திருச்சபை வரலாறு

பிரான்ஸின் ஹியூகனோக்கள்

பதினாறாம் நூற்றாண்டில் சுவிட்சர்லாந்தில் மட்டுமல்லாது ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளான பிரான்ஸ், நெதர்லாந்து, ஹங்கேரி, ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் திருச்சபை சீர்திருத்தம் தீ போலப் பரவ ஆரம்பித்தது. பிரான்சில் ஏற்பட்ட திருச்சபை சீர்திருத்தம் அதை ஆண்ட அரசர்களோடு தொடர் புடையதாக அமைந்திருந்தது. இந்தக் காலப்பகுதியில் பிரான்சின் மன்னனாக இருந்தவன் முதலாம் பிரான்சிஸ். ஆரம்பத்தில் திருச்சபை சீர்திருத்தத்தில் பிரான்சிஸ் அதிக அக்கறைகாட்டவில்லை. கத்தோலிக்க மதத்தோடு சீர்திருத்தவாதிகளுக்கு இருந்த அறிவு சார்ந்த போராட்டமாக மட்டுமே அதைக் கருதினான் அரசன். அவனுக்கு ஆத்மீக ஈடுபாடோ அதில் எந்த விதமான அக்கறையோ இருக்கவில்லை. 1516ல் அரசன் அரசியல் காரணங்களுக்காக போப்போடு ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டான். வெகு சீக்கிரத்திலேயே மார்டின் லூத்தருடைய போதனைகளிலும், கல்வினுடைய போதனைகளிலும் அதிக அக்கறைகாட்டிய பிரான்ஸ் தேசத்தவர்கள் தங்களை ஆபத்து நெருங்கி வருவதை உணர்ந்தனர். சீர்திருத்தவாதிகளுக்கும் அரசனுக்கும் பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்காகவே பிரான்ஸைச் சேர்ந்த ஜோண் கல்வின் தன்னுடைய நூலை பிரான்ஸின் அரசனுக்கு அர்ப்பணித்திருந்தார். ஆனால், லூத்தருடைய போதனைகளை நாட்டில் அநேகர் ஆர்வத்துடன் பின்பற்ற ஆரம்பிக்க பிரான்சிஸ் ஆத்திரங்கொண்டு அவர்களை உயிரோடு கொளுத்த ஆரம்பித்தான். 1545ல் ஆயிரக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டதோடு சிறையிலும் அடைக்கப்பட்டனர். இருபத்திரெண்டு நகரங்களும் கிராமங்களும் அடியோடு அழிக்கப்பட்டன.

1547ல் பிரான்சிஸ் இறக்க அவனுடைய மகன் இரண்டாம் ஹென்றி அரசனாக பதவி ஏற்றான். அவன் தன்னுடைய தந்தையைவிடவும் மோசமாக நாட்டில் சீர்திருத்தவாதிகளுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தான். இதனால் அநேகர் அகதிகளாக ஜெனீவாவுக்குபோய் வாழ நேர்ந்தது. அகதிகளால் ஜெனீவா இக்காலத்தில் நிரம்பி வழிந்தது. அநேக இளைஞர்கள் ஜெனீவாவில் வேதப் பயற்சி பெற்று எதிர்ப்புகளையும், மரணத்தையும் பொருட்படுத்தாது மீண்டும் பிரான்ஸுக்குத் திரும்பி வந்து சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட்டார்கள்; நூல்களையும், கைப்பிரதிகளையும் விநியோகித்தனர். இவ்வேளையில் ஜெனீவாவில் அகதியாக இருந்து பணிபுரிந்து வந்த கல்வின் தன்னுடைய நாட்டு மக்களைப் பார்த்து, “கற்களை எங்களுக்கு அனுப்பிவையுங்கள், உங்களுக்கு அவற்றை அம்புகளாக மாற்றி அனுப்பிவைக்கிறோம்” என்று செய்தியனுப்பினார். அதாவது, இங்கு வருகிறவர்களை சீர்திருத்தத்தைப் பரப்பும் ஆயுதங்களாக மாற்றி அனுப்புவோம் என்பதே கல்வின் செய்தியின் பொருளாக இருந்தது. பிரான்ஸின் அரசன் நூல்கள் விநியோகிப்பதையும், வீடுகளிலும், வேளைத் தளங்களிலும் இருந்து வேதப் படிப்புகளில் ஈடுபடுவதையும் தடை செய்தான். அரச அதிகாரிகள் அடிக்கடி நாட்டின் அச்சுக்கூடங்களுக்கு வருகை தந்து அச்சிடும் நூல்களை ஆராய்ந்தார்கள். பிரான்ஸுக்கு உள்ளே வந்த அத்தனைப் பொருட்களும் கடுமையான சோதனைக்குள்ளாயின. இத்தனை அடக்குமுறைகளை அரசு கையாண்டபோதிலும் சீர்திருத்தம் இரகசியமாக பிரான்ஸில் தொடர்ந்து வளர்ந்தது. அரசனுடைய அதிகாரம் குறைவாக இருந்த இடங்களில் அது வெளிப்படையாகவே வளர்ந்தது. 1559ல் இரண்டாம் ஹென்றி ஒரு விபத்தில் சிக்கி இறந்தான்.

