ஜோர்ஜ் முல்லர்

ஜோர்ஜ் முல்லரைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் தமிழினத்துக் கிறிஸ்தவர்களில் குறைவு. அவருடைய ஊழியத்தைப் பற்றி 1905ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு நூல் மறுபடியும் 2003ல் மறுபதிப்பாக வெளிவந்தது. இதன் தலைப்பு Autobiography or A Million and a Half In Answer to Prayer. இதைத் தொகுத்து வெளியிட்டவர் G. Fred Bergin என்பவர். இந்நூலையும் ஜோர்ஜ் முல்லரின் ஊழியத்தையும் அவர் பின்பற்றிய வழிமுறைகளையும் ஆராய்ந்து எழுதியிருக்கிறார் போதகர் ஸ்டீபன் ரீஸ் (Stephen Rees). ஸ்டீபன் ரீஸ் இங்கிலாந்தில் சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபையொன்றின் போதகராக இருந்து வருகிறார். ஆங்கிலத்தில் அவர் எழுதியுள்ள ஆக்கத்தை இங்கே தமிழில் தருகிறோம்.

ஜோர்ஜ் முல்லர் 1805ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் நாளில் பிறந்தார். அவரைப் பற்றிய இந்த நூல் 1905ல் வெளிவந்தது. இந்த நூலில் காணப்படும் அத்தனை விஷயங்களையும் ஜோர்ஜ் முல்லர் தன் கைப்பட எழுதியிருந்தார். அவர் இறந்த பிறகு அவரைப் பற்றிய இன்னொரு நூலான Narrative of the Lord’s Dealings with George Muller என்ற நூலில் வெளிவந்தவற்றைப் பயன்படுத்தியும் இந்நூலாசிரியர் முல்லரைப் பற்றிய இந்தத் தொகுப்பினை நமக்கு அளித்திருக்கிறார். இது ஜோர்ஜ் முல்லரைப் பற்றிய தொகுப்பாக இருந்தாலும் ஜோர்ஜ் முல்லர் தன் கைப்பட எழுதியவற்றையே இத்தொகுப்பில் நாம் வாசிக்கிறோம். இது மறுபடியும் வெளியிடப்பட்டிருப்பது நமக்கு மகிழ்ச்சியே. ஏனெனில், நூறு வருடங்களுக்குப் பிறகு வாசகர்கள் ஜோர்ஜ் முல்லரின் வாழ்க்கையையும், ஊழியத்தையும் பற்றி வாசித்து அவரைப் பற்றிய தங்களுடைய சொந்த முடிவுக்கு வருவதற்கு இது வாய்ப்பளித்துள்ளது.

ஜோர்ஜ் முல்லர் 19ம் நூற்றாண்டின் முக்கியமான கிறிஸ்தவ தலைவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. சுவிசேஷ கிறிஸ்தவ வரலாற்றில் ஒரு சிறப்பான இடத்தை அவர் வகிக்கிறார். அவர் Open Brethren இயக்கத்தில் ஆரம்பகாலத் தலைவர்களில் ஒருவராக இருந்ததோடு அந்த இயக்கத்தின் மூலம் சுவிசேஷ கிறிஸ்தவத்திற்கு ஒரு புதிய பாதை வகுத்துத் தந்து இன்றுவரையும் தொடரும்படி அதில் தன் முத்திரையைப் பதித்திருக்கிறார். 1832ல் அவரும் அவருடைய நண்பரான Henry Craikகும் இங்கிலாந்தில் பிரிஸ்டல் நகரில் ஒரு திருச்சபையை ஸ்தாப்பிக்குப்படி அந்நகரில் வெறுமனே இருந்த பெத்தெஸ்டா திருச்சபைக் கட்டடத்தை வாங்கினார்கள். ஏழு அங்கத்தவர்களோடு அந்த ஊழியம் ஆரம்பமானது. 1866ல் அது ஆயிரத்துக்கும் மேலானவர்களைக் கொண்டிருந்தது. 1898ல் முல்லர் மரித்தபோது, அந்த சபை பத்து சபைகளாக பிரிந்து காணப்பட்டது. அவற்றில் ஆறு சபைகள் முழுத் தனித்துவத்துடன் இயங்கி வந்தன. ஏனைய நான்கும் ஆயிரத்தி இருநூறு அங்கத்தவர்களைக் கொண்டிருந்தன. ஜோர்ஜ் முல்லரின் ஊழியங்களின் ஒருபகுதி மட்டுமே பெத்தெஸ்டா திருச்சபை ஊழியம். அவர் வேத அடிப்படையில் கல்வியைத் தருகின்ற ஒரு நிறுவனத்தையும் நிறுவினார் (The Scriptural Knowledge Institute for Home and Abroad). இதன் மூலம் அவர் பிரிட்டனிலும், ஐரோப்பாவிலும் தினக்கல்லூரிகளை நிறுவினார். முல்லருடைய ஆயுட் காலத்தில் 123,000 மாணவர்கள் இக்கல்லூரிகளில் கல்வி பயின்றுள்ளனர். அத்தோடு முல்லர் வேதாகமத்தையும், புதிய ஏற்பாட்டையும், ஏனைய கிறிஸ்தவ இலக்கியங்களையும் இலட்சக்கணக்கில் விநியோகித்துள்ளார். ஒரு டஜனுக்கு மேலான மிஷனரிகளுக்கும் உதவியுள்ள முல்லர் சீன உள்நாட்டு மிஷன் (China inland Mission) அனுப்பிய முதல் மிஷனரிகளுக்கும் உதவியுள்ளார். அவர் செய்த அத்தனை ஊழியங்களிலும் அவரை எல்லோரும் நினைவுகூரும் ஊழியமாக இருந்தது அவர் பிரிஸ்டலில் ஆஸ்லே டவுனில் ஸ்தாபித்திருந்த அநாதைக் குழந்தைகளுக்கான இல்லமே. ஆரம்பத்தில் சில குழந்தைகளை மட்டுமே கொண்டு ஆரம்பித்த இந்தப் பணி அவருடைய ஆயுட்கால முடிவுக்கு முன்பாக ஐந்து பெரிய இல்லங்களைக் கொண்டதாக ஒரே நேரத்தில் இரண்டாயிரம் குழந்தைகள் வாழக்கூடியதாக வளர்ந்திருந்தது. தன் வாழ்நாளில் முல்லர் 10,024 அநாதைக் குழந்தைகளுக்கு வாழ்வளித்திருந்தார்.

