நமக்கெப்போது விமோசனம்?

தமிழினத்தில் இன்றைக்கு கிறிஸ்தவ ஊழியமும், திருச்சபை ஊழியமும், தரமற்றுக் காணப்படுவதற்கு தகுதியற்றவர்கள் ஊழியத்துக் குள் நுழைவதே பெருங்காரணம். எங்கு பார்த்தாலும் ஊழியம் செய்பவர்கள் நிறைந்து வழிந்தாலும் இருக்க வேண்டிய வேதத் தகுதிகள் இல்லாதவர்கள்தான் நம்மத்தியில் அதிகம். ஊழியத்துக்கு வருபவர்களை ஆராய்ந்து பார்த்து அங்கீகரிக்க கர்த்தர் ஏற்படுத்திய திருச்சபை தமிழினத்தில் வேத அடிப்படையில் இன்றும் ஒரு சிலவே காணப்படுகின்றன. ஸ்தாபனங்களும், தனிநபர் ஊழியங்களும், குடும்ப ஊழியங்களுந்தான் பல்கிப் பெருகி இருக்கின்றன. இந்த நிலையால் கிறிஸ்தவம் நம் நாட்டில் வேத அடிப்படையில் அமைந்து தலைதூக்கி நிற்க முடியாமல் மதிப்பிழந்து காணப்படுகின்றது. இது தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளிலும் நாம் காண்கின்ற நிலை.

கவலைக்குரிய இந்த நிலைமையால் சுவிசேஷம் வல்லமையோடு பிரசங்கிப்பட முடியாத நிலை உருவாகியிருக்கிறது. சுவிசேஷம் வல்லமையோடு பிரசங்கிக்கப்படாவிட்டால் ஆத்துமாக்கள் இரட்சிப்படைய வழி இல்லை. போலித்தனமான செயல்களால் ஆத்துமாக்களுக்கு இரட்சிப்பு வழங்கும் மனுஷத்தனமான செயல்களைத்தான் இன்று அன்றாடம் பார்க்க முடிகிறது. அதுமட்டுமல்லாமல் சத்தியத்தை சத்தியமாகப் பிரசங்கிக்கும் தகுதியுள்ளவர்களை விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய நிலையும் உள்ளது. இதனால் வேதவசனப்பஞ்சம் ஏற்பட்டு சத்தியத்தைக் கேட்க முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். இதெல்லாம் ஆத்துமாக்களில் ஆத்தும ஈடேற்றத்துக்கு வழியில்லாத நிலைமையை ஏற்படுத்தி வைத்திருக்கின்றன. என்னுடைய ஊழியப் பயணங்களில் எங்கு போனாலும் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாது, இந்தியர்கள், கீழைத்தேய நாட்டவர்கள் மத்தியில் இன்றைக்குக் காணப்படும் நிலை இதுதான். கத்தோலிக்கத்துக்கும், கிறிஸ்தவத்துக்கும் இருக்கும் வேறுபாடுகூடத் தெரியாத நிலையிலும், திருச்சபை சீர்திருத்த வரலாறு பற்றி ஒன்றும் தெரியாத நிலையிலும் பல நூற்றாண்டுகள் பின்தங்கிய நிலையில் கீழைத்தேய கிறிஸ்தவத்தின் நிலைமை இன்று இருக்கின்றது.

கீழைத்தேய கிறிஸ்தவத்தைப் பிடித்திருக்கும் நோய் என்ன என்பதைக் கண்டுபிடித்துவிட்டால் மட்டும் நோய் தீர்ந்துவிடாது. இந்த நோய் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. கர்த்தரின் அளப்பரிய கிருபையே இன்றைக்கும் பல்வேறு குளருபடிகளுக்கு மத்தியிலும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களைத் தொடர்ந்து காத்துப் பராமரித்து வருகிறது. இந்த நோய் தீர என்ன வழி என்று சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம். நோயை அகற்ற மெய்விசுவாசிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். கர்த்தரின் ஆலயத்து வாசல்கள் கட்டப்படாமல் இருப்பதால் அவருடைய மகிமைக்கு களங்கம் ஏற்பட்டிருக்கிறதென்று வருந்தி உணவோ, தூக்கமோ இல்லாமல் ஜெபித்து செய்ய வேண்டியதை நெகேமியா செய்யவில்லையா? “இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சாதாரண விசுவாசியான நான் அந்நிய நாட்டில் சிறை இருந்துகொண்டு என்ன செய்துவிடமுடியும்” என்று அவன் சும்மா இருந்துவிடவில்லை. நெகேமியா கட்டப்படாமலிருந்த அந்த ஆலய வாசல்களைக் கட்டி முடித்தான். அவன் விசுவாசி, செயல்வீரன். அவனைப்பற்றி வாசித்து மகிழுவதற்காக அவன் வரலாறு நமக்கு வேதத்தில் தரப்படவில்லை. அவனைப்போல வாழ நாமும் முயலவேண்டு மென்பதற்காகத் தான் அதைக் கர்த்தர் நமக்கு எழுத்தில் தந்திருக்கிறார். இதையேதான் தானியேல் தன் காலத்தில் செய்தான். தீர்க்கதரிசிகளும் தங்கள் காலத்தில் அதைத்தான் செய்தார்கள்.

நோய் இருக்கிறது என்பதும், அது என்ன நோய் என்பதும் நமக்குத் தெரியும். அதைத் தீர்த்துக்கொள்ள நாம் ஏதாவது செய்கிறோமா? முயற்சி தான் எடுத்திருக்கிறோமா? இந்தப் பத்திரிகையைப் பல வருடங்கள் வாசித்திருக்கிற சில ஊழியக்காரர்கள்கூட “இதெல்லாம் நமக்கெதற்கு, பேசாமல் வாங்குகிற காணிக்கைக்கு எதையாவது செய்துவிட்டு போய்க்கொண்டே இருப்போம்” என்றிருந்துவிடுகிறவர்களாக இருக்கிறார்கள். சத்தியம் பெரிது என்று ஆரம்பத்தில் சவால்விட்டு, உயிரையே அதற்காகக் கொடுப்போம் என்று பேசிய சிலரைக் கூட நான் பார்த்திருக்கிறேன். நோயைத் தீர்க்க முயற்சி எடுக்கும்போது தனக்கும் கைவலிக்கும் என்று உணர்ந்தவுடன் அவர்கள் இன்றைக்கு என் கண்ணில்கூடப்படுவதில்லை. நாக்கு நுனியோடு அவர்களுடைய சத்திய வாஞ்சை நின்றுபோய்விட்டது கவலை தரும் விஷயம்தான். சத்தியம் மட்டும் வேண்டும் என்று ஆரம்பத்தில் பக்கத்தில் நின்ற சில போதகர்கள், அந்தச் சத்தியம் அவர்கள் தண்ணீர்விட்டு வளர்த்துவிட்டிருக்கிற பாரம்பரியப் பேய், பண்பாட்டுப் பிசாசையெல்லாம் தொலைத்துவிடப் போகிறது என்று அறிந்தவுடன் கட்சி மாறிப் புதுப்பல் லவி பாட ஆரம்பித்துவிட்டார்கள். நோய் இருக்கிறது என்று தெரிந்தும் அதைத் தீர்க்கப் புறப்பட்டால் தங்களை ஆத்மீக அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டுமே என்ற பயத்தில், சுய நலத்தால் இயேசுவைக் காட்டிக் கொடுக்கப் பலரும் இன்று தயாராக இருக்கிறார்கள். இதனால் நோயும் தொடர்கிறது, வளர்கிறது. இதற்கு மருந்து என்ன? நாம் செய்ய வேண்டியது என்ன?

(1) போதகர்களுக்கு ஒரு வார்த்தை

திருச்சபை ஊழியத்தில் ஈடுபட்டு போதகர்களாக இருக்கிறவர்கள் அதைச் செய்வதற்கான தகுதி தங்களிடம் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். எப்படியாவது அதற்குள் நாம் நுழைந்திருக்கலாம். இருந்தாலும் அதைத் தொடர்ந்து செய்து கர்த்தரின் ஆசீர்வாதத்தை அடையவேண்டுமானால் போதகர்கள் தங்களை ஆராய்ந்து பார்ப்பது அவசியம். இதற்கு அதிகமான மனத்தாழ்மை அவசியம். ஒரு தொழிலாக மட்டும் கருதி ஊழியத்தை செய்து வருகிறவர்களுக்கு நான் சொல்லுவது ஒன்றும் புரியப்போவதில்லை. மனத்தாழ்மையுள்ளவர்கள் எப்படியோ இதைச் செய்ய வந்துவிட்டோம், இனியாவது திருந்திவிடுவோம் என்ற தீர்மானத்தை எடுத்து தங்களுடைய தகுதிகளை 1 தீமோத்தேயு 3, தீத்து பகுதிகள் அடிப்படையில் ஆராய்ந்து பார்ப்பது அவசியம். அவிசுவாசி களான மனைவிகளைக் கொண்டிருப்பவர்கள உடனடியாக ஊழியத்தை விட்டுவிடுவது நல்லது. மனைவி இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள தேவையானவற்றை செய்வது ஊழியத்தைவிட முக்கியமானது. சீ. எஸ். ஐ, மெத்தடிஸ்டு போன்ற பாரம்பரிய சபைகளில் இருந்து உங்கள் மனைவிகள் வந்திருக்கலாம். அதற்காக அவர்கள் விசுவாசிகள் என்று கூறிவிட முடியாது. இரட்சிப்புக்குரிய அநுபவம் இல்லாதவர்களை விசுவாசிகளாகக் கருத முடியாது. வேதமே வாசிக்காத, ஜெபிக்காத, ஆத்தும வளர்ச்சியைக் காண முடியாத மனைவிகளைக் கொண்டிருக்கும் போதகர்களின் ஊழியம் வளராது; வாழாது.

அடுத்ததாக, உங்கள் சொந்த ஆத்மீகத் தகுதிகளை ஆராய்ந்து பாருங்கள். ஆத்துமவிருத்தியில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது மிக முக்கியம். அதன் வளர்ச்சிக்கு நீங்கள் தேவையானதைச் செய்ய வேண்டும். உங்கள் பிள்ளைகள் உங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்கிறார்களா? அவர்களுக்கு உங்களுடைய விசுவாசத்தின் அருமை தெரிகிறதா? அவர்களுடைய இரட்சிப்புக்காக ஜெபிக்கிறீர்களா? உங்களுக்கு வேத வசனத்தைப் பிரித்துப் போதிக்கும் தகுதி இருக்கிறதா? வேத வசனப் பிரசங்கமே ஆத்துமாக்களின் ஆத்துமவிருத்திக்கு உதவ முடியும். வேதத்தில் இருந்து தெளிவான பிரசங்கத்தைக் கொடுக்க முடியாதவர்கள் இந்த ஊழியத்தைச் செய்ய முடியாது. வசனத்தைப் படித்துப் பிரசங்கிக்கும் திறமையைப் பெற்றுக்கொள்ள தேவையானதைச் செய்யுங்கள். அதில் அக்கறைகாட்டாத மனிதன் கர்த்தரின் ஊழியனாக இருக்க முடியாது. வெறும் ஜெபக்கூட்டங்களை நடத்தியும், வீடு வீடாகப் போயும் ஆத்துமாக்களை வளர்க்க முடியாது. ஓய்வு நாளில் நல்ல பிரசங்கங்களை அளித்து, வேதப்பாடங்களைத் தயாரித்து நல்ல முறையில் விளக்கியுமே ஆத்துமாக்களை வசனத்தில் வளர்க்க முடியும். அந்தப் பணியில் கருத்தாக இருக்கிறீர்களா? அந்தப் பணிக்காக பவுல் தன் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்தினார். (1 கொரி. 9:26). பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ள மறுத்தார் (2 தீமோ. 2:4) நீங்கள் செய்ய வேண்டிய வேலையைச் செய்யாமல் வேறு எவரையாவது ஓய்வு நாளில் பிரசங்கம் செய்யவைத்துவிட்டு வேறு வேலைகளில் ஈடுபடுகிறீர்களா? உழைத்துப் படித்து, ஆத்தும பாரத்துடன் ஊழியம் செய்யாதவர்கள் நல்ல ஊழியர்களாக இருக்க முடியாது. ஊழியம் மிகவும் கேடான நிலையில் இன்றிருப்பதற்கு ஊழியத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மேலே பார்த்த தகுதிகளைக் கொண்டிருக்காததே முக்கிய காரணம். ஏதோ ஒரு உதவாக்கறை பைபிள் கல்லூரியில் எதையோ படித்துவிட்டு, அரைப் பைசாவுக்கும் உதவாத ஒரு டிகிரியையும் வாங்கிக்கொண்டுவிட்டதால் தங்களைப் பெரிய போதகர்களாக நினைத்துக் கொண்டிருக்கும் வேத அறிவில்லாத மனிதர்களே இன்று ஊழியத்தில் அதிகம். இவர்களோடு பத்தோடு பதினொன்றாக நீங்கள் இருந்துவிடுவதால் நம்மினத்தைப் பிடித்திருக்கும் நோய்க்கு விடுதலை கிடைக்காது. இப்படிப்பட்ட போலி வாழ்க்கை வாழ்ந்து உங்களையும், வீட்டையும், ஆத்துமாக்களையும் நீங்கள் சீரழிப்பதைவிட வேறு ஏதாவது நியாயமான கைவேலை செய்து சம்பாதிப்பது மேல்.

(2) போதக ஊழியத்துக்கு தயார் செய்து கொண்டிருப்பவர்களுக்கு ஒரு வார்த்தை

வெறும் குருட்டார்வத்தாலும், உணர்ச்சி மீறலாலும் ஊழியத்துக்குள் நுழையப் பார்க்காதீர்கள். அதற்கான தகுதிகள் உங்களுக்கு நிச்சயம் இருக்க வேண்டும். அந்தத் தகுதிகளைக் கர்த்தர் உங்களுக்கு காட்டுகின்ற ஒரே இடம் திருச்சபை மட்டுமே. அதாவது, வேதபூர்வமாக இயங்கிவரும் மெய்த்திருச்சபை மட்டுமே. அப்படியான திருச்சபைகள் இல்லையே என்பீர்கள். முதலில் அது எங்கிருந்தாலும் தேடிக்கண்டுபிடித்து அதில் இணையப் பாருங்கள். உங்களுடைய அவசரத்துக்காக கர்த்தர் தன்னுடைய திட்டங்களை மாற்றிக்கொள்ளமாட்டார். நல்ல சபையில் இருந்து வளர்ந்து வராமல் ஊழியத்தை நினைத்துப் பார்க்கக்கூடாது. அங்கேயே உங்களுக்குத் தகுதி இருக்கிறதா, இல்லையா என்பதைக் கர்த்தர் உணர்த்துவார்.

அடுத்ததாக, நல்ல கல்வி அறிவும், பொது அறிவும் இருக்கிறதா என்று உங்களை ஆராய்ந்து பாருங்கள். இவை இரண்டும் இல்லாத ஊழியக்காரர்களுக்கு நம்மத்தியில் குறைவில்லை. அத்தகையவர்களால் ஒருவருக்கும் எந்தப் பயனும் இல்லை. கல்வி அறிவில்லாதவர்கள் எப்படி எழுத்தில் இருக்கும் வேதத்தை விளங்கிப் படித்து மற்றவர்களுக்கு விளக்க முடியும்? வேதம் என்ன தினத்தந்தி பத்திரிக்கையா? ஆட்டோ ரிக்சோ ஓட்டுகிறவனும் அறிவில்லாமல் படித்து முடித்துவிட. அதை எழுதப் படிக்கத் தெரிந்த எவரும் வாசித்துப் புரிந்துகொள்ள முடிந்தாலும், அதிலுள்ள அநேக சத்தியங்களை விளங்கிக் கொண்டு, அவற்றைத் தொகுத்து சிறுவர்களும் புரிந்துகொள்ளக்கூடிய முறையில் எளிமையான மொழியில் விளக்கிப் போதிக்க கல்வி அறிவில்லாமல் எவரால் முடியும்? வேதத்தைப் போதிக்க கல்வி அறிவு தேவையில்லை என்கிறவர்கள் மூளையைச் சலவைக்கு அனுப்ப வேண்டும். ஆகவே, முதலில் உலகத்தில் படிப்பைப் பெற்றுக் கொள்ளப் பாருங்கள். ஆத்மீக ஊழியத்துக்கும், கல்லூரிப் படிப்புக்கும் சம்பந்தமில்லை என்ற கனவுலகில் வாழாதீர்கள். இந்துக் கோயில் சந்நியாசி யாக இருக்க மட்டுந்தான் அது தேவையில்லை. கர்த்தரின் ஊழியத்துக்கு அது மிக மிக அவசியம். கல்லூரிப் படிப்பு உங்களுக்கு பெரிய ஆசீர் வாதத்தைப் பின்னால் கொண்டுவரும். முக்கியமாக வேதத்தின் மூல மொழிகளில் பரிச்சயமடைய அது நிச்சயம் உதவும். படிக்காதவர்கள் போதக ஊழியத்துக்கு வருவது என்னைப் பொறுத்தவரையில் ஆட்டோ ஓட்டத் தெரியாதவன் ஆட்டோ ஓட்டப் புறப்பட்டது போலத்தான். அந்த ஆட்டோவில் போகிறவன் பாடு திண்டாட்டந்தான்.

இது தவிர பொது அறிவும், சமுதாய இங்கிதங்களும் தெரிந்திருக்க வேண்டும். பொது அறிவு, கல்வியோடு சம¢பந்தப்பட்டது. இன்று அநேக போதகர்களுக்கு பொது அறிவு இல்லாத காரணம் அவர்களுக்கு கல்வி அறிவில்லாததுதான். கல்வி அறிவு மனிதனுக்கு கல்லூரிப் பட்டத்தை மட்டுமல்லாமல், சமுதாய இங்கிதங்களையும் கற்றுக்கொடுக்கிறது. சமுதாய இங்கிதங்கள் தெரியாத ஊழியக்காரர்கள் தொகை நம்மத்தியில் இன்றைக்கு அதிகம்.

அத்தோடு அன்றாடம் கர்த்தர் கொடுத்திருக்கின்ற நேரத்தைக் கவனமாகப் பயன்படுத்தி உழைக்கப் பலருக்கும் தெரிவதில்லை. இன்றைக்குக் கைநிறைய மாத சம்பளம் வாங்கிக்கொண்டு அதற்குரிய வேலையை செய்யாதவர்களை ஊழியத்தில் அதிகமாகவே பார்க்கலாம். இந¢தத் தவறுகளையெல்லாம் தவிர்த்துக்கொள்ள வேண்டுமானால் கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் ஒரு வேலையைத் தேடிக்கொண்டு சமுதாயத்தில் வேலை செய்து வாழ்ந்து பழக வேண்டியது ஊழியத்துக்கு வருமுன் அவசியம். கைநீட்டி சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை செய்கிறவனுக்குத்தான் வேலையின் மதிப்புத் தெரியும். நேரந்தவறாமல் வேலைக்குப் போவது, வேலையை சரியாக முடித்துக்கொடுப்பது போன்ற அநுபவங்களையெல்லாம் அங்கே பெற்றுக் கொள்ளலாம். சமுதாயத்தில் இருந்தல்லாமல் வேறு எங்கே இதைப்பெற முடியும். ஒரு சாதாரண கிராமத்து விவசாயிக்குக் கூட எப்போது நிலத்தைப் பண்படுத்த வேண்டும், விதைக்க வேண்டும், அறுவடை செய்ய வேண்டும் என்பதெல்லாம் சுத்தமாகத் தெரியும். அதை யெல்லாம் செய்ய வேண்டிய காலத்தில் செய்து துன்பங்களுக்கு மத்தியில் அவன் பயிரை நட்டு பயன் அடைகிறான். அவனுக்கு இருக்கும் அநுபவத் தையும், உழைப்பையும்கூட இன்றைய தமிழ் ஊழியக்காரர்களில் நாம் பார்க்க முடியவில்லை. அதற்கெல்லாம் காரணம் அவர்கள் படித்து வேலை செய்து வாழ்க்கையில் அநுபவத்தை அடையாததுதான். ஊழியத்தை எண்ணிப்பார்க்கின்ற இளைஞர்கள் இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்து பின்னால் வரப்போகும் வாழ்க்கைக்கு தங்களை இப்போதே திருச்சபையில் வாழ்ந்து தயார் செய்து கொள்ள வேண்டும்.

இதெல்லாம் நடந்துவிட்டால் நம்மினத்தில் கிறிஸ்தவம் வேதபூர்வமாக அமைந்துவிடுமா? என்று நீங்கள் கேட்கலாம். இதுவரை நான் முன்வைத்துள்ள ஆலோசனைப்படி போதகர்களும், ஊழியத்துக்கு வரத் தங்களைத் தயார் செய்து கொண்டிருப்பவர்களும் நடக்க ஆரம்பித்தால் அதுவே நல்ல எதிர்காலத்துக்கு முன்னடையாளமாக அமையும். இதைக் கூட செய்ய இருதயமில்லாதவர்களை நாம் கொண்டிருந்தால் இன்னும் பல நூற்றாண்டுகள் போனாலும் நம்மினத்துக்கு விமோசனம் ஏற்படப் போவதில்லை. திருச்சபை மூலமே கர்த்தரின் ஆசீர்வாதம் நமக்கு வர முடியும். அந்தத் திருச்சபை ஊழியத்தை நடத்த வேண்டியவர்கள் வேத அடிப்படையில் நடக்காமல் உலகவழிப்படிப் போனால் பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு நம்மினத்து சபைகளில் இடமிருக்காது. இத்தனைக் காலம் குருடர்களாக நாம் வாழ்ந்திருக்கலாம். உலகம் எங்கேயோ போயிருக்க நாம் இருட்டில் இருந்திருக்கலாம். இனியும் தொடர்ந்து இருட்டில் வாழ வேண்டுமா என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். விசுவாசிகளே! இந்தப் பணியில் உங்களுக்கும் பங்கிருக்கிறது. தரமற்ற போதகர்களையும், ஊழியக்காரர்களையும் ஊக்குவிக்காதீர்கள். அவர்கள் தவறுகளுக்கு உடன் போகாதீர்கள். உடலை வருத்தி உழைத்து நேர்மையாக வாழ்ந்து ஊழியம் செய்கிறவர்களுக்கு கீழிருந்து மட்டுமே ஆத்துமப் பயனடையுங்கள்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s