1556ல் இருந்து பிரான்ஸின் சீர்திருத்தவாதிகள் ‘ஹியூகனொக்கள்’ என்று அழைக்கப்பட்டனர். இந்தப் பெயர் அவர்களுக்கு ஜெனீவாவில் கொடுக்கப் பட்டது. ஜெனீவாவுக்கு அகதிகளாகப் போனவர்கள் திரும்பி நாட்டுக்கு வர இந்தப் பெயர் அவர்கள் மூலம் எங்கும் பரவ ஆரம்பித்தது. பிரான்ஸின் வடபகுதியில் சீர்திருத்தத்திற்கு அதிக ஆதரவிருந்தது. அங்கேயே அது பலத்தோடு வளர்ந்தது. நாட்டின் கீழ்மத்திய வகுப்பில் இருந்தவர்கள் மத்தியிலும், சாதாரண மக்கள் மத்தியிலுமே சீர்திருத்தவாதத்திற்கு ஆதரவு அதிகம் இருந்தது. பெரும்பாலான உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து கத்தோலிக்க மத ஆதரவாளர்களாக இருந்தனர். நாட்டில் 65 கல்லூரிகளைக் கொண்டு இயங்கி வந்த முக்கிய பல்கலைக் கழகமும் கத்தோலிக்க மதத்தையே தொடர்ந்து ஆதரித்து வந்தது.

இரண்டாம் ஹென்றியின் மரணத்திற்குப் பிறகு அவனுடைய மகன் இரண்டாம் பிரான்சிஸ் பதினாறு வயதில் அரசனானான். அவன் நீண்ட காலம் ஆளமுடியாமல் இறந்தான். அவனுக்குப் பின் அவனுடைய சகோதரன் ஒன்பதாம் சார்ள்ஸ் பதிவிக்கு வந்தான். அவனுக்கு வயது பத்தாயிருந்ததால் நிர்வாகப்பொறுப்பை அவனுடைய தாய் கெதரின் டீ மெடிசி (Catherine de Medici) கவனித்துக்கொண்டாள். ஆரம்பத்தில் கெத்தரின் டீ மெடிசி கத்தோலிக்கர்களுக்கும், சீர்திருத்தவாதிகளுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த முனைவதுபோல் நடந்துகொண்டாலும் அவளுடைய உள்நோக்கம் சீர்திருத்தவாதிகளை அடியோடு ஒழிப்பதாகவே இருந்தது. அதை நிறைவேற்றுவதற்காக அவள் ஒரு திட்டத்தை வகுத்தாள். அதன்படி நெவேரி என்ற ஸ்பெயினுக்குப் பக்கத்திலிருந்த ஓர் அரசின் தலைவனான இளவரசன் ஹென்றிக்கு பிரான்ஸின் அரசனும் தன்னுடைய மகனுமான ஒன்பதாம் சார்ள்ஸின் தங்கையான கத்தோலிக்க இளவரசி மார்கிரெட்டை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தாள். நவேரியின் ஹென்றி ஒரு புதிய ஹியூகனோவாக இருந்தான். இந்தத் திருமணத்திற்கு பல பகுதிகளிலும் இருந்து முக்கிய பிரமுகர்கள் வரவிருந்தார்கள். அவர்களில் ஹியூகனோத் தலைவர்களில் ஒருவரான அட்மிரல் கெலினியும் அடங்கியிருந்தார். கெத்தரினின் இரகசியத் திட்டம் ஹியூகனோக்களில் எவருக்கும் தெரியாதிருந்தது.

