இப்போது நாம் பார்க்கப்போகிற உண்மை நம்மைத் தாழ்மைப்படுத்துகிறதும், ஆத்மீக ரீதியில் பாதிக்கக்கூடியதொன்றாகும். தேவனுடைய பிள்ளையின் வாழ்க்கையில் கிருபையின் அன்பு பெருமளவுக்கு தணிந்துபோகக்கூடியதாக இருக்கிறது என்பதே அந்த உண்மையாகும். இதன் மூலம் தேவனுடைய பிள்ளை தன்னுடைய இரட்சிப்பை இழந்துபோகலாம் என்று நான் கூறவரவில்லை; ஆனால், அதன் வல்லமை அவனில் தணிந்துபோகும் என்றுதான் சொல்ல வருகிறேன். இந்த உண்மையை நாம் அடிக்கடி வலியுறுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம். விசுவாசம், அன்பு, நம்பிக்கை, பக்தி என்பனவெல்லாம் தேவனுடைய பிள்ளை துன்பத்தை அனுபவிக்கின்றபோது பெரும் பாதிப்புக்குள்ளாகி வலிமையிழந்து காணப்பட்டாலும் அவற்றை அவன் பூரணமாக ஒருபோதும் இழந்துவிட முடியாது என்று வேதம் சுட்டிக் காட்டுகிறது. அவற்றை அவன் முற்றாக இழந்துவிடலாம் என்று கூறுவது தேவனுடைய வல்லமையையும், ஞானத்தையும் குறைவுபடுத்துவதோடு, அந்தக் கிருபைகளின் அழியாத்தன்மையையும் மறுதலிப்பதில் போய் முடிந்துவிடும். தேவனுடைய அன்பு ஒருவரில் தணிந்துபோகும்போது கீழ்வரும் குணா தியங்களை அவருடைய வாழ்க்கையில் காணமுடியும்.
(1) கர்த்தரை முழு இருதயத்தோடு நேசிப்பதும், அதில் ஆனந்தமடைவதும், அதைத் தொடர்ந்து எண்ணிப் பார்ப்பதும் ஒருவரில் குறைவடைகிறபோது அவருடைய ஆத்துமாவில் தேவனின் அன்பு தணிந்துவிட்டிருக்கிறது என்று சந்தேகப்படுவதில் தப்பில்லை. – நம்முடைய ஆத்மீக அன்பு இருக்கும் நிலை கர்த்தரைப் பற்றிய நம்முடைய ஆத்மீக எண்ணங்களையும், நமக்கு அவர் மீது இருக்க வேண்டிய அன்பையும், ஆனந்தத்தையும் பாதிக்கும். கிறிஸ்துமேல் இருக்க வேண்டிய அன்பு குளிரடைந்து காணப்பட்டாலோ, நம்முடைய மனதில் உலகப்பிரகாரமான, சுயநலமான எண்ணங்கள் வளர ஆரம்பித்தாலோ கர்த்தரைப் பற்றிய நம்முடைய எண்ணங்களைச் சுற்றி கார்மேகக் கூட்டங்கள் படர ஆரம்பித்துவிடும். அதன் காரணமாக அவரே நமக்கு எல்லாமாக இல்லாமலும், அவர் மீது நமக்கு இருக்கும் வைராக்கிய மான அன்பும், விசுவாசமும் சிறிது சிறிதாக தணிய ஆரம்பித்துவிடும். இத்தகைய அன்பு குறைந்தபோதே ஆதாம் கர்த்தரைவிட்டு விலகி மறைந்து வாழ ஆரம்பித்தான். தன்னுடைய இருதயத்தில் கர்த்தருக்கு விரோதமான உணர்ச்சிகள் ஏற்பட ஆரம்பித்துவிட்டதை உணர்ந்து அதற்குப் பணிந்து, அதன் காரணமாக கர்த்தரே எல்லாம் என்று இதுவரை இருந்த எண்ணங்கள் இருதயத்தில் தணிந்துபோக அவருடைய பிரசன்னத்தைவிட்டு விலகியோட ஆரம்பித்தான். எந்தக் கர்த்தர் இதுவரை அவனுக்கு மகிமையுள்ளவராக இருந்தாரோ, எவருடைய சம்பாஷனை இதுவரை அவனுக்கு ஆனந்தத்தையும், ஆறுதலையும் அளித்ததோ, எவருடைய குரல் அவனுக்கு இதுவரை இனிமையானதாக இருந்ததோ அவர் அவனுக்கு அந்நியரைப் போலத் தென்பட ஆரம்பித்தார்.