ஜோர்ஜ் முல்லரின் ஊழியப்பணிகள் எல்லாம் ஆச்சரியப்பட வைப்பதாக இருந்தன. மக்கள் அவருடைய ஊழியப்பணிகளைவிட அந்தப் பணிகளைச் செய்வதற்காக அவருக்கு பணம் சேர்ந்த விதத்தைப் பார்த்தே ஆச்சரியப்பட்டனர். அதை முல்லரைப் பற்றிய இந்த நூலில் மிகத்தெளிவாகப் பார்க்க முடிகிறது. முல்லருடைய உள் நோக்கங்களையும் இதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. ஏனைய எல்லா விஷயங்களையும் விட இந்த நூல் ஜோர்ஜ் முல்லர் பணத்துக்காக ஜெபித்த விதத்தைப் பற்றியே அக்கறையோடு பேசுகிறது. அத்தோடு, அந்தப் பணம் எப்படி வந்து சேர்ந்தது என்பதைப் பற்றியும் விளக்குகிறது. இந்நூலின் முதல் அறுபது பக்கங்களில் ஜோர்ஜ் முல்லரின் முதல் இருபத்தி ஏழு வருட வாழ்க்கையைப் பற்றி ஓரளவுக்குத் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. அதற்குப் பிறகு நூல் முழுவதிலும் பணவாடையே வீசுகின்றது.

இந்நூலில் ஜோர்ஜ் முல்லரின் குடும்பத்தைப் பற்றியோ, அவருடைய சுவிசேஷப் பணிகள் பற்றியோ, சபை வாழ்க்கை பற்றியோ எந்தவிதமான குறிப்புகளும் இல்லை. அவரோடு இணைந்து உழைத்தவர்கள் யார் என்பது பற்றியும் நாம் அறிந்துகொள்ள முடியவில்லை. ஆரம்பகால சகோதரத்துவ இயக்கத்தின் (Brethren Movement) முக்கிய தலைவர்களில் ஒருவராக ஜோர்ஜ் முல்லர் இருந்திருக்கிறார். அதுபற்றியும் இந்நூலில் எந்த விளக்கமும் இல்லை. 1848ம் ஆண்டில் சகோதரத்துவ இயக்கத்தைப் பெரிதும் பாதித்த ‘பெத்தெஸ்டா முரண்பாட்டின்’ போது (Bethesda Controversy) ஜோர்ஜ் முல்லர் அதில் பெரும் பங்கு வகித்திருக்கிறார். அது பற்றியும் இந்நூலில் எந்தக் குறிப்பும் இல்லை. முழு நூலும் முல்லர் ஸ்தாபித்த அநாதைக் குழந்தைகளுக்கான இல்லங்களைப் பற்றியே பேசுகின்றது. இருந்தாலும் அந்த இல்லங்கள் பற்றியும் அங்கு நடந்த ஊழியங்கள் பற்றியும் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. முல்லருக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் இருந்த உறவுகள் பற்றியும் இந்த நூலில் எந்த விளக்கமும் இல்லை. அநாதைக் குழந்தைகளை வளர்த்துப் போஷிக்கத் தேவையான பணத்திற்காகத் தான் எப்படி ஜெபித்தேன் என்றும், அந்தப் பணம் எப்படி வந்து சேர்ந்தது என்பது பற்றி மட்டுமே முல்லர் நூல் முழுவதும் விளக்குகிறார். அவர் நடத்திய அநாதைக் குழந்தைகளுக்கான இல்லங்களின் ஆத்மீக நிலைமை பற்றியும் முல்லர் இந்நூலில் ஓரு வார்த்தையும் சொல்ல வில்லை. அந்தக் குழந்தைகளின் மனந்திரும்புதலுக்காக முல்லர் ஜெபித்தாரா, அந்த ஜெபங்களுக்கு பலன் கிட்டியிருந்ததா என்பதுபற்றியெல்லாம் முல்லர் இங்கே எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த நூலில் தன்னுடைய வாழ்க்கையைப் பற்றியோ, ஊழியப் பணிகள் பற்றிய விளக்கங்களையோ அளிக்காமல் ஒவ்வொரு நாளும் தனக்குத் தேவையான பணம் எப்படிக் கிடைத்தது என்பது பற்றியும், அந்தப் பணத்தைப் பற்றிய கணக்கு வழக்குகளையும் மட்டுமே முல்லர் தந்திருக்கிறார்.

இந்நூலை வாசிக்கின்றபோது, கிறிஸ்தவ ஊழியங்கள் அனைத்திற்கும் தேவையான பணத்தை, அதைச் சேகரிக்க எந்தவொரு முயற்சியும் செய்யாமல், யாரிடமும் கேட்காமல், ஜெபத்தால் மட்டுமே அடைந்துவிடலாம் என்பதற்கு முல்லர் உதாரணமாக இருந்தார் என்று நாம் எண்ண வேண்டும் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. முல்லர் தன்னுடைய ஊழியப்பணிகளுக்காக எவரையும் அனுகி அவர்களிடம் எந்த உதவியும் கேட்கவில்லை. எந்தக் கூட்டத்திலும் தன்னுடைய ஊழியங்களுக்காக முல்லர் பணம் கேட்கவில்லை; பணம் வசூலிக்கவில்லை. ஊழியப் பணிகளுக்காக பணம் சேகரிக்க அவர் எந்த முயற்சிகளிலும் ஈடுபடவில்லை. நண்பர்கள் அவரை அனுகி ஊழியத் தேவைகள் பற்றிக் கேட்ட போதெல்லாம் அவர் அவர்களிடம் அப்படியான தேவை இருக்கிறது என்ற எண்ணத்தை ஒருபோதும் ஏற்படுத்தவில்லை. அவர் ஒவ்வொரு நாளும் ஜெபம் மட்டுமே செய்தார். அநாதைக் குழந்தைகளுக்கான தேவைகளை நிறைவேற்றும்படியும், ஊழியத்தேவைகளுக்கான உதவிகளைத் தரும்படியும் அவர் ஒவ்வொரு நாளும் ஜெபம் செய்வதில் மட்டும் தவறவில்லை. பல நாடுகளிலும் இருந்து கிறிஸ்தவர்கள் அவருடைய ஊழியத்தேவைகளுக்கான பணத்தை ஒவ்வொரு நாளும் ஆர்வத்தோடு அனுப்பத் தொடங்கினர். அவர் உதவி வந்த அநாதைக் குழந்தைகள் ஒரு நாளும் உணவில்லாமல் கஷ்டப்பட்டதில்லை. பல தடவைகளில் அவருக்குத் தேவையான பணம் கடைசி நிமிடத்தில் எப்படியாவது வந்து சேர்ந்தது. ஊழியத்திற்காக ஒருவரிடத்தில் பணம் கேட்பதில்லை என்றும் கர்த்தரை மட்டுமே நாடி வரவேண்டும் என்பதில் முல்லர் தீவிரமாக இருந்தார். தனக்காக எந்த ஊதியத்தையும் (Salary) பெற்றுக்கொள்வதில்லை என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். பெத்தெஸ்டா திருச்சபையிலிருந்தும் அவருடைய ஏனைய ஸ்தாபனங்களிலும் இருந்தும் அவர் எந்த ஊதியத்தையும் பெற்றுக் கொள்ளவில்லை. அவர் தொடர்ந்து கர்த்தரிடம் ஜெபத்தில் வந்து கிறிஸ்தவர்களின் உள்ளத்தில் பேசி தன்னுடைய தேவைகளை நிறைவேற்றுமாறு மட்டுமே ஜெபித்து வந்தார். அவர் விசுவாச வாழ்க்கை வாழ்ந்தபடியால் கர்த்தர் அவருடைய விசுவாசத்தை மகிமைப்படுத்தினார். இந்தவிதத்திலேயே ஜோர்ஜ் முல்லர் தன்னுடைய வாழ்க்கையைப் பற்றியும், ஊழியத்தைப் பற்றியும் நமக்கு விளக்கங்கொடுக்கிறார். அவரைச் சார்ந்தவர்களும் அதற்காகவே அவரை நினைவு கூருகின்றனர்.

ஜோர்ஜ் முல்லருடைய காலத்துக்கு முன்பு சுவிசேஷ கிறிஸ்தவத்தைச் (Evangelical Christians) சார்ந்தவர்களும், திருச்சபைகளும் ஊழியத்திற்கான பணத்தைப் பெறுவதில் முல்லர் பின்பற்றிய கோட்பாடுகளைப் பின்பற்றியதில்லை என்பதை இங்கே நினைவுபடுத்தாமல் இருக்க முடியாது. முல்லர் ஊழியத்திற்காகப் பணத்தைச் வசூலிக்கப் பின்பற்றிய முறை அவர் காலத்தில் உருவான ஓர் புதிய முறை. அதற்கு முன்பாக போதகர்களும், கிறிஸ்தவ ஊழியர்களும் தங்களுடைய வாழ்க்கைக்கான ஊதியத்தைப் பெற்றுக்கொள்வதை வேதபூர்வமானதாகவும், நியாயமானதாகவுமாகவே கருதிச் செயல்பட்டிருக்கிறார்கள். தங்களுடைய சபைகளும், ஊழியங்களும் தாங்க முடியாத பெரிய ஊழியத் திட்டங்கள் இருக்குமானால் அவர்கள் தங்களோடு சார்ந்த திருச்சபைகளுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அத்தேவை களை அறிவித்து அதற்காக ஜெபத்தோடு உதவி செய்யுமாறு கேட்பதையே கடமையாக எண்ணிச் செயல்பட்டிருக்கிறார்கள். ஜோர்ஜ் முல்லர் பிறப்பதற்கு முன்பாக இங்கிலாந்தில் அருமையாகப் பணிபுரிந்த பிரபல்யமான சுவிசேஷகரான ஜோர்ஜ் விட்பீல்ட் (George Whitefield) அநாதைக் குழந்தை களுக்கான இல்லங்களைக் கட்டுவதில் ஈடுபட்டிருந்திருக்கிறார். அவர் பிரசங்கம் செய்திருந்த இடங்களிலெல்லாம் அந்த அநாதை இல்லங்களுக்கான தேவைகளை ஆத்துமாக்களுக்கு அறிவித்து அதற்கு உதவும்படியாக அவர் கேட்கத் தவறவில்லை. முல்லருடைய காலத்தில் திருச்சபை ஊழியப் பணியில் ஈடுபட்டிருந்த பிரபல்யமான ‘பிரசங்கிகளின் இளவசரன்’ என்று அழைக்கப்பட்ட சார்ள்ஸ் ஸ்பர்ஜனும் (Charles Spurgeon) இலண்டனில் அநாதைக் குழந்தைகளுக்கான இல்லங்களைக் கட்டியிருந்தார். அவருங்கூட பெரும் பணக்காரர்களாக இருந்த கிறிஸ்தவர்களிடம் இத்தேவைகளை அறிவித்தும், தன்னுடைய கூட்டங்களில் அவ்வில்லங்களுக்காக காணிக்கைகளை எடுத்தும், பலரிடத்தில் இத்தேவைகளை அறிவித்தும் இருந்திருக்கிறார். ஸ்பர்ஜன் ஜோர்ஜ் முல்லரை பெரிதும் மதித்தபோதும் ஊழியத்திற்காக முல்லர் பணத்தைப் வசூலிக்கப் பின்பற்றிய கோட்பாட்டை ஒருபோதும் பின்பற்றியதில்லை.

முல்லரையும், ஊழியத்திற்காக பணம் சேகரிக்க அவர் எடுத்த முயற்சிகளையும் பற்றி நாம் என்ன கூறமுடியும்? முதலில், கர்த்தருக்காகப் பெருங் காரியங்களைச் செய்ய அவர் எடுத்த முயற்சிகளுக்காக அவரை நாம் பாராட்ட வேண்டும். வேதம் சொல்லுகிறது: “திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்கு தன்னைக் காத்துக் கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.” அன்றாட அப்பத்திற்காகக் கர்த்தரிடம் அன்றாடம் ஜெபத்தில் வந்த முல்லரின் பக்திவிருத்தி நாமும் அவ்வாறு வாழவேண்டுமென்று நம்மைத் தூண்டுகிறது. ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன்னுடைய அன்றாட அப்பத்திற்காகக் கர்த்தரில் தங்கி வாழ வேண்டியது அவசியம். ஆனால், தன்னுடைய தேவைகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளக்கூடாது என்பதில் விடாப்பிடியாக இருந்த முல்லரின் செயல் சரியானதா என்பதை ஆராயத்தான் வேண்டும். முல்லரின் கருத்து சரியில்லை என்பதே என்னுடைய முடிவு. முல்லர் அத்தகைய நம்பிக்கையை எங்கிருந்து பெற்றார் என்பது எனக்குத் தெரியவில்லை; ஆனால், அவருடைய நம்பிக்கை வேதத்தில் பார்க்க முடியாததொன்று. எருசலேம் நகரில் இருந்த கிறிஸ்தவ திருச்சபை பஞ்சத்தால் வாடியபோது பவுல் அப்போஸ்தலன் கர்த்தரிடம் ஜெபத்தில் வந்து, கர்த்தரே திருச்சபைகளிடம் நேரடியாகப் பேசி எருசலேம் சபைக்கு அவர்கள் உதவி செய்யும்படிச் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்காமல், ஏனைய திருச்சபை களுக்கு அந்தத் தேவையைத் தானே தெரியப்படுத்தி அவர்களுடைய உதவியை நாடினார். பஞ்சத்தில் வாடியவர்களுக்கு உதவுவதற்காக ஒரு நிதியை ஏற்படுத்தி திருச்சபைகள் அதற்குக் காணிக்கை அனுப்ப ஏற்பாடு செய்தார். 1 கொரிந்தியர் 16:1-4ம் 2 கொரிந்தியர் 8, 9 ஆகிய அதிகாரங்களும் பவுல் இதை எவ்வாறு மிகவும் அக்கறையோடு திட்டமிட்டு ஏற்பாடு செய்தார் என்பதை விளக்குகின்றன. தன்னுடைய எதிர்பார்ப்புகளின்படி நடந்துகொள்ளாத கிறிஸ்தவர்கள் இந்தக் காரியத்தில் ஆர்வத்தோடு பங்கேற்கவேண்டுமென்று அவர்களை எந்தளவுக்கு வற்புறுத்தியிருக்கிறார் பவுல் என்பதை இந்த வேதப்பகுதிகள் விளக்குகின்றன.

வேத அடிப்படையில் அமையாததும், அறிவுபூர்வமில்லாததுமான ‘அமானுஷ்ய’ (Mystical) ஆத்மீக அணுகுமுறையே ஊழியங்களுக்காகப் பணம் சேர்க்கும் மில்லருடைய வழிமுறைக்கு காரணமாக அமைந்தது. பணம் சம்பந்தமான விஷயங்களில் ஆராய்ந்து திட்டமிட்டு செயல்படுவது ஆத்மீகத்திற்கு எதிரான உலகப்பிரகாரமான செயல் என்று முல்லர் நம்பினார். எந்தத் திட்டங்களையும் முறையாக ஆராய்ந்து அவற்றிற்குத் தேவையான நிதியைக் கணக்கிட்டு அத்தேவைகளுக்கான பணத்தை எப்படித் திட்டமிட்டுக் கொடுப்பது என்றெல்லாம் கிறிஸ்தவர்கள் சிந்திப்பதை அவர் துளியும் விரும்பவில்லை. எதையும் ஆராய்ந்து பார்க்காமல், எந்தத் திட்டத்தைப் பற்றிய உண்மைகளையும் தெரிந்துகொள்ளாமல் பரிசுத்த ஆவியால் மட்டும் உடனடியாக உந்தப்பட்டு கிறிஸ்தவர்கள் காணிக்கைகளைக் கொடுக்க வேண்டும் என்று முல்லர் நம்பினார். இதேவிதமான எண்ணத்தோடேயே முல்லர் சகல ஆத்மீகக் காரியங்களையும் அனுகினார். அந்தந்த நேரத்தில் கர்த்தர் உடனடியாக வெளிப்படுத்தும் வழிகளின்படி கிறிஸ்தவர்கள் வாழ வேண்டும் என்று முல்லர் நம்பினார். பிரிஸ்டலுக்குப் போவதற்கு முன்பாக ஒரு மிஷனரி ஸ்தாபனத்தில் வேலை பார்த்த அவர் அதிலிருந்து விலகினார். அதற்கு அவர் கூறிய காரணம், “மிஷனரி ஊழியங்களில் மனிதர்களின் ஆலோசனையின்படி நடந்து உழைப்பதை என் மனச்சாட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. கிறிஸ்துவின் ஊழியனான நான் எங்கு ஊழியம் செய்ய வேண்டும், எந்த நேரத்தில் ஊழியம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் மனிதர்களின் வழிநடத்தலின்படியல்லாமல் பரிசுத்த ஆவியினால் மட்டுமே வழிநடத்தப்பட்டு ஈடுபடுவேன்” என்பதுதான். சக விசுவாசிகளின் மூலம் தகுந்த ஆலோசனைகளைத் தந்தும் நம்மைப் பரிசுத்த ஆவியானவர் வழி நடத்துகிறார் என்ற உண்மை முல்லருக்குப் புலப்படாமல் போனது ஆச்சரியமே. வேதத்தைப் படித்துப் புரிந்துகொள்ளுவதற்கு வேத வியாக்கியான நூல்களை வாசிப்பதை முல்லர் அறவே நிராகரித்தார். வேத வியாக்கியான நூலகள் தரும் அறிவு பொதுவாக நம்மைத் தலைக்கனம் பிடித்தவர்களாக்கும் என்பது அவருடைய எண்ணமாக இருந்தது. எந்தவொரு வேதப் பகுதியையும் புரிந்துகொள்ளுவதற்கு ஜெபத்தாலும், தியானத்தாலும் பரிசுத்த ஆவியில் மட்டுமே தங்கியிருப்பதை முல்லர் விரும்பினார். தனக்கு முன்பு வாழ்ந்திருந்த பக்திவிருத்தியும், வேதஞானமும் மிகுந்த ஞானவான்கள் எழுதிய நூல்களின் மூலம் பரிசுத்த ஆவியானவர் நமக்கு வேத அறிவைத் தருகிறார் என்ற உண்மை முல்லருக்கு ஒருபோதும் தோன்றவில்லை. தன்னுடைய பிரசங்க ஊழியத்தைக் குறித்து முல்லர் பின்வருமாறு விளக்குகிறார்: “நான் பிரசங்கத்தைத் தயாரிக்கும்போது என்னை வழி நடத்தும்படியாக பரிசுத்த ஆவியின் அனுமதிக்காகக் காத்திருப்பேன். . . சில வேளைகளில் நான் பிரசங்க மேடைக்கு எந்தத் தயாரிப்போ, வசனமோ கையிலில்லாமலும் போயிருக்கிறேன். பேசுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக ஆவியானவர் எனக்கு வசனத்தைத் தந்தார்.” முல்லரின் இந்தப் பிரசங்கத் தயாரிப்பு முறையை அப்போஸ்தலரான பவுல் கையாண்டதில்லை. பவுல் தன்னுடைய பிரசங்கத்தைக் கேட்க வந்திருக்கும் ஆத்துமாக்களின் தேவைகளை நிதானித்து அறிந்துவைத்திருந்ததுமட்டுமல்லாமல், “பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்து வைக்காமல், வெளியரங்கமாக வீடுகள் தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து உபதேசம் பண்ணினேன்” என்கிறார் (அப்போஸ். 20:20). புத்தியோடு ஆத்துமாக்களின் தேவைகளை ஆராய்ந்து பார்த்தே அவர்களுக்குத் தேவையான பிரசங்க வசனத்தைப பவுல் தெரிவு செய்திருக்கிறார்.

ஜோர்ஜ் முல்லரின் வழிமுறைகள் பண விஷயத்தில் மட்டும் நிச்சயம் பயனைத் தந்திருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். உண்மைதான், ஆனால், முல்லர் மனந்திறந்து நேர்மையோடும், உண்மையோடும் நான் எந்தவிதத்திலும் எவரிடத்திலும் ஒருபோதும் பணத்தேவை பற்றித் தெரிவிக்கவில்லை என்று சொல்லுவாரால் அதை நம்பலாம். உண்மையென்னவென்றால் தன்னுடைய ஊழியங்களுக்குத் தேவையான பணத்தைச் சேர்க்க முல்லர் மிகவும் திறமையான ஒரு வழிமுறையைக் கையாண்டிருக்கிறார். இதை முல்லர் உணர்ந்திருந்தாரோ, இல்லையோ நமக்குத் தெரியாது. ஆனால், அவர் நிச்சயம் காணிக்கை சேகரிக்க ஒரு வழியைக் கையாண்டிருக்கிறார். அவர் எல்லோரும் அறியக்கூடிய விதத்தில் பணத்திற்காக தான் எவரையும் நாடிப்போகப் போவதில்லை என்ற கோட்பாட்டை வெளிப்படையாகச் சொல்லியிருந்தார். கிறிஸ்தவர்களிடம் இருந்து காணிக்கை பெற்றுக்கொள்ள இது நடைமுறையில் மிகவும் பயனளிக்கக் கூடிய ஒரு திட்டம் என்பதை முல்லர் ஒருபோதும் அறியாமல் இருந்திருக்கலாம். அநேக கிறிஸ்தவர்கள் முல்லருடைய விசுவாசத்தாலும், அவர் செய்துவருகின்ற ஊழியத்தாலும், வியப்பூட்டுகின்ற செயல்களாலும் உந்தப்பட்டு காணிக்கைகளை அனுப்ப ஆரம்பித்தனர். ஊழியத்திற்காகப் பரிசுத்த ஆவியில் மட்டுமே தங்கியிருக்க வேண்டும் என்ற முல்லருடைய கொள்கை பலருடைய உள்ளத்தையும் கவர்ந்து அவருடைய ஊழியங்களில் ஆர்வம்காட்டவைத்தது. இதில் நாமும் பங்கேற்க வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் விரும்பினார்கள். தன்னுடைய சபையில் அன்றாடம் உண்மையோடு உழைக்கும் போதகரின் சம்பளத்திற்கு காணிக்கை கொடுப்பதைவிட பிரிஸ்டலில் இருந்த பரிசுத்தரான முல்லருக்கு காணிக்கை அனுப்புவது பலருக்கும் ஒரு விசேஷ உற்சாகத்தை ஏற்படுத்தியது. முல்லருக்குக் காணிக்கை அனுப்பியிருக்கிறோம் என்ற எண்ணம் பணமனுப்பிய கிறிஸ்தவர்களுக்கெல்லாம் உள்ளத்தில் ஒரு திருப்தியையும், ஆனந்தத்தையும் தந்தது. முல்லரின் கொள்கையால் உந்தப்பட்டு காணிக்கையனுப்பிய ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும், ‘இந்த நேரத்தில் முல்லர் தன்னுடைய காணிக்கைக்காக ஜெபம் செய்து கொண்டிருப்பார்’ என்ற எண்ணம் உள்ளத்தில் ஒரு கிளுகிளுப்பை ஏற்படுத்தியது.

உண்மையென்னவென்றால் தன்னுடைய அநாதைக் குழந்தைகளுக்கான இல்லங்கள் பற்றி முல்லர் பொதுக்கூட்டங்களை நடத்தி மக்களுக்கு விபரித்திருந்தார். அதுபற்றி இந்த நூலில் வாசிக்கலாம். கூட்டங்களில் அநாதை இல்லங்களின் செயற்பாடுகள் பற்றி அவர் எந்த விபரங்களையும் கொடுக்கவில்லை; அந்தக் கூட்டங்களில் எந்தக் காணிக்கையையும் எடுக்கவில்லை. கர்த்தர் எவ்வாறு தன்னுடைய இல்ல ஊழியங்களில் தலையிட்டு அவற்றை ஆசீர்வதித்தார் என்று மட்டுமே அவர் மக்களுக்கு விளக்கினார். அநாதை இல்லத்தை ஆரம்பித்த முதல் வருடத்திற்குப் பிறகு தன்னுடைய அநாதை இல்லத்தைப் பற்றிய ஒரு நூலை வெளியிட்டு அதில் தன்னுடைய கோட்பாட்டை விளக்கி (அதாவது, ஒருவரிடமும் கையேந்திக் காணிக்கை கேட்பதில்லை, பரிசுத்த ஆவியில் மட்டுமே தங்கியிருப்பேன் என்ற கோட்பாடு), கர்த்தர் தன்னுடைய ஜெபங்களைக் கேட்டுத் தன்னுடைய தேவைகளை நிறைவேற்ற அற்புதமாக எவ்வாறு பணத்தை அனுப்பினார் என்பதை விளக்கும் உள்ளத்தை உருக்கிவிடக்கூடிய அருமையான பல உதாரணங்களைக் கொடுத்திருந்தார். தன்னுடைய ஊழியங்கள் பற்றி முல்லர் ஒரு வருடாந்தர அறிக்கையை வழக்கமாக வெளியிட்டு வந்தார். அதில் உருக்கமான பல நிகழ்ச்சிகளை அவர் குறிப்பிட்டிருந்தார். கிறிஸ்தவர்கள் அனுப்பி யிருந்த காணிக்கை விபரங்களை அதில் தந்து, அந்தக் காணிக்கைகள் அனைத்தும் தன்னுடைய ஜெபத்தின் மூலமாக எவ்வாறு தன்னை வந்தடைந்திருந்தன என்பதை உருக்கமாக விளக்கியிருந்தார். இவற்றை வாசித்த கிறிஸ்தவர்கள் இவற்றால் உந்தப்பட்டு இதில் நமக்கும் பங்கிருக்க வேண்டும் என்ற ஆர்வக்கோளாரால் முல்லருக்குக் காணிக்கைகளை அள்ளி அனுப்பி வைத்ததில் ஆச்சரியமில்லை. ஜோர்ஜ் முல்லரின் இந்த வாழ்க்கை சரிதத்தை வாசித்து முடித்தபோது அவர் ஒன்றும் தெரியாதவரா? அல்லது மிகவும் சாமர்த்தியசாலியா? என்ற குழப்பமே எனக்கு ஏற்பட்டது. எதுவாக இருந்தபோதும் இதையெல்லாம் வாசித்து நான் உள்ளத்தில் துக்கத்தையே அடைந்தேன்.

இதையெல்லாம்விட துக்கமூட்டுகிற விஷயம் முல்லர் தன்னுடைய திட்டங்களின் தவறுகளை எப்போதும் நியாயப்படுத்துவதுதான். முல்லரின் வாழ்க்கை சரிதத்தில் இருந்து ஓர் உதாரணத்தைப் பாப்போம். ஒரு முறை அநாதை இல்லத்தை நடத்துவதற்கு பணமில்லாமல் போனது. முல்லர், ‘கர்த்தர் இன்னும் உதவி அனுப்பவில்லை’ என்று சொன்னார். இதைத் தன்னுடைய அநாதை இல்ல ஊழியர்களிடத்தில் நிச்சயம் சொல்ல வேண்டும் என்று முல்லர் தீர்மானித்தார். அவர்களுக்கு நிதி நிலைமையை விளக்கி, கடன் தொல்லையில் இருந்து தப்புவது எப்படி என்று விளக்க மளிப்பதும் அவசியம் என்று தீர்மானித்தார். ஆச்சரியத்துக்கும் மேல் ஆச்சரியமாக ‘தன்னுடைய ஜெபத்திற்குப் பிறகு ஒரு ஊழியர் தன்னிடத் தில் இருந்த அனைத்தையும் அநாதை இல்லத் தேவைக்காகக் கொடுத்தார். அன்று பதினாறு ஊழியர்கள், தங்களிடம் இருப்பதையெல்லாம் கொடுக்காவிட்டால் ஜெபிப்பதில் பயனில்லை என்று சொன்னார்கள்’ என்று விளக்குகிறார் முல்லர். தங்களுடைய நூல்களைக்கூட விற்றுத் தியாகத்தோடு கொடுத்ததால்தான் அன்று அநாதை இல்லம் இக்கட்டில் இருந்து தப்பியது. சில மாதங்களுப்பிறகு மறுபடியும் அநாதை இல்லம் இக்கட்டைச் சந்திக்க நேர்ந்தது. முல்லர் இதுபற்றி அளிக்கும் விளக்கத்தைக் கவனியுங்கள், ‘அநாதை இல்ல ஊழியர்களும் சகல சகோதர சகோதரிகளும் நாம் சந்தித் திருக்கின்ற விசுவாச சோதனையிலும், விசுவாசத்தின் சந்தோஷத்திலும் பங்குபெறும்படியாக நமது நிதிப் பற்றாக்குறையை அவர்களுக்குத் தெரிவிப்பதே கர்த்தரின் தெளிவான சித்தமாக இருந்தது. அதன்படி நாமெல்லோரும் கூடியபோது, அவர்களுக்கு முன் கர்த்தர் மகிமையடையும்படியாக இந்த இக்கட்டான நிலைமை பற்றிய விஷயம் நமக்குள்ளாகவே இருக்க வேண்டும் என்று நான் அவர்களுக்கு சொன்னேன். அதன் பிறகு நாங்களெல்லோரும் சேர்ந்து ஜெபித்தோம் . . .’ அதற்குப் பிறகு நடந்ததை இந்நூலில் வாசிக்கும்போது அதில் நாம் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமிருக்கவில்லை. மறுபடியும் அநாதை இல்ல ஊழியர்களனைவரும் தங்களிடம் இருந்த அனைத்தையும் கொடுத்ததால்தான் அந்த நிதிப் பற்றாக்குறை தீர்க்கப்பட்டது. நூலில் ஒரு சில பக்கங்களுக்குப் பிறகு முல்லர் இந்த நிகழ்ச்சியை எண்ணிப்பார்த்து பின்வருமாறு எழுதுகிறார், ‘இந்த முறையிலான வாழ்க்கை நம்மைக் கர்த்தரின் சமீபத்தில் அழைத்துச் செல்லுகிறது. அவர் ஒவ்வொரு நாளும் நம்முடைய தேவைகளைத் கணக்கிட்டுப் பார்த்து தேவையான உதவிகளை அனுப்பி வைக்கிறார்.’ முல்லரின் இந்த வார்த்தைகளில் உண்மை இல்லை. எவரிடமும் பணத்தேவை பற்றிச் சொல்லவே மாட்டேன், வாயால் உதவிகளைக் கேட்கவே மாட்டேன் என்பது என்னுடைய கொள்கை என்று ஊர்தெரிய சொல்லிவிட்டு அன்றைக்கு அநாதை இல்ல ஊழியர்கள் அனைவருக்கும் தம்முடைய தேவை யையும் வெளிப்படையாக அறிவித்துவிட்டு ஏதோ கர்த்தர் அந்தத் தேவையைத் தானே அறிந்து இடையிட்டுத் தீர்த்ததாக சொல்லுவது எப்படிச் சரியாகும். இது முறையே இல்லை.

இறையியலறிஞரான டெப்னி (R. L. Dabney) தனக்கே உரிய சாமர்த்தியத் தோடு இதைப்பற்றிப் பின்வருமாறு எழுதுகிறார், ‘முல்லர் பயன்படுத்திய வழிமுறை பிரிட்டனின் கிறிஸ்தவர்களின் மனநிலைக்குப் பொருந்திப் போவதாக இருந்தது. அவர் தவறான எண்ணத்தோடு திட்டமிட்டு இதைச் செய்தாரோ இல்லையோ, அந்நாட்டு மக்களின் இயற்கையான மனப்பாங்கைப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டு செயற்படுத்திய சரியான முறையாக அது இருந்தது. தாழ்மையை வெளிப்படுத்துவதாகவும், மக்களின் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அவருடைய வழிமுறைகள் இருந்தபோதும் பணம் வசூலிப்பதற்குத் தேவையான அத்தனை உலகப்பிரகாரமான அம்சங்களும் அதில் அடங்கியிருந்தன. முல்லர் மட்டுமே இத்தகைய வழிமுறையைப் பின்பற்றினார் என்பதை நாம் நினைவில் வைத்திருப்பது அவசியம். பிரிட்டனில் இருந்த அத்தனை கிறிஸ்தவ திருச்சபைகளும், ஸ்தாபனங்களும் இந்த முறையைப் பின்பற்றியிருந்தால் அது வெற்றி யடைந்திருக்கும் என்று சிந்திக்கின்ற எந்த மனிதனாவது ஒத்துக்கொள்ளு வானா?’ (Dabney’s Discussions Volume I, pp 204) ஜோர்ஜ் முல்லரின் ஜெபமுறையையும், விசுவாசத்தோடு அதற்கிருந்த தொடர்பையும் ஆராய்ந்து பிரபலமான இறையியலறிஞர் டெப்னி வெளியிட்டிருக்கும் இந்தக் கருத்துக்களை ஆராய்ந்து பார்ப்பது வாசகர்களுக்கு அதிக பயனளிக்கும்.

ஜோர்ஜ் முல்லரின் தவறுகளைப் பற்றி இந்தளவுக்கு நாம் ஆராய வேண்டிய அவசியம் என்ன? என்று நீங்கள் கேட்கலாம். அதற்கான ஒரே காரணம், முல்லரின் தற்பெருமை மிகுந்த அறிவிப்புகளும், தவறான வேதபூர்வமற்ற சிந்தனைகளும் அநேக கிறிஸ்தவர்களைப் பாதித்திருப்பது தான். சுவிசேஷ கிறிஸ்தவத்தை (Evangelical Christianity) மில்லரின் தவறான சிந்தனைகள் இன்றுவரை பாதித்து பலவீனப்படு¢தியிருக்கின்றன. அமெரிக்க இறையியலறிஞர் டெப்னி சுட்டிக்காட்டிய பயங்கரமான குருட்டார்வமுள்ள வழிமுறைகள் அநேக கிறிஸ்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறையில் இன்று பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அநேக கிறிஸ்தவ ஸ்தாபனங்கள் இன்று ‘விசுவாசத்தின் அடிப்படையிலான ஊழியத்தில்’ (Faith based ministry) ஈடுபட்டிருப்பதாக பறைசாட்டிக்கொள்கின்றன. இதற்குப் பொருள் அவர்கள் தங்களுடைய ஊழியக்காரர்களுக்கு நிலையான சம்பளம் கொடுப்பதில்லை என்பதுதான். அந்த ஊழியக்காரர்கள் விசுவாச வாழ்க்கை வாழும்படியாக எதிர்பார்க்கப்படுகிறார்கள். அதாவது, கர்த்தர் அவர்களுக்குத் தேவையான பணத்தை அனுப்பி உதவ அவர்கள் ஜெபத்தில் தரித்திருந்து வாழவேண்டும் என்பது அதற்குப் பொருள். உண்மையில் அந்த ஊழியக்காரர்கள் பலருக்கும் ஜெபக் குறிப்புகள் எழுதி அனுப்பி அதில் சாடைமாடையாக தங்களுடைய தேவைகளைத் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். வாசிக்கிறவர்கள் வியக்கும்படியாக ஊழியங்கள் எப்படிப் பெருகி வழிகின்றன என்று நடக்காதவற்றையும் நடந்தவைகள்போல் மெருகூட்டி எழுதுகிறவர்களுக்கு அதிக காணிக்கை வந்து சேருகின்றது. உலகப்பிரகாரமானதும், செயற்கையானதுமான இந்த வழிமுறைகளைவிட எத்தனை வித்தியாசமானது பொதுஅறிவுக்குப் புலப்படும்படியான இயேசு கிறிஸ்துவின் ஞானவார்த்தைகள். இயேசு சொல்லுகிறார், ‘உழைக்கிறவன் தன்னுடைய சம்பளத்துக்கு தகுதியானவன்’. எப்போதாவது, எப்படியாவது, யாராலாவது உந்தப்பட்டு ஊழியங்களுக்கு இருந்திருந்து பணம் கொடுக்கிற தனிப்பட்ட மனிதர்களை நம்பி கிறிஸ்தவ ஊழியர்கள் ஒரு நாளும் ஊழியம் செய்யக்கூடாது. முடிந்தவரை ஒவ்வொரு கிறிஸ்தவ ஊழியக்காரருக்கும் நிலையான சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். அதுவும் அவர்களுடைய அவசியமான தேவைகளைத் தீர்த்துவைக்கக் கூடிய சம்பளமாக அது இருக்க வேண்டும்.

பரிசுத்த ஆவியின் உந்துதல் தங்களுடைய உள்ளத்தில் ஏற்பட்ட பிறகே காணிக்கை கொடுப்போம் என்று காத்திருப்பவர்கள் காணிக்கை கொடுக்காமலே இருப்பதே நல்லது. இல்லாவிட்டால் அவர்கள் தேவையான ஊழியங்களுக்குக் கொடுக்காமல் தங்களுடைய சொந்தக் கற்பனைகள் வழிநடத்துகிறபடி எங்காவது காணிக்கை கொடுக்கலாம். கிறிஸ்தவர்கள் தொடர்ச்சியாகவும், முறைப்படுத்தியும், தியாகத்தோடும், அறிவுபூர்வமாக சிந்தித்தும் காணிக்கை கொடுக்க வேண்டும் என்கிறது வேதம். இதில் நான் முல்லரின் ‘ஆத்மீக வழிமுறையை’ விட ஜோன் வெஸ்லி ஞானமாக சொன்ன வழியையே பின்பற்ற விரும்புகிறேன். வெஸ்லி சொன்னார், ‘உன்னால் முடிந்தவற்றையெல்லாம் அடையப் பார்; உன்னால் முடிந்தவற்றை யெல்லாம் சேமித்து வை; உன்னால் முடிந்தவற்றையெல்லாம் கொடுக்கப்பார்.’ காணிக்கை கொடுப்பதற்கு நமக்கு கர்த்தரிடம் இருந்து விசேஷமான வழிநடத்தல் எதுவும் அவசியமில்லை. முடிந்தவற்றையெல்லாம் நாம் கர்த்தருக்காக எப்போதும் கொடுக்கப் பார்க்கவேண்டும். 2 கொரிந்தியர் 8:3 சொல்லுவது போல், நம்முடைய ‘திராணிக்கு மிஞ்சியும்’ காணிக்கை கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். முதலில் நாம் எந்தத் திட்டத்தையும் சிந்தித்து ஆராய்ந்து பார்க்கவேண்டும். அதற்குப் பிறகு நம்முடைய பொதுவான அறிவைப் பயன்படுத்தி நமது காணிக்கையை எங்கு கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்குமோ அந்த ஊழியத்துக்குக் கொடுக்கத் தீர்மானிக்க வேண்டும். அதற்குப் பிறகு அதை உடனடியாகக் கொடுத்துவிட்டு கர்த்தர் அதை நல்ல முறையில் தன்னுடைய இராஜ்ய வளர்ச்சிக்காகவும், தம்முடைய மகிமைக்காகவும் பயன்படுத்தும்படி ஜெபிக்க வேண்டும். (இதையெல்லாம் கிறிஸ்தவர்கள் ஒரு நல்ல திருச்சபையில் அங்கத்தவராக இருந்து அந்தச் சபைகள் மூலமே செய்ய வேண்டும் என்பது சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை என்று எண்ணுகிறேன்.)

முல்லருடைய விசுவாசம் பற்றிய கோட்பாட்டின்படி கிறிஸ்தவத்திற்கு எத்தனைத் துன்பமும், வெட்கமும் வந்து சேர்ந்திருக்கிறது. பண விஷயத்தில் மட்டுமல்லாமல் எத்தனையோ ஆத்மீக விஷயங்களையும் அது பாதித்திருக்கிறது. ‘விசுவாச ஊழியங்களைச்’ (Faith mission) செய்கிறவர்கள் நிறைவேறாத தங்களுடைய திட்டங்களையும், தவறுகளையும்பற்றி ஒருபோதும் விளக்குவதில்லை. எந்தவித சம்பளமும் கொடுக்கப்படாமல் உழியம் செய்ய அனுப்பி வைக்கப்பட்டவர்களைப் பற்றியும், நிதிப்பற்றாக்குறையால் ஆறுமாதங்களுக்குப் பிறகு ஊழியத்தை விட்டுவிட்டுத் திரும்பி வந்தவர்களைப் பற்றியும், ‘விசுவாசத்தின்’ அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டு நிறைவேறாமல் நின்று போன திட்டங்களைப்பற்றியும், கிடைக்கும் என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டு பின்பு கிடைக்காமல் போன ‘ஆசீர்வாதங்களைப்’ பற்றியும் அவர்கள் ஒருநாளும் விளக்குவதில்லை. தங்களுடைய தவறுகளையும் உணருவதில்லை. முல்லரைப் போலவே இந்த ‘விசுவாச ஊழியங்களைச்’ செய்கிறவர்கள் தங்களுடைய தவறுகளுக்கெல்லாம் அநேக காரணங்களைச் சுட்டிக்காட்டி அவற்றை நியாயப்படுத்தப் பழகியிருக்கிறார்கள்.

முல்லருடைய ஊழியம் நிச்சயம் கடின உழைப்பைப் பற்றியும், ஜெப வாழ்க்கையைப் பற்றியும், ஊழியத்தைப் பற்றியும், ஊழியத்தில் இருக்கவேண்டிய ஆர்வத்தைப் பற்றியும் நம்மைச் சிந்திக்க வைக்க வேண்டும். அதேவேளை தாலந்துகள் கொண்ட ஒரு தனி மனிதனால் உருவாக்கப்பட்ட கோட்பாடுகளை ஆராய்ந்து பார்க்காமல் நம்பிப்பின்பற்றுவதனால் ஏற்படுகின்ற ஆபத்தைக் குறித்து எச்சரிப்பதாகவும் முல்லரின் ஊழியம் அமைந்திருக்கிறது. அன்றிருந்த பரவலான வரலாற்றுக் கிறிஸ்தவ சிந்தனைகளைத் துப்பரவாக அலட்சியம் செய்து அவற்றில் இருந்து விலகி நின்றார் ஜோர்ஜ் முல்லர். பரிசுத்த ஆவியானவர் தனக்கு நேரடியாக எல்லா வேத அறிவையும் தருவார் என்ற தவறான நம்பிக்கையில் அவர் காலத்தால் நிரூபிக்கப்பட்ட விசுவாச அறிக்கைகளையும், வேத வியாக்கியான நூல்களையும், அருமையான இறையியல் நூல்களையும் ஒதுக்கி வைத்தார். மிகுந்த ஆபத்தை விளைவிக்கக்கூடிய இத்தகைய தவறான ஆத்மீக நடவடிக்கையின் மூலம் எப்படியோ தன்னை மட்டும் தப்புவித்துக் கொண்டார் முல்லர். ஆனால், அவருடைய இறையியல் குளருபடிகளின் நெடுங்காலப் பாதிப்பை எவரால் கணக்குப் போட முடியும்?

___________________________________________________________________________________________________

ஜோர்ஜ் முல்லர் பிரிஸ்டலில் தன்னுடைய ஊழியத்தை நடத்திய விதத்தை அவருடைய வாழ்க்கை சரிதத்தில் இருந்து ஆராய்ந்து அவருடைய ‘விசுவாச ஊழிய’ நடவடிக்கைகள் சுவிசேஷக் கிறிஸ்தவத்தில் ஏற்படுத்திய பாதிப்புகளை வெளிப்படுத்தியிருக்கிறார் போதகர் ஸ்டீபன் ரீஸ். இதை வாசித்துவிட்டு எவ்வளவோ நல்ல பணிகளைச் செய்திருக்கிற முல்லருடைய குறைகளை சுட்டிக்காட்ட வேண்டுமா? நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதை விட்டுவிடலாமே என்று சிலர் சொல்லுவார்கள் என்பது எனக்குத் தெரியும். அது நம்மினத்தில் ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிற தவறான சிந்தனை. அன்பின் பெயரில் பெருந்தவறுகளைக்கூடப் பாய்க்குக் கீழே போட்டு மறைத்துப் பழகிப்போன சுபாவம். குற்றம் சொல்லக்கூடாதென்று சொல்லிச் சொல்லியே குற்றங்களை நாறும் குட்டைகளாக நாடெங்கும் நாம் உருவாக்கிவிட்டிருக்கிறோம். ஜோர்ஜ் முல்லர் எல்லோரையும் போல ஒரு சாதாரண மனிதர்தான். அவர் நல்ல கிறிஸ்தவர் என்பதில் சந்தேகமேயில்லை. நல்ல பணிகள் பல செய்திருக்கிறார் என்பதும் பேருண்மை. அவருடைய வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய சில நல்ல விஷயங்கள் இருக்கின்றன என்பதையும் ஆசிரியர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. அதற்காக கிறிஸ்தவத்தைப் பாதிக்கின்ற, வேத போதனைகளுக்கு முரணான, முல்லர் விட்ட பெருந் தவறுகளை மறைத்துவிட முடியாது. அவற்றைத் தவறுகளாகப் பார்க்கத் தெரியாதவர்களுக்கு விஷயம் தெரியவில்லை என்றுதான் அர்த்தம். முல்லரின் வழிமுறைகளின் பாதிப்பைத் தமிழினத்துக் கிறிஸ்தவத்தில் இன்று நாம் அன்றாடம் பார்க்கிறோம். இந்த ஆக்கத்தின் மூலம் ஆசிரியர் நமக்குப் பெரு நன்மை செய்திருக்கிறார். ‘சென்டிமென்டலாக’ நடந்து கொள்வதை நாம் விட்டுவிட்டு வேதபூர்வமாக இனியாவது சிந்தித்து நடக்க ஆரம்பிக்க வேண்டும்.

– ஆசிரியர்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s