அன்று ஆகஸ்ட் 24ம் நாள், 1572ம் வருடம், புனித பர்த்தலோமியூ தினம். திருமணமும் அதற்குப் பிறகு நடந்த விருந்துபசாரங்களும் முடிவடைவதற்கு முன்பாக அத்தினத்திலே வரலாற்றில் இதுவரை நிகழ்ந்துள்ள மோசமான சம்பவங்களில் ஒன்று நிகழ்ந்தது. அன்று கெத்தரின் அரசனான தன்னுடைய மகனிடத்திலே போய், திருமணத்தில் கலந்துகொள்ள வந்திருக்கும் ஹியூகனோக்கள் அரச குடும்பத்தவரையும், கத்தோலிக்க மதத்தலைவர்கள் அனைவரையும் கூண்டோடழிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், அதைத் தடைசெய்வதானால் அங்கு வந்திருக்கும் அத்தனை சீர்திருத்தவாதிகளையும் அவர்கள் வெளியேறுவதற்கு முன்பாக நகருக்குள்ளேயே கொலை செய்வது அவசியம் என்றும் சொன்னாள். இதை ஏற்கனவே ஒரு தாளில் எழுதித் தயாராக வைத்திருந்த கெத்தரின் அதில் கையெழுத்திடும்படி அரசனைக் கேட்டாள். பலவீனமானவனாக இருந்த அரசன் முதலில் அதைச் செய்யத் தயங்கினான். தன்னுடைய மக்களுக்கு அக்கொடிய தண்டனையை அளிக்க அவன் விரும்பவில்லை. ஆனால், தாயின் தொல்லை பொறுக்கமுடியாமல் அவள் சொன்னபடி செய்த அரசன், “ஆனால், என்னைக் குற்றம் சொல்லும்படி ஒரு ஹியூகனோவாவது பிரான்ஸில் உயிரோடு இல்லாமல் இருக்கும்படி இதை முடித்துவிடு; நீ செய்யத் தீர்மானித்ததை உடனடியாகப் போய்ச்செய்” என்று சொன்னான்.

பிரான்ஸின் தலைநகரான பாரிசில் இருந்த கொடியவர்களுக்கு அன்றைய நாள் திருநாளாக இருந்தது. நெவேரியின் ஹென்றியும், அவனை மணந்த மார்கிரெட்டும் மட்டுமே அன்று உயிர் தப்ப முடிந்தது. அந்த ஆகஸ்ட் 24ம் நாள் நதரில் இருந்த அத்தனை ஹியூகனோக்களும், அவர்களின் தலைவர்களும் கொல்லப்பட்டனர். அட்மிரல் கொலினி முதலில் கொல்லப்பட்டார். அவருடைய தலை வெட்டப்பட்டு அக்காலத்தில் போப்பாக இருந்த பதின்மூன்றாம் கிரெகரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அடுத்த மூன்று நாட்களுக்கு கொடியவர்கள் ஹியூகனோக்களைத் தேடித் தேடிப்பிடித்துக் கொலை செய்தார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் அகோரமாக உயிரிழந்தனர். பாரிசில் இரத்த வெள்ளம் கரைபுரண்டோடியது. பிரான்ஸின் ஏனைய நகரங்களிலும் ஹியூகனோக்களைக் கொலை செய்யும்படி அரச கட்டளையிடப்பட்டது. இது ஸ்பெயினின் மன்னனுக்கும், போப்புக்கும் பேரானந்தத்தை அளித்தது. போப் கிரெகரி ஆலய மணியை அடித்து இதைக் கத்தோலிக்க மதத்துக்குக் கிடைத்த வெற்றியாகக் கொண் டாடினார்.

இத்தனைக் கொடூரமான செயல்களுக்கு மத்தியிலும் அன்றைக்கு நான்கில் மூன்று ஹியூகனோக்கள் உயிர்தப்பினர். ஹியூகனோ போதகர் களில் இருவர் மட்டுமே அன்று உயிரிழந்தனர். கொடியவர்கள் போதகர் களையே முக்கியமாகத் தேடித்திரிந்த போதிலும் கர்த்தரின் கிருபையால் ஏனைய போதகர்கள் உயிர்பிழைத்தனர். ஒரு போதகர் மூன்று நாட்கள் வைக்கோல் போரில் தவறி விழுந்து அதற்குள்ளேயே இருந்ததால் உயிர் தப்பினார். அந்த மூன்று நாட்களுக்கும் அவர் பக்கத்தில் இருந்த கோழியிட்ட முட்டைகளை நாளுக்கு ஒன்றாக சாப்பிட்டே உயிர் வாழ்ந்தார். இது கர்த்தரின் அற்புதத்தினாலேயே நிகழ்ந்தது.