அவனுக்கு இந்த நிலை ஏற்படக் காரணமென்ன? கர்த்தரின் மகிமை அவருக்குள்ளேயே குறைய ஆரம்பித்ததனாலா? அல்லது கர்த்தரின் பரிசுத்தமும், அன்பும், விசுவாசமும் அவருக்குள் குறைய ஆரம்பித்ததாலா? இல்லவே இல்லை. கர்த்தரில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. பூரணமான கர்த்தரின் பூரணத்துவமானது அவர் ஒருபோதும் மாறுவதில்லை என்பதுதான். தன்னுடைய குணாதிசயங்களுக்கு மாறாக அவரால் ஒருபோதும் நடக்க முடியாது. தான் செய்யும் அனைத்தையும் தன்னுடைய குணாதிசயத்துக்கு ஒத்தே அவரால் செய்ய முடியும். ஆகவே, மாற்றம் கர்த்தரில் ஏற்படாமல் ஆதாமிலேயே ஏற்பட்டது. ஆதாம், தான் கர்த்தர் மேல் கொண்டிருந்த அன்பை வேறு ஒன்றில் காட்ட ஆரம்பித்தான். அதை உணர்ந்த அவன் அவருடைய பிரசன்னத்தை விட்டு ஓடி மறைந்து அவரோடு இருந்த ஐக்கியத்தையும் துறக்க ஆரம்பித்தான். தேவனில் இருக்கும் தன்னுடைய அன்பு குறைய ஆரம்பிக்கின்றபோது ஒவ்வொரு விசுவாசியும் ஆதாமைப்போல அதை உணர ஆரம்பித்து கர்த்தரின் ஐக்கியத்தையும் இழக்க ஆரம்பிப்பார்கள். அவரைவிட்டு மறையத் தொடங்குவார்கள்; அவரைப் பற்றிய அவருடைய எண்ணங்கள் கறைபடிய ஆரம்பிக்கும்; அவருடைய செய்கைகளை தவறாகப் புரிந்துகொள்ள நேரிடும்; அவரில் இருக்க வேண்டிய பரிசுத்தமான அன்பு குன்றிவிடும். ஆனால், விசுவாசியின் இருதயம் சரியாக இருக்கும்போதும், அவனுடைய அன்பு அதிகரித்துக்காணப்படும்போது, கர்த்தரின் பூரணமான குணாதிசயங்களை அவன் உணர்ந்து அவரோடு ஐக்கியத்தில் வருகிறான்.
(2) தேவனின் அன்பு தணிந்துபோவதும், கர்த்தரை நேசிப்பதும் அதில் ஆனந்தமடைவதும் குறைவதுமட்டுமல்லாமல் அவரை நம்பிக்கையோடும், விசுவாசத்தோடும் அணுகுவதும் குறைந்துபோகும். – தேவனுடைய பிள்ளைக்கு அவரில் இருக்கும் விசுவாசமும், இனிமையான நம்பிக்கையும் இல்லாமல் போகும். தத்தெடுக்கப்பட்ட பிள்ளையைப் போல ஆத்துமா சகலவிதமான தாழ்மைகளோடும், ஆர்வத்தோடும் அவருடைய மடியை நாடி ஓடிப்போகமல் தூரத்தில் தயங்கி நிற்க ஆரம்பிக்கும். அப்படியே அவரை நாடிப் போக ஆரம்பித்தாலும் அடிமையைப் போலத் தயங்கித் தயங்கி நடுக்கத்தோடு அவரை அணுக ஆரம்பிக்கும். அவரோடு அன்பிலும், ஐக்கியத்திலும் திளைத்திருந்த காலத்தில் இருந்த குழந்தைத்தனமான ஆவியும், கர்த்தரைவிட வேறு எதையும் நாடாத இதயமும், அவருடைய பிரசன்னத்தைப்போல பரிசுத்தமானதெதுவும் இல்லை என்ற எண்ணமும் அதிகளவுக்கு அவனைவிட்டு விலகிப் போயிருக்கும். அவநம்பிக்கை, நீதியான பயம், ஆவியின் அடிமைத்தனம் ஆகியவையே மறுபடியும் அவனை ஆள ஆரம்பிக்கும். இதெல்லாம் அவனில் தேவ அன்பு தணிய ஆரம்பித்ததனால் ஏற்பட்ட அடையாளங்களாக இருக்கும்.
(3) அத்தோடு, கர்த்தரின் செயல்களைத் தீவிரமாக ஆராய்ந்து பார்ப்பதும் குறைந்துபோகும். – விசுவாசிக்கு கர்த்தர் மேல் அதிக அன்பிருக்கும்போது அவன் கர்த்தரின் செய்கைகள் அனைத்தையும் நியாயப்படுத்துகிறவனாக இருப்பான். அவருடைய செய்கைகளுக்கு மறுப்புக்கூறாமலும், குறை கூறாமலும் தாழ்மையோடு அவற்றிற்கு தன்னை ஒப்புக்கொடுத்து வாழ்வான். வாழ்க்கையில் எதிர்ப்புகளை அநுபவித்து சோதனைகளை எதிர்நோக்கும் போது தெய்வீக அன்பில் வளர்ந்து கொண்டிருக்கும் விசுவாசி, “கர்த்தர் என்னைத் தண்டித்திருக்கிறார், இருந்தாலும் அவர் தொடர்ந்து என்னுடைய விசுவாசமிக்க, அன்புள்ள தேவனே. என் பிதா நோகும்படி என்னைத் தண்டித்திருக்கிறார், இருந்தாலும் அவர் என் கருணையுள்ள, மென்மையான பிதாவே. நான் படும் இந்த வேதனைகளும், சோதனைகளும் அன்போடேயே என்னை அணுகியிருக்கின்றன. அன்பே இவற்றை நான் அநுபவிக்கும்படி அனுப்பி வைத்து தேவனிடத்தில் நான் இன்னும் அதிக மான அன்பை வைத்திருக்க என்னை ஊக்கப்படுத்த வந்திருக்கின்றன” என்பான். சோதனைகளை அனுபவிக்கும் நேரத்தில் அன்பின் குரலைக் கேட்கிறவன் ஆனந்தமானவன். அதுவே அவனுடைய துக்கப்படுகிற இருதயத்தைக் கர்¢த்தரிடத்தில் இட்டுச் செல்லும். ஆனால், தேவ அன்பு இருதயத்தில் தணிந்து போகிறபோது சோதனைகளை அநுபவிக்கின்ற விசுவாசி இவற்றிற்கு மாறான அநுபவத்தையே அடைவான்.
(4) கர்த்தரோடு தொடர்பு வைத்திருப்பதில் ஆர்வம் குன்றி, கிருபையின் சாதனங்களைப் பயன்படுத்துவது ஒருவரில் வெறும் கடமையாக மட்டும் அமைந்து, கர்த்தரோடு இருக்கும் ஐக்கியம் குறைந்து காணப்படுமானால் அவரில் கர்த்தரின் அன்பு தணிந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட வேறு வலிமையான ஆதாரங்கள் எதுவும் அவசியமில்லை. – எப்போதுமே நமக்கு அதிக ஆனந்தத்தை அளிக்கும் ஒன்றை நாம் அதிக தீவிரத்தோடு நாடிப்போவதோடு அது இல்லாவிட்டால் அதற்காக ஏங்கவும் ஆரம்பிப்போம். நாம் நேசிக்கிற நண்பன் நம் பக்கத்தில் எப்போதும் இருக்க வேண்டும் என்று விரும்பு வோம். அவனுடைய பிரசன்னம் நமக்கு ஆனந்தத்தை அளிப்பதோடு நமது இருதயம் அவனுடைய நட்பை நாடி ஓடும். அவன் பக்கத்தில் இல்லாமலிருப்பது சகலவிதமான ஆனந்தத்தையும் அழித்துப்போடும். இதேவிதமாகத்தான் கர்த்தருடைய