இந்த வருடம் ஜோன் நியூட்டன் (John Newton) கர்த்தரை அடைந்த இருநூறாவது வருடமாகும். இங்கிலாந்தில் அடிமை வியாபாரத்திற்கெதிராகப் போராடி வெற்றிகண்ட வில்லியம் வில்பர்போர்ஸ் (William Wiberforce) ஜோன் நியூட்டனின் நெருங்கிய நண்பர். இருவரும் இந்தப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்கள். இங்கிலாந்தில் அடிமை வியாபாரம் ஒழிக்கப்பட்ட இருநூறாவது ஆண்டும் இந்த ஆண்டுதான். ஆராதனைப் பாடல்கள் எழுதிப் புகழ் பெற்ற வில்லியம் கவுப்பர் (William Cowper) ஜோன் நியூட்டனின் இன்னுமொரு நெருங்கிய நண்பர். இருவரும் இணைந்து பல பாடல் களை எழுதியுள்ளனர். கப்பல்களில் பணிபுரிந்து பின்பு அடிமை வியாபாரக் கப்பல்களில் வேலை செய்து தானும் அடிமையாகி பாவத்தையும், துன்பத்தையும் அவற்றின் அடிமட்டம்வரைப் போய் ருசிபார்த்து கர்த்தரை அறியாமல் வாழ்ந்த நியூட்டனை இறையாண்மையுள்ள கர்த்தர் தன்னுடைய கிருபையால் இரட்சித்துப் பயன்படுத்தினார். அவருடைய மனந்திரும்புதல் பற்றிய சாட்சி கர்த்தரின் அளப்பரிய கிருபையை உலகத்திற்கு இன்றும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. நியூட்டன் எழுதிய நூல்களும், பாடல்களும் அவரை இன்றும் கிறிஸ்தவ உலகம் நினைவுகூரும்படிச் செய்துகொண்டிருக்கின்றன. இன்றைக்கும் கிறிஸ்தவர்களெல்லாம் பாரெல்லாம் கர்த்தரைப் பாடிப் புகழும் அவரெழுதிய “Amazing Grace How Sweet The Sound” என்ற பாடலை எவரால் மறக்க முடியும்.
ஜோன் நியூட்டன் (John Newton) 21ம் நாள் டிசம்பர் 1907ல் கர்த்தரிடம் சேர்ந்தார். இந்த வருடம் அவர் கர்த்தரை அடைந்த இருநூறாவது வருடமாகும். ஜோன் நியூட்டன் யார், அவரைப் பற்றி நாம் ஏன் சிந்திக்க வேண்டும் என்று சிலர் எண்ணலாம். Amazing Grace என்ற பிரசித்திபெற்ற பாடலை எழுதியவர் ஜோன் நியூட்டன். இந்த வருடம் Amazing Grace என்ற அந்தப் பாடலின் தலைப்பில் நியூட்டனின் அருமை நண்பரான வில்லியம் வில்பர்போர்ஸைப் (William Wilberforce) பற்றிய ஒரு படத்தை ஹொலிவுட் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. இங்கிலாந்தில் அடிமை வியாபாரத்தை ஒழிப்பதற்கு எதிராகப் போராடி வெற்றிகண்டவர் வில்லியம் வில்பர்போர்ஸ். இந்த இருவருமே சீர்திருத்த சுவிசேஷ இயக்கக் கிறிஸ்தவர்கள் (Reformed Evangelical Christians). இந்த வருடம் வில்பர்போர்ஸ் அடிமை வியாபாரத்தை ஒழித்த இருநூறாவது வருடமும்கூட. ஜோன் நியூட்டன் சுவிசேஷ இயக்கப் படைப்பாளிகளில் முதன்மையானவர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்த இருவரும் இன்னொரு பிரசித்திபெற்ற பிரசங்கியான ஜோர்ஜ் விட்பீல்டும் சுவிசேஷ இயக்கத்தை ஒன்றிணைத்து உலகமுழுவதும் சுவிசேஷம் பரவுவதற்கு சுவிசேஷ ஊழியத்தைப் பெலப்படுத்தினார்கள்.
இலண்டனில் வெப்பிங் என்ற இடத்தில் 1725ல் பிறந்தார் ஜோன் நியூட்டன். பெற்றோர்களுக்கு இவர் ஒரே பிள்ளை. அவர் ஏழு வயதாகு முன்பே தாயை இழக்க நேரிட்டது. பத்து வயதுவரை அவர் பாடசாலைக்குப் போனார். பதினொராவது வயதில் கப்பல் தலைவனாக இருந்த தன்னுடைய தந்தையுடன் அவர் மத்தியதரைக் கடலில் வியாபாரம் நிமித்தமாக ஐந்து பிரயாணங்களை மேற்கொண்டிருந்தார். பதினேழாவது வயதாக இருக்கும்போது அவருடைய தந்தை ஜமைக்காவில் அவருக்கு ஒரு தொழிலைத் தேடித்தந்தார். அங்கே சில வருடங்கள் அவர் வாழும்படியாக திட்டம் இருந்தது. ஆனால், அந்தப் பிரயாணத்திற்கு சில நாட்களுக்கு முன்பாக தந்தை அனுப்பிய வேலை நிமித்தமாக அவர் கென்டுக்குப் (Kent) போக நேர்ந்தது. அந்த வேலையை நிறைவேற்ற அவருக்கு மூன்று நாட்களுக்கு மேல் தேவையிருக்கவில்லை. தன்னுடைய வாலிப வயதுத் துடிப்புக்கேற்ப தந்தையின் வேலையை முடித்த பிறகு அவர் செட்டம் (Chettam) என்ற இடத்தில் இருந்த இன்னொரு முகவரிக்குப் போனார். அங்கேயே அவருடைய தாய் இறந்த வீடிருந்தது. அந்த வீட்டில் இருந்தவர்கள் ஜோர்ஜ், எலிசபெத் என்ற கணவன் மனைவியும் அவர்களுடைய இரண்டு மகன்களும், பதினான்கு வயது நிரம்பிய “பொலி” (Polly) என்ற பெயரில் அழைக்கப்பட்ட அவர்களுடைய மகளான மேரியும். தந்தையோடு வளர்ந்து தனிமையை அதிகம் சந்தித்திருந்த நியூட்டனுக்கு இந்தக் குடும்பத்தின் நட்பு ஆனந்தம் தருவதாக இருந்தது. மிகவும் முக்கியமாக அவருக்கு பொலியின் மேல் அன்பு உருவாயிற்று.
நியூட்டனுக்கு பொலியின் மேலே ஏற்பட்ட காதலால் ஜமைக்காவுக்கு போகும் கப்பலைத் தவறவிட நேரிட்டது. அதற்கடுத்தவருடம் மீண்டும் அவர் மத்தியதரைக்கடல் பயணத்தை வியாபாரத்தின் காரணமாக மேற்கொள்ள நேரிட்டது. அதற்கடுத்த வருடம் அவர் எதிர்பாராதவிதமாக இங்கிலாந்தின் கடற்படையில் சேர நேரிட்டது. இது அவருடைய விருப்பத்துக்கு மாறாகவே நிகழ்ந்தது. இக்காலத்தில் இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் இடையில் போர் உருவாகும் வாய்ப்பு இருந்தது. இதனால் இங்கிலாந்துக் கடற்படைக்கு படைவீரர்கள் தேவைப்பட்டனர். கடற்படையில் சேருவதற்கு பலர் முன்வந்தபோதும் அதற்கும் மேலாக வீரர்கள் தேவைப்பட்டதால் பலர் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டனர். நியூட்டனும் அதில் ஒருவர். 1744ம் ஆண்டு (H M S Harwich) ஹார்விக் என்ற கப்பலில் இருந்த 350 பேர்களில் ஒருவராக நியூட்டனும் இருந்தார். கடற்பிரயாணமும், கப்பல்களும் பரிச்சயமானவைகளாக இருந்தபோதும் நியூட்டன் இத்தனை மோசமான கப்பலை இதுவரை சந்தித்திருக்கவில்லை. அத்தோடு கப்பலில் கடுமையான ஒழுங்குக் கட்டுப்பாடும் பின்பற்றப்பட்டது. சில வாரங்களுக்குள் நியூட்டனின் தந்தையின் தலையீட்டால் கப்பல் தலைவன் நியூட்டனை கப்பலில் வேறிடத்துக்கு மாற்றினார். இதே ஆண்டு கப்பல் கென்டுக்கு அருகில் நிறுத்தப்பட்டது. இரண்டு தடவை கரைக்குப் போன நியூட்டன் நேரத்துக்கு கப்பலுக்குத் திரும்பத் தவறினார். அவர் பொலியைப் பார்க்கப் போயிருந்ததே இதற்குக் காரணம். இதனால் அவர் கப்பல் தலைவனின் கண்டிப்புக்கு ஆளானதோடு அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த சலுகைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டன. ஆனால், இதையும் விட மேலான துன்பம் அவருக்குக் காத்திருந்தது. அதே ஆண்டின் நவம்பர் மாதத்தில் கப்பல் ஆங்கிலக் கால்வாயை அடைந்தது. அங்கிருந்த 116 கப்பல்களில் ஒன்றாக நியூட்டன் இருந்த கப்பலுமிருந்தது. நியூட்டனின் கப்பல் இந்தியக் கடற்பிரதேசத்தில் பிரான்ஸுடன் போராடப் போவதற்கான ஆயத்தத்தில் ஈடுபட்டிருந்தது. அங்கிருந்த ஏனைய கப்பல்கள் வேறு பிரதேசங்களுக்குப் போகத் தயாராகிக் கொண்டிருந்தன. இந்தியக் கடற் பிரதேசத்துக் போனால் இன்னும் ஐந்து வருடங்களுக்கு இங்கிலாந்தைப் பார்க்க முடியாது என்று கேள்விப்பட்ட நியூட்டனுக்கு பொலியைப் பார்க்க முடியாமல் போகுமே என்ற துன்பத்தைத் தாங்க முடியவில்லை. அவ்வேளை ஏற்பட்ட பெருங்காற்றினால் கப்பல் பிரயாணத்திற்கு தடையேற்பட்டு கப்பல் பிலிமத் என்ற இடத்துக்கு திருத்தப்பணிக்காக நிறுத்தப்பட்டிருந்தபோது நியூட்டன் கப்பலில் இருந்து இரகசியமாக ஒருவருக்கும் தெரியாமல் வெளியேறினார். கடற்படையைப் பொறுத்தவரையில் இது பெருந்தண்டனைக்குரிய குற்றம்.
ஜோன் நியூட்டன் முப்பது மைல்களுக்கப்பால் கப்பல் பிரயாண வேலையில் ஈடுபட்டிருந்த தன்னுடைய தந்தையை சந்திக்க நடந்தேபோகத் தீர்மானித்தார். தந்தை கப்பல் தலைவனாகவும், செல்வாக்குள்ளவராகவும் இருந்ததால் அவரோடு இருந்தால் தனக்குப் பிரச்சனைகள் வராது என்று எண்ணிய நியூட்டன் அவரைப் பார்க்க முதலில் போனார். அவ்வாறு அவர் போய்க்கொண்டிருந்தபோது வீதியோரங்களில் பணி புரிந்து கொண்டிருந்த போர்வீரர்கள் சந்தேகப்பட்டு அவரைக் கைது செய்தனர். அவர்கள் அவரை மறுபடியும் கப்பலுக்குக் கொண்டு போனார்கள். படையில் இருந்து தப்பியோடியவர் என்று கருதப்பட்டு கப்பல் தலைவன் அவருடைய பணியில் இருந்து அவரை நீக்கி எல்லோருக்கும் முன்னால் சவுக்கடி கொடுத்தார். இதனால் பெருங்கோபம் கொண்ட நியூட்டன் இந்த இக்கட்டில் இருந்து மீண்டபின் எப்படியாவது கப்பல் தலைவனைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொள்ளத் தீர்மானித்தார். இதை எப்படி நிறைவேற்றுவது என்று அவர் சிந்தித்துப் பார்த்தபோது, தான் மனதார நேசிக்கும் பொலி தன்னைப்பற்றி மிகவும் தரக்குறைவாக நினைத்து வாழ வேண்டுமே என்ற எண்ணம் மனதை வாட்டியதால் கப்பல் தலைவனைக் கொல்லும் எண்ணத்தைக் கைவிட்டார்.
ஒரு நாள் கப்பல் அட்லாண்டிக் கடலில் போய்க்கொண்டிருந்தபோது மெடீரா (Madeira) என்ற தீவை அடைந்தது. அப்போது நியூட்டன் தன்னுடைய கயிற்றுக் கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்தார். அந்த வழியில் வந்த ஒரு கப்பல் மாலுமி தன்னுடைய கத்தியால் அந்தக் கட்டில் கயிறை அறுத்துவிட நியூட்டன் தரையில் விழுந்தார். அவருடைய உறக்கம் நீங்கியதோடு கடுங்கோபமும் கொண்டார். இருந்தபோதும் அவர் இருந்த நிலையில் அவரால் அப்போது ஒன்றும் செய்யமுடியவில்லை. கப்பலின் ஓரத்தில் வந்து நின்று என்ன நடக்கின்றது என்று பார்த்த நியூட்டன் கப்பல் மாலுமி ஒருவன் இன்னொரு வியாபாரக் கப்பலுக்கு மாற்றப்படுவதைக் கவனித்தார். தானிருந்த கப்பலின் பாதுகாப்புக்காக வந்த கப்பல்களுக்கு இரண்டு பயிற்சிபெற்ற மாலுமிகள் தேவைப்பட்டதால் வியாபாரக் கப்பலில் இருந்து அப்படிப்பட்ட இரண்டு மாலுமிகளைப் பெற்றுக்கொண்டு தானிருந்த கப்பலில் இருந்து இரண்டுபேரை வியாபாரக் கப்பலுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் நிகழ்ந்துகொண்டிருப்பதை அவர் உணர்ந்தார். ஆனால், ஹார்விக் கப்பல் அதுவரை ஒரு மாலுமியை மட்டுமே தெரிவு செய்திருந்தது. உடனடியாக நியூட்டன் தன்னை அனுப்பும்படிக் கப்பல் தலைவனைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். இவன் போய்த் தொலைந்தால் நல்லது என்று கப்பல் தலைவன் எண்ணினானோ என்னவோ உடனடியாக அதற்குத் தலையாட்டி சம்மதித்தான். அவசர அவசரமாகக் கைவசமிருந்த கொஞ்ச உடைகளையும், ஒரு புத்தகத்தையும் தூக்கிக்கொண்டு ஜோன் நியூட்டன் வியாபாரக் கப்பலுக்கு ஓடினார். இந்த சம்பவத்தைப் பற்றிப் பின்னால் நினைவுகூர்ந்த நியூட்டன், கர்த்தரின் பராமரிப்பே இத்தகைய சூழ்நிலையை உருவாக்கியதாகக் கூறுகிறார்.
வியாபாரக் கப்பலுக்குப் போய்ச் சேர்ந்த ஜோன் நியூட்டனுக்கு பின்னால் வாழ்க்கையில் என்ன நடக்கப்போகிறது என்று எதுவுமே தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் அவர்தான் வியாபாரக் கப்பலுக்குப் போக ஒத்துக்கொண்டிருந்திருப்பாரா? கொடிய துன்பங்களை அவருடைய வாழ்க்கையில் கொண்டுவரக் கடலில் காத்திருந்த அந்த வியாபாரக் கப்பலே பின்னால் அவருடைய பாவ வாழ்க்கையை மாற்றி அமைக்கவும் ஒரு விதத்தில் காரணமாக அமைந்தது. இதைப் பற்றியெல்லாம் எதுவும் அறிந்திராத ஜோன் நியூட்டன் இப்போதைக்கு கடற்படையில் இருந்து தப்பினால் போதும் என்று வியாபாரக் கப்பலைப் போய்ச் சேர்ந்தார்.
ஜோன் நியூட்டன் கால் வைத்துப் படியேறிய அந்த வியாபாரக் கப்பல் சாதாரண வியாபாரக் கப்பலல்ல. அடிமை வியாபாரத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் திளைத்திருந்த அந்தக் காலத்தில் இத்தகைய கப்பல்களே ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக மேற்கிந்திய தீவுகளுக்கும் அமெரிக்காவுக்கும் கொண்டுபோய்க்கொண்டிருந்தன. வருடத்திற்கு ஆறாயிரம்பேர் அடிமைகளாக இந்நாடுகளுக்கு போய்ச்சேர்ந்தனர். அடிமைகளை இறக்கி விட்டு திரும்பிவரும்போது பருத்தி, ரம், சீனி போன்றவைகளை இந்தக் கப்பல்கள் ஏற்றி வந்தன. நியூட்டன் கால்வைத்த அந்தக் கப்பலில் ஆப்பிரிக்காவில் வியாபாரம் செய்து பெரிய மனிதனாகியிருந்த ஒரு வியாபாரி பயணம் செய்தான். அவனைப் போலப் பணக்காரனாக வரும் ஆசையில் அவனிடம் நியூட்டன் வேலைகேட்டு சேர்ந்தார். இப்படியாக பத்தொன்பதாவது வயதில் நியூட்டனின் ஆப்பிரிக்க வாழ்க்கை ஆரம்பமானது.
பணக்காரனாகவும், பெரிய மனிதனாகவும் மாற வேண்டும் என்ற நியூட்டனின் கனவெல்லாம் வெகு விரைவிலேயே தவிடுபொடியாகியது. அடிக்கடி வாழ்க்கையில் அவர் தனிமையை அனுபவிக்க நேர்ந்தது. வேலைக்கிருந்த எஜமானின் ஆப்பிரிக்க சின்ன வீட்டுக்காரி அவரை மிகவும் கொடுமைப்படுத்தினாள். சில வேளைகளில் அவர் பசியால் வாடி மரணத்தைத் தழுவும் நிலைமையையும் அடைந்தார். சில வேளைகளில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்த அடிமைகளைபோல இருக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. வாழ்க்கையை வளமாக்கும் என்று அவர் எண்ணியிருந்த ஆப்பிரிக்கா அவரைத் தனிமையின் ஆழத்திற்கும், பிறரால் தள்ளிவைக்கப்பட்டு வாழும் அனுபவத்தையுமே தந்தது. இக்காலப்பகுதியில் ஜோன் நியூட்டன் ஒழுக்கக் கேட்டின் எல்லைகளைத் தொட்டிருந்தார். இந்த அனுபவங்களைப் பின்னால் திரும்பிப் பார்த்த நியூட்டன் கர்த்தரின் பராமரிப்பே தன்னை இந்த அநுபவங்களுக்குள் கொண்டுபோயிருப்பதாக உணர்ந்தார். ஒழுக்கக் கேட்டின் எல்லைகளைப் பரிசோதித்து வாழ்ந்துகொண்டிருந்த தனக்குத் தனிமையில் பிறரால் வெறுக்கப்பட்டு வாழும் நிலையை ஏற்பட்டுத்தி மற்றவர்களைப் பாவத்திற்குட்படுத்திவிடாமல் செய்வதற்காகவே கர்த்தர் இத்தகைய அனுபவங்களைப் பெறும்படிச் செய்தார் என்று நியூட்டன் எழுதியிருக்கிறார்.
“மற்றவர்களைப் பாவம் செய்யத் தூண்டும் வசதியில்லாதபடி வாழ்க்கையின் கோரத்தின் ஆழத்தில் நான் இருந்தேன். என்னை மற்றவர்கள் உதாரணமாகக்கொள்ள முடியாத அளவுக்கு பிறரால் வெறுக்கப்பட்டும் ஒதுக்கப்பட்டும் வாழ்ந்தேன். ஆப்பிரிக்க நீக்ரோக்கள்கூட என்னைவிடத் மேலானவர்களாகத் தங்களைக் கருதி என்னோடு பேசுவதைத் தவிர்த்தார்கள்.”
இதையெல்லாம் நியூட்டன் தன்னுடைய Authentic Narrative என்ற நூலில் விளக்கியுள்ளார். சிறுவயதில் ஜோன் நியூட்டன் தேவ பயத்தோடு வளர்ந்து வந்திருந்தார். அதற்குப் பிறகு அவர் உலகப்பிரகாரமான நூல்களை வாசிக்க ஆரம்பித்தார். அவை விஷத்தைப் போல அவருடைய வாழ்க்கையைப் பாதிக்க ஆரம்பித்தன. தேவபயம் அவர் இருதயத்தை விட்டு அகன்றது. கடற்படையில் சேர்ந்து ஹார்விக் கப்பலில் பணிபுரிய ஆரம்பித்தபோது துப்புரவாக அவர் கிறிஸ்தவத்தை நிராகரித்திருந்தார். தூஷணமும், கெட்டவார்த்தைகளும் அவர் வாயிலிருந்து அக்காலத்தில் சரளமாக வந்துகொண்டிருந்தன. அது அவருடைய அன்றாட வாழ்க்கை மொழியாக இருந்தது
இந்தளவுக்கு இருதயம் பாழ்பட்டு கர்த்தரை நிராகரித்து ஜோன் நியூட்டன் வாழ்ந்துகொண்டிருந்தபோதும் கர்த்தர் அவரைக் கைவிட்டு விடவில்லை. நியூட்டனின் தந்தையும் அவரைக் கைவிட்டுவிடவில்லை. கப்பல் வியாபாரத்தில் ஈடுபட்டு பல கப்பல் தலைவர்களை நண்பர்களாகப் பெற்றிருந்த நியூட்டனின் தந்தை ஆப்பிரிக்கக் கரையோரம் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் தன்னுடைய மகனைக் கண்டுபிடிக்க உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டிருந்தார். இறுதியில் 1747ம் ஆண்டு கிரேஹவுன்ட் (Greyhound) என்ற கப்பலின் தலைவன் ஜோன் நியூட்டனைக் கண்டு பிடித்து தன்னுடைய கப்பலில் ஏற்றிக்கொண்டார். அது இங்கிலாந்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. அந்தக் கப்பல் மிகவும் மோசமான நிலையிலிருந்தது. ஒரு வருடத்துக்குப் பிறகு அயர்லாந்து நாட்டுக் கடற்கரையை நெருங்கிக்கொண்டிருந்தபோது மலையுயரம் எழுந்த கடல் அலைகள் கப்பலைத் தாக்கி அதை மூழ்கிவிடும் நிலைக்குத் தள்ளின. 1748ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் நாள் தன்னுடைய பாய்மரங்கள் அனைத்தையும் இழந்த நிலையில் கப்பல் கடலில் மோசமான நிலையில் மிதந்து கொண்டிருந்தது. தன்னோடிருந்தவனைக் கடலுக்குப் பலிகொடுத்திருந்த நியூட்டன் கப்பலைக் காப்பாற்ற அதற்குள் வந்துகொண்டிருந்த தண்ணீரை பம்ப் செய்து வெளியேற்ற ஒன்பது மணிநேரங்கள் போராடிப் பெருமுயற்சி எடுத்தார். களைத்து சோர்ந்து போன நியூட்டன் ஒரு மணி நேர ஓய்வுக்குப் பின் கப்பல் சுக்கானைப் பிடித்து அதை சரியான வழியில் செலுத்த அடுத்த பதினொரு மணித்தியாளங்கள் போராடினார். கரை தெரிவது போல் தெரிந்ததும் அவரோடு சேர்ந்து கப்பலில் மீதமிருந்த பன்னிரெண்டு பேரும் குதூகலித்தனர். திடீரென்று காற்று திசைமாறி கப்பல் கரையை எட்டமுடியாமல் போனது. கப்பல் தலைவன் இதற்கு நியூட்டனே காரணம் என்று குற்றஞ் சாட்டி யோனாவைப் போலக் கடலில் தூக்கியெறியப் போவதாக மிரட்டினான். நியூட்டனின் வாழ்க்கையில் இது மறக்க முடியாத சம்பவம். மரணத்திற்கும், வாழ்க்கைக்கும் இடையிலான போராட்டம் தன் வாழ்க்கையில் நடந்து கொண்டிருப்பதை நியூட்டன் உணர்ந்தார். பல துன்பங்களை நியூட்டன் வாழ்க்கையில் ஏற்கனவே சந்தித்திருந்தார். துன்பங்கள் அவருக்கு புதிதல்ல. துன்பங்கள் மட்டுமே ஒருவரை மனந்திரும்பச் செய்துவிடுவதுமில்லை. இருந்தபோதும் இந்தக் கடல் அநுபவம் அவரைக் கர்த்தரை நினைத்துப் பார்க்க வைத்தது. தனக்கு கிருபை பாராட்டும்படி அவர் கர்த்தரிடம் ஜெபித்தார். கர்த்தரை விட்டு வெகுதூரம் விலகிப் போயிருந்த நியூட்டன் தன் அநுபவத்தை எழுதும்போது, “நான் ஜெபிக்க ஆரம்பித்தேன். ஆனால், விசுவாசத்தோடு என்னால் ஜெபிக்க முடியவில்லை. கர்த்தரிடம் உறவைப் புதுப்பித்துக் கொள்ளும்படி அவரை நாடி வரமுடியவில்லை. அவரை என்னால் தகப்பனே என்று கூப்பிட முடியவில்லை. காகங்களைப்போல என்னால் கரையத்தான் முடிந்தது. இருந்தபோதும் கர்த்தர் என்னைக் கைவிட்டு விடவில்லை. நீண்டகாலமாக என் வாழ்க்கையில் இருந்து நான் விலக்கி வைத்திருந்த அந்த இயேசுவைப் பற்றி நான் மறுபடியும் சிந்திக்க ஆரம்பித் தேன்” என்கிறார். கடலில் மறுபடியும் கப்பல் சரியான வழியில் போகும் வகையில் காற்று வீசியது. இதனால் எல்லோரும் களிப்படைந்தபோதும் கப்பலில் எல்லோருக்கும் ஒருவாரத்திற்குரிய உணவே இருப்பதை உணர்ந்தனர். பசி எல்லோரையும் பயங்கரமாக வாட்டியது. இத்தனைத் துன்பங்களையும் கடந்து நான்கு வாரங்களுக்குப் பிறகு 1748ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் நாள் கப்பல் அயர்லாந்துக் கரையை அடைந்தது. இதைப்பற்றி எழுதும் நியூட்டன், “நம்முடைய ஜெபங்களைக் கேட்கின்ற ஒரு கர்த்தர் இருக்கின்றார் என்பதை இப்போதுதான் உணர ஆரம்பித்தேன்” என்று எழுதியிருக்கிறார். இந்தக் கடல் அநுபவமே நியூட்டன் மனந்திரும்பி இரட்சிப்பின் அநுபவத்தை அடையக் காரணமாக இருந்தது.
மூன்று வருடங்களுக்குப் பிறகு 1749ல் நியூட்டன் இங்கிலாந்துக்கு மறுபடியும் திரும்பி வந்தது அவருடைய தந்தைக்கும் நண்பர்களுக்கும் ஆச்சரியத்தைத் தந்தது மட்டுமல்லாமல் பேரானந்தையும் தந்தது. இத்தனைக் காலத்துக்குள் நியூட்டன் நேசித்த பொலிக்கு என்ன நடந்திருக்கும் என்று நம்மால் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. அவள் திருமணம் செய்திருப்பாளா? நியூட்டனுக்காக காத்திருப்பாளா? இந்தக் கேள்விகளெல்லாம் நியூட்டனின் உள்ளத்தில் எழாமலில்லை. நியூட்டன் ஆப்பிரிக் காவில் இருந்த காலப்பகுதியில் அவருடைய தந்தை பொலியின் குடும்பத்தைப் போய்ப் பார்த்திருந்தார். அத்தோடு தன்னுடைய மகனுக்கு, அவன் விரும்பினால் பொலியைத் திருமணம் செய்து தரும்படியும் அந்தக் குடும்பத்தைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவர்களும் அதற்கு சம்மதம் தந்திருந்தனர். நியூட்டன் இங்கிலாந்துக்கு திரும்பி வந்ததும் அவருக்கும் பொலிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து 1750ல் திருமணமும் நடந்தது. நியூட்டனின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் இத்தோடு ஆரம்பித்தது. கடலில் ஏற்பட்ட அநுபவம் அவரைக் கர்த்தரிடம் கொண்டுவந்திருந்தது. அவரு டைய பேச்சும், நடத்தையும் முற்றாக மாறியிருந்தது. நியூட்டனின் தந்தை தன்னுடைய நண்பரும் லிவர்பூல் நகர கப்பல் சொந்தக்காரருமான ஜோசப் மெனெஸ்ட்டியிடம் நியூட்டனுக்கு ஒரு வேலை தேடித் தந்தார். 1749ம் ஆண்டுக்கும் 1754ம் ஆண்டுக்கும் இடையில் நியூட்டன் நான்கு தடவைகள் கப்பல் பிரயாணத்தில் ஈடுபட்டிருந்தார். நான்காவது தடவை அவர் கப்பல் தலைவனாக பணியாற்றினார். 1749ல் நியூட்டனுக்கு 24 வயதாகியிருந்தது. 1749ம் ஆண்டுக்குப் பிறகு அவருக்கேற்பட்ட சடுதியான நோய் அவருடைய கப்பல் பிரயாணங்களை 1754ல் ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது. இதனால் ஜோர்ஜ் மெனெஸ்டி லிவர்பூலிலேயே அவருக்கு ஒருவேலையை ஏற்படுத்தித் தந்தார். சுங்கவரி செலுத்துவதைத் தவிர்க்கப் பார்க்கும் கப்பல்களைப் பிடித்து வரி கட்டவைப்பதே அவரின் புதிய வேலையாக இருந்தது. ஆகஸ்டு மாதம் 1754ல் இந்த வேலையை அவர் ஆரம்பித்தபோது அவருக்கு முப்பது வயதாகியிருந்தது.
(அடுத்த இதழில் நிறைவு பெறும்)