இதற்குப் பிறகு அரசனான ஒன்பதாம் சார்ள்ஸ் அதிக நாட்கள் உயிர் வாழவில்லை. தனது 24ம் வயதில் அவன் 1574ல் இறந்தான். கடைசி நாட்களில் அவன் தான் செய்த கொடுமையை நினைத்து வருந்தினான். அது அவனுடைய மனநிலையையும் பாதித்தது. கெத்தரின் கடைசிக் காலம் வரை தான் செய்த கொடுமைகளுக்காக வருந்தவில்லை. தன் வாழ்நாளில் அவள் யேசபேலைப் போலவே கொடியவளாக வாழ்ந்தாள். அவள் 1589ம் வருடம் கத்தோலிக்கர்களாலும், சீர்திருத்தவாதிகளாலும் வெறுக்கப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் இறந்தாள். அவள் இறந்தபோது அவளுக்காக ஒருவரும் கண்ணீர்விடவில்லை.

நெவேரியின் ஹென்றி நாலாம் ஹென்றியாக மூன்றாம் ஹென்றிக்குப் பிறகு பிரான்ஸின் அரசனானான். அவன் ஒரு ஹியூகனோவானதால் (சீர்திருத்தவாதி) சீர்திருத்தவாதிகளுக்கு நல்ல காலம் ஆரம்பமாவதுபோல் தோன்றியது. கத்தோலிக்கர்கள் அவனை அரசனாக ஏற்றுக்கொள்ள மறுத்த தால் அவனுக்கும் அவர்களுக்கும் இடையில் போர் தொடங்கியது. ஹென்றி பல வெற்றிகளை அடைந்து பாரிஸ் நகரை சுற்றி வளைத்தான். இறுதியில் ஸ்பெயின் அரசனின் படை நெதர்லாந்தில் இருந்து வந்து அதை விடுவித்தது. ஹென்றி கத்தோலிக்க மதத்தை நாட்டின் மதமாக அங்கீகரிக்க சம்மதித்தான். ஆனால், அவன் தொடர்ந்து சீர்திருத்த கிறிஸ்தவனாகவே இருந்தான். அவனுடைய இந்த முடிவு இருபகுதியினராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இறுதியில் அவன் கத்தோலிக்கர்களுக்கு இடங்கொடுத்து அதை நாட்டின் மதமாக அங்கீகரித்தது மட்டுமல்லாமல் அதுவே மெய்யான சபையென்று அறிவித்து அதன் வழிமுறைகளுக்கும் கட்டுப்பட்டு நடப்பதாக உறுதியளித்தான். இதற்கு பல காரணங்களை ஹென்றி தெரிவித்தபோதும் உண்மையான காரணம் அவன் மெய்யான சீர்திருத்த கிறிஸ்தவனாக இல்லாதிருந்ததுதான். அவன் பல நல்ல தகுதிகளைக் கொண்டிருந்தபோதும¢ தன்னுடைய அரசியல் வெற்றிகளுக்காக சத்தியத்தை விற்பதற்குத் தயாராக இருந்தான். அவன் சத்தியத்திற்காகப் போராடுபவனாக இருக்கவில்லை. “இளவரசர்களில் நம்பிக்கை வைக்காதீர்கள்” என்ற ஹியூகனோக்களின் வார்த்தைகள் சரியாகவே இருந்தன.

ஹென்றியின் இந்த சடுதியான செய்கைகளால் ஹியூனோக்களுக்கு பேராபத்து ஏற்படும் போல் தோன்றியது. ஆனால், நல்ல வேளையாக 1598ல் கொண்டுவரப்பட்ட பிரபலமான நென்டஸ் (The edict of Nantes) சட்டத்தால் புரொட்டஸ்தாந்தியர்களின் (சீர்திருத்த கிறிஸ்தவர்கள்) நலன்கள் பாதுகாக்கப்பட்டன. இதன் காரணமாக பிரான்ஸில் மதசுதந்திரம் நிலவியது. பிரான்ஸில் ஹியூகனோக்கள் குறிப்பிட்ட பகுதிகளில் தங்களுடைய கோட்பாடுகளின்படி ஆராதனை செய்யவும், கல்லூரிகளை நிறுவவும், நூல்களை அச்சடித்து வெளியிடவும் சுதந்திரம் கிடைத்தது. அவர்கள் அரசனுக்கு செலுத்திய காணிக்கை இறுதியில் அவர்களுடைய ஊழியங்களை வளர்ப்ப தற்காக பயன்படுத்தப்பட்டது. நான்காம் ஹென்றி உயிரோடிருக்கும்வரை இந்த சுதந்திரம் பாதுகாக்கப்பட்டது. 1610ல் ஹென்றி அவனுக்குக் கீழ் பணிபுரிந்த Jesuist குழுவைச் சார்ந்த ஒருவனால் கொலை செய்யப்பட்டான்.

கத்தோலிக்க மதத்தின் ஓரு பிரிவான Jesuists இக்னேசியஸ் லொயோலா (Ignatius Loyola) என்ற ஸ்பெயினைச் சேர்ந்தவரால் நிறுவப்பட்டது. புரொட்டஸ்தாந்தியர்களை அதாவது சீர்திருத்தவாதிகளை முற்றாக ஒழிப்பதே அவர்களுடைய கொள்கையாக இருந்தது. அவர்கள் போப்புக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்களாக இருந்தனர். எந்தவித நிபந்தனைகளுமில்லாமல் போப்பின் அதிகாரத்துக்கு மட்டுமே அவர்கள் கட்டுப்பட்டனர். அவர்கள் தங்களை “இயேசுவின் சமுதாயம்” (The Society of Jesus) என்று அறிவித்துக் கொண்டனர். தங்களுடைய பிரிவின் கட்டளைகளைத் தவிர வேறு எதற்கும், தங்களுடைய சொந்த மனச்சாட்சிக்கும்கூட அவர்கள் கட்டுப்படவில்லை. அவர்கள் உயர்குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல கல்வியளிப்பதைத் தங்களுடைய பணியாகக் கொண்டனர். இதனால் அவர்களுடைய செல்வாக்கு சமுதாயத்தில் அதிகமாக இருந்தது. ‘தங்களுடைய இலக்கை அடைவதற்காக எதையும் செய்யலாம்’ என்ற பயங்கரமான கொள்கையை அவர்கள் கடைப்பிடித்தார்கள். அதாவது கத்தோலிக்க மதத்துக்கு நன்மை வரும் என்று கருதினால் அவர்கள் கொலை செய்யவும் தயங்கவில்லை. பிரான்ஸின் அரசனான நான்காம் ஹென்றியைக் கொலை செய்த ரேவிலெக் (Ravaillac) இந்தப் பிரிவின் கையாளாக இருந்தான்.

1598க்குப் பிறகு கத்தோலிக்கர்கள் ஹியூகனோக்களுக்கு சார்பாக இருந்த நென்டஸ் கட்டளையை அகற்றத் தீவிரமாகப் போராடினர். பதினேழாம் நூற்றாண்டு முழுவதும் இதைச் செய்வதையே அவர்கள் கடமையாகக் கருதி உழைத்தனர். இறுதியில் 1629ல் ஹியூகனோக்கள் அப்போது புதிதாக ஏற்படுத்தப்பட்ட ஓர் உடன்படிக்கையின்படி கத்தோலிக்க அரசின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு வாழ உடன்பட்டனர். இதன் மூலம் அவர் களுடைய அரசியல் செல்வாக்கு இல்லாமல் போனது. அரசியல் செல்வாக்கை இழந்தாலும் அவர்கள் தங்களுடைய மத சுதந்திரத்தைக் காப்பாற்றி அரசனுக்கு விசுவாசமுள்ளவர்களாக வாழ்ந்து வந்தனர். ஹியூகனோக்கள் அறிவில் சிறந்தவர்களாக இருந்ததோடு, கடுமையாக விசுவாசத்தோடு உழைப்பவர்கள் என்ற பெயரையும் அக்காலத்தில் பெற்றிருந்தனர்.

பதினேழாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து நிலைமை ஹியூக னோக்களுக்கு எதிராக மாற ஆரம்பித்தது. 1658ல் நென்டஸ் கட்டளை முற் றாக அகற்றப்பட்டது. சகல புரொட்டஸ்தாந்து திருச்சபைகளையும் தகர்த்தெறிய கட்டளையிடப்பட்டது. ஹியூகனோக்களின் குழந்தைகள் அனைவரும் ரோமன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றும்படிச் செய்யும் முயற்சிகள் ஆரம்பித்தன. அப்போது அரசனாக இருந்த பதினான்காம் லூயிஸ் ஹியூக னோக்கள் நாட்டைவிட்டு வெறியேறுவதைத் தடைசெய்யப் பல முயற்சிகளை எடுத்தபோதும் ஆயிரக்கணக்கானோர் நாட்டைவிட்டு வெளியேறித்தப்பினார்கள். வாரத்திற்கு மூவாயிரம் பேராக ஆயிரக்கணக்கானோர் சுவிட்சர்லாந்தைச் சென்றடைந்தனர். இக்காலத்தில் 300,000 ஹியூகனோக்கள் பிரான்ஸில் இருந்து வெளியேறினார்கள். தன்னுடைய முட்டாள் தனத்தினாலும், மதத்தின் பெயராலும் நாட்டை நாசப்படுத்தினான் லூயிஸ்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s