அன்பைப் பற்றியும் நம்முடைய அநுபவம் இருக்கும். கர்த்தரை விசுவாசித்து அவருடைய மகிமையைத் தன்னுடைய வாழ்க்கையில் அறிந்து ஆவியின் வல்லமையையும், கர்த்தரின் பிரசன்னத்தில் ஆனந்ததையும் அடைந்தவர்களுக்கு அத்தகைய அநுபவத்தை இழக்கும்போது அதை உணராமல் இருக்க முடியாது. கிறிஸ்தவ விசுவாசிகளில் சிலர் கர்த்தருடைய ஐக்கியமில்லாமலும், அவருடைய தொடர்பு இல்லாமலும், தகப்பனோடு இருப்பதைப் போன்ற உறவை அவரோடு வைத்திராமலும் இருந்து வருகிறார்கள். அவர்கள் இந்த உலகத்தின் அம்சங்களில் அதிக ஆர்வம்காட்டி, அதன் கவலைகளைத் தங்களில் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். அதனால், அவர்களுடைய ஆத்மீக ஆர்வங்கள் பாதிக்கப்பட்டுவிடுகின்றன. அவர்களுடைய உலக ஆசைகளோடு தொடர்புபடுத்திப் பார்க்கும்போது அவர்களுடைய தேவ அன்பு பனிபோல் உறைந்து காணப்படுகின்றது. அவர்கள் வெறுமனே கிறிஸ்துவைப் பற்றி பேசுகிறவர்களாக மட்டும் இருந்து அவர்களுடைய இருதயங்களில் தேவ குமாரனின் அன்பின் ஒளி வீசாமல் இருக்கின்றது. கர்த்தர் அவர்களை சந்திப்பதை நிறுத்திவிடுகிறதோடு அவருடைய பிரசன்னத்தை அவர்களால் உணரவும் முடியாது. கர்த்தர் அவர்களோடு பேச மறுப்பதோடு அவருடைய மென்மையான குரலை அவர்களுடைய இருதயம் கேட்க முடியாமல் போகும். வாசகனே! நீ கிறிஸ்துவை விசுவாசிக் கிறவனா? இந்த மாதிரியான வாழக்கையை வாழ்வதை நிறுத்திவிடு. இது வறுமையான வாழ்க்கை; ஜிவனில்லாத வாழ்க்கை; உன்னுடைய விசுவாசத் தோடு தொடர்பில்லாத வாழ்க்கை; யாருடைய பெயரை நீ பயன்படுத்துகிறாயோ அவருக்கு எந்தவிதமான மகிமையையும் தராத வாழ்க்கை; நீ எதிர்நோக்கி இருக்கின்ற வாழ்க்கையோடு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத ஒரு வாழ்க்கை. விசுவாசியே! உன் இருதயத்தின் அன்பைப் பரிசோதித்துப் பார். எவருடைய இருதயத்தில் கர்த்தரின் அன்பு பெருகுகிறதோ, கர்த்தரோடு அதிக நெருக்கம் ஏற்படுகிறதோ, அவரில் அதிக ஆனந்தத்தை அநுபவிக்கிறதோ அங்கேதான் இந்த உலகம் தரமுடியாத பெரும் ஆசீர்வாதங்களைக் காணலாம். விசுவாசி இத்தகைய ஆசீர்வாதங்களைத் தள்ளிவைத்து வாழ முடியாது. தன்னுடைய நல்ல நெருக்கமான நண்ரோடு இருக்கவேண்டிய ஐக்கியமில்லாமல் வாழ முடியாது.
(5) மென்மையான இருதயத்தோடு ஒருவர் வாழத்தவறி வருகிறார் என்றால் அவருடைய ஆத்துமா எந்த நிலையிலிருக்கிறது என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை. – ஒரு விசுவாசி எதையும் ஆராய்ந்து பார்த்து தவறானதை விலக்கி வைத்து நடக்கும்போதும், நேர்மையாக வாழும்போதும், நேர்மையோடும், கவனத்தோடும், கர்த்தருக்கு முன் ஜெபத்தோடு¢ம் வாழும்போதும் அவன் மென்மையான இருதயத்தோடும், தாழ்மையோடும் வாழ்கிறான். ஏசாயா, “என் ஆயுசின் வருஷங்களெல்லாம் என் ஆத்துமா வின் கசப்பை நினைத்து நடந்துகொள்ளுவேன்” என்கிறார். (ஏசாயா 38:15). விசுவாசி விசுவாசத்தோடு வாழ்கிறபோதும், தன்னுடைய பிதாவுக்கு எதிராக எதையும் செய்வதற்கு நடுங்கி வாழ்கிறபோதும், தன்னுடைய நண்பரும் தேவனுமாகிய கர்த்தருக்கு பயந்து வாழ்கிறபோதும், பரிசுத்த ஆவியை துக்கப்படுத்துவதற்குப் பதிலாகத் தன்னுடைய வலது கண்ணைப் பிடுங்கத் தயாராக இருக்கும்போதும், கர்த்தருடைய கட்டளைகளையும், போதனைகளையும் பின்பற்றி அவற்றில் ஆனந்தமடையும்போதும் அவன் மென்மையான இருதயத்தோடு வாழ்கிறான் எனலாம். ஒரு விசுவாசியை இந்தவிதமாக பக்தியோடு வாழவைப்பது எது? அவன் தன்னுடைய இருதயத்தில் கர்த்தர் மேல் கொண்டிருக்கும் அன்புதான். அத்தகைய அன்பு அவனுடைய இருதயத்தில் தணிந்து காணப்படுமானால் எத்தகைய சோதனைகளையும், ஆத்மீக ஆபத்துக்களையும் அவன் எதிர்நோக்க வேண்டுமென்பதை ஒரு தடவை எண்ணிப் பாருங்கள்.
(6) கிறிஸ்து நம்முடைய கண்களுக்கு மகிமையுள்ளவராக தென்படாமலும், நம்முடைய இருதயத்துக்கு விலைமதிப்பற்றவராகத் தெரியாமலும் போனால் நம்முடைய இருதயத்தில் தேவ அன்பு தணிந்து வருகிறது என்றுதான் அர்த்தம். – இதைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்? நாம் இருதயத்தில் கிறிஸ்துவுக்காகக் கொண்டிருக்கின்ற நேசம் அவரைப் பற்றிய நம்முடைய எண்ணங்கள் அனைத்தையும் பாதிக்கும். நமக்காக சிந்தப்பட்ட பரிசுத்த இரத்தத்தை நாம் மகிமைப்படுத்தாமலும், நீதியில் கவனம் செலுத்தாமலும், கிறிஸ்துவின் சிலுவையை நித்தமும் சுமக்காமலும், அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளாமலும் இருப்போமானால் கிறிஸ்துவில் நமக்கிருக்க வேண்டிய அன்பு குறைந்துவருகிறது என்றுதான் அர்த்தம். பின்வரும் கேள்விக்கு ஒருவன் அளிக்கும் பதிலிலிருந்தே அவனுடைய விசுவாசத்தின் வைராக்கியத்தை நாம் அறிந்துகொள்ள முடியும். கிறிஸ்துவைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? (மத்தேயு 22:24) என்பதே அந்தக் கேள்வி. அவருக்காகவும், அவர் மூலமும் அவன் வாழ்கிறானா? கிறிஸ்துவின் நாமம் அவனுக்கு ஆனந்தத்தை அளிக்கிறதா? அவருடைய சிலுவையை அவன் மகிமைப்படுத்துகிறானா? அவருடைய பணியில் அவன் ஆறுதலையும், ஓய்வையும் அடைகிறானா? இந்த ஆசீர்வாதங்களை அவன் அநுபவிக்கிறவனாக இருந்தால் அவனில் கிறிஸ்துவின் நேசம் கொடிகட்டிப் பறக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
(7) கிறிஸ்துவை நேசிக்கும் சக சகோதரர்கள் மேல் நம்முடைய அன்பு குறைவடைந்து இருக்குமானால் தேவ அன்பு நம்மில் தணிந்திருக்கிறது என்பதற்கு அது மிகவும் வலிமையான ஆதாரமாக அமைகிறது. – கர்த்தரை நாம் தீவிரமாக, தூய்மையான உள்ளத்தோடு நேசிப்போமானால் அவருடைய சாடை காணப்படுகின்ற எதையும் நாம் மெய்யாக நேசிப்போம். அவருடைய சாடை அதில் மங்களாகத் தெரிந்தாலும், அதிலிருக்கும் எல்லாமே நமக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருந்தாலும், பரிசுத்த ஆவியானவரின் கைத்திறத்தை அதில் கண்டு கர்த்தரைப் போலவே அதை நாம் நேசிக்க ஆரம்பிப்போம். தேவ சாயலுடைய எவராக இருந்தாலும் அவர்கள் எந்த சபையைச் சேர்ந்தவர்கள், எத்தகைய நிறத்தைக் கொண்டவர்கள், எத்தகைய தகுதியுடையவர்கள் என்றெல்லாம் கேள்விகள் கேட்டுக்கொண்டிராமல் கர்த்தரை நேசிக்கும் ஆத்துமாக்களை அன்போடு அரவணைப்போம். கிறிஸ்துவுக்காக அவர்களை நாம் நம்முடைய இருதயத்தில் ஏற்றுக்கொள் கிறோம்.
ஆனால், நம்முடைய கட்சியைச் சேரவில்லை என்பதற்காக சகோதரர் களைப் பார்க்கும்போது நம்முடைய இருதயம் துடிக்க மறுத்தும், கண்களை மேகங்கள் மூட ஆரம்பித்தும், கட்சிப் பற்றும், குறுகிய மனப்பான்மையும், சுயநலமும் நம்முடைய இருதயத்தைக் கவ்விச் சீரழிக்கும்போது அங்கே தேவனுடைய அன்பு தணிந்து வருகிறது என்பது சொல்லாமே தெரிய வேண்டும். இதுபற்றி கர்த்தரின் வேதம் தெளிவாகவே விளக்குகிறது: “தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோத ரனைப் பகைத்தால் அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூறாமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு கூறுவான்? தேவனிடத்தில் அன்பு கூறுகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்பு கூறவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக் கிறோம்.” (1 யோவான் 4:20-21). “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர் களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லோ ரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.” (யோவான் 13:35). வெளிப்படையாக கண்களுக்குத் தெரிகிறவிதமாக அவருடைய சாடையைக் கொண்டிருக்கிறவர்களை நேசிக்க மறுத்தால் கண்களுக்குத் தெரியாமலிருக்கின்ற, அந்தச் சாடையின் மூலத்தை நாம் எப்படி நேசிக்கப் போகிறோம்?
(8) தேவனில் நம்முடைய அன்பு தணிந்துவருகிறபோது, அவருடைய இராஜ்யத்துக்குரிய காரியங்களில் நமது ஆர்வமும் அக்கறையும் குறைந்துபோதும். ஒன்று மற்றதைத் தவறாமல் தொடரும். – தேவனுடைய அன்பு தணிந்துவருகிற இருதயத்தில் அவருடைய இராஜ்யத்துக்கான ஆர்வம் தொடராது என்று நாம் சொல்லமுடியாது. வெட்கப்படும்விதமாக பலரில் அத்தகைய ஆர்வம் தொடர்ந்து வருகிறதை நாம் பார்க்க முடியும். ஆனால், தேவ அன்பு ஆத்துமாக்களில் தணிந்து காணப்படுகிறபோது அவர்களின் இருதயத்தில் தேவ இராஜ்யத்தின் வளர்ச்சிக்கான மெய்யான ஆத்மீக ரீதியிலான, ஜீவனுள்ள ஆர்வமும், அவருடைய சத்தியத்தில் பேரார்வமும், சபையில் ஆழமான பரிசுத்தமும், ஆத்தும ஆதாயமும் நிச்சயம் தணிந்து போகும்.
[ஒக்டேவியஸ் வின்ஸ்லோ (Octavius Winslow 1808-1878): பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த போதகர்களில் ஒருவர். நாற்பது நூல்களுக்கு மேலாக அவர் படைத்திருக்கிறார். அவற்றின் மூலம் நடைமுறைக் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அவசியமான கர்த்தரின் சத்தியங்களை அவர் விளக்கியிருக்கிறார். இங்கிலாந்தில் பாத் என்ற இடத்தில் அவருடைய கல்லறை இருக்கிறது.]