நெதர்லாந்தில் சீர்திருத்தம்
நெதர்லாந்தை (Netherlands) ஒல்லாந்து (Holland) என்ற பெயரிலும் அழைப்பார்கள். ஐரோப்பிய நாடான நெதர்லாந்திற்கு சத்தியம் பரவி திருச்சபை சீர்திருத்தம் எவ்வாறு ஏற்பட்டது என்பதை இனி ஆராய்வோம். ஜெர்மனியில் கர்த்தர் லூதரின் மூலம் ஏற்படுத்திய திருச்சபை சீர்திருத்தம் தொடர்ந்து ஐரோப்பா எங்கும் பரவ ஆரம்பித்திருந்தது. பிரான்சில் அது ஏற்படுத்தியிருந்த தாக்கத்தைக் கடந்த இதழில் கவனித்தோம். நெதர்லாந்து கடலுயரத்தைவிட தாழ்ந்திருந்த நாடு. மூன்று மில்லியன் மக்களைக் கொண்டிருந்த அந்நாடு கடல் நீர் உள்ளே வருவதைத் தடுப்பதற்காக பெரும் சிரமத்துடன் கடற்கரைப் பகுதிகளில் தடுப்புச் சுவரெழுப்பி கடற்பரப்பை நன்நிலமாக்கி தங்களுடைய தேவைகளுக்காக பயன்படுத்தினர். நிச்சயமாக அவர்களுக்கு நிலத்தின் அருமை தெரிந்திருந்தது. தங்கள் நாட்டிற்கு சமுத்திரத்தால் உண்டாகக்கூடிய ஆபத்தும் தெரிந்திருந்தது. இத்தகைய சந்தர்ப்பத்தில் வாழ்கிறவர்களுக்கு கடவுளின் அருமை தெரியும். படைத்தவர் தங்களைக் காப்பாற்றாவிட்டால் கூண்டோடு அழிந்துவிடுவோம் என்பதை இந்த மக்கள் ஓரளவு உணர்ந்திருந்தார்கள். சமுத்திரத்திடம் போராடி நிலத்தைப் பெற்று அதைப் பாதுகாத்து வாழ்ந்து வருவதால் இவர்களிடம் நாட்டுப்பற்றும் அதிகமாயிருந்தது. உழைப்பின் அருமையையும் இந்த மக்கள் உணர்ந்தவர்களாயிருந்தார்கள். இக்காலப்பகுதியில் ரோமன் கத்தோலிக்க மதம் இங்கே தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது. மறுமலர்ச்சியின் தாக்கமும் நாட்டு மக்களை அதிகம் சிந்திக்க வைத்தது. மறுமலர்ச்சிக் காலத்தின் தலைசிறந்த அறிஞராக இருந்த இராஸ்மஸ் நெதர்லாந்தின் ரொட்டர்டேமைச் (Rotterdam) சேர்ந்தவராக இருந்தார்.
திருச்சபை சீர்திருத்தம் உருவாகியிருந்த ஏனைய ஐரோப்பிய நாடுகளைப் போலவே நெதர்லாந்திலும் சீர்திருத்தத்திற்கு பாதை வகுத்தவர்களைக் கர்த்தர் எழுப்பியிருந்தார். அவர்களில் ஒருவர் ஜெராட் குரூட் (Gerard Groote 1340-84). ஜோன் விக்கிளிப் இவருடைய காலத்திலேயே வாழ்ந் திருந்தார். இவர் சார்ந்திருந்த பிரிவு The Brethren of the Common Life என்று அழைக்கப்பட்டது. இது ரோமன் கத்தோலிக்க மதத்தின் ஒரு பிரிவாக இருந்தபோதும் அதில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தது. அத்தகைய மாற்றங்களை அதிரடியாகக் கொண்டுவரும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபடாமல் இருந்ததால் கத்தோலிக்க மதம் அவர்களைப் பொறுத்துக் கொண்டது. பிற்காலத்தில் நெதர்லாந்தில் திருச்சபை சீர்திருத்தம் உருவாக கர்த்தர் ஏற்கனவே அதற்குத் தகுதியான சூழ்நிலையை இவர்கள் மூலம் உருவாக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது பேரரசனாக இருந்த ஐந்தாம் சார்ள்ஸின் பிடியிலிருந்து தூர தேசங்களில் ஒன்றாக நெதர்லாந்து இருந்தது. நெதர்லாந்து நாட்டின் விவசாயம், மீன்பிடி, வர்த்தகம் ஆகியவற்றின் மூலம் அவனுடைய வருமானம் அதிகரித்தது. நெதர்லாந்தில் அவன் வசிக்காவிட்டாலும் ஜேர்மனி நாட்டைவிட இங்கேயே அவனுடைய செல்வாக்கு அதிகமாக இருந்தது. புரொட்டஸ்தாந்து திருச்சபை சீர்திருத்தம் ஐரோப்பாவில் பரவ ஆரம்பித்து நெதர்லாந்தில் தலைகாட்டியபோது அது ஜெர்மனி நாட்டினூடாக அங்கு வந்து சேர்ந்தது. ஆரம்பத்தில் மாட்டின் லூதரின் போதனைகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அதற்குப்பிறகு ஜோன் கல்வினின் போதனைகளில் மக்கள் அதிக நாட்டம் காட்டினர். உண்மை யில் லூதரின் போதனைகளைவிட கல்வினின் போதனைகளை அதிக சிரத்தையோடு மக்கள் வரவேற்றனர். சுதந்திரத்தை நாடி நின்ற நெதர்லாந்து மக்களின் அறிவு, குணாதிசயம், எண்ணப்போக்கு ஆகியவற்றோடு கல்வினின் போதனைகள் இணைந்து போவதாக இருந்தன.
நெதர்லாந்து மக்கள் புரொட்டஸ்தாந்து சத்தியங்களில் ஆர்வம் காட்டியது ஐந்தாம் சார்ள்ஸுக்கு பெரும் கோபத்தையூட்டியது. ஜெர்மனியில் புரொட்டஸ்தாந்து சீர்திருத்தவாதிகளையும், இளவரசர்களையும் அடக்கமுடியாமல்போன ஆத்திரத்தால் நெதர்லாந்தில் அதை எப்படியாவது ஒடுக்கிவிட வேண்டும் என்று கங்கனம் கட்டினான் பேரரசன். இதற்காக நாட்டில் கத்தோலிக்க மதப்போதனைகளுக்கும் நடைமுறைகளுக்கும் எதிராக நடப்பவர்களைத் தண்டிப்பதற்காக ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. இதை Spanish inquisition என்று அழைப்பார்கள். சீர்திருத்தத்ப் போராட்டத்தையும், சீர்திருத்தவாதிகளையும் ஒடுக்குவதற்காக போப்பும், ரோமன் கத்தோலிக்க மதமும் கொண்டுவந்த சட்டமே இது. இதன் அடிப்படையில் சிறைப்பிடிக்கப்பட்ட சீர்திருத்தவாதிகள் தங்களுடைய விசுவாசத்தைப் பற்றிய விளக்கம் கொடுக்கும்படி கத்தோலிக்க மதத்தால் சித்திரவதை செய்யப்பட்டனர். கத்தோலிக்க மதப் போதனைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் போப்பாலும், கத்தோலிக்க மதத்தாலும் கொடுமைப்படுத்தப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர். கழு மரத்தில் கட்டப்பட்டு உயிரோடு பலர் எரிந்து சாம்பலானார்கள். ஏனையோர் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். மிஞ்சியோர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். சீர்திருத்தவாதிகளுக்கும், அவர்களைப் பின்பற்றிய வர்களுக்கும் எதிரான இந்தக் கொடுமை 1523 அளவில் ஆரம்பமாகி ஐந்தாம் சார்ள்ஸ் பதவி இழந்த 1555ம் ஆண்டுவரை தொடர்ந்தது. கத்தோலிக்க மதத்திற்கெதிராக கர்த்தரின் வேதத்தை வாசித்து கிறிஸ்துவை விசுவாசித்ததற்காகவே இவர்கள் இந்தவகையில் தண்டிக்கப்பட்டு தங்களுடைய உயிரை இழக்க நேரிட்டது. வாளாலும், தீயாலும் திருச்சபை சீர்திருத்தத்தை ஐந்தாம் சார்ள்ஸ் அழித்து ஒழிக்க முற்பட்டபோதும் அவன் பதவி துறந்த ஆண்டில் சீர்திருத்தம் நெதர்லாந்தில் ஆழமாக வேர் பதிந்து நாடெங்கும் பரவி வியாபித்திருந்தது. வேதபூர்வமான திருச்சபை சீர்திருத்தத்தை அடக்குமுறையைக் கையாண்டு ஒடுக்க முயன்ற கத்தோலிக்க மதத்தாலும் பேரரசனாலும் அசைக்க முடியவில்லை.
நெதர்லாந்தில் சத்தியத்திற்காக இவ்வாறு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததை மார்டின் லூதர் ஜெர்மனியில் கேள்விப்பட்டபோது நெதர்லாந்தில் இருந்த கிறிஸ்தவ விசுவாசிகளான பிராபேன்ட் (Braband), பிளேன்டர்ஸ் (Flanders) ஆகிய இரு சகோதர்களுக்கும் உற்சாகமூட்டி லூதர் கடிதமனுப்பினார். அதில், “நீங்கள் கர்த்தருடைய வேதபோதனைகளை அறிந்து விசுவாசிக்கும் பெரும் ஆசீர்வாதத்தை அடைந்திருப்பது மட்டுமன்றி, உங்களில் சிலர் கிறிஸ்துவுக்காக உங்களுடைய உயிரையே இழக்கின்ற பெரும் பாக்கியத்தையும் அடைந்திருக்கிறீர்கள். கிறிஸ்துவின் பார்வையில் உங்களுடைய இரத்தம் ஆசீர்வதிக்கப்பட்டதாக இருக்கின்றது” என்று லூதர் எழுதியிருந்தார்.
ஐந்தாம் சார்ள்ஸ் ஆண்ட காலத்தில் இவ்வாறாக ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கத்தோலிக்க மத விரோதிகளாகக் கணிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். ஆனால், இவ்வாறாக உயிர்ப்பழி கொடுக்கும் விசுவாசிகளின் இரத்தமே திருச்சபை வளர்ச்சிக்கு வித்தாக அமைந்து விடுகிறது என்பதை பேரரசன் உணராமல் போனான். எந்தளவுக்கு ஆக்ரோஷத்தோடு அவன் கிறிஸ்தவர்களைத் தொலைக்க முயன்றானோ அந்தளவுக்கு வைராக்கியத்தோடு விசுவாசிகளின் தொகை நெதர்லாந்தில் பெருகத் தொடங்கியது. தனக்கு 55 வயதாக இருந்தபோது மனம் தளர்ந்து தனது பதவியைத் துறந்தான் பேரரசன். தன் வாழ்நாளின் கடைசிக் காலத்தை அவன் ஸ்பெயினில் ஒரு மடத்தில் கழிக்க ஆசைப்பட்டான். 1558ல் அவன் இறக்கும்வரை ஒரு மடத்தில் தனிமையில் ஒதுங்கி வாழ்ந்து மரித்தான். ஐந்தாம் சார்ள்ஸ் கடிகாரங்கள் சேகரிப்பதையும், கடிகாரங்கள் செய்வதையும் தன் வாழ்க்கையில் பொழுதுபோக்காகக் கொண்டிருந்தான். ஒரு முறை அவன் தன்னுடைய கடிகாரங்களில் சிலவற்றை ஒரே நேரத்தில் ஒடி மணியடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு முடியாமல் போனபோது பின்வருமாறு சொன்னதாக செய்தியுண்டு: “இரண்டு கடிகாரங்களை ஒரே நேரத்தில் மணியடிக்க வைக்க என்னால் முடியாமல் இருக்கும்போது நாட்டின் அனைத்து மனிதர்களையும் சமய சம்பந்தமான காரியங்களில் ஒரே விஷயத்தை விசுவாசித்து பின்பற்ற வைப்பதில் நான் எத்தனை முட்டாள்தனமாக நடந்துகொண்டிருக்கிறேன்” என்றானாம் பேரரசன். அத்தோடு வேர்ம்ஸ் கவுன்சில் (Diet of Worms) கூடி முடிந்தவுடனேயே மார்டின் லூதரைக் கொல்லாமல் விட்டதுதான் தன் வாழ் நாளில் தான் விட்ட பெருந்தவறு என்றும் அவன் சொல்லியிருக்கிறான்.
ஐந்தாம் சார்ள்ஸுக்குப் பிறகு அவனுடைய மகன் ஸ்பெயினின் இரண்டாம் பிலிப்பு பதவிக்கு வந்ததான். இவனே இங்கிலாந்தின் அரசி மேரியின் கணவன். இவன் மொத்தமாக நான்கு முறை திருமணம் செய்திருந்தான். இவனே 1588ல் ஒரு பெரும் கடற்படையை (Spanish Armada) இங்கிலாந்தைத் தாக்க அனுப்பியவன். தன்னுடைய வாழ்நாளின் கடைசி நாற்பது வருடங்களில் இவன் ஸ்பெயினைவிட்டு வெளியில் போகவில்லை. தன் நேரமனைத்தையும் கட்டுரைகளையும், அறிக்கைகளையும் எழுதுவதிலேயே இவன் செலவிட்டான். சிறு காகிதத் துண்டின் மூலம் தென், வட பகுதிகளைத் தான் ஆண்டதாக இவன் பெருமையோடு கூறிக்கொள்வான்.
பிலிப்பின் தந்தை சவுக்கால் நெதர்லாந்து மக்களைத் தண்டித்தான் என்றால் அவன் மகன் அவர்களை தேள்களினால் தண்டித்தான் என்று கூறலாம். அந்தளவுக்கு தகப்பனைவிட கொடுமைக்காரனாக மகன் இருந் தான். மத விரோதிகளைத் தன்னால் ஆள முடியாது என்று தீர்மானித்த பிலிப்பு அவர்களைத் தொலைக்க தந்தையைவிட அதிக ஈடுபாடு காட்டி னான். ஆரம்பத்தில் கிறிஸ்தவர்களுக்கெதிரான துன்பம் குறைந்திருந்தது. பிலிப்பு தன்னுடைய சகோதரியான பார்மாவின் மார்கிரெட்டை (Margaret of Parma) நெதர்லாந்தை ஆள நியமித்திருந்தான். நாட்டில் பிரிவினை போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு பிலிப்பின் கவனம் அதன் மேல் திரும்பாதவரை தான் மக்களுக்கெதிரான சித்திரவதைகளைச் செய்யப் போவதில்லை என்று அவள் வாக்குக் கொடுத்திருந்தாள்.
இக்காலப்பகுதியில் நெதர்லாந்தில் வாழ்ந்த ஒரு மனிதர்தான் கை டீ பிரே (Guy De Bray). இவரே நெதர்லாந்தில் சீர்திருத்த சபைகள் பயன்படுத்தி வந்த 37 அம்சங்களைக் கொண்ட விசுவாச அறிக்கையை (37 Articles of Netherlands Confession of Faith) எழுதியவர். இதை பெல்ஜிக் விசுவாச அறிக்கை (Belgic Confession of Faith) என்றும் அழைப்பார்கள். கை டீ பிரே மிகவும் சிறந்த படிப்பாளி ஆனால் சிறந்த பிரசங்கியாக இருக்கவில்லை. அத்தோடு பெரிய இறையியல் வல்லுனரும் அல்ல. அவர் ஓவியராக இருந்தார். அவரெழுதிய விசுவாச அறிக்கை நெதர்லாந்து சபைகளுக்கு அவசியமான வேத இறையியலை வழங்குவதில் பெரிதும் பயன்பட்டது. தன்னுடைய கடைசி காலத்தில் இவர் பிரான்சில் அகதியாக வாழ நேரிட்டது. ஆனால், பிரான்சிலும் நெதர்லாந்தைப் போலவே கிறிஸ்தவர்களுக்கு ஆபத்து இருந்தது. கை டீ பிரே பிரான்சில் சிறையில் அடைக்கப்பட்டு 1567ல் கிறிஸ்துவுக்காக மரண தண்டனையை அநுபவித்தார்.
நெதர்லாந்தில் இரண்டாம் பிலிப்பின் கொடுமைகளுக்கெதிராக போராட ஆரம்பித்தவர் ஓரெஞ்சின் வில்லியம் (William the Orange) என்ற பெயரைக் கொண்டவர். இவரை (William the Silent) என்றும் அழைப்பார் கள். ஜெர்மனியில் பிறந்த வில்லியம் பிரான்சின் தென்பகுதியில் தன்னுடைய குடும்பத்துக்கு சொந்தமான சொத்துகளை அடைந்திருந்தார். ரோமன் கத்தோலிக்கனாக வளர்ந்தால் மட்டுமே இந்த சொத்துக்களை அடைய முடியும் என்ற விதி இருந்ததால் அந்த முறையில் வளர்க்கப்பட்டு இந்த சொத்துக்களுக்கு அதிபதியானார். ஐந்தாம் சார்ள்ஸுக்கு கீழ் பின்னால் பணியாற்றினார் வில்லியம். சமுதாயத்தில் எல்லாப் பகுதி யினருக்கும் வில்லியத்தைப் பிடித்திருந்தது. கனிவும், எல்லோருடனும் நன்றாகப் பழகக்கூடிய தன்மையையும் அவர் கொண்டிருந்தார். இவர் “அமைதியான வில்லியம்” என்ற பெயரில் அழைக்கப்பட்டபோதும் தெளிவாகப் பேசி தன்னுடைய நம்பிக்கைகளை நன்றாக விளக்கக்கூடியவராக வில்லியம் இருந்தார். நிலைமைக்குத்தக்கபடி பேசக்கூடாத இடத்தில் ஞானத்தோடு அமைதியாக இருப்பதில் வில்லியம் பெயர் பெற்றிருந்ததால் அவர் “அமைதியான வில்லியம்” என்ற பெயரையும் பெற்றிருந்தார்.
இரண்டாம் பிலிப்பு நெதர்லாந்தில் தான் மத விரோதிகளாகக் கருதிய கிறிஸ்தவர்களுக்கெதிரான துன்பங்களை ஆரம்பிக்கும்படி 1566ல் தன்னுடைய சகோதரிக்கு கட்டளையிட்டான். இதன்படி அவனுடைய ஆட்சிக்குட்பட்ட மக்களனைவரும் டிரென்ட் கவுன்சில் (Council of Trent, 1546-63) கட்டளைகளை ஏற்றுநடக்கும்படி கட்டளையிருந்தது. இக்கட்டளைகள் ரோமன் கத்தோலிக்க மதப்போதனைகளையும் நடைமுறைகளையும் மக்களனைவரும் கடைப்பிடிக்கும்விதத்தில் எழுதப்பட்டிருந்தது. இக்கட்டளைகளுக்கெதிராக நடக்க மறுத்தவர்களெல்லாம் சித்திரவதைத் துன்பங்களுக்கு உட்படுத்தப்பட்டனர். இக்கட்டளைகளுக்கு எதிராக நடந்தவர்களைத் துன்புறுத்தத் தயங்கிய அதிகாரிகள் விலக்கப்பட்டு அவர்களுடைய இடத்தில் ஆர்வத்தோடு கொடுமைகளைச் செய்யக்கூடியவர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்தக் காலப்பகுதியில் வில்லியம் லூத்தருடைய போதனைகளில் ஆர்வம் காட்டி அவற்றை விசுவாசித்து லூத்தரன் பிரிவைச் சார்ந்தவராக (Lutheren) மாறியிருந்தார். அதற்கு ஆறு வருடங்கள் கழித்து அவர் கல்வினித்துவவாதியாக (Calvinist) மாறினார். அவர் லூத்தரனாக இருந்த காலத்திலேயே நெதர்லாந்தின் கவர்னராக இருந்து ஆண்டு வந்த அல்வா (Duke of Alva) என்பவருக்கெதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அல்வா வலிமையான கத்தோலிக்கப் படைக்குத் தலைவனாக இருந்தான். நெதர்லாந்தில் பலரைக் கொடுமைப்படுத்திக் கொன்று பிலிப்பை சந்தோ ஷப்படுத்துவதில் குறியாக இருந்த அல்வா, “இரும்புபோன்ற மனிதர்களை நெகிழ வைத்த எனக்கு வெண்ணெய்யைப் போன்றவர்களை நெகிழ வைப்பது எம்மாத்திரம்” என்று தம்பட்டம் அடித்துக்கொண்டான். ஆயிரக் கணக்கானவர்களுடைய சொத்துக்களை இவன் பறிமுதல் செய்தான். ஆயிரக்கணக்கானவர்களை இரக்கமில்லாமல் கொலை செய்தான். ஆயிரக்கணக்கானவர்கள் ஜெர்மனிக்கும், இங்கிலாந்துக்கும், பிற நாடுகளுக்கும் தப்பி அகதிகளாகப் போனார்கள்.
ஸ்பெயினைக் கடலில் கட்டுப்படுத்தத் தீர்மானித்த பல நெதர்லாந்தியர்கள் “கடல் பிச்சைக்காரர்கள்” என்ற பெயரில் ஒரு கடற்படையை அமைத்துப் போராடினர். அவர்கள் ரொட்டர்டாமுக்கு அருகில் இருந்த ஓரிடத்தைப் பிடித்து அதை எல்லா எதிர்ப்புக்கு மத்தியிலும் தங்கள் கையில் வைத்திருந்தனர். கடலுக்கு அருகில் இருந்த வேறுபல பிரதேசங்களும் ஸ்பெயின் நிர்வாகத்துக்கு எதிராகப் போராட ஆரம்பித்தன. பல இடங்களில் கடல் தடுப்புகளைத் திறந்து கடல்நீர் உள்ளே வரும்படி செய்து ஸ்பெயினின் படைகளைத் திக்குமுக்காடச் செய்தனர் நெதர்லாந்தில் இருந்த ஸ்பெயினின் எதிர்ப்புவாதிகள். அல்வாவின் மகன் ஓரிடத்தில் 12,000 பேர் கொண்ட படையைக் கொண்டு 4,000 பேர்களைத் தாக்க வேண்டியிருந்தது. பல இடங்களில் ஸ்பெயினின் படை திகிலடைந்து பின்வாங்க நேர்ந்தது. அல்வாவின் கொடுமைகளை வரலாற்றறிஞர்கள் விளக்கியிருக்கின்றனர். அவை நம்பமுடியாதளவுக்கு கொடியவைகளாக இருந்ததை அவர்கள் ஒத்துக்கொண்டிருக்கின்றனர். இரண்டாம் பிலிப்பின் ஒத்துழைப்போடுதான் அல்வா எல்லாக் கொடுமைகளையும் செய்திருக் கிறான். இந்த விஷயத்தில் இருவரும் இணைந்து செயல்பட்டார்கள். ஸ்பெயினின் படைகள் நிலத்தில் வலிமை வாய்ந்தவையாக இருந்தன. அப்படைப் போராளிகள் நல்ல பயிற்சிபெற்றவர்களாக இருந்தனர். ஆனால், கடலில் அவர்களால் “கடல் பிச்சைக்காரர்களைத்” தாக்குப்பிடிக்க முடியவில்லை.
இரண்டாம் பிலிப்பு 1580ல், வில்லியத்தை உயிரோடு பிடித்தோ அல்லது கொன்று அவருடைய சரீரத்தைக் கொண்டு வருபவர்களுக்கு 25,000 தங்கக் காசுகளை அளிப்பதாக அறிவித்தான். அடுத்த நான்கு வருடங்களுக்கு எவராலும் வில்லியத்தைப் பிடிக்க முடியவில்லை. 1584ல் வில்லியத்தின் எதிரிகள் அவரைக் கொலை செய்தனர். நெதர்லாந்து குடியரசை அமைத் தவர் என்று வில்லியம் அந்நாட்டவரால் போற்றப்பட்டார். அவர் இறந்த போது சிறுவர்கள் தெருவில் கதறி அழுததாக வரலாற்றறிஞர்கள் எழுதியிருக்கிறார்கள்.
இறுதியில் ஸ்பெயினிடமும், போப்பிடமும் இருந்து நெதர்லாந்து விடுதலை அடைந்தது. 1609ல் பன்னிரெண்டு வருடங்களுக்கான போர் நிறுத்த ஒப்பந்தம் இருநாடுகளுக்கிடையிலும் நிறைவேறியது. 1648ல் முழு சுதந்திரம் கிடைத்தது. 17ம் நூற்றாண்டில் மிக முக்கியமான வேத சம்பந்தமான நிகழ்ச்சிகள் நெதர்லாந்தில் ஏற்பட்டன. இது வேதம் போதிக்கும் இரட்சிப்பு பற்றிய போதனையோடு தொடர்புடையதாக இருந்தது. லெயிடன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த ஜெக்கோபஸ் ஆர்மீனியஸ் என்பவர் கல்வினின் போதனைகளில் சிலவற்றை மறுதலித்து மனிதனின் இரட்சிப்புக்கு கிறிஸ்துவின் மூலம் கர்த்தர் வழிவகுத்துத் தந்திருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளலாமா, கூடாதா என்கிற பொறுப்பை அவர் மனிதனின் கரத்திலேயே விட்டிருக்கிறார் என்று போதித்தார். ஆர்மீனியஸின் இந்தப் போதனை கிறிஸ்து பாவிகளுக்காக ஒரு பிரயோ சனமும் இல்லாமல் மரித்திருக்கிறார் என்ற சித்தாந்தத்திற்கு வழிவகுத்தது. இதற்கு மாறாக அதே பல்கலைக்கழகத்தில் போதித்த ஆர்மீனியஸின் சக போராசிரியரான கோமர் தெரிந்துகொள்ளுதலாகிய போதனையின் அடிப் படையில் எந்த மனிதனுடைய இரட்சிப்பும் கர்த்தருடைய அளவற்ற கிருபையாலும் அவருடைய சர்வவல்லமையினாலும் மட்டுமே நிகழ்கின்றது என்று போதித்தார். ஆர்மீனியஸ் 1609ல் இறந்தார். அவரைப் பின்பற்றிய வர்கள் அவருடைய போதனைகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் 1619ல் கல்வினித்துவ நெதர்லாந்து திருச்சபைகள் இதற்கு ஒரு முடிவுகான டோர்ட் சினட்டைக் (Synod of Dort) கூட்டின. நெதர்லாந்து, இங்கிலாந்து, ஜெர்மனி, சுவிர்ட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த இறையியலறிஞர்கள் இதில் அங்கம் வகித்தனர். இவர்கள் ஆர்மீனியஸின் போதனைகள் வேதத்துக்குப் புறம்பானவைகள் என்று தீர்ப்பளித்து கல்வினித்துவ போதனைகளைத் தரும் பெல்ஜிக் விசுவாச அறிக்கை மற்றும் ஹெயிட்டில்பேர்க் வினாவிடைப் போதனைகளையும், சீர்திருத்த திருச்சபைப் போதனைகளையும் உறுதிப்படுத்தினர். அதேவேளை ஆர்மீனியஸின் போதனைகளைப் பின்பற்றிய 300 பேர் பதவியிறக்கப்பட்டு நாட்டைவிட்டு வெளியேற்றப்பட் டனர். இன்றுவரை டோர்ட் சினட்டின் தீர்ப்புக்கு எல்லா நாடுகளிலும் இருக்கின்ற கல்வினித்துவ சபைகள் பெருமதிப்பளித்து வருகின்றன.