் டியதைப் பற்றி சிந்தியுங்கள். தவறான இடத்திலிருந்து தவறான மனிதர்களுக்கு பலிக்கடாவாக இருந்து வருகிறீர்களா? மார்டின் லூதரைப் போல தைரியத்தோடு நீங்கள் இருக்குமிடத்தைவிட்டு கர்த்தருக்காக வெளியே வரவேண்டும். போலித்தனத்துக்கு துணைபோவதால் கர்த்தரை உங்கள் வாழ்க்கையில் மகிமைப்படுத்த முடியாது. வேதம் வேதமாக போதிக்கப் படாத இடத்திலும், ஆராதனை வேத அடிப்படையில் நடக்காத இடத்திலும், போதகர்கள் வேத அடிப்படையில் மேய்ப்பன் ஊழியத்தை செய்யாமல் நம்மைத் தங்கள் சுயநலத்துக்காக பயன்படுத்திக் கொள்கிற இடத்திலும், திருச்சபை திருச்சபையாக இல்லாத இடத்திலும் நாம் இருப்பது தகாது.

இ. சத்தியம் இருக்குமிடத்தை நாடிச் செல்லுங்கள். சத்தியத்தின்படி வாழ வாழ்க்கையில் தியாகம் செய்வது அவசியம். நமக்காக கிறிஸ்து மரித்தார். அவருக்கு விசுவாசமாக இருக்க வாழ்க்கையில் தியாகம் செய்யத் தயங்க லாமா? சத்தியத்தின்படி உங்கள் குடும்பம் வாழ, வளர நீங்கள் சத்தியத்தை நாடிப்போக வேண்டும். கெட்டகுமாரன், இருக்குமிடத்திலேயே இருந்திருந் தால் அவனுக்கு வாழ்க்கை கிடைத்திருக்காது. அவன் முடிவெடுத்தான், எழுந்தான், தகப்பனிடம் போனான